Saturday, December 7, 2024

எம்ஜிஆர் மீது ஜெயலலிதாவுக்குக் கடும் வெறுப்பா? சறுக்கிய சவுக்கு சங்கர்!


ஆதன் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நேர்காணலில் ஊடகவியலாளர் மாதேஸ் 'எம்ஜிஆர் மீது வெறுப்பாக இருந்தாரா ஜெயலலிதா?"  என்று சவுக்கு சங்கரிடம் கேள்வி கேட்கின்றார். அதற்குப் பதிலளித்த சவுக்கு சங்கர் 'கடும் வெறுப்பாக இருந்தார்'என்கின்றார்.

 உண்மையிலேயே ஜெயலலிதா எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் இருந்தாரா? இந்தக் கேள்வியின் போது என் நினைவுக்கு முதலில் வருவது எம்ஜிஆரின் மரணத்தின்போது அவரது தலைமாட்டில் கவலை படிந்த முகத்துடன் சுமார் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக நின்ற ஜெயலலிதாவின் தோற்றம்தான். அதன் பின் அவர் ஊடகமொன்றுக்குக் கூறியதாக வெளியான  கூற்று நினைவுக்கு வருகின்றது. அதில் அவர் எம்ஜிஅர் மறைவுக்குப் பின் தான் தற்கொலை செய்யக்கூட எண்ணியதாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் உள்ள ஒருவர் இவ்விதம் செயற்பட  முடியுமா?

இதே நேர்காணலில் சவுக்கு சங்கர் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிடுகின்றார். அது வலம்புரி ஜான் ஜெயலலிதா பற்றி எழுதியதைத்தான் அவர் சுட்டிக்காட்டுகின்றார். அவர் குமுதத்தில் தன் கதையை எழுதிய காலகட்டத்தில் எம்ஜிஅரின் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருந்தார். அதுவரையில் எம்ஜிஆரே அவர் வாழ்வில் அவரது தாயாருக்குப் பின்னர் முக்கிய  ஆளுமையாக விளங்கி வந்தார்.  இந்நிலையில் எம்ஜிஆரைக் கோபப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில்தான் ஜெயலலிதா அக்கட்டுரைத்தொடரை எழுதினார் என்பது வலம்புரி ஜானின் கருத்து. உண்மையில் அது வேலை செய்தது. எம்ஜிஆர் அக்கட்டுரைத்தொடரை நிறுத்தினார். பின்னர் ஜெயலலிதாவை மீண்டும் தன் கட்சியில் இணைத்துக் கொண்டார். இதனைச் சவுக்கு சங்கரும் ஏற்றுக்கொள்கின்றார். உண்மையில் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆரின் மீது கடும் வெறுப்பிருந்திருந்தால் எதற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டும். அவர் தன் பக்கம் கவனத்தைத் திருப்ப வேண்டுமென்பதற்காகவே இதனைச் செய்ததாக ஏற்றுக்கொள்வதற்கே சாத்தியங்கள் உள்ளன.

இத்தருணத்தில் ஊடகவியலாளர் சிமி அகர்வால் ஜெயலலிதாவுடன் நடாத்திய நேர்காணல் முக்கியமானது. அதிலவர் எம்ஜிஆர் பற்றிக் கூறியவையும்  முக்கியமானவை. ஊடகவியலாளரான சவுக்கு சங்கர் இது  பற்றி அறிந்திருக்காமல் இருப்பது வியப்பையே தருகின்றது. அந்நேர்காணலில் எம்ஜிஆர் பற்றிய கேள்விகளுக்கு ஜெயலலிதா கொடுத்த பதில்களைப் பார்ப்போம். இந்நேர்காணல் தமிழில் இணையத்தளமொன்றில் வெளியாகியிருந்தது. அதிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகிறேன்.

சிமி: எம்.ஜி.ஆரை காதலித்தீர்களா ? அவர் மீது காதல் இருந்ததா ?

ஜெ: ( அகன்ற புன்னகை ஒன்றுக்குப் பின்) அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா அவர்.

சிமி: தனிப்பட்ட மனிதராக எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவர் ? அவர் ஒரு புதிரைப் போன்றவர் இல்லையா ?
ஜெ: மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப் பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.

சிமி: எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா ?
ஜெ: கண்டிப்பாக. அம்மாவும் , அவரும் என்னுடய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்தான். பிடிவாதமான ஆளுமைகள் அவர்கள் இருவருமே. அம்மா என் மீதும், எம்ஜிஆர் என் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும், அவர்கள் இருவரும்தான் என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.

சிமி: உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா ?
ஜெ: (அதே அகன்ற புன்னகை) இருந்திருக்கலாம்.

இவற்றைப் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெரிகிறது. சவுக்கு சங்கர் கூறுவதுபோல் ஜெயலலிதா எம்ஜிஆரை கடுமையாக வெறுக்கவில்லை என்பதுதான் அது. சிமி அகர்வால் ஜெயலலிதாவுடன் நடாத்திய நேர்காணல் -  https://www.youtube.com/watch?v=yZOar04g4zk

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்