Thursday, December 26, 2024

அஞ்சலி: எ.டி.வாசுதேவன் நாயர் (மாடத்து தெக்கேகாட்டு வாசுதேவன் நாயர்)


என்னை மிகவும் கவர்ந்த இலக்கிய ஆளுமைகளில் எம்.டி.வாசுதேவன் நாயரும் ஒருவர். இவரது 'காலம்' நாவல் எனக்கு மிகவும் பிடித்த பத்து நாவல்களில் ஒன்றாக எப்பொழுதுமிருக்கும். நடுத்தவர்க்கத்து மனிதன் ஒருவனின் பல்வேறு பருவ வாழ்க்கை அனுபவங்களை, உணர்ச்சிக் கொந்தளிப்புகளை, காதலையெல்லாம் நினைவு விபரிக்கும், நினைவு கூரும் நாவல். அவ்வப்போது எடுத்து வாசிக்கும் நாவல்களில் ஒன்று 'காலம்'.


சிறந்த நாவலாசிரியர்கள் பலரின் நாவல்களின் ஆரம்ப வரிகள் முதல் வாசிப்பிலேயே வாசிகரை ஈர்த்துவிடும் வல்லமை மிக்கவை. நினைவில் நிலைத்து நிற்கும் ஆரம்ப வரிகள் அவை. வாசுதேவ நாயரின் 'காலம்' நாவலின் ஆரம்ப வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை. முதலில் வாசித்தபோதே நாவலை முழுமையாக வாசித்து விட வேண்டுமென்ற ஆர்வத்தை, உத்வேகத்தைத் தந்த வரிகள் அவை. 'காலம்' நாவல் பின்வருமாறு ஆரம்பிக்கின்றது:

"இரவு. ஈர வயல் வரப்பில் புது மழைக்கு உயிர் பிடித்திருந்த அருகம் புல்மீது  உறங்கிக்கிடந்த பச்சை வெட்டுக்கிளிகள் காலடி ஓசை கேட்டு உறக்கம் கலைந்தது.  குதிகாலை ஊன்றி அப்பால் எம்பித் தாண்டிச் செல்லும்போது அவை மெல்லிய ஓசை எழுப்பின.  அது எதையோ நினைவூட்டுவதாக இருந்தது.  எது எனத் தெளிவாகச் சொல்ல இயலவில்லை. காரணம் மனம் ஒரு நிலையில்  இல்லாததுதான்.  வழக்கமாக மனசுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் இவ்வோசையை எப்போது கேட்டேன்.? இருட்டின் ஈர மண்ணின் வாடை , இருட்டுக்கும்  இரவுக்கும் மணம் உண்டென்பது தெரியாமல்  ஒரு நிமிஷம் நினைத்துப் பார்க்கும்படியாயிற்று.   மீன்பிடி வலைகளை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக எடுத்துச் சென்றபோது வழியில் உள்ள கலங்கள் நீர் பாதைபோல் இருந்தது.  மழை நின்றபோதும் வானம் இருண்டிருந்தது. அவ்வானத்தில் வெள்ளைக் கோடுகள் ஆங்காங்கே தென்பட்டன."

நாவல், சிறுகதை,கவிதை, நாடகம், திரைக்கதை, இயக்கம் எனப் பன்முகக் கலை, இலக்கியப் பங்களிப்பு இவருடையது. இவர் இயக்கிய 'நிர்மால்யம்' திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றது. இவரது படைப்புகள் சாகித்திய விருதுகள், ஞானபீட விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றவை.

எம்.டி. வாசுதேவன் நாயரின் வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியது. சிறந்த மலையாளர் எழுத்தாளர்களில் ஒருவராக, இந்திய எழுத்தாளர்களில் ஒருவராக, உலக இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக எப்பொழுதும் தன் படைப்புகளூடு வரலாற்றில் நிலைத்து நிற்பார். தனது தொண்ணூற்றியோராவது வயதில் , டிசம்பர் 24 அன்று தனியார் மருத்துவ மனையொன்றில் இவர் மறைந்த செய்தியினை இணையம் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.


No comments:

'எனது குழந்தைகள்' கவிதை பற்றி...

'புதுசு' சஞ்சிகையின் ஜூலை 1984 இதழில் வெளியான கவிதை இது. துஷ்யந்தன் எழுதியது. இந்தக் கவிதையை வாசித்தபோது குறிப்பாக 'யுத்தத் தாங்...

பிரபலமான பதிவுகள்