Wednesday, November 20, 2024

க.நவத்தின் 'சீருடை'

- எழுத்தாளர் க.நவம் -

'டயஸ்போறா' இலக்கியத்தின் பல்வேறு பண்புகளை நவத்தின் இச்சிறுகதையில் காணலாம். ஊரில் பொறியியலாளரான செந்தில்நாதன் கனடாவில் பாதுகாவலாராக வேலை பார்க்கின்றார். அவர் வேலைக்குச் செல்கையில் கோர்ட் , சூட்டுடன் செல்வார். வேலைக்குச் சென்றபின்தான் பாதுகாவனுக்குரிய ஆடைகளை அணிந்துகொள்வார். தான் பாதுகாவலான வேலை செய்வதைக் குழந்தை கூட அறியாமல் மறைத்து வைப்பார். ஒரு நாள் வழியில் சந்திக்கும் ஊரில் அவனுக்குக் கீழ் ஊழியராகப் பணியாற்றிய ஒருவரின் மகன் லெக்‌ஷ்ஸ் காரில் வருகின்றான். அவருக்கு லிஃப்ட் கொடுக்கின்றான்.இங்கு அவன் செல்வச் செழிப்பில் கிளீனிங் கொம்பனி நடத்துகின்றான். அவனிடம் ஊரிலை கிடைக்காத படிக்கிற வசதி இங்கு கிடைத்திருக்கு என்று எகத்தாளமாகக் கூறுவார். பதிலுக்கு அவனும் படிச்சவையெல்லாரும் என்னத்தைக் கிழிச்சவையள் என்ற மாதிரி பதிலிறுப்பான். அத்துடன் இப்பவும் செக்கியூரிடி கார்ட் வேலையோ செய்கிறீர்கள் என்று கேட்பான். இது அவரது தன்மானத்தை எழுப்பிவிடவே காரை நிற்பாட்டும்படி கூறி இறங்கிவிடுவார்.இந்தக்கதையில் அவனது மேலதிகாரியின் நிறவாதப்போக்கு, ஊரில் அவரது கீழதிகாரியான சிங்களவர் ஒருவரின் நிறவாதப்போக்கு, படித்த படிப்புக்கு உரிய வேலை கிடைக்காத புகலிடத்து நிலை, உணவுண்ணும் கலாச்சார வேறுபாட்டால் வெள்ளையின மேலதிகாரி வெளிப்படுத்தும் நிறவாதம் என்று புகலிட இலக்கியத்துக்குரிய பல அம்சங்களை வெளிப்படுத்தும் கதையாக இக்கதையினைக் கருதலாம். அடையாளச் சிக்கலுக்கு நல்லதோர் உதாரணம். அதே சமயம் படித்தவரான தான் செய்யும் வேலை மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, தன் அடையாளத்தை மறைக்க அவர் எடுத்துக்கொள்ளும் பிரயாசை இக்கதையின் முக்கிய அம்சம். புலம்பெயர் சூழலில் ஒருவர் எதிர்கொள்ளும் அடையாளச்சிக்கலில் இதுவும் ஒருவகை அடையாளச் சிக்கல்.

அவரது மேலதிகாரியான வெள்ளையினத்தவன் அவரது மணக்கும் உணவு வகையை, அவர் கைகளால் அள்ளிச் சாப்பிடுவதையெல்லாம் பார்த்து முகஞ் சுளிக்கின்றான். துவேசம் மிக்க வார்த்தைகளையெல்லாம் அள்ளி வீசுகின்றான். பாக்கி என்று கறுவிக்கொள்கின்றான். இவையெல்லாம் கலாச்சாரரீதியாக, நிறரீதியாக அவரை புலம்பெயர் சூழலிலிருந்து அந்நியப்படுத்துக்கின்றது. இந்த ஒரு கதையில் புலம்பெயர் மனிதர் ஒருவர் அடையும் பல்வகை அனுபவங்களையும் படம் பிடித்துக்காட்டுகின்றார் கதாசிரியர் நவம். அவ்வகையில் முக்கியத்தும் மிக்கது.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்