Wednesday, November 20, 2024

மனங்கொத்தியின் கொத்தல்கள்: கலைச்செல்வன் பற்றிய நினைவுகள்!

-எழுத்தாளர் கலைச்செல்வன் -

கவிஞர் வாசுதேவனின் 'தொலைவில்' கவிதைத்தொகுப்பைப் புரட்டிக்கொண்டிருக்கையில் ஒரு கவிதை கண்ணில் பட்டது, கவிதையின் தலைப்பு 'உயிர்நிழல்'.  கவிதையை வாசித்தபோது அது 'உயிர்நிழல்' கலைச்செல்வனைப் பற்றியது என்பதை அறிய முடிந்தது.

'சத்தமிட்டுச் சிரித்து
புயலைப்போல் சினந்து
ஆழங்களில் அமிழ்ந்து
உச்சிகளில் தாவி நீ செய்யும்
உன்னத மாயவித்தைகள்
அவற்றின் உச்ச நிலைகளில்
அமைதியுற்று
உன் உதடுகளிலிருந்து
புகையாய்ப் போயின.

ஆவேசத்துடன் ஆர்ப்பரித்த் நீ
அடைய முடியாததன் முன்னால்
கூற முடியாததன் கொடூரத்தின்  முன்னால்
கூற்றுகளுக்கப்பாற்பட்டவை  முன்னால்
குழந்தையாய் நின்றாய்.'

கவிஞரின் மேற்படி வரிகள் கலைச்செல்வனின் ஆளுமையைச் சிறப்பாக விபரிக்கின்றன. கவிதையின் வரிகள் அவரது கலைச்செல்வனுடான நட்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துவன. இக்கவிதை வரிகள் எனக்குக் கலைச்செல்வனைப் பற்றிய நினைவுகளைச் சிறகடிக்கச் செய்து விட்டன. கவிதைத் தொகுப்பின் இன்னுமொரு கவிதை 'மனமெனும் மரங்கொத்தி' சிறப்பான உவமை. படிமம். தலைப்பை 'மனமெனும் மரங்கொத்தி' என்று உவமையாக வைத்திருப்பதற்குப் பதிலாக 'மனங்கொத்தி' என உருவகமாக வைத்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். என் மனங்கொத்தியையும் இக்கவிதைகள் கலைச்செல்வன் பற்றிய நினைவுகளைக்கொத்தியெடுக்க வைத்துவிட்டன.எழுத்தாளர் கலைச்செல்வன் கவிஞர் திருமாவளவனின் கூடப்பிறந்த சகோதரர். ஒருமுறை அவர் கனடாவுக்கு வருகை தந்திருந்தபோது திருமாவளவன் கலைச்செல்வன் என்னைச்சந்திக்க விரும்புவதாக எனக்குத் தொலைபேசியினூடு அழைப்பு விடுத்திருந்தார். அன்று திருமாவளவனின் இருப்பிடம் சென்று, அவரையும், கலைச்செல்வனையும் அழைத்துக் கொண்டு விக்டோரியாப் பார்க் வீதியும், டான்ஃபோர்த் வீதியும் சந்திக்குமிடத்தில், வடகிழக்குத்திசையிலிருந்த உணவகமாகவும், இரவு கேளிக்கை விடுதியாகவும் இயங்கிக்கொண்டிருந்த 'ட்ரொபிகல் நைற்ஸ்' (Tropical Nights) உணவகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அந்த கேளிக்கை விடுதியில் பின்னர் ஒரு சமயம் நடைபெற்ற  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் அக்கேளிக்கை விடுதி நிரந்தரமாகவே மூடப்பட்டு விட்டது. இன்று அந்தக் கேளிக்கை விடுதி இருந்த இடத்தில் பள்ளிவாசலொன்று அமைந்திருக்கின்றது. இது போலவே 'ட்றக்' சாரதிகளின் கேளிக்கை விடுதியாகத் திகழ்ந்த உணவகம் பின்னர் கனடாக் கந்தசாமி கோயிலாக மாறிவிட்டது.

அவ்வுணவகத்தில் நான் திருமாவளவன், கலைச்செல்வனுடன் சில மணித்துளிகளைச் செலவிட்டிருந்தேன். மறக்க முடியாத சந்திப்புகளிலொன்றாக அச்சந்திப்பு அமைந்து
விட்டது, இன்றும் சிந்திக்கையில் கலைச்செல்வனுடான அச்சந்திப்பு நினைவில் வராமல் போவதில்லை. அச்சந்திப்பின்போது தான் மண்ணை விட்டு நீங்கிப் பல்வேறு நாடுகளில் தானடைந்த அனுபவங்களைப்பற்றி, உயிர்நிழல் படைப்புகளைப்பற்றி, பல்வேறு பெயர்களில் தான் எழுதிய படைப்புகளைப்பற்றி, உயிர்நிழல் சஞ்சிகையில் நான் எழுதிய ஒரேயொரு படைப்பான சிறுகதை 'யன்னல்' பற்றி எனப்பல்வேறு விடயங்களைப்பற்றி மனந்திறந்து தன் கருத்துகளை, எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கவிஞர் திருமாவளவனும், கலைச்செல்வனும் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டும் என்னும் நினைவு அடிக்கடி எழுவதுண்டு. இருந்தாலும் இருந்தவரையில் அவர்கள் சாதித்தவை அவர்களை வரலாற்றில் நிலைத்து நிற்க வைத்திருக்கும் என்றும் கூடவே ஆறுதல் கொள்கின்றேன். இங்குள்ள கலைச்செல்வனின் புகைப்படம் சமூக, அரசியற் செயற்பாட்டாளர் தனது பதிவொன்றில் பாவித்திருந்த புகைப்படம். அதை நன்றியுடன் பாவித்துக்கொள்கின்றேன்.

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்