Wednesday, November 20, 2024

நினைவில் நிற்கும் டானியல் ஜீவாவின் 'சந்தியா அப்பு'

- எழுத்தாளர் டானியல் ஜீவா -

கனடாவில் வசிக்கும் டானியல் ஜீவா எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது சிறுகதைகளிலொன்றான சந்தியா அப்பு எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று.  புகலிடத்து எழுத்துகளில் காணப்படும் ஓரம்சம் கழிவிரக்கம். ஊரை விட்டு உயிர்தப்பப் புலம் பெயர்ந்தாலும், ஊர் பற்றிய நினைவுகள், அங்கு பழகிய மனிதர்கள், இயற்கைக் காட்சிகள், அங்கு அனுபவித்த வாழ்வின் நிகழ்வுகள் இவையெல்லாம் தொடர்ந்தும் நினைவில் நிலைத்து நிற்கும். தொடர்ந்து வரும். நினைவை வாட்டிக்கொண்டேயிருக்கும். இவ்விதமான ஓர் ஆளுமைதான் கதை சொல்லியைப்பொறுத்தவரையில் சந்தியா அப்புவும். கதை சொல்லியும் ஒரு கடற்றொழிலாளிதான்.

இக்கதையினைக் கதைசொல்லியூடு விபரிக்கும் கதாசிரியர் எடுத்திருக்கும் கதைச்சூழல் இழந்த மண்ணில் நிலவிய சூழல். அச்சூழலில் வாழ்ந்த கதா பாத்திரங்கள். இதற்குரிய காரணங்களில் ஒன்று ஏற்கனவே கூறியிருப்பதுபோல் இழந்த மண் பற்றிய நினைவுகள், கழிவிரக்கம்தாம்.சந்தியா அப்பு என்னும் ஆளுமையை விபரிப்பதுதான் கதையின் மையக்கரு. கூத்துக்கலைஞரும், கடற்றொழிலாளருமான அப்புவுடனான அறிமுகம், அவரது ஆங்கில அறிவு, அவரிடம் ஆங்கிலம் படித்த மாணவியாக அறிமுகமாகி,அவரது மனைவியான எலிசபெத் ஆச்சி, அப்புவின் பெண் குழந்தைகள், முதுமையில் ஆச்சியின் மரணத்தால் நிலைகுலைந்துபோன அப்பு, அந்த நிலைகுலைதலே அவரது மரணத்துக்கும் காரணமான துயரம் எனக் கதை விரிகிறது.
தன் மகள்களிலொருத்தியான இளவரசியைக் கதைசொலி மணந்திருந்தால் அவனும் ஓர் இளவரசனாக இருந்திருப்பான் என்று அப்பு கூறியதை அப்புவின் மரணத்தின்போது நினைவு கூரும் கதைசொல்லியின் நினைவு கூரல் வாசகர்களின் சிந்தனைக்கு ஒரு விடுகதையைபோட்டு நிற்கிறது. அப்பு அவ்விதம் கூறியபோது அவரது புத்திரிகள் இருவரும் மணம் செய்து குழந்தைகளுடன் வாழ்கின்றார்கள். ஏன் அப்பு அவ்விதம் சொன்னார்? ஏன் கதை சொல்லி அதை நினைவு கூர்ந்தான்? இவை வாசகர்களின் ஊகங்களுக்குப் பெருவிருந்து.

டானியல் ஜீவாவின் மொழி இதயத்தை வருடிச் செல்லும் மொழி. இக்கதையில் கடற்றொழில் பற்றிய விபரிப்புகள் வாசகர்களுக்குப் புதிய தகவல்களைத் தருவன. உதாரணத்துக்கு 'சிறகு வலைத் தொழிலாளியாக அறியப்பட்டவர். இப்போது விடு வலைத் தொழிலுக்கும், கூடு வைக்கிற தொழிலுக்கும் போய் வருகின்றார்.' என்ற விபரிப்பைக் கூறலாம்.

சில உவமைகள் அக்காலகட்ட அரசியற் சூழலை வெளிப்படுத்தும் . உதாரணத்துக்கொன்று -

"வானம்  வன்முறையை கைவிட்டு அகிம்சையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வெளியில் அள்ளி எறிந்த அடர்ந்த இருள் மட்டும் அப்படியே இனம் தெரியாத மனிதர்களால் வரையப்பட்ட தீர்ப்பால்; ஒரு மனிதன் சுட்டுக் கொல்லப்பட்ட உடல் போல் கிடந்தது."

' வெளியில் அள்ளி எறிந்த அடர்ந்த இருள் மட்டும் அப்படியே இனம் தெரியாத மனிதர்களால் வரையப்பட்ட தீர்ப்பால்; ஒரு மனிதன் சுட்டுக் கொல்லப்பட்ட உடல் போல் கிடந்தது' என்னும்சொற்றொடர் அக்காலகட்டத்தில் அம்மண்ணில் நிலவிய மனித உரிமைகளற்ற சூழலை விமர்சிக்கின்றது. பிரச்சாரமற்ற , படைப்புத்திறன் மிக்க விபரிப்பு.

இக்கதை புகழ்பெற்ற எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயின் புகழ்பெற்ற நாவல்களிலொன்றான  'கடலும் கிழவனு' நாவலில் வரும் சந்தியாகோக் கிழவனையும், அவனுடன் நட்பிலிருக்கும் சிறுவனையும் நினைவூட்டும்..அதன் கரு வேறு,. இதன் கரு வேறு. சந்தியாகோக் கிழவனும், சந்தியா அப்புவும் , சந்தியாகோக் கிழவனுடன் நட்பிலிருக்கும் சிறுவனும், சந்தியா அப்புவுடன் நட்பிலிருக்கும் கதைசொல்லியும் எனப் பாத்திரங்களுக்கிடையில் இருக்கும் . ஒற்றுமையே மேற்படி நினைவூட்டலுக்குக் காரணம்.

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்