Wednesday, November 20, 2024

பா.அ.ஜயகரனின் சிந்திக்க வைக்கும் 'சந்தி'


நாடகவியலாளராக, கவிஞராக, சமூக,அரசியல் செயற்பாட்டாளராக, தேடகம் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக அறியப்படுபவர் எழுத்தாளர் பா.அ.ஜயகரன். அண்மைக்காலமாக முக்கியமான சிறுகதையாசிரியராகவும் உருமாறியிருக்கிறார். பா.அ.ஜயகரன் கதைகள், ஆலோ ஆலோ ஆகிய சிறுகதைத்தொகுப்புகளும், அவனைக்கண்டீர்களா? என்னும் குறுநாவல் தொகுப்பும் வெளியாகியுள்ளன. அனைத்தும் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடுகள். அவனைக்கண்டீர்களா? தொகுப்பைக் குறுநாவல் மற்றும் சிறுகதைத்தொகுப்பென்று கூறலாம். ஏனென்றால் சில கதைகள் சிறுகதைகள் போல் அமைந்துள்ளன.

எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் 'அவனைக் கண்டீர்களா/" தொகுப்பிலுள்ள  'சந்தி - ஒரு கதைசொல்லியின்  கதை', பற்றிய கருத்துகள் இவை. ஜயகரன் சிறந்த நாடகாசிரியர் என்பதை இக்கதைகளை வாசிக்கையில் உணர முடிந்தது. மிகவும் இலகுவாக அவரால் இக்கதைகளைச் சிறந்த  நாடகங்களாக மாற்றியமைக்க முடியும்.அதற்கேற்ப வகையில் பாத்திரங்கள், சம்பவங்கள், கதைக்களச் சூழல் விபரிப்புகள் எல்லாம் பின்னப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே நடையில் தென்படும் நகைச்சுவையும் என்னைக்கவர்ந்தது. மொழி நடை செறிவானது.

'சந்தி - ஒரு கதைசொல்லியின்  கதை' என்னும் கதையின் தலைப்பைச் சந்தி என்றே வைத்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. கதை சந்தியொன்றின் கதையை, அதை மையமாகக் கொண்ட ஆளுமைகளைச்  சிறப்பாகச் சொல்கிறது. இப்பெயரில் இதனை நாடகமாக்கினால் சிறந்த நாடகமாக அமையும். 


இக்கதை பின்னப்பட்டுள்ள விதம் என்னைக் கவர்ந்தது. டொரோண்டோ மாநகரின் முக்கியமானதொரு சந்தி கிங், குயீன், ரொன்செஸ்வல்ஸ் வீதிகள் சந்திக்கும் சந்தி. அருகில் புகழ்பெற்ற புனித யோசப் மருத்துவ நிலையம் (செயின்ற்  யோசப் ஹொஸ்பிடல்). இச்சந்தியில் அமைந்திருக்கும் மக்டோனால்ட்ஸ் உணவகம் , வீடற்ற மனிதர்கள், வீதிகளில் பாலியற் தொழில் செய்யும் பணியாளர்கள், அருகிலிருக்கும் லொட்ஜ், கதை சொல்லி எனக்கதைக்களம் விரிகின்றது. 

முக்கியமான பாத்திரங்கள்: தட்டச்சு இயந்திரத்தைத் தான் சுமந்து செல்லும் பொதிகளில் வைத்திருக்கும் வெள்ளையின வீதி மனிதர் ஜோ. ஒரு காலத்திப்  பேராதனைப் பல்கலைகழகத்தில் கணிதத்தில் புலியாகி விளங்கி, கறுப்பு ஜூலைக்  கலவரத்தில் தாக்குதல்களுள்ளாகிப் பாதிக்கப்பட்ட இலங்கைத்  தமிழரான கதிர் (இயற்பெயர் கதிர்காமநாதன்), கனடாப் பூர்விகக்குடியினத்தைத் சேர்ந்த பாலியற் தொழிலாளியான ஏஞ்சல் (இவள் உண்மையிலேயே ஏஞ்சல்தான். சக மனிதர்கள், தொழிலாளிகள் மீதான இவளது நேசம் அற்புதமானது), மக்டொனால்ட் உணவகப் பணியாளர்கள் மே, திறேசா இவர்கள் எல்லாரும் கதையை வாசித்து முடிகையில் மறக்க  முடியாதவர்களாகி விடுகின்றார்கள். பாத்திரங்கள் அனைத்தும் முழுமையாக அவர்களது ஆளுமையை உணரும் வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன.

இக்கதையில் புலம்பெயர் தமிழரான கதிரின் புலம்பெயர்தலுக்கான காரணமான இலங்கைத்தமிழர் பிரச்னை, தண்டர்பேயைப் பிறப்பிடமாகக் கொண்ட பூர்விகக் குடிப்பெண்ணான ஏஞ்சலின் இனத்தவர்களின்  இனரீதியில் ஒடுக்கப்பட்ட நிலை, உணவகத்துத்தொழிலாளர்களைச் சுரண்டும் நிர்வாகத்தின் செயற்பாடுகள், அகதிக்கோரிக்கையாளரான திறேசா போன்றோர் புகலிட மண்ணில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றிக் கதை விபரிக்கின்றது. 

அச்சந்தியில் நடைபெறும் பாலியற் தொழில் பற்றியும், அதைத் தடுக்கப் பாலியற் தொழிலாளியாகக் கடமையிலிருக்கும் பெண் பொலிஸ்காரி ஒருத்தி பற்றியும் கதை விபரிக்கின்றது. தற்போது இவ்விதம் வீதியில் பெண் பாலியல் தொழிலாளர்கள் நிற்பதில்லை என்று கருதுகின்றேன். எண்பதுகளில், தொண்ணூறுகளில் இவ்விதம் டொராண்டோ வீதிகள் பல இரவுகளில் பாலியல் தொழில்  புரியும் பெண்களால் நிறைந்திருக்கும் . அவர்களைப் பிடிப்பதற்காகப் பெண் பொலிசாரும் பாலியல் தொழிலாளர்களாக மாறு வேடங்களில் உலாவுவார்கள். பின்னர் சட்டங்கள், இணையத்தின் வருகை நிலைமையை மாற்றி விட்டதெனலாம். 

இக்கதையின் முக்கியமான விடயமாக நான் கருதுவது பல்வேறு வகையான கதை மாந்தர்களுக்கிடையில் நிலவும் மனிதாபிமானம்.  ஜோ, கதிர்  போன்ற வீதி மனிதர்களின் உணவுக்காக ஏஞ்சல் மக்டொனால்ட்ஸ் உணவகத்துப் பணியாளர்களிடம் பணம் கொடுத்திருப்பாள். அகதிக்கோரிக்கையாளரான திறேசாவுக்காக இன்னுமொரு தொழிலாளியான மே தொழிற்சங்கவாதிகள் மூலம் உதவுகின்றாள். ஏஞ்சல் ஒருவனின்  கத்திக்குத்துக்கு உள்ளாகி மருத்துவ நிலையத்தில் உயிருக்குப் போராடுகையில் சக மனிதர்கள் வெளிப்படுத்தும் துடிப்பு, பாசம் சிறப்பாக விபரிக்கப்பட்டிருக்கின்றது.

கதையின் முடிவில் மக்டோனால்ட்ச் உணவகம் இழுத்துப் பூட்டப்படுகிறது. அங்கு பணியாற்றியவர்கள் வேலையிழந்துவிடுகின்றார்கள். அது அந்த முதியவர் ஜோவை நிலைகுலையச் செய்துவிடுகின்றது. எல்லாவற்றையும் எடுத்தெறிகின்றார். உணவகத்தைச் சேதமாக்குகின்றார். எப்பொழுதும் தட்டச்சு செய்துகொண்டிருக்கும் அவர் பூர்விகம் எதுவாகவிருக்கும்? 'காப்டன்', என்று அவரை விளிக்கின்றார் கதிர். புரொபசர் என்று விளிக்கின்றார் திரேசா. ஜோ என்கின்றாள் ஏஞ்சல். யார் இவர்? இக்கதையை வாசிக்கையில் இவ்வித கேள்விகளும் எழும். விடைகளற்ற கேள்விகள். இவ்விதம் விடைகளற்ற கேள்விகளுடன் வளைய வரும் வீதி மனிதர்களால் நிறைந்து கிடக்கின்றது டொரோண்டோ மாநகர்.

'சந்தி' ஜயகரனின் முக்கியம் கதைகளில் ஒன்றாக நிச்சயம் அமையும். 'அவனைக் கண்டீர்களா?' குறுநாவலும் முக்கியமான தொகுப்பின் கதைகளில் ஒன்று. . புகலிடம் நாடி வரும் இலங்கைத்தமிழ் இளைஞர்களின் கலாச்சாரரீதியாக அதிர்ச்சியடைய வைக்கும் வேலைச் சூழல், பல்வகைப் பாலியல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை இயக்கும் சமூக விரோதக் குழுக்கள், இலங்கையின் யுத்தச் சூழல், போராளிகள் புரியும் மனித உரிமை மீறல்கள், இவற்றினூடு ஒரு பாலின உறவுமுறை ஏற்படுத்தும் கலாச்சாரச் சிக்கல்கள் என விரியும் குறுநாவல் அது. பெருநாவலாக எழுதப்படக்கூடியது. முடிவு ஒரு பாலின உறவுக்காரன் ஒருவன் இருபாலின உறவுக்காரனாக மாறுகின்றான் என்று ஆசிரியர் கூறுகின்றாரா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தும் கதை. அது பற்றி இன்னுமொரு சமயம் விபரிப்பேன்

மேற்படி சந்தி கதையில் கதிர்பற்றி விபரிக்கையில் அவர் க.பொ.உயர்தரப்பாடங்களில் இரசாயனம் தவிர்ந்த ஏனைய மூன்று பாடங்களிலும் மிகத்திறமையான மாணவர் என்று குறிப்பிட்டிருப்பார். அதே சமயம் இரசாயனத்தில் சித்தியடையாதலால அதில்  சித்தியடையும் வரையில் பல்கலைக்கழகம் செல்ல முடியவில்லையென்று குறிப்பிட்டிருப்பார். மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருந்தாலே பல்கலைக்கழக அனுமதி கிடைக்குமென்று நினைக்கின்றேன். நான்காவது பாடத்தில் சித்தி பெற வேண்டிய அவசியமில்லை. இதுதான் எங்கள் காலத்து நிலை. தற்போது நிலை மாறி விட்டதோ நானறியேன்.

இவரைப்பற்றிய விபரிப்பு ஒருவரை நினைவுக்குக்கொண்டு வந்தது.  கந்தசாமி மாஸ்டர் (எழுத்தாளர் அ.கந்தசாமி) அவரைப்பற்றி மேலதிகமாக நிச்சயம் அறிந்திருக்கக்கூடும். எழுபதுகளில் கந்தசாமி மாஸ்டரின் டியூசன் நிலையத்தில் ஒருவர் படிப்பித்துக்கொண்டிருந்தார். இளைஞர். எப்பொழுதும் டெனிம் ஜீன்ஸ் அணிந்து 'ஸ்டை'லாகக் காட்சியளிப்பார். அவர் கணிதத்தில் புலி. இரசாயனத்தில் அவரால் சித்தியடைய முடியவில்லை என்று கூறுவர். அவரை ஃபிளிண்ட் என்று கூறுவர்., அவரது நினைவைக் கதிர் பாத்திரப்படைப்பு நினைக்க வைத்து விட்டது. அவர் பல்கலைக்கழகம் சென்றாரா என்பதும் தெரியவில்லை.

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்