Thursday, November 28, 2024

அழியாத கோலங்கள்: இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்'


எழுத்தாளர் இந்துமதி எனக்கு அறிமுகமானது என் பால்ய பருவத்து வாசிப்பின்போது. ஆனந்த விகடனில் எழுத்தாளர் சிவசங்கரி அறிமுகமானது அவரது 'எதற்காக?" என்னும் சிறு நாவல் மூலம். ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் , இளந் தம்பதியின் காதல் மிகுந்த உரையாடல்களுடன் நடைபோட்ட நாவலின் முடிவு எதிர்பாராதது. நாயகி குளியலறையில் குளிக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்து போகின்றார். இதெல்லாம் எதற்காக என்று நாவல் முடிந்திருக்கும். இவைதாம் என் நினைவில் அந்நாவல் பற்றி நிற்கும் நினைவுகள்.
 
சிவசங்கரியின் வரவுடன் அவரைப்போன்ற எழுத்து நடையுடன் வந்தவராகவே எனக்கு இந்துமதி நினைவிலுள்ளார். அவரது 'கீதமடி நீ எனக்கு' நாவல்தான் விகடனில் தொடராக வெளியான முதல் நாவல். ஓவியர் மாயாவின் ஓவியங்களுடன் வெளிவந்திருக்க வேண்டும். அதிலும் சிவசங்கரியின் நாவலில் வரும் நாயக,நாயகியர்போல் காதலை வெளிப்படுத்தும் பாத்திரங்கள் இருந்ததாக நினைவு. கதை மறந்து விட்டது. அதனைத் தொடர்ந்து மேலுமிரு நாவல்கள் விகடனில் தொடராக வெளிவந்தன. ஒன்று 'மலர்களில் அவள் மல்லிகை' (ஓவியர் மாயாவின் ஓவியங்களுடன் வெளியானதாக நினைவு). அடுத்தது ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியான 'தரையில் இறங்கும் விமானங்கள்'. 
'தரையில் இறங்கும் விமானங்கள்' அக்காலகட்டத்தில் எம்மை மிகவும் கவர்ந்த நாவல். நாயகன் விஸ்வம், அவனது அண்ணன் பரசு, அண்ணி ருக்மிணி இவர்கள் மறக்க முடியாத பாத்திரங்கள். இந்நாவலில் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி, தி.ஜானகிராமன் ஆகியோரின் பாதிப்பு இருந்ததாக உணர்கின்றேன். குறிப்பாக விஸ்வம் தன் அண்ணி ருக்மிணியின் பாதங்களைப்பற்றி நினைப்பதை ஆசிரியர் விபரிக்கும்போது நா.பா.வின் 'பொன்விலங்'கில் நாயகன் சத்தியமூர்த்தியின் பாதங்களைப்பற்றி விபரிப்பது நினைவுக்கு வந்தது. நாவலில் வரும் பெண்களைப்பற்றிய விபரிப்பு தி.ஜா.வின் பெண்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. . இந்துமதியின் நாவல்களிலேயே மிகவும் முக்கியமான நாவலாக நினைவு கூரப்படும் நாவல் இதுவாகவே இருக்குமென்பது என் கணிப்பு 

இந்த நாவலைப்பற்றி நினைத்ததும் நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம். என் ஒன்றுவிட்ட தங்கையொருத்திக்கும் எனக்கும் சில மாதங்களே வயது வித்தியாசம். அவளும் என்னைப்போல் தீவிர வாசகி. ஆனால் அவளது வாசிப்பு வெகுசன இதழ்களில் வெளியாகும் நாவல்களுடன் நின்றுவிடும். இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்' தொடராக வெளியானபோது நாங்கள் விரும்பி வாசித்தோம். முடிந்ததும் நாவலை அழகாக 'பைண்டு' செய்து வைத்திருந்தாள். அவள் அவ்விதம் 'பைண்டு' செய்து வைத்திருந்த ஒரேயொரு நாவல் அதுதான். அவள் எழுபதுகளின் நடுப்பகுதியில் கனடா சென்றுவிட்டாள். அவள் செல்கையில் அந்த நாவலை என்னிடம் கொடுக்கும்படி பல தடவை கேட்டும் கொடுக்காமல் எடுத்துச் சென்றுவிட்டாள். அந்தப்பருவத்தில் எனக்கும் அந்த நாவல் மிகவும் பிடித்திருந்தது.
 
அந்த நாவல் ஏன் எனக்குப் பிடித்திருந்தது என்று எண்ணிப்பார்க்கின்றேன். நாவலில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் இயற்கை பற்றிய வர்ணனைகள், நட்சத்திரங்கள், அணில்கள் இவை எனக்குப் பிடித்திருந்தன. நடுத்தர வர்க்கத்துப் பிரதிநிதிகளில் ஒருவனான எனக்கும் அதே வர்க்கத்தைச் சேர்ந்த நாவலின் நாயகன் பரசுவை உணர்ந்துகொள்வதில், புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கவில்லை. வாழ்க்கைச் சுழல் அவனை வண்டில் மாடாக்கி விடுகின்றது. அந்தக்கட்டிப்போடலுக்குமிடையிலும் அவன் தனக்குப் பிடித்தவற்றைச் செய்கின்றான். வாசிக்கின்றான். சஞ்சிகை நடத்துகின்றான். காதலிக்கின்றான். இருப்பை இன்பமாக வாழும் வழியறிந்து வாழ்கின்றான்.
 
நாவலில் வரும் அண்ணி ருக்மிணி மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்று. அவள் இருப்புக்கு அர்த்தம் தருபவள். கணவன் பரசுவின் நல்ல குணத்தை அறிந்து, உணர்ந்து வைத்திருப்பவள். ஜானகிராமனின் 'செம்பருத்தி' நாவல் இவளைப்பற்றி நினைத்ததும் நினைவுக்கு வரும். செம்பருத்தியில் சட்டநாதனின் காதலி அவனுக்கு அண்ணியாகிவிடுவாள். அவள் ருக்மிணியைப்போன்றவளல்லள். ஆனால் 'தரையில் இறங்கும் விமானங்கள்' நாவலில் அண்ணியாக விசுவின் வாழ்வில் நுழையும் அண்ணி பாசம் மிகு தாயாக, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் சிநேகிதியாக மாறி விடுகின்றாள். இயந்திரமயமான வாழ்க்கையை இன்பமுற வாழும் வழியினை நன்கறிந்தவள். அவனையும் அதனை உணர்ந்து வாழும்படி மாற்றிவிடுபவள். நாவலின் இறுதியில் பரசு வாழ்க்கையை அப்படியே ஏற்று, அதில் இன்பமுற்று வாழ்வதற்குக் காரணமானவள் அவள்.
 
இவை தவிர அதற்குப் பின் இந்துமதி எழுதிய நாவல்களை நான் படித்ததில்லை. என் வாசிப்பும் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து விட்டது. ஆனால் பால்ய, பதின்ம வயது வாசிப்பென்பது பெரும்பாலும், உணர்வுகளை இன்பத்திலாழ்த்தும் வெகுசனப் படைப்புகளாகத்தாமிருக்கும்.அவை ஒருவரின் வாசிப்புப் படிக்கட்டுகளில் முக்கியமான படிக்கட்டுகள் என்பதை நம்புபவன் நான். அவ்வாசிப்பனுபவமும், படைப்புகளும் ஒருவரின் வாழ்க்கையில் தொடர்ந்தும் அழியாத கோலங்களாக இருந்து வருபவை. அவ்வகையில் இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்' நாவலும் என்னைப்பொறுத்தவரையில் அழியாத கோலங்களில் ஒன்றே.

No comments:

மணிவிழாக் கவிஞரின் மணிக்கவிகள்!

கவிஞர் கந்தவனத்தின் மணி விழாவினையொட்டி மணிவிழாக்குழுவினால் வெளியிடப்பட்ட கவிதைத்தொகுப்பு 'மணிக்கவிகள்' நூலுக்கான பதிப்புரையில் மணிக...

பிரபலமான பதிவுகள்