Wednesday, November 20, 2024

மெலிஞ்சி முத்தனின் 'ஏற்றுக்கொள்ளப்படாத பாத்திரத்தின் மூன்று பாடல்கள்'

-எழுத்தாளர் மெலிஞ்சி முத்தன் -

மெலிஞ்சி முத்தனின் 'ஏற்றுக் கொள்ளப்படாத பாத்திரத்தின் மூன்று பாடல்கள்' - கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதைகளில் ஒன்று இச்சிறுகதை,. கூர் 2011. ஆண்டிதழில் வெளியாகியுள்ளது. 
 
ஊர்சோன் ,பாலந்தை போர்த்துக்கல், ஸ்பெயின் பழங்கதைகளின் பாத்திரங்கள். இந்தப்பெயர்கள் வந்ததன் காரணம் காலனிகளைப் பிடிப்பதற்காக இலங்கை வந்த போர்த்துக்கேயர்தான். போர்த்துக்கல், ஸ்பெயின் பழைய கதைகளின்படி ஊர்சோன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். அரச குடும்பத்தில் நிகழ்ந்த அசம்பாவிதமொன்றால் அரசி காட்டில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுப் போடுகிறாள். இருவரும் ஆண் குழந்தைகள் . ஒருவன் ஊர்சோன். அடுத்தவன் பாலந்தை. ஊர்சோனைக் கரடியொன்று தூக்கிச் சென்று விடுகின்றது. இந்த ஊர்சோன், பாலந்தை கதை பல தலைமுறைகளைக் கடந்து, கலாச்சாரங்களைக் கடந்து கதை சொல்லியின் காலத்தை வந்தடைகின்றது. தென்மோடிக் கூத்துகளில் பாவிக்கப்படுகின்றது. கூத்துக்களில் பாவிக்கப்படும் பெயர்களை ஊரவர்கள் வைப்பது வழக்கம். அவ்வாறாக கதை சொல்லியின் வாழ்வில் எதிர்ப்படும் ஊர்சோசுனுக்கும் அப்பெயர் வைக்கப்படுகின்றது.
 

ஊர்சோனைக் கதைசொல்லி முதன் முதலாக அமெரிக்க அகதி முகாமொன்றில் சந்திக்கின்றான். அதற்கு முன்னர் 'காலம்' என்ற கரடி ஊர்சோனைப் போர்த்துக்கல் நாட்டுக்குத் தூக்கிப் போடுகிறது. இவ்விதம்தான் காலத்தைக் கரடியாகக் கதைசொல்லி விபரிக்கின்றான். இங்கு கதைசொல்லி என்று நான் கூறுவது இக்கதையினை விபரிக்கும் கதையின் நாயகனை. போர்த்துக்கல் மக்களால் புதிய ஊர்சோனை அடையாளம் காண முடியவில்லை. அங்கீகரிக்க முடியவில்லை. காரணம் அவன் 'பிறவுணி'யாக இருந்ததால். அதன் பின்னர் ஊர்சோன் எல்லைகள் பல கடந்து அமெரிக்காவிலுள்ள விவிகாசா அகதி முகாமை வந்தடைகின்றான். அங்குதான் கதைசொல்லியும், ஊர்சோனும் முதன் முறையாகச் சந்திக்கின்றார்கள். முகாமின் மலசல கூடங்களைக் கழுவிச் சுத்தம் செய்யும் பொறுப்பு இருவருடையது. 
 
ஊர்சோனின் சகோதரன் பாலந்தை, அவன் முள்ளிவாய்க்காலில் மரணித்து விடுகின்றான்., ஊர்சோன் அவ்வப்போது தென்மோடிக் கூத்தின் சோகமான மெட்டுகளுக்குக் கதைசொல்லி எழுதிய வரிகளைப் பாடுவான்.
இதன் பின்னர் இருவரும் கனடா எல்லைக்குக்கொண்டுவரப்பட்டு விசாரணைகளின் பின் கதை சொல்லிக் கனடாவுக்கும் , ஊர்சோன் அமெரிக்காவுக்கும் அனுப்பப்படுகின்றார்கள். கனடாவில் கதைசொல்லியின் அக்கா இருந்தது கதை சொல்லி கனடா வர முக்கிய காரணம். ஊர்சோனின் மாமாவும், கதைசொல்லியின் அக்காவும் கனடா எல்லைக்கு வந்திருந்தார்கள். அப்போது ஊர்சோனின் கையில் தன் மணிக்கூட்டைக் கட்டிப்பிரிகின்றான் கதைசொல்லி.
 
காலம் செல்கின்றது, அமெரிக்காவில் ஊர்சோனின் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது. தலைமறைவாகின்றான். அவன் இருப்பிடம் யாருக்கும் தெரியவில்லை. காவல்துறைக்கும் முறைப்பாடு செய்யப்படுகின்றது.
பனிக்காலமொன்றின் சென் லோரன்ஸ் நதி வழியாக செவ்விந்தியர்கள் இருவர், தமிழர்கள் இருவருடன் கனடாக்குப் புகலிடம் நாடி ஊர்சோன் வந்திருக்கின்றான். வழியில் நீர்மூழ்கி அனைவரும் பனிக்காலமென்பதால் உறைந்துபோயிருக்கின்றார்கள். கோடையில் பனி உருகியபோது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஊர்சோனின் கைகளில் கட்டப்பட்டிருந்த கதைசொல்லியின் மணிக்கூட்டிலிருந்து அடையாளம் காணப்படுகின்றான்.
"இன்னமும் உறைந்துபோகாத அந்த மணிக்கூடு ஒவ்வொரு முற்பகல் நான்கு மணிக்கும் அலாரம் அடித்துக்கொண்டிருக்கிறது. பாப்பப்பபாப்பபாப்பப்பபாப்ப' என்று கதை முடிகின்றது.
 
இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருப்பதற்குக் காரணங்கள்;
 
1, ஊர்சோன் , பாலந்தை என்னும் பெயர் வந்ததை எடுத்தியம்புகின்றது. புலம்பெயர்ந்து வந்த காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கல், ஸ்பெயின் கொண்டு வந்த பெயர்கள் என்னும் வரலாற்றை எடுத்தியம்புகின்றது. தென்மோடிக் கூத்து பற்றித் தெரிவிக்கின்றது. 
 
2. முள்ளிவாய்க்கால் துயரத்தை எடுத்தியம்புகின்றது. 
 
3. ஊர்சோன், பாலந்தை என்னும் பெயர்கள் அரசகுமாரர்களின் பெயர்கள். இங்கு அதே பெயர்கள் சகோதரர்கள் இருவருக்கும் வைக்கப்பட்டிருக்கின்றது. பழங்கதையின் ஊசோனைக் கரடியொன்று காட்டுக்குத்தூக்கிச் சென்று விடுகின்றது. இக்கதையில் காலக்கரடி நவகால ஊசோனைப் புகலிடம் நாடி , ஊசோன் பெயருக்குக் காரணமான போர்த்துக்கல்லுக்குள் தூக்கிப் போடுகின்றது.
 
4. புகலிடம் நாடிச் செல்லும் புலம்பெயரும் அகதிகள் அடையும் துயரினை, சில சமயங்கள் சோக முடிவினைக் கதை விபரிக்கின்றது. 
 
மூன்று பக்கங்களில் கச்சிதமாக, தேவையற்ற சொற்களற்று கூறப்பட்டிருக்கும் சிறுகதையைப் புலம்பெயர், புகலிடச் சிறுகதைகளில் முக்கியமானதொன்று என்று துணிந்து கூறுவேன்.
 
இக்கதையைக் கூர் 2012 ஆண்டிதழில் வாசிக்கலாம் - https://noolaham.net/project/871/87088/87088.pdf

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்