Wednesday, November 20, 2024

டானியல் அன்ரனியின் 'பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன'.

- டானியல் அன்ரனி -

'டானியல் அன்ரனி' எழுத்தாளர் டானியல் அன்ரனியின் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய தொகுப்பு.ம் கருப்புப் பிரதிகள் வெளியீடாகக் கடந்த ஆண்டு வெளியான தொகுப்பு. இத்தொகுப்பின் முதற் கதை 'பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன'.  தொகுப்பின் முதற் கதை மட்டுமல்ல, முக்கியமான கதையும் கூடத்தான். இக்கதை ஏற்கனவே சமர் இலக்கிய வட்ட வெளியீடான 'வலை' சிறுகதைத்தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.  'வலை' தொகுப்பின் இரண்டாம் பதிப்பு சுரபி பதிப்பக வெளியீடாக வெளியானது. வலையில் வெளியான கதைகளுடன், கவிதைகள் , கட்டுரைகளும் உள்ளடக்கப்பட்டு வெளியான தொகுப்பே கருப்புப் பிரதிகள் வெளியிட்ட 'டானியல் அன்ரனி' தொகுப்பு.

கதை சம்மாட்டியார் சவிரிமுத்தர், அவரிடம் வேலை பார்க்கும் மலையகத்தைச் சேர்ந்த பெருமாள் ஆகியோரை உள்ளடக்கிப் பின்னப்பட்ட கதை.  கதையின் ஆரம்பத்தில் சவிரிமுத்தர் வீடு நோக்கி வருகின்றார். வரும் வழியில் பெருமாளைப் பொலிஸார் ஜீப்பில் ஏற்றிச் செல்வதைக் காணகின்றார். கதையின் இறுதியில் அதற்கான காரணம் மறைமுகமாக வெளிப்படுகின்றது.
கதைச்சுருக்கம் இதுதான்: சவிரிமுத்தர் பத்து வயதுச் சிறுவன் பெருமாளை யாழ் பஸ் ஸ்டாண்டில் சந்திக்கின்றார். பிச்சையெடுத்துக்கொண்டிருக்கின்றான். சவிரிமுத்தருக்கு வீட்டு வேலைக்கும்,கடற்றொழிலுக்கும் ஆள் தேவையாக இருந்தது. அவர் அச்சிறுவனிடம் பேச்சுக்கொடுத்து அவனது குடும்ப நிலையை அறிந்துகொள்கின்றார். தந்தையை இழந்தவன் அவன். தாயும் சகோதரியும் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கின்றார்கள்.  அவனுக்குச் சாப்பாடு தருவதாகவும் ,குடும்பத்துக்குப் பணம் அனுப்புவதாகவும் கூறி அவனை அழைத்து வருகின்றார் சவிரிமுத்தர்.

பெருமாள் மாடாக உழைக்கின்றான். வீட்டு வேலை செய்கின்றான். வலையில் பிடித்து எஞ்சிய மீன்களைக் கருவாடு போடுகின்றான். 'அய்ஸ்' போடுகின்றான். பெருமாள் சவிரிமுத்தருடன் கடலுக்குச் செல்கின்றான். அதனை டானியல் அன்ரனி பின்வருமாறு விபரிப்பார்: "தோணியில் பெருமாள் கால் வைத்த வேளை 'விடுவலை'யில் கயல்மீன் அள்ளிச் சொரிந்தது.  சில வருடங்களிலேயே  சவிரிமுத்தர்  பல லட்சம் பெறுமதியான 'மிசின்' தோணிகளுக்கும், நைலோன் வலைகளுக்கும் அதிபதியாகி ஊரில் பெரிய 'சம்மாட்டி' ஆகிவிட்டார்."

ஆண்டுகள் பத்தைக் கடந்து விட்டன. பெருமாளுக்குத்  தாய், சகோதரி நினைவு ஏற்படுகின்றது. அவர்களைப் பார்க்க வேண்டும்போலிருக்கிறது. சவிரிமுத்தரிடம் ஐநூறு ரூபா பணம் கேட்கின்றான். அப்போதிருந்த சவிரிமுத்தர் நிலையைக் கதாசரியர் பின்வருமாறு விபரிக்கின்றார்: "சுரண்டிப் பிழைத்து சொகுசு அனுபவித்துப் பழக்கப்பட்ட சவிரித்தருக்கு இது பேரிடியாகிவிட்டது."

அவனுக்கு பணம் கொடுக்காமல் நாட்களைக்  கடத்தி வந்தார் சவிரிமுத்தர். அவனது உழைப்பை இழக்க அவர் விரும்பவில்லை, நிலைமையைத் தாள மாட்டாத பெருமாள் ஒருநாள் சொல்லிக்கொள்ளாமலேயே அவரது எதிரியான பேதுருவின் 'நைலோன் வலை'யில் சேர்ந்து விட்டான். அவனைத்தான் இப்போது பொலிசார் ஜீப்பில் ஏற்றிச் செல்கின்றனர்.

அப்பொது அவரைச் சந்திக்கக்  குத்தகைக்காரன் யோண் வருகின்றான். அவன் பெருமாளைக் கள்ளத்தோணியென்று பிடித்துக்கொண்டு போகின்றார்கள் என்கின்றான். யாரோ அவன் கள்ளத்தோணியென்று பெட்டிசன் போட்டுவிட்டார்களாம் என்கின்றான்.. அதைக்கேட்டதும் சவிரிமுத்தரின் நிலையினைக் கதாசிரியர் கதையை இவ்விதம் விபரிப்பார்: "சவிரிமுத்தர் ஒரு நமட்டுச் சிரிப்புடன் அண்ணாந்து பார்த்தார்.  பருந்துகள் எதையோ தேடிப்பறந்துகொண்டிருந்தன."

மலையகச் சிறுவன் ஒருவனின் உழைப்பைச் சுரண்டி வாழும் சம்மாட்டி ஒருவர், அவன் தன் எதிரியுடன் வேலைக்குச் சேர்ந்ததைப் பொறுக்க மாட்டாமல் கள்ளத்தோணியென்று பெட்டிசன் போட்டு  அவனது வாழ்க்கையையே சீர்குலைத்து விடுகின்றார். எத்தனையோ வருடங்களாக அவனது உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த அவருக்கு அவன் ஊருக்குச் சென்று தன் அன்புத்தாயையும் , சகோதரியையும் பார்த்து வரப் பணம் கொடுப்பதற்குக் கூட மனசில்லை.

இந்தக் கதையை வாசித்தபோது எனக்கு யாழ் மாவட்டத்தில் என் பதின்ம வயதுகளில் பார்த்த , பல வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்த மலையகச் சிறுவர்களின் நிலை நினைவுக்கு வந்தது. மலையகத்தமிழர்களை மையமாக வைத்து அ.ந.கந்தசாமி நாயினும் கடையர் (தேசாபிமானி)< காளிமுத்து இலங்கை வந்த கதை (வீரகேசரி), 'குடும்ப நண்பன் ஜில் (தமிழ்முரசு, சிங்கப்பூர்) ஆகியன வெளிவந்துள்ளன. இவற்றில் நாயினும் கடையர், காளிமுத்து இலங்கை வந்த கதை ஆகியன இன்னும் எனக்குக் கிட்டவில்லை. தேடிக்கொண்டிருக்கின்றேன். இவர் மலையகத்தமிழர்களை மையமாக வைத்துக் கழனிவெள்ளம் என்னுமொரு நாவலையும் எழுதியிருந்தார்.  எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்த அது 83 கறுப்பு ஜூலைக் கலவரத்தில் எரிந்து போயிற்று. எழுத்தாளர் அ.செ.முருகானந்தனும் 'காளிமுத்துவின் பிரசாவுரிமை' என்னுமொரு சிறுகதை எழுதியிருக்கின்றார். நவஜீவனம் (1951 - 1952) சஞ்சிகையில் முதலில் வெளியான  இச்சிறுகதை அவரது 'மனிதமாடு' தொகுப்பிலும் உள்ளது.

மலையகத்தைச் சேராத  தமிழ் எழுத்தாளர்களின் மலையகம் சார்ந்த படைப்புகளில் எழுத்தாளர் டானியல் அன்ரனியின் 'பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன'. சிறுகதையும்  குறிப்பிடத்தக்கது.  நந்தியின் 'மலைக்கொழுந்து', தி.ஞானசேகரின் 'குருதிமலை' நாவல்களும் இவ்வகையில் முக்கியமானவை.

மேற்படி சிறுகதையை 'வலை'த் தொகுப்பில் வாசிக்க - https://noolaham.net/project/135/13435/13435.pdf


No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்