Monday, February 19, 2018

'திண்ணை'க் கவிதைகள் மூன்று! - வ.ந.கிரிதரன் -

'திண்ணை' இணைய இதழில் முன்பு வெளியாகிய கவிதைகள் இவை. என்னை எப்பொழுதுமே நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் உருவான மானுட இருப்பும், இதற்கும் மேலான உயிரினங்களின் சாத்தியம் பற்றிய சிந்தனைகளும், எம் இருப்பின் முப்பரிமாண எல்லையும் , காலவெளி பற்றிய புரிதல்களும் அவற்றின் மீதான சிந்தனையும், இயற்கையின் பேரழகும், படைக்கப்பட்டுள்ள ஏனைய உயிரினங்களின் படைப்புச்சிறப்பும் கவரும் விடயங்கள். எம் இருப்பு '"வெறுமைக்குள் விரியும் திண்ம இருப்பு.". நாமோ 'பரிமாண விலங்குகள் தாங்கும் அடிமைகள்'. அவை பற்றிச் சிந்திப்பதிலுள்ள இன்பம் எனக்கு வேறெவற்றிலுமில்லையென்பேன். ஆழநடுக்காட்டில் பல்லாண்டுகள் தனித்து விடப்பட்டாலும் கூட என்னால் இவை பற்றித் தொடர்ச்சியாகச் சிந்தித்துக்கொண்டேயிருக்க முடியும். 'என்று வருமந்த ஆற்றல்?', 'காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்! மற்றும்' 'மழையைச் சுகித்தல்! ஆகிய கவிதைகளிலும் என் இந்த உளப்பாங்கினை நீங்கள் கண்டிட முடியும்.

1. என்று வருமந்த ஆற்றல்? - வ.ந.கிரிதரன்

நள்ளிரவுக் கருமை;
மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி
பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச்
சிரிக்கும் சுடரு.

விரிவான் விரிவெளி.
‘புதிர் நிறை காலவெளி.

வெறுமைக்குள் விரியும்
திண்ம இருப்பு.

பரிமாண விலங்குகள்
தாங்கும் அடிமை.

பன்முறையெனினும்
மீறி வியப்பதற்கெதுவுண்டு.

படியளக்கும் படைத்தவரே!
படைத்ததேன்? பகர்வீரா?

அறிவுத்தாகம் மிகுந்த
அலைவு; தாகசாந்திதான்
எப்போது?
அலையெனப் பரவும்
நிலை வரும் வரையிலா?
என்று வருமந்த
நிலை? அன்றி
‘அதிவெளி’ கடக்கும்
ஆற்றல் வரும் வரையிலா?
என்று வருமந்த
ஆற்றல்?


 நன்றி: திண்ணை - http://puthu.thinnai.com/?p=3648
2. காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்! - வ.ந.கிரிதரன்
விண்ணில் புள்!
மண்ணில் புள்!
வனத்தில் புள்!
மனத்தில் புள்!

புள்ளினம் பறந்து செல்லும்.
உள்ளமோ சிறகடிக்கும்.

அவற்றை
அவதானிப்பதில்
அளப்பரிய இன்பம்.
புல்லரிப்பில் களிக்குமென்
உள்ளம்.

இறகசைப்பின் விரிவு கண்டு
ஒரே பிரமிப்பு!
அழுத்த வேறுபாடுகளை அவை
கையாளும் இலாவகம்!

எத்துணை அறிவு!

புள்ளினம் தந்திரம் மிக்கவை.
சிறகசைத்தலற்று விண்ணோக்கி
அல்லது மண் நோக்கி விரைதலில்
அவை பாவிக்கும் அறிவின் ஆழம்..
பிரயோகிக்கும் அறிவியலின் புரிதல்…
இவை கண்டு வியக்காமல் ஒருவரால்
எவ்விதம் இருக்க முடியும்?

பறவைகளில்தானெத்தனை பிரிவுகள்:

கடுகி விரையும் குறும்புள்.
நெடுந்தொலைவு செல்லும் பெரும்புள்.
சிறகசைத்தலில்தானெத்தனை
எத்தனை பிரிவுகள்.

ஆலா போன்றதொரு கடற்பறவையொன்று
மிகவும் ஆறுதலான, மெதுவான சிறகடிப்பில்…
வீழ்வதற்குப் பதில் எவ்விதம் வெற்றிகரமாக
எழுகின்றது மேல் நோக்கி?
விரிந்த வெளியில், காற்றில் கட்டற்றுப்
புள்ளினம்போல் சுகித்திட வேண்டும்!
புள்ளினம்போல்

காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!

நன்றி: திண்ணை - http://puthu.thinnai.com/?p=5631
3. மழையைச் சுகித்தல்! - வ.ந.கிரிதரன்

நள்ளிரவு மழை
நண்பகல் கழிந்தும்
பெய்தலை இன்னும்
நிறுத்தவில்லை.

எழுதற்குப் பிரியமின்றிப்
புரண்டு படுத்தலிலும்,
பொழியும் வான் பார்த்திருப்பு
கழித்துக் கிடப்பதிலும்
தானெத்தனை களி!

வினாத்தொடுத்து
புரிதலை வினாக்களாக்குவதில்
பேரவாக் கொள்ளும்
மனது!

இயற்கை நோக்கி,
வாசித்து, கனவில்
மூழ்கி
இளகி விடுதலென்
இயற்கையே.

சதிராடும் மின்னற்கொடியாள்
வனப்பில் தமையிழக்காத
கவிஞரெவருளரோ?

சிறகு சிலிர்த்து நீருதிர்க்கும்
புள்ளினம்,
நினைவூட்டும்
பால்யப் பொழுதுகள்.

காகிதக் கப்பல்களை மட்டுமா
கட்டினோம்? கற்பனைகளை
மட்டுமா பின்னினோம்?

பெய்தலில் வரலாற்றைப் ‘
போதிக்கும் மழையே!
உனைச் சுகிப்பதில்தானெத்தனை
இன்பம்! இன்பம்! இன்பம்!


நன்றி: திண்ணை -http://puthu.thinnai.com/?p=2762

ngiri2704@rogers.com

No comments:

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...

அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செய...

பிரபலமான பதிவுகள்