Monday, February 19, 2018

ஓவியம் பிறந்த கதை: நியுயார்க் நடைபாதையில் வீதி ஓவியரின் கைவண்ணம்!

1983 கலவரத்தைத்தொடர்ந்து நாட்டை விட்டு நீங்கிக் கனடா வரும் வழியில், பாஸ்டன் நகரில் தடுக்கப்பட்டு, நியூயார்க் மாநகரத்தின் புரூக்லீன் நகரிலுள்ள தடுப்பு முகாமில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு வெளியே விட்டபோது, அடுத்த ஒன்பது மாதங்கள் வரையில் நியூயார்க் மாநகரத்தில் மான்ஹட்டன் நகரில் பெரும்பாலும் எனது வாழ்க்கை கழிந்தது. 'West 4th Street / Avenue of the Americas வீதிகளிரண்டும் சந்திக்கும் சந்தியில் Avenue of the Americas' வீதியின் கிழக்குப் பக்கமாகவிருந்த நடைபாதையில் மனிதரின் உருவப்படங்கள் வரையும் வீதி ஓவியர்கள் சிலர் அவ்வழியால் செல்லும் மனிதர்களில் விரும்பும் சிலரின் உருவப்படங்களை வரைவது வழக்கம். ஒரு மாலை நேரம் அவ்வழியால் சென்று கொண்டிருந்தபொழுது நான்கு ஓவியர்கள் அந்நடைபாதையில் காணப்பட்டனர். அவர்களில் மூவருக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்து விட்டனர். ஒருவருக்கு ஒருவருக்குக் கிடைக்காததால் , தனிமையில் வாடிக்கையாளரை எதிர்நோக்கி வாடி நிற்கும் கொக்காகக் காத்திருந்தார். மற்ற ஓவியர்கள் தம் தொழிலில் மும்முரமாக ஈடிபட்டிருந்தனர். நான் தனித்திருந்த ஓவியரிடம் ஒருவரின் உருவப் படத்தை வரைவதற்கு எவ்வளவு செல்வாகும் என்றேன்.

அதற்கவர் தற்சமயம் தனக்கு வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாததால் என்னை 'மொட'லாக வைத்துத் தான் ஓவியம் வரைவதாகவும், அதன் மூலம் தனக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கும் சாத்தியமுண்டென்றும் அத்துடன் நான் விரும்பியதைத் தரலாம் என்று கூறினார். நானும் சந்தோசத்துடன் சம்மதித்தேன். அப்பொழுது நான் தொப்பியினை எப்பொழுதும் அணிவது வழக்கம். அருகிலிருந்த கதிரையில் என்னை அமர்த்திவிட்டு, ஓவியர் என்னை வரையத்தொடங்கி விட்டார்.
சிறிது நேரத்திலேயே என்னை வரைந்து கொண்டிருந்த ஓவியரைச் சுற்றிச் சிறு கூட்டம் கூடிவிட்டது. அதிலொருவர் 'நேரில் இருப்பதை விட ஒவியத்தில் நன்றாகவிருக்கிறாய்' என்று கூறிக் கண்ணைச் சிமிட்டினார். நான் அவரது கூற்றிற்கு எந்த விதப் பதிலினையும் கூறாமல் மெளனமாக ஓவியருக்கு ஒத்துழைப்பதுபோலிருந்தேன்.

என்னை அந்த ஓவியர் பென்சில் கொண்டு வரைந்த ஓவியத்தைத்தான் நண்பர்களே, நீங்கள் இங்கு காண்கின்றீர்கள். இன்றும் அந்தப் பென்சில் ஓவியம் அப்படியே அழியாமல் நேற்றுத்தான் வரைந்தது மாதிரி இருக்கிறது. ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் அந்த நாள் ஞாபகம் மீண்டெழுகின்றது...]

No comments:

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...

அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செய...

பிரபலமான பதிவுகள்