Thursday, February 22, 2018

ஆய்வு: புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள்! - வ.ந.கிரிதரன் -

மகுடம் கனடாச்சிறப்பிதழ்
- இன்று - மே 31, 2014 -'டொராண்டோ'வில் எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன் ஆதரவில் நடைபெற்ற மாதாந்த இலக்கிய நிகழ்வில் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம். நிகழ்வில் நேரப் பற்றாக்குறை காரணமாக கட்டுரை முழுவதையும் வாசிக்க முடியவில்லை.  இக்கட்டுரை இலங்கையிலிருந்து வெளிவரும் மகுடம் சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் (ஏப்ரில் - டிசம்பர் 2016)  முழுமையாகப் பிரசுரமாகியுள்ளது. அதன் மீள்பிரசுரமே இங்கு வெளியாகியுள்ள கட்டுரை. -  வ.ந.கி -

புலம் பெயர் தமிழ் இலக்கியமும், புகலிடத் தமிழ் இலக்கியமும், புகலிட நாவல்களும் பற்றி....

இன்று உலகெங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்து பரந்து வாழ்கின்றார்கள். சங்க காலத்திலிருந்து காலத்துக்குக் காலம் தமிழர்கள் புலம் பெயர்வது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. 'திரை கடலோடித் திரவியம் தேடினார்கள் அற்றைத் தமிழர்கள். பொருளியல் காரணங்களுகாக அன்று தமிழ் மன்னர்கள் அயல் நாடுகளின் மீது படையெடுத்து தமது ஆட்சியினை விஸ்தரித்தார்கள். அதன் காரணமாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். அந்நியர் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு , நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது தமிழகத்திலிருந்து தமிழர்கள் பலர் இலங்கை, மலேசியா என்று பல்வேறு நாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவ்விதமாகத் தொடர்ந்த தமிழ் மக்களின் புலம்பெயர்தலில் முக்கியமானதொரு நிகழ்வு கடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஆரமபித்த ஈழத்தமிழரின் பல்வேறு திக்குகளையும் நோக்கிய புலம் பெயர்தல்.
இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்திலிருந்து படிப்படியாக இலங்கையில் தமிழ் மக்களின் மீதான் ஆளும சிங்கள இனவாத அரசுகளின் அடக்குமுறைகள் அதிகரிக்கத் தொடங்கின. தமிழ்ப் பகுதிகளில் அரசினால் ஏற்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள், சிங்களம் மட்டும் அரச மொழி, தமிழ் மாணவர்கள் கல்வி மீதான தரப்படுத்தல் எனத் தொடர்ந்த அரசத் திட்டங்கள், கொள்கைகளால் இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் படிப்படியாக வளர்ந்து அகிம்சை நிலையிலிருந்து ஆயுதப் போராட்டமாக விரிவடைந்து, உபகண்ட அரசியலில் முக்கியத்துவமானதொன்றாகி வெடித்ததைத் தொடர்ந்து, இலங்கையின் அரசுகளால் தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகள், நிகழ்ந்த இனக்கலவரங்கள் காரணமாக ஈழத்தமிழர்கள் உலகின் பல்வேறு திக்குகளையும் நோக்கிப் படையெடுத்தார்கள். இவ்விதமாகப் புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத நிலையினால் அகதிகளாகப் புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்தவர்கள். இவ்விதமாகப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தவர்களைப் புகலிடத் தமிழர்கள் என்று அழைக்கலாமா?  உலகின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் (தமிழகம் உட்பட) கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்தார்கள். ஆனால் அவர்களைப் புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த தமிழர்கள் என்று அழைக்க முடியாது. அவர்கள் படைக்கும் இலக்கியத்தைப் புகலிட இலக்கியமென்று அழைக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் தாம் வாழும் நாடுகளில் வாழ முடியாத நிலையினால் , இருப்பே கேள்விக்குறியாக மாறிய நிலையினால் புலம் பெயரவில்லை. அவர்கள் படைக்கும் இலக்கியத்தைப் புலம் பெயர் தமிழ் இலக்கியம் என்று அழைக்கலாம். அவர்கள் படைக்கும் இலக்கியத்தைப் புகலிடத் தமிழ் இலக்கியம் என்ற பிரிவுக்குள் அடக்க முடியாது. ஆனால் அவ்விதமாகப் புலம் பெயர்ந்த தமிழர்கள் புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிப் படைக்கும் இலக்கியத்தையும் புகலிடத் தமிழ் இலக்கியத்துள் அடக்கலாம். காரணம் அவர்களது படைப்புகள் புகலிடத் தமிழர்களின் வாழ்வை விபரிப்பதால். இதற்குதாரணமாக மலையகத் தமிழ் இலக்கியம் பற்றிக் குறிப்பிடும்போது மலையகத்தைச் சேராதவர்கள் படைக்கும் மலையகம் பற்றிய இலக்கியத்தையும் மலையகத் தமிழ் இலக்கியத்தினுள் உள்ளடக்கிக் கூறுவதைக் கூறலாம். உதாரணமாக நந்தி, அறிஞர் அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன், புலோலியூர் சதாசிவம் போன்றவர்களின் மலையகம் பற்றிய படைப்புகளைக் குறிப்பிடலாம். எனவே இக்கட்டுரையில் நான் ஆராய விளைவது புகலிடத் தமிழ் நாவல்கள் பற்றியே. புகலிடத் தமிழ் எழுத்தாளர்களால படைக்கப்பட்ட புகலிடத் தமிழர்களின் வாழ்வினைப் பிரதிபலிக்கும் நாவல்களாக அவை இருக்கலாம், அல்லது புகலிடம் நாடி திக்குகளெங்கும் சிதறிய எழுத்தாளர்கள் படைத்த நாவல்களாக அவை இருக்கலாம், அல்லது புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிப் படைக்கப்பட்ட நாவல்களாக அவை இருக்கலாம். மேலும் நான் குறுநாவல்களையும்  புகலிட நாவல்கள் பிரிவுக்குள் அடக்கித்தான் சிந்திக்கின்றேன். நாவல்கள் நீண்டவையாக இருக்கலாம் அல்லது குறுகியவையாக இருக்கலாம். அவை அளவில் வேறுபட்டாலும் நாவல்களே. மேலும் பலரை இத்துறையில்  விரிவாக ஆராய்வதற்குத் தூண்டுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

இது தவிர இன்னுமொரு காரணமுமுண்டு. இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்கள் காரணமாக பூமிப்பந்தின் அனைத்துத் திசைகளையும் நோக்கித் தூக்கி எறியப்பட்டவர்கள் ஈழத்தமிழர்கள். புகலிடம் நாடிச் சிதறுண்ட அவர்கள் படைத்த இலக்கியம் போன்றவை ஆவணப்படுத்தப்பட்டு, சேகரிக்கப்பட்டு, அவை பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியதவசியம். முதலிரண்டு தலைமுறைகளைத் தாண்டியதும் அடுத்த தலைமுறையினர் புலம் பெயர்ந்த தமிழர் என்றோ அல்லது புகலிடத் தமிழரென்றோ அழைக்கப்படப் போவதில்லை. அவர்கள் கனடாத் தமிழர், பிரான்ஸ் தமிழர், ஆஸ்திரேலியத் தமிழர் என்றே அழைக்கப்படப் போகின்றார்கள். அவர்கள் படைக்கும் இலக்கியமும் அவ்வாறே கனடாத் தமிழர் இலக்கியம், பிரெஞ்சுத் தமிழர் இலக்கியம், ஆஸ்திரேலியத் தமிழர் இலக்கியம் என்றே அழைக்கப்படப் போகின்றது.  எனவேதான் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழர்களின் கலை, இலக்கியம் பற்றிய ஆய்வுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது. இதனை ஆய்வாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

புலம் பெயர்ந்த தமிழர்களும், புலமும் பற்றிச் சில வார்த்தைகள்:

மேலே செல்வதற்கு முன்னர் நாம் புலம் பெயர் தமிழர் இலக்கியம் பற்றி நிலவுமொரு குழப்பத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புலம் பெயர் தமிழர் என்னும்போது அதில் வரும் புலம் என்பது எதனைக் குறிக்கிறது?

யாயும் ஞாயும்
யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

-செம்புலப் பெயனீரார் (குறுந்தொகை - 40)

இந்தக் குறுந்தொகையில் வரும் 'செம்புலப் பெயனீர் போல' என்பதன் அர்த்தம் செம்மண் நிலத்தில் பெய்த மழைபோல் என்று வரும். இந்த அர்த்தத்தில் புலம் என்பது நிலம் என்பதைக் குறிக்கும். 'கலம் தரும் தெருவில் புலம் பெயர் மாக்கள்' என்று கூறும் சிலப்பதிகாரம். புகாருக்கு வந்திருந்த அயல் நாட்டு வணிகர்களைக் குறிக்க இளங்கோ அடிகள் 'புலம் பெயர் மாக்கள்' என்ற சொற்களைப் பாவித்திருப்பார். இங்கு புலம் என்பது அவர்களது சொந்த நிலத்தைக் குறிப்பிடுகிறது. தாம் வாழ்ந்த நிலத்தை விட்டு வந்த மக்கள் என்று இதன் பொருள். அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை , தாம் வாழ்ந்த நிலத்தை விட்டுப் பெயர்ந்த தமிழர்களைப் புலம் பெயர்ந்த தமிழர்கள் என்று அழைக்கலாம்.

ஆனால் அதே சமயம் புலம் என்பதற்குப் பல அர்த்தங்களுள்ளன.  வடபுலம், தென் புலம் என்னும் போது அது திசையினை அல்லது திக்கினைக் குறிக்கின்றது. இந்த அர்த்தத்தில் பார்க்கும்போது ஈழத்தின் அரசியல் நிலை காரணமாக, உலகின் பல்வேறு திசைகளையும்  (திக்குகளையும்) நாடிப் பெயர்ந்த தமிழர்களைப் புலம் பெயர்ந்த தமிழர்கள் என்று அழைக்கலாம். தாம் வாழ்ந்த நிலம் விட்டுத் திக்குகள் நாடிப் பெயர்ந்த தமிழர்கள் என்னும் அர்த்தத்தில் இவ்விதம் அழைக்கலாம்.

இருப்பு கேள்விக்குறியானதொரு நிலையில் வாழுவதற்கு ஒரு நிலம் நாடிப் பெயர்ந்தவர்கள் என்னும் அர்த்தத்திலும் புலம் நாடிப் பெயர்ந்த தமிழர்கள் என்னும் அர்த்தத்திலும் புலம்பெயர் தமிழர்கள் என்னும் பதத்தினைப் பாவிக்கலாம். இங்கு புலம் என்பது இருந்த நிலத்தைக் குறிக்கவில்லை. புகலிடம் நாடிப் புகுந்த நிலத்தைக் குறிக்கிறது. எனவே புலம் பெயர் தமிழர்கள் என்பதன் அர்த்தமாக வாழ்ந்த புலம் விட்டுப் பெயர்ந்தவர்கள் என்பதையும் கொள்ளலாம். வாழுவதற்கு நிலம் (புலம்) நாடிப் பெயர்ந்தவர்கள் என்பதனையும் கொள்ளலாம்.

புகலிடத் தமிழ் இலக்கிய முயற்சிகள்:

புகலிடத் தமிழ் இலக்கியமென்பது புலம் பெயர்ந்த தமிழர்தம் இலக்கியத்தினொரு பகுதி. ஆனால் புலம்பெயர்தமிழர்தம் இலக்கியமெல்லாம் புகலிடத் தமிழ் இலக்கியம் ஆகாது. இதனை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே நான் இங்கு புகலிடத் தமிழர்தம் இலக்கிய முயற்சி பற்றியே சிறிது விபரிக்கப் போகின்றேன்.  இதுவொரு விரிவானதோர் ஆய்வு அல்ல. எதிர் காலத்தில் விரிவாக ஆராய விளையும் எவருக்கும் வழியினைக் காட்டக் கூடியதொரு சிறு கட்டுரையாக இதனைக் கொள்ளலாம்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் பரந்து , புகலிடம் நாடி வாழும் ஈழத்தமிழர்கள் படைக்கும் இலக்கியம் பரந்து பட்டது. குழந்தை இலக்கியம், வெகுசன இலக்கியம், தீவிர இலக்கியம், முற்போக்கு இலக்கியம், பெண்ணிய இலக்கியம், தலித் இலக்கியம், அரசியல் இலக்கியம் எனப் பல பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஆராயலாம். இவ்விதமாகப் படைக்கப்பட்ட அல்லது படைக்கப்படும் இலக்கியமும் கூறும் மொழியில் வேறு பட்டன. உதாரணமாக அரசியல் நாவலொன்று சாதாரண , தெளிந்த  நடையில் படைக்கப்பட்டிருக்கலாம். அல்லது சுவை மிக்க , மொழி நடையில் படைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கூறப்படும் மொழி மட்டும் ஒரு படைப்பின் சிறப்பினை அல்லது முக்கியத்துவத்தினைத் தீர்மானிப்பதில்லை. ஒரு படைப்பானது பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறலாம். பாத்திரப் படைப்புக்காக, கூறப்படும் மொழிக்காக, கூறும் பொருளுக்காக, பாவிக்கப்படும் உரையாடலுக்காக, படைப்பில் நிகழ்வுகளின் திட்டமிட்ட தொகுப்புக்காக, அல்லது மையமற்ற போக்குக்காக என்று பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறலாம். எனவே புகலிடத் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள் பற்றிக் குறிப்பிடும்போது இவற்றையும் நாம் சிந்திக்க வேண்டும்.

இதுவரை காலம் வெளியான புகலிடத் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள் பற்றிப் பார்க்கும்போது பல்வேறு இலக்கியப் பிரிவுகளிலிருந்தும் நூல்கள், கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகியன வந்திருக்கின்றன. பிரபல இலக்கிய ஆளுமைகளிடமிருந்து (ஆக்க இலக்கியப் படைப்பாளிகள் , இலக்கியத் திறனாய்வாளர்கள்) புலம் பெயர் தமிழ் இலக்கியம் பற்றி அவ்வப்போது கட்டுரைகள் , நூல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் புலம் பெயர் தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வுகளை ஆற்றியுள்ளார்கள். அவர்களது ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன். பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கான ஆய்வுக் கட்டுரைகளாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நூல்களாகவும் வெளியாகியுள்ளன. இவ்விதமான வெளியான ஆய்வுக்கட்டுரைகளை அல்லது நூல்களைப் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பலர் புகலிடத் தமிழ் இலக்கியப் படைப்புகள் பற்றி ஆராய்ந்துள்ள அளவு இலக்கிய ஆளுமைகள் என்று கூறப்படுபவர்கள் ஆராயவில்லை என்பதே அது. இலக்கிய ஆளுமைகள் தங்களுக்குக் கிடைத்த, தெரிந்தவர்களின் படைப்புகளை மட்டும் முதன்மைப் படுத்தி பொதுவான தலைப்புகளில் (புலம் பெயர் தமிழ் இலக்கியம் போன்ற) அவ்வப்போது கட்டுரைகள் எழுதியிருக்கும் அதே சமயம் எந்தவித விளம்பரங்களுமின்றி பல்கலைக்கழகங்களில் மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பலர் புலம் பெயர் தமிழர்களின் புகலிடத் தமிழ் முயற்சிகள் பற்றி (தமிழகத்தில், இலங்கையில்) ஆராய்ந்திருக்கின்றார்கள். இணையத்தில் கூகுள் தேடுதலில் இவை பற்றிய விபரங்கள் பலவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு துறையினைப் பற்றி ஆராய விழையும் ஆய்வாளர்கள் , ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் முன்னர் அத்துறை பற்றிய தேடலை ஆற்றியிருக்க வேண்டும். உதாரணமாக, புகலிட அல்லது புலம் பெயர் தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வு அல்லது திறனாய்வுக் கட்டுரைகள் எழுத விரும்புவர்கள் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்தவர்களின் படைப்புகள் பற்றிய தேடுதலின் மூலம் அவற்றை அறிந்து, வாசிக்க முனைய வேண்டும். வாசிப்பு சாத்தியமாயில்லாத பட்சத்தில் அவை பற்றிய தகவல்களைத் தொகுத்து ஆவணப்பட்டியல்களை உருவாக்க வேண்டும். பின்னர் நூல்கள் போதிய அளவில் கிடைத்ததும் அவற்றை வாசித்துத் திறனாய்வுக் கட்டுரைகளை வழங்க வேண்டும். இவ்விதம் செய்வதன் மூலம் புகலிட அல்லது புலம்பெயர் படைப்புகள் பற்றிய சரியான, உண்மையான பரிமாணம் புலப்படும்: வெளிப்படும். ஆனால் நடைமுறையில் நிகழ்வதென்ன? ஒரு படைப்பு தமிழகத்தில் நன்கு அறிமுகமாகியதும் (அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.), அவை பற்றி வெகுசன ஊடகங்களில் கட்டுரைகள் வெளிவந்ததும், அவற்றையே தொங்கிக்கொண்டு , ஆண்டுக்கணக்காய் கட்டுரைகள் எழுதுகின்றார்கள். இதனால் உண்மையான நிலை மறைக்கப்படுகின்றது. இந்த நிலை மாற வேண்டுமானால், சு.குணேஸ்வரன் போன்று சுய தேடுதல் நடாத்தி, ஆய்வுக் கட்டுரைகளைப் படைக்க வேண்டும். உதாரணமாக ஆதவனின் 'மண் மனம்' நாவலை அவர் சுவடுகள் இதழில் தேடி , வாசித்துக் கட்டுரை படைத்துள்ளார். இது போன்ற தேடலைத்தான் நான் குறிப்பிடுகின்றேன்.

புகலிடத்தமிழ் இலக்கியமும், ஆவணப்படுத்தலின் அவசியமும்.


அதே சமயம் இவ்விதமாக உலகின் பல்வேறு திக்குகளிலும் புகலிடம் நாடிப் பரந்து வாழும் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள் பற்றிய விரிவான ஆவணங்கள் இல்லயென்றே கூற முடிகிறது. அவர்களது இலக்கிய முயற்சிகள் பற்றிய திறனாய்வுகளுக்கு முதலில் அவர்களது படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது அவசியம். 'நூலகம்', 'படிப்பகம்' போன்ற இணையத்தளங்கள் அந்தப் பணியின் அவசியத்தை உணர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் வெளியான சஞ்சிகைகள், நூல்கள் போன்றவற்றைச் சேகரித்து வருகின்றன.  இலண்டனில் வாழும் நூலகர் செல்வராஜா அவர்கள் தன் சொந்த முயற்சியில் வெளியான தமிழ் நூல்கள் பற்றிய விபரங்களை 'நூல் தேட்டம்' என்னும் தொகுதிகளில் ஆவணப்படுத்தி வருகின்றார். மிகவும் மதிக்கத்தக்க இலக்கியச் சேவையாகவே இவர்களின் சேவையினை நான் காண்கின்றேன். ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து இவர்கள் ஆற்றிவரும் பயன் கருதாச் சேவை போற்றுதற்குரியது.

அதே சமயம் இவ்விதமான  ஆவணப்படுத்தலை மையமாக வைத்துப்  'பதிவுகள்' இணைய இதழில் புலம்பெயர் / புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகளை அனுப்பி வைக்கும்படி அவ்வப்போது அறிவிப்பதுண்டு. ஆனால் ஒரு சிலரைத்தவிர போதிய அளவில் கட்டுரைகள் கிடைக்கவில்லை. இன்று பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் தமிழ் மக்களின் இலக்கிய முயற்சிகள், படைப்புகள் பற்றிய தகவல்கள் ஆவணப்படுத்தப்படுவதுடன், வெளியான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியனவும் சேகரிக்கப்பட்டுப் பேணப்பட வேண்டும். அவ்விதம் சேகரித்தால் மட்டுமே எதிர்காலத்தில் அவை பற்றிய விரிவான, முறையான ஆய்வுகள் ஆற்ற முடியும். இதனால் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கலை, இலக்கியத்துறையிலுள்ளவர்கள் செயலாற்ற வேண்டியது அவசியம்.

புலம்பெயர் / புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகள் பற்றி........

புலம்பெயர் / புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி அவ்வப்போது பத்திரிகைகள், சஞ்சிகைகளில் கட்டுரைகள் வெளிவருவதுண்டு. இலக்கியக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுவதுண்டு. சு.குணேஸ்வரன், எழுத்தாளர் அகில், எழுத்தாளர் கே..எஸ்.சுதாகர், முனைவர் நா.சுப்ரமணியன், எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் வ.ந.கிரிதரன், எழுத்தாளர் தேவகாந்தன் , கலாநிதி கா.சிவத்தம்பி, கலை இலக்கியத் திறனாய்வாளார் வெங்கட் சாமிநாதன் எனப் பலர் ஊடகங்களில் கட்டுரைகள் எழுதியிருக்கின்றார்கள். ஆங்கிலத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றிருக்கும் முனைவர்களான R.தாரிணி, ஞானசீலன் ஜெயசீலன் ஆகியோர் தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்குகளில் ஆங்கிலத்தில் புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்கள்.  தமிழகத்திலிருந்து முனைவர் வெற்றிச்செல்வன் 'புகலிடத் தமிழ் இலக்கியம்' பற்றிய விரிவாகத் திரட்டிய தகவல்களுடன் ஆய்வு நூலொன்றினை எழுதி சோழன் பதிப்பகம் மூலம் வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவகாந்தனின் 'கனவுச்சிறை'...

புகலிடத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் தேவகாந்தனுக்குச் சிறப்பானதோரிடமுண்டு. இவரது கனவுச்சிறை (திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய  ஐந்து பாகங்களை உள்ளடக்கிய, 1247 பக்கங்களைக் கொண்ட,  1981 முதல் 2001 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய நாவல்.) புகலிட இலக்கியத்தில் மிகவும் முக்கியத்துவத்துக்குரியது. எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் கனவுச்சிறையின் ஒரு பாகமாகிய 'வினாக்கால்' என்னும் நாவல் பற்றிய அவரது விமரிசனத்தில் 'கனவுச்சிறை முதலாம் பாகத்துக்கும் இறுதிப் பாகத்துக்குமான பதிப்புக் காலஇடைவெளி நான்கு ஆண்டுகள். இவருடைய நாவலை முழுமையாக வாசிக்கலாம் என்று நான் தேடியபோது ஐந்து பாகங்களையும் ஒன்றாகத் திரட்டுவது என்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. தேவகாந்தனின் கனவுச் சிறை பரவலாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படாததற்கு இதுவும் காரணமாக இருக்கும் எனவே நினைக்கிறேன்.' என்று கூறுவது கவனிக்கத்தக்கது. ஆனால் அண்மைக்காலமாக இந்நிலைமை மாறியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வாசிக்க வேண்டிய நூறு நாவல்கள் பட்டியலில் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவலையும் சேர்த்திருக்கின்றார். முனவர் ந.முருகேசபாண்டியன், முனைவர் நா.சுப்பிரமணியன், எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் ஆகியோர் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' பற்றி விரிவான விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கின்றார்கள். இன்னும் பலர் எழுதியிருக்கின்றார்கள்; எழுதியிருப்பார்கள். அனைவரையும் இக்கட்டுரையில் குறிப்பிடுவது சாத்தியமற்றது. ஆனால் இவையெல்லாம் காய்தல் உவத்தலின்றி ஆவணப்படுத்தப்படல் அவசியம். அதுபோல் புகலிட நாவல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே அவை பற்றிய விரிவான ஆய்வுகள், திறனாய்வுகள் சாத்தியம்.

முனைவர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலைப் பற்றி நல்லதொரு விமர்சனக் கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகமிருக்குமென்பதால் குறிப்பிடுகின்றேன்:

"திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய தலைப்புகள் கொண்ட ஐந்து பாகங்களாக 237 அத்தியாயங்களில் 1247 பக்கங்களில் விரியும் இவ்வாக்கம் 1981 முதல் 2001 வரையான இருபத்தொரு ஆண்டுக்கால வரலாற்றியக்கத்தைப் பேசுவது. இந்த வரலாற்றுக் கட்டம் ஈழத்துக் தமிழர் சமூகத்தின் இருப்பையும் பண்பாட்டுணர்களையும் கேள்விக்குட்படுத்தி நின்ற கால கட்டம் ஆகும். பெளத்த சிங்கள பேரினவாதப் பாதிப்புக் குட்பட்ட நிலையில் ஈழத்துத் தழிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட உணர்வு தீவிரமடைந்த காலப்பகுதி இது. அதே வேளை மேற்படி பேரினவாதக் கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கில் ஈழத்தமிழர் பலர் புலம் பெயர்ந்தோடி அனைத்துலக நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்வை நிலைப்படுத்திக் கொண்ட காலப்பகுதியாகவும் இவ்வரலாற்றுக் காலகட்டம் அமைகின்றது. இவ்வாறு போராட்டச் சூழல் சார் அநுபவங்களுமாக விரிந்து சென்ற வரலாற்றியக்கத்தை முழூ நிலையில் தொகுத்து நோக்கி, அதன் மையச் சரடுகளாக அமைந்த உணர்வோட்டங்களை நுனித்து நோக்கி இலக்கியமாக்கும் ஆர்வத்தின் செயல்வடிவமாக இவ்வாக்கம் அமைந்துள்ளது. மேற்படி உணர்வோட்டங்களை விவாதங்களுக்கு உட்படுத்திக் கதையம்சங்களை வளர்த்துச் சென்ற முறைமையினால் ஒரு சமுதாய விமர்சன ஆக்கமாகவும் இந்நாவல் காட்சி தருகின்றது. குறிப்பாக, தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடும் இயக்கங்களின் உணர்வுநிலை மற்றும் செயன் முறை என்பவற்றுக்குப் பின்னால் உள்ள நியாயங்கள் மற்றும் புலம் பெயர்ந்துறைபவர்களின் சிந்தனைகள், செயற்பாடுகள் என்பவற்றின் பின்னால் உள்ள நியாயங்கள் என்பன இந்நாவலில் முக்கிய விவாதமையங்கள் ஆகின்றன. இவற்றோடு பேரினவாத உணர்வுத்தளமும் இந்நாவலில் விவாதப் பொருளாகின்றது. அதன் மத்தியில் நிலவும் மனிதநேய இதயங்களும் கதையோட்டத்திற் பங்கு பெறுவது நாவலுக்குத் தனிச் சிறப்புத் தரும் அம்சமாகும். போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இருப்பு சார்ந்த உணர்வோட்டங்கள் மற்றும் அவல அநுபவங்கள் ஆகியனவும் விவாதப் பொருள்களாகின்றன."

மேற்படி கனவுச்சிறை நயினாதீவைச் சேர்ந்த ராஜி என அழைக்கப்படும் ராஜலக்சுமியின் வாழ்க்கையினை விபரிப்பது. அவள்தான் நாவலின் பிரதான பாத்திரம். அவளது வாழ்க்கையினூடு தேவகாந்தன் சமூகத்தில் நிலவும் பெண்ணடிமைச் சிந்தனைகள் அவள் வாழ்வை எவ்விதம் பாதிக்கின்றது, ஆயுத மயப்படுத்தப்பட்ட விடுதலைப் போராட்டம் எவ்வாறு அவள் வாழ்வினைப் பல்வேறு கோணங்களில் பாதிக்கின்றது, விடுதலைக்காக ஆயுதமேந்தியவர்களின் உளவியல் எவ்விதம் சீர்குலைகின்றது என்பது பற்றியெல்லாம் விபரித்திருப்பார். நாவல் ஆடி, அசைந்து செல்வதன் மூலம் வாசகர்களையும் நாவலில் மனமொன்ற வைக்கிறது. எனக்கு நாவலின் முழுப் பாகங்களும் கிடைக்கவில்லை. என்னிடமிருப்பது நாவலின் முதற்பாகமான திருப்படையாட்சி மட்டுமே. கனவுச்சிறை என்ற பெயரில் வெளிவந்த படைப்பு. வாசித்த அளவில், இந்நாவல் பற்றி வெளியான விமர்சனங்களின் அடிப்படையில் கனவுச்சிறையின் முக்கியத்துவம் புலப்படுகின்றது.

தேவகாந்தனின் 'விதி' இன்னுமொரு முக்கியமான நாவல். இதுவரை வேறு யாரும் கை வைக்காத விடயத்தைப்பற்றி விபரிப்பது. ஈழத்தமிழர்களின் மீதான இனக்கலவரங்களில் மலையகத்தமிழர்களும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அவ்விதம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வடகிழக்கில் இயங்கிய காந்தியப் பண்ணைகளில் வந்து குடியேறினார்கள். தொடர்ந்து ஈழத்தமிழர்கள்மேல் இனவாத அரசுகளின் அடக்குமுறைகளும், நிகழ்ந்த இனப்படுகொலைகளும் ஏற்படுத்திய தாக்கங்கள் எவ்விதம் அவர்கள் வாழ்வை மேலும் சீரழித்தன; எவ்விதம் அவர்களை மீண்டும் புகலிடம் வாழ்வுக்காக தமிழகம் நோக்கி அகதிகளாகத் துரத்துகின்றன என்[பதையெல்லாம் விபரிக்கும் நாவல் 'விதி'. இதன் காரணமாகவே இந்நாவலின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.

எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல்கள் பலவகைப்பட்டவை. அவரது லங்காபுரம் இராமாயணத்தில் வரும் இராவண கதையின் மறுவாசிப்பென்றால், கதாகாலம் மகாபாரத்ததின் மறு வாசிப்பு. கனவுச்சிறை ஈழத்தமிழர்களின் ஆயுத மயப்பட்ட விடுதலைப் போராட்டத்தின், அதற்குக் காரணமான இலங்கை அரசுகளின் தமிழ் மக்கள் மீதான அடக்கு ஒடுக்குமுறைகள் பற்றி, அதன் விளைவாக பல்வேறு திக்குகளையும் நோக்கி அகதிகளாகப் புகலிடம் நாடிப் புறப்பட்ட ஈழத்தமிழர்களைப் பற்றி, விடுதலைப் போராட்டத்தில் முன்னின்ற இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகள் பற்றி, போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் சிலரின் மீதான சமூக, பொருளியற் சூழல்கள் செலுத்திய ஆதிக்கம் பற்றி, அதன் விளைவாக தடம் புரண்ட அவர்களது வாழ்க்கை பற்றி, இவ்விதமெல்லாம் எவ்விதம் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் அவர்களது இருப்பினைச் சிதைத்து விடுகின்றது என்பவை பற்றியெல்லாம் விபரிக்குமோர் ஆவணப் பெட்டகம் தேவகாந்தனின் 'கனவுச்சிறை'.  திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய தலைப்புகள் கொண்ட ஐந்து பாகங்களாக 237 அத்தியாயங்களில் 1247 பக்கங்களில் விரியும் இவ்வாக்கம் 1981 முதல் 2001 வரையான இருபத்தொரு ஆண்டுக்கால வரலாற்றியக்கத்தைப் பேசுவது. 'கனவுச்சிறை' நாவல் ஐந்து பாகங்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பாக வெளிவருவது அவசியம். இல்லாவிடில் இதன் பல்வேறு பாகங்களையும் தேடிப்பிடித்து வாசிப்பது மிகவும் சிரமமான காரியமாகவிருக்குமென்று எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் இந்நாவல் பற்றிய தனது விமரிசனக் கட்டுரையில் கூறியிருப்பதுதான் நிகழும்.

தேவகாந்தன் தற்போது கனடாவில் வசிப்பதால் 'கனவுச்சிறை' நாவலைக் கனடிய நாவல்களிலொன்றாகக் கருத முடியாது. அது தமிழகத்தில் அவர் புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்திருந்த காலகட்டத்தில் எழுதிய நாவல். அந்த வகையில் புகலிட நாவல் இலக்கியத்தில் அதனை உள்ளடக்கலாம். ஆனால் அதன்பிறகு கனடாவுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் அவர் எழுதிய, வெளியிட்ட நாவல்களைக் கனடாத்தமிழ் நாவல்கள் என்னும் பிரிவுக்குள் உள்ளடக்கலாம்.

பிரெஞ்சுத் தமிழ் நாவல்கள்...

சோபாசக்தியின் 'கொரில்லா' பற்றி.....

புகலிடத் தமிழ் இலக்கியத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டதும், அதிகமானவர்களின் கவனத்தைப் பெற்றதுமாக சோபாசக்தியின் 'கொரில்லா' நாவலைக் குறிப்பிடலாம். இந்த நாவல் கூறப்பட்ட மொழியினாலும், கூறப்பட்ட விடயங்களினாலும், கூறப்பட்ட முறையினாலும் பலரைக் கவர்ந்திருக்கலாமென நினைக்கின்றேன். கதை சொல்லி பேச்சுத் தமிழைப் பாவித்துக் கொரில்லாவின் கதையினைக் கூறியிருக்கின்றார். இவ்விதமானா நடையினை, மொழியினைப் பாவிப்பதிலுள்ள அனுகூலம் இலக்கணம் பற்றியெல்லாம் அதிகம் கவனிக்கத்தேவையில்லை. அவ்விதம் கூறும்போது பாத்திரங்களை அவர் விபரிக்கும் விதம் வாசிப்பவருக்கு ஒருவித இன்பத்தினை எழுப்பும். அதன் காரணமாகவே பலருக்கு இந்த நாவல் பிடித்திருப்பதாக உணர்கின்றேன். பேச்சு வழக்கில் ஒருவருக்கொருவர் உரையாடும்பொழுது 'மசிரை விட்டான் சிங்கன்', 'ஆள் பிலிம் காட்டுறான்' போன்ற வசனங்களைத் தாராளமாகவே பாவிப்பது வழக்கம். அவ்விதமானதொரு நடையில் கொரில்லாவின் கதை விபரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கதையில் ஈழத்து விடுதலைப் போராட்ட நிகழ்வுகள், புகலிட நிகழ்வுகள் ஆகியவை விபரிக்கப்பட்டுள்ளன. அந்தோனிதாசனின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான மேன்முறையீட்டுக் கடிதத்துடன் நாவல் ஆரம்பமாகின்றது. கொரில்லா காட்டாற்று ஏசுதாசன், அவனது மகனான கொரில்லா ரொக்கிராஜ் ஆகியோரின் வாழ்க்கை கூறப்படுகின்றது. ஒரு காலத்தில் சண்டியர்களின் ஆதிக்கம் நிலவிய யாழ்ப்பாணக் கிராமங்களில் பின்னர் இயக்கங்களின் வருகை சண்டியர்களின் ஆதிக்கத்தினை ஒழித்து, அதற்குப் பதிலாக இயக்கத்தவர்களின் ஆதிக்கத்தினைக் கொண்டுவருகின்றது. இந்தக் கொரில்லா நாவல் பதிவு செய்யும் விடயங்களில் இதுவுமொன்று. அடுத்தது பொதுவாக இயக்க நடவடிக்கைகளை விபரிக்கும் புனைவுகளில் நா.பாரத்தசாரதியின் புனைகதைகளில் நடமாடும் இலட்சிய மாந்தர்களைப் போல் பாத்திரங்களைச் சித்திரிப்பதுதான் வழக்கம். ஆனால் கொரில்லாவில் வரும் இயக்கத்தவர்களும், இயக்க நடவடிக்கைகளும் மிகவும் யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. இயக்கத்தவர்கள் குறை, நிறைகளுடன் நடமாடுகின்றார்கள். அவர்களின் நடவடிக்கைகள் விமர்சிக்கப்படுகின்றன. சமூக விரோதிகளென்று தாழ்த்தப்பட்டவர்கள் ஆரம்பத்தில் கொல்லப்படுவது, தமிழ் அரசியல்வாதிகள், இயக்கங்கள் எல்லாரும் சாதிய அடிப்படையில் இயங்குவது, சக இயக்கங்களுடனான ஆயுதரீதியிலான முரண்பாடுகள், புகலிடத்தில் தொடரும் அரசியல் படுகொலைகள், புகலிட வாழ்வின் பாதிப்புகளால் சிதைவுறும் லொக்காவின் குடும்பம் (இதனை ஒரு குறியீடாகவே கருதலாம்).

முதல் பகுதியில் அந்தோனிதாசனின் மேன்முறையீடும், அடுத்த பகுதியில் ரொக்கிராஜின் வரலாறும் கூறும் நாவலின் அடுத்த பகுதியில் ரொக்கிராஜும், அந்தோனிதாசனும் ஒருவரே என்று வருகின்றது. ஆனால் கதை சொல்லி யார்? அவருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? கதை சொல்லி செயற்கைக் காலுடன் நாவலில் வருகின்றார். அவர் எவ்விதம் தனது காலொன்றினை இழந்தார்? அதற்கான விடையெதனையும் நாவல் வெளிப்படுத்தவில்லை.

நாவலின் இறுதியில் லொக்கா என்னும் பாத்திரம் படுகொலை செய்யப்பட்டதாக வருகிறது. உடனேயே லொக்கா காவற்துறையினரின் பாதுகாப்பிலிருப்பதும் வருகிறது. அவர் தனது மனைவியை தனது துனிஷிய நண்பனான ரிடாவுடன் பாலியல் உறவு கொள்வதைக் கண்ட ஆத்திரத்தில் படுகொலை செய்துவிடுவதும் விபரிக்கப்படுகின்றது.

இவ்விதமாகச் செல்லும் நாவல் இறுதியில் பாரிசில் சபாலிங்கத்தின் படுகொலையுடன் முடிவடைகின்றது. நாவலின்படி கதை சொல்லியும் , இன்னுமொருவரும் தான் சபாலிங்கத்தைச் சந்திப்பதாக வருகின்றது. மற்றவர் வாசலை மறைத்து நிற்க , சபாலிங்கம் படுகொலை செய்யப்படுவதாக வருகின்றது. அவ்வாறென்றால் கதை சொல்லி யார்? அவரா சபாலிங்கத்தைக் கொன்றார்?

சபாலிங்கத்தின் கொலை நாவலில் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. நாவல் அந்தோனிதாசனெனும், 'கொரில்லா' என்றழைக்கப்படும் ரொக்கிராஜின் கதை. நாவல் முழுவதும் அவனது கதையே விபரிக்கப்படுகிறது. முடிவு மட்டும் சபாலிங்கத்தின் படுகொலையுடன் அமைந்திருக்கின்றது.

ஒருவர் கதை சொல்லும்போது சம்பவங்களை மாறி மாறிக் கூறுவது வழக்கம். உதாரணமாக இலங்கையில் நடைபெற்ற 83 இனக்கலவரத்தைப் பற்றிக் கூறும் ஒருவர் 58 கலவரத்து நிகழ்வுகளை இடையில் கூறலாம்; 77 கலவர நிகழ்வுகளை விபரிக்கலாம்; 81 யாழ்நகர் எரிப்பினை நினைவுபடுத்தலாம். மீண்டும் 83ற்கே திரும்பலாம். இது சாதாரணமானதுதான். இதற்காக இவ்விதமான கதை சொல்லலை பின்நவீனத்துவக் கூறென்று கூறலாமா?

இந்நாவலின் தலைப்பு 'கொரில்லா'. நாவல் சண்டியன் கொரில்லாவையும் அவனது மகனான 'கெரில்லா'வையும் பற்றிக் கூறுகின்றது. ஊரவர்களால கெரில்லாவும் கொரில்லாவென்றே அழைக்கப்படுகின்றான். பொதுவாகவே தமிழர்கள் கெரில்லாவையும் கொரில்லா என்றே தவறுதலாக அழைப்பதை வாசித்திருக்கின்றேன்; கேட்டிருக்கின்றேன். நாவலுக்கு எதற்காக ஆசிரியர் கொரில்லா என்று பெயரிட்டார்? கொரில்லா ஒரு குறியீடாகப் பாவிக்கப்பட்டிருந்தால் நாவலில் அது ஆழமாகச் சித்திரிக்கப்படவில்லை என்றே தென்படுகிறது. நாவலில் வரும் பாத்திரங்களிரண்டுக்கு கொரில்லா என்று பெயர் வருவதாலோ, அல்லது அப்பாத்திரங்களிலொன்று கெரில்லாவாக இருப்பதாலோ கொரில்லா என்று நாவலுக்குப் பெயரிட்டிருந்தால் அது ஆழமானதாக எனக்குப் படவில்லை.

கொரில்லா தமிழில் பெற்ற வரவேற்பை ஆங்கில மொழியில் அல்லது ஏனைய மொழிகளில் பெறுமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் தமிழில் பாவிக்கப்பட்ட சுவையான பேச்சு மொழி ஏனைய மொழிகளில் சாதாரண மொழிவழக்காகப் போய்விடுவதால்தான்.

என்னைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தீவுப்பகுதிக் கிராமமொன்றின் மீது ஈழத்துத் தமிழர்களின் போராட்ட அரசியல் ஏற்படுத்திய பாதிப்புகளை விபரிக்கும் சம்பவங்களின் கோவையாகவே கொரில்லா இருக்கிறது.

நாவலின் ஆரம்பத்தில் தொடரும் என்று வருகிறது. பின்னரும் பகுதிகளுக்கிடையில் தொடரும் என்று வருகிறது. இவ்விதம் நாவல் பிரிக்கப்பட்டிருப்பது நாவலின் புதிர்த்தன்மையினை அதிகரிப்பதற்காகவா அல்லது ஏதாவது காத்திரமான காரணமொன்றிற்காகவா என்பது புரியவில்லை.

நாவலில் ஆரம்பத்தில்வரும் அந்தோனிதாசனின் மேன்முறையீட்டுக் கடிதம் மேற்கு நாடுகளில் நிலவும் அகதிகள் பற்றிய சட்டங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றது..

"நான் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட ஆபத்துகளைச் சுட்டிக்காடிய பின்புங்கூட அவற்றிற்கு ஆதாரங்கள் எதையும் நான் தங்களுக்குக் காட்டாதபடியால் அந்த ஆபத்துகள் ஆபத்துகளே இல்லையென்ற முடிவுக்கு நீங்கள் வந்திருப்பது வருத்தத்திற்குரியது. ஐயா எங்கள் நாட்டில் எல்லாம் இராணுவம் ஒரு தமிழரை வெட்டிவிட்டு 'நாங்கள்தான் வெட்டினோம்' என்று ஒரு சான்றிதழை வெட்டப்பட்டவருக்கு வழங்குவதில்லை.' என்ற அக்கடிதத்தில்வரும் வரிகள் மேற்கு நாடுகளில் நிலவும் அகதிகள் பற்றிய நடைமுறைகளை விமர்சிக்கின்றன. இதனால்தான் அகதிகள் அகதிக்கதை கட்ட நிர்ப்பந்தத்துக்குள்ளாகின்றார்கள்.

அண்மையில் கேதரின் பெல்ஸியின் 'பின் அமைப்பியல் மிகச் சுருக்கமான அறிமுகம்' (அழகரசனால் மொழிபெயர்க்கப்பட்ட) நூலில் வரும் 'ஓர் எழுத்து நடை  என்கிற அளவில் சந்தைகளில் இன்று பிரபல்யமாகி, வாசகர்களுக்குச் சுகத்தைக் கொடுத்துப் பெருமளவு லாபம் ஈட்டும் ஒருவகை பின் நவீனத்துவமும் நம்மிடையே இருக்கிறதென லியோதார்த் கூறுகின்றார்.' என்ற வரிகளை வாசித்தபொழுது எனக்கு கொரில்லா நாவலின் நடை ஞாபகத்துக்கு வந்தது எந்தவிதக் காரணமுமற்ற தற்செயலாகவிருக்கலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கடல்' 18ஆம் நூற்றாண்டில் மொரிஷியஸ் தீவுக்குப் பிரெஞ்சுக்காரர்களால் அடிமைகளாகக்கொண்டு செல்லப்பட்ட இந்தியத் தமிழர்களின் புகலிட வாழ்வை விபரிப்பதால் புகலிடத் தமிழ் நாவல் இலக்கியத்தில் குறிப்பிட வேண்டிய படைப்பு.

ஜேர்மனிய நாவல்கள்.

பார்த்திபனின் நாவல்கள் பற்றி.....

பார்த்திபம் ஜேர்மனிக்குப் புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்தவர். வித்தியாசப்படும் வித்தியாசங்கள்  (1987, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி - 3வது வெளியீடு), பாதி உறவு (1987, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி - 4வது வெளியீடு), ஆண்கள் விற்பனைக்கு (1988, தென்னாசிய நிறுவனம், மேற்கு ஜேர்மனி - 5வது வெளியீடு), கனவை மிதித்தவன் (1988-1993 வரை வெளிவந்த தூண்டில் சஞ்சிகையில் 58 தொடர்களுடன் முற்றுப்பெறாத நாவல்), சித்திரா - பெண் (நமது குரல் சஞ்சிகையில் தொடர்கதையாக வந்துள்ளது. ஆதாரம் :- மங்களேஸ்வரி தூண்டில் - இதழ் 30, ஜூன் 1990) ஆகிய பார்த்திபனின் நாவல்கள் வெளிவந்துள்ளதை ஆய்வாளர் சு.குணேஸ்வரனின் பார்த்திபனின் படைப்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அறிய முடிகின்றது. பார்த்திபனின் நாவல்கள் சீதனப் பிரச்சினை, சாதிப்பிரச்சினை மற்றும் புகலிடத்தில் குழந்தை வளர்ப்பு பற்றிய பிரச்சினைகளை வெளிப்படுத்துவனவாக சு.குணேஸ்வரன் தனது கட்டுரையில் மேலும் கூறுவார்.

புகலிடம் நாடிப் புலம் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் புனைவுகள் புகலிடத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் (நிறப் பிரச்சினை, வேலை, சொந்த மண்ணின் பண்பாட்டுக்கூறுகளை மீளக் கட்டியமைக்க முனையும் ஈழத்தமிழர்களின் வாழ்முறைகள், குடும்பச் சுமைக்காக மாடாக உழைக்கும் மக்களின் நெருக்கடி மிகுந்த வாழ்க்கை போன்ற), இழந்த மண்ணை நினைத்து இரை மீட்டும் கழிவிரக்க மனோநிலை, இழந்த மண்ணில் தொடர்ந்திருந்த ஆயுத மயப்பட்ட விடுதலைப் போராட்டம் ஆகியவற்றையே பெரும்பாலும் கூறும் பொருளாகக் கொண்டிருக்கும். சிலர்தான் சொந்த மண்ணின் சாதிப்பிரச்சினை, சீதனப் பிரச்சினை ஆகியவற்றைப் பற்றிப் புனைவுகள் படைத்திருப்பதாகக் கருதுகின்றேன். பார்த்திபன் அவர்களிலொருவர் என்பதை அவரது படைப்புகளைப் பற்றிக் கூறப்படும் விமர்சனங்களிலிருந்து அறிய முடிகின்றது.

பொ.கருணாகரமூர்த்தியின் 'ஒரு அகதி உருவாகும் நேரம்' பற்றி..
புகலிடப் படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர் ஜேர்மனியிலிருந்து எழுதும் பொ.கருணாகரமூர்த்தி. புகலிட அனுபவங்களை மையமாக வைத்து இவரது நாவல்கள் அமைந்துள்ளன. இவை குறுநாவல்களென்றாலும் ஏற்கனவே இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியுள்ளதுபோல் குறுநாவல்களும் நாவல்களின் ஒரு பிரிவே. அந்த வகையில்தான் அவற்றையும் நாவல்கள் என்ற பிரிவுக்குள் சேர்த்துக்கொள்கின்றேன். பொ.கருணாகரமூர்த்தின் 'ஒரு அகதி உருவாகும் நேரம்' புகலிடம் நாடி உலகின் நானா திக்குகளையும் நோக்கிப் படையெடுக்கும் ஈழத்தமிழர்களைப் பற்றி விபரிக்கும். அவ்விதம் அகதிகளாகத் தமிழர்களை அனுப்பி வைக்கும் முகவர்களைப் பற்றி விபரிக்கும். முகவர்களைப் பணம் பறிக்கும் பிசாசுகளாகச் சித்திரித்து வெளியான புனைகதைகளை வாசித்திருக்கின்றோம். இளம் பெண்களைத் தம் மனைவியர் என்ற கோதாவில் அழைத்துவந்த முகவர்களில் சிலர், இடையில் தங்கி நிற்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில், அப்பெண்களை ஒரே அறையில் தம்முடன் தங்கவைத்து (மனைவியராக அவர்களை அழைத்துவருவதால் அவ்விதம் தங்காவிட்டால் அங்குள்ளவர்களுக்குச் சந்தேகம் வந்துவிடுமாம்) பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாகச் சமூகத்தின் மத்தியில் நிலவிய கதைகளைக் கேட்டிருக்கின்றோம். ஆனால் தனது பொ.கருணாகரமூர்த்தி நல்ல பக்கத்தைக் காட்டியிருக்கின்றார். அவர்கள்தான் அகதிகளாக வெளியேறிய தமிழர்களை உலகின் நானா பக்கங்களுக்கும் செல்வதற்கு உதவியிருக்கின்றார்கள். மேற்படி சிறு நாவல் முகவர்கள் பல தடவைகள் முயன்றும், நட்டப்பட்டும், அனுப்பும் தமிழர் ஒருவர் ஒவ்வொரு தடவையும் இடையில் அகப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுவதையும் விபரிக்கும். அவ்விதம் அவர் ஒவ்வொதடவையும் திருப்பி அனுப்பப்படுவதைக் கெளரவப்பிரச்சினையாகக் கருதும் முகவர்களின் மனோநிலையினையும் நாவல் புலப்படுத்தும்.

நோர்வேத் தமிழ் நாவல்கள்
ஆதவனின் 'மண்மனம்'

'சுவடுகள்' (நோர்வே) இதழில் வெளியான ஆதவனின் 'மண்மனம்' தொடர் நாவல் இன்னும் நூலுருப்பெறவில்லை. ஆயினும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இலக்கியத் திறனாய்வாளர் சு.குணேஸ்வரன் இந்நாவலைத் தேடி எடுத்து, வாசித்து அறிமுக ஆய்வுக் கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றார். அக்கட்டுரை 'பதிவுகள்' இணையத் தளத்திலும் வெளியாகியுள்ளது. சு.குணேஸ்வரனின் முன்மாதிரியை இவ்விதமான ஆய்வுகள் செய்யும் ஆய்வாளர்கள் பின்பற்ற வேண்டும். பெரும்பாலானவர்கள் தமக்குக் கிடைக்கும் படைப்புகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்துவிடுவார்கள். அவ்விதம் ஆய்வுக்கட்டுரைகளை எழுதும் முனைவர்கள், பேராசிரியர்கள், தமிழகத்தின் 'ஸ்டார்' எழுத்தாளர்கள் போன்றோர் எழுதும் திறனாய்வுக்கட்டுரைகள் ஒரு சிலரின் படைப்புகளுடன் நின்று போய்விடுவதற்கு முக்கிய காரணமே சு.குணேஸ்வரன் போன்றோருக்கு இருக்கின்ற ஆரவமும், தேடுதலும் அவர்களுக்கு இல்லாமலிருப்பதுதான். அவர்களில் பலர் தமக்கு அடிவருடும் எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டும் வாசித்து விட்டு, தங்களை இலக்கிய உலகில் நிலை நிறுத்துவதற்காக திறனாய்வுக் கட்டுரைகளை பக்கம் பக்கமாக எழுதுவார்கள். ஆனால் அக்கட்டுரைகளில் ஒரு சிலரின் படைப்புகளை மட்டும் குறிப்பிட்டு விட்டு, மிகுதி பக்கங்களை தங்களது மேதமையினை வெளிப்படுத்துவதற்காக பல மேற்கோள்களுடன், உதாரணங்களுடன் நிரப்பியிருப்பார்கள். இவர்களிலிருந்து வேறுபட்டு, தேடி, வாசித்து, ஆய்வுகளைப் புரியும் சு.குணேஸ்வரன் பாராட்டுதற்குரியவர்.

ஆதவனின் 'மண் மனமும்' பிரிந்து வந்த தாயக மண்ணில் நிலவும் விடுதலைப் போராட்டத்தினை விமர்சிப்பதாக, விபரிப்பதாகவுள்ளது. நண்பர்களிருவரை எவ்வளவு இலகுவாக ஆயுதமயப்படுத்தப்பட்ட விடுதலைப் போராட்டம் பிரித்து விடுகிறது. ரகுராமன் என்னும் பிரதான பாத்திரத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையில் வரும் ஏனைய முக்கிய பாத்திரங்கள் அவனது நண்பன் சுரேஷ், காதலிக்கும் சுசீலா, தங்கை சந்திரா ஆகியோர். சுரேஷ் விடுதலை அமைப்பொன்றில் சேர்ந்ததும் நண்பன் ரகுநாமனுடனான நட்பினைத் துண்டித்துக்கொள்கின்றான். ரகுராமனின் தங்கை சந்திராவோ சுரேஷின் மீது காதல் கொண்டு அவனுடன் இயக்கத்திலிணைந்து சமரொன்றில் இறந்துவிடுகின்றாள். இதன காரணமாக ரகுராமனின் குடும்பத்தவரின் இயக்கத் தொடர்புகள் காரணமாக, இராணுவம் ரகுராமனைக் கைது செய்து சித்திரவதை செய்து பற்றையொன்றினுள் தூக்கி எறிந்து விட்டுச் சென்றுவிடுகிறது. ஆஸ்பத்திரியில் நினைவற்றுப் படுத்துக்கிடக்கும் ரகுராமனைப் பார்த்து முன்னர் நிராகரித்த அவனது காதலி சுசீலா அழுவதுடன் நாவல் முடிகிறது.

இதில் வரும் நண்பர்களுக்கிடையிலான பிரிவு வேறு யாரும் எந்த நாவல்களிலும் பதிவு செய்யாத விடயமென்று உணர்கின்றேன். என் சொந்த வாழ்வில் என்னுடம் படித்த  நன்கு பழகிய நண்பர்கள் பலர் பல்வேறு இயக்கங்களில் சேர்ந்து முக்கிய நிலையிலிருந்தார்கள். அவர்களில் பலரைப் புகலிட மண்ணில் கண்டபோது முன்பிருந்த பசுமையான , கள்ளங்கரவற்ற நட்பு காணாமல் போயிருந்ததை உணர முடிந்தது.  ஆதவனின் மண் மனம் நாவலில் வரும் ரகுராமனுக்கும், அவனது நண்பன் சுரேஷிற்குமிடையில் நிலவிய நட்பும் இவ்விதமே அறுந்தபோது நான் என் சொந்த வாழ்க்கையைச் சிறிது அசை போட்டேன்.

வ.ஐ.ச. ஜெயபாலனின் 'செக்கு மாடு'

வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களான 'சேவல் கூவிய நாட்கள்', 'செக்கு மாடு', 'அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது'  ஆகிய குறுநாவல்களை உள்ளடக்கிய  தொகுப்பு ''அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது'' என்னும் பெயரில், தமிழகத்தில் உயிர்மைப் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பிலுள்ள செக்குமாடு ஒரு குறுநாவல். புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இளைஞனொருவனின் வாழ்வை விபரிப்பது. இல்ங்கையில் பட்டதாரி ஆசிரியனாக விளங்கியவன், புகலிடத்தில் கோப்பை கழுவி உழைத்து, ஊரிலுள்ள தன் குடும்பத்தவர்களுக்காக உழைக்கின்றான். தனது சொந்த வாழ்வுபற்றிய கனவுகள் கனவுகளாகவே நிலைத்திருக்க அவனது வாழ்வுப் போராட்டம் தொடர்கிறது. இக்குறுநாவலில் வரும் இளைஞர்களைப்போல் இலட்சக்கணக்கானவர்கள் புகலிடம் நாடிப் புகுந்த நாடுகளில் வாழ்கின்றார்கள். புகலிட வாழ்க்கைப் போராட்டத்தை விபரிக்கும் கதை என்னும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது ஜெயபாலனின் செக்குமாடு.

இ.தியாகலிங்கத்தின் நாவல்கள்

இ.தியாகலிங்கம் 'நாளை', 'பரதேசி, திரிபு, 'எங்கே'  'ஒரு துளி நிழல்',  , 'பராரிக் கூத்துக்கள்' , 'அழிவின் அழைப்பிதழ்' ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவற்றை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் பின்னர் இவை பற்றிய கருத்துகளையும் சேர்த்துக்கொள்வேன்.

சுவிஸ் நாவல்கள்

சயந்தனின் 'ஆறா வடு'வும் ஷோபா சக்தியின் 'கொரில்லா'வும் பற்றி...

அண்மைக்காலத்தில் பரவலாக வரவேற்பினையும், விமர்சனங்களையும் பெற்ற சயந்தனின் 'ஆறா வடு' புகலிட நாவல்களில் தவிர்க்க முடியாத இன்னுமொரு படைப்பு. இந்த நாவலை முதலில் வாசித்ததும் ஏனோ தெரியவில்லை உடனடியாகவே எனக்கு 'ஷோபா சக்தி'யின் 'கொரில்லா' ஞாபகத்துக்கு வந்தது. அதற்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. இரு நாவல்களுமே முன்னாள் விடுதலைப் புலி ஒருவரின் கடந்த கால, புகலிட அனுபவங்களை மையமாகக் கொண்டவை இரண்டிலுமே அவ்வப்போது பட்டும் படாமலும் இயக்கத்தின் நடவடிக்கைகள் விமர்சிக்கப்படுகின்றன.

2. அதே சமயம் இரண்டிலும் இயக்கத்தின் ஆரோக்கியமான பக்கங்களும் சுட்டிக் காட்டப்படுகின்றன. கொரில்லாவில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்போராளியால் இந்திய அமைதிப்படையின் மேஜர் கல்யாணசுந்தரம் கொல்லப்படுகின்றார். பிரின்ஸியை விசாரணக்குட்படுத்தும் சமயம், மேஜர் அவளது மார்புகளைக் காமத்துடன் பார்த்து "இங்கே என்ன பாம் வைச்சிருகேயா?" என்று கேட்கும் சமயம், மார்பினில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளுடன் அவனைப் பாய்ந்து கட்டிக்கொள்கின்றாள் பிரின்ஸி. குண்டுகள் வெடிக்கின்றன. 'ஆறா வடு'வில் வரும் நிலாமதி என்னும் பதின்ம வயதுப் பெண் வயதுக்கு மீறிய மார்பகங்களின் வளர்ச்சியைப் பெற்றவள். அதன் காரணமாகவே 'குண்டுப் பாப்பா' என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுபவள். அவளது குடும்பம் விடுதலைப் புலிகளுக்கு அவ்வப்போது உதவி செய்யும் தமிழ்க் குடும்பம். வெற்றி என்று அழைக்கப்படும் விடுதலைப் புலி உறுப்பினன் ஆரம்பத்தில் திலீபன் நினைவுதினத்துக்காக அச்சடித்த துண்டுப்பிரசுரங்களை நிலாமதியிடன் பாதுகாப்பாக வைத்துத் தரும்படி வேண்டுகின்றான். இவ்விதமாக ஆரம்பிக்கும் தொடர்பு ஆயுதங்களை அவர்களது இடத்தில் மறைத்து வைக்கும் அளவுக்கு வளர்கிறது. ஒரு முறை இந்திய அமைதிப்படை இராணுவத்தின் தேடுதலில் அவளது வீடு அகப்பட்டுக்கொள்கிறது. அதற்குச் சற்று முன்னர்தான் அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டிருந்தார்கள். ஆனால் கிரேனைட் குண்டொன்று தவறுதலாக விடுபட்டுப் போகிறது. அதே சமயம் இந்தியப் படைச் சிப்பாய்கள் வீட்டினுள் நுழைகின்றார்கள். நிலாமதி கிரேனைட்டினைத் தனது மார்பகங்களுக்குள் மறைத்து நிற்கின்றாள். வந்திருந்த சிப்பாய்களில் ஒருவன் அறையைச் சோதிக்கும் பாவனையில் அறையினுள் அவளைத் தள்ளி அவளைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினான். அச்சமயம் அவளது பிராவினைப் பற்றி இழுக்கும்போது உள்ளிருந்த கிரேனைட் குண்டு கீழே விழுகிறது. அதிர்ச்சியுற்ற அந்தப் படையினன் கிரேனைட் குண்டினை எடுத்து, கிளிப்பை நீக்கி, நிலாமதி மீது வீச எத்தனிக்கையில், நிலாமதி அவனைப் பாய்ந்து கட்டிக்கொள்கின்றாள். வெடிப்பில் இருவருமே கொல்லப்படுகின்றனர்.

3. ஆறா வடு நாவலில் லூசு தேவி என்றொரு பாத்திரம் வருகிறது. சிறு வயதில் தாயை இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் இழந்தவள். அவளை 'செக் போஸ்'டுகளில் நிற்கும் இராணுவத்தினர் பாலியல் தேவைக்காகப் பாவித்துக்கொள்கின்றனர். அதன் விளைவாக, பத்து மாதக் கர்ப்பத்துடனிருந்த அவள் வயிற்றில் சுடப்பட்டுக்கொல்லப்படுகின்றாள். அவள் யாரால் கொல்லப்படுகின்றாள் என்பது நேரடியாகக் கூறப்படவில்லை. ஆனால் மறைமுறைமாகக் கூறப்படுகின்றது.

"அப்பொழுது ஊரில்  பலதரப்பட்ட கதைகள் அவளைப்பற்றி இருந்தன. தேவியொரு உளவாளியாம்... ஆமிக்காரங்களுக்கு மெசேஜ் எடுத்துக் குடுக்கிறவளாம். ஆமியோடை தொடர்பு எண்டு இயக்கம்தான் போட்டதாம்... இவள் ஆமிக்காரங்களோடை போய்ச் சண்டை பிடிச்சவளாம். .. அவங்கள்தான் சுட்டுட்டாங்களாம்." இவ்விதமால நிலவும் கதைகள் அவளது மரணம் பற்றி வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இதே போல் கொரில்லா நாவலிலும் ஒரு பாத்திரம் வருகிறது. அவள்: யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரிக்கு முன்னாளிலுள்ள  லக்கி ஹொட்டலில்  66வது இலக்க  அறையில் தொழில் செய்து வரும் சலங்கை. "சலங்கையை இயக்கம்  சி.ஐ.டி.  எண்டு சுட்டுப் போட்டு பஸ் ஸ்ராண்டில போட்ட அண்டு இஞ்ச வந்தனான" என்று சிறைக்கைதி ஒருவன் கூறும் கூற்றில் வருகின்றது.

4. 1994 வரையிலான கால கட்டச் சம்பவங்களின் அடிப்படையில் கொரில்லா கூறப்பட்டிருக்கின்றது. ஆறா வடு 1987 - 2001 வரையிலான காலகட்டத்தை மையமாக வைத்துக் கூறப்பட்டுள்ளது. இரண்டிலும் இயக்கத்தின் அக்காலகட்டங்களுரிய சமர்கள், அரசியல் நிகழ்வுகள் , இயக்கத்தின் நடைமுறைகள் ஆகியவை விபரிக்கப்பட்டுள்ளன.

5. கொரில்லா நாவலின் இறுதி அத்தியாயம் அதுவரை கூறப்பட்ட கதைக்கு எந்தவிதத் தொடர்புமில்லாத பாரிஸ் சபாலிங்கம் கொலையுடன் முடிவடைகின்றது. ஆறா வடு அது வரையில் கூறப்பட்ட கதைக்கு எந்தவிதச் சம்பந்தமுமில்லாத இத்ரீஸ் என்றழைக்கப்படும் முன்னாள் எரித்திரியா விடுதலைப் போராளி ஒருவனின் கதையுடன் முடிவடைகின்றது. கொரில்லாவில் அதுவரை கூறப்பட்ட கதைக்கும் , இறுதி அத்தியாயத்துக்குமிடையிலுள்ள ஒரேயொரு தொடர்பு: பாரிசில் நடைபெற்ற இன்னுமொரு ஈழத்தமிழனின் படுகொலைதான். 'ஆறா வடு' நாவலில் வரும் இறுதி அத்தியாயத்துகும் அது வரை கூறப்பட்ட கதைக்குமுமிடையிலுள்ள ஒரேயொரு தொடர்பு: புகலிடம் நாடி, இத்தாலி நோக்கிப் படகில் ஏனையவர்களுடன் பயணிக்கும் அமுதன், படகு மூழ்கியதில் கடலினுள் மரித்துப் போகின்றான். ஆனால் , அவனது பைபர் க்ளாசிலான செயற்கைக் கால் மட்டும் கழன்று நீரில் மிதந்து வருகின்றது. ஏற்கனவே தனது காலொன்றினை இழந்திருந்த இத்ரீஸ் கிழவனுக்கு அச்செயற்கைக்கால் அச்சொட்டாகப் பொருந்துகின்றது.

இரு நாவல்களும் கூறப்பட்ட முறையில் வேறுபடவும் செய்கின்றன. 'கொரில்லா'வில் கதை பைபிள் கூறப்பட்டுள்ளதைப் போன்றதொரு நடையில் நகர்கின்றது. அதே சமயம் காடாற்ற ஏசுதாசனான சண்டியன் 'கொரில்லா'வின் கதையும், அவனது மகனான ரொக்கிராஜ் என்கின்ற அந்தோனிதாசனின் (இவனும் தந்தையைப் போன்றே கொரில்லா என்றழைக்கப்படுகின்றான். ஆனால் இவன் கெரில்லா. அவனது சந்தையோ ஊர்ச்சண்டியன்) கதையும் கூறப்படுகின்றது. அந்தோனிதாசனின் புகலிட வாழ்வும் கூறப்படுகின்றது. ஆனால் 'ஆறா வடு'வில் புகலிடம் நாடிச் செல்லும் முன்னாள் போராளி அமுதனின் வாழ்வு செல்லும் படகு கடலுள் மூழ்குவதுடன் முடிந்து விடுகின்றது. அவனது புகலிடம் நாடிய தேடல் முற்றுப்பெறவில்லை. எனவே அவனது புகலிட வாழ்வு பற்றிய அனுபவங்களைக் கூறுவதற்குரிய வாய்ப்பு கொரில்லாநாவலுக்குள்ளதைப்போல் ஆறா வடு நாவலுக்கில்லை. இன்னுமொரு முக்கியமான வித்தியாசம்: ஆறா வடு நாவலில் முன்னாட் போராளியான அமுதனின் கடந்த கால வாழ்வு உணர்ச்சி பூர்வமாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அவனது காதல், காதலி அகிலாவின், அவனது உணர்வுகள் மனதைத் தொடும் வகையில் நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. இன்னுமொரு விடயம் கூறும் நடையிலும் இரு நாவல்களும் வேறுபட்டுள்ளன். கொரில்லாவில் கதை பேச்சு வழக்கில் கூறப்பட்டுள்ளது. ஆறா வடு நாவலில் உரையாடல்களில் மட்டும் பெரும்பாலும் பேச்சு நடை பாவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இருவரது நடையிலும் அங்கதம் அவ்வப்போது தலை காட்டவும் செய்கின்றது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

 கனடியத் தமிழ் நாவல்கள்

கனடாவில் வெளியான நாவல்களில் குறமகளின் 'மிதுனம்', மெலிஞ்சி முத்தனின் 'வேருலகு', கே.எஸ்.பாலச்சந்திரனின் 'கரையைத் தேடும் கட்டு மரங்கள்', வல்வை கமலா பெரியதம்பியின் 'தாயார் தந்த தனம்', அகிலின் 'கண்ணின் மணி நீயெனக்கு..', 'திசை மாறிய தென்றல்',  குரு அரவிந்தனின் 'உன்னருகே நான் இருந்தால்', 'உறங்குமோ காதல் நெஞ்சம்', வ.ந.கிரிதரனின் 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும் , அகலிகையின் காதலும்', 'கணங்களும் குணங்களும்', மண்ணின் குரல் ஆகியவற்றை உள்ளடக்கிய 'மண்ணின் குரல்' தொகுப்பு, 'அமெரிக்கா' நாவலை உள்ளடக்கிய 'அமெரிக்கா' தொகுப்பு, மற்றும் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியான 'குடிவரவாளன்' (முதலில் அமெரிக்கா2  என்னும் பெயரில் வெளியாகி, 'அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்'  என்றாகி 'குடிவரவாளன்' என்னும் பெயரைப்  பெற்ற நாவல்) 'வேலிகள்', 'வெகுண்ட உள்ளங்கள்' ஆகியவற்றை உள்ளடக்கிய 'கடல்புத்திரனின் (இயற்பெயர்: ந. பாலமுரளி) 'வேலிகள்' தொகுப்பு, மைக்கலின் (மான்ரியால்) 'ஏழாவது சொர்க்கம்' (பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளிவந்த நாவல். இன்னும் நூலுருப்பெறவில்லை), செழியனின் 'போராளியின் நாட்குறிப்புகள்', ;வானத்தைப் போல', மனுவல் ஜேசுதாசனின் '90 நாட்கள்', சிவநயனி முகுந்தனின் 'வேல்விழியாள் மறவன்' (ஒரு வரலாற்று நாவல்), இரா. தணியின் நாவல்கள், அ.கந்தாமியின் செந்தாமரையில் வெளிவந்த 'அக்கினித் தாமரை', தமிழ்நதியின் 'கானல்வரி' போன்றவற்றைக் குறிப்பிடலாம். கதிர் பால்சுந்தரத்தின் 'மறைவில் ஐந்து முகங்கள்', கனடாவில் சாவித்திரி, சிவப்பு நரி ஆகிய நாவல்களை எழுதியுள்ள இவர் ஆங்கிலத்திலும் நாவல்கள் எழுதியுள்ளார்.  க.ரவீந்திரநாதன், வீணை மைந்தன் போன்றோரும் பத்திரிகைகளில் தொடர் நாவல்கள் எழுதியுள்ளதாகத் தெரிய வருகின்றது. ஓர் ஆவணப் பதிவுக்காக இவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன். இந்தப் பட்டியல் இத்துடன் முற்றுப்பெறவில்லை. கனடாவில் வெளிவந்த அனைத்து நாவல்கள் பற்றிய விபரங்களும் (அவை நூலுருப்பெற்றவையோ அல்லது சஞ்சிகை, பத்திரிகைகளில் தொடர்களாக வெளிவந்தவையோ) முழுமையாக ஆவணப்படுத்துப்படவேண்டும்.

செழியனின் 'ஒரு போராளியின் நாட்குறிப்புகள்' (தாயகம் - கனடா வில் வெளியான தொடர் பின்னர் நூலுருப்பெற்றது.) ஈழப்போராட்டத்தில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகளின் போது, (இவர் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியைச் சேர்ந்தவர்.) விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பிய தனது அனுபவத்தை விபரிக்கும் முக்கியமானதோர் ஆவணப் பதிவு. இதுவே பின்னர் விரிவாக 'வானத்தைப் போல' என்று நூலாக வெளியாகியுள்ளதாக நினைக்கின்றேன். நான் இது நாள் வரையிலும் இதனை ஒரு உண்மைச் சம்பவங்களை விபரிக்கும் அபுனைவாகத்தான் கருதியிருந்தேன். ஆனால் யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் அரசியல் புனைவுகள் வரிசையில் இதனை வைத்து எழுதியிருந்ததை வாசித்திருக்கின்றேன். அ.ரவியின் 'வீடு நெடும் தூரம்' போன்று உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட புனைவா இது என்பது பற்றிச் செழியனிடம் கேட்டறிய வேண்டும்.

கடல்புத்திரனின் வேலிகள் யாழ் கிராமமொன்றில் எவ்விதம் சாதிக்கட்டுப்பாடுகள் வேலிகளாக இருந்தன என்பது பற்றியும், பின்னர் இவற்றைத் தீர்க்க முனைந்த இயக்கங்கள் எவ்விதம் மீண்டும் வேறொரு வகையில் பிரிவுகளை ஏற்படுத்தி , புதிய வேலிகளாக மாறின என்பதைக் கூறும். இவரது 'வெகுண்ட உள்ளங்கள்' முக்கியமானதோர் ஆவணச்சிறப்பு மிக்கது. யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளுக்கான பயணம் இராணுவப் பிரசன்னத்தால் (பண்ணைத்துறை வழியாக, காரைநகர் வழியாக) தடைபெறவே அராலித்துறை முக்கியத்துவம் பெறுகிறது. ஆரம்பத்தில் உள்ளூர் வள்ளங்களின் உரிமையாளர்கள், வெளியூர் வள்ள உரிமையாளர்களுக்கிடையில் பிரிக்கப்பட்டு நடைபெற்ற வள்ளப்போக்குவரத்து எவ்விதம் இயக்கங்களின் கைகளுக்கு மாறுகின்றன என்பதைப் பற்றிய ஆவணப்பதிவாக இந்நாவல் விளங்குகின்றது. அத்துடன் இயக்கப்பிளவுகளையும் விமர்சிக்கிறது.

அகிலின் 'கண்ணின் மணி நீயெனக்கு' வெளிநாட்டு மோகம் எவ்விதம் காதல் போன்ற உணர்வுகளைக் கூடச் சிதைத்து விடுகின்றது என்பதை விபரிக்கும் நாவல். இந்நாவலில் வரும் நாயகன் சேகரின் காதல் தோற்று விடுகிறது. காரணம் வெளிநாட்டு மாப்பிள்ளைக்காக அவனுடனான தன் காதலைத் துறந்து விடுகின்றாள் அவன் காதலி. அதன் பின்னர் கனடா சென்று திரும்பும் சேகருக்கு மனைவியாகின்றாள். வெளிநாட்டு மாப்பிள்ளையைத் தன் மகளுக்குக் கட்டி, தானும் தன் சிநேகிதி போல் வெளிநாடு செல்ல வேண்டுமென்ற மோகத்தால் ராஜேஸ்வரி தன் மகளுக்கு உள்ளூர் மாப்பிள்ளையுடன் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த திருமணத்தைத் தந்திரமாக நிறுத்தி மகளுக்குச் சேகரைத் திருமணம் செய்வித்துத் தன் ஆசையை நிறைவேற்றுகின்றாள். இறுதியில் உண்மை தெரிய வர, முதியோர் இல்லத்தைத் தஞ்சமடைகின்றாள். மகளுக்கும் விபத்தொன்றினால் கர்ப்பம் தரிக்கும் ஆற்றல் இல்லாது போக, சுனாமியால் அனாதையாக்கப்பட்ட குழந்தையொன்றினைத் தம்பதிகள் இருவரும் தத்தெடுத்துக்கொள்கின்றார்கள். 'கண்ணின் மணி'யாக் அக்குழந்தை விளங்குகின்றது. வீரகேசரி, உதயன் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்த நாவல். வெகுசனப் படைப்புகளின் வாசகர்களை நோக்காக எழுதப்பட்டது என்பதை நாவலின் தலைப்பு விளக்குகின்றது. நாவலில் இடையிடையே புகலிடத் தமிழர்களின் வாழ்வும் விமர்சனத்துக்குள்ளாகுகின்றது. காலநிலையின் பாதிப்பு, 'சீரியல்'களின் ஆதிக்கம் ஆகியவை பற்றிய விமர்சனக் குறிப்புகள் வருகின்றன.

குரு அரவிந்தனின் எழுத்து நடை வெகுசன ஊடகங்களுக்கேற்ற வகையில், சாதாரண பேச்சு வழக்கினைத் தவிர்த்திருக்கும். இந்நாவலிலும் அவ்விதமான நடையே காணப்படுகின்றது. வெளிநாட்டில் வேறு பெண்களுடன் தொடர்புள்ள ஒருவனுக்கு ஊரில் திடீர் திருமணம் நடைபெறுகிறது. மீண்டும் கனடா திரும்பும் அவனுக்கு அவனது மனைவி கர்ப்பமாயிருப்பது சந்தேகத்தினை எழுப்புகிறது. ஓரிரு நாட்களே மனைவியுடன் கழித்தவன். பாதுகாப்புடன் உறவு கொண்டவன். கனடா வரும் மனைவியுடன் அவனால் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. இச்சந்தேக வித்து எவ்விதம் தீர்கின்றது என்பதை விபரிக்கும் நாவல் இன்னுமொரு பிரச்சினையையும் ஆராய்கிறது. நான்காம் தலைமுறையைச் சேர்ந்த , ஒன்று விட்ட சகோதர உறவு கொண்ட இருவருக்குமிடையில் நடைபெறும் திருமணம் பற்றியது.  எமது கலாச்சாரத்தில் மச்சான் , மச்சாளைத் திருமணம் செய்வது வழக்கம். தமிழகத்தில் மாமா, மச்சான், மச்சாளுக்கிடையில் திருமணம் செய்வது வழக்கம். ஆனால் ஒன்று விட்ட சகோதர உறவு கொண்டவர்களுக்கிடையில் திருமணம் செய்வது வழக்கமில்லை. ஆனால் லெபனான் போன்ற நாடுகளில் இது போன்ற திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அப்பிரச்சினையயும் நாவல் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

வ.ந.கிரிதரனின் 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்' புகலிடத்தில் சூழலினால் பிரிந்த தம்பதியினரின் உளவியற் போராட்டம் பற்றியும், ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தில் சகோதரப் படுகொலைகள், உட்படுகொலைகள், சமூக விரோதிகளென்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட கொலைகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. 'வன்னி மண்' ஆசிரியனின் பால்ய காலத்து அனுபவங்களினூடு, எவ்விதம் அமைதி தவழ்ந்த அம் மண் படிப்படியாக மோதல்கள் நிறைந்த மண்ணாக மாறியதென்பதை விபரிக்கும். போராட்டச் சூழல் எவ்விதம் ஒரு காலத்தில் அருகருகே நட்புடன் வாழ்ந்த சிங்கள், தமிழ்க் குடும்பங்களுக்கிடையிலான உறவு சீர்குலைகின்றதென்பதை விபரிக்கும் நாவல் 'வன்னி மண்'. 'மண்ணின் குரல்' 1983களில் கனல் விட்டெரிந்த தமிழ் மக்களின் ஆயுதமயப்பட்ட விடுதலைப் போராட்டத்தினை நியாயப்படுத்தும் சிறு நாவல். 'கணங்களும், குணங்களும்' நன்மை, தீமைகளுக்கிடையிலான மானுடப் போராட்டத்தை ஆராயும்.  'அமெரிக்கா' தடுப்பு முகாம் வாழ்க்கையையும், 'குடிவரவாளன்' நாவல் சட்ட விரோதக் குடிமகனாக நியூயார்க் மாநகரில் அலையும் ஈழத்துத் தமிழ் அகதி ஒருவனின் தப்பிப் பிழைத்தலுக்கான வாழ்வினை வெளிப்படுத்தும்.

மைக்கலின் 'ஏழாவது சொர்க்கம்' நாவலும் புகலிட அனுபவங்களை விபரிக்கும் முக்கியமான நாவல்களிலொன்று.

டானியல் ஜீவா 'தோணி' என்றொரு நாவலைத் தொடராக 'முழக்கம்' பத்திரிகையில் எழுதியுள்ளதாக அறிகின்றேன். அந்நாவல் என்னிடமில்லாததால் அதுபற்றி மேலதிகமாக எதுவும் கூற முடியவில்லை.

ஆஸ்திரேலியத் தமிழ் நாவல்கள்

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் ஆஸ்திரேலியத் தமிழ் நாவல்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார்:

 " அவுஸ்திரேலியாவில் எஸ்.பொ, மாத்தளை சோமு, முருகபூபதி, என்.எஸ்.நடேசன், தெ,நித்தியகீர்த்தி, மனோ.ஜெகேந்திரன், கபிலன் வைரமுத்து என்போர் நாவல் எழுதியிருக்கின்றார்கள். எஸ்.பொ எவரும் எழுதத்துணியாத படைப்புகளைத் தந்தவர். இலங்கை அரசியலில் பிரதான பாத்திரம் வகித்த தமிழ் சிங்கள அரசியல் தலைவர்களைப் பின்னிப்படரும் நாவல் மாயினி(2007). இதில் சில அரசியல்தலைவர்களின் அந்தரங்க வாழ்க்கை அலசப்படுகின்றது. மாத்தளை சோமுவின் பேசப்படும் படைப்புகளாக ‘அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்’, ‘எல்லை தாண்டா அகதிகள்’, ‘மூலஸ்தானம்’, ‘நான்காவது உலகம்’ என்பவற்றைச் சொல்லலாம். இவர் நாவலுக்காக இலங்கை சாகித்திய விருது, இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பு விருது என்பவற்றைப் பெற்றுக் கொண்டவர். முருகபூபதியின் நாவல் பறவைகள்(2001). ‘என்னதான் பறவைகள் ஆகாயத்தில் வட்டமிட்டுப் பறந்தாலும் ஆகாரத்திற்காக தரைக்கு வந்துதான் ஆகவேண்டும்’ என்ற உள்ளார்ந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கும் நாவல் இது.

என்.எஸ்.நடேசனின் வண்ணாத்திக்குளம்(2003) 80-83 ஆண்டு அரசியல் பின்னணியில், ஒரு தமிழ் இளைஞனுக்கும் ஒரு சிங்களப் பெண்ணுக்குமிடையே நடக்கும் காதலைச் சொல்லும் குறுநாவல். ஆசிரியரின் பல அனுபவங்களைத் தொட்டுச் செல்லும் மேம்போக்கான படைப்பு. உனையே மயல் கொண்டு(2007) / ஈழத்து அரசியலின் இருண்டவாழ்வினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், மகப்பேறின் பின்னர் பைபோலர்(bipolar) நோயினால் பாதிப்படைதல், அவளிற்கும் கணவனுக்குமிடையே ஏற்படும் உடலின்பம் சார்ந்த பிரச்சினை, புகலிடத்தில் ஏற்படும் நிம்மதியற்ற வாழ்க்கை இவற்றைக் கருப்பொருளாகக் கொண்டது. இதுவரை புலம்பெயர் இலக்கியத்தில் சொல்லப்படாத பல புதிய அனுபவங்களைச் சொன்னாலும் ஆழமற்ற அகலப்பாங்கான படைப்பாகவே உள்ளது.

கபிலன் வைரமுத்துவின் படைப்பு ‘உயிர்ச்சொல்’(2011) மருத்துவம் சம்பந்தமான தமிழுக்கு அறிமுகமில்லாத இன்னொரு கதைக்கரு. இயற்கையாகக் குழந்தை பிறக்க சாத்தியமில்லாத தம்பதிகள் fertility treatment மூலம் கருத்தரிக்கின்றார்கள். குழந்தை பிறக்கும்போது தாய் post natal depression ஆல் பாதிப்படைகின்றார். குடும்பத்தில் நிகழும் குழப்பத்திற்கு இணையாக தமிழகத்து அரசியல் குழப்பத்தையும் இணைத்து நாவல் செல்கின்றது.

மறைந்த எழுத்தாளர் தெ.நித்தியகீர்த்தியின் தொப்புள்கொடி உறவு -  பிறந்த நாட்டினைவிட்டு தொலைதூரம் கடந்து வந்த பின்னும், தாய் நாட்டுடனான தொப்புள்கொடி உறவு விடவே இயலாத உறவாக தொடர்ந்து வரும் என்பதைச் சொல்கிறது. எது புனைவு? எது நிஜம்? என்று தெரியாத வகையில் நிஜமனிதர்களின் உண்மைச்சம்பவங்கள் கொண்ட நாவல் இது.

மற்றும் மனோ ஜெகேந்திரன் எழுதிய நல்லதோர் வீணை செய்தே(2000), பாமினி செல்லத்துரை எழுதிய ‘சிதறிய சித்தார்த்தன்’ North, South & Death (2000) என்ற நாவல்களும் அவுஸ்திரேலியாவில் வந்துள்ளன. ஆங்கில வாசகர்களிடையே பரவலாகப் பேசப்படும் நிரோமினி டி சொய்சாவின் Tamil Tigress (2001) ஆங்கில நாவல்—நாவல் மணம் பட்டும்படாமலும் வீசுகின்ற ஞாபகப் பதிவுகள்—பதினேழு வயதில் யாழ் சுண்டிக்குழி மகளிர் கல்லூரியிலிருந்து தலைமறைவாகி விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, இரு ஆண்டுகளைக்கூடப் பூர்த்தி செய்யாமல் வீடு திரும்பும் மேட்டுக்குடி கத்தோலிக்க போராளியின் ஆக்கமாகும்—யதார்த்த நாவல் என்று சொல்வாருமுண்டு. ஓய்வுக்குத் தூக்கிப் போடாமல் வாசிப்பதற்குப் பொருத்தமான முதல் ஐம்பது நூல்களில் ஒன்றாக அவுஸ்திரேலியாவில் தெரிவுபெற்ற ஆக்கம். ‘நல்லதையும் கெட்டதையும் பேசுகின்றது’ என்று வி.சூரியநாராயணன் சொல்கின்றார். இங்கிலாந்து அமெரிக்க நாடுகளில் 2012இல் மீள் பதிப்பாக வெளிவந்துள்ள ஆக்கத்தின் பிரகாசமான வரலாற்றுத் தவறுகள் அதன் உன்னத உயிரோட்டத்தைப் பாதிக்கின்றன."

அண்மையில் வெளியான நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை'யும் முக்கியமான நாவல்களிலொன்று. மிருக வைத்தியராகப் பணியாற்றும் தனது அனுபவத்தினடிப்படையில் புகலிடப் பிரச்சினைகளையும் அணுகும் நாவல். பரவலாக வரவேற்பைப் பெற்ற நாவல்.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் 'அசோகனின் வைத்தியசாலை' பற்றிப் பினவருமாறு கூறுவார்:

"நடேசன் முன்பே ” வண்ணாத்தி குளம் ” நாவல், “ வாழும் சுவடுகள் ” போன்ற நூல்களின் மூலம் அறிமுகமானவர்.           ” வண்ணாத்தி குளம் ” நாவலில்  இலங்கையச் சார்ந்த ஒரு கிராமத்தை முன் வைத்து அவர்கள் எவ்வித இனதுவேசமும் இல்லாமல் வாழ்ந்து வருவதையும், அதிலிருந்து ஒரு பெண் விடுதலை இயக்கத்திற்கானவளாக வெளிக்கிளம்புவதையும் காட்டியது. காதல் பிரச்சினைகள், அரசியல் காரணங்களை முன் வைத்து  கிராமநிகழ்வுகளூடே  இலங்கை மக்களின் வாழ்வியலை சித்தரித்த்து. 1980-1983 என்ற காலகட்டத்தைக் கொண்டிருந்தது. “ வாழும் சுவடுகள் “ என்ற அவரின் தொகுப்பில்  மனிதர்கள், மிருகங்கள் பற்றிய அனுபவ உலகில் விபரங்களும் உறவுகளும் சித்தரிக்கப்பட்டிருந்தது.  “ வைத்யசாலை ” என்ற இந்த நாவலை அதன் தொடர்ச்சியாக ஒரு வகையில் காணலாம்.தமிழ்சூழலில் மிருகங்கள் பற்றியப் பதிவுகள் குறைவே. விலங்குகள் மருத்துவம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்த ஜெயந்தன்  தன் படைப்பில் சிறிய அளவில் தன் மருத்துவமனை அனுபவங்களை  பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலும் வீட்டுக் கால்நடைகளை மருத்துவத்திற்கு கொண்டு வருகிறவர்களின் மன இயல்புகள், சமூகம் சார்ந்த் பிரச்சினைகளீன் அலசலாய்       அவை அமைந்திருக்கின்றன.  அசோகன் இந்த நாவலில் ஆஸ்திரேலியாவில் பிழைக்கப்போன சூழலில் அங்கு மிருக வைத்திய சாலையில் பணிபுரிந்த அனுபவங்களை சுவாரஸ்யமான நாவலாக்கியிருக்கிறார்"

இங்கிலாந்துத் தமிழ் நாவல்கள்

விமல் குழந்தைவேலின் 'வெள்ளாவி' மற்றும் 'கசகறணம்' ஆகியவை முக்கியமான நாவல்கள். வெள்ளாவி சலவைத் தொழிலாளர்கள் பற்றியும், கசகறணம் தமிழ் முஸ்லீம் மக்களின் வாழ்வை எவ்விதம் ஆயுதமயப்பட்ட ஈழத்து அரசியற் சூழல் சிதைத்தது என்பதை விபரிக்கும். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், வவனியூர் இரா.உதயணன், ஆகியோரின் நாவல்களும் ஆராயப்பட வேண்டியவை.

 டென்மார்க் நாவல்கள்

வி.ஜீவகுமாரனின் குறுநாவலான 'கோமதி'யில் முன்னாள் இயக்கப் போராளியான 'கோமதி' திருமணமாகி டென்மார்க் வருகின்றாள். அவளது வாழ்வு பாலியல் வேட்கை மிகுந்த அவளது கணவனால் எவ்விதம் சிதைக்கப்படுகிறது என்பதை நாவல் விபரிக்கிறது. அவளது விருப்பத்தையும் மீறி அவள் மீது அவளது கணவனால் இழைக்கப்படும் பாலியல் வன்முறையினை,  புகலிடத்தில் கடனில் வாழும் மக்களின் வாழ்க்கையை, . அவளை ஏமாற்றி, பிறக்க இருக்கும் இரட்டைக் குழந்தைகளையும் கருச்சிதைவுக்குள்ளாக்க அவளது கையெழுத்தைப் பெறும் கணவனது செய்கையை, அதனால் உளவியல்ரீதியில் பாதிப்புக்குள்ளாகும் கோமதியின் வாழ்கையை நாவல் விரிவாகவே கூறும்.

புகலிடத் தமிழ் நாவல்கள் பற்றி மேலும்...
புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பலர், எஸ்.பொ., அகஸ்தியர், செ.கணேசலிங்கன் போன்ற பலர், ஏற்கனவே வெளியான நாவல்கள் பலவற்றை மீள்பிரசுரம் செய்திருக்கின்றார்கள். இவையும் புகலிடம் நாடிய எழுத்தாளர்களின் படைப்புகள் என்ற வகையில் குறிப்பிட வேண்டியவை. அத்துடன் புகலிடம் நாடிய எழுத்தாளர்கள் பலரால் பல நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன (என்.கே.மகாலிங்கம் சிதைவுகள் என்ற பெயரில் புகழ்பெற்ற நைஜீரிய நாவலான சினுவா அசுபேயின் Things Fall Apart என்னும் நாவலினை மொழிபெயர்த்துள்ளார்.) இவையும் புகலிடப் படைப்பாளிகளின்ன் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்னும் வகையில் குறிப்பிட வேண்டியவை.

புகலிட நாவல்கள் கூறும் பொருள்

புகலிட நாவல்கள் கூறும் பொருளாகப் பல்வேறு விடயங்கள் உள்ளன. புகலிடத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்ளும் வாழ்க்கையை, இழந்த மண் மீதான கழிவிரக்கத்தை, அங்கு நிலவும் விடுதலைப் போராட்டத்தை, பிறந்த மண்ணின் சமூக, அரசியற் பிரச்சினைகளை (சாதி, சீதனம் மற்றும் தேசிய இனப்பிரச்சினை போன்ற), ஆயுத மயப்பட்ட விடுதலைப் போராட்டத்தால் சமூகரீதியில், அரசியல்ரீதியில் ஏற்பட்ட மாற்றங்களை, புகலிடம் நாடிப் பல்வேறு வழிகளில் செல்லும் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, என்று பல்வேறு விடயங்களைப் பற்றிப் புகலிட நாவல்கள் பேசுகின்றன. இவை பற்றி இன்னும் விரிவாக, அதிக அளவில் புகலிடம் படைப்புகள் சேகரிக்கப்பட்டு, ஆராயப்பட வேண்டும். இக்கட்டுரை இந்த விடயத்தில் ஓர் ஆரம்பக் கட்டுரையே.

n.giri2704@rogers.com

உசாத்துணைக் கட்டுரைகள்:
1. ஆதவனின் 'மண் மணம்' பற்றி....  - சு.குணேஸ்வரன்
2. புலம்பெயர் இலக்கியம் - ஓர் அறிமுகம்  - சு. குணேஸ்வரன்
3. புலம் பெயர்ந்தோர் நாவல்கள் : தமிழர் வாழ்நிலையை முன் வைத்து - ந.முருகேச பாண்டியன்
4. எண்பதுகளில் புகலிடப் புனைகதைகள் -பார்த்திபனின் படைப்புக்களை மையமாகக் கொண்ட பார்வை- - சு. குணேஸ்வரன்
5. தேவகாந்தனின் வினாக்காலம் -  யமுனா ராஜேந்திரன்
6. புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள் - கே.எஸ்.சுதாகர்
7. தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஓர் விமர்சன அறிமுகம்...... -  முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் நா.சுப்பிரமணியன்

உசாத்துணை நாவல்கள்
1. கொரில்லா - ஷோபாசக்தி
2. கனவுச்சிறை - தேவகாந்தன்
3. கதாகாலம் - தேவகாந்தன்
4. யுத்தத்தின் முதலாம் அதிகாரம் - தேவகாந்தன்
5. கரையைத் தேடும் கட்டுமரங்கள் - கே.எஸ்.பாலச்சந்திரன்
6. மிதுனம் -குறமகள்
7. அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது - வ.ஐ.ச.ஜெயபாலன்
8. வேலிகள் - கடல்புத்திரன்
9. மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்
10. அமெரிக்கா - வ.ந.கிரிதரன்
11. கண்ணின் மணி நீயெனக்கு - அகில்
12. உறங்குமோ காதல் நெஞ்சம் - குரு அரவிந்தன்
13. ஆறா வடு - சயந்தன்
14. ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும் - தெ.வெற்றிச்செல்வன்
15. சங்கானைச் சண்டியன் - வி.ஜீவகுமாரன்
16. ஒரு அகதி உருவாகும் நேரம் - பொ.கருணாகரமூர்த்தி
17.அசோகனின் வைத்தியசாலை - நடேசன்
18. விதி - தேவகாந்தன்
19. ஏழாவது சொர்க்கம் - மான்ரியால் மைக்கல் (தொடர் நாவல்; பதிவுகள் இணைய இதழில் வெளியானது.)
20. குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் (தொடர் நாவல்; பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது.)

நன்றி: மகுடம் (கனடாச்சிறப்பிதழ்)

நன்றி: பதிவுகள்.காம்

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்