இந்நாவலின் முக்கியமான சிறப்புகளாக நான் கருதுவது:
1. வட்டாரத் தமிழைப் பதிவு செய்தது.
2. கோளாவில் பகுதியில் நிலவிய சமுதாய அமைப்பு, அவ்வமைப்பில் நிலவிய சீர்கேடுகள், பெண்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகமொன்றினைச் சேர்ந்த பெண்கள் போடியார் போன்றவர்களிடமிருந்து எதிர்கொள்ளூம் பாலியல் ரீதியிலான வன்முறைகள், நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருப்பது. பதிவு செய்திருப்பது.
3. தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தில் போராட்டத்தின் பெயரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் , உதாரணமாக உளநலம் குன்றிய பெண்ணொருத்தி இராணுவ உளவாளியென்று கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவது போன்ற , விடயங்களைப் பதிவு செய்திருப்பது. நாவல் மட்டக்களப்புச் சிறை உடைப்பு பற்றியும் நினைவு கூருகின்றது.
இந்நாவலை வாசிக்கும்போது பரஞ்சோதி போன்ற பெண்கள் அடையும் அனுபவங்கள் எம்மை வாட்டுகின்றன. எதற்காக இவ்வுலகில் மனிதர்கள் இவ்விதமெல்லாம் வாட வேண்டும். இவ்விதமான அநீதிகளுக்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும் என்னும் எண்ணங்களை நாவல் ஏற்படுத்துகின்றது. இந்நாவலின் வெற்றி இது.
இந்நாவலை வாசிக்கும்போது ஓரிடத்தில்மட்டும் சிறிது நெருடலாகவிருந்தது. தன்னைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய மனிதனைப்பற்றிய பரஞ்சோதியின் எண்ணங்கள். ஒரு கட்டத்தில் பரஞ்சோதி இவ்விதம் சிந்திப்பாள்:
"அண்டைக்கு வந்து போனவன் வரதனென்டா அவனக் குத்தம் சொல்ல என்ன இரிக்கு. அவன் மர மாட்டானோ எண்டு ஏங்கி கனவு கண்டு கிடந்து போட்டு, அவன் கூடப்படுத்த நேரம் உட்டுக் குடுத்துப்போட்டு, இப்ப ஏன்கா நான் கிடந்து கிளம்பியடிக்கோணுமெண்டு பரஞ்சோதி தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் "[வெள்ளாவி; பக்கம் 128]
உண்மையில் அவளைப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியவன் வரதனல்லன். போடியார்தான். தாய் மாதவியுடன் தொடுப்பு வைத்திருந்த போடியார்தான். ஆனால் நாவலில் முடிவு வரையில் பரஞ்சோதிக்கு இந்த உண்மை தெரியாது. இந்த உண்மையை அறிந்த தாய் மாதவியும் அதன் காரணமாகவே இறந்து விட்டாள். ஆசிரியர் விபரித்திருக்கும் இந்தச்சிந்தனைப்போக்கு எனக்குச் சிறிது நெருடலாக இருந்தது. பாதிக்கப்பட்டவள் வெகுண்டெழாமல், இவ்விதம் அவ்விதம் வெகுண்டெழுவது தேவைதானா என்னும் அர்த்தப்படச் சிந்திப்பது நடைபெற்ற சம்பவத்தின் தன்மையினை எளிமைப்படுத்துவதாக உள்ளதாகப்படுகின்றது.
மேலும் இன்னுமொரு விடயத்தையும் கூறலாம். இரவென்றாலும் போடியார் போன்ற ஒருவரின் உடல்வாகும், வரதன் போன்ற ஒருவரின் உடல்வாகும் வித்தியாசமல்லவா. மேலும் பரஞ்சோதியும் யுவதி அல்லவா. ஒரு மனிதர் உறவு கொள்ளுவதைக் கூட அறியாமல் கனவுக்காட்சி போல் எண்ணி ஒருவர் இருக்க முடியுமா? நடைமுறையில் இது சாத்தியமா? மேலும் ஓடும் ஒருவர் அவ்வளவு விரைவாகவா ஓடுவார். அதுவும் போடியார் போன்ற ஒருவர். அப்படித்தான் ஓடினாலும் எழும்பி ஓடுபவரின் தோற்றத்தைக்கூடவா பார்க்க முடியாது? நாவலின் முக்கியமான சம்பவமே இதுதான். ஆனால் இச்சம்பவம் நடந்த முறையும், விபரிப்பும் எனக்கென்றால் நடைமுறைச்சாத்தியமாகத் தெரியவில்லை. நாவலுக்காக வலிந்து திணிக்கப்பட்ட, தமிழ்ச்சினிமாப்பாணிச் சம்பவமாகவே எனக்கு இது படுகின்றது. இதனை இன்னுமொரு நடைமுறைச்சாத்தியமான சம்பவமொன்றிற்குக்கூடாகவே விபரித்திருக்கலாம். போடியாரே மாதவியைத்தேடி வந்து அவளில்லாத நிலையில், மகளைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக அமைத்திருக்கலாம்.
நாவலை முழுமையாக வாசிக்க: http://noolaham.net/project/100/9905/9905.pdf
ngiri2704@rogers.com
No comments:
Post a Comment