Monday, February 19, 2018

நாவல்: குடிவரவாளன் (1) - வ.ந.கிரிதரன் -

- வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' -

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா II" [ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு  முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இந்நாவல் தமிழகத்தில் 'ஓவியா பதிப்பக' வெளீயீடாகக் 'குடிவரவாளன்' என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக இந்நாவல் இங்கு தொடராகப் பிரசுரமாகும். - வ.ந.கி -]

அத்தியாயம் ஒன்று: 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்'
 
நியூயார்க் மாநகரத்தின் புரூக்லின் நகரின்கண் ஃப்ளஷிங் வீதியில் அமைந்திருந்த சீர்திருத்தப் பள்ளியாகவும், அவ்வப்போது சட்டவிரோதக் குடிகாரர்களின் தடுப்புமுகாமாகவும் விளங்கிய அந்த யுத்தகாலத்துக் கடற்படைக்கட்டடத்தின் ஐந்தாவது மாடியின் பொழுதுபோக்குக் கூடமொன்றிலிருந்து இருள் கவிந்திருக்குமிந்த முன்னிரவுப் பொழுதில் எதிரே தெரியும் 'எக்ஸ்பிரஸ்' பாதையை நோக்கிக் கொண்டிருக்குமிந்த அந்தக் கணத்தில் இளங்கோவின் நெஞ்சில் பல்வேறு எண்ணங்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரு மாதங்களாக அவன் வாழ்வினோர் அங்கமாக விளங்கிக் கொண்டிருந்த இந்தத் தடுப்புமுகாம் வாழ்க்கைக்கோர் விடிவு. நாளை முதல் அவனோர் சுதந்திரப் பறவை. சட்டவிரோதக் குடியாக அச்சிறையினுள் அடைபட்டிருந்த அவனைப் பிணையில் வெளியில் செல்ல அனுமதித்துள்ளது அமெரிக்க அரசின் நீதித்துறை. அவனது அகதி அந்தஸ்துக் கோரிக்கைக்கானதொரு தீர்வு கிடைக்கும் அவன் வெளியில் தாராளமாகத் தங்கித் தனது வாழ்வின் சவால்களை எதிர்நோக்கலாம். அவனைப் பற்றிச் சிறிது இவ்விடத்தில் கூறுவது வாசகருக்கு உதவியாகவிருக்கலாம்.

இளங்கோ: இவனொரு இலங்கைத்தீவின் தமிழ்க் குடிமகன். இளைஞன். 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகளிலொருவன். இலங்கையின் பிரதான இரு சமூகங்களான தமிழ் மற்றும் சிங்களச் சமூகங்களுககிடையிலான இனரீதியிலான புகைச்சல்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமானதொரு சமூக, அரசியல் ரீதியிலானதொரு வரலாறுண்டு.  இறுதியாக இலங்கையை ஆண்ட விதேசியர்களான ஆங்கிலேயர் 1948இல் இலங்கையைவிட்டு வெளியேறிய காலகட்டத்திலிருந்து ஆரம்பித்தது அண்மைய இனரீதியிலான மோதல்கள். ஆயினும் இவ்விதமானதொரு நிலையுருவாவதற்குக் காரணங்களாக இத்தீவின் கடந்தகால வரலாற்று நிகழ்வுகள் இருந்தன. துட்டகாமினி / எல்லாளன் தொடக்கம், முதலாம் இராசராசன் / இராஜேந்திரன் பின் சிங்கைப் பரராசசேகரன் எனத் தொடர்ந்து , கடைசிக் கண்டி மன்னன் ஸ்ரீஇராசசிங்கன் என முடிந்த நீண்டகாலத்து வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் அவ்வளவு இலகுவாக ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. இரு பிரதான சமூகங்களுக்குமிடையில் நிலவிய பரஸ்பர அவநம்பிக்கையும், இனரீதியிலான குரோதங்களும் 1948இலிருந்து மீண்டும் சிறிது சிறிதாகப் பற்றியெறிந்து இன்று சுவாலை விட்டெரிய ஆரம்பித்துள்ளன. இனரீதியிலான திட்டமிட்ட குடியேற்றங்கள், கல்வியில் தரப்படுத்தல், மொழி மற்றும் மதரீயிலான அரசியல் முன்னெடுப்புகள் இவையெல்லாம பிரச்சினையை மேலும் சுவாலை விட்டெரிய வைத்தன. இவையெல்லாம் மேலோட்டமான காரணங்கள். ஆழமான அடிப்படைக் காரணங்களாக நாட்டு மக்களிடையே நிலவிய சமூக, அரசியல், பொருளாதாரரீதியிலான குணாம்சங்கள்,  பிரச்சினைகளிருந்தன.
எதிரே விண்ணில் நிலவு பவனி வந்து கொண்டிருந்தது. அருகில் ஒரு சில சுடர்கள். நகரத்து வான். நகரத்து நிலவு. நகரத்துச் சுடர்கள். நகரத்து ஆடம்பரமும், கேளிக்கை உல்லாசங்களும், செயற்கையொளியும் மண்ணை மட்டுமல்ல விண்ணையும் பாதிப்பதன் விளைவு. கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு; வறிய நாடுகளிலிருந்து செல்வந்த நாடுகளுக்கு என்றெல்லாம் எப்பொழுதுமே புலம்பெயர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள். புலம்பெயர்தல் பல்வேறு வழிகளில், பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்பொழுது நடைபெறுகின்றன. புதையல்கள் நாடிய புலம்பெயர்வுகள்; மண்ணை அடைதற்கான புலம்பெயர்வுகள்; பெண் / பொன்னிற்கான புலம்பெயர்வுகள்; வர்த்தகத்திற்கான புலம்பெயர்வுகள்; வாழ்வைத் தப்பவைத்துக் கொள்வதற்கான புலம்பெயர்வுகள்; யுத்தங்களிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான புலம்பெயர்வுகள். புலம்பெயர்ந்த நெஞ்சங்களுக்கு அவ்வப்போது அதிகமாக ஆறுதலளிப்பவை இந்த வானும், மதியும், சுடரும்தான். வெண்ணிலவை ஆறுதளிக்க நாடிய கவி நெஞ்சங்கள்தான் எத்தனை எத்தனை.

மீண்டும் இளங்கோவின் சிந்தனை எதிர்காலத்தை நோக்கித் திரும்பியது. அவன் நாட்டை விட்டுப் புறப்பட்டதற்கு அரசியல் மற்றும் பொருளாதாரரீதியிலான காரணங்களிருந்தன. உயிர்தப்பிப் பிழைத்தலொரு முக்கியமான காரணமென்றால் அடுத்தது பொருளியல்ரீதியில் அவனையும் அவன் குடும்பத்தவரையும் முன்னேற்றுவது இன்னுமொரு காரணம். வெளியில் சென்றதும் அவன் எதிர் நோக்க வேண்டிய பல பிரச்சினைகள் அவனை நோக்கிக் காத்துக் கிடக்கின்றன. புதிய மண். புதிய சூழல். புதிய கலாச்சாரம். வேற்று மனிதர்கள். தப்பிப் பிழைத்தலுக்கான போராட்டம். இவற்றுக்கிடையில், இவர்களுக்கிடையில் இருத்தலுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

கையில் இருநூறு அமெரிக்க டாலர்களேயிருந்தன. இதனையே முதலாக வைத்து அவன் தன் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். "என்ன ஒரே யோசனை?" எதிரில் அருள்ராசா. இவனுமொரு இலங்கைத் தமிழ் அகதியாகப் புலம்பெயர்ந்தவன். அவர்களுடன் தங்கியிருந்த ஏனைய தமிழ் அகதிகளெல்லாரும் ஒருவரொருவராக வெளியில் சென்றுவிட இவனும் இளங்கோவும் மட்டுமே எஞ்சியிருந்தார்கள். அவர்களிருவருக்கும் இங்கு தெரிந்தவர்களென்று யாருமிருக்கவில்லை. மற்றவர்களுக்கு 'பாஸ்டன்', 'நியூஜேர்சி', 'கனக்டிகட்', 'லாங் ஐலண்ட்' என்று பல்வேறிடங்களில் பலரிருந்தார்கள். இவர்களுக்கு யாருமில்லை. இருவரும் சேர்ந்தே நியூயார்க்கில் வாழ்வை முன்னெடுப்பதாக முடிவு செய்திருந்தார்கள். அருள்ராசா, ஊரில் இவனொரு கணக்காளனாகப் பிரபல நிறுவனமொன்றிற்காகப் பணியாற்றியவன்.

"நாளைக்கு வெளியிலை சென்றதும் எங்கை போய் தங்குவதாக பிளான்?" இளங்கோ கேட்டான்.

கையிலிருந்த 'இந்தியா எப்ரோட்' ( India Abroad) பத்திரிகையின் வரி விளம்பரப் பகுதியினைக் காட்டினான். அத்துடன் கூறினான்: "இங்கை ரூம் வாடகைக்கு வாரத்துக்கு முப்பது டொலர்களென்று போட்டிருக்கு. முதலிலை அங்கு போய்க் கொஞ்ச காலத்துக்குத் தங்கியிருப்பம். அங்கிருந்து கொண்டு ஏதாவது வேலைக்கு முயற்சி செய்வம். என்னட்டையும் ஒரு முந்நூறு நானூறு டொலர்கள்தானிருக்கு. உன்னிடமும் இருநூறுதானிருக்கு. இது போதும் வாழ்க்கையை ஆரம்பிக்க. நான் மத்தியானம் போன் பண்ணிப் பார்த்தனான். மராட்டியக் குடும்பமொன்றின் வீடு. அங்கை பலர் அறைகளை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்களாம். முதலிலை அங்கை போவம். நாளைக்கு வருகிறோமென்று சொல்லிப் போட்டன். நீயென்ன சொல்லுறாய்??"

"நீ சொல்லுறதும் சரியாய்த்தானிருக்கு. அங்கை இருக்கிறவர்களிடமும் ஏதாவது யோசனைகளைக் கேட்கவும் வாய்ப்பாகவுமிருக்கும்.  எதுக்கும் முதலிலை அங்கை போவம். பிறகு எல்லாவற்றையும் பார்ப்பம். முதலிலை இந்தச் சிறையிலிருந்து விடுபட்டால் அதுபோதுமெனக்கு."


- வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
அதன்பின் சிறிதுநேரம் கூடத்திலிருந்த தொலைக்காட்சியில் ஏனைய கைதிகளுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்த பழைய திரைப்படமொன்றைப் பார்த்தார்கள். சிறிது நேரம் 'டேபிள் டென்னிஷ்' விளையாடினார்கள். அதுவும் சிறிது நேரத்தில் சலித்துப் போய்விடவே படுக்கும் கூடத்திற்கு வந்து தத்தமது 'பங்பெட்ஸ்'ஸில் படுத்துக் கொண்டார்கள். அப்பொழுது நேரம் நள்ளீரவை நெருங்கிக் கொண்டிருந்தது. கூடங்களை இணைக்கும் நடைபாதைகளில் கறுப்பினக் காவலர்கள் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். கைதிகளை அவ்வப்போது வந்து எண்ணிச் சரிபார்க்கும் அதிகாரியும் வந்துபோய் நீண்டநேரமாகி விட்டிருந்தது. ஆப்கானியர்கள், மத்திய அமெரிக்கர்கள், கரிபியன் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்தவர்களென்று கைதிகள் பலர். பல்வேறு விதமான கைதிகள். சட்டவிரோதக் குடிகள். சிறு குற்றங்கள் செய்து தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள். நாடு கடத்தலை எதிர் நோக்கியிருப்பவர்கள். இவர்களைனவரும் பெரும்பாலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அருள்ராசா கூடச் சிறுது நேரத்தில் உறங்கிப் போய் விட்டான். இளங்கோவுக்கு மட்டும் உறக்கமே வரவில்லை. இவ்விதமான சமயங்களில் அவனுக்குக் குறிப்பேடு எழுதும் பழக்கமுண்டு. தலைமாட்டில் தலையணைக்கடியிலிருந்த குறிப்பேட்டினை வெளியில் எடுத்தான். அதிலிருந்தவற்றைச் சிறிது நேரம் வாசித்தான். நெஞ்சில் மீண்டும் உற்சாகம் சிறிது சிறிதாகக் குமிழியிட்டது. அதிலிவ்விதம் மேலும் எழுதினான்: 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்'. மனம் இலேசானது. அருகில் உறங்கிக் கொண்டிருந்த மானிடப் பூச்சிகளைப் பார்த்தான். 'யானெதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே!' என்று மனம் கூவியது. புதிய கனவுகளுடன், புதிய நம்பிக்கைகளுடன், உற்சாகம் பொங்க இளங்கோ மறுகணமே ஆழ்ந்த தூக்கத்திலாழ்ந்து விட்டான்.

[தொடரும் ]

[பதிவுகள் - ஜனவரி 2007; இதழ் 85

No comments:

வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த  'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள  எனது கவிதையான ...

பிரபலமான பதிவுகள்