Sunday, February 18, 2018

தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்! - வ.ந.கிரிதரன் -

- 'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தலைப்பில் அண்மையில் மறைந்த தமிழினி ஜெயக்குமாரனின் கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றினை, அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் உதவியுடன், சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தத்தொகுப்புக்கு வ.ந.கிரிதரன் எழுதிய முன்னுரையினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். - பதிவுகள் -

தமிழினி விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் இராணுவத்தாக்குதல்களிலும் பங்கு பற்றியவர். யுத்தத்தின் பின்னர் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் தன் பங்களிப்பினை ஆற்றத்தொடங்கியிருந்தார். தமிழினி எழுதுவதில் திறமை மிக்கவர். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். 'பதிவுகள்' இணைய இதழுக்கும் அவர் தன் படைப்புகளை அவ்வப்போது அனுப்புவார். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்து இன்னும் பல படைப்புகளைத்தருவார் என்றெண்ணியிருந்த சமயத்தில் அவரது மறைவுச்செய்தி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உண்மையில் ஈழத்துத்தமிழ் இலக்கிய வானில் கணப்பொழுதில் ஒளி தந்து மறையும் மின்னலைப்போல் , தன் குறுகிய வாழ்வினுள் ஒளிர்ந்து மறைந்தவர் தமிழினி. இவரது படைப்புகள் குறைவாக இருந்தபோதிலும், அவை நூலுருப்பெற வேண்டியதவசியம். தமிழினியின் கவிதைகளைத்தொகுத்து சிறு தொகுப்பாக வெளிக்கொணர முனைந்திருக்கும் அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் இந்த முயற்சியானது மிகவும் பாராட்டுதற்குரியதும், பயனுள்ளதுமாகும். முக்கியமானதொரு தொகுப்பாக விளங்கப்போகும் தொகுப்பிது என்றும் கூறலாம்.

தமிழினி அண்மைக்காலமாகத்தான் எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்தினாரா? உண்மையில் அவர் கடந்த காலத்திலும் பல்வேறு பெயர்களில் அவர் எழுதியிருப்பதை அவரே ஒருமுறை தன் முகநூலில் பகிர்ந்திருக்கின்றார். அவரது 'மழைக்கால் இரவு' சிறுகதையின் வரிகளிலிருந்து 'யுத்தம்' என்றொரு கவிதையினை உருவாக்கிப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தேன். அது பற்றித் தன் முகநூலில் கருத்துத்தெரிவித்திருந்தபோது தன் கடந்த காலத்து இலக்கிய முயற்சிகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:


"‘மழைக்கால இரவு’ என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையிலிருந்து அர்த்தம்பொதிந்த அருமையான கவிதையொன்றினை கிரிதரன் நவரத்னம் யாத்திருக்கிறார். உண்மையில் பாடசாலை நாட்களிலிருந்தே எனக்கு கதை எழுதுவது விருப்பமானது. கடந்த காலங்களிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய கதைகளை வெவ்வேறு பெயர்களில் எழுதியிருக்கிறேன். இப்போது அவை பதிவாக இல்லை. எப்படியிருப்பினும் ஒரு அடை மழைக்கால இரவில் நடந்த யுத்தம் பற்றிய கதையை ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தது மட்டுமன்றி, சிறந்த விமர்சனத்தையும் முன் வைத்த அவரது இலக்கிய பற்றுக்கும் சேவைக்கும், புதிய படைப்பாளிகளை உருவாக்குவதில் காட்டும் ஆர்வத்திற்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றி."

இதிலிருந்து அவர் தனது பாடசாலைக்காலத்திலிருந்தே எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்திருப்பதை அறிய முடிகின்றது. ஆனால் அவர் தான் கதைகள் சிலவற்றையே எழுதியிருந்ததாகக்குறிப்பிட்டிருக்கின்றார். கவிதைகள் எதனையும் முன்னர் எழுதியதாகக் குறிப்பிடவில்லை. இத்தகைய சூழலில் அண்மைக்காலமாக அவர் எழுதிய கவிதைகளையே அவரது கவிதைகளாகக்கொள்வதில் தவறேதுமிருப்பதாக நான் கருதவில்லை. அவற்றின் அடிப்படையில் அவரது இக்கவிதைத்தொகுப்பில் உள்ளடங்கியிருக்கும் அவரது கவிதைகளைப்பற்றி சிறிது சிந்திப்பதே என் நோக்கம்.

தமிழினியின் கவிதைகள் பல்வேறு விடயங்களுக்காக குறிப்பாக ஆயுதம் தாங்கிப்போராடிய ஒரு பெண் போராளியின் அனுபவங்களின் , சிந்தனைகளின் வெளிப்பாடுகள் என்னும் வகையில்  முக்கியத்துவம் பெறுகின்றன. இக்கவிதைகள் கடந்த காலப்போர்க்கால அனுபவங்களை, சக போராளிகளுடனான அனுபவங்களை, போருக்குப் பிந்திய அனுபவங்களை விபரிக்கும் ஆவணங்களாக விளங்குவதால் முக்கியத்துவம் பெறுகின்றன. இக்கவிதைகள் தற்காலச் சூழலிலிருந்து கொண்டு , கடந்த கால போராட்ட நிகழ்வுகளைச் சுயபரிசோதனைக்குள்ளாக்குவதால் முக்கியம் பெறுகின்றன. இந்தக்கவிதைகள் அவற்றில் பாவிக்கப்பட்டிருக்கும் படிமங்களுக்காகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழினியின் கவிதைகளில் முக்கியமான கவிதையாக நான் கருதுவது  'அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.... ' என்னும் கவிதையினைத்தான். இந்தக் கவிதையினைத்தன் முகநூலில் பதிவு செய்திருந்த தமிழினி கவிதைக்கு எந்தவிதத்தலைப்புமில்லாமலேதான் பிரசுரித்திருந்தார். இது பற்றிய குறிப்பினை எழுதிப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தபோது இக்கவிதைக்கு 'அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.... ' என்று தலைப்பினையிட்டிருந்தேன். கவிதை அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்து .நிகழ்வுகளை விபரிக்கின்றது யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது. கவிதையின் ஆரம்பம் நன்றாக வந்திருக்கின்றது. கவிதையின் முதல் பகுதியே முழுக்கவிதையினதும் கூறு பொருளை நிர்ணயித்து விடுகிறது.

'போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது'

என்று ஆரம்பமாகின்றது. அம்பகாமப்பெருங்காட்டில் யுத்தம் நடைபெறும் மழை பொழியும் இரவு. மழையை வானத்தாயின் அழுகையாக உவமையாக்கியிருக்கின்றார் கவிஞர்.  வானத்தாய் ஏன் அழுகின்றாள்? போருக்குத்தன் புதல்வர்களைத்தந்து விட்டதற்காகத்தான் அழுகின்றாள். யுத்தம் நடைபெறும் சமயம் கானகம் வெடியோசையால் அதிர்வுறுகின்றது. அவ்வதிர்வினால் ,மருண்ட யானைக்கூட்டங்கள் குடி பெயர்ந்தலைகின்றன. இடம் விட்டு இடம் மாறி நகரும் இருண்ட மேகங்களும் வெடியதிர்வுகளால் குடி பெயர்ந்தலையும் யானைக்கூட்டங்களாகக் கவிஞருக்குத்தென்படுகின்றன. இங்கு யானைக்கூட்டங்களின் இடப்பெயர்வினை வெறும் உவமையாகவும் கருதலாம். அத்துடன் உண்மையாகவே அவ்விதம் நடைபெறும் யுத்தத்தினால் யானைக்கூட்டங்கள் இடம் பெறுவதாகவும், அவ்விதமாக அவை இடம் பெயர்வதைப்போல் இடம் பெயரும் மேகக்கூட்டங்கள் உள்ளதாகவும் கவிஞர் கருதுவதாகவும் கருதலாம். மழை பொழியும் யுத்தம் நடக்கும் இருண்ட இரவு அச்சத்தினைத்தருவது. அந்த இரவானது அம்பகாமப்பெருங்காட்டில் நடைபெறும் யுத்தத்தின் கோரத்தை வெளிப்படுத்துவது. ஏற்கனவே அந்த இரவானது பகலை விழுங்கித்தீர்த்திருக்கின்றது. இருந்தும் அதன் பசி அடங்கவில்லை. யுத்தத்தின் பேரொலியானது பகலை விழுங்கித்தீர்த்த இரவின் கர்ஜனையாகப் பயமுறுத்துகிறது கவிஞரை. மேலும் 'காதலுறச் செய்யும் / கானகத்தின் வனப்பை / கடைவாயில் செருகிய / வெற்றிலைக் குதப்பலாக / சப்பிக்கொண்டிருந்தது / 'யுத்தம்.

கவிதையின் இந்த முதற் பகுதியினைப்படிக்கும்போதே சங்ககாலக்கவிதையொன்றின் தாக்கம் பலமாகவே இருப்பதை உணர முடிகின்றது. சங்கக்கவிதைகளில் இயற்கையாக மையமாக வைத்தே, ஐம்பெருந்திணைகளை மையமாக வைத்தே கவிதைகள் பின்னப்பட்டிருக்கும். அவ்விதமானதோர் உணர்வே மேற்படி கவிதையின் ஆரம்பப்பகுதியை வாசிக்கும்போதெழுகின்றது.  அம்பகாமப்பெருங்காட்டை மையமாக வைத்தே கவிதை பின்னப்பட்டிருக்கின்றது.

மேலும் தமிழினியின் மொழி அவரது எழுத்தாற்றலை வெளிப்படுத்துகிறது. மரபுக்கவிதையின் அம்சங்களான எதுகை, மோனை போன்றவற்றையும் சீர்களில் அளவாகப்பாவித்திருக்கின்றார். உதாரணத்துக்கு மோனைகளாக போருக்கு / புதல்வரை, தந்த / தாயாக, பகலை / பயங்கரமாயிருந்தது, பெருங்காட்டின் / போர்க்களத்தில் போன்றவற்றைக்குறிப்பிடலாம். எதுகைகளாக வெடியதிர்வுகளின் / குடி பெயர்ந்தலையும், இருண்ட / மருண்டு போன்றவற்றைக்குறிப்பிடலாம். இவையெல்லாம் சேர்ந்துதான் கவிதை வரிகளைக் கவித்துவமுள்ளவையாக மாற்றுகின்றன.

அடுத்துவரும் வரிகள் கவிதையின் முக்கியமான வரிகள். அவை:

மீளாப் பயணம் சென்ற தோழி
விடைபெறக் கை பற்றி
திணித்துச் சென்ற கடதாசி
செய்தி சொன்னது..
காலமாவதற்காக காத்திருக்கும்
அம்மாவின் ஆத்மா
கடைக் குட்டியவளின்
கையாலே ஒரு துளி
உயிர்த் தண்ணிக்காகத்
துடிக்கிறதாம்.

போராளியான தோழியோ போர்க்களத்தில் மீளாப்பயணம் சென்று விட்டாள். அதற்கு முன்னர் அவள் விடைபெறுகையில் தன் தோழியான கவிஞரிடம் கடிதமொன்றினைத்தந்து விட்டே செல்கின்றாள். மரணப்படுக்கையில் கிடக்கும் அவளது தோழியின் தாயாரைப்பற்றிய கடிதமது. அத்தாயின் கடைக்குட்டியான மீளாப்பயணம் சென்றுவிட்ட தோழியின் கையால் ஒரு துளித்தண்ணீருக்காகத்துடிக்கிறது அந்தத்தாயின் மனது. அதனைத்தான் விபரிக்கின்றது அந்தக்கடிதம். அந்தத்துளித்தண்ணீரைக் கவிஞர் 'உயிர்த்தண்ணி' என்று கூறுகின்றார். ஏனென்றால் உயிர் போகக்கிடக்கும் அந்தத்தாயின் உயிர் அதற்காகவே, அந்தத்துளித்தண்ணீருக்காகவே துடிப்பதால்.'உயிர்த்தண்ணி'யாகின்றது.

போருக்குத்தன் புதல்வியைத்தந்த அன்னை அவள். இவளைப்போன்ற அன்னையர் பலர். அவர்களைப்பற்றித்தான் கவிதை கூறப்போகின்றது என்பதற்காகவே போலும் ஆரம்பத்திலேயே கவிஞர் 'போருக்குப் புதல்வரைத் தந்த / தாயாக வானம் /அழுது கொண்டேயிருந்தது' என்று குறிப்பாகக்கூறினார்போலும். இவ்விதமாகக்கவிதையின் பிரதான கூறுபொருளினை ஆரம்பத்திலேயே குறிப்பாகக்கவிதை கூறி நிற்பதால் அதுவே கவிதையின் சிறப்புமிகு அம்சங்களிலொன்றாக ஆகிவிடுகின்றது. அதற்குப்பின்னரான கவிதையின் பகுதிகள் கவிஞரின் தோழியின் இழப்பு ஏற்படுத்திய உணர்வுகளை, போர் பற்றிய கவிஞரின் விமர்சனத்தை எடுத்தியம்புகின்றன.

தமிழினியின் இன்னுமொரு முக்கியமான கவிதை 'நஸ்ரியா'. தமிழினியின் முகநூல் பக்கத்தில் வெளியான  'நஸ்ரியா' என்னுமிந்தக் கவிதைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அகதிகளாக முஸ்லீம் மக்கள் யாழ் மாவ்வட்டத்திலிருந்து வெளியேறியதைப் பதிவு செய்கிறது. அதே சமயம் அவ்விதமான வெளியேற்றத்துக்குக் காரணமான அமைப்பின் முன்னாள் போராளியொருவரின் இன்றைய மனநிலையினையும், அன்று அகதியாகச்சென்ற முஸ்லீம் சமூகத்தின் வாரிசுகளிலொருவரின் எண்ணங்களையும், இருவருக்கிடையிலான மானுட நேயம் மிக்க நட்பினையும்  பதிவு செய்கின்றது. அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் இலங்கையின் சிறுபான்மையின மக்களனைவரும் ஒன்றிணைந்து தம் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய இன்றுள்ள சூழலில், கடந்த கால வரலாற்றின் கசப்பான பக்கங்கள் தலையிட்டு அவ்விதமான ஒற்றுமையினைக் குலைத்து விடும் அபாயமுள்ளதொரு சூழலில்,சிறுபான்மையின மக்கள் மத்தியில் புரிதுணர்வினையும், நல்லெண்ணத்தினையும் ஏற்படுத்துவதற்கு எழுத்தாளர்களின் இதுபோன்ற தம் மீதான சுய பரிசோதனை மிக்க  படைப்புகளின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.

இக்கவிதையில் எனக்குபிடித்த சில வரிகள் வருமாறு:

"மூளையின் மடிப்புகளில்
கேள்விப் பாம்புகள்
நெளிந்து நெளிந்து
பதில்களைத் தேடிப்
பசியோடு துடிக்கின்றன"

'கேள்விப்பாம்புகள்' நல்லதொரு உருவகத்திலுருவான படிமம். 'நினைவு ஆணிகள்' இன்னுமொரு சிறந்த உருவகத்திலுருவான படிமம்.

கவிதை பின்வருமாறு முடிகின்றது.

"நீரடித்து
நீர் விலகாதெனில்
உன்னையும்
என்னையும்
எப்படி விலக்கலாம்?"

நீரானது ஒன்றுடனொன்று அடிபட்டுச் சென்றாலும் ஒன்றாகக் கலந்து விடுகிறது. நீரினைப் பிரிக்க முடியாது. அது போன்றதுதான் நம்மிருவருக்குமிடையிலான நட்பும், உறவும். யாராலும் பிரிக்கப்பட முடியாதது என்று முடிகிறது கவிதை. கவிஞரின் படைப்புச் சிறப்பினை வெளிப்படுத்தும் வரிகள்.

தமிழினியின் குறுங்கவிதையொன்று  துளி -01 என்னும் தலைப்பில் அவரது முகநூலில் வெளியாகியுள்ளது. . கவிதை இதுதான்:

காலநதிக்கரையில்
எஞ்சிக்கிடக்கிறது
இத்துப்போனவொரு வாழ்க்கை.
இடைவிடாது கொட்டிக்கொண்டிருக்கும்
விசத்தேள்களாக நினைவுகள்
குடைவதால் நெஞ்சினில்
நீங்காத மரணவலி.
"சாகத்தானே போனதுகள்.
சாகாமல் ஏன் வந்ததுகள்."
குறுக்குக்கேள்விகளால்
கூண்டுக்குள்ளேயே
பிணமாகிக்கனக்கிறது
போராடப்போன மனம்.

இதுதான் அந்தக்குறுங்கவிதை. கடந்த கால நினைவுகள் வாட்டும் மனநிலையினை,  யுத்தம் மெளனிக்கப்பட்டதற்குப்பின்னர் முன்னாள் போராளிகளைப்புறக்கணிக்கும் சமூகத்தின் மனநிலை ஏற்படுத்தும் வலியினை இவையெல்லாம் கவிஞரை வேதனைப்படுத்துகிறது. நீங்காத மரண வலியாக வாட்டுகிறது. அந்த வலியினை வெளிப்படுத்தும் வார்த்தைகள்: நினைவுகள் விசத்தேள்களாக்கொட்டுகின்றன. போராடப்புறப்பட்ட மனது பிணமாகிக்கனக்கிறது.

கவிதையென்பது உணர்வின் வெளிப்பாடு. ஆழமனத்தில் குடிகொண்டிருக்கும் வேதனை வார்த்தைகளில் வெளிப்படுகிறது. கவிதையில் உண்மை இருப்பதால் சுடுகிறது. வலி தெரிகிறது. கூடவே மானுடரின் சுயநலமும் தெரிகிறது.  போராடப்புறப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் தம் கடந்த கால அனுபவங்களைப்பல்வேறு வழிகளில் பதிவு செய்து வருகின்றார்கள். தமிழினி இங்கு தன் நிகழ்கால அனுபவத்தைக் கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

ஈழத்துத்தமிழ் இலக்கியத்திலிருந்து வெளியான முக்கியமான கவிதைகளிலொன்றாகத் தமிழினியின் இந்தக் குறுங்கவிதையும் இடம் பெறப்போகின்றது. அதற்குக்காரணம் அது கூறும் பொருள். ஒரு முன்னாள் போராளியின், சமூகத்தால் அவமதிப்புக்குள்ளாகியிருக்கும் இன்றைய மனநிலையினை, அதனாலேற்படும் வேதனையினைப் பதிவு செய்திருப்பதால் இக்கவிதையின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது.

கவிதையில் சொற்களும் அழகாக வந்து விழுந்திருக்கின்றன. கொட்டும் நினைவுகளை விசத்தேள்களுக்கு உவமையாக்கியிருப்பது நன்கு பொருந்துகிறது. விசத்தேள் நினைவுகளென்று உருவகித்திருந்தாலும் சொற் சிக்கனம் மிகுந்து படிமத்தில் இன்னும் சிறப்புற்றிருக்கும். இந்தக் கவிதைக்குத் தமிழினி தலைப்பினை வைக்கவில்லை. துளி -01 என்று மட்டுமே வைத்திருக்கின்றார். கவிதையின் தலைப்பாகப் போராடப்போன மனது என்று வைக்கலாமென்று படுகின்றது. அண்மையில் நான் வாசித்த கவிதைகளில் என் மனதினைப்பாதித்த கவிதைகளில் இதுவுமொன்றென்பேன்.

'கட்டைகளை நெருக்கி பக்கவாட்டில் அடுக்கி விட்டது போல்' படுத்திருக்கும் கைதிகளின் நிலையினை, இரவிலும் கண்ணைப்பறிக்கும் ஒளிவெள்ளத்தில் தூங்க வேண்டிய நிலையினை, போதைக்கடிமையாகிய பெண் கைதிகளுடன் வாழ வேண்டிய நிலையினை, உணவுக்காக, குளிப்பதற்காகச் சிறையினுள் அடையும் சிரமங்களை விபரிக்கும் கவிதை 'வெலிக்கடைச்சிறை'. ஒருவகையில் சிறை வாழ்க்கையினைப் படம் பிடிக்கும் ஆவணக்கவிதையாக இதனைக்கருதலாம். இந்தக்கவிதை பின்வருமாறு முடிவுறுகிறது:

கை வீசி நடக்கிறது
காலம்.
அதன் கால்களில் ஒட்டிய துகள்களாய்
மனித வாழ்க்கை-
ஒட்டுவதும், உதிர்வதுமாய்.

தமிழினியின் படிமங்கள் சிறப்பானவை. படைப்புத்திறன் மிக்கவை. இங்கு கை வீசி நடக்கும் காலம், கால்களையும், கைகளையும் கொண்டவொரு உயிராக மனதில் விரிகிறது. மனித வாழ்க்கையோ அதன் கால்களில் ஒட்டிய துகள்களா ஒட்டுவதும், உதிர்வதுமாக இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் காலமோ கைகளை வீசி நடந்து கொண்டிருக்கின்றது.

காலத்தின் பல்வகைப்பண்புகளைத் தன் வாழ்க்கையினூடு விபரிக்கும் கவிதை 'போரடிக்கும்  கருவி'. இந்தக்கவிதையினை வாசிப்பவர்களுக்கு முதல் எழும் கேள்வி இங்கு தமிழினி குறிப்பிடும் போரடிக்கும் கருவி என்பதுதான் என்ன? நான் நேரடியான அறுவடை செய்யப்பட்ட நெற்பயிரிலிருந்து நெல்லினை பிரித்து எடுப்பதற்காகக் காளை மாடுகளைக்கொண்டு அல்லது உழவு இயந்திரங்களைக்கொண்டு மிதிப்பார்கள். ஒரு காலத்தில் தமிழர்கள் ஆனை கொண்டு போரடித்ததாக வரலாறுண்டு. இக்கவிதையில் தமிழினி தன்னையொரு போரடிக்கும் கருவியாகக்காண்கின்றார். காலமானது ஒரு சமயம் மெளனமாகவிருக்கச்செய்கிறது. இன்னுமொரு சமயம் பகைக்கச்செய்கிறது. பிறிதொரு சமயமோ சிநேகிக்கச்செய்கிறது. இங்கு தமிழினியின் வாழ்க்கையின் அடிப்படையில் பகைக்க என்பது இரு இனங்களுக்குமிடையில் நிலவிய பகை காரணமாக வெடித்த போராட்டத்தினையும், சிநேகிக்க என்பது சமாதான முயற்சிகளை, யுத்த நிறுத்தங்கள் போன்றவற்றையும், மெளனமாக இருக்க என்பது யுத்தம் முடிவுற்ற பின்னர், சிறை வைக்கப்பட்டு விடுதலையான பின்னர் மெளனமாகவிருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட அவரது நிலையினையும் குறிப்பாகக் குறிப்பதாகக் கருதலாம். போரடிக்கும் கருவியானது எவ்விதம் நெல்லினையும், தாளினையும் பிரித்தெடுக்கின்றதோ, அவ்விதமே காலமும் தன்னை அவ்விதமானதொரு கருவியாக வைத்து, பல்வகைக்காலச்சூழல்களையும் எதிர்கொள்வதற்கு அவற்றை நேர்த்தியாகக் கையாண்டு, நகர்த்திச்செல்கிறது. போரடிக்கும் கருவி நெல்லையும் , தாளினையும் பிரிக்கிறது. இங்கு இருப்பில் எதிர்படும் பல்வகைக்காலத்தின் நிலைகளையும் ஆரோக்கியமாக எதிர்கொள்வதற்கு தான் தான் அவற்றின் தன்மையினை உணர்ந்து, அவற்றின் விளைவாக உருவாகும் நன்மை, தீமைகளைப்பிரித்துணர்ந்து நடைபயின்றிட வேண்டும். இந்தக் காரணத்தினால்தான் தன்னைக் காலம் ஒரு போரடிக்கும் கருவியாகப் பாவிக்கின்றது என்கின்றார் கவிஞர். காலமானது மானுடரைப்போரடிக்கும் கருவிகளாக வைத்து, இருப்புப் பயிர் விளைச்சலை எதிர்கொள்கின்றது என்பதுதான் கவிஞரின் எண்ணமாக இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. இங்கும் போரடிக்கும் கருவு ஒரு படிமம். காலத்தின் கைகளில் இயங்கும் மானுடர் பற்றிய வித்தியாசமானதொரு படிமம்.

காலம் , வெளி எல்லாமே சார்ப்பானது என்றார் ஐன்ஸ்டைன் தனது புகழ்பெற்ற சார்பியல் கோட்பாடுகளில்.  தமிழினியின் 'உத்தரிக்கும் இரவு' கவிதையும் காலத்தின் சார்புத்தன்மையினை இன்னுமோர் கோணத்தில் வெளிப்படுத்துகிறது. ஆறுதலாக, ஆடி, ஆடி நகர்ந்து செல்லும் சரக்கு ரயிலாக நீண்டு செல்கிறது இரவு. இரவினை ஆடி, ஆடி, ஊர்ந்து செல்லும் சரக்கு ரயிலாகக் கவிஞர் உணருகின்றார். நல்லதொரு படிமம்.

"கடைசிக் கையிருப்பும்
முடிந்து போன
அந்தரிப்பில்
மூட மறுக்கின்றன
உறக்கமற்ற விழிகள்"

தூங்க முடியாமல் உறக்கமற்றுத்தவிக்கின்றன விழிகள். ஏன்? கடைசிக் கையிருப்பும் முடிந்து போன அந்தரிப்பில் உறக்கமற்றுத் தவிக்கின்றன விழிகள். முடிந்து போன கடைசிக் கையிருப்பாக , முடிந்து போன ஆயுதப்போரினையும் ஒரு விதத்தில் கருதலாம் தானே. எல்லாமே முடிவுற்ற நிலையிலும், ஒரு வித நப்பாசையில் தீர்ந்து போன சக்கரை டப்பாவைப் பிறாண்டுவதுபோல், இன்னும் மீதமிருக்கும் கனவுகளை பிறாண்டுகிறது தவித்த மனது. இவ்விதமான இறந்த கால நினைவுகள் புழுக்களாக மூளையினைத்தின்னுகின்றன, இவ்விதமான தூக்கமற்ற இரவுகளைக்கடப்பதே பெரும் பாடாகவிருக்கிறது கவிஞருக்கு. இவ்விதமான நினைவுகளால் ஓரிரவைக் கடப்பது கூட, ஒரு மாமாங்கத்தினைக் கடப்பதுபோல் வலிக்கிறது.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான பின்னர் முன்னாள் போராளிகள் பலரின் மனநிலையும் இவ்விதமாகத்தானிருக்கும்.

இன்னுமொரு தமிழினியின் கவிதையினையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகவிருக்குமென எண்ணுகின்றேன். அதனை அவர் கவிதையாக எழுதியிருக்கவில்லை. அவரது 'மழைக்கால இரவு' என்னும் சிறுகதையில் அவர் பாவித்திருந்த கவித்தும் மிக்க வரிகளைத்தனியாகப்பிரித்தெடுத்து 'யுத்தம்' என்பதை விபரிக்கும் நல்லதொரு கவிதையாக அவ்வரிகள் விளங்குகின்றன என்று 'பதிவுகள்' இணைய இதழில் எழுதியிருந்தேன். அதனை அவர் தனது முகநூலில் குறிப்பிட்டு "‘மழைக்கால இரவு’ என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையிலிருந்து அர்த்தம்பொதிந்த அருமையான கவிதையொன்றினை கிரிதரன் நவரத்னம் யாத்திருக்கிறார்." என்று எழுதியிருந்தார். அந்த வகையில் அதனையும் தமிழினியின் நல்லதொரு 'யுத்தம்' பற்றிய கவிதையாக நான் காணுகின்றேன்.

இந்தச்சிறுகதையின் இறுதியில் வரும் வரிகள் அழகானதொரு கவிதையாக அமைந்திருக்கின்றன. 'பசியடங்காத பூதம்' போல் மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம். உவமையில் வெளிப்படும் நல்லதொரு படிமம் இது. எவ்வளவு பேரைக்கொன்றொழித்தும் யுத்தமென்ற பூதத்தின் பசி அடங்கவில்லை. கண் முன்னால் நிணமும், குருதியும் கடை வாயில் ஒழுகக்காட்சிதரும் பூதமாக யுத்தம் விசுவரூபமெடுத்து நிற்கிறது.

கரு மேகங்கள் சூழ்ந்த வானம்
இருள்மூடிக் கிடந்தது.
நசநச வென்று வெறுக்கும்படியாக
மழை பெய்து கொண்டேயிருந்தது,
இடை வெளியில்லாமல் காது கிழியும்படி
பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.
நிணமும் குருதியும் கடைவாயில்
வழிய வழிய
பசியடங்காத பூதம்போல மீண்டும்
பயங்கரமாக வாயைப்
பிளந்து கொண்டது
யுத்தம்.

மேலுள்ள வரிகளுடன் சிறுகதையின் மேலும் சிறுகதையின் சில வரிகளையும் சேர்த்து விட்டால் யுத்தம் என்றொரு முழுமையான கவிதை கிடைக்கின்றது.

யுத்தம்!

போரில் ஈடுபட்டு மரித்துப்
போன
இராணுவத்தினரதும், போராளிகளினதும்
சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு
கிடந்ததை என் கண்களால் கண்டேன்.
பகைமை, விரோதம், கொலைவெறி
இவைகளெதுவுமே
அப்போது அந்த முகங்களில்
தென்படவில்லை.
உயிர் போகும் தருணத்தின்
கடைசி வலி மட்டும்
அந்த முகங்களில் எஞ்சியிருந்தது
கரு மேகங்கள் சூழ்ந்த வானம்
இருள்மூடிக் கிடந்தது.
நசநச வென்று வெறுக்கும்படியாக
மழை பெய்து கொண்டேயிருந்தது,
இடை வெளியில்லாமல் காது கிழியும்படி
பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.
நிணமும் குருதியும் கடைவாயில்
வழிய வழிய
பசியடங்காத பூதம்போல மீண்டும்
பயங்கரமாக வாயைப்
பிளந்து கொண்டது
யுத்தம்.

இக்கவிதை யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் அதே சமயத்தில் கவிஞரின் மானுட நேயத்தினையும் வெளிப்படுத்துகிறது.  போரில் மரித்துப்போன இராணுவத்தினரின், போராளிகளின் சடலங்கள் ஒன்றின் மேலொன்றாகப் புரண்டு கிடப்பதைக்கவிஞர் பார்க்கின்றார். அச்சமயம் அவருக்கு பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதனையுமே அப்போது அம்முகங்களில் காண முடியவில்லை. உயிர் போகும் தருணத்தின்
கடைசி வலியினை மட்டுமே அம்முகங்களில் காண முடிகிறது. சிறிது நேரத்துக்கு முன்பு ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுடன் மோதி உயிர் விட்டவர்கள் அவர்கள். ஆனால் மடிந்த அவர்தம் முகங்களில் அவை எவற்றையுமே காண முடியவில்லை. இவ்விதம் கூறுவதற்குக் கவிஞரைத்தூண்டிய மானுட நேயம் சிறப்புக்குரியது.

இவ்விதமாகத் தமிழினியின் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தவிர்க்க முடியாதவை. தமிழினியின் போராட்ட அனுபவங்களை, ஆழ்ந்த வாசிப்பினை, ஆழமான சிந்தனையினை வெளிப்படுத்தும் கவிதைகளின் முக்கியமான இன்னுமொரு சிறப்பு: அவரோ ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் இராணுவத்தாக்குதல்களிலும் பங்கு பற்றியவர். இருந்தும் அவரது கவிதைகள் பிரச்சார வாடையற்று சிறந்து விளங்குகின்றன. யுத்த களத்து நிலைமைகளை விபரிக்கையில், சக போராளிகளின் உளவியலை, போர்ச்செயற்பாடுகளை விபரிக்கையில், பொருத்தமான படிமங்களுடன், சிறப்பான மொழியுடன் அவற்றைப் பிரச்சார வாடையெதுவுமற்று விபரித்திருக்கின்றார். இதனால்தான் அவரது கவிதைகள் இலக்கியச்சிறப்பு மிக்கவையாக விளங்குகின்றன.

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்