Monday, February 19, 2018

கட்டுரை: 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -

- கடந்த ஆண்டு வெளியான 'கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000) ' என்னும் தொகுப்பு நூல் பற்றிய எனது விமர்சனம் செப்டம்பர் 2017 'கணையாழி' இதழில் வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக அக்கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகின்றது. - வ.ந.கி -

அண்மைககாலத்தில் வெளிவந்து நான் வாசித்த கட்டுரைத்தொகுதிகளில் சிறந்த தொகுதிகளிலொன்றாகக் 'கணையாழிக்கட்டுரைகள் (1995-2000) தொகுதியினைக் கருதுவதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. இந்தக்கட்டுரைதொகுதி என்னைக் கவர்வதற்குக் காரணமாக  இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ள கட்டுரைகளின் கூறுபொருள், கட்டுரைகளின் மொழிநடை ஆகியவற்றையே குறிப்பிடுவேன்.

கட்டுரைகளின் கூறுபொருள்
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளின் கூறுபொருள் பன்முகத்தன்மை வாய்ந்தவை. கலை, இலக்கியம், அறிவியல், அரசியல் எனக் கட்டுரைகள் பல விடயங்களைப்பற்றிக் கூறுபவை. இலக்கியத்தை என்னும் அதை மேலு பல உபபிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். கவிதை, படைப்பாளிகளின் படைப்புத்தன்மை, நாடகம், மொழிநடை (வட்டாரத்தமிழ் போன்ற), மேனாட்டு இலக்கிய அறிமுகம், நூல் அறிமுகம் இவ்விதம் இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது தேர்வாளர்களின் கடும் உழைப்பினை வெளிப்படுத்துகின்றது. இப்பிரிவிவில் வெளியான கட்டுரைகள் வெளிப்படுத்தும் விடயங்கள், தகவல்களும் பற்பல.

படைப்பாளிகளைப்பற்றிய கட்டுரைகளாகச் சா.கந்தசாமியின்  'ஒரு படைப்பாளியின் நடைப்பயணத்தில்' , 'ஆருயிர் கண்ணாளுக்கு' (எழுத்தாளர் புதுமைப்பித்தன் மனைவிக்கு எழுதிய நெஞ்சினைத் தொடும் கடிதம்), 'கருத்துக்குளத்தில் கல்லெறிந்த கலகக்காரர்'(பிரபஞ்சனின் கலைஞர் படைப்புகள் பற்றிய பார்வை), சா.கந்தசாமியின் 'இலக்கிய சரிதம்' , தஞ்சை ப்ரகாஷின் 'எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்', விக்கிரமாதித்யனின் 'நவீன கவிதை பிரமிளுக்கு முன்னும் பின்னும்' , ஞானக்கூத்தனின் 'டி.எஸ்.இலியட்டும் தமிழ் நவீன இலக்கியமும்' , அசோகமித்திரனின் 'சக பயணி' போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.
அசோகமித்திரனின் கட்டுரைகளில் கூறப்படும் பொருளுடன் பல்வேறு தகவல்களும் காணப்படுவது வழக்கம். இங்கும் 'சக பயணி' என்னும் அவரது சிறு கட்டுரை கோமல் சுவாமிநாதனைப்பற்றி குறிப்பாக அவரது நாடக, சினிமா முயற்சிகளைபற்றி, அவர் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட 'சுபமங்களா' பற்றி, கோமலின் இறுதிக்காலத்தைப்பற்றிச் சுருக்கமாகப் பதிவு செய்யும் கட்டுரை அறுபதுகளில் நடிகர் சகஸ்ரநாம் சேவா ஸ்டேஜ் நாடகக் குழு பற்றி, அறுபதுகளில் உஸ்மான் சாலையின் தென்பகுதியிலிருந்த தி.நகர் பஸ் ஸ்டாண்ட் பற்றியெல்லாம் மேலதிகத் தகவல்களைத் தருகின்றது.\

தஞ்சை ப்ரகாஷின் 'எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்' என்னும் கட்டுரை எம்.வி.வி.யின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் சமயம், எழுத்தாளர் நீலமணி பற்றியும், சுதேசமித்திரன் பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றியும் எடுத்துரைக்கின்றது. பொருளியல்ரீதியில் எவ்வளவோ சிரமங்களை இருப்பு அவருக்குக் கொடுத்தபோதும் எம்.வி.வி ஒருபோதுமே 'அவர் வியாபார எழுத்தில் , வெகுஜன ரசனையில் என்றுமே ஈடுபாடு வைத்ததில்லை' என்றும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுவார்.

மேற்படி கட்டுரையில் சுதேசமித்திரன் பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பைக் குறிப்பிடுகையில், அதன் ஆசிரியர்  சீனிவாசன் புரியும் பண உதவி பற்றியும் கட்டுரையாசிரியர் பதிவு செய்கின்றார். "தமிழின் தரமான எழுத்து முயற்சிகளை, சிறந்த பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லும்போது தமிழ் அறிஞர்கள் சுதேசமித்திரனை மறந்து விடுகின்றார்கள். மணிக்கொடி, கிராம ஊழியன், கலாமோகினி போன்ற சிறந்த இலக்கிய இதழ்கள்  1940இலிருந்து 50 வாக்கில் மரணமடைந்த பின்னர்  அந்த வெற்றிடத்தை  சுதேசமித்திரன் என்ற சாதாரண செய்திப்பத்திரிகைதான் நிரவி சரி செய்தது.  லா.ச.ராமாமிர்தம், தி.ஜானகிராமன், பராங்குஷம், எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான் குஞ்சு போன்ற  பல எழுத்தாளர்களுக்கு மிகச்சிறந்த இலக்கியத் தளமாக அமைந்த சுதேசமித்திரன் எங்களுக்குப் பெரியதொரு ஆலமரமாக நிழல் பரப்பியது என்பதைச்சொல்லாமல் இருக்க முடியாது. எம்.வி.வெங்கட்ராமன் அவர்களின்  மிகச்சிறந்த பரிசோதனை நாவல்களான இருட்டு, உயிரின் யாத்திரை இரண்டு நாவல்களும் வேறு எந்த வெகுஜனப் பத்திரிகையிலும் வெளிவந்திருக்க முடியாது. அந்தத் துணிச்சல்  சுதேசமித்திரனுக்கு இருந்தது." என்று சுதேசமித்திரனின் இலக்கியப்பங்களிப்பைக் கட்டுரை பதிவு செய்யும்.

கலைமகள் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்த எழுத்தாளர் நீலமணி பற்றியும், நீலமணி தம்பதியினரின் உபசரிப்பு பற்றியும் கட்டுரை நினைவு கூர்கின்றது. எழுத்தாளர் நீலமணி என்றதும் எனக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது எங்களது மாணவப்பருவத்தில் கலைமகள் சஞ்சிகையில் தொடராக வெளிவந்த அவர் எழுதிய 'புல்லின் இதழ்கள்' தொடர்நாவல்தான். தமிழில் இசை பற்றி வெளியான நாவல்களில் முக்கியமானவையாகப் பலரும் குறிப்பிடுவது தி.ஜானகிராமனின் 'மோகமுள்' நாவலையும், நீலமணியின் 'புல்லின் இதழ்கள்' நாவலையும்தாம் என்பது நினைவுக்கு வருகின்றது. உண்மையில் நீலமணி முறையாகப் பயிற்சி பெற்ற வயலின் இசைக் கலைஞர் என்பதும் , அவர் ஊடகத்துறையினையே தன் வாழ்வாதாரமாகத் தேர்ந்தெடுத்த ஒருவர் என்பதும் கூடவே நினைவுக்கு வருகின்றன.

எம்.வி.வெங்கட்ராமன் என்னும்போது எனக்கு நினைவுக்கு வருமொரு படைப்பு: தேவி மகாத்மியம். எழுபதுகளில் விகடன் மாதத்தொடர்நாவல்களை (நான்கு அத்தியாயங்களைக் கொண்ட தொடர்) வெளியிட்டு வந்தது. அவற்றிலொன்றுதான் 'தேவி மகாத்மியம்' என் அப்பா மிகவும் விரும்பிப்படித்த மாதத்தொடர்களிலொன்று என்பதால் இன்னும் ஞாபகத்திலுள்ளது.

கலைஞர் மு.கருணாநிதியின் எழுத்து பற்றிக்குறிப்பிடுகையில் எழுத்தாளர் பிரபஞ்சன் ( 'கருத்துக்குளத்தில் கல்லெறிந்த கலகக்காரர்' கட்டுரை) "எழுத்துக்கெனத் திட்டவட்டமான நோக்கம் வகுத்துக்கொண்டு இயங்குபவர் கலைஞர் மு.கருணாநிதி. தன் சமகாலத்தை விமர்சிப்பது, மாற்றுவது, உயர்த்துவது, ஒரு பொதுமை நலம் கொண்ட சமுதாயம் படைப்பது ஆகியவைகள் அவ்வரது லட்சியங்கள்" என்பார். எழுத்தாளர் சா.கந்தசாமியோ 'கலைஞர் மு.கருணாநிதி தன்  எழுத்து மீது நம்பிக்கை வைத்து ஐம்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதி வருகின்றார். அதனையே அவர் இலக்கிய இலட்சியம் என்று குறிப்பிட வேண்டும்' என்பார் தன் 'இலக்கிய சரிதம்' கட்டுரையில். நவீனத்தமிழ் இலக்கிய வரலாற்றில் பகுத்தறிவுக்கொள்கைகளைப் பாமரர்கள் மத்தியிலும் தம் அடுக்குமொழி மேடைப்பேச்சுகளாலும், திரைப்படங்களாலும் மற்றும் எழுத்தாலும் பரப்பியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என்பது ஒரு காலகட்ட வரலாறு. அந்த அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் படைத்த இலக்கியத்துக்கும் ஓரிடமுண்டு. அவ்விதம் எழுத்தைத் தம் கொள்கைகப்பரப்புச்சாதனமாகப்பாவித்தவர்களில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் எழுத்துகளையும் தவிர்க்க முடியாது அவை உருவானதன் காரணத்தின் அடிப்படையில்.

கி.ரா.வின்  'அந்த நாள்' படிப்பறிவற்ற மாடு மேய்த்து மடிந்துபோன ரெங்கி என்னும் பெண்ணிடமிருந்து தான் அறிந்த சொலவடைகளைப்பற்றி விபரிக்கும். குறிப்பாகத் தமிழ் மாதங்களின் பெயர்களில் அமையும் சொலவடைகளப்பற்றிக்குறிப்பிடும் கி.ரா செங்கி என்னும் மாடு மேய்க்கும் பெண்ணைப்பற்றியும் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்கின்றார். இதன் மூலம் அந்த மாடு மேய்க்கும் பெண்ணான செங்கி தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நின்றுவிட்டாள்.

வெங்கட் சாமிநாதனின் 'ஏன் இந்த இரைச்சல்' கட்டுரை புது தில்லியில் நீண்ட காலம் பணியாற்றிவிட்டுச் சென்னை திரும்பிய கலை, இலக்கியத் திறனாய்வாளாரான அமரர் வெங்கட் சாமிநாதனின் தமிழகக் கலை, இலக்கியச்சூழல் பற்றிய அவதானிப்பை வெளிப்படுத்துகின்றது. கூத்திலிருந்து ஆரம்பித்து, நாடகம், சினிமா, தொலைக்காட்சித்தொடர்களென்று வியாபித்திருக்கும் கத்திப்பேசும் பண்பினை எள்ளி நகையாடும் கட்டுரை கலை, இலக்கியவாதிகளின் மிகைப்படுத்தல்களையும், அலங்கார வார்த்தை விரயங்களையும், பட்டங்களையும் இரைச்சலின் பாற்பட்டவையாக, இரைச்சலின் இன்னுமொரு பரிணாமமாகச் சாடுகின்றது.

மரனின் 'நினைக்கப்படும்' கட்டுரைகள் மும்பை, கல்கத்தா நகர்களைப்பற்றிய சுருக்கமான பயண, விமர்சனக் கட்டுரைகள். கல்கத்தா பற்றிய கட்டுரையில் கல்கத்தாவில் பாரதியை நினைவுபடுத்தும் வகையில் வீதிகளுக்கு பாரதி பெயரில் வீதிப்பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் கட்டுரை 'தமிழர்கள் தாகூரைத்தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு வங்காளிகளுக்குப் பாரதியைத்தெரியுமோ? சந்தேகம்தான். ஆனாலும் பாரதிக்குக் கல்கத்தா காட்டும் மரியாதை , கவிஞனைப்போற்றும் கண்ணியம், காலமும் தூரமும் கடந்தும் கூட நினைக்கப்படும்' என்று முடிகின்றது.

'புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார்?' என்னும் மருதமுத்துவின் விரிவான கட்டுரை தொகுப்பின் இன்னுமோரிலக்கியக்கட்டுரை.  மிகவும்  விரிவாக எவ்விதம் பண்டைத்தமிழரின் சமுதாயத்தில் ஈமச்சடங்கு செய்யும் மதகுருக்களாக மிகவும் உன்னதமான இடத்திலிருந்த புலையர் பின்னர் வைதிகரின் வருகையால் எவ்விதம் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு இழிநிலை அடைந்தனர் என்பது பற்றியும், தமிழரின் கடவுளாக முருகக்கடவுளே இருந்தார் என்பது பற்றியும் ஆராயும் கட்டுரை அமெரிக்க அறிஞரான ஜார்ஜ் ஹார்ட்டின் தமிழர் பற்றிய ஆய்வுகளிலுள்ள குறைபாடுகள் பற்றியும் கவனத்தைச் செலுத்துகின்றது. தொகுப்பிலுள்ள நீண்ட கட்டுரைகளிலொன்று இந்தக் கட்டுரை.

தொகுப்பின் இன்னுமொரு நீண்ட கட்டுரை 'கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் அரசியற் பின்னணி' என்னும் முனைவர் க.முத்தையாவின் ஆய்வுக் கட்டுரை கால்டுவெல் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலின் உண்மையான நோக்கம் தமிழின் தொன்மையை நிறுவுவதா அல்லது வடமொழி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத இகழ்ச்சி மூலம் தென்னிந்தியர்கள் மத்தியில் கிறிஸ்தவ மதத்தைப் புகுத்துவதா என்பது பற்றி ஆராயும். மேலும் திராவிடர்கள் என்னும் பதம் தமிழர்களைக் குறிக்கின்றது என்றும், வடவர்களால் இழிவாகத் தமிழர்களைக்குறிக்க அப்பதம் பாவிக்கப்பட்டதால் தமிழர்களே தம் இலக்கியங்களில் அப்பதத்தைப் பாவிக்கவில்லையென்றும் தனது ஆய்வுகள் மூலம் முடிவுக்கு வரும் முனைவர் இந்நிலையில் கால்டுவெல் அவர்கள் முதன் முறையாகத் தென்னிந்தியர்கள் அனைவரையும் இணைத்து 'திராவிடமொழிக் குடும்பம்' என்னும் கோட்பாட்டினை உருவாக்குகின்றார் என்கின்றார். கால்டுவெல்லுக்கு முன்னர் மலையாளம், தெலுங்கு , கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளை இணைத்துத் திராவிடம் என்னும் சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்கின்றார். உண்மையில் திராவிடக் குடும்பம் என்னும் கோட்பாட்டின் மூலம் , இந்தியாவை வடக்கு, தெற்காகப் பிரிப்பதும், தெற்கில் ஆதிக்கம் செலுத்துக்கொண்டிருந்த ஆரியரின் மதக் கோட்பாடுகளை எதிர்ப்பதும், இதன் மூலம் தெற்கில் மக்களைக் கிறிஸ்த்தவ மதத்துக்கு மாற்றுவதுமே மேற்படி நூலின் உருவாக்கத்துக்குக் காரணமான அடிப்படைக்காரணங்கள் என்பதையே முனைவரது ஆய்வுக்கட்டுரை எடுத்தியம்புகின்றது.

தொகுப்பில் இந்திய ஓவியக்கலை, சிற்பக்கலை பற்றி தமிழ்நாடனின் இரு கட்டுரைகள் "இந்திய இதிகாசங்களும், இந்திய ஓவிய மரபும்", "இந்திய இதிகாசங்களும், இந்திய சிற்ப மரபும்" ஆகிய கட்டுரைகளும், பெளத்த தாதுகோபங்கள் பற்றிய  மு.ஸ்ரீனிவாசனின்  'ஸ்தூபங்கள்' கட்டுரையும், வ.ந.கிரிதரனின் 'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக்கலையும்' கட்டுரையும், பிரெஞ்சு அறிஞரான  ழூவே துப்ருயலின் 'திராவிடர் கட்டடக்கலை' என்னும் கட்டுரையின் முரளி அரூபனின் மொழிபெயர்ப்புக் கட்டுரையும், அறிஞர் ஆனந்த குமாரசாமியின் 'அறிகுறி அறிதலும், தீர்வும்' என்னும் மொழிபெயர்ப்புக் கட்டுரையும் (முரளி அரூபன் மொழிபெயர்த்தது), , சி.மோகனின் ' ராய் செளத்திரி (1899- 1975)' என்னும் ஓவியம், சிற்பம், இசை, எழுத்து எனத்தடம் பதித்த தேவி பிரசாத் ராய் செளத்திரி பற்றிய கட்டுரையும் விபரிக்கின்றன. ழூவே துப்ருயலே முதலில் திராவிடர்க்கட்டடக்கலை பற்றித்  தமிழில்  எழுதிய  அறிஞர் என்று அறிகின்றேன். அதற்காக அவருக்கு நன்றி கூறவேண்டும். இதற்குக்காரணம் வரலாற்றுப்பெருமை பேசுவதில் காலத்தைக் கழிக்கும் தமிழர்கள் வரலாற்றைப்பேணுவதில் அதிகம் அக்கறை காட்டுவதில்லை என்பதுதான். இல்லாவிட்டால் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஆலயங்கள் , சிற்பங்கள் போன்றவற்றை ஆராய்ந்து நூற்றுக்கணக்கில் நூல்கள் வந்திருக்க வேண்டுமல்லவா? மேற்படி  முரளி அரூபனின் இக்கட்டுரை ஏற்கனவே புகைப்படங்கள், ஓவியங்களையும் உள்ளடக்கிச் சிறு நூலாக த் தமிழில் வெளியாகியுள்ளது. மு.ஶ்ரீனிவாசனின்  'ஸ்தூபங்கள் தாதுகோபங்களை அவற்றின் வரலாற்றுப்பின்னணியில் வைத்து, ஆராய்கிறது. வ.ந.கிரிதரனின்  'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக்கலையும்'  பண்டைய இந்துக்களின் கட்டட மற்றும் நகர அமைப்புக் கலை பற்றியும், அவற்றைப் பாதித்த சமயம், புவியியல் அமைப்பு, மற்றும் சமுதாய அமைப்பு போன்ற காரணிகள் பற்றியும், இந்து மற்றும் பெளத்த மதங்களின் கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய கோட்பாடுகள் பற்றியும் சுருக்கமாக ஆராய்கின்றது.

தொகுப்பிலுள்ள ஒரேயொரு அறிவியற் கட்டுரையான வ.ந.கிரிதரனின் 'அண்டவெளிக்கு ஆய்வுக்கு வழிகோலும் தத்துவங்கள்' என்னும் கட்டுரை. நவீன இயற்பியலின் இரு தூண்களாக ஐன்ஸ்டைனின் 'சார்பியற் தத்துவத்தையும்' (சிறப்புச் சார்பியற் தத்துவம் மற்றும் பொதுச்சார்பியற் தத்துவம்) , சக்திச்சொட்டுப்பெளதிகத்தையும் (குவாண்டம் பிசிக்ஸ்) குறிப்பிடலாம். இவற்றில் சார்பியற் தத்துவமே நவீன வானியற்பியலின் (Astro Physics)  அடிப்படையும் கூட.   ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவத்தின் வெளி, நேரம், புவியீர்ப்பு பற்றிய நவீனக் கோட்பாடுகளை சாதாரண மக்களும் அறிந்துக்கொள்ளும் வகையில், எளிமையான மொழி நடையில் விவரிக்கின்றது கிரிதரனின் மேற்படி கட்டுரை.

தி.க.சிவசங்கரனின் 'கி.பி.இரண்டாயிரத்தில் தமிழ் இலக்கியம்: சில கவலைகளும், கனவுகளும்' கட்டுரையும் தொகுப்பின் இன்னுமொரு குறிப்பிடத்தக்கக் கட்டுரை. வணிக மயமாகிவிட்ட ஊடகத்துறை, மனிதரை விலங்கு நிலைக்குத்தள்ளக்கூடிய நுகர்வுக் கலாச்சாரத்தின் தாக்கம், இவற்றுக்கு மத்தியில் தமிழ் இலக்கியம் வளராது தேங்கிய குட்டையாகி விடும் ஆபத்துள்ளது. இந்நிலையில் தமிழ் இலக்கியத்தை எவ்விதம் காப்பது என்பது பற்றிய தி.க.சி.யின் கவலையை விபரிக்கும் கட்டுரை இது.

நகுலனின் 'கூண்டினுள் பட்சிகள்' என்னும் நீல பத்மனாபனின்  நாவலைப்பற்றிய மதிப்பீடு. இந்நாவல் தத்துவச்சார்பான நாவலென்றும், சச்சிதானந்த சுவாமிகள் எவ்விதம் போகியாகி, யோகியாகி, சுவாமிகளாகிச் சமாதிநிலை அடைக்கின்றார் என்பதை விவரிக்கும் நாவலென்றும், சுவாமிகளின் வாழ்க்கையூடு ஆத்மா எவ்விதம் பல் நிலைகளைத்தாண்டிப்பிறவிப்பிணியிலிருந்து விடுபடுகின்றது என்பதை ஆராயும் நாவலென்றும் நகுலன் நாவலை மதிப்பீடு செய்கின்றார். என்.எஸ். ஜகந்நாதனின் 'என்னைக் கேட்டால்' நார்வீஜிய மெய்யியல் பேராசிரியரான ஜோஸ்டைன் கார்டர் எழுதிய 'சோபியின் உலகம்' என்னும் நூலைப்பற்றிய விமர்சனம். நாவலின் பிரதான பாத்திரமான சோபிக்கு வரும் கடிதங்களினூடு மேலைய மெய்யியலைப்பற்றிய விரிவான தகவல்களை அறிய முடிகின்றது. 'புனைவும் , யதார்த்தமும் ஒன்றில் மற்றொன்று கலந்து வெகுதூரம் செல்லு கதை' இந்நாவலை வர்ணிக்கின்றார் கட்டுரையாசிரியர். நகுலனின் விமர்சனத்துக்குள்ளான நீல பத்மனாபனின் நாவல் கீழைத்தேய மெய்யியலை விபரித்தால், ஜகந்நாதனின் 'என்னைக் கேட்டால்' மேலைத்தேய மெய்யிலை விபரிக்கும் நாவலை விமர்சனத்துக்குள்ளாக்குகின்றது.

இந்திரா பார்த்தசாரதியின் 'பழையன புகுதல்' மேனாட்டிலுருவாகி ஆண்டுகள் பல கடந்துத் தமிழகத்தில் அறிமுகமாகும் பல இலக்கியக்கோட்பாடுகளின் அடிப்படை பண்டைய இந்திய இலக்கியங்களிலிருந்து ஆரம்பமாகியுள்ளதைச் சுட்டிக்காட்டும். 'Jawues Lacan' ஒப்புக்கொண்டிருக்கின்றார். அபி நவ குப்தாவின் (950 - 1020 AD)) 'த்வொனி' என்ற கருத்தாக்கம் அவரை எப்படிப்பாதித்தது என்று அவரே கூறியுள்ளார்'  என்று எடுத்துரைக்கும் அவர் 'அதி அற்புதமான பின் நவீனத்துவ இலக்கியப் படைப்புகளுக்குச் சிறந்த சான்றுகள் மஹாபாரதமும், விக்கிரமாதித்தியன் கதைகளுந்தாம்' என்று கட்டுரையை முடிக்கின்றார்.

எஸ்.ராமச்சந்திரனின் 'ஆயுத பூசை' தொழிலாளர் விழாவான ஆயுத பூசையையைப்பற்றி வரலாற்று நோக்கில் ஆராயும் நல்லதோர் ஆய்வுக்கட்டுரை.

'தமிழ்ப்படைப்பிலக்கியத்தின் எதிர்காலம்' என்னும் இந்திரா பார்த்தசாரதியின் தொகுப்பிலுள்ள இன்னுமொரு நீண்ட கட்டுரை. 'பிரபல இலக்கியத்தின் பிரதிநிதியாக கல்கியும், சிறுபான்மையோ இலக்கியத்தின் பிரதிநிதியாகப் புதுமைப்பித்தனும் முப்பதுகளில் தோன்றினார்கள்.  இவ்வரலாற்று உண்மையின் தொடர்ச்சியாகத்தான் இன்றுவரை தமிழ் இலக்கியம் வளர்ந்து வந்திருக்கின்றது' என்று குறிப்பிடும் இ.பா. 'தமிழ்ப்படைப்பிலக்கியத்தின் எதிர்காலம் தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால்தானிருக்கின்றது' என்னும் முடிவுக்கு வருகின்றார். அதற்கான அவரது தர்க்க நியாயங்களை சங்க கால இலக்கியங்களில் தொடங்கி, மேனாட்டு இலக்கியங்களில் புகுந்து அவற்றிலிருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் நிறுவுகின்றார்.

தொகுப்பின் சினிமாக் கட்டுரைகளை எஸ்.குரு மற்றும் எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். எஸ்.குருவின் கட்டுரைகள் பிரெஞ்சு சினிமா பற்றியும், தமிழ்ச் சினிமாவின் முதலாவது சமூகப்படம் எது என்பது பற்றியும் ஆராய்ந்தால், எஸ்.சுவாமிநாதன் 'குருதிப்புனல்' தமிழ்த்திரைப்படம் பற்றித் தன் கவனத்தைச்செலுத்துகின்றது.

'வட்டார வழக்குகளில் பாவிக்கப்படும் அளவை அலகுகள்' பற்றி ஆராயும் கழனியூரானின் கட்டுரை 'நாட்டுப்புற மக்களின் மொழிநடையில்தான் நமது கலாச்சார பண்பாட்டுச் செல்வங்களின் சுவடுகள் காணக்கிடக்கின்றன.  எனவே நாம் நாட்டார் வழக்காற்றியல் துறை சார்ந்த சேகரங்களைச் சேமிப்பதிலும் ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்தவேண்டும்'எ என்று வற்புறுத்துகின்றது.

'மார்க்சின் தூரிகை யுகம் கடந்த குறியீடுகள்' என்னும் தியாகுவின் கட்டுரையும் முக்கியமான கட்டுரைகளிலொன்று. கிரேக்க தெய்வங்களிலொன்றான சீயுஸ் தலைமையிலான தேவர்களை எதிர்த்து, அவர்களிடமிருந்து நெருப்பைக் கைப்பற்றி வந்த வீரன் புரோமிதியஸ் பின்னர் கைது செய்யப்பட்டுக் கொடிய சித்திரவதைகளுக்குள்ளாகியபோதும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றான். இக்கிரேக்கப்புராணக் கதையினை அடிப்படையாக வைத்துக் கிரேக்க நாடகாசிரியரான எஷ்கிலஸ் எழுதிய புகழ்பெற்ற நாடகம்தான் 'கட்டுண்ட புரோமிதியஸ்'. இக்கதையினை எவ்விதம் மார்க்ஸ் தன் முனைவர் பட்டத்துக்கான் ஆய்வுக்கட்டுரையில் கையாள்கின்றார் என்பதை ஆய்வுக்கண்ணோட்டத்தில் விபரிக்கின்றது மேற்படி கட்டுரை.

இவை தவிரத் தொகுப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, லதா ராமகிருஷ்ணன், சுஜாதா, அம்ஷன் குமார், வெளி ரங்கநாதன் என்று மேலும் பலரின் ஆக்கங்களும் அடங்கியுள்ளன.

இவையெல்லாம் கூறி நிற்பவைதாமென்ன? தொகுப்பின் பன்முகக்கட்டுரைகளின் கூறு பொருளையல்லவா. இத்தொகுப்பின் முக்கியமான சிறப்பு இதுதான். கலை, இலக்கியத்தின் பல்வகைப்பிரிவுகளிலும் (அரசியல், தத்துவம், நூல் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், சினிமா, அறிவியல் என்று) கட்டுரைகளைத்தொகுப்பாளர்கள் தேர்ந்தெடுத்திருப்பதுதான்.

கட்டுரைகளின் மொழிநடை!
கட்டுரைகள் அனைத்துமே பல்வேறு விடயங்களைக் கூறினாலும், அவை எவ்வளவு சிக்கலாக இருந்த போதிலும், வாசிப்பவர்களுக்கு எளிதில் விளங்கும் வகையிலான நடையினைக் கொண்டவை. அதற்காக, வாசகர்களைக்கவர வேண்டுமென்பதற்காக அண்மைக்காலச்சிற்றிதழ்கள் பல வெளிப்படுத்தும் தேவையற்ற சொற்பிரயோகங்களைக் கொண்டவை அல்ல. இது கணையாழிப்படைப்புகளின் முக்கியமானதொரு பண்பு என்பேன். அப்பண்பு இக்கட்டுரைத்தொகுப்பிலுமுள்ளது என்பதைத்தொகுப்பு ஆக்கங்கள் வெளிப்படுத்துகின்றன. தொகுப்பிலுள்ள கட்டுரையொன்றான  'இருண்மை:  இலக்கிய உத்தியா? தந்திர வித்தையா? ' என்னும்  பழநியப்பா சுப்பிரமணியனின் கட்டுரையில் பின்வருமாறு ஓரிடத்தில் வருகின்றது:

".. இந்த நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் நவீன இலக்கியவாதிகள் கவிதை என்பது படித்துப் புரிந்துகொள்ளக் கடினமானதாக இருக்க வேண்டும் என்ற அணுகுமுறையைத் தோற்றுவித்தார்கள்.  எளிமையையும், தெளிவையையும் எழுத்தில் கொண்டு வருவதற்கு அவசியமான கடின உழைப்பை விரும்பாதவர்கள் அதனை வரவேற்றார்கள்." இக்கூற்றானது பி.ஜே. என்ட்ரைட் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட தற்காலக்கவிதைத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள முன்னுரையில் வரும் கூற்றெனவும் கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். இக்கூற்று கவிதைக்கு மட்டுமல்ல கதை, கட்டுரை போன்ற இலக்கியத்தின் ஏனைய வடிவங்களுக்கும் பொருந்துமென்பதென் கருத்து.

மிகவும் எளிமையும் தெளிவையும் ஒருங்கே கொண்டுவருவதற்கு மிகுந்த உழைப்பு தேவை. ஏனென்றால் ஒரு விடயத்தில் ஆழமான  புலமை இருந்தால் மட்டுமே , அந்த விடயத்தைப்பற்றி மிகவும் தெளிவாகவும், எளிமையாகவும் எழுத முடியும். இதற்கு அவ்விடயத்தைப்பற்றிய பூரண அறிவு இருக்க வேண்டும். அதற்கு நிச்சயம் கடினமான உழைப்பு அவசியம். இத்தகைய உழைப்பு அற்றவர்கள்தாம் , சொற்சிலம்பம் ஆடுவார்கள். இவர்கள்  வாசகர்களை மயக்கி, கூறும் விடயத்தைப்பற்றி வாசகர்களுக்கும் புரிய விடாது, தாமும் முழுமையாகப் புரிந்துகொள்ளாதவர்கள் என்பதை மூடி மறைக்கச் சொற்சிலம்பம் ஆடுவார்கள்.  ஆனால் கணையாழிப்படைப்புகள் எளிமையும், தெளிவையும் கொண்டு , ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தும் படைப்புகள். கணையாழிப்படைப்புகளின் முக்கிய பண்புகளிலொன்றாக இதனைக் குறிப்பிடலாம். இத்தொகுப்பிலும் அதனை நீங்கள் காணலாம். மொத்தத்தில் தொகுப்பாளர்களான ம.ரா, க.முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஜீவ கரிகாலன் ஆகியோரும், வெளியிட்ட கவிதா பதிப்பகத்தாரும் நிச்சயமாகப் பெருமைப்படத்தக்கதொரு தொகுப்புத்தான் 'கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000) ' தொகுப்பும்.

ngiri2704@rogers.com

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்