Thursday, February 22, 2018

சிறுகதை: போரே! நீ போய் விடு! - வ.ந.கிரிதரன் -



-  வீரகேசரி நிறுவனம் ஒருமுறை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக்குறுநாவல் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் 87/88 காலகட்டமென்று  நினைக்கின்றேன். என்னிடம் அது பற்றியுள்ள போட்டோ பிரதியில் திகதி விடுபட்டுப்போயுள்ளதால் அது பற்றி உடனடியாக நிச்சயமாகக்கூற முடியாதுள்ளது. அந்தபோட்டிக்கு அனுப்பப்பட்ட கதையிது. சிறுகதையாகக்கணிக்கப்பட்டு பிரசுரத்திற்குரியதாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையிது. நடுவர்களாக சிற்பி சரவணபவன் ,செங்கை ஆழியான் மற்றும் செம்பியன் செல்வன் ஆகியோரிருந்தனர். அக்காலகட்டத்து மனநிலையினைப் பிரதிபலிக்கும் எழுத்தென்பதால் ஒரு பதிவுக்காக இச்சிறுகதை பிரசுரமாகின்றது. -

1.

வெளியிலோ இலேசாகத்தூறிக்கொண்டிருந்த மழை பெருக்கத்தொடங்கிவிட்டிருந்தது. புழுதி படர்ந்த செம்மண் சாலைகளிலிருந்து மழைத்தூறல் பட்டதால் செம்பாட்டுமண்ணின் மணம் பரவத்தொடங்கிவிட்டிருந்தது. கோவைப்பழங்களைப்போட்டி போட்டு தின்றபடியிருந்த கிளிகள் மழை பெருப்பதைக்கண்டவுடன் நனைந்த இறகுகளை ஒருமுறை சிலிர்த்துவிட்டு , விண்ணில் வட்டமடித்துவிட்டு, உறைவிடங்களை நாடிப்பறக்கத்தொடங்கின. எங்கோ தொலைவில் பயணிகள் பஸ்ஸொன்று  குலுக்கலுடன் இரைந்து செல்லுமோசை காற்றில் மெல்லவந்து காதில் நுழைந்தது.  திடீரென அமைதியாகவிருந்த வானம் ஒருமுறை மின்னிவிட்டுப் பயங்கரமாக அதிர்ந்தது.  மழை பொத்துக்கொண்டு வரப்போகின்றது. மழைக்காலம் தொடங்கி விட்டது. மழை தொடங்கி விட்டாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். வயிரமென நிற்கும் பாலைகள், கருங்காலிகள், முதிரைகள் கூட ஒருவித நெகிழ்வுடன் நெகிழ்ந்து நிற்கையில் , மர அணில்களோ ஒருவித எக்களிப்புடன் மாரியை வரவேற்று, கொப்புகளில் தாவித்திரியும். மணிப்புறாக்கள், சிட்டுகள், குக்குறுபான்கள்,மாம்பழத்திகள், காடைகள், கவுதாரிகள், காட்டுக்கோழிகள், ஆலாக்கள், ஊருலாத்திகள், கொண்டை விரிச்சான்கள், மயில்கள், கொக்குகள்,நாரைகள்.. பறவைகள் யாவுமே புத்துணர்வுடன் மாரியை வரவேற்றுப்பாடித்திரிகையில் ... கட்டுமீறிப்பாய்ந்து பொங்கித்ததும்பும் குளங்கள், விரால் பிடிப்பதற்காக மீனவர்களுடன் போட்டிபோடும் வெங்கணாந்திப்பாம்புகள் உண்ட அசதியில் தவிக்கும் காட்சிகள்.. மரக்கொப்புகளில் வானரங்களுக்குப் போட்டியாகத்தாவிக்குளங்களில் பாயும் சிறுவர்கள்... மாரி என்றாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். சொதசொதவென்று சகதியும், இலைகளுமாகக் கிடக்கும் காட்டுப்பிரதேசங்களில் மெல்லப்பதுங்கிப்பாயும் முயல்கள், அசைவற்று நிற்கும் உடும்புகள், கொப்புகளோடு கொப்புகளாக ஆடும் கண்ணாடி விரியன்கள்... இம்மண்ணினழகே தனிதான்.
மழையுடன் போட்டி போட்டபடி 'ஓ..வ்..வ்..'வென்று காற்று வேறு பெரிதாக அடிக்கத்தொடங்கிவிட்டிருந்தது. வானம் இருண்டுபோய் கன்னங்கரேலென்று பெரும் பிரளயமே வந்து விடுவது போன்றதொரு தோற்றத்தில் அந்தப்பிரதேசம் மூழ்கிக்கிடக்கின்றது.

முள்ளியவளைக்கும், மாங்குளத்துக்கும் இடையில், நெடுங்கேணியிலிருந்து சிறிது தொலைவில் அமைந்திருந்த அந்தச்சிறு கிராமத்தில் இருந்த ஒரேயொரு பாடசாலைக்குத் தமிழ் வாத்தியாராகக் கருணாகரன் வந்து ஒருவருடம்  என்ன மாதிரி போனதென்றே தெரியவில்லை. நேரம் எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கருணாகரனோர்  ஒண்டிக்கட்டை. போனவருடம் வரை அவனைக்கவனிக்க அம்மா இருந்தாள். தாயின் பிரிவு கருணாகரனை வெகுவாகப்பாதித்து விட்டிருந்தது. அதிலிருந்து மீள அவன் பட்ட பாடு.. பாடசாலையுடன் தன்னை மேலும் மேலும் பிணைப்பதன் மூலம் அவன் தன் கவலைகளை மறக்க முயன்று கொண்டிருந்தான். பாடசாலை தவிர்ந்த நேரங்களில் அக்கிராமத்திலிருந்த அகதிகள் முகாமில் தொண்டனாகப் பணி புரிவதை அவன் வழக்கமாகக்கொண்டிருந்தான்.

அவன் சிறுவனாகயிருந்தபோது அமைதியாயிருந்த நாடு இன்று மோதல்களினாலும், இரத்தக்களிரிகளாலும் வெடித்துக்கொண்டிருந்தது.  மரணமே வாழ்வாகிப்போய்விட்ட நிலையில் மக்கள்.... இரவும், பகலும், வாழ்வும், சாவுமாக வாழ்க்கை ஓடிக்கொண்டுதானிருக்கின்றது.  ஒரு சில வருடங்களில்தான் எத்தனை அழிவுகள்.. சோகங்கள்.. இனி மீண்டும் அந்த அமைதி, ஆனந்தம் என்றுதான் வருமோ?  மோதல்களினால் அல்லுண்டு, அலைபட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்குத் தற்சமயம் தேவை அமைதி.. அமைதி.. அமைதி.

மழை தற்போதைக்கு விடுகிற பாடாகத்தெரியவில்லை. இருட்டி  வேறு விட்டிருந்தது. தேநீர் சிறிது அருந்திவிட்டு அகதிகள் நிலையத்திற்குப்போக வேண்டும். இப்படியே இருந்தால் விடியும்வரை இப்படியே இருக்கலாம். அங்கு போனாலாவது சிறிது பிரயோசனமாகப்பொழுது போகும்.

அகதிகள் நிலையத்தைப்பற்றி எண்ணியதும் அகிலாதேவியின் ஞாபகம்தான் உடனே வந்தது. அகிலாதேவி... சாதாரண மாநிறம்.. ஆனால் கடைந்தெடுத்த உடல்வாகு பெற்றவள். கூரிய பார்ப்போரை இதயம்வரை துளைத்துவிடும் சக்திமிக்க விழிகள்... எடுப்பான நாசி. இடைக்குக்கீழ் வரை அலையலையாகப்புரளும் சுருள் சுருளான கூந்தல். ஆழ்ந்த , அமைதியான,அழகான தோற்றம்.

பெண்களின் அழகும் இரு வகைப்பட்டது. ஒரு சிலரின் அழகோ உணர்வுகளை முறுக்கேற்றி, உணர்ச்சி வெறியிலாழ்த்தி உன்மத்தம் பிடித்துவிடச்செய்யும் சக்தி கொண்டது. மற்றைய வகை அழகோ உள்ளத்தை அமைதியில், இன்பத்திலாழ்த்தி, ஒருவிதப்பரவசத்தைத் தந்துவிடும் தன்மை கொண்டது. அகிலாதேவியின் அழகோ அந்த இரண்டாவது வகையைச்சார்ந்தது. உள்ளத்தில் அமைதியை, பரவசத்தை ஏற்படுத்தி விடக்கூடியது.

அந்த அகதிகள் நிலையத்துடன் தன்னைப்பிணைத்தபடி, தன் வாழ்வை அவள் நடத்திக்கொண்டிருந்தாள். எதையுமே இயல்பாக, அமைதியாக, பொறுமையாக உள்வாங்கி நடைபோடும் அவளது அந்தக்குணவியல்பு கருணாகரனை மிகவும் கவர்ந்த ஓரம்சம். அவளைப்போன்ற குணவியல்புகளைக்கொண்டவொரு பெண்ணத்தானே அவனும் தேடிக்கொண்டிருந்தான். இது மட்டும் சாத்தியமாகுமென்றால்...

தேநீரை அருந்திவிட்டுச் சிறிது நேரம் 'ஈஸிசேரி'ல் சாய்ந்திருக்கலாமென்றெண்ணியவனாகச் சாய்ந்தவனின் எண்ணங்கள் மீண்டும், மீண்டும் அகிலாதேவியையே சுற்றிச்சுற்றி வந்தபடியிருந்தன. மின்னலும், இடியுமாக வெளியிலேயோ மழை தாண்டவமாடிக்கொண்டிருந்தது.


2.

'ஈஸிசேரி'ல் சாய்ந்தவன் அப்படியே சிறிது நேரம் தன்னையுமறியாமல் உறங்கிப்போனான். விழித்தபோது வெளியில் மழை இன்னமும் கொட்டியபடிதானிருந்தது. இடியும், மின்னலும் போட்டி போட்டபடி .. ஒரே கும்மாளம். பறவை, மிருகங்கள்கூடத் தத்தமது உறைவிடங்களில் போய்ப்பதுங்கிக்கொண்டன.  ஆனால் ஊருலாத்திக்குருவிகள் மட்டும் ஒரு சில இன்னும் வட்டமிட்டபடியிருந்தன.

'சோ'வென்று கொட்டிக்கொண்டிருந்த மழை கருணாகரனுக்குப் பழைய  பால்ய நினைவுகளை ஞாபகப்படுத்தியது. அவன் பிறந்த யாழ் கிராமம் வயல்களுக்கு , வடலிகளுக்கிடையில் அமைந்திருந்தது. மழையில் நனைவது, கப்பல் விடுவது, வீட்டு அறையினுள் படுக்கையில் சாய்ந்தபடி, 'சடசட'வென்று ஓட்டுக்கூரையில் பட்டுத்தெறிக்கும் கொட்டும் மழையை, வயல்களிலிருந்து வரும் தவளைகளின் கச்சேரிகளை , போட்டி போடும் பாம்புகளின் கத்தல்களை, மழையில் நனைந்து மாவினுள் பதுங்கும் குயில்களை, இறகு ஒட்டி ஒதுங்கும் காக்கைகளை இரசிப்பதைப்போன்றதொரு இன்பமான பொழுது போக்கு வேறு என்ன உண்டு?

மழை என்றதும் அவனது அபிமானக்கவி பாரதியின் ஞாபகமும் எழாமலில்லை. தமிழ்க்கவிதையுலகில் பாரதி ஒரு சகாப்தம். அவன் சிந்திக்காத, பாடாத துறையே இல்லை. தத்துவம், அரசியல், சமயம், காதல், இயற்கை, பெண், மண், விடுதலை.. இவ்விதம் அவனைப்போல் சகல துறைகளிலும் சிந்தித்தவர்கள் அவனது காலகட்டத்தில் யாருமே இல்லை எனலாம். சூழலை மீறிச்சிந்திக்கும் அவனது அந்தச்சீரிய சிந்தனைகள்....

பாரதியின் அந்த 'மழை'க்கவிதையை மழை வரும்போதெல்லாம் அவன் நினைக்கத்தவறுவதேயில்லை.

திக்குகள் எட்டும் சிதறி தக்கத்
தீம்தரிகிட, தீம்தரிகிட, தீம்தரிகிட, தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது. பாயுது. பாயுது.
தாம் தரிகிட
தக்கத் ததிங்கிடத்தோம் அண்டம்
சாயுது. சாயுது. சாயுது. பேய்கொண்டு
தக்கையடிக்குது காற்று - தக்கத்
தாம் தரிகிட, தாம்தரிகிட, தாம்தரிகிட, தாம்தரிகிட
வெட்டியடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரை கொண்டு விண்ணையிடிக்குது.
கொட்டியிடிக்குது மேகம் - 'கூ'
'கூ'வென்று விண்ணைக்குடையுது காற்று.
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று
தாளங்கொட்டிக் கனைக்குது வானம்.

மழை பெய்வதை, எவ்வளவு தத்ரூபமாகப் பாரதியால் காட்ட முடிகின்றது. வார்த்தைகள் யாவுமே மழை பெய்வதைப்போன்றே உயிர்பெற்று விடுகின்றன. பாரதியின் சிறப்பே இதுதான். எந்த விடயத்தைப்பாடினாலும் அதனை, அப்படியே , உயிர் பெற்று உலாவிடச்செய்து விடுகின்றான்.
காதலைப்பற்றி அவன் பாடினால் நெஞ்சில் காதல் பொஙீகித்ததும்பும். கொடுமையை, அநீதியைப்பற்றிப்பாடினாலோ நெஞ்சங்குமுறிக்கனல் பொங்கும்.  வேடிக்கையான விடயத்தைப்பற்றிப்பாடினாலோ விலா உடையும்படியாக சிரிப்பு வந்து விடுகின்றது. இது எப்படி இவனால் முடிகின்றது?

இப்படியே சிந்தித்துக்கொண்டிருந்தால் விடிய விடிய சிந்தித்தபடியே இருக்கலாம். கடைசியில் அகதிகள் முகாமுக்கும் போனது மாதிரித்தான்.

சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்தவனாக எங்கேயோ மூலைக்குள் உடல் முழுக்கக்காயங்களுடன் பதுங்கிக்கிடந்த குடையை எடுத்து தூசு தட்டியவனாகக் கருணாகரன் மழைக்குள் இறங்கினான்.

3.


-ஒரு காலத்தில் அநாதைகள் பராமரிப்புக்காகக்கட்டப்பட்ட அந்தக் கட்டடம் தற்சமயம் ஐம்பது அகதிக்குடும்பங்களின் தங்குமிடமாக மாறி விட்டிருந்தது.  மனித சமுதாய வரலாறு மாறிக்கொண்டிருந்தபோதும், நாகரிக உலகின் உச்சாணிக்கொப்பில் தானிருப்பதாக அவன் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தபோதும், அவ்வாறு அவன் பெருமைப்படுவதில் அர்த்தமேயில்லை என்பதற்குச்சாட்சியாக உலகின் நானா பக்கங்களிலும் வெடித்துக்கொண்டிருக்கும் நவீனப்போர்கள், மோதல்கள், இரத்தகளரிகள் விளங்குகின்றன. இதற்கு இன்னுமொரு சாட்சியாக அவ்வகதிக்குடும்பங்கள் இருந்தன. உடமைகள் இழந்தவர்கள், உற்றார் உறவினரை இழந்தவர்கள், கணவனை, மனைவியை  இழந்தவர்கள், கால், கை இழந்தவர்கள், பாலியல் வன்முறையில் தம்மை இழந்தவர்கள்... இவ்விதம் பலர் அங்கிருந்தனர்.

அவ்வகதிக்குடும்பங்களிலுள்ள பெண்கள், ஆண்களில் சிலர் அகிலாதேவிக்குத்தொண்டர்களாக உதவி புரிந்தார்கள்.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் கருணாகரனும் உதவிக்கு வருவான்.

அம்முகாம் நிர்வாகம் சம்பந்தமான சகல பொறுப்புகளையுமே கந்தசாமி 'மாஸ்ட்ட'ரே கவனித்துக்கொண்டார். நகரிலுள்ள வர்த்தக, சமூக சேவை அமைப்புகளினூடாக உதவிகளைப்பெற்றுக்கொள்வதெல்லாம் அவரது பொறுப்பு. அவரது வாழ்வும், ஒருவிதத்தில் சோகமானதுதான். தற்சமயம் ஒண்டிக்கட்டையாக, தனிமையில் சமூக சேவையில் தன்னைப்பிணைத்து வாழ்ந்துவரும் அவரும் ஒரு காலத்தில் மண வாழ்வில் ஈடுபட்டிருந்தவர்தான்.

திருமணம் என்பது ஆணொருவனும், பெண்ணொருத்தியும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து, உணர்ந்து சேரும் உறவாக இருக்க வேண்டுமே தவிர திருமணம் புரிய வேண்டுமென்ற ஒரு காரணத்துக்காகவோ அன்றி வெறும் அழகையோ, பொருளையோ மையமாக வைத்து உருவாகும் ஒரு பிணைப்பிற்காக உருவாகும் உறவாக இருக்கக்கூடாது.

பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் கந்தசாமி 'மாஸ்ட்ட'ர் இளமை கொழிக்குமொரு அழகு சொட்டும் காளையாகதானிருந்தார். அவரை அடைவதற்காகப்பெண்கள் போட்டி போட்டபடியிருந்த சமயத்தில்தான் அவரது தூரத்து உறவு முறையான சுலோசனா மணந்தால் அவரையே மணப்பதெனப்பிடிவாதமாகவிருந்தாள். அவளது பிடிவாதமும், வீட்டாரின் வற்புறுத்தலும் கந்தசாமி 'மாஸ்ட்ட'ரை அவளை மணக்கச் சம்மதிக்க வைத்தன.

ஆனால் அதன்பிறகுதான் மண வாழ்வைப்பொறுத்த வரையில் தான் எவ்வளவு தூரம் தவறிழைத்து விட்டோமென்பதை அவர் உணர்ந்தார். அவருக்கும், சுலோசனாவுக்குமிடையில் எவ்வித உளரீதியிலான பொருத்தமும் இல்லை. வாழ்க்கையை அவர் பார்க்கும் நோக்கிற்கும், அவள் பார்க்கும் நோக்கிற்கும் வித்தியாசமோ மலையும், மடுவுமாகவிருந்தன. தாமரையிலைத்தண்ணீராக ஓடிக்கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் இன்னுமொரு பெரிய இடி... ஓரிரவு சுலோசனா கடிதம் எழுதி வைத்துவிட்டு அவளது முறை மாப்பிள்ளையான ஒருவனுடன் ஓடிப்போனாள்.

அதன்பிறகு கந்தசாமி 'மாஸ்ட்ட'ர் ஆசிரிய வேலையிலேயே கூடிய தூரம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வந்தார். மாறிக்கொண்டிருந்த நாட்டின் நிலைமை அவரை முழுநேர சமூகசேவையில் ஈடுபட வைத்தது.  அகதிகளுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கத்தொடங்கிவிட்டார்.  அதில் அவர் ஒருவித மனநிறைவையும் கண்டார்.

அகிலாதேவி அவரைச்சந்திப்பதற்குக் காரணம்.. அவளது தந்தை தம்பிமுத்து வாத்தியார்தான். தம்பிமுத்து வாத்தியாரும் கந்தசாமி 'மாஸ்ட்ட'ரும் பால்ய காலம் முதல் நண்பர்களாகவிருந்தவர்கள். கந்தசாமி 'மாஸ்ட்ட'ரின் மடியிலும், தோளிலும் தவழ்ந்து வளர்ந்த பெண் அகிலாதேவி. படிப்பில் வெகு சுட்டியாக, அழகுடன் கிராமத்துத்தெருக்களில் வளைய வரும் அகிலாதேவியைபற்றியெல்லாம் எவ்வளவு தூரம் அவர் கனவுகள் கண்டிருந்தார்.  மோதல்கள் உச்சக்கட்டத்திலிருந்த ஒரு சமயத்தில் தம்பிமுத்து வாத்தியார் 'ஷெல்' அடியில் திடீரென மண்டையைப்போட, இழக்கக்கூடாததையுமிழந்து , பிரமை பிடித்து நின்ற அகிலாதேவிக்கு ஆறுதல் கூறி, இம்முகாமுக்குக் கந்தசாமி 'மாஸ்ட்டர்'தான் அழைத்து  வந்தார். அவருக்கும் துணையாகவிருக்கும்.  அகதிகளுக்கும் ஆறுதலாகவிருக்கும். அவளுக்கும் அமைதியாகவிருக்கும். இவ்விதம் எண்ணித்தான் 'மாஸ்ட்ட'ர் அவளை அங்கு அழைத்து வந்தார்.

தம்பிமுத்து வாத்தியார் கண்ணுங்கருத்துமாகக் கனவுகளுடன் அகிலாதேவியை வளர்த்து வந்தார். அவர் கனவுகள் அடித்து நொருக்கப்பட்டன. ஊர்க்காளைகளெல்லாரும் அகிலாதேவியென்றால் நெருங்கவே பயப்படுவார்கள். அவ்வளவுதூரம் நெருப்பாக விளங்கினாள். சிறு பூச்சி, புழுவுக்குக்கூடத்தீங்கு செய்யப்பயப்படுவாள். மென்மையான அந்த உள்ளத்தை, உடலைக்கொத்திக்குதறி.... அவள் யாருக்கு என்ன கெடுதல் செய்தாள்? இது ஏன்? ஏன் இவ்விதம் நடந்தது? ஆறறிவு படைத்த மனிதா! நீ எதை நோக்கிப் போகின்றாய்?

4.

மழை இன்னும் கொட்டியபடிதானிருந்தது. கருணாகரன் அம்முகாமை அடைந்தபோது நன்கு இருட்டி விட்டிருந்தது. சாதாரணமாகவே நேரத்துடன் இருட்டி விடும் கானகப்பிரதேசம்... போதாதற்கு வானம் இருண்டு கொட்டிக்கொண்டிருந்தது. கேட்கவா வேண்டும்.  வழக்கமாக அடிக்கடி குரல்கொடுக்கும் நத்துகள், ஆந்தைகள் கூட கடும் மழை காரணமாகத் தத்தமது கூடுகளுக்குள் குடங்கிப் படுத்து விட்டன போலும்.

ஒரு குடையின் கீழ் அவனுடன் அருகாக வரும் அகிலாதேவி மட்டும் அவன் வாழ்க்கைப்பாதையில் அவனுடன் இணைந்து வரச்சம்மதிப்பாளென்றால்...

திடீரென்று மின்னலொன்று வானை வெட்டி மறைந்தது. தொடர்ந்து சடசடத்தபடி பேரிடியொன்று உருண்டோடியது.

'மாஸ்ட்ட'ர் இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. காலையில் நகருக்கு முகாம் அலுவல் சம்பந்தமாகச்சென்றவர்தான். இன்னும் திரும்பவில்லை. பாவம் 'மாஸ்ட்ட'ர். மழைக்குள் சரியாகக்கஷ்ட்டப்படப்போகின்றார். போதாதற்கு பஸ் போக்குவரத்துக்கூடச்சீராக இல்லை.

தலையைத்துவட்டியவாரே " என்ன கருணாகரன். தேநீர் வைக்கட்டுமா" என்றபடியே அடுக்களைக்குள்  நுழைந்த அகிலாதேவியைத்தொடர்ந்தான் கருணாகரன்.

"பாவம் மாஸ்ட்டர். இந்த வயதிலும் உடல் நலத்தைக்கவனிக்காமல் ஓடித்திரியிறார்...ம்.. எப்பத்தான் பழைய நிலை திரும்புமோ?:

"கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக இன்று சிக்கலுக்கு மேல் சிக்கலாக நாம் நினைத்தாலும் விடுபட முடியாதவாறு , நிலைமை சீரற்றுக்கொண்டே போகிறதே தவிர தெளியும் என்பதற்கு எந்தவிதச் சாத்தியக்கூறுகளுமே தெரிவதாகவில்லையே .. அகிலா"

இவ்விதம் கூறிய கருணாகரன் அடுக்களை யன்னலினூடு வானை நோக்கினான். சாதாரண சமயத்தில் நட்சத்திரப்படுதாவாகக் காட்சியளிக்கும் வானும்,வெளியும் இருண்டு, பரந்து, விரிந்து கிடக்கின்றது. கூரையில் பட்டுச் சிற்றோடைகளாக நீர் பாயும் ஒலி மெல்லக் கேட்கிறது.

" அகிலா! நாம் விரும்புகிறோமோ இல்லையோ.. நிலைமைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வாழ்வே ஒரு சாவாகவும், சாவே ஒரு வாழ்வாகவும் வாழுகின்ற போக்குக்கு நாம் பழகிக்கொள்ளத்தான்  வேண்டும்..."

அகிலாதேவி இதற்கு எதுவிதப் பதிலுமே கூறாமல் தேநீர் போடுவதில் முனைந்தாள்.  கருணாகரனே தொடர்ந்தான்.

"அகிலா! நான் கேட்கின்றேனே என்று தவறாக எண்ணி விடாதே. நீ ஏன் இப்படியே காலத்தை ஓட்ட வேண்டும்.  உனக்கேற்ற, உன்னைப்.."

இவ்விதம் கூறிய கருணாகரனை இடை மறித்தாள் அகிலாதேவி. "புரிந்த ஒரு நல்ல துணையை ஏற்றுக்கொண்டு ஏன் வாழக்கூடாது.  இவ்விதம் வழக்கமான தமிழ் நாவல் கதாநாயகனைப்போல் கேட்கப்போகின்றீர்கள். அப்படித்தானே கருணாகரன்?"

இவ்விதம் கேட்டாள்.

கருணாகரன் மெளனமாக இருக்கவே அகிலாதேவி தொடர்ந்தாள்.

"கருணாகரன். என் கதைதான் உங்களுக்குத்தெரியுமே.. எதனை எம் சமுதாயத்தில் புனிதமாகப்பெண்கள் கருதுகின்றார்களோ அதனை இழந்தவள் நான். ஆனால் அதற்காக கருணாகரன் உங்களுக்கு நான் எவ்விதத்திலும் ஏற்றவளில்லை என்று வழக்கமான பல்லவியைப்பாட நான் தயாரில்லை.  உங்களைப்போன்ற ஒருவர்தான் எனக்கு நிச்சயம் ஏற்றவர். உங்களை மணந்து இன்பமாக வாழ வேண்டுமென்று எனக்கும் ஆசைதான். ஆனால் நான் அப்படிச்செய்வதால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள்? முதலாவதாக இக்குடும்பங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவர்களுடன் ஒப்பிடும்போது எம் பிரச்சினைகள் வெகு அற்பமானவை. தற்சமயம் இவர்களை ஆதரிக்க, பராமரிக்க எங்களைப்போன்றவர்கள் நிச்சயம் தேவை இல்லையா?"

"ஏன் அகிலா.. நாம் இணைவதன் மூலம் தொடர்ந்தும் இப்படியே வாழ்வதில் எவ்விதப்பாதிப்பும் ஏற்படப்போவதில்லையே.."

" இல்லை கருணாகரன். நீங்கள் சொல்வது தத்துவத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் நடைமுறைக்கு.. நமக்கிடையில் கணவன், மனைவி என்ற உறவு தற்சமயம் ஏற்படுவது எனது தற்போதைய வேலைகளை நிச்சயம் பாதிக்கும். அல்லது ஒரு நல்ல மனைவியாக இருக்க விடாமல் சூழல் தடுக்கும். இதே சமயம் மாஸ்ட்டரை எடுத்துக்கொள்ளுங்கள். இம்மக்களுக்காக இந்த வயசிலையும் அவர் ஓடித்திரியிறார். அவரைக் கவனிக்க யாரிங்கிருக்கின்றார்கள்? நமது மணவாழ்வு இதனைப்பாதிக்குமென நான் அஞ்சுகின்றேன் கருணாகரன். நாம் இருவருமே தற்சமயம் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம். இருவருமே சேர்ந்துதான் பணியாற்றுகின்றோம். மணம் புரிந்தும் இப்படியே இருப்பதென்றால் மணம் புரிவதன் அர்த்தமென்ன.. இருவரும் கணவன் மனைவியாக இல்லறத்தில் ஈடுபட வேண்டுமென்றால் மாத்திரமே மணம் புரிவதில் அர்த்தமுண்டு. ஆனால் அதற்குத்தற்போதைய சூழலில் என் மனம் இடங்கொடுக்கவில்லை... தொடர்ந்தும் நல்ல நண்பர்களாக  நாமிருவரும் இருப்பதுதான் நம் சமூகத்துக்கும், நாம் பிறந்த மண்ணுக்கும் நாம் செய்யக்கூடிய  கடமையாக நான் கருதுகின்றேன். நிலைமையில் மாற்றம்  ஏற்பட்டு அமைதி திரும்புமென்றால், அச்சந்தர்ப்பத்தில் மணம் செய்வதைப்பற்றிச் சிந்திக்கலாம்."

இவ்விதம் கூறிய அகிலாதேவி தேநீரைப்போட்டு எடுத்துக் கருணாகரனிடம் தந்தாள். இருவரும் கூடத்துக்கு வந்து சாக்குக் கட்டிலில் அமர்ந்து கொண்டார்கள்.

இன்னும் மாஸ்ட்டரைக் காணவில்லை. பிரளயமே வந்து விட்டதைப்போல இயற்கை அன்னைக்கு இன்று என்ன நேர்ந்து விட்டது? இவ்விதம் கொட்டியபடியிருக்கிறாளே?

"அகிலா நீ சொல்வதும் சரியாகத்தானிருக்கின்றது. என்னைப்பொறுத்தவரையில் நான் உன்னையே என் துணையாகத்தேர்ந்து விட்டேன். நிலைமைகள் சீராகும் வரை உனக்காகக் காத்து நிற்பதை நான் பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன். நீ சொல்வதைப்போல் தற்சமயம் நாமிருவரும் நல்ல நண்பர்களாக இருப்பது நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. மாஸ்ட்டருக்கும் நல்லது.."

மாஸ்ட்டர் வரும் வரையில் அகிலாதேவிக்குத் துணையாக இருந்து விட்டுத் திரும்பியபோது மழை இன்னும் விட்டபாடாகவில்லை. கருணாகரனின் சிந்தனைகளோ நாட்டைப்பற்றியும் அகிலாதேவியைப்பற்றியும் , கந்தசாமி 'மாஸ்ட்ட'ரைப் பற்றியுமே வளைய வந்தபடியிருந்தன.

'மாஸ்ட்டரைப் பொறுத்தவரையில் அழகும், அறிவும், பண்பும் கொண்டவர். அவர் வாழ்வு ஏன் வீணாகிப்போனது? அவருக்கேற்ற துணையை அவர் அடைய முடியாமல் போனதற்குக்காரணம் யார்? அவரா? அல்லது அவர் மனைவி சுலோசனாவா? அல்லது அவரது பெற்றோர்களா? அல்லது இவற்றுக்கும் மேலாக அச்சமுதாயத்தில் நிலவிய சூழல்களா?

அகிலாதேவியை எடுத்துக்கொண்டால் அவள் யாருக்கு என்ன தீங்கு செய்தாள்?  கண்ணுங் கருத்துமாகச் சீராட்டி அவளை வளர்த்தாரே தம்பிமுத்து வாத்தியார். அவரது கனவுகள் கலைந்ததற்குக் காரணம் யார்?

யாரும் நெருங்கவே பயப்படும் அகிலாதேவிக்கு இந்நிலை ஏற்படக்காரணம் .. யார்?  இன்று அவள் வாழ வேண்டுமென்று நினைக்கின்றாள்.. அதே சமயம் அவளை வாழ முடியாமல் தடுப்பது எது? யார்/

நான் அகிலாதேவியை மனப்பூர்வமாக விரும்புகின்றேன். அவளும் சம்மதிக்கின்றாள். ஆனால் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே...

இவற்றுக்கெல்லாம் காரணம் யார்? யார்? யார்?

எங்கும் பரந்து , நீண்டு , வியாபித்துக்கிடைக்கின்றது பிரபஞ்சம். கோடானு கோடி கோடானு கோடிகளாகச் சூரியன்களும் , கோள்களுமாக விரிந்து , பரந்து, முடிவற்றுக்கிடக்கின்றது.

அற்பத்திலும் அற்பமான கோளொன்றில் வளைய வரும் அற்பங்களான மனிதர்கள்தாம், நாம் தாம் இவற்றுக்கெல்லாம் காரணம்.

இயற்கையை இழந்து , செயற்கைகளை மேலும் மேலும் உருவாக்கிப் பெரிதாக்கி, பேதங்களௌ உரமாக்கி, எத்தனை பிரிவுகள்? எத்தனை எரிவுகள்?  ஏன்? ஏன்? இவையெல்லாம் ஏன்?

பகுத்தறிவு , ஆறாவது அறிவு இருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொள்கின்றோமே.. அந்த அறிவுக்கு நடந்தது என்ன? எங்கு போயிற்று?

போர்கள்! போர்கள்! போர்கள்!

அழிவுகள்! நாசங்கள்! அதர்மங்கள்! மோதல்கள்! இரத்தக்களரிகள்!

மெல்லிய உணர்வுகள்.. உறவுகள்... கனவுகள்.. எவ்விதம் சிதைந்து விட்டன. கலைக்கப்பட்டன.

போரே! பூமியை நாசப்படுத்தும் போரே!  போய் விடு! போய் விடு!

அமைதிப் புறாக்களே! பறந்து வந்து விடுங்கள்! அன்பு தந்து விடுங்கள்! ஆனந்தம் கொண்டு வாருங்கள்!'

கருணாகரன் வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கின்றான். மழையோ விட்ட பாடாகத்தெரியவில்லை. சுழன்று, சுழன்று வீசும் பேய்க்காற்றும், மின்னலும், இடியும்..

திக்குகள் எட்டும் சிதறி, தக்கத்
தீம்தரிகிட, தீம்தரிகிட, தீம்தரிகிட, - தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து - வெள்ளம்
பாயுது! பாயுது! பாயுது!

[யாவும் கற்பனை]

ngiri2704@rogers.com
*****************

ஒரு பதிவுக்காக: இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவுக்குறுநாவல் போட்டியும், 'போரே நீ போய்விடு' சிறுகதை மற்றும் நாவல் பற்றி...

வீரகேசரி நிறுவனம் ஒருமுறை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக்குறுநாவல் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் 87/88 காலகட்டமென்று  நினைக்கின்றேன். என்னிடம் அது பற்றியுள்ள போட்டோ பிரதியில் திகதி விடுபட்டுப்போயுள்ளதால் அது பற்றி உடனடியாக நிச்சயமாகக்கூற முடியாதுள்ளது.

அதற்குக் கனடாவிலிருந்து நானும் ஒரு கதையினை 'போரே நீ போய் விடு!' என்னும் தலைப்பில் எழுதி அனுப்பியிருந்தேன். வன்னியிலுள்ள அகதிகளுக்குச் சேவை புரிவதற்காகத் தம் வாழ்வினை அர்ப்பணித்த மூவரை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை அது. வாத்தியார் ஒருவர். அவரது மணவாழ்க்கை முறிவுற்று தனிமையில் வாழ்பவர். இளம் பெண் ஆசிரியை ஒருவர். நிலவிய போர்ச்சூழலினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, நிராதரவான நிலையிலிருந்த அவரை அவரது மறைந்த தந்தையாரின் நண்பரான மேற்படி வாத்தியாரே ஆதரித்து, அகதிகளுக்குச் சேவையாற்றும்படியான சூழலை ஏற்படுத்தியிருந்தார். இளைஞரொருவன். அவனும் அகதிகளுக்குச் சேவை புரிவதற்காகத் தன் வாழ்வினை அர்ப்பணித்துச்செயற்படுபவன். ஆசிரியையான அந்தப்பெண்ணோ தன்னை ஆதரித்த ஆசிரியரைத் தன் தந்தையைப்போலெண்ணி வாழ்பவள். அந்த இளைஞன் அவள் மேல் காதலுறுகின்றான். ஆனால் அவளோ தன் மணவாழ்வு அகதிகளுக்குச் சேவை செய்வதிலிருந்து. தந்தையைப்போன்ற ஆசிரியருக்குப் பணிவிடை செய்வதிலிருந்து தன்னைத்தடுத்துவிடுமென்பதைப்பிரதான காரணங்களிலொன்றாகக்கூறி மறுத்து விடுகின்றாள். தொடர்ந்தும் நண்பர்களாக அதே சமயம் தன்னார்வத்தொண்டர்களாக இருப்பதையே அவள் விரும்புகின்றாள். அவனும் ஏற்றுக்கொள்கின்றான். இதுதான் அப்படைப்பின் கதைச்சுருக்கம்.

இப்போட்டியின் முடிவுகளை வெளியிட்ட வீரகேசரி நிறுவனம் முதலில் போட்டி பற்றியும், நடுவர்கள் பற்றியும், போட்டிக்கு வந்த படைப்புகள் பற்றியும் தன் முடிவுகளை வெளியிட்டது. அதன் பின்னர் பரிசு பெற்ற குறுநாவல்களின் விபரங்களை அடுத்த வார வெளியீட்டில் அறிவித்திருந்தது.

மேற்படி போட்டிக்கு நடுவர்களாக இருந்தவர்கள் மூவர். அவர்கள் பற்றிய விபரங்களைப் பின்வருமாறு வீரகேசரி அறிவித்திருந்தது:

"இப்போட்டிக்கு இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் 28 இலக்கிய ஆக்கங்கள் வந்தன. அவற்றினைப் பரிசீலனை செய்து பரிசுக்குரியவற்றினைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை ஈழத்தின் பிரபலமான மூன்று எழுத்தாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். வீரகேசரியின் சார்பில் சிற்பி சரவணபவன் அவர்களும், இலக்கிய வட்டத்தின் சார்பில் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் ஆகிய இருவருமாக மூவரும் நடுவர்களாக அமைந்தனர்.  சிற்பி சரவணபவன் ஈழத்தின் கலைச்செல்வி யுகத்தின் பிதாமகர்.  கலைச்செல்வி என்ற சஞ்சிகை மூலம் ஈழத்திலக்கியத்திற்குப்பெரும் பங்கினை அளித்தவர். இன்றைய பிரபலமான எழுத்தாளர்கள் உருவாவதற்கு ஒருவகையில் காரணமாக இருந்தவர். ஈழத்தின் முன்னணி நாவலாசிரியராக விளங்குபவர் செங்கை ஆழியான்.  சிறுகதை ஆசிரியராகவும், விமர்சகராகவும் செம்பியன் செல்வன் திகழ்கிறார். இம்மூவரும் பரிசுக்குரிய குறுநாவல்களைத்தேர்ந்தெடுத்தனர்.

போட்டிக்கு வந்திருந்த 28 இலக்கிய ஆக்கங்களில்  குறுநாவல் என்ற வரையறைக்குள்  15 ஆக்கங்கள் அமைந்தன.  ஓராக்கம் நாவல் என்ற வரையறைக்குள் அடங்கியது.  12 ஆக்கங்கள் சிறுகதைகளாகக் காணப்பட்டன. பொறுமையாக அவற்றினை நடுவர்கள் ஊன்றிப்படித்தனர்.

குறுநாவல் போட்டிக்கு வந்திருந்த 12 சிறுகதைகளும் சுவையானவை.  கனடாவில் இருந்து என்.கிரிதரன் (போரே நீ போய்விடு), கரவெட்டியில் இருந்து செல்வி நீலாம்பிகை கந்தப்பு (சுமைதாங்கி), குடத்தனையிலிருந்து செல்வி தயாளினி தர்மலிங்கம் (அமாவாசை இருட்டிலே...), கோப்பாயிலிருந்து மதிவண்ணன் (உயிரின் பெறுமதி), யாழ்ப்பாணத்திலிருந்து தி.ஞானேஸ்வரன் (பெண்மையே என்னைக்கொல்லாதே...), கொழும்பிலிருந்து ஆர்.கே.கெளரி (மீண்டும் அவன் அனாதையாகின்றான்), திருகோணமலையிலிருந்து யசோதரா ஏகாம்பரம் (கறை படிந்த உறவுகள்), பொத்துவிலிருந்து  செல்வி சுமதி கனகரத்தினம் (அறியாமையின் தண்டனை), கொழும்பிலிருந்து ந.பாலமுரளி (வயல் காணி), பனாகொடையிலிருந்து பி.நிர்மலாதேவி (அதிஷ்ட்டப்பெண்), வரணியிலிருந்து வி.நவரத்தினம் (குமுதாவின் குடும்பம்), கரவெட்டியிலிருந்து ந.பார்த்திபன் (வைராக்கியம்) ஆகியோர் சிறுகதைகளை அனுப்பியிருந்தனர். இவற்றில் பின்வரும் சிறுகதைகளை வீரகேசரியில் பிரசுரமாகத் தகுதியானவையென நடுவர்கள் விதந்துரைத்துள்ளனர்.

1. போரே நீ போய்விடு - என்.கிரிதரன்
2. சுமைதாங்கி - நீலாம்பிகை கந்தப்பு.
3. உயிரின் பெறுமதி - து.மதிவண்ணன்
4. மீண்டும் அவன் அனாதையாகின்றான் - ஆர்.கே.கெளரி

எமக்குக் கிடைத்த 28 இலக்கிய ஆக்கங்களில் ஒன்று நாவல் வரையறைக்குள் அடங்கியது என்றோமா? கொழும்பைச்சேர்ந்த சோ.ராமேஸ்வரன் எழுதி அனுப்பிய 'நிழல் கீற்று' அதுவாகும்."

இவ்விதம் வீரகேசரி வெளியிட்டிருந்த போட்டி முடிவுகள் பற்றிய அறிவித்தலில் குறிப்பிட்டிருந்தது. குறுநாவல்களின் பட்டியல் வருமாறு:

1. நிதர்சனங்களும், முரண்பாடுகளும் - கொடிகாமம் வளவை வளவன்
2. விழுதுகள் - ஜனமகள் சிவரஞ்சனி (சுன்னாகம்)
3. விழுதிழந்த ஆலமரம் - சி.துளசி (கல்முனை)
4. வீதியெல்லாம் தோரணங்கள் - தாமரைச்செல்வி (பரந்தன்)
5. படிப்பும், பயணங்களும் - இ.ரிஷிப்ரபஞ்சன்
6.  நிம்மதியைத்தேடொ - செ.குணரத்டினம் (மட்டக்களப்பு)
7. வேலிகளைத்தாண்டும் கதியால்கள் - பரந்தன் இராஜ தர்மராஜா
8. ஆசைய்ன் மறுபக்கம் - திமிலை மகாலிங்கம் (மட்டக்களப்பு)
9. ஒரு சமூகத்தொண்டன் விடைபெறுகின்றான் - சாமி மலையைச்சேர்ந்த எம்.மகேந்திரன்
10. இலட்சியத்தாய் - திருமதி கு.கமலாம்பிகை (மன்னார்)
11. அணை கடந்த பின் - பா.கலா (திக்கம்)
12. ஏழை பாமரருக்கு இவ்வுலகில் ஏதுமில்லை - யதார்த்தன் (பருத்தித்துறை)
13. அஞ்ஞாத வாசம் - முகில்வாணன் (கல்முனை)

இவை தவிர மேலுமிருவரின் பெயர்கள் 'காத்தான்குடியைச் (.. சுவடு) கோப்பாயைச்சேர்ந்த ஆர்.ராஜமனோகரன் , ஆர்.ராஜமகேந்திரன் (விடியும் பொழுது வரும்)' என்று குழப்பகரமாகப்பிரசுரமாகியுள்ளன.

இவற்றிலிருந்து பரிசுக்குரிய குறுநாவல்களின் விபரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படுமென்று அறிவித்திருக்கின்றார்கள். அந்த விபரங்கள் என்னிடமில்லை. ஆனால் தாமரைச்செல்வியின் குறுநாவலான வீதியெல்லாம் தோரணங்கள் முதற் பரிசினைப்பெற்றிருக்க வேண்டுமென்று ஞாபகம்..

எனக்கு வீரகேசரி நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது அக்காலகட்டத்தில் மிகுந்த வியப்பினையும், மகிழ்ச்சியினையும் தந்தது. குறுநாவல் போட்டிக்கு வந்த படைப்புகளில் குறுநாவல்களை மட்டுமே கவனத்திலெடுத்துக்கொண்டு, ஏனையவற்றைத் தட்டிக்கழித்திருக்கலாம். ஆனால் வீரகேசரி நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. மூன்று நடுவர்களும் வந்திருந்த அனைத்துப் படைப்புகளையும் பொறுமையாக வாசித்தார்கள். வாசித்ததுடன் வந்திருந்த சிறுகதைகளுள் , பிரசுரிப்பதற்குகந்ததாக நான்கு சிறுகதைகளையும் விதந்துரைத்திருந்தார்கள்.

மேற்படி நான்கு சிறுகதைகளும் வீரகேசரியில் பின்னர் பிரசுரமாயினவோ , இல்லையோ எனக்குத்தெரியாது. ஆனால் இவ்விதம் குறுநாவல் போட்டிக்கு வந்திருந்த சிறுகதைகளையும் படித்து, பிரசுரிப்பதற்காக விதந்துரைத்த நடுவர்களும், அதனைப்பிரசுரித்த வீரகேசரி நிறுவனமும் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவை. உலகிலேயே இவ்விதமாக நடந்திருப்பது இதுவே முதல் தடவையாகக்கூட இருக்கலாம்.

மேற்படி போட்டிக்கு நடுவர்களாக இருந்த செங்கை ஆழியான் பல வருடங்களுக்குப்ப்பின்னர் 'போரே நீ போய்விடு' என்றொரு நாவலை எழுதினார்.அதுபற்றித் தனது 'நானும் எனது நாவல்களும்' என்னும் நூலில் பின்வருமாறு கூறுவார்: 'சமகால வாழ்வியல் துயரங்களை வைத்து நான் எழுதிய இன்னொரு நாவல் "போரே நீ போய்விடு".  ஏற்கனவே ஹெமிங்வேயின் Farewel to Arms என்ற நாவல் இத்தலைப்பில் வெளிவந்துள்ள போதிலும், இத்தலைப்பே எனது நாவலிற்கும் பொருத்தமாகப்பட்டது.'

Farewel to Arms  என்னும் சொற்தொடரின் அர்த்தத்தை ஓரளவுக்குக்கொண்டதாக 'போரே நீ போய்விடு' என்னும் சொற்தொடர் இருந்த போதிலும், நேரடி மொழிபெயர்ப்பாகக்கொள்ள முடியாது. மேற்படி 'போரே நீ போய்விடு' பெயரில் எனது சிறுகதையொன்று இரசிகமணி கனக செந்திநாதன் குறுநாவல் போட்டிக்கு அனுப்பப்பட்டதும், அதனைப்பிரசுரிப்பதற்காகத் தெரிவு செய்த நடுவர்களில்  ஒருவராக எழுத்தாளர் செங்கை ஆழியான் இருந்ததும் ஹெமிங்வேயின் நாவலின் தலைப்பு அவரது நாவலுக்குக் காரணமாக இருந்ததைவிடக்  கூடுதலான காரணமாக இருந்திருக்கக்கூடுமோ என்றெனக்குப்படுகிறது.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்