Monday, February 19, 2018

அணிந்துரை: எழுத்தாளர் பொன் குலேந்திரனின் அறிவியற் புனைவுகள் பற்றி.... வ.ந.கிரிதரன் -

பொன் குலேந்திரனின் 'காலம்'  தொகுப்பு
- தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் பொன் குலேந்திரனின் 'காலம்' (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக நான் எழுதிய அணிந்துரை இது. -

அறிவியல் புனைகதை (Science Fiction)  என்றால் அறியப்பட்ட அறிவியல் தகவல்கள் ,  உண்மைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அல்லது சம காலத்தில் நடக்க் இருப்பதை எதிர்வு கூறி, அதனடிப்படையில் படைக்கப்படும் புனைவு என்றுதான் பொதுவாக அறியப்பட்டுள்ளது. விண்வெளிப்பயணங்கள், ஏனைய கிரக உயிரினங்கள், பிரம்மாண்டமான விண்வெளித்தொலைவுகளைக் கடப்பதற்கான வழிவகைகள், புதிர் நிறைந்த விண்வெளி அதிசயங்கள் (கருந்துளைகள் போன்ற) , பல்பரிமாண உயிரினங்கள், மானுடரின் எதிர்கால நிலை, நமது பூமியின் எதிர்கால நிலை, இவ்விதமான விடயங்களைக் கருப்பொருளாகக்கொண்டு படைக்கப்படும் புனைகதைகளையே அறிவியல் புனைகதைகள் என்போம். சமகால அறிவியல் உண்மைகளை விபரித்தலைக் கருப்பொருளாகக் கொண்ட புனைகதைகளை அவ்வகையான புனைகதைகளாகக் கருதுவதில்லை. ஆனால் அறிவியல் விடயங்களை மையமாக வைத்துப் புனையப்பட்டவையாதலால் அவையும் அறிவியல் புனைகதைகளே என்று அத்தகைய புனைகதைகளைப் படைத்த எழுத்தாளர் ஒருவர் வாதாடினால் அவருடைய தர்க்கத்தையும் மறுப்பதற்கில்லை. அவ்வகையில் பொன் குலேந்திரன் அவர்களின் இத்தொகுதியிலுள்ள புனைகதைகளையும் அறிவியல் கதைகளாகக் கொண்டு இத்தொகுதிக்கதைகளைபற்றிச் சிறிது நோக்குவோம்.

பொன் குலேந்திரன் அவர்கள்  ஒரு பௌதிகவியல் பட்டதாரி. அத்துடன் தொலை தொடர்புப் பொறியியலாளரும் கூட. அவரது பரந்த அறிவியல் உண்மைகளைப்பற்றிய அறிவு பிரமிக்க வைக்கின்றது. அவரது பன்முகப்பட்ட சுய தேடலை, சுய வாசிப்பை அது வெளிப்படுத்துகின்றது. தான் அறிந்ததை, உணர்ந்ததை சிறு சிறு கதைகளாக அழகாகப்புனைந்துள்ளார் அவர். அது அவரது எழுத்துத்திறனைப் புலப்படுத்துகின்றது.

இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளைப்பொறுத்தவரையில் மூன்று வகையான பிரதான பண்புகளை அவதானிக்க முடிகின்றது. முதலாவது வகைப்புனைகதைகள் பொதுவாக அறிவியல் கதைகள் என்று கூறப்படும் கதைகள்.  அடுத்தவகைப்பண்பாக சமகால அறிவியல் உண்மைகளை விபரிக்கும் கதைகள். மூன்றாவது வகைப்பண்பாக ஆசிரியரின் மத மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை ஆங்காங்கே வெளிப்படுத்தும் கதைகள். இவ்விதமாக முப்பண்புகளை வெளிப்படுத்தும் கதைகளில் பல ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.
குலேந்திரன் அவர்களின் முன்னுரையில் அவர் கூறியிருப்பதும் மேற்படி என் அவதானம் சரியென்பதையே எடுத்துக்காட்டுகின்றது. "இத்தொகுப்பில் உள்ள கதைகள் பல விஞ்ஞான தத்துவங்களையும் ஆராச்சிகளையும் கருவாகக் கொண்டவை." என்றும் "மூடநம்பிகைகளுக்கு அறிவியல் விளக்கம் கொடுகிறது கதைகள் 19, ,20" என்றும் அவர் குறிப்பிடுவதையே குறிப்பிடுகின்றேன்.

தொகுப்பின் முதலாவது கதையான 'காலம்' கருந்துளைக்கான பயணத்தைப்பற்றிக் கூறும் கதை. அப்பயணத்தினூடு கருந்துளைகள் பற்றிய தகவல்களையும் கதை உள்ளடக்கியுள்ளது.  கருந்துளைக்குக்குப் பயணிப்பதைப்பற்றிய கனவினை உள்ளடக்கிய கதை. கருந்துளை பற்றி , அவை எவ்வாறு உருவாகுகின்றன என்பது பற்றியெல்லாம் தகவல்களைத் தநதாலும் , கதையிலுள்ளதைப்போல் கருந்துளைக்கு அருகில் பயணிக்க முடியாது.  கருந்துளை ஒரு கிரகம் அல்ல. அது ஈர்ப்புச் சக்தி மிகவும் அதிகமான 'காலவெளி'ப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. கடும் ஈர்ப்பு விசை காரணமாக அதனை அண்மிக்கும் அனைத்துமே ஓவ்வொரு பக்கம் இழுபட்டு உருக்குலைந்து இல்லாமலாகி விடும். ஆனால் இக்கதை சிறுவன் ஒருவனின் கனவின் விபரிப்பால் நடைபெறுவதால் கனவில் இவையெல்லாம் சாத்தியம் தானே என்று ஆசிரியர் கூறி விளக்கமளிக்கலாம். அவ்விதமளித்தால் நாமும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் கனவுகளில் நிஜ வாழ்வில் நடக்க முடியாத சம்பவங்கள் தோன்றுவதொன்றும் அதிசயமல்லவே. ஆனால் அச்சிறுவனின் கருந்துளைக்கான அக்கனவுப்பயணம் , நடைமுறைச்சிக்கல்களைத்தீர்த்து இன்னுமொரு வழியில் கருந்துளைகளுக்கான பயணங்களை எதிர்காலத்தில் நிஜமாக்கிட எதிர்வு கூறுமொரு தீர்க்கதரிசனமாகக் கருதலாம். நேற்றைய கனவுகள் இன்றைய சாதனைகளல்லவா.

இக்கதை ஆசிரியரின் பாரம்பரிய விடயங்களிலான நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துகின்றது. மகன் தந்தையிடன் தனது விண்வெளிப்பயணக் கனவு சாத்தியமாகுமா என்று கேட்கின்றான். அதற்குத் தந்தை 'அகஸ்தியா. உன் கனவு நனவாகுமா என்பதை நாம் நாடி சாஸ்திரக்காரனிடம் கேட்டு விடுவோமே' என்று பதிலிறுக்கின்றார்.

இக்கதையை இத்தொகுப்பின் மாதிரிக் கதைகளிலொன்றாகக் குறிப்பிடலாம். பொதுவான அறிவியல் கதைகளிலுள்ளதைப்போல் விண்வெளிப்பயணத்தைப்பற்றி பேசுகின்றது. அதுவும் கருந்துளைக்கான விண்வெளிப்பயணத்தைப்பற்றி. அடுத்தது இக்கதை கருந்துளைகள் பற்றிய அறிவியல் தகவல்களை வழங்குகின்றது. அடுத்தது இக்கதை ஆசிரியரின் நாடி சாத்திரம் போன்றவற்றிலுள்ள ஈடிபாட்டினையும் வெளிப்படுத்துகின்றது.  ஆரம்பத்தில் குறிப்பிட்ட மூன்று வகையான பண்புகளையும் இக்கதை வெளிப்படுத்துவதாலேயே தொகுப்பின் மாதிரிக்கதைகளிலொன்றாக இதனைக் குறிப்பிட்டேன்.

பொதுவாக அறிவியல் புனைகதைகள் என்னும் நோக்கில் புனையப்பட்ட கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதையாக 'விநோதன்' கதையினைக் குறிப்பிடுவேன்.  விநோதன் தொகுப்பின் மிகச்சிறந்த அறிவியற் கதையென்பேன். படைப்புத்திறனும் மிக்க சிறப்பான அறிவியல் கதையாக இதனைக் கூறுவேன். கதை இதுதான்: கிறிஸ்தவனான ஜெயன் வானியற்பியல் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்ற அறிவியல் அறிஞன். வேற்றுலகத்து உயிரினங்கள் பற்றிய ஆய்வில் மூழ்கியிருப்பவன். அவனது மனைவி ஓர் இந்து. திறமையான 'புறோகிறாமர்'. வேற்றுலகங்களிலிருந்து வரும் சமிக்ஞைகளைப் பகுத்தாராய்ந்திடக்கூடிய 'புறோகிறா'மொன்றினை எழுதியவள். அவர்களிருவரும் மணம் புரிந்து கலிபோர்னியாவில் வாழ்ந்து வருபவர்கள். அவர்களுக்குப் பிறக்கும் மகன் விநோதமான தோற்றம் மிக்கவன். குட்டையான கால், கைகளுள்ளவன். பெரிய விழிகள், அகலமான நெற்றி, கூர்மையான காதுகள், குறைந்த தலைமயிர்,  முதிர்ச்சியான முகவாகு என விநோதமான தோற்றமுள்ளவன். பிறந்தபோது சில மணி நேரம் அழாத குழந்தை அவன். ஆனால் அவனது மூளை மட்டும் அபரிதமான வளர்ச்சியடைந்திருந்தது. ஒருமுறை தாய் வேற்றுலகச் சமிக்ஞைகளைப் பகுத்தாரய்வதற்காக எழுதிய 'புறோகிறாம்' வேலை செய்யவில்லை. அதனைத்திருத்தி வேலை செய்யுமாறு செய்கின்றான் இந்த விநோதமானவன். அதனைக்கொண்டு சமிக்ஞயொன்றினை வாசித்தபோது ஜெயனும், லக்சுமியும் திகைத்தே போனார்கள்.அதுதான் இக்கதையின் முடிவும் கூட. அச்சமிக்ஞையில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:

"'உங்கள் ஆராச்சிக்கு உதவ ஒருவனை உலகுக்கு அனுப்பியுள்ளோம்;. கொஞ்சம் பொறுங்கள். இன்னும் சில மாதங்களில் அவன் உதவியுடன் எம்முடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்' என்றது செய்தி.". அப்படியானால் அந்த விநோதமான குழந்தை வேற்றுலக வாசிகளால் பூமிக்கு அனுப்பப்பட்ட குழந்தையா? ஆம் விநோதன் வேற்றுலக வாசிகள்  பூமிக்கு அனுப்பிய குழந்தையேதான்.

இச்சிறுகதை சிறந்த அறிவியல் புனைகதை. நன்கு திட்டமிட்ட, சிந்தைக்கினிக்கக்கூடிய கற்பனை. அந்தக் கற்பனை ஆசிரியரின் படைப்புத்திறனைப் புலப்படுத்துகின்றது. படைப்புத்திறன் மிக்க இது போன்ற அறிவியல் புனைவுகளையே நூலாசிரியர் பொன். குலேந்திரனிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கின்றேன். நல்லதோர் அறிவியற் புனைவுக்கு மாதிரியாகத் தொகுப்பிலுள்ள சிறந்த கதையாக இதனையே எவ்விதத்தயக்கமுமில்லாமல் அடித்துக் கூறுவேன்.

இன்னுமொரு கதையான 'சக்தி மாற்றம்' கதையும் கவனத்தை ஈர்க்குமொரு கதை. இக்கதையின் பிரதான பாத்திரமான இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற விஸ்வா பற்றி நூலில் இவ்விதம் விபரிக்கப்பட்டுள்ளது:

"விஸ்வா பௌதிகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சக்தி மாற்றத்தைப்பற்றி ஆராச்சி செய்தவர். அறிவியலில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் ஈடுபாடுள்ளவர். உயிர் வாழும் எந்த ஜீவனுக்கும் உடல், ஆன்மா என்பது இரு முக்கிய அம்சங்களாகும். உடல். அழிந்தாலும் ஆன்மா அழியாது. ஊடலானது இறப்பின் போது செயல் இழந்துவிடுகிறது. ஆனால் ஆன்மா என்ற சக்தியானது, சக்தி மாற்றத்தினால் மறுபிறவி மூலம் வேறு புது உடலுக்குள் புகுந்துவிடுகிறது. இந்தத் தத்துவத்தை  கருவாகக் கொண்டே அவரது ஆராச்சியிருந்தது."

சக்தி மாற்றத்தைப்பற்றிக் குறிப்பிடுகையில் ஆசிரியர் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சூத்திரமான  E=M.C.C பற்றிக்குறிப்பிடுகையில் "இதன் படி ஒவ்வொரு பொருளோடு தொடர்புள்ள சக்தியுண்டு. சக்தியில் மாற்றம் ஏற்படும் போது திடப்பொருள் மாறுகிறது. ஓவ்வொரு பொளுக்கும் சக்தியோடு இணைந்த இயற்கையான அலை அதிர்வுண்டு.: என்று கூறுகின்றார். நானறிந்த வரையில் மேற்படி சூத்திரம் பொருளின் உள்ளிருக்கும் சக்தியை அப்பொருளை அழித்து உருவாக்குவதைப்பற்றிக் கூறுகின்றது. ஆனால் ஆசிரியர் குறிப்பிடும் உடல் என்பதும் ஆத்மா என்பதும் வேறு வேறானவை. உடல் அழிந்தாலும், ஆன்மா அழியாது. ஆனால் ஐன்ஸ்டைனின் சூத்திரம் பொருளை அழித்துப்பெறும் சக்தியைபற்றிக் கூறுகின்றது. இக்கதை கூறும் விடயமும் சுவாரசியமானது. இறந்த பூனையொன்றின் உடலுக்குள் எலியொன்றின் உயிர்ச்சக்தியைச் செலுத்தியபோது, உயிர்த்தெழும் பூனையானது பூனையில் இயல்புகளுடனேயே செயற்படுகின்றது. எலியின் இயல்புகளுடன் அல்ல. இச்சிறுகதையில் சித்தர்களின் அறிவியல் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து மதக்கோட்பாடுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இக்கதை பூரணமான அறிவியற் கதையென்னும் வரைவிலக்கணத்துக்குள் வருவதைத்தடுத்து விடுகின்றது. இருந்தாலும் இதுவும் இத்தொகுப்பில் காணப்படும் மூவகைப் பண்புகளையும் பிரதிபலிக்கும் புனைகதையாகக் குறிப்பிடலாம். கூடவே ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் கதையாகவும் குறிப்பிடலாம். எலியின் உயிர்ச்சக்தி பூனையின் உடலுக்குள் சென்றதும் பூனையின் இயல்புடன் செயற்படுகின்றது என்னும் ஆசிரியரின் கற்பனை உண்மையில் கதையின் படைப்புத்திறனை வெளிப்படுத்துகின்றது.

தொகுப்பிலுள்ள இன்னுமொரு கதை 'மலடி' . தேவனும் அபிராமியும் கணவன் மனைவி. அவர்களுக்குக் குழந்தையில்லை. உண்மைக்காரணம் கண்வன் தேவனிலுள்ள குறைபாடே. அவனது விந்து குழந்தைகள் உருவாவதற்கான சக்தியை இழந்து விட்டது. தேவனின் நண்பன் டாக்டர் சந்திரன் புகழ்பெற்ற மகப்பெற்று வைத்தியன். அவன் இதற்கு ஒரு வழி சொல்கின்றான். அதன்படி இன்னுமொருவரின் யாரென்று அறியாத ஒருவரின் விந்தினை அபிராமியின் கருப்பையில் செலுத்துவதன் மூலம் குழந்தையை உருவாக்கலாம் என்னும் நவீனத்தொழில் நுட்பத்தினைப் பாவித்து அவர்களுக்குக் குழந்தையை வழங்க முடியுமென்கின்றான். கணவன் மனைவி இருவரும் அதற்கு சம்மதிக்கின்றனர். அவ்விதமான கருக்கட்டல் மூலம் அபிராமி குழந்தை பெறுகின்றாள். கர்ப்பமாகவிருந்த தன் காதல் மனைவியை ஏற்கனவே இழந்தவன் டாக்டர் சந்திரன். அவன் தன் சொத்துக்களையெல்லாம் அந்தக் குழந்தைக்கு எழுதி வைத்து விட்டுச் செல்வதுடன் கதை முடிகின்றது. அந்தக் குழந்தைக்குரிய விந்தை வழங்கியவன் அவனே என மறைமுகமாக ஆசிரியர் எடுத்துக்கூறி அதனை வாசகரின் கற்பனைக்கே விட்டு விடுகின்றார். இதுவும் ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் சிறுகதை. இக்கதை குழந்தை பெறுவது சம்பந்தமாக நடைமுறையிலிருக்கும் அறிவியல் உண்மையினை வெளிப்படுத்தும் கதை,  ஆனால் வழமையான அறிவியல் கதை என்னும் அர்த்தத்தில்ல. அறிவியல் தகவலை எடுத்துக்கூறும் கதையென்பதற்கு அப்பால் இது நல்லதொரு சிறுகதை.

'வைரஸ்' என்றொரு கதை. நிறுவனத்தில் கணினியிலுள்ள 'வைர'ஸை அழிப்பதில் வெற்றியடைந்த கதையின் நாயகன் ஆஸ்பத்திரியில் நிஜ 'வைரஸா'ல் பீடிக்கப்பட்டிருக்கும் தந்தையைக் கடவுள் துணையுடன் காக்கச் செல்வதாக முடிகின்றது. அறிவியல் கதையின் முடிவில் இவ்விதம் கடவுள் நம்பிக்கையுடன் முடிவது சற்று நெருடலாகவுள்ளது. ஆனால் இவ்விதம் விஞ்ஞானத்துடன் மெய்ஞானத்து ஈடுபாட்டையும் தன் அறிவியல் கதைகளில் வெளிப்படுத்துவது எழுத்தாளர் குலேந்திரனின் இயல்பாக இருப்பதைத் தொகுதியின் ஏனைய கதைகள் பலவும் வெளிப்படுத்துவதால் ஆச்சரியத்தைத் தரவில்லை.

'அல்செய்மார் ஆராச்சி' என்னும் கதை ஸ்டெம்செல் மாற்று மருத்துவச்சிகிச்சை மூலம் அல்செய்மார் நோயினை நீக்குவது பற்றி எடுத்துரைக்கின்றது. 'மனஇறுக்கம்' என்னுமொரு கதையில் இவ்விதக் குறைபாடால்  பாதிக்கப்பட்ட சிறுவனொருவன் இசைத்துறையில் மிகுந்த திறமையுள்ளவனாக விளங்குகின்றான். ஒலி அலைகள் மூலம் எதிர்காலத்தில் இந்நோயைத்தீர்க்க முடியுமா என்று இக்கதை ஆராய்கிறது. 'தோட்டா' என்னும் கதை சுடப்படும் ஒருவரை 48 மணி நேரம் உறைய வைக்கும் துப்பாக்கித்தோட்டாவின் கண்டுபிடிப்பைப் பற்றியும், தமிழரின் ஆயுதப்போராட்டத்தில்  போர்க்களமொன்றில் அதன் பாவிப்பையும் பற்றிக் கற்பனையையோட்டுகின்றது. 'கிரகவாசி' என்னும் கதை இந்து மதம், கைலை மலையின் சிறப்புகள், இந்து மதம் போன்றவை வேற்றினக் கிரக வாசிகளின் விளையாட்டோ என்று சிந்தனையை வித்தியாசமான கோணத்திலோட்டுகின்றது. இவ்விதமான வித்தியாசமான ஆசிரியரின் கற்பனை வியக்க வைக்கின்றது. இக்கற்பனைகளை இன்னும் சிறிது விரிவாக அறிவியற் பார்வையில் அணுகிக் கதைகளை உருவாக்கியிருக்கலாமோ என்றொரு எண்ணமும் ஏற்படுவதைத்தவிர்க்க முடியவில்லை.

பல கதைகளில் ஆசிரியர் கதாபாத்திரங்களை ஆரம்பத்தில் அறிமுகம் செய்கின்றதை அவதானிக்க முடிகின்றது. ஒரு கதையில் அவ்விதமிருக்கலாம். பல கதைகளில் அவ்வாறிருக்கத்தேவையில்லை. கதைகளினூடு கதாபாத்திரங்களின் பின்னணியைப்புரிந்துகொள்ளும் வகையில் கதைகளை அமைப்பதே நல்லதென்பதென் எண்ணம். கதாசிரியர் எதிர்காலத்தில் இதனைக் கவனத்திலெடுப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

கிரகணம், கொல்லி வாய்ப் பிசாசு , தூமகேது போன்ற,  கதைகள் அறிவியல்ரீதியில் நிலவும் மூடநம்பிக்கைகளை அணுகுகின்றன. விளக்கமும் தருகின்றன. கொல்லி வாய்ப் பிசாசு கதையில் கொல்லி வாயுப் பிசாசு என்பதையும் விளக்கத்துடன் சேர்த்திருக்கலாம். கொல்லி வாயுப் பிசாசே மருவி கொல்லி வாய்ப்பிசாசாக வந்திருக்க வேண்டும். கிரகணத்தில் அமாவாசை நேரத்தில் பிறந்த மகனுக்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்ற சோதிடர்களின் ஆலோசனையை முற்போக்குச் சிந்தனைகள் மிக்க மனைவியின் ஆலோசனைக்கேற்பப் புறக்கணிக்கின்றார் இரத்தினக்கல் வியாபாரியான சின்னத்தம்பி. பரிகாரம் செய்யாததால் மகனுக்கு எதுவும் ஆகவில்லையென்றும், இரத்தினக்கல் வியாபாரத்தில் அவனுக்கு நன்மையே கிட்டுகின்றது என்னும் வகையில் கதை முடிகின்றது. தூமகேது கதையில் தற்செயலாக நடைபெறும் காட்டுத்தீ மக்களின் தூமகேது பற்றிய நம்பிக்கையை வலுப்படுத்துகின்றது என்றாலும் அது உண்மையல்ல என்பதை வாசகர்களுக்கு உணர்த்தும் வகையில் அறிவியல் விளக்கத்துடன் கதையை முடிக்கின்றார் ஆசிரியர்.

மொத்தத்தில் படைப்புத்திறன் மிக்க கற்பனைகளுடன் ஆசிரியர் கதைகள் பலவற்றை ஆசிரியர் படைத்திருந்த போதிலும் தேவைக்கு அதிகமாக ஆன்மிகத்தை அறிவியலுக்குள் புகுத்தி விட்டாரோ என்றொரு எண்ணமும் கூடவே தோன்றுவதைத்தவிர்க்க முடியவில்லை. அறிவியல் கதைகளில் ஆன்மீகத்தைக் கலப்பதாகவிருந்தால் தொட்டுக்கொள்ளப் பாவிக்கும் ஊறுகாயைப்போல் பாவிப்பதுடன் , அப்பாவிப்பு அறிவியல்ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் வகையில் , வெறும் ஆய்வுகளற்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் அல்லாமல் இருப்பது அவசியம் . இத்தொகுப்பிலுள்ள சில கதைகள் ஆசிரியரின் மத, பார்ம்பரிய நம்பிக்கைகளின் பாதிப்பினை வெளிப்படுத்தினாலும் கொல்லி வாய்ப்பிசாசு , தூமகேது போன்ற கதைகளில் மூட நம்பிக்கைகளுக்கெதிராக அறிவியல்ரீதியிலான அணுகுமுறையினையும் ஆசிரியர் கையாண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. வரவேற்கத்தக்கது. இதனையும் ஆசிரியர் கவனத்திலெடுத்து இன்னும்  சிறப்பான கதைகளை எதிர்காலத்தில் தருவாரென்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவ்வளவுக்கு அறிவியல் தகவல்கள் , வித்தியாசமான அறிவியல் கற்பனைகள், கனவுகள் எல்லாம் நிறைந்திருக்கும் கதைகளைக்கொண்டதாகத்  தொகுப்பு இருக்கின்றது. இன்னுமொன்றினையும் தொகுப்பிலுள்ள கதைகள் வெளிப்படுத்துகின்றன. அது ஆசிரியரின் சுவையான மொழிப்பிரயோகம். கதைகளைச் சரளமாகச் சுவையாகக்கூறிச்செல்கின்றார். இது வாசகர்களைக் கதைகளுடன் ஒனறிணைந்து பயணிப்பதை இலகுவாக்குகின்றது. மொத்தத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப்போல் தொகுப்பின் கதைகள் மூவகைப் பண்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதுடன் சிந்தனையையும் தூண்டும் வகையிலும் அமைந்திருக்கின்றன. கூடவே படைப்புத்திறனை வெளிப்படுத்துவனவாகவுமுள்ளன. வாழ்த்துகள்.

ngiri2704@rogers.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்