Wednesday, February 21, 2018

தேவன் (யாழ்ப்பாணம்)! - வ.ந.கிரிதரன்

[ யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தின் வருடாந்தக் கலைவிழாவான 'கலையரசி 2015' நிகழ்வினையொட்டி வெளியான 'கலையரசி' மலரில் வெளியான தேவன் (யாழ்ப்பாணம்) பற்றிய சுருக்கமான கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம். - வ.ந.கி]

ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்றில் யாழ் இந்துக்கல்லூரியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் தொடக்கம் ஆசிரியர்கள் வரை பலர் ஈழத்துத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். இது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். அந்த வகையில் யாழ் இந்துக்கல்லூரியின் ஆசிரியரான தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு பற்றிச் சுருக்கமாக ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

தேவன் - யாழ்ப்பாணம் மிகச் சிறந்த பேச்சாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு பேசும் ஆற்றல் வாய்த்தவர். இதனால் அன்றைய காலகட்டத்தில் யாழ்நகரில் நடைபெற்ற கலை, இலக்கிய நிகழ்வுகளில் , அந்நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கும் பிரதான தொகுப்பாளராக அப்பொழுது அவர் அனைவராலும் அழைக்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

இது தவிர தேவன் - யாழ்ப்பாணம் என்றால் உடனே ஞாபகம் வருவது அவரது புகழ்பெற்ற 'ஸ்கோடா' (Skoda) மோட்டார் வாகனமாகும். அதன் காரணமாக அன்றைய காலகட்டத்து மாணவர்களால் அவர் 'ஸ்கோடா' என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்டதும் நினைவுக்கு வருகின்றது. அந்தக் கண்ணாடி அணிந்த முகமும், அந்த 'ஸ்கோடா' மோட்டார் வாகனமும் இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் 1924இல் பிறந்த இளையப்பா மகாதேவன் தன் புனைபெயராக தேவன் என்று வைத்துக் கொண்டார். தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் முதலாவது நினைவு மலரில் தேரடியான் என்னும் பெயரில் தேவன் அவர்களின் தமையனாரான இளையப்பா தர்மலிங்கம் அவர்கள் கட்டுரையொன்று எழுதியிருக்கின்றார். அது  தேவன் அவர்களின் பெயருக்கான காரணங்கள் பற்றிய மேலதிகத் தகவல்களை வழங்குகின்றது. [இது பற்றிய தகவல்களை வழங்கிய என் முகநூல் நண்பர்களில் ஒருவராகிய திருமலை மூர்த்தி அவர்களுக்கு நன்றி.] தேவன் அவர்களது பெற்றோர் சேர். அ. மகாதேவா அவர்கள் மேல் மதிப்பு வைத்திருந்தார்கள். அதன் காரணமாக தேவன் அவர்களுக்கு மகாதேவா என்னும் பெயர் அவர் பிறப்பின்போது வைக்கப்பட்டது. அப்பெயர் அவரது பாட்டியால் சுருக்கி 'தேவு' என்று அழைக்கப்பட்டது. 'துப்பறியும் சாம்பு' புகழ்  'ஆனந்த விகடன் தேவன்' மேல் மதிப்பு வைத்திருந்த தேவன் , அவருக்கே கடிதம் எழுதி, அவரது ஆசியுடன் 'தேவன்' என்னும் பெயரினைப் பாவிக்கத்தொடங்கினார். தேவன் இந்தியாவிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்காக தேவன் - யாழ்ப்பாணம் என்று தன் புனைபெயரை வைத்துக்கொண்டார் தேவன் அவர்கள்.


தேவன் - யாழ்ப்பாணம் அவர்களொரு எழுத்தாளராக உருவாவதற்கு அவரது அம்மாவின் பங்களிப்பு முக்கியமானது. அதனை அவரே 'வானவெளியிலே' என்னும் அவரது வானியல் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய நூலுக்கான சமர்ப்பணத்தில் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீ சண்முகநாதன் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியான இந்நூலினை தேவன் அவர்கள் தனது தாயாருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

தேவன் (யாழ்ப்பாணம்) சிறுகதைகள்
எழுத்தாளர் தேவன் (யாழ்ப்பாணம்) எழுதிய 'மனச்சாட்சியின் தண்டனை', 'நேர்வழி', 'மாமி', 'இருதார மணம்' போன்றஅவரது சிறுகதைகள் வெளிவந்த இதழ்கள், பத்திரிகைகள் பற்றி விரிவானதொரு தேடலைச் செய்ய வேண்டிய நிலையிலிருக்கின்றோம். அண்மையில் எஸ்.பொ.வின் மித்ர பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட காந்தீயக் கதைகள் சிறுகதைத் தொகுதியிலும் தேவன்-யாழ்ப்பாணம் அவர்களின் சிறுகதையும் பிரசுரமாகியுள்ளது. மேற்படி தொகுதியானது 1969இல் காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி இலங்கையில் அரசு பதிப்பகத்தால் வெளியான தொகுதியின் மீள்பதிப்பாகுமென்பது குறிப்பிடத்தக்கது. அமரர் திருமதி பூரணபாக்கியம் சங்கர் நினைவாக வெளியிடப்பட்ட சுதந்திரனில் பிரசுரமான பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு நூலில் தேவன் - யாழ்ப்பாணத்தின் கதையான 'மனச்சாட்சியின் தண்டனை' என்னும் சிறுகதையும் உள்ளடங்கியுள்ளது.

தேவனின் நாவல்கள்:

தேவன் (யாழ்ப்பாணம்) நாவல் துறையிலும் தன் பங்களிப்பினைச் செய்திருக்கின்றார். 'கேட்டதும் நடந்ததும்', 'வாடிய மலர்கள்' மற்றும் 'அவன் சுற்றவாளி' ஆகிய நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. 'கேட்டதும் நடந்ததும்' நாவல் 1956இலும் , 1965இலும் சண்முகநாதன் புத்தகசாலையினால் அவர்களது அச்சகத்திலேயே அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 1958இல் வெளியான 'வானவெளியிலே' நூலிலும் இந்நாவல் பற்றியும், 'வாடிய மலர்கள்' நாவல் பற்றியும் , 'மணிபல்லவம்' (மொழிபெயர்ப்பு) நாவல் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 'அவன் சுற்றவாளி' நாவல் 1968இல் ச.கிருஸ்ணசாமி புத்தகக் கடையினால் வெளியிடப்பட்டுள்ளது. .

தேவனின் நாடகங்கள்
தேவன் (யாழ்ப்பாணம்) தென்னவன் பிரமராயன், விதி, கூடப்பிறந்த குற்றம், பத்தினியா பாவையா, வீரபத்தினி ஆகிய நாடகங்களை எழுதியிருக்கின்றார். நாடகங்களை எழுதுவதோடு மட்டுமின்றி அவற்றின் இயக்குநராகவுமிருந்திருக்கின்றார். இப்சனின் பொம்மை வீடு' (The Doll House) நாடகத்தைத் தழுவிப் 'பெண்பாவை' என்ற பெயரில் தேவன் தமிழில் நாடகமொன்றினை எழுதியிருக்கின்றார். இது பற்றி அந்தனி ஜீவா அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றி 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைத்தொடரில் 'வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம் 'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது' என்று குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

தேவனின் கட்டுரைகள்:
தேவன் (யாழ்ப்பாணம்) கட்டுரைகள் பலவும் எழுதியிருக்கின்றார். அவை பற்றிய விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் 'வானவெளியிலே' என்னும் அவரது விஞ்ஞானக்கட்டுரைகள் அடங்கிய தொகுதியினை 'நூலகம்' இணையத் தளத்தில் வாசிக்கலாம். ஈழகேசரியில் தேவன் -யாழ்ப்பாணம் எழுதிய 'வானவெளி' சம்பந்தமான விஞ்ஞானக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் 1958இல் வெளிவந்துள்ளது. கட்டுரைகள் அனைத்துமே சுவையாக, வானியல் பற்றி நிறைய தகவல்களை உள்ளடக்கியதாக எழுதப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர் தேவனின் பரந்த வாசிப்பைப் புலப்படுத்தும் கட்டுரைகள் இவை.

தேவனின் மொழிபெயர்ப்புகள்:
தேவன் (யாழ்ப்பாணம்) 'யாழ்ப்பாணம் ரொபேட் லூயி ஸ்டீவன்ஸனின் Treasure Island நாவலை மணிபல்லவம் (1949) என்ற தலைப்பிலே மொழிபெயர்த்திருக்கின்றார். இது முதலில் கேரளத்திலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் நூலாகப் பிரசுரமாகியது. என்பதை முனைவர் நா.சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூல் மூலம் அறிய முடிகின்றது.

எழுத்தாளர்களை ஊக்குவித்த தேவன்...
எழுத்தாளர் தேவன் - யாழ்ப்பாணம் இன்னுமொரு விடயத்திற்காகவும் குறிப்பிடப்பட வேண்டியவராகின்றார். பல எழுத்தாளர்களது மாணவப் பிராயத்தில் அவர்களை எழுதுமாறு ஊக்குவித்தவர் தேவன். இது பற்றி எழுத்தாளர்களான செங்கை ஆழியான், சுதாராஜ் ஆகியோர் தமது நேர்காணல்களில் மறக்காமல் குறிப்பிட்டிருக்கின்றனர். 'யாழ்மண்' இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் செங்கை ஆழியான் 'யாழ். இந்துக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் தூண்டுதலாக இருந்தனர். ஏரம்பமூர்த்தி மாஸ்டர், தேவன் யாழ்ப்பாணம், மு.கார்த்திகேசன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.' என்று குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

'மானுடநேயமிக்க எழுத்தாளர் சுதாராஜ்: எழுத்தையும் வாழ்வையும் சமாந்திரமாய் நகர்த்தும் மானுடநேயமிக்க எழுத்தாளர் சுதாராஜ' என்னும் அ.பரசுராமனின் கட்டுரையில் எழுத்தாளர் சுதாராஜ் 'கல்லூரி நாட்களில் பெற்ற அனுபவங்கள்தான் உங்களை ஓர் எழுத்தாளனாக்கியதா?' என்ற கேள்விக்குப் பின்வருமாறு பதிலிறுத்திருப்பார்: ' கார்த்திகேசன் மாஸ்டர், தேவன் - யாழ்ப்பாணம், சொக்கன் போன்ற ஆசிரியர்களிடம் இந்துக் கல்லூரியில் பாடம் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. .... இவையெல்லாம் ஒரு சமூக நோக்குள்ள மனிதனாகவோ எழுத்தாளனாகவோ ஆவதற்கு உதவியிருக்கின்றன.'

இவையெல்லாம் தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் அன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் மீதான பாதிப்பினை, தமிழ் எழுத்துலகின் மீதான அர்ப்பணிப்பினை எடுத்துக் காட்டுவன. இளம் எழுத்தாளர்களுக்கு முன்மாதிரியாக, உற்சாகமூட்டுபவராக விளங்கிய தேவனின் ஆளுமையானது ஆரோக்கியமான ஆளுமை.

தேவன் - யாழ்ப்பாணம் யாழ்ப்பாண எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவராகவும் செயற்பட்டிருக்கின்றார்.

இவ்விதமாக ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தேவன் - யாழ்ப்பாணத்தின் பங்களிப்பு நாடகம், சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடக இயக்கம், சொற்பொழிவு எனப் பரந்த அளவில் விரிந்து கிடக்கின்றது. அவர் சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற படைப்புகள் பற்றிய விபரங்கள் மேலும் திரட்டப்பட்டு, அவை சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டியதவசியம்.

ngiri2704@rogers.com

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்