Wednesday, February 21, 2018

நூல் அறிமுகம்: கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' தவிர்க்க முடியாததோர் ஆவணப்பதிவு! - வ.ந.கிரிதரன் -

புலம்பெயர் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் பாலமுரளிக்கும் (கடல்புத்திரன்) ஓரிடமுண்டு.  இவரது சிறுகதைகள் சில  கனடாவில் வெளிவந்த 'தாயகம்' சஞ்சிகை / பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன. அத்துடன் அவரது சிறு நாவல்களான 'வேலிகள்' மற்றும் 'வெகுண்ட உள்ளங்கள்' ஆகியனவும் 'தாயக'த்தில் தொடராக வெளிவந்தன. இவையனைத்தையும் பின்னர் ஒரு தொகுப்பாக மங்கை பதிப்பகம் (கனடா) தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் மூலம் , அவர்களுக்குத் தமிழகத்தில் விற்பனை உரிமையினைக் கொடுத்து வெளியிட்டது. இவரது சிறுகதைகள் பல 'பதிவுகள்' இணையத்தளத்தில் வெளிவந்துள்ளன.  'சிறுகதைகள்.காம்' இணையத்தளத்திலும் இவரது சிறுகதைகள் சில பிரசுரமாகியுள்ளன. எனது இந்தப் பதிவு கடல்புத்திரனின் 'வேலிகள்' தொகுப்பிலுள்ள நாவல்களிலொன்றான 'வெகுண்ட உள்ளங்கள்' பற்றியது. ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல்களென்றால் நிச்சயம் இந்த நாவலும் குறிப்பிடப்பட வேண்டியது அவசியமென்று கருதுகின்றேன்.

'வேலிகள்' தொகுப்பின் பின் அட்டையிலுள்ள இவரைப்பற்றிய அறிமுகத்தில் சில தகவற் பிழைகளுள்ளன. இவர் பிறந்தது யாழ்ப்பாணத்திலுள்ள வண்ணார்பண்ணை என்னும் பகுதியில். ஆனால் இவரது பால்ய காலத்தின் பெரும்பகுதி கழிந்தது கடலோரக்கிராமங்களிலொன்றான 'வடக்கு அராலி'யில். வவுனியாவிலும் இவரது குழந்தைப்பருவத்தின் சில ஆண்டுகள் கழிந்திருக்கின்றன.  மேலும் 'வேலிகள்' நூலின் பின்னட்டை அறிமுகத்தில் இவர் கனடாவுக்கு 'அகதி'யாகப் புலம்பெயர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இவர் கனடாவுக்கு நிரந்தர வசிப்பிட உரிமைபெற்றுப் புலம் பெயர்ந்தவர்.

1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் இவருமொருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து 'வெகுண்ட உள்ளங்கள்' நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றேன். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது 'வெகுண்ட உள்ளம்' நாவலில் காண முடியாது. 'வெகுண்ட உள்ளங்கள்' என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது.

வெகுண்ட உள்ளங்கள் கூறும் கதைதானென்ன?

இந்நாவல் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து எழுதப்பட்டதென்பதை நாவலாசிரியரின் நாவல் பற்றிய அறிமுகக் குறிப்பினில் காணமுடிகின்றது:

"சம்பவங்கள் சில உண்மையானவை. வெவ்வேறு இடங்களில் நடந்த கதைகளை நாவலுருவத்திற்காக ஒரு குடும்பத்தோடேயே இணைந்து சில பொதுவான அபிப்பிராயங்களைக் கலந்து கற்பனை பண்ணி எழுதியிருந்தேன்.' (வேலிகள்; பக்கம் 59)

அத்துடன் நாவல் முழுவதும் ஆசிரியர் பேச்சுத்தமிழைத்தாராளமாகவே பாவித்திருக்கின்றார். அதற்குமொரு காரணத்தை நாவல் அறிமுகத்தில் கூறியிருக்கின்றார்:

"இரு தமிழ் வழக்கை விட்டு - உரையாடலை பேச்சுத்தமிழிலும் மற்றதை செந்தமிழிலும் எழுதுதல்- ஒரு தமிழில் - எல்லாவற்றையும் பேச்சுத்தமிழில் - எழுதிப்பார்க்கப்பட்டது." (வேலிகள், பக்கம் 59).

அராலித்துறை, கொழும்புத்துறை ஆகிய சிறிய துறைகள் அக்காலகட்டத்து அரசியற் சூழல் காரணமாக முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நாவல் இவ்வாறு பதிவு செய்கின்றது:

" தீவு மக்கள் முன்னர் பண்ணை  வழியாலும்,  காரைநகர் வழியாலுமே  சென்று கொண்டிருந்தார்கள்.  கோட்டையில் அரசபடைகள் குவிக்கப்பட்டு பண்ணைப்பாதையில் மண்டைதீவு முகாம்  நிறுவப்பட்டபோது  அது அடைப்பட்டு விட்டது.  காரைநகர் பாதை மாத்திரமே போக்குவரத்துடையதாக இருந்தது. அண்மைக்காலம் தொட்டு அப்பகுதியில் கடற்படையின் அட்டகாசம் அதிகமாக இரண்டாவதும்  தடைப்பட்டுவிட்டது.  இதனால் கவனிப்பாரற்றுக்கிடந்த  அராலித்துறை, கரையூர், கொழும்புத்துறை போன்றவை பிரசித்தமடைந்தன. இவ்விடத்தில்  சிறிய வள்ளங்களை  மட்டும் அதிகமாகக்கொண்டிருந்த வாலையம்மன் கோவில் பகுதி மீனவர்கள்  தலைக்கு இரண்டு  மூன்று ரூபா என வசூலித்து தீவுப்பகுதியில் கொண்டுபோய் விடத்தொடங்கினார்கள். இரு கரைகளிலும் மினி பஸ்கள் சிதைந்த தார்றோட்டில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வரத்தொடங்கின.  பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய்க்கடை, தேத்தண்ணிக்கடை என முளைக்க அத்துறை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. (வேலிகள்; பக்கம் 62)

இவ்விதமாக அக்காலகட்டத்து அரசியற் சூழல் காரணமாக முக்கியத்துவம் பெற்ற அராலித்துறை மேலும் பலரை ஈரக்கத்தொடங்கியது. கடல்வலயச் சட்டங்களால் மீன் பிடித்தல் அறவே இல்லாதிருந்த காலகட்டமது. கரைவலை போட்டவர்கள் மட்டுமே சிறிதளவு தொழில் செய்த காலகட்டம். இதனால் பொருளியல்ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த கடற்தொழிலாளர்களுக்கு அராலித்துறைக்கேற்பட்ட முக்கியத்துவம் இன்னுமொரு வழியில் உழைப்பதற்கான வழியினைத் திறந்து விட்டது.  சிறிய வள்ளங்களை வைத்திருந்த வாலையம்மன் கோவிற்பகுதிக் கடற்தொழிலாளர்கள் பயணிகளைத் தீவுப்பகுதிக்குக் கொண்டுபோய் விட்டு உழைக்கத்தொடங்கியதைக் கண்ட கடல் வலயச் சட்டங்களால் தொழில் முடக்கப்பட்டிருந்த நவாலி, ஆனைக்கோட்டைப்பகுதி மீனவர்கள் தம் பெரிய வள்ளங்களைக் கல்லுண்டாய்க் கடலினூடு அராலித்துறைக்குக் கொண்டுவந்து பயணிகளைத் தீவுப்பகுதிக்குக் கொண்டு செல்லத்தொடங்கினார்கள். இது சிறிய வள்ளங்களை வைத்துப் பயணிகளை ஏற்றி இறக்கிக்கொண்டிருந்த வாலையம்மன் கோவிற்பகுதி கடற்தொழிலாளர்களுக்கு அதிருப்தியினைத்தருகின்றது.

இந்த இருபகுதி கடற்தொழிலாளர்களுக்கான தொழில் ரீதியிலான முரண்பாடுகள் இயக்கத்தின் தலையீட்டினை அங்கு ஏற்படுத்துகின்றது.

"கரையிலிருக்கிற எங்களுக்குத்தான் முதல் சலுகை வேண்டும் என்ற கோரிக்கையை தீவுப்பகுதிப் பொறுப்பாளரான ஓரியக்கத்தின் அந்த திக்குவாய்ப்பொடியன் ஓரளவுக்கு ஏற்றிருந்தான்.  அதன்படி வாலையம்மன் பகுதியினர்  தீவுக்கு ஆட்களை , சாமான்களைக் கொண்டு போவதென்றும் , மற்றவர்கள் தீவுப்பகுதியிலிருந்து வருகிற வரத்தைப் பாப்பதென்றும் முடிவாக்கப்பட்டிருந்தது. "(வேலிகள்; பக்கம் 63).

இவ்விதமாக முடிவாகியிருந்த சூழலைக் கெடுக்கும் வகையில் பெரும் வள்ளமொன்று அராலித்துறையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தீவுப்பகுதிக்குச் சென்ற செயலானது மீண்டும் வாலையம்மன் கோவிற்பகுதி கடற்தொழிலாளர்களை ஆத்திரத்திற்குள்ளாக்குகின்றது. தமது தொழிலினை நிறுத்திவிட்டு நியாயம் கேட்கத்தொடங்கினர்.  இதனால் தீவுப்பகுதிக்குச் செல்ல வந்த பயணிகள் போக்குவரத்து ஏதுமின்றிப் பெருகத்தொடங்கினார்கள்.  அச்சமயம் இன்னுமொரு பெரிய வள்ளம் கரையை நோக்கி வந்துகொண்டிருந்தது வாலையம்மன் பகுதி கடற்தொழிலாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. முருகேசு என்ற கடற்தொழிலாளர் தலைமையில் சிறிய வள்ளத்தில் பெரிய வள்ளத்துக்குச் சென்ற வாலையம்மன் பகுதி கடற்தொழிலாளர்கள் பெரிய வள்ளத்து கடற்தொழிலாளர்களைப் பலமாகத்தாக்கினார்கள். ஒருவனது காலை ஒடித்தார்கள். அந்த வள்ளத்தைத் துரத்தி விட்டுப் பெருமிதத்துடன் கரைக்குத்திரும்புகின்றார்கள் வாலையம்மன் பகுதி கடற்தொழிலாளர்கள். ஆனால் அந்த அமைதி நீடிக்கவில்லை. அடுத்த பதினைந்து நிமிடங்களில் 'ஐந்தாறு -பெடியள்க'ளுடன்  நாலைந்து வள்ளங்கள் இக்கரை நோக்கி விரைந்து வருகின்றன. இதனை ஆசிரியர் இவ்வாற்று விவரிக்கின்றார்:

"அவர்களுக்குத் திகில் பரவத்தொடங்கியது. 'வருகிறவர்கள் மற்ற இயக்கத்துப் பெடியள்' எனத்தில்லை கத்தினான். 'நீதானே ஒப்புதல் தந்தாய்' என்று முருகேசன் தொட்டுப் பலர் அவனைச்சூழ்ந்து கொண்டனர்." (வேலிகள்; பக்கம் 64).

இவ்விதம் வந்த மற்ற இயக்கத்துப் போராளியான வடிவேலு என்பவன் இடுப்பிலிருந்த ரிவால்வரை எடுத்து மேல் வெடி வைக்கவே, அப்பகுதியினர் அவன் மேல் பாய்ந்தரவனிடமிருந்த ரிவால்வர், மகசீன், கிரனேட்டு எல்லாவற்றையும் பறித்ததுடன் அவன் தலையிலும் அடித்து மண்டையை உடைத்து விட்டார்கள். அவனோ தன்னிடமிருந்தவற்றைத் திரும்பப்பெறாமல் அவ்விடத்தைவிட்டு நகர்வதில்லையென்று நிற்கின்றான். இதற்கிடையில் வடிவேலுவின் இயக்கத்தினர் அங்கு வருகின்றனர். 'இனிமேல் இயக்கங்கள் வள்ளங்களை ஓட்டும்" என்று அறிவிக்கின்றனர். இவ்விதமாக வள்ளங்களில் பயணிகளைத் தீவுப்பகுதிக்குக் கொண்டு செல்வதும், கொண்டு வருவதும் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கைகளிலிருந்து இயக்கங்களின் கைகளுக்கு மாறுகின்றன. இங்கு ஒன்றினைக் கவனிக்கலாம். இனிமேல் இயக்கங்கள்தாம் வள்ளங்களை ஓட்டுமென்று மற்ற இயக்கத்தினர் அறிவிக்கின்றனரே தவிர தாம் மட்டும்தான் வள்ளங்களை ஓட்டுவதாக அறிவிக்கவில்லை. அதற்கும் ஒரு காரணமிருந்தது. அக்காலகட்டத்தில் இயக்கங்கள் அனைத்தும் தமிழ்ப் பகுதிகளில் இயங்கிக்கொண்டிருந்தன. ஒருவரையொருவர் முற்றாக அழிக்கத் தொடங்கியிருக்கவில்லை.

மற்ற இயக்கத்தினர் மீது மக்கள் நடாத்திய தாக்குதல் காரணமாக வள்ளமோட்டுதலை இயக்கங்கள் எடுப்பதாக மற்ற இயக்கம் அறிவிக்கின்றது. அதே சமயம் இயக்கத்தினர் மீதும் அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது தெளிவாக நாவலில் குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே நாவலில் பெரிய வள்ளக்காரர் தீவுப்பகுதியிலிருந்து பயணிகளைக் கொண்டுவரவேண்டுமென்றும், வாலையம்மன் பகுதியினர் பயணிகளை, பொருட்களைக்கொண்டு செல்வதென்றும் இயக்கத்தினனான திக்குவாய்க்காரனொருவனுடன் அப்பகுதிக்கடற்தொழிலாளர்கள் கதைப்பதாகவும், அச்சமயத்தில் பெரிய வள்ளமொன்று பயணிகளை ஏற்ற அப்பகுதிக்கு வருவதாகவும், அவ்வள்ளத்தில் வந்தவர்கள் மீது வாலையம்மன் பகுதி கடற்தொழிலாளர்களால் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவ்விதம் தாக்கப்பட்டவர்கள் யார்? ஏனைய பகுதி மீனவர்களா? அல்லது இரு பக்கத்தினருக்குமிடையில் சமாதானம் செய்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களா?

"அதே சமயம் நாவலின் இன்னுமோரிடத்தில் தீவுப்பகுதியில் இயங்கிய இயக்கத்தின் போராளியொருவனின் கை வாலையம்மன் பகுதியினரால் முறிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக இயக்கத்தின் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இரவில் வந்து ஆறுபேரைக் கைது செய்து கொண்டு போனதாகவும் கூறப்பட்டுள்ளது". (வேலிகள்; பக்கம்  70).

மற்ற இயக்கத்தின் போராளியொருவனின் மேல் தாக்குதல் நடாத்தப்பட்டு ஆயுதங்கள் களையப்பட்டது தெளிவாகப் பதிவு செய்யப்பட்டதைபோல இயக்கத்தின் மேல் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தெளிவாக விபரிக்கப்படவில்லை. ஒருவேளை நூலின் சில பகுதிகள் விடுபட்டுப்போயுள்ளனவோ?

நாவலில் வரும் கீழுள்ள வசனங்கள் விளக்குவதென்ன?

"..ஆனால் இரண்டையும் (இயக்கங்களை) உடனே அணுகப்பயந்தார்கள். ஒன்றிடமிருந்து ஆயுதங்களைப் பறித்திருக்கின்றார்கள். ஒன்றைக் காயப்படுத்தியிருக்கின்றார்கள்.  அவமரியாதையின் தாக்கம் எவ்வளவு இருக்குமோ? அணுகாவிட்டாலும் நிலைமை சீர்கேடாககிவிடும்..."(வேலிகள்; பக்கம் 66)

ஆசிரியர் ஓரிடத்திலும் இயக்கங்களின் பெயர்களைக்குறிப்பிடவில்லை. ஆனால் அவர் அந்த இயக்கங்களைக் குறிக்கக்குறிப்பிடும் வார்த்தைகளைக் கொண்டு அவ்வியக்கங்களின் பின்னணியினை ஊகிக்க முடியும். அக்காலகட்டத்தில் அப்பகுதியில் இயங்கிய முக்கியமான பெரிய இயக்கங்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும்தாம். கழகம், இயக்கம் என்று தமிழீழ் மக்கள் விடுதலைக் கழகம் குறிக்கப்படுகின்றது. மற்ற இயக்கமென்று தமீழிழ விடுதலைப்புலிகள் இயக்கம் குறிக்கப்படுகின்றதென்பதை அறிய முடிகின்றது. 'மற்ற இயக்கத்தை'ப்பற்றிக் குறிப்பிடும்போது ஒரு சமயம் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது:

"மற்ற இயக்கத்தைப் போய்ச்சந்திப்பதென்றால் அவர்களுடைய  பிரதேசக் காம்புக்குப் நேரடியாகப் போக வேண்டும்.  ஆயுதங்களோட அவர்கள் எந்த நேரமும் புழங்குவதால் பெடியளை அனுப்பப் பயப்பட்டார்கள். "(வேலிகள்; பக்கம்  69)

இதிலிருந்து மற்ற இயக்கமென்று குறிப்பிடப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் என்று ஊகிக்க முடிகிறது. இதே சமயம் இயக்கமென்று குறிப்பிடப்படும் இயக்கத்தின் செயற்பாடுகள் விரிவாகவே நாவலில் விபரிக்கப்பட்டிருக்கின்றன.

"பொதுமக்கள் புரிந்து கொள்வதற்கு இலகுவாக மாற்று அரசாங்கம் பேரில் ஒரு கமிட்டி அமைப்பை அவ்வியக்கம் வைத்திருந்தது. ஏ.ஜி.ஏ.யைச் சந்திக்க முதல் விதானையாரைச் சந்திப்பதுபோல் அவ்விடத்துக் கிராமப் பொறுப்பாளரைச் சந்திக்க வேண்டும். பிறகு அவர்களது  ஏ.ஜி.ஏ.சைச் சந்திக்க வேண்டும். ஏ.ஜி,.ஏ.க்களுக்கு மத்தியில் அடிக்கடி கூட்டம் நடைபெறும். தீவுப்பகுதி ஏ.ஜி.ஏ கடலால் பிரிக்கப்பட்டிருந்ததால் சாதாரண விதாரணயார் பிரிவுகளுக்கு அயலில் மானிப்பாய் விதானையாருடன் இருந்த பழக்கம் அவர்களோடு நிலவவில்லை. பெரிய பிரச்சினைகளைப் பொதுவாக ஏ.ஜி.ஏ மட்டத்தினர் கதைத்துத் தீர்த்துக்கொள்வர். பிரச்சினை மோசமானால் அவர்கள் எல்லாருக்கும் தலைமையாயிருக்கிற அரசாங்க அதிபருக்குக்கொண்டு போவார்கள். எல்லா அமைப்புகளையும் பொதுமக்கள் சந்தித்துக் கதைக்கக்கூடியதாக அமைக்கப்பட்டிருந்தது.  விதானையார், ஏ.ஜி.ஏ தீர்ப்புகள் திருப்தி அளிக்காவிட்டால் மக்கள் முறைப்பாடுகளை நேரடியாக ஜி.ஏ. அமைப்புகளுக்குக்கொண்டு போகலாம்." (வேலிகள்; பக்கம் 68)\

இவ்விதமான விபரிப்புகள் அந்த இயக்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்பதைப் புலப்படுத்துகின்றன. நாவலாசிரியர் அந்த இயக்கத்தில் ஆரம்பத்தில் இணைந்திருந்ததன் காரணமாகவும், அப்பகுதி மக்களுடன் நன்கு இணைந்து பழகியவர் என்பதாலும் அப்பகுதி மக்கள் பற்றியும், அந்த இயக்கம் பற்றியும் நாவலில் விரிவாகவே தகவல்கள் பதிவாகியிருக்கின்றன.

இவ்விதமாக இரு பெரும் இயக்கங்களுடன் மோதிக்கொண்ட அப்பகுதி மக்கள் அம்மோதல்கள் ஏற்படுத்திய, ஏற்படப்போகின்ற பாதிப்புகளைத் தணிக்க அல்லது சமாளிக்க எவ்விதம் முயற்சி செய்கின்றார்களென்பதை நாவல் விரிவாகவே விபரிக்கின்றது.

இதுதவிர நாவல் மேலும் இயக்கத்தின் செயற்பாடுகள் சிலவற்றை விபரிக்கின்றது. அப்பகுதியில் பாவிக்கப்படாமலிருந்த வீடொன்றினை இயக்கத்தின் போராளிகள் பொறுப்பெடுத்து இயக்க  முகாமாக்குகின்றார்கள். அந்த வீட்டுக்குப் பொறுப்பாக இருந்த அயல் வீட்டுக்காரர் வீட்டு உரிமையாளர் கொழும்பிலிருப்பதாகவும், விரைவில் வரவிருப்பதாகவும் கூறி வீட்டுச் சாவியினைக் கொடுக்கத்தயங்கின்றார். அவரை ஒருவாறு சமாளித்து அந்த வீட்டினைப் பொறுப்பெடுத்து இயக்க முகாமாக்குகின்றனர். அவ்விதம் முகாமாக மாற்றும்போது அந்த வீட்டிலிருந்த பொருட்களையெல்லாம் எடுத்து அறையொன்றில் போட்டு, சாவியினால் பூட்டி விட்டு, அந்தச் சாவியினையும் அந்த அயல் வீட்டுக்காரரிடமே கொடுத்து விடுகின்றார்கள்.

அத்துடன் நாவல் விபரிக்கும் இன்னுமொரு விடயம் அந்தபோராளி இளைஞர்கள் தாம் வள்ளங்களைத் தம் இயக்கம் சார்பில் ஓட்டத்தொடங்குவதுதான். ஓட்டிகள் இருவரைச் சம்பளத்துக்கு வைத்து வள்ளத்தை ஓட்டுகின்றார்கள். அதனை நாவல் பின்வருமாறு விபரிக்கின்றது:

"திலகனுக்கு படகு ஓட்டம் பற்றி தெரியாதபோதும், மேலிடம் சொன்னதைக் கடைப்பிடித்தான். படகுச் சொந்தக்காரனையும் அவுட்போர்ட் மோட்டார் கொண்டு வந்தவனையும் ஓட்டிகளாக அனுமதித்தான்.  இரண்டிற்கும் ஒருத்தனே உரித்தவனஔ இருந்ததால்.. அவன் மற்றவனை தெரிவு செய்யலாம்.  அவ்விடத்திற்கு பரிச்சயமானவர்களைப் போடாதபோது , படகுக்கு சேதாரம் கூடுதலாக ஏற்பட்டது. ஆழமற்ற கடலானதால் ஓடியோடி ஆழமான பாதைகண்டு ஓட வேண்டும். இல்லாது போகிறபோது படகு தரை தட்டி அதன் சீமெந்து ஏர் உடைய நேர்ந்தது. கல் பகுதியில் ஏறுகிறபோது பக்கப் பகுதியில் ஓட்டைகள் ஏற்பட்டன. அடிக்கடி பைபர் லேயர் வைத்து ஒட்டுற செலவுகள் ஏற்பட்டன. அதனால் அனுபவம் மிக்க பெடியளையும் சேர்த்து படகுச் சேவையை நடத்தினான். ஒரு நாள் சம்பளமாக அவன் ஓட்டிக்கு 75 ரூபா கொடுத்தான். இருவருக்கும் 150. ஓட்டம் சீராக நடைபெற்றது. " (வேலிகள்; பக்கம் 80-81)

இருந்தும் வெற்றிகரமாக நடத்த முடியாததால் படகுச் சேவையை இயக்கத்தின் தீவுப்பகுதியிடமே இறுதியில் கொடுக்கும்படியாகின்றது. இதுதவிர நாவல் இன்னுமொரு விடயத்தையும் ஆவணப்படுத்தியிருக்கின்றது.  அதனை கதாசிரியர் பின்வருமாறு விபரிக்கின்றார்:

"..வெல்டிங் பெடியன் சுந்தரத்தின் ஐடியாவுக்கு அந்த ஏ.ஜி.ஏ. அமைப்பு ஒத்துழைப்பு கொடுத்துச் செயற்படுத்தியது.... காம்பிற்கு பின்னாலுள்ள வளவில் புதிய வெற்று டீசல் ட்ரம்கள் குவிக்கப்பட்டன. சுந்தரம் குழு சுறுசுறுப்பாக இயங்கியது. அவற்றின் வாய்ப்பகுதியை மூடி வெல்ட் பண்ணினார்கள். காற்று அடைக்கப்பட்ட ட்ரம்களை அருகருகாக அடுக்கி மேல் கம்பிச்சட்டம் வைத்து இணைத்து ஒட்டினார்கள். அப்படியே ஒரு மேடை போல் அமைத்தார்கள். மூன்று நான்கு நாட்கள் முழுமூச்சாக செயல்பட்ட அவர்கள் வெற்றியடைந்திருந்தனர். அது முதல்தரமான மிதவையாக காரைநகர் கடற்பகுதியிலுள்ள  பெரிக்கு  இணையாக செயற்படுமென்ற நம்பிக்கை  அவர்களுக்கு இருந்தது.  ட்ரக்டரில் ஏற்றப்பட்டு புழுதியைக் கிளப்பிக்கொண்டு  போய் கடலில் இறக்கப்பட்டபோது பெடியன்கள் கரகோசம் செய்தார்கள்.  கையோடு கொண்டுவந்த  பலகைகளை மரவேலை தெரிந்த ஒரு பெடியன் கம்பிச் சட்டத்தின்மேல் வைத்து கச்சிதமாகப் பொருத்தி விட்டான். அவன் சொல்லிக்கொடுத்தபடி  பெடியளும் உதவியாக இருந்ததால் வேலை  இரண்டு மணித்தியலத்தில் முடிந்தது..." (வேலிகள்; பக்கம் 90)

இவ்விதமாகத் தயாரிக்கப்பட்ட மிதவை சாதனை படைத்ததாக நாவலில் விபரிக்கப்பட்டிருகின்றது.

"அந்த மிதவை படைத்த சரித்திரம் பெரியது. சுயமூளையைப் பாவித்து தயாரிக்கப்பட்ட ஆமட் கார், ஹெலிகாப்டர், கிரனேட் , மோட்டார்கள், ஷெல்கள் .. இந்த வரிசையில் இதுவும் ஒன்று.  தமிழ் மக்கள் பெருமைப்படக் கூடிய விடயம்தான். .." (வேலிகள்; பக்கம் 90)

"அதிலே மினிபஸ், கார். ட்ராக்டர் போன்ற வாகனங்கள் இலகுவாக இடம் மாற்றப்பட்டன. கருவாட்டுச் சிப்பங்கள் வர்த்தக நோக்கில் தீவுப்பக்கமிருந்து கொண்டு வரப்பட்டன.." (வேலிகள்; பக்கம் 90)

இவ்விதமாக நாவல் இயக்கங்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதாமல் தமது பாதைகளில் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் , ஒரு கடற்கரைக் கிராமமொன்றில் அன்றைய அரசியல் சூழல் ஏற்படுத்திய தாக்கங்களை விபரிக்கும் அதே சமயம் இயக்கச் செயற்பாடுகளை விபரிப்பதன் மூலம் அவற்றை ஆவணப்படுத்தவும் செய்கின்றது. அதே சமயம் அக்கிராமத்து மக்களின் வாழ்க்கையை, அங்கு இயங்கிக் கொண்டிருந்த வாசிகசாலைச் செயற்பாடுகளை இன்னுமொரு தளத்தில் நாவல் விபரித்தாலும், இந்நாவலின் முக்கியத்துவமே அராலித்துறைக்கு அனறைய அரசியல் சூழல் ஏற்படுத்திய தாக்கத்தையும், அங்கு அக்காலகட்டத்தில் இயங்கிய அமைப்புகளின் செயற்பாடுகளைப்பற்றியும் ஆவணப்படுத்தியதில்தான் இருக்கிறது. இன்னும் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கலாமென்ற எண்ணம் ஏற்பட்டாலும், ஓரளவாவது ஆவணப்படுத்தியிருப்பதில்தான் இந்ந நாவலின் முக்கியத்துவமே தங்கியிருக்கின்றது. அந்த வகையில் 'வெகுண்ட உள்ளங்கள்' அளவில் சிறுத்திருந்தாலும், கூறும் பொருளில் கனமானது; தவிர்க்க முடியாத படைப்புகளிலொன்று.

ngiri2704@rogers.com

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்