Thursday, February 22, 2018

அழியாத கோலங்கள்: சாண்டில்யனின் கடல் புறா, ஓவியர் லதாவின் ஓவியங்களுடன். - வ.ந.கிரிதரன் -

-ஓவியர் லதாவின் ஓவியம்: கடல்புறா அத்தியாயம் ஒன்றில்.-



அண்மையில் இணையத்தில் ஓரத்தநாடு கார்த்திக் என்னும் அன்பரின் வலைப்பதிவில் என் பால்ய காலத்தில் நான் வாசித்த பல வெகுசனப்படைப்புகளை மீண்டும் அவை தொடராக வெளிவந்தபோது வெளியான ஓவியங்களுடன் வாசிக்க முடிந்தது. அக்காலகட்டத்தில் கல்கி, விகடன், குமுதம், கலைமகள், தினமணிக்கதிரி, ராணி , கல்கண்டு என வெளியான வெகுசன இதழ்களில் தொடராக வெளிவந்த படைப்புகள் பலவற்றை நான் சேகரித்து, 'பைண்டு' செய்து வைத்திருந்தேன். அவையெல்லாம் 1983-2009 வரையில் ஈழத்தில் நிலவிய அரசியல் சூழலில் அழிந்து விட்டன. இந்நிலையில் அண்மையில் அன்பர் ஓரத்தநாடு கார்த்திக்கின் தளத்தில் பல படைப்புகளைக்கண்ட போது , அதுவும் வெளியானபோது வெளிவந்த ஓவியங்களுடன் பார்த்தபோது என் சிந்தனைக்குருவி மீண்டும் அந்தக்காலத்துக்கே சிறகடித்துச்சென்று விட்டது. அவ்விதம் வெளியான படைப்புகளில் ஒருபோதுமே சாண்டில்யனின் 'கடல்புறா'வினை என்னால் மறக்க முடியாது.


நான் ஆறாம் வகுப்பிலிருந்தே கல்கி, விகடனில் வெளியான படைப்புகளை வாசிக்கத்தொடங்கி விட்டேன். ஆனால் குமுதம் சஞ்சிகையில் வெளியான படைப்புகளை வாசிக்கத்தொடங்கியது வவுனியா மகாவித்தியாலயத்தில் அக்காலத்தில் என்னுடன் படித்துக்கொண்டிருந்த ரிஷாங்கன் என்னும் பால்யகாலத்து நண்பர் மூலம்தான். அவரது வீட்டில் அக்காலகட்டத்தில் குமுதம் சஞ்சிகையினை எடுத்துக்கொண்டிருந்தார்கள். எனவே அவர் அதில் வெளியான பி.வி.ஆரின் 'கூந்தலிலே ஒரு மலர்', சாண்டில்யனின் 'ராஜமுத்திரை', சித்திரக்கதையான 'கடற்கன்னி' ஆகியவற்றைப் பற்றிக்கூறியிருந்ததாக ஞாபகம். அல்லது அவை வெளிவந்த குமுதம் சஞ்சிகையினை எனக்கு அறிமுகம் செய்திருக்க வேண்டும். அதன்பின்னரே குமுதத்தின்பால் என் கவனம் திரும்பியது. அதன் பின்னர் ரிஷாங்கனை நான் சந்திக்கவில்லை. அவர் தற்போது மருத்துவராகப் பணிபுரிவதாகக்கேள்விப்படுகின்றேன். மருத்துவரான என் கடைசித்தங்கை அவரது பல்கலைக்கழகக்காலகட்டத்தில் ஒருமுறை அவரைச்சந்தித்திருப்பதாகக்கூறியிருக்கின்றார். முகநூல் மூலம் மீண்டும் அறிமுகமான என் பால்யகாலத்து நண்பர்களிலொருவரான சண்முகராஜாவும் ரிஷாங்கன் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பதாகக் கூறியிருக்கின்றார்.

நான் சாண்டில்யனின் 'ராஜமுத்திரையை' வாசிக்கத்தொடங்கியபோது , இந்திரபானு என்னும் வீரனை மையமாக வைத்து நடைபோட்டுக்கொண்டிருந்த நாவலின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகிவிட்டிருந்தது. வாசிக்கத்தொடங்கினேன். அதன்பின்னர் சாண்டில்யனின் எழுத்துக்கும், லதாவின் ஓவியங்களுக்கும் அடிமையாகிப்போனேன். பின்னர் தேடிப்பிடித்து ராஜமுத்திரையின் முதலாம் பாகத்தைத்தேடியெடுத்து வாசித்தேன். ஏற்கனவே குமுதத்தில் கடல்புறா மூன்று பாகங்களும் வெளியாகிப் புகழ்பெற்றிருந்த விடயத்தை அப்பொழுதே அறிந்துகொண்டேன். அதன் பின்னர் நாங்கள் யாழ்ப்பாணம் மீண்டும் திரும்பியதுமே என் கவனம் கடல்புறாவின் மேல் திரும்பியது. அக்காலகட்டத்தில் குமுதத்தில் வெளியான ஓரிரு அத்தியாயங்களை (பாலூர்ப் பெருந்துறையில் இளைய பல்லவனின் வீர சாகசங்களை விபரிக்கும் ஓவியர் லதாவின் ஓவியங்களுடன் கூடிய) வாசித்துவிட்டு வாசிப்பதற்காகத் தேடி அலைந்திருக்கின்றேன். தமிழ் வரலாற்று நாவல்களில் கல்கியின் வந்தியத்தேவனுக்கு அடுத்து மிகவும் புகழ்பெற்ற வரலாற்றுப்பாத்திரம் இளையபல்லவன் என்றழைக்கப்படுகின்ற கருணாகரத்தொண்டைமான். இவனே இலங்கையிலுள்ள தொண்டைமானாறினை உருவாக்கியதாகக்கருதப்படுபவன்.

'கடல் புறா' என்றதும் எனக்கு ஞாபகத்துக்கு வருமின்னுமொரு விடயம். எனக்கு உறவுக்கார அக்காமார் பலரிருந்தார்கள். அவர்களுக்கு சிநேகிதிகள் பலர். அச்சிநேகிதிமார்களை அவரவர் வீடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் 'பாதுகாவலன்' உத்தியோகம் அடிக்கடி எனக்குக் கிடைத்துவிடும்.  இது அக்காலகட்டத்தில் எனக்கொரு வேண்டாத தலையிடி. அச்சிநேகிதி அக்காமார்கள் பலருக்கு நானொரு புத்தகப்பூச்சி என்பது தெரியும். அவர்களிலொருவர் எனக்குக் 'கடல் புறா' நாவலை அடுத்தமுறை வரும்போது தன் உறவுக்கார வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டுவருவதாகக் கூறிக் கூறியே காரியத்தைச் சாதித்துவிடுவார். இறுதிவரை அவர் எனக்குக் 'கடல்புறா'வைக் கொண்டு வந்து தரவில்லை. பின்பு நண்பரொருவரின் நண்பர் வீட்டிலிருந்து 'கடல் புறா' நாவலின் குமுதத்தில் வெளியாகி 'பைண்டு' செய்யப்பட்ட இரண்டாம் பாகத்தொகுதியை எடுத்து வாசித்தேன். ஏனைய பாகங்களை யாழ் நூலகத்திலிருந்து (வானதி பதிப்பாக வெளியான) எடுத்து வாசித்தேன். ஆனால் அக்காலகட்டத்தில் குமுதத்தில் ஓவியர் லதாவின் ஓவியங்களுடன் வெளியான 'கடல் புறா'வை, அந்த இரண்டாம் பாகத்தைத்தவிர,  வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அண்மையில் இணையம் மூலம் சாத்தியமானபோது 'கடல்புறா'வை வாசிக்கும் ஆர்வம் போய்விட்டிருந்தது. ஆனால் வெளியானபோது பிரசுரமான ஓவியங்களை ஒருமுறை பார்க்கும் ஆசை ஏற்பட்டிருந்தது. இணையத்தில் ஓரத்தநாடு கார்த்திக் அவரின் தளம் என் நிறைவேறாத அந்த ஆசையினை நிறைவேற்றி வைத்தது. கடல்புறா, மன்னன் மகள், ஜலதீபம் போன்ற சாண்டில்யன் நாவல்களை , வெளிவந்த காலத்தில் வெளியான ஓவியங்களுடன் அவர் பதிவு செய்திருந்ததால் அன்று பார்க்க முடியாது போன அந்த ஓவியங்களை மீண்டும் பார்க்க முடிந்தது. அவற்றில் சிலவற்றை இங்கு என் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். ஓரத்தநாடு கார்த்திக்கின் வலைப்பதிவுக்கான இணையத்தள முகவரி: http://orathanadukarthik.blogspot.ca/2013_12_13_archive.html

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்