அங்கதச்சுவையுடன் ஆரம்பத்தில் 'டெலி' ஜெகன் பற்றிய பகுதி அமைந்திருக்கின்றது. அவ்விதமான அங்கதச்சுவை மிக்கதாகவே முழு நாவலும் அமைந்திருந்தால் 'ஆயுத எழுத்து' அற்புதமான, இலக்கியச்சிறப்பு மிக்கதொரு பிரதியாகவும் அமைந்திருக்குமென்பது என் தனிப்பட்ட கருத்து. உண்மையில் அங்கதச்சுவை மிக்கதாக 'டெலி' ஜெகன் பற்றிய பகுது இருப்பதால், நூலினை படித்து முடிந்தும் கூட, நூலில் கூறப்பட்ட முக்கியமான பல தகவல்களையும் விட 'டெலி' ஜெகனின் இயக்க நடவடிக்கைகள் பற்றிய விபரிப்புகளும், அவரது துயரகரமான முடிவும் நெஞ்சில் நிற்கவே செய்கின்றன. அவரது இயக்க நடவடிக்கைகளை ஆசிரியர் அங்கதச்சுவை மிக்கதாக விபரித்திருந்தாலும்,வாசிக்கும் ஒருவருக்கு ஜெகனின் தாய் மண் மீதான பற்றும், அதற்கான விடாப்பிடியான போராட்ட முன்னெடுப்புகளும் நெஞ்சில் படமென விரிகின்றன. அதுவே ஆசிரியரின் எழுத்துச்சிறப்பு. அதனால்தான் கூறுகின்றேன் சாத்திரி அந்த நடையிலேயே முழு நாவலையும் படைத்திருக்கலாமே என்று.
'சாத்திரியின் நாவலின் நாயகனான அவனின் அண்ணனும் 'டெலி' ஜெகனின் இயக்கத்தைச்சேர்ந்தவர். அது பற்றி வரும் பகுதியிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
" பள்ளிக்கூடத்திலை ஒருநாள் விஞ்ஞான வாத்தியார் கேட்டார், 'அடேய், உன்ர அண்ணன் எந்த இயக்கமடா?'
'டெலி சேர்'
வாத்தியார் கெக்கட்டம் போட்டு சிரித்து விட்டு 'ஓ.. சங்கக்கடை இயக்கமா? போன கிழமை அளவெட்டிச் சங்கம் உடைச்சாங்கள். நேற்று எங்கட தெல்லிப்பளை சங்கத்தை
உடைச்சுப்போட்டாங்கள்... களவாணி இயக்கம்.' என்றார்.
எல்லாப் பொடியளும் விழுந்து விழுந்து சிரிக்க, இவனுக்குப் பெரிய பரிசைக்கேடாகக் போய்விட்டது. அடுத்த முறை ஜெகன் வீட்டுக்கு வந்தபோது பள்ளிக்கூடத்திலை நடந்த
சம்பவத்தைச் சொல்லி, 'சனத்தின்ட சங்கக்கடையை உடைக்கிறது சரியில்ல அண்ண' என்றான்.
ஜெகன் சிரித்து விட்டு 'சங்கக் கடை சனத்தின்ர சொத்து இல்லையடா. அது அரசாங்கத்தின்ர சொத்து. இப்பிடி ஏதாவது செய்துதான் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தலாம். மற்றது நாங்கள் கெரில்லா இயக்கம். அடிச்சுப்பறிச்சுத்தான் சாப்பிட வேணும் கண்டியோ' என்றான். அவனின் நியாயமும் இவனுக்குச்சரி எனப்பட்டது." [பக்கம் 20]
"சில நாட்கள் நடு இரவுகளில் வீட்டுக்கு வரும் அண்ணனும், ஜெகனும் வெளித்திண்ணையில் படுத்துக்கிடந்துவிட்டு விடிவதற்கு முன்னர் காணாமல் போவார்கள். சில சமயங்களில் யாராவது புதியவரை அழைத்து வந்து கீச்சுக்குரலில் நீண்ட நேரம் கதைத்துக்கொண்டிருப்பார்கள்."
"ஒருநாள் அப்பாவை வீதியில் மறித்த ஜெகன் தமது டெலி இயக்கத்தின் அரசியல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டிருக்கின்றார். 'ஒரு புத்தி ஜீவியை இவயின்ர சிறுபிள்ளை வேளாண்மைக்கு விளக்குப் பிடிக்கக் கூப்பிடறான். 'கவுழுவானுக்கு நக்கலைப்பாரன்' எனத் தனது கடைசிக்காலம் வரை அப்பா இதைச்சொல்லித் திட்டிக்கொண்டேயிருந்தார்." [பக்கம் 18]
நாவலின் அத்தியாயம் மூன்று 'டெலி' ஜெகனின் கதையினை, அவனது வீரப்பிரதாபங்களை, துயரகரமான முடிவினை அங்கதச்சுவையுடன் விபரிக்கின்றது. உண்மையில்
'டெலி' ஜெகனின் ஆளுமையினை அற்புதமாக அத்தியாயம் மூன்று வெளிப்படுத்துவதாகவே எனக்குப் படுகின்றது. உண்மையிலேயே தமிழர் விடுதலைக்காகத் தன்னால் முடிந்தவரையில் போராடி வாழ்ந்த 'டெலி' ஜெகனைப்பற்றி, அவனது ஆளுமை பற்றி 'ஆயுத எழுத்து' நாவல் மூலமே அறிகின்றேன்.
இது போல் நாவலின் இன்னுமொரு முக்கியமான பகுதியாக நாவலின் நாயகனான அவன் தன் காதலைபற்றி விபரிக்கும் பகுதி அமைந்திருந்ததாக எனக்குத்தோன்றியது.
காதல் உணர்வுகள் மானுட வாழ்வில் முக்கியமானதோர் உணர்வு. யாரும் இதற்கு விதிவிலக்கல்லர், இந்நாவலின் நாயகனான அவனையும் சேர்த்துத்தான். அவனது காதல்வெற்றியடைந்தாலும், அவள் அவன் வாழ்விலிருந்தே நிரந்தரமாகக் காணாமல் போவது வாசிப்பவர் உள்ளங்களைத் துயருற வைக்கும். அந்த வகையில் நூலைப்படித்து முடிந்ததும் 'டெலி' ஜெகனைப்போல், நாயகனின் காதல் அனுபவங்களும் வாசகர்கள் நெஞ்சங்களைவிட்டுப் போய்விடுவதில்லை.
நாவலின் நாயகனான அவன் தான் விரும்பிய இயக்கத்தோழிக்குக் காதல் கடிதம் எழுதியதை இவ்விதம் விபரிக்கின்றார்:
"என்ன செய்யலாம் என யோசித்தவனுக்கு வித்தியாசமான ஐடியா தோன்றியது. அவளுக்குப் பிடித்தமான 'மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா' என்ற பாடலை
மட்டும் ஒரு ஓடியோ கசட்டில் இரண்டு பக்கமும் பதிவு செய்தவன், ஒரு கடதாசியில் 'ஆம்... இல்லை..' என்று மட்டும் எழுதி, 'அதில் புள்ளடி மட்டும் போட்டால் போதும். பிடிக்காட்டி கிழித்தெறிந்து விடு' என்று சொல்லி அவள் கையில் திணித்து விட்டுப்போய்விட்டான்." [பக்கம் 144]' "
அவனின் கடிதத்துக்கு அவளிடமிருந்து நல்ல பதில் வருகின்றது. அது பற்றியும், அதனால் அவன் அடைந்த் மகிழ்ச்சி பற்றி பற்றியும் , அந்த மகிழ்ச்சியினால் அவன் ஆடிய ஆனந்தக் கூத்து பற்றியும் விபரிக்கப்படுகின்றது:
"கடுதாசியில் 'ஆம்' என்றதற்கு மேல் புள்ளடியிட்டிருந்தது. அவனுக்கு அன்றிருந்த மகிழ்ச்சியில் பலாலி ஆமிக்காம்புக்குக் கொஞ்ச செல்களை அடித்து விட்டான்." [பக்கம் 144]
இந்தக் காதல் பின்வருமாறு முடிகின்றது:
"இந்திய ராணுவத்தினருடன் மோதல்கள் ஏற்பட, அவள் தனது குழுவுடன் வன்னிக்குச் சென்று விட்டிருந்தாள். அதன் பின்னர் அவளை அவன் சந்திக்கவே இல்லை." [பக்கம் 150]
இந்தக் காதல் கதையும் நான் இதுவரை வாசித்த நாவலில் என்னைப் பாதித்த விடயங்கள்.
- சாத்திரி - |
நாயகனின் சொந்தக் குடும்பத்துக்கு இந்தியப்படையினரால் ஏற்பட்ட அழிவுகள் நெஞ்சினை அதிர வைப்பன. அவனது அக்காவுக்கு ஏற்பட்ட நிலை.. அவளைப்போல் எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் அக்காலகட்டத்தில். இந்த நாவல் இயக்க மோதல்களை, இயக்க நடவடிக்கைகளை, இயக்கத்தவறுகளுக்கு இயக்கம் வழங்கும் தண்டனைகளை, இலங்கைப்படையினருடனான , இந்தியப்
படையினருடனான ஆயுத மோதல்களை, இயக்கத்தின் மனித உரிமை மீறல்களை (இயக்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் இறந்து விடவே, அதனை நியாயப்படுத்த அவனை உளவாளியாகச் சித்திரித்துக் கொலை செய்து வீதியில் போட்ட விபரங்களை) .. எனப் பல விடயங்களையும் பட்டியலிடுவதன் மூலம்ஆவணப்படுத்துகின்றது. அந்த வகையில் புனைவானபோதிலும் முக்கியமான புனைவுகளிலொன்றாக 'ஆயுத எழுத்து' விளங்குகின்றது.
டெலோ சிறி சபாரத்தினம் கிட்டுவால் கொல்லப்பட்ட விபரம், மட்டக்களப்பில் புளட் மீதான தாக்குதல் பற்றிய விபரம் .கிட்டு மீதான தாக்குதல், ..... என நாவல் பல விடயங்களை நூல் ஆவணப்படுத்துகின்றது நூலின் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தினை இவ்விதமான நூலில் கூறப்படும் தகவல்கள் உறுதி செய்கின்றன.
சுதுமலையில் இலங்கை அரசின் கமாண்டோக்கள் 'ஹெலி காப்டர்' மூலம் வந்திறங்குவதும், அவர்கள் மீதான தாக்குதல்கள் பற்றியும் நூல் எடுத்துரைக்கின்றது. அவ்விதம் இறங்கிய இலங்கைப்படையினரை எவ்விதம் அருகில் முகாமடித்திருந்த அனைத்த இயக்கங்களும் ஒன்று சேர்ந்து முறியடிக்கின்றன என்பதுபற்றியும் நாவல் விபரிக்கின்றது.
அம்மோதல் முடிவடையவும், மீண்டும் உதவிக்கு வந்திருந்த இயக்கமொன்றுடன் மோதல் ஆரம்பிக்கின்றது.
இவை போன்ற பல தகவல்கள்.
இந்நூல் ஆவணப்படுத்தும் விடயங்களில் முக்கியமான இன்னுமொரு விடயம் இதுவரை நான் வாசித்த வேறெந்த வரலாற்றுப்புனைவாலும் இவ்வளவு விரிவாக ஆவணப்படுத்தப்படவில்லை. அது யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்களின் வெளியேற்றம். பாத்திரங்களினூடு ஆறு அத்தியாயங்களில் (அத்தியாயங்கள் 34-39) விபரிக்கப்பட்டுள்ள வெளியேற்ற விபரங்களை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் , பரம்பரை பரம்பரையாகச் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படும் மக்கள் படும் துயரினை உணர்ந்துகொள்வார்கள். குறுகிய நேரத்தில் வாழ்நாள் உழைப்பையெல்லாம், சொத்திகளையெல்லாம் விட்டு விலகும்படி பணிக்கப்படும்போது மக்கள் அடையும் உணர்வுகளை அவ்வத்தியாயங்கள் விரிவாக, வாசிப்பவர் நெஞ்சங்களைப் பாதிக்கும் வகையில் எடுத்துரைக்கின்றன. இவ்விடயம் இந்நூல் ஆவணப்படுத்தும் மிக முக்கியமான விடயங்களிலொன்று என்பேன்.
ஆவணப்படுத்தப்படும் இன்னுமொரு விடயம் தற்கொலைப்போராளியொருவரின் செயற்பாடுகள். எவ்விதம் தற்கொலைப்போராளியொருவர் தயார்படுத்தப்பட்டு, களமிறக்கப்படுகின்றார் என்னும் விடயத்தையும் வேறெந்த ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை மையமாகக்கொண்டு வெளியான நூல்கள் எவற்றிலும் நான் இந்நூலில் வாசித்ததைப்போல் வாசித்ததில்லை.
இந்நாவலின் பிரதான பாத்திரமான அவன் இதுவரை வெளியான தமிழ்ப்புனைவுகளில் உருவகிக்கப்பட்டுள்ள அனைத்துத் துப்பறிவாளர்கள், புலனாய்வாளர்கள் எல்லாரையும் தூக்கிச்சாப்பிட்டு விடுகின்றான். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று ஒரு காலத்தில் ஜெய்சங்கரைக் கூறினார்கள். அவரை வைத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் துப்பறியும் தொடர் நாவல்கள் கூட அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளில் வெளியாகியுள்ளன. ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர், தமிழ்வாணனின் சங்கர்லால், தமிழ்வாணன், சுஜாதாவின் வசந்த் - கணேஷ் இவர்களில் எவருமே 'ஆயுத எழுத்து' நாவலின் நாயகனுக்குக் கிட்ட நெருங்க முடியாது. ஹாலிவூட் ஜேம்ஸ்பாண்ட் போன்றே இவனும் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தலைமாற்றிப் பயணிக்கின்றேன். பணிக்கப்பட்ட பணிகளைச் செய்கின்றான். பெண்களுடன் தொடர்புகளைப்பேணுகின்றான்.
இந்நூல் ஆவணப்படுத்தும் ஏனைய விடங்களில் சிலவாக சர்வதேச ஆயுதத்தரகர்களின் செயற்பாடுகள், அவற்றின் மூலம் பயனடையும் சமூகத்தின் பிரதிநிதிகள் பற்றிய தகவல்கள், இலங்கை அரசுக்குத் தரகர்கள் மூலம் பெறப்பட்ட ஆயுதங்களை எவ்விதம் விடுதலைப்புலிகள் தம் கப்பலொன்றின் மூலம் தந்திரமாகத் தம் பகுதிக்குக் கடத்திச் செல்கின்றார்கள் என்பது பற்றிய விபரங்கள் ஆகியவற்றையும் கூறலாம்.
இந்தியப்படையினரின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை, விடுதலைப்புலிகளுட்பட ஏனைய இயக்கங்களின் செயற்பாடுகளை (புலிகளின் கோணத்தில்) இந்நூல் விபரிக்கின்றது.
ஆயுதப்போராட்டக் காலத்தில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் பலவற்றை நூல் ஆவணப்படுத்துகின்றது. இங்கு விபரிக்கப்பட்ட பல சம்பவங்களைப் புரிந்தவர்கள் பலர் என்றாலும், எல்லாரையும் குறிக்கும் குறியீடாக நாவலின் நாயகனான 'அவன்' விபரிக்கபடுகின்றான். இது நல்லதோர் உத்தி. இவ்விதமொரு உத்தியினனை வேறெந்த எழுத்தாளராவது தம் பாத்திரப்படையில் பாவித்திருக்கின்றார்களா? தெரியவில்லை. நானறிந்த வரையில் இல்லையென்றே கருதுகின்றேன். அவ்விதம் இருந்தாலும் உடனடியாக என் ஞாபகத்துக்கு வரவில்லை.
தான் ஏன் இவ்விதமானதொரு உத்தியினைப் பாவித்தார் என்பது பற்றி நூலாசிரியர் சாத்திரி நூலுக்கான முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும், ஒரே நபருடன் சம்பந்தப்பட்டவை அல்ல; பல நபர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள். ஆனால், இலகுவாக நாவலை நகர்த்துவதற்காக ஒரு கதாநாயகனை உருவாக்கி அவனூடாகவே இறுதிவரை நாவலை நகர்த்தியிருக்கிறேன். அதனால்தான் நாயகனுக்கு நான் பெயரே வைக்கவில்லை. நூலின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை 'அவன்' என்றே அழைத்திருக்கின்றேன். அவன் என்பவன் பலர். அவன், ஒவ்வோர் ஊரிலும் , ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயரிலும் அழைக்கப்பட்டான். பல்வேறு கடவுச்சீட்டுகளில் பல நாடுகளுக்கும் பறந்து திரிந்தான்."
நூல் ஆவணப்படுத்தும் இன்னுமொரு விடயம் பெருமாள் கோயில், துர்க்கையம்மன் கோயில் ஆகியவற்றில் இயக்கம் நடாத்திய கொள்ளை. சாத்திரியின் பார்வையில் அவை நாவலில் விபரிக்கப்பட்டுள்ளன.
இவ்விதமாக சாத்திரியின் 'ஆயுத எழுத்து' நாவல் தவிர்க்கப்பட முடியாத முக்கிய நாவல்களிலொன்றாக விளங்குகின்றது என்றால் அது மிகையான கூற்றல்ல. உண்மையில் இது வெறும் புனைவல்ல; வரலாற்றுப்புனைவு. அண்மைக்கால வரலாற்றை மையமாகக்கொண்ட வரலாற்றுப்புனைவு. முக்கியமான வரலாற்றுப்புனைவு. இவ்வரலாற்றுப்புனைவு நடந்தவற்றைச் சரியா, பிழையா என்று விமர்சிக்கவில்லை. ஆனால் நடந்தவற்றை விபரிக்கின்றது. விமர்ச்சிப்பதை வாசகர்களிடமே விட்டு விடுகின்றது.
ngiri2704@rogers.com
நன்றி: பதிவுகள்.காம்
No comments:
Post a Comment