Thursday, February 22, 2018

தேவகாந்தனின் கந்தில் பாவை பற்றிச்சில கருத்துகள். - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் தேவகாந்தனின் 'கந்தில்பாவை'யை இன்று வாசித்தேன். இது நாவல் மீதான முதற் கட்ட வாசிப்பு. ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைகளை உள்ளடக்கிய நாவல் இது. வெவ்வேறு காலகட்டங்களை உள்ளடக்கிய நான்கு பகுதிகள். ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு அத்தியாயமாக்கி நூலை வகுத்திருக்கின்றார் தேவகாந்தன். பொதுவாக பகுதி 1, பகுதி 2, பகுதி 3 மற்றும் பகுதி 4 என்று பகுதிகளாகப் பிரித்திருப்பார்கள். அப்பகுதிகள் மேலும் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு பகுதிகள் அத்தியாயங்களாகியிருக்கின்றன. தேவகாந்தன் இவ்விதம் நூலினை வகுத்ததற்கு ஏதாவது காரணம் இருக்குமோ அல்லது தற்செயலாக நடந்த நாவலின் பிரிப்பா என்பதை நாவலாசிரியரே அறிவார்.

இந்த நாவல் ஒரு குடும்பத்தின் பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கையை விபரிக்கும் வகையில் பின்னப்பட்டிருப்பதால்,  ஒவ்வொரு 'அத்தியாய'மும் (அல்லது 'பகுதியும்') பல்வேறு காலகட்டத்து ஆளுமைகளின் வாழ்வினை விபரிப்பதால், நாவல் கூறும் பொருளையும், பாத்திரப்படைப்புகளையும் , கதைப்பின்னலையும் தெளிவாக அறிவதற்கு, நாவல் மீதான முழுமையான வாசிப்பு அவசியமானது. அத்தியாயங்களில் ஒன்றைத்தவற விட்டாலும் நாவலின் முழுப்பரிமாணத்தையும் அடைவதில் சிரமம் ஏற்படும் சாத்தியமுள்ளது.

இந்த நாவலின் கூறு பொருள், பாத்திரப்படைப்பு, நான்கு தலைமுறைகளையும் உள்ளடக்கிய கதைப்பின்னல் (Plot) ஆகியவை நன்கு அமைந்திருக்கின்றன. அவை எழுத்தாளர் தேவகாந்தனின் எழுத்துச்சிறப்பினை வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த நாவல் பல்வேறு காலகட்ட வாழ்வியல் அனுபவங்களை உள்ளடக்கியதால் பன்முகப் பரிமாணங்களைக்கொண்டதொரு நாவலாக உருவாகியிருக்கின்றது.

இந்த நாவலை வாசிக்க முன் . முன்னுரையில் நாவலாசிரியர் கூறும் பின்வரும் கூற்றினைச் சிறிது கவனியுங்கள்:


" மனம் , அது சிதைவுறும் கணம், அக்கணத்தின் சூழல் மீண்டுமெழுந்து கிளர்த்தும் அதிர்வுகள், அது பரம்பரை பரம்பரையாக முடிவுறாத் தொடரும் நுட்பங்கள் ஆகிவற்றை அவற்றின் மருத்துவரீதியான பகுப்பும், முதுமக்கள் ஞானமுமான இரட்டைத் தடத்தில் பின்னோட்ட விசையுள்ள ஒரு ஒற்றை வாகனம்போல் இந்நாவலை நகர்த்தியிருக்கிறேன்."

இந்தக்கூற்றின் ஒவ்வொரு சொல்லும் முக்கியமானது. இந்தக்கூற்றை ஆழமாக வாசித்து , இக்கூற்று கூறும் பொருளின் அடிப்படையில் நாவல் மீதான வாசிப்பை நிகழ்த்துவீர்களானால், சிக்கல்கள் நிறைந்ததாக முதல் வாசிப்பில் புலப்படும் இந்நாவலின் கதையின் சிக்கல்கள் நீங்கித்தெளிவாகப் புலப்படும். உண்மையில் இந்நாவல் ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைகளைச்சேர்ந்த நான்கு பெண்களான சுபத்திரா, கனகவல்லி, ருக்மிணி மற்றும் பொன்னரியம் ஆகியோரின் உளச்சிதைவையும், அதற்கான உளவியல்ரீதியிலான காரணங்களையும் ஆராய்கிறது. மதம், அரசியல் , தாம்பத்திய உறவுச்சிக்கல்கள் போன்ற பல காரணங்களை இப்பெண்களின் உளவியல் சிதைவுக்குக் காரணங்களாக நாவல் விபரிக்கிறது. மேலும் பல காரணங்களை நாவலில் தேடி எடுக்கலாம்.

இவை தவிர நாவலின் பல்வேறு காலகட்டங்கள் அவ்வக்காலகட்டத்து மானுடரின் சமூக வாழ்வினையும் எடுத்துரைக்கின்றது. அக்காலகட்டத்தில் பாவித்த சொற்கள் சிலவற்றையும் நாவலில் காண முடிகின்றது. உதாரணமாக நாவலின் இறுதி அத்தியாயம் ஆங்கிலேயர் காலத்து யாழ் மாவட்ட வாழ்வையும், ஆங்கிலேயரின் மதமாற்றச் செயற்பாடுகளையும், தீண்டாமைக்கொடுமைகளையும் விரிவாகவே விபரிக்கின்றது. மானுடரின் காமத்தையும், ஆணாதிக்கம் காமத்தினைத் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டப் பாவிப்பதையும் நாவல் எடுத்துரைக்கின்றது. கிறித்தவ மதம் மாறியாவது நிம்மதியாக வாழ முனையும் கச்சப்பு என்னும் மனிதனுக்கு அவன் வாழ்ந்த காலகட்டத்து ஆதிக்க வெறிச்சமுதாயம் கொடுக்கும் தொல்லைகளை நாவல் விரிவாகவே விபரிக்கின்றது. அதே சமயம் மதம் மாறியதற்காக மேட்டுக்குடிச் சமுதாயம் தம் சமுதாய மனிதனொருவனைக் கொன்றொழிப்பதையும் நாவல் விபரிக்கின்றது.

நாவலில் வரும் வேறு சில உப பாத்திரங்களின் மனச்சிதைவுகளையும் நாவல் எடுத்துரைக்கின்றது. உதாரணமாக இலங்கை அரச படைகளின் அடக்குமுறைக்குத் தன் மகன் கந்தசாமியைப்பறிகொடுத்த அன்னலட்சுமியைக் குறிப்பிடலாம். அதே சமயம் ருக்மிணியின் கணவரின் மனச்சிதைவைக்கூட நாவல் இலேசாகக் கோடிழுத்துக் காட்டுகிறது. அவருக்கு ஏற்பட்டது மனச்சிதைவு என்று நாவல் கூறாவிட்டாலும், குடும்பத்தை விட்டு அடிக்கடி அவர் ஓடுவதும் ஒருவகை மனச்சிதைவையே காட்டுவதாக நான் உணர்கின்றேன்.

மேலும் நாவலின் கட்டமைப்பு குறிப்பாகக் கதைப்பின்னல் (plot) எனக்கு மிகவும் பிடித்ததோர் அம்சம். ஆனால் முன்னுரையில் தேவகாந்தன் " இம்மாதிரியான ஒரு நாவலுக்கு எனக்கு முன் திட்டமிருக்கவில்லை. நிகழ்ந்தது எதிர்பாராதது" என்று கூறியது கண்டு வியந்தேன். காரணம்: அவ்வளவு நேர்த்தியாகக் கதைப்பின்னல், பாத்திரப்படைப்புகள் எல்லாமே நாவலில் அமைந்திருக்கின்றன. இந்த விடயத்தில் அவரது சிந்திக்கும் மனதை அவரது ஆழ்மனம் வழி நடத்தியிருக்கலாமென்றே எனக்குத் தோன்றுகிறது

இந்நாவலில் ஏற்பட்டுள்ள சிறு அச்சுப்பிழையானது ,தனது கட்டமைப்பின் காரணமாக , புரிதலுக்கு ஆழ்ந்த வாசிப்பை வேண்டும் நாவலைப் புரிந்து கொள்வதில் சிலருக்கு சிரமத்தைத்தரக்கூடும். இதனை என்ன பிழையென்று நான் இங்கு கூறாமலே விட்டு விடுகின்றேன். யாராவது கண்டு பிடிக்கின்றார்களா பார்ப்போம்?

இன்னுமொரு முக்கியமான விடயம், என்னைக் கவர்ந்த விடயம் நாவலின் தலைப்பு. 'கந்தில்பாவை' என்ற நாவலின் தலைப்பும், அதனைத்தேர்ந்தெடுத்தற்கான் நாவலாசிரியரின் காரணமும் சிறப்பானவை. நாவலில் ஓரிடத்தில் கூட 'கந்தில்பாவை' என்ற சொல்லினை நீங்கள் காண முடியாது. ஆனால் , அப்படியானால் எதற்காக நாவலுக்கு நாவலாசிரியர் 'கந்தில்பாவை' என்று பெயரினையிட்டார்? அதற்கான காரணத்தைத் தனது முன்னுரையில் தேவகாந்தன் எடுத்துரைக்கின்றார் பின்வருமாறு:

"மணிமேகலைக் காப்பியத்தில் வரும் சக்கரவாளக் கோட்டத்துக் கந்தில் பாவை என்னில் வெகு ஆழமாகப் பதிந்த இலக்கியவுரு. காப்பியத்தின் கந்தில் பாவை முற்பிறப்பில் நடந்ததும் ,நடக்கப்போவதும் உரைத்து நிற்கிறது. அதுபோல் மணிமேகலா தெய்வமும், சம்பாதியும் கூட உரைத்தபோதிலும் கந்தில் பாவையின் இருப்பும், மயனால் அமைக்கப்பட்ட அதன் தோற்றமும் என்னில் தோற்றக் கனவுகள் உண்டாக ஏதுவாயின மட்டுமில்லை 'மன்பெரு தெய்வ கணங்களின் உள்ள'தாயினும் கந்தில் பாவை நிறைந்த மானுடத் தன்மையும், முதுமைத்தோற்றமும் கொண்டிருந்ததாக எனக்குப் பட்டது......காப்பியத்தில் சுதமதியும், மணிமேகலையும் கந்தில் பாவையினாலேயே வழி நடத்தப்படுகின்றார்கள். இந்நாவலின் முக்கியமான அம்சம் முதுமக்களின் அனுபவங்களும், அவற்றினூடாகக் கிளரும் ஞானங்களுமே. அவர்களின் ஞானமுரைப்பை கந்தில் பாவையின் நிகழ் பிறவியில் வருவதும், கடந்த பிறவியில் வந்ததும் உரைத்தலுக்கு இணையாய்க் காண என்னால் அபூர்வமாய் முடிந்திருந்தது. அதனால் நாவலின் தலைப்பு 'கந்தில் பாவை'யாயிற்று.: [கந்தில் பாவை, பக்கம் 10]

இனி நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் பார்வதி ஆச்சி, ஆச்சிப்பிள்ளை, நாகாத்தை போன்ற முதுபெண்டிர்களையும் , கந்தில் பாவையையும் , நாவலாசிரியரின் 'கந்தில் பாவை' பற்றிய மேலுள்ள கூற்றினையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நாவலின் பெயருக்குரிய காரணத்தை நிச்சயம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

"கதையின் பின்னோட்டத்தினால் விளக்கக் குறைவோ, நான்கு பகுதிகளாக அமைந்திருப்பதில் இவற்றுக்கிடையேயான ஒரு தொடர்பு ஈடாட்டமோ தோன்றக்கூடாது என்பதற்காக வம்ச வழிப்பட்டியலொன்று நாவலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது" என்று தனது முன்னுரையில் தேவகாந்தன் கூறுகின்றார். ஆனால் காலச்சுவடு பதிப்பகம் அதனை மறந்து விட்டது. ஆனால் அவ்விதம் மறந்ததும் ஒரு விதத்துக்கு நல்லதுதான். ஏனென்றால் நாவலின் முழுப்பகுதிகளையும் ஆழ்ந்து வாசிப்பதை அந்த மறதி தூண்டுகிறது.

மொத்தத்தில் 'கந்தில் பாவை' 'கந்தல் பாவையல்ல'. தேவகாந்தன் நிச்சயம் பெருமைப்படலாம்.

ngiri2704@rogers.com

நன்றி: பதிவுகள்.காம்

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்