Monday, February 19, 2018

கவிதை 'நள்யாமப்பொழுதொன்றில்... - - வ.ந.கிரிதரன் -

- அண்மையில் முகநூலில் எனது கவிதையான 'நள்யாமப்பொழுதொன்றில்...' கவிதையினை பதிவு செய்திருந்தேன். அது பற்றி நிகழ்ந்த சிறு கருத்துப்பரிமாறல்கள் சுவையானவை. வாசகர்களுக்கும் பயனுள்ளவையாக அமையுமென்று கருதி இங்கும் பதிவிடுகின்றேன். -

கவிதை 'நள்யாமப்பொழுதொன்றில்..

சொல்லவிந்து, ஊர் துஞ்சும்
நள்யாமப்பொழுதுகளில்
விசும்பு நீந்தி ஆங்கு
நீந்தி விளையாடிடும் விண்மீன்கள்தம்
வனப்பில் எனை மறக்கும்
தருணங்களில்,
இராப்பட்சிகள் குறிப்பாக
ஆந்தைகள் சிந்தனைச்சிறகடிக்கும்.
கூரிய அவைதம் பெருங்கண்
விரித்து
இரை தேடி இரவு முழுக்கப்
பறந்து திரியும்.
ஆந்தைகளுக்குப் போட்டியாக
அவ்வப்போது நத்துக்களும்
குரல் கொடுக்கும்.
மீன்களே! உங்கள் நீச்சலின் காரணத்தை
விளக்குவீரா?
ஆந்தைகளே! நத்துகளே! உங்கள்
இருப்பின் காரணத்தை எனக்கும்
சிறிது பகர்வீரா?
இரவுவான் வியக்கும் பண்பு
தந்தாய்! எந்தையே
இத்தருணத்தில் உனை நான்
என்
நினைவில் வைக்கின்றேன்.



முகநூல் எதிர்வினைகள்:

Paiwa Asa: இரவுவான் வியக்கும் பண்பு என்கிற படிமத்தில் கவிதை விரிகிறது. வாழ்த்து

Giritharan Navaratnam: நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கும் , அவதானத்துக்கும். மேலும் சில படிமங்களுள கவிதையில்.. இராப்பட்சி, சிந்தனைச்சிறகு.. உங்கள் அவதானத்துடன் இவற்றையும் சேர்த்துப் பார்ப்பது ஏனையோருக்கு இக்கவிதையின் புரிதலை இலகுவாக்கும் என்தால் இவற்றையும் இங்கு குறிப்பிடுகின்றேன்.

Paiwa Asa கிரி, இவைபற்றி எழுதலாம். எந்தளவுக்கு நம்மவர் பதிவுகளை ஆழ்ந்து வாசிப்பார்களோ தெரியாதே.

Giritharan Navaratnam : Paiwa Asa உங்களைப்போல் ஒருவர் வாசித்தாலே இதன் நோக்கம் நிறைவேறி விட்டது

Paiwa Asa : அதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

Vadakovy Varatha Rajan: ஆந்தை எது நத்து எது நான் இரண்டும் ஒன்று என்றல்லவா நினைத்திருக்கிறேன்.

Giritharan Navaratnam: என் வவுனியா அனுபவத்தின்படி நத்து ஆந்தையினம். உருவத்தில் சிறியது. சிறிய வகை ஆந்தை. இவ்விதம் தான் அறிந்திருக்கின்றேன். வவுனியாவில் என் பால்ய காலத்தில் இப்பறவையின் குரலை இரவினில் கேட்கும்போது அப்பா நத்து கத்துகின்றது என்பார். அப்பொழுது அப்பா நத்து ஆந்தையினம் ஆனால் சிறியது என்று கூறியது நினைவுக்கு வருகின்றது. இருந்தாலும் என்னைப்பொறுத்தவரையில் நத்து என்பது ஆந்தையினத்தில் சிறிய வகையாகவே நினைவில் வைத்திருக்கின்றேன். பருந்தில் பல வகைகள் இருப்பதுபோல் ஆந்தையிலும் இருப்பதாக எண்ணிக்கொள்கின்றேன். இவ்விடயத்தில் வவுனியா நண்பர்கள்தாம் உதவ வேண்டும். மேலும் கவிதையென்பது உணர்வினை அடிப்படையாகக் கொண்டது. என் உணர்வில் ஆந்தை, நத்து பற்றிப்பதிந்துள்ள உணர்வுகளின் அடிப்படையில்தான் இங்கு அவற்றைப் பாவித்திருக்கின்றேன். இங்கு பொதுவான அளவில் காணப்படும் பெரிய ஆந்தைகள் ஆந்தைகள் என்றும், நான் அறிந்த வன்னி வகை , அளவில் சிறிய ஆ்ந்தைகள் நத்துக்கள் என்றும் பாவித்துள்ளேன்.

Giritharan Navaratnam: நத்து என்பதற்கு விக்கிபீடியா பின்வருமாறு விடையளித்துள்ளது: நத்து = Ceylon Scops Owl . scops என்னும் சொல் பழைய ஆங்கிலச்சொல். Scops owl பற்றி விக்சனரி தளத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: Etymology: Latin scops, from Ancient Greek σκώψ (skṓps, “a type of small owl”), - A small European migratory owl, Otus scops, that winters in sub-Saharran Africa. இவற்றிலிருந்து ஒருவகை சிறிய ஆந்தை என்று பொருள்படுகின்றது. ஆக இலங்கையிலுள்ள ஆந்தைகள் எல்லாமே சிறியவையா அல்லது வவுனியாப்பகுதி ஆந்தை சிறியதா அல்லது எல்லா வகை ஆந்தைகளும் (சிறிய , பெரிய ) ஆந்தைகள் இலங்கையில் இருக்கின்றனவா குறிப்பாக வவுனியாவில். அவ்விதம் இருப்பதால்தான் அங்குள்ள சிறிய வகை ஆந்தைகளைக் குறிப்பிட அவற்றை நத்து என்று குறிப்பிட்டார்களா என்பது ஆய்வுக்குரியது. நன்றி திரு வடகோவையாரே. உங்களது சந்தேகம் இது பற்றிய விரிவானதொரு ஆய்வுக்கு வழி வகுத்துள்ளது.

ngiri2704@rogers.com

No comments:

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...

அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செய...

பிரபலமான பதிவுகள்