Thursday, February 22, 2018

பாரதியும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும் - வ.ந.கிரிதரன் -

மகாகவி பாரதியார்ஒரு சில ஆய்வாளர்கள் பாரதி ஐரோப்பியப் பெண்களை விடுதலை பெற்ற பெண்களாகக் கருதியதாகவும் அதன் மூலம் அவனால் பால் கவர்ச்சியையே விற்பனைப் பண்டமாகப் பயன்படுத்தும் முதலாளித்துவத்தை அறிய முடியவில்லையென்றும் கருதுகின்றார்கள். இது மிகவும் தவறான கூற்று. உண்மையில் பாரதி அப்படித்தான் கருதியிருந்தானாவென்றால் அதுதானில்லை. அவனது 'மாதர்' தொகுதியிலுள்ள 'நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்' என்ற கட்டுரை இதனைத்தான் விளக்கி நிற்கின்றது.

"ஆண்,பெண் இருபாலாரும் பரிபூர்ண சமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இரு பாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டைச் சமைக்க வேண்டுமென்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம்" என மேற்படி கட்டுரையில் ஓரிடத்தில் ஐரோப்பிய நாகரீகத்தின் சமவுரிமை பற்றிய நோக்கு பற்றிக் குறிப்பிடும் பாரதி மேற்படி கட்டுரையில் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றான். 

"...அவற்றைப் பார்க்கும் போது நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான, உயர்ந்த பக்குவ நிலமை மேற்படி போல்ஷ்விக் விவாக சம்பிரதாயங்களீல் எய்தப்பட்டிருகிறதென்று தெளிவாக விளங்குகின்றது...  பெண்களிற்கு விடுதலை தாங்கள் வேறுபல ஜாதியர்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்களென்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால், ஐரோப்பாவின் இதர பகுதிகளைக் காட்டிலும் நவீன ரஷ்யா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யட்மாகத் தெரிகின்றது..."

இவையெல்லாம் விளக்கி நிற்பவை தானென்ன? 'ஆணிற்குப் பெண்நிகர்' என்னும் கருத்தை வலியுறுத்தும் ஐரோப்பிய நாகரீகத்தின் நோக்கினை வரவேற்றாலும், உண்மையிலேயே ஐரோப்பாவின் ஒருபகுதியான நவீன ரஷ்யாவிலேயே பெண்களின் நிலைமை சிறப்பாகவிருப்பதாக அவன் கருதுகின்றான். இதனையே மேற்படி கட்டுரையின் இறுதிப் பகுதியில் வரும் பின்வரும் பகுதி உறுதிப்படுத்துகின்றது.


"..இப்படிப்பட்ட நம்முடைய ஸ்திரிகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரிகளின் விடயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களூடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்தச் சக்தியினாலே கீழே வீழ்த்திற்றென்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படுத்தும். நாம் ஐரோப்பியர் காட்டும் நெறிகளை முற்றிலுமே கைப்பற்றிக் கொள்ளுதல் அவசியமில்லை...  'ஆண்களிற்கும் பெண்களிற்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலாரும் சமானமாகவே கருதப்படுவார்கள்' என்று ருஷியச் சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தை அனுசரித்தல் மிக, மிக,மிக அவசரம்."

இவற்றிலிருந்து இறுதியாக நாம் வந்தடையக் கூடிய முடிவுகள் இவைதான்:
ஆண்-பெண் சமவுரிமை பற்றிய ஐரோப்பிய நாகரீகத்தின் நோக்கினை வரவேற்ற போதிலும் பாரதி ஐரோப்பாவின் இன்னுமொரு பகுதியான நவீன ருஷ்யாவிலேயே மேற்படி நோக்கம் நிறைவேற்றப் பட்டுள்ளதாகக் கருதுகின்றானே தவிர ஒரு சில ஆய்வாளர்கள் கருதுவது போல் ஐரோப்பாவின் முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த பெண்களை நிச்சயமாக பாரதி விடுதலை பெற்ற பெண்களாகக் கருதவில்லையென்பதே. மேற்படி ஆய்வாளர்கள் விட்ட பிழைக்குக் காரணம் நவீன ருஷியாவை ஐரோப்பாவின் ஒருபகுதியாகக் கருதாமல் முதலாளித்துவ ஐரோப்பாவையே ஐரோப்பாவாகக் கருதியது தான். பாரதி ருஷியாவில் நிலவிய ஆண்-பெண் சமவுரிமை சம்பந்தமான சட்டங்களைப் புகழும்போது அதனை ஐரோப்பிய நாகரீகத்தின் உயர்ந்த வடிவமாகக் கொள்வதை மேற்படி ஆய்வாளர்கள் தவறாக விளங்கி விட்டனர் போலும். அதே சமயம் பாரதி ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெண்களிடையே நிலவிய 'கட்டுபாடற்ற காதல்' போன்ற கோட்பாடுகளைப் பலமாக எதிர்க்கவும் தவறவில்லை. 'விடுதலைக் காத'லென்ற அவனது 'சுயசரிதை'க் கவிதையில் வரும் பின்வரும் பகுதி கூறுவதென்ன?

"காதலிலே விடுதலையென்றாங்கோர் கொள்கை
கடுகி வளர்ந்திடுமென்பார் யூரோப்பாவில்.
மாதரெல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னார்.
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால்
வேதனையொன்றில்லாதே பிரிந்து¢ சென்று
வேறொருவன் தனைக் கூட வேண்டும் என்பார்.
'வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்.
விடுதலையாம் காதலெனில் பொய்மைக்காதல்'.

பாரதி உண்மையிலேயே ஒரு அபூர்வமான மனிதன். மனித சமுதாயத்தைப் பாதிக்கும் சகல விடயங்களைப் பற்றியும் அவன் தன் கவனத்தைத் திருப்பியிருக்கின்றான்.
இயற்கை, சமுதாயம், அரசியல், தத்துவம், பெண்விடுதலை, வறுமை, மக்கள் விடுதலையென்று அவன் பாடாத துறையென்று எதுவுமேயில்லை. பெண்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த பாரதியால் 'கட்டுப் பாடற்ற காதல்' போன்ற கருத்துக்களை ஏற்க முடியவில்லை. சமுதாயத்தில் அடிமைகளாக வாழும் பெண்கள் ஆண்களைப் போல் சமவுரிமை பெற்றவர்களாக வாழ வேண்டுமென்பதில் பாரதி தீவிரமாகயிருக்கின்றான். அவனது கவிதைகள் பால்ய விவாகம் போன்ற கொடுமைகளை எதிர்க்கின்றன. பெண்களின் கல்விக்காக அவனது கவிதைகள் குரல் கொடுக்கின்றன. விதவைகளின் மறுமணத்தை அவை வரவேற்கின்றன.அதே சமயம் 'கற்பை'ப் பற்றி வலியுறுத்தும் போது அதனை ஆண்-பெண் இருவரிற்குமே பொதுவாக வைக்கும் பாரதி , ஒருவனிற்கு ஒருத்தியென்ற ஒருதார மணமுறையையே பலமாக ஆதரிக்கின்றான்.இதனால் தான் அவனால்

"காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி."

என்று 'பெண்கள் விடுதலைக் கும்மி'யில் கும்மியாட முடிகின்றது

'பதிவுகள்' அக்டோபர் 2001 இதழ் 22

ngiri2704@rogers.com

No comments:

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி...

அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செய...

பிரபலமான பதிவுகள்