Monday, February 3, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) புலம் பெயர்தல்!


- மானசரோவர்.காம், திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியான சிறுகதை. -

நிலத்திற்கு மேல் ஐந்து அடுக்குகளையும் கீழ் ஐந்து அடுக்குகளையும் கொண்ட வாகனத்தரிப்பிடமொன்றின் பாதுகாவலர் ஆசைப்பிள்ளை. ஆசைப்பிள்ளை ஒரு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர். ஊரில் அரச திணைக்களமொன்றில் 'கிளாக்க'ராகக் (குமாஸ்தாவாக) காலத்தை ஓட்டியவர் கிளாக்கர் ஆசைப்பிள்ளை. இலங்கையில் அரசபடைகளின் அட்டகாசம் அதிகமாகயிருந்த சமயத்தில் நாட்டை விட்டுத் தலை தப்பினால் புண்ணியமென்று கனடாவுக்கு தலையை மாற்றி ஓடிவந்தவர். ஆரம்பத்தில் கோப்பை கழுவிப்பார்த்தார். தொழிற்சாலையொன்றைக் கூட்டிக் கழுவிப்பார்த்தார். கிளாக்கராக ஊரில் வலம் வந்தவரால் தொடர்ந்தும் இத்தகைய வேலைகளைச் செய்ய முடியவில்லை. இதற்கு எளிதான வழியாகப் பாதுகாவலர் வேலை படவே ஒரு பிரபல பாதுகாவலர் நிறுவனமொன்றில் பாதுகாவலராக வேலைக்கமர்ந்து விட்டார். நள்ளிரவிலிருந்து அதிகாலைவரை வேலை. அன்றும் வழக்கம் போல தன் வேலையை ஆரம்பித்தார். அப்பொழுது தான் அந்த வெள்ளையினத்தவன் தனது காரினைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வந்தான். வந்தவன் ஆசைப்பிள்ளையைப் பார்த்ததும் அவருக்கு முகமன் கூறினான்.

"இனிய காலை! நீ எப்படியிருக்கிறாய்?" என்றவனுக்குப் பதிலாக ஆசைப்பிள்ளை பின்வருமாறு கூறினார்:

"நான் நல்லாகத் தானிருக்கிறேன். நீ எப்படியிருக்கிறாய்?" என்றார்.

"நன்றி நண்பனே! நானும் நலமே" என்ற வெள்ளையினத்தவன் திடீரெனக் குண்டொன்றினைத் தூக்கிப் போட்டான்.

"இரண்டாவது தளத்தில் 'பா'மிருப்பது உனக்குத் தெரியுமா?"

இரண்டாவது தளத்தில் 'பாம்'மா...' ஆசைப்பிள்ளைக்குக் குலை நடுங்கியது. பாதுகாவலர் தனது பயத்தினை வெளிப்படுத்தலாமா? அவமானமில்லையா? எனவே தனது பயத்தினை மறைத்தபடி அவர் கேட்டார்

"எனக்கு அறிவித்ததற்கு உனக்கு பல நன்றிகள் உரித்தாகட்டும். அது சரி இரண்டாவது தளத்திலிருப்பது 'பாம்' தானென்பதை எவ்வளவு உறுதியாகக் கூறுகின்றாய்?"

அவரது இந்தக் கேள்விக்கு அந்த வெள்ளையினத்தவன் சிரித்தான். "எனக்குத் தெரியாதா? 'பாம்'மைக் கண்டுபிடிப்பதிலென்ன சிரமமிருக்கமுடியும்?"

"எனக்கு அறியத் தந்ததற்கு உனக்கு நன்றிகள். கவலையை விடு. நான் கவனித்துக் கொள்கின்றேன்."

அந்த வெள்ளையினத்தவன் அப்பால் நகர்ந்ததும் ஆசைப்பிள்ளையின் 'கிளாக்கர்' மூளை வேலை செய்யத் தொடங்கி விட்டது. எவ்வளவு இலகுவாக இந்த வெள்ளையன் 'பாம்' இருப்பதைக் கூறி விட்டுச் சென்று விட்டான். துணிச்சல்காரன் தான். குண்டென்றதுமே ஆசைப்பிள்ளைக்குக் குலையே நடுங்கி விடுகிறது. ஊரில் இலங்கை விமானப்படையின் விமானங்கள் பொழிந்த குண்டு மழை ஞாபகத்தில் வந்து விடுகிறது. அதில் மடிந்த அவரது நண்பர்கள் பலரின் நினைவுகள் தோன்றி விடுகின்றன. இந்த வெள்ளையனுக்கோ இந்தக் குண்டுச் சமாச்சாரமே அற்பமான விடயமாகவிருந்து விடுகிறது. இப்பொழுது ஆசைப்பிள்ளையைப் பல எண்ணங்கள் சூழ்ந்து ஆட்டிவைக்கத் தொடங்கின. முதலில் இந்த 'பாம்'மை அப்புறப்படுத்த வழி பார்க்க வேண்டும். மிகவும் கவனமாக எட்டவிருந்து ஆராய வேண்டும். அதன் பின் காவல் துறையினருக்கு அறிவிக்கலாமா என்று தன்னைத் தானே ஒருமுறை கேட்டுக் கொண்டார். இந்த 'பாம்' ஏற்கனவே ஆயத்தமான நிலையிலுள்ள 'நேரக்குண்டு' (Time bomb) ஆக இருந்து விட்டால்... வெடித்து விட்டால்...அவருக்கு ஊரில் அவரையே நம்பியிருக்கும் மனைவி , குழந்தைகளின் ஞாபகம் வந்தது. 'கதிர்காமக் கந்தா நீதான் என்னை இந்த இக்கட்டிலையிருந்து காப்பாற்ற வேஎண்டும்' என்று மனதில் பலமுறை வேண்டிக் கொண்ட ஆசைப்பிள்ளை இறுதியிலொரு முடிவுக்கு வந்தார். காவல்துறைக்கு அறிவிப்பதற்கு முதலில் அந்த வெள்ளையன் கூறியது உண்மைதானா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த வெள்ளைக்காரரையும் நம்ப முடியாது. சில நேரங்களி சரியான வேடிக்கைப் பேர்வழிகளாகயிருந்து விடுகின்றார்கள். ஆராய்ந்து பார்க்காமல் எதற்கும் முடிவெடுக்கக் கூடாது. இவ்விதமானதொரு சூழலில் ஆசைப்பிள்ளை இரண்டாவது தளத்திற்குச் சென்று பார்க்க முடிவு செய்தவராகப் புறப்பட்டார். ஆனால் உள்ளூர அந்தக் குண்டு வெடித்து விட்டாலென்றதொரு பயமும் இருக்கத் தான் செய்தது. அதற்கு முதல் முன்னெச்சரிக்கையாகத் தனது குறிப்புப் புத்தகத்தில் 'பாம்' பற்றிய வெள்ளையனின் தகவல் பற்றிக் குறிப்பிடவும் அவர் தவறவில்லை.

அந்த வாகனத்தரிப்பிடத்திற்கு வடக்கிலும் தெற்கிலுமாக இரு படிக்கட்டுகளிருந்தன. அந்த வெள்ளையினத்தவன் குறிப்பிட்டது தெற்குப் படிக்கட்டினை. ஆசைப்பிள்ளையார் வடக்கிலிருந்த படிக்கட்டினைப் பாவித்து ஐந்தாவது தளத்திற்குச் சென்று அங்கிருந்து ஒவ்வொரு தளமாகக் கீழிறங்கி வந்தார். ஒவ்வொரு தளத்திற்குமான படிக்கட்டுகளுக்கான தரிப்பிடத்தில் நின்று நிதானமாகச் சோதனை செய்து பார்த்தார். இவ்விதமாக ஒவ்வொரு தளமாகச் சோதனை செய்து கொண்டு வந்தவர் அந்த வெள்ளையன் குறிப்பிட்ட இரண்டாவது தளத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு வீடற்ற வாசிகளிலொருவனான ஜோர்ஜ் மூலையில் படுத்திருந்தான். ஜோர்ஜ் முன்பு நல்லதொரு வேலையிலிருந்தவன். மனோநிலைப் பாதிப்பினால் வீடற்றவனாகி இவ்விதம் அலைந்து கொண்டிருந்தான். இவருக்கு அவன்மேல ஒருவிதப் பரிதாபமிருந்த காரணத்தினால் அவனை அவ்விதம் இரவுகளில் துயில்வதற்கு அனுமதித்திருந்தார். பாவம் இவனைப் போன்ற பல வீடற்றவர்களை இந்த டொரோண்டோ மாநகரின் கீழ்நகர்ப் பகுதியில் காண முடியும். நகரிலுள்ள 'மான் ஹோல்' மூடிகளின் கணகணப்பில் இரவுகளை வானமே கூரையாகக் கழிக்கும் இவ்விதமான பல வீடற்றவர்களை ஆங்காங்கே காண்பதென்பது இந்நகரின் அன்றாட இரவுக் காட்சிகளில் சாதாரணமானதொரு நிகழ்வே. இவர்களுக்குப் போர்வைகள் வழங்க, சூடான உணவு வழங்க..எனப் பல இலாப நோக்கற்ற ரீதியில் இயங்கும் சமூக சேவை ஸ்தாபனங்களும் இம்மாநகரில் நிறையவேயிருந்தன.

மனித நடமாட்டம் கண்ணயர்ந்திருந்த அந்த வீடற்றவனை ஆழ்ந்த தூக்கத்திலிருந்து இலேசாக எழுப்பி விட்டது. வந்தது இவர்தானென அறிந்ததும் இலேசாக இஅவரைப் பார்த்தொரு முறுவலைத் தவள விட்டான். ஆசைப்பிள்ளை வந்த வேலையில் கண்ணும் கருத்துமாகச் சில கணங்களைக் கழித்தார். பாதுகாவலராகச் சுற்றுப் புறத்தை ஒரு கணம் நோட்டமிட்டார். அந்த வெள்ளையன் குறிப்பிட்டது மாதிரி எந்தவொரு 'பாம்' இருந்ததற்கான தடயங்களையும் அவரால் அவதானிக்க முடியவில்லை. இவனிடமே சிறிது விசாரணை செய்து பார்த்தாலென்னவென்று பட்டது.

"என் நண்பனே. எவ்வளவு நேரமாக இங்கிருக்கிறாய்..." என்று அவனை விளித்தார்.

படுத்திருந்தவன் 'நான்..?' என்று சைகையில் தன்னைக் காட்டி ஒரு கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தான்.

"ஆம். உன்னைத்தான் நண்பனே...எவ்வளவு நேரமாக இங்கேயிருக்கிறாய்? வந்து நீண்ட நேரமாகிவிட்டதா?" என்றார்.

'இரண்டு மணித்தியாலங்கள்' என்பதை விளக்கும் வகையில் அவன் கை விரல்களை விரித்துக் காட்டினான்.

"இரண்டு மணித்தியாங்கள்...?"

'ஆம்'என்பதற்கு அடையாளமாக அவன் தலையை அசைத்தான். "நல்லது நண்பனே! உன் தூக்கத்தினைக் கலைத்ததற்கு என்னை மன்னித்துக் கொள்" என்று கூறியபடியே அப்பால் நகர்ந்தார் ஆசைப்பிள்ளை. அந்த நிலையிலும் அந்த வீடற்றவனுக்கு அவரைப் பார்த்து இலேசாகச் சிரிப்பு வந்தது. அவனை அவ்விதம் படுப்பதற்கு அனுமதி கொடுக்காது கலைக்க வேண்டியவர் அவனைப் பார்த்து மன்னிப்புக் கேட்டுச் செல்கின்றாரே என்று எண்ணினானோ?

ஆசைப்பிள்ளைக்கோ அந்த வெள்ளையன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவரை அவன் எவ்வளவு கேலியாக எண்ணி விட்டான். அவர் தான் எவ்வளவு பெரிய கண்டிப்பான பாதுகாவல் அதிகாரி. அவரை எவ்வளவு கீழ்த்தரமாக அவமதித்து விட்டான் அந்த வெள்ளையன். அவனை மீண்டுமொருமுறை கண்டால் அவனுக்கு நல்லதொரு பாடம் படிப்பிக்க வேண்டும். இவ்விதமாகப் பொய்யான வதந்திகளைப் பரப்புவது எவ்வளவு தவறான , சட்டவிரோதமான செயலென்பதை அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். இதனைக் காவல் துறையினருக்கு அறிவித்தாலே போதும் ..அவ்வளவுதான் அவன் மேல் வழக்குத் தொடர்ந்து உள்ளே தள்ளி விடுவார்கள். இவ்விதமாகப் பல்வேறு எண்ணங்களில் மூழ்கினார் ஆசைப்பிள்ளை. அந்த வீடற்றவன் அங்கே கடந்த இரு மணித்தியாலங்களாகப் படுத்திருக்கின்றான். அந்த வெள்ளையனோ பத்து நிமிடங்களுக்கு முன்னர் தான் 'பாம்' பற்றி அவருக்கு அறிவித்திருந்தான். எனவே அந்த வெள்ளையன் வேண்டுமென்று தான் அவ்விதம் கூறியிருக்க வேண்டும். அவருடன் அவனுக்கு ஒரு விளையாட்டு. ஊரிலை அவர் எவ்வளவு பெரியதொரு 'கிளாக்கர்'. அதுவும் அரசத் திணைக்களக் கிளாக்கர். அவரைப் போய் எவ்வளவு கிள்ளுக்கீரையாக எண்ணி விட்டான் அந்த வெள்ளையன். ஆனால் புலம் புலம் பெயர்ந்த தமிழரான ஆசைப்பிள்ளையார் ஒன்றை மட்டும் மறந்தே விட்டார். உச்சரிப்பு (Accent) கூடச் சில சமயங்களில் எவ்வளவு தூரம் அர்த்தங்களுடன் விளையாட முடியுமென்பதை அவர் மட்டும் உணர்ந்திருந்தால்.... 'பம்'மிற்கும் (Bum) 'பாமி'ற்கு (bomb)மிடையிலுள்ள உச்சரிப்பினை மட்டும் அவர் சரியாக விளங்கியிருந்தால்...அந்த வெள்ளையன் 'பம்'மென்றது அவருக்கு 'பாம்'மாகப் பட்டிருக்குமா? ஆனால் பேச்சு வழக்கில் ஊரில் 'பாம்' என்று கூடக் கூறுவதில்லை. 'அங்கை பம்ஸ் அடிச்சிட்டான் போலைக் கிடக்கிறது' என்று 'பம்' என்று கூறிக் கூறி ஒரு மொழியில் ஒரு சொல்லுக்குப் பல்வேறு அர்த்தங்கள் இருப்பதைக் கூடக் கிளாக்கர் ஆசைப்பிள்ளையால் அறிய முடியாமல் போய் விட்டதை....அறியாமை எனலாமா? இல்லை புலம் பெயர்தலில் பதிவு செய்யப்பட வேண்டிய முக்கியமான அனுபவங்களிலொன்றாகக் குறிப்பிடலாமா? மொழியின் உச்சரிப்புக் கூடப் புலம் பெயர்தலில் பதிவு செய்யப் படவேண்டிய முக்கியமான அனுபவமொன்றினைத தந்து விடுவதற்குக் காரணங்களொன்றாகப் புலன் பெயராத புலம் பெயர்தல் இருந்து விடுகிறதா? குறித்தலில் குறிப்பிடுகளின் அர்த்தங்கள் கலாச்சாரத்திற்கேற்ப மாறுபடுவதன் சாட்சியாக கிளாக்கர் ஆசைப்பிள்ளையின் புலம்பெயர்தலின் அவதாரமான 'பாதுகாவலர்' ஆசைப்பிள்ளையின் அனுபவங்கள் இருந்து விடுகின்றனவா?

நன்றி: மானசரோவர்.காம், திண்ணை, பதிவுகள்.

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்