Monday, February 3, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (4): சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!


ஈழநாடு (கனடா) பத்திரிகையில்
[ பதிவுகள், திண்ணை, ஈழநாடு (கனடா) ஆகியவற்றில் வெளியான இச்சிறுகதை ஞானம் சஞ்சிகை வெளியிட்ட புலம்பெயரிலக்கியத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.]

இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். 'உனக்கம்மா இந்த ஒரு புத்தகத்திற்குப் பதிலாக இரண்டு 'துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்' ( The unfortunate events ) புத்தகங்களை வாங்கித் தருகிறேன்' என்று வாங்கித் தந்து விட்டார். லெமொனி சினிக்கெட்டின் 'துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்' தொடரும் எனக்கு மிகவும் விருப்பமான தொடர் தான். இந்ததொடரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் மிஸ் எலிஸபெத். எனது கிளாச் டீச்சர். தாய் தகப்பனில்லாத வயலட், கிளாஸ், குழந்தை சனியை பொல்லாத ஓலாவ் படுத்தும் பாடிருக்கிறதே. பாவம் அவர்கள். அவர்களது அப்பா அம்மாவை இந்தப் பொல்லாத ஓலாவ்தான் கொன்று விட்டான். இப்பொழுது இவர்களின் சொத்தினை அடைவதற்கும் முயன்று கொண்டிருக்கின்றான். திரு. போ (Mr.Poe) மட்டுமில்லையென்றால் இவர்களது பாடு இன்னும் அதிகத் துன்பம் நிறைந்ததாகவிருந்திருக்கும். இந்தப் புத்தகங்களென்றால் எனக்கு ரொம்பவும் உயிர். அப்பாவுக்கும் தான். எந்த நேரமும் புத்தகம் புத்தகமாய் வாங்கி வருவார். ஆனால் ஒவ்வொருமுறையும் இந்தத் தொடர் புத்தகங்களை வாங்கித் தருவதற்கு மட்டும் அப்பா எப்பொழுதுமே முதலில் தயங்கத் தான் செய்கிறார். அது தான் ஏனென்று இன்னும் எனக்குப் புரியவில்லை. இப்படித்தான் மேரி பாப் ஆஸ்பார்னின் மந்திர மர வீடு (Magic Tree House) தொடர் நூல்களையும் முதலில் வாங்கித் தர அப்பா தயங்கிக் கொண்டிருந்தார். எனக்கு மிகமிகப் பிடித்த தொடர் இது தான். ஜக்கும் ஆன்னியும் ஒவ்வொரு முறையும் மந்திர மர வீட்டிலுள்ள புத்தகங்களினூடு கடந்த காலம், வருங்காலமென்று அலைந்து திரிந்து வருவதைப் போல் எனக்கும் அலைந்து திரிந்து வர ஆசைதான். நாங்கள் இருப்பதோ நகரத்துத் தொடர்மாடி இல்லமொன்றில். இதற்கெல்லாம் சாத்தியமேயில்லை.அப்பா எப்பொழுதுமே சொல்லிக் கொண்டுதானிருக்கிறார் 'கொஞ்சம் பொறம்மா! இன்னும் இரண்டு வருடங்களிற்குள் வீடு வாங்கி விடுகின்றேன்' என்று. இந்த அப்பாவை ஒரு போதுமே நம்ப முடியாது. ஆனால் அப்பவுக்கு நான் நிறையத் தொந்தரவு தான் செய்கின்றோனோ தெரியவில்லை. பாவம் அப்பா! என்னால் அவருக்கு நிறையச் செலவு. தொலைக் காட்சியில் செய்திகள் பார்ப்பதற்கு அப்பாவுக்கு என்னால் நேரமே கிடைப்பதில்லை. பாடசாலை இல்லாத நேரங்களில் தூங்கப் போகும் மட்டும் எனக்குத் தொலைக்காட்சி பார்க்கவேண்டும். எனக்குப் பிடித்தமான காட்சிகள் பார்த்துக் கொண்டிருப்பேன். 'டி.வி.ஒ.கிட்ஸ்' நிகழ்ச்சியினை நடத்தும் பில், யூலி ஒன்று, யூலி இரண்டு, படி (Patty), சிசெல் எல்லோரும் நன்றாக நடத்துவார்கள். ஆனால் எனக்குப் பிடித்தவை 'பெரு வெடிப்பு' (The Big Bang) காட்சி தான். வயலட் பேர்லினும், ஹேரித் ஜோன்ஸ்சும் இணைந்து நடாத்தும் நிகழ்ச்சி. விளையாட்டுகள், புதிர்கள் எல்லாவற்றையும் எவ்விதம் செய்வதென்று விளக்கம் தருவார்கள். நீல் பஞ்சனானின் ' ஓவியத் தாக்குதலும்' (Art Attack) எனக்கு மிகவும் பிடித்தவை. வீட்டில் ப'விக்கப் படாமலிருக்கும் பொருட்களைக் கொண்டு எவ்விதம் ஓவியங்களை உருவாக்குவதென்று அழகாக நீல் செய்து காட்டுவார். மார்டின் க்ராட், கிறிஸ் கிராட் சகோதரகளின் 'சுபூமொவூ' ( Zoboomofoo) , பொம்மை லீமா எல்லாம் என்னைக் கவர்ந்தவை. இவர்களின் 'கிராட் உயிரினங்கள்' காட்சியும் நல்லதொரு காட்சி. மிருகங்களைப் பற்றிய தகவல்களைத் தரும் காட்சிகளிவை.

'ஞானம் (இலங்கை) புலம்பெயர் தமிழர் தொகுப்பில்
என்ன இவள் ஓயாமல் தனக்கு விருப்பமானதைப் பற்றியே கூறிக் கொண்டிருக்கிறாளென்று பார்க்கின்றீர்களா? தன்னைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையேயென்று பார்க்கின்றீர்களா? கொஞ்சம் பொறுங்கள் கூறி விடுகின்றேன் கேளுங்கள். என் பெயர் சாவித்திரி. எனக்கு வயது ஒன்பதுதான் ஆகிறது. நான் ஒரு கனடியப் பிரசை. நான் பிறந்தது டொராண்டோ மாநகரிலுள்ள ஸ்கார்பரோ கிரேஸ் ஆஸ்பத்திரியில் தான். நான் பிறக்கும் பொழுதே அம்மாவை நல்லா வருத்திப் போட்டுத் தான் இவ்வுலகிற்கு வந்துதித்தேனாம். என் அப்பா அம்மா இருவரும் ஸ்ரீலங்காப் பிரசைகளாகவிருந்து கனடியப் பிரசைகளானவர்கள். ஸ்ரீலங்காவில் ஒரே யுத்தமாம். அதனால் தான் இங்கு வந்தவர்களாம். அகதியாக வந்தவர்களாம். அப்பா தான் முதலில் வந்தவராம். அப்பாவிற்கு அவரது ஊரில பெரிய வீடு தோட்டமெல்லம் இருந்ததாம். அவர் ஸ்ரீலங்காவில் சீமெந்துத் தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை பார்த்து வந்தவராம். அங்கு மட்டும் யுத்தம் ஏற்பட்டிருக்காவிட்டால் அவர் ஒரு போதுமே இங்கு வந்திருக்க மாட்டாராம். அப்பொழுதெல்லாம் நான் கூறுவேன்: "டாடி! அப்போ என்னை நீங்கள் இழந்திருப்பீர்களேயென்று." அதற்கவர் கூறுவார்: "குஞ்சூ! எப்படியம்மா நான் உன்னை இழந்திருக்க முடியும். அப்பொழுது நீ தான் கனடாவை இழந்திருப்பாய். நீ தான் ஸ்ரீலங்காப் பிரசையாக இருந்திருப்பாயே!". அப்பா என்னை அப்படிக் 'குஞ்சூ' என்ற் அழைக்கும் போது எனக்கு எப்பொழுதுமே அப்பாவைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்றிருக்கும். அவ்வளவு தூரம் அன்பையெல்லாம் குழைத்துக் கூப்பிடுவார். அப்பா கூறுவார் அம்மா அவரது குடும்பத்தில் ஒரேயொரு பெண்பிள்ளையாம். மற்ற மூவரும் ஆண்பிள்ளைகள் தான'ம். எல்லோருக்கும் அவவென்றால் உயிராம். அவ்வளவு செல்லமாக வளர்ந்தவ இங்கு வந்து தொழிற்சாலையில் வேலை செய்வதைப் பார்த்தால் அவருக்குக் கவலையாகவிருக்குமாம். அவ கனடாவிற்கு வந்ததிலிருந்து பலவருடங்களாக அவவை வேலை செய்யவே அவர் விடவில்லையாம். ஆனால் ஒரு வருடமாகத் தானாம் அவ தானாகவே வேலைக்குப் போகவேண்டுமென்று அடம் பிடித்து வேலைக்குப் போகின்றாவாம். அதுவும் ஒரு விதத்திற்கு நல்லதுதானே என்று எனக்குப் பட்டது. அம்மா பகலிலை தொழிற்சாலையில் வேலையென்றால் அப்பா நள்ளிரவிலிருந்து காலை வரை நகரிலுள்ள ஆஸ்பத்திரியொன்றில் பாது காவலனாக வேலை செய்கின்றார். அப்பா சொல்லுவார் தான் கனடா வந்து செய்யாத வேலையில்லையென்று. உணவகங்களில் கோப்பை கழுவியதிலிருந்து, பொருட்களை உணவுகளை விநியே'க்கும் சாரதி, ஆபிஸ் தளங்கள், வங்கிகளைக் கழுவியதிலிருந்து பாதுகாவலன் வேலை வரை எத்தனையோ வேலைகள் செய்து விட்டாராம். அம்மா அடிக்கடி சொல்லுவா 'பாவம் இந்த மனுசன். ஊரில் என்ன மாதிரி இருக்க வேண்டிய மனுசன் இங்கு வந்து இப்படி அனுபவிக்க வேண்டுமென்று விதிதான். ஊரில் மட்டும் பிரச்சினை இல்லையென்றால் அடுத்த கணமே உங்கள் எல்லோரையும் கூட்டிக் கொண்டு நான் அங்கு போய் விடுவேன்.' அப்பொழுதெல்லாம் நான் 'அதெப்படி. நான் இந்நாட்டுப் பிரசை. நான் அங்கெல்லாம் வர மாட்டேன். எனக்குக் கனடா தான் வேண்டும்' என்று அழுது அடம் பிடிப்பேன். இந்த நாட்டை விட்டு வேறு ஒரு நாட்டிற்குப் போவதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஏன் இதனை அப்பாவும் அம்மாவும் உணர்கின்றார்களில்லை. அவர்களிற்கு எப்படி அவர்களது நாடு முக்கியமோ அப்படி முக்கியம் எனக்கு இந்த நாடும். முன்பெல்லாம் அப்பா அடிக்கடி கூறுவார் 'கொஞ்சக் காசு சேரட்டும். பேசாமல் எல்லோரும் கொடைக்கானல் போய் விடலாம். குழந்தைக்கு எங்களுடைய பண்பாடெல்லாவற்றையும் காட்ட வேண்டுமெ'ன்று. ஆனால் நான் அப்பொழுதெல்லாம் 'அது மட்டும் முடியாது. நான் கனடியன். இங்குதானிருப்பேன்' என்று அடம் பிடித்து அழுவேன். இப்பொழுதோ அந்தக் கொஞ்சக் காசையும் அவர்கள் உழைத்து விட்டார்கள் போல் தெரிகிறது... ஆனால் அப்பா இப்பொழுது முன்போலில்லை. 'யோசித்துப் பார்த்தால் ..என்னுடைய ஆசைக்காக ஏன் எங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தைப் பாழாக்க வேண்டும். எங்களுக்கு ஏற்பட்ட நிலைமை இங்கு பிறந்த எங்களுடைய குஞ்சுக்கும் ஏன் ஏற்படவேண்டும். எங்களுக்குத் தான் எங்களுடைய வெளிநாட்டுக் கல்வித் தகைமைகளிற்குரிய அங்கீகாரம் இங்கு கிடைக்கவில்லை. கிடைப்பதற்கும் எவ்வளவோ போராட வேண்டும். எல்லொருக்கும் போராடுவதற்கும் அவர்களது குடும்ப நிலைமைகள் விடுவதில்லை. எங்களுடைய குஞ்சு இந்தியாவில் படித்து விட்டு ஒருகாலத்தில் இங்கு திரும்பி வந்தால் அவளும் எங்களைப் போல் தானே பிரச்சினைகளை முகம் கொடுக்க வேண்டி வரும்' என்பார். அப்பா இப்பொழுது தனது எதிர்காலத் திட்டத்தை மாற்றிக் கொண்டார். 'நான் இன்னும் கொஞ்சம் நல்லாக உழைத்து, முழுதாகப் பணம் செலுத்தி ஒரு வீடு வாங்கிக் கொஞ்சம் காசையும் வங்கியில் உங்களுடைய அன்றாடச் செலவுக்காக வைப்பில் போட்டு வைத்து விட்டு நான் மட்டும் கொஞ்சக் காலம் அங்கும் கொஞ்சக் காலம் இங்குமாகக் காலம் தள்ள வேண்டும்.' என்பார். அப்பொழுதெல்லாம் அம்மா 'இவ்வளவு காலம் உங்களுடன் காலந்தள்ளியது போதும். என்னுடைய கடைசி காலத்திலும் ஒரு போதும் உங்களுடன் இருக்க மாட்டேன்' என்று வேடிக்கையாகக் கூறுவா. ஆனால் அதற்கு அப்பா என்னிடம் 'குஞ்சூ! நீ டாக்டராக வந்து அம்மாவுக்கும் ரிஷப்சனில் ஒரு வேலை போட்டுக் கொடுத்து விடு. அது தான் அவவுக்குச் சரி' என்று கூறிச் சிரிப்பார். அதற்கு நான் 'அப்பா! உங்களுக்கும் கூடவேலை போட்டுத் தந்து விடுகிறேன்' என்பேன். அதற்கு அப்பா சிரித்துக் கொண்டே 'நீ பொல்லாத குஞ்சம்மா!' என்பார்.
ஆனால் கொஞ்ச நாட்களாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்து விட்டதன் காரணம் தான் சரியாக எனக்கு விளங்கவில்லை. சின்னச்சின்ன விசயங்களிற்கெல்லாம் சண்டை பிடிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். சாதாரணமாக ஆரம்பிக்கும் சண்டை விரைவிலேயே சூடு பறக்க ஆரம்பித்து விடுகிறது. அப்பா கையில் கண்டதையெல்லாம் எடுத்து அம்மாவின் மேல் எறியத் தொடங்கி விடுகிறார். கையில் அம்மா அகப்பட்டு விட்டால் கண்டபடி அடிக்கவும் ஆரம்பித்து விடுகின்றார். ஆரம்பத்தில் சும்மா இருந்த அம்மாவும் பதிலிற்கு கையிலகப்பட்டதையெல்லாம் எடுத்து அப்பாவின் மேல் எறிய ஆரம்பித்து விடுகின்றா. அம்மாவும் அப்பாவும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் பழகியவர்களாம். அவர்களிற்கிடையில் என்ன நடந்து விட்டது. அப்பாவின் ஆக்களெல்லோரையும் அப்பா கனடா எடுத்து விட்டாராம். அம்மாவின் ஆக்களெல்லாம் இன்னும் ஸ்ரீலங்காவில் தான். அப்பா அடிக்கடி கூறுவார் 'நீ கொஞ்ச நாளைக்காவது ஊருக்குப் போய் உன்னுடைய ஆக்களைப் பார்த்து வா'வென்று. ஆனால் அம்மாவோ அடிக்கடி தேவையில்லாமல் அப்பாவுடன் அப்பாவின் ஆக்களை எடுத்தெறிந்து கதைக்கத் தொடங்குவா. உடனே சண்டை ஆரம்பித்து விடும். அதுவரை அமைதியாகவிருக்கும் அப்பாவுக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வரும். யுத்தம் தொடங்கி விடும். இடையில் அகப்பட்டுக் கொண்டு நான் முழிக்க வேண்டி வரும். எதற்காக இவர்கள் இப்படி எதற்கெடுத்தாலும் சண்டை பிடிக்கிறார்கள். ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் 'கனடியர்கள் இவ்விதம் சண்டை பிடிக்க மாட்டார்கள். நீங்கள் ஸ்ரீலங்கர்கள் ஏனிப்படி சண்டை பிடிக்கிறீர்களோ' என்று கேட்டு விட்டேன். அப்பாவுக்கு அது மனதைத் தைத்து விட்டது. 'இங்குள்ள ஏனைய கனடியர்கள் சிலர் கேட்பதைப் போலவே கேட்டு விட்டாயேயம்மா' என்று கவலைப் பட்டார். எனக்கும் வருத்தமாகப் போய் விட்டது. 'எப்படியம்மா இவ்விதம் பிரித்துப் பார்க்க இந்த்ச் சின்ன வயசிலை மனசு வந்தது' என்று சரியாகக் கவலைப் பட்டார். அப்பாவைத் தடவி ஒரு மாதிரி சமாதானம் செய்து விட்டேன்.' ஒரு மாலையில் வழக்கம் போல் இருவரும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
'கனடா வந்த இந்த பத்து வருடங்களில் என்னத்தைச் சாதித்துக் கிழித்துப் போட்டீர்கள். உங்களுடைய ஆட்களென்றால் உங்களுக்குப் பதறிக் கொண்டு வருகின்றது. எங்களைப் பற்றிக் கொஞ்சமாவது உங்களுக்குக் கவலையிருக்கிறதா?' என்று அம்மா கேட்டதும் அப்பாவுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. 'இத்தனை வருசமாய் உங்களை பராமரித்துக் கொண்டு வருகின்றேனே. அது உனக்குத் தெரியவில்லையா?' என்று அப்பா கேட்டதும் அம்மா 'என்ன ஊரில் மற்றவர்கள் செய்யாததைச் செய்து கிழித்துப் போட்டீர்கள். எல்லோரும் தானே குடும்பத்தைப் பார்க்கின்றார்கள். நீங்களில்லையென்றால் சமூக உதவிபணத்திற்கு விண்ணப்பித்திருப்பேன்' என்று கூறியதும் தான் அப்பாவால் தாளமுடியவில்லை. அதன் பிறகு நானும் என்னை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டேன். அவர்களிருவரின் சண்டையில் இடையில் குறுக்கிடுவதில்லை. ஆனால் சரியாகக் கவலையாகத் தானிருக்கும். ஆனால் இவ்விதம் அடிக்கடி ஆரம்பித்த சண்டைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி ஒரு நாள் அப்பா வீட்டை வருவதையே நிறுத்திக் கொண்டார். என்னால் அதன் பிறகு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. அம்மாவும் எந்த நேரமும் ஒரே அழுதபடி. அப்பா எங்கிருக்கிறாரென்றே யாருக்கும் தெரியவில்லை.ஆனால் அப்பா டொராண்டோவில தான் தன்னுடைய நண்பரொருவருடன் இருப்பதாக அறிந்தோம். அந்த நண்பரூடாக அப்பா என்னுடன் தொடர்பு கொண்டார். 'அப்பா! ஏனப்பா! எங்களை விட்டுப் பிரிந்து போனீர்கள். நீங்களில்லாமல் எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. வீட்டு வேலை ( Home work) செய்வதற்கு எனக்கு யாருமே உதவியில்லையே' என்றேன். அதன் பிறகு அப்பா ஒவ்வொரு நாள் மாலையிலும் எனக்காக வந்து எமது தொடர் மாடிக் கட்டடத்தில் வெளியில் அழைப்பு மணியை அழைத்துவிட்டுக் காத்திருப்பார். இருவருமாக அருகிலிருக்கும் நூலகம் செல்வோம். வீட்டு வேலைகள் எல்லாம் செய்து முடிந்ததும் அப்பா என்னை 'மக்டானல்ட்; கூட்டிச் செல்வார். ஒவ்வொரு நாளும் அப்பா என்னை மறுபடியும் வீடு கொண்டு வந்து விடும்போது 'அப்பா! எப்ப திரும்பவும் எங்களுடன் வந்திருக்கப் போகின்றீர்கள்' என்பேன். அதற்கு அவர் 'குஞ்சூ! உன் அம்மா தனியாக இருந்து வாழ்ந்து பார்த்தால் தான் எல்லாவற்றையும் உணர முடியும். அவ உண்ர்ந்த பின் அழைத்தால் வருவேன். அதன் பிறகு இவ்விதம் தேவையற்ற சண்டைகளைப் போடக் கூடாது.' என்பார். அம்மாவிடம்' அம்மா! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள். அப்பா இவ்விதம் கூறுகிறார்களே' என்பேன். அதற்கவர் 'நீ பேசமல் இருக்க மாட்டாய். எப்ப அவர் போய் விட்டாரோ. அப்பவே அவரை நான் கை கழுவி விட்டேன். என்னாலும் தனியாக வாழ முடியும்." என்று ஆத்திரத்துடன் கூறுவா. ஆனால் அதன் பிறகு அவவிற்கு அழுகை வந்து விடும். எதற்காக அம்மாவும் அப்பாவும் இவ்விதம் வீண் பிடிவாதம் பிடித்துக் கொண்டு வாழுகிறார்களோ தெரியவில்லை..

நான் ஒருத்தி இருப்பதை இதனால் எனக்கேற்படும் பாதிப்புகளை ஏன் இவர்கள் உணர்கிறார்களில்லை.

இவர்களது சண்டைகளெல்லாம் தேவையற்ற விடயங்களிற்காக இருப்பதாக எனக்குப் படுகிறது. இவர்களுக்கேன் அவ்விதம் படுவதில்லை. அப்பா! வேண்டுமானல் எங்களுடன் மீண்டும் வந்து விடுங்கள். அப்படி வந்து விட்டால் நாங்களெல்லோருமாக நீங்கள் கூறியது போல் இந்தியாவோ எங்கோ வரவும் நான் தயாராகவிருக்கிறேன் அப்பா! எனக்கு அது விருப்பமில்லாவிட்டாலும் எனக்கு நீங்களும் அம்மாவும் தான் முக்கியம் அப்பா. மீண்டும் எங்களுடன் வந்து விடுங்களப்பா. வேண்டுமானால் நீங்களிருவரும் ஒருவருக்கொருவர் கதைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒன்றாயிருங்கள். அது போதுமெனக்கப்பா! அப்பா! அடிக்கடி நீங்கள் உங்களது பால்ய காலத்து அனுபவங்களைப் பற்றிக் கூறுவீர்களே! எனக்கும் அத்தகைய அனுபவங்களைத் தரவாவது நீங்கள் எங்களுடன் வந்திருக்கத் தான் வேண்டும். அங்கு உங்களது சொந்த ஊரில் யுத்தம்மென்றுதானே இங்கு வந்தீர்கள். அங்கு தான் யுத்தம் எல்லோரையும் பிரித்து வைத்திருக்கிறது. இங்கும் உங்களிற்கிடையிலொரு யுத்தம் தேவைதானா? தேவையில்லாத விசயங்களிற்கெல்லாம் இவ்விதமொரு பிரிவினைத் தரும் யுத்தம் தேவைதானா? சொல்லுங்கள் அப்பா! சொல்லுங்கள் அம்மா! அப்பா! எப்போ நீங்கள் மீண்டும் வரப் போகின்றீர்கள்? அம்மா! எப்போ உங்களுடைய வீண் பிடிவாதத்தினை விட்டொழிக்கப் போகின்றீர்கள்?

நன்றி: திண்ணை.காம், பதிவுகள், ஞானம் (புலம்பெயர் சிறப்பிதற் தொகுப்பு) & ஈழநாடு (கனடா) -

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்