Monday, February 3, 2020

ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma)


இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட வெஸ்டேர்ன் திரைப்படங்களை ஆரம்பத்தில் 'ஸ்பாகட்டி வெஸ்டேர்ன்' (Spaghetti Western ) என்று மேற்குலகம் எள்ளி நகையாடினாலும் அவற்றின் வெற்றி பின்னர் அவற்றையும் எள்ளி நகையாடிய மேற்குலகத்தை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது. ஸ்பாகட்டி என்பது இத்தாலியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமானது நமது தோசையைப்போல. கிளின்ட் ஈஸ்வூட் நடித்துப்புகழ்பெற்ற 'The Good, the Bad and the Ugly ' வெஸ்டேர்ன் திரைப்படமும் இத்தாலியர்களால் உருவாக்கப்பட்டதுதான். சேர்ஜியோ லியோனின் (Sergio Leone) இயக்கம், 'டோனினோ டெலி கொலி'யின் (Tonino Delli Colli) ஒளிப்பதிவு , 'எனியோ மோரிக்கோனின்' (Ennio Morricone) இசை நடிகர்களின் நடிப்பு இவையெல்லாம் சேர்ந்து இப்படத்தை வரலாற்றில் நிலைத்து நிற்க வைத்து விட்டதெனலாம்.

இவ்விதமாக இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட வெஸ்டேர்ன் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர்களிலொருவர்தான் ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma). ஆரம்பத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்து வந்த இவருக்கு நடிப்புடன் கூடிய பாத்திரங்களை அளித்துப் பின்னாளில் இவர் புகழடையக் காரணமானவர் இயக்குநர் டுச்சியோடெஸ்சாரி (Duccio Tessari. இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட பல வெஸ்டேர்ன் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் இவர். இவரது மகளான வேரா ஜெம்மாவும் நடிகையே.

இத்தாலியத்திரைப்படங்கள் பலவற்றில் பல்வேறு பாத்திரங்களில் நடித்துப்புகழ்பெற்ற இவருக்கு அந்நாட்டின் 'டேவிட் டி டொனடெல்லோ'' (David di Donatello) விருதினையும் (ஆஸ்கார் விருதினையொத்த அந்நாட்டு விருது) நடிப்புக்காகப்பெற்றுள்ளார். இத்தாலிய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கின்றார். அக்டோப1ர் 1, 2013இல் கார் விபத்தொன்றில் மரணமான இவர் ஒரு சிற்பியும் கூட.

என் பதின்ம வயதுகளில் நான் பார்த்து இரசித்த இவரது திரைப்படம். யாழ் ராஜா திரையரங்கில் அபூர்வமாகத் திரையிடப்பட்ட ஆங்கிலத்திரைப்படமான 'அரிசோனா கோல்ட்' ((Arizona Colt) திரைப்படமே அது. முதல் திரைப்படத்திலேயே என்னைக் கவர்ந்த நடிகர்களில் இவருமொருவர். அந்த ஒரு படத்தின் மூலம் என் நினைவில் இவர் பெயர் நிலைத்து நின்றுவிட்டது.

No comments:

மணிவிழாக் கவிஞரின் மணிக்கவிகள்!

கவிஞர் கந்தவனத்தின் மணி விழாவினையொட்டி மணிவிழாக்குழுவினால் வெளியிடப்பட்ட கவிதைத்தொகுப்பு 'மணிக்கவிகள்' நூலுக்கான பதிப்புரையில் மணிக...

பிரபலமான பதிவுகள்