Tuesday, February 4, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (13) : கணவன்


- தாயகம் (கனடா) சஞ்சிகையாக வடிவமெடுத்தபோது அதில் வெளியான எனது சிறுகதைகளிலொன்று. பின்னர் ஸ்நேகா (தமிழகம்) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது - 

பல்கணியிலிருந்து எதிரே விரிந்திருந்த காட்சிகளில் மனம் ஒன்றாதவனாகப் பார்த்தபடிநின்றிருந்தான் சபாபதி. கண்ணிற்கெட்டியவரை கட்டங்கள். உயர்ந்த, தாழ்ந்த, அகன்ற, ஒடுங்கிய கட்டடங்கள். டெஸ்மண்ட் மொறிஸ் கூறியது போல் மனிதமிருகங்கள் வாழ்கின்ற கூடுகள். நகரங்கள் மனித மிருகங்கள் வாழுகின்ற மிருககாட்சிச்சாலை என்று அவர் குறிப்பிட்டதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை. பார்க்கப் போனால் இன்றைய மனிதனின் அடிப்படைப் பிரச்சினை களிற்கு ஒரு வகையில்நகரங்களும் காரணமாயிருக்கலாம். மிருகங்களை கூண்டுகளில் அடைத்து வாழ நிர்ப்பந்திக்கும் போது அவற்றின் இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பல, நகரத்தில் செறிந்திருக்கும் கட்ட டக் கூண்டுகளிற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் மனித மிருகங்களிலும் காணப்படுகின்றனவாம், நகரத்தில் இருந்து கொண்டுதானே இன்றைய மனிதன் சக மனிதன் மேல் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றான். X=Y Y=Z, ஆகவே X-Z என்ற வகையான கணித சாத்திரத்திற்குரிய தர்க்க நியாயத்தின்படி பார்க்கப்போனால் இன்றைய மனிதனின் பிரச்சினைகளிற்கு முக்கிய காரணம் நகரத்து மனிதன் என்றல்லவா ஆகிவிடுகின்றது. இது பற்றியெல்லாம் சிந்திக்கும் மனநிலையில் சபாபதி இருக்கவில்லை.

வழக்கத்தை விட குளிர் இந்த வருடம் அதிகம். இன்னும் பனிமழை பொழியத் தொடங்கவில்லை. டொரன்டோ வந்த புதிதில் இவனிற்கு குளிர்காலம் நெருங்கும் போதே தலையிடி தொடங்கி விடும். ஊர் ஞாபகம் தோன்றிவிடும். கசோரினா பீச்சில் ஒருமுறை மூழ்கி எழவேண் டும் போலிருக்கும்.நவாலி மண் கும்பிகளிற்கருகில் சாய்ந்தபடி விரிந்து கிடக்கும் வயல்வெளிகளை தொலைவில் தெரியும் காக்கைதீவுக் கடற் கரையை, கல்லுண்டாய் வெளியைக்காற்றிலாடும்பனைப் பெண்களை ரசிக்க வேண்டும் போலிருக்கும். வருடம் செல்லச் செல்ல டோரண்டோ இவனிற்குப் பழகிவிட்டது. குளிர் காலமும் ஸ்னோவும் முன்புபோல் இவனை இப்பொழுதெல்லாம் அதிகம் பயப்படுத்துவதில்லை. பழகி விட்டன. இப்பொழுதெல்லாம் நேரத்துடனேயே இருட்டி விடுகின்றது. நாலரை ஐந்து மணிக்கெல்லாம் இருள் கவிந்து விடுகின்றது. இலேசான இருளில் தூங்குவதற்குத்தயாராகயிருக்கின்றது கட்டடக்காடு உயர்ந்து, நீண்டு தொலைவில் 'சீ என்'. கோபுரம் இவ்வளவு தொலைவிலும் வடிவாகத் தெரிகின்றது. வழக்கமாக இவற்றையெல்லாம் ரசிக்கும் மனதிற்கு ஒரு கிழமையாக விடுமுறை. பானுவைப் பற்றித்தான் மீண்டும் மீண்டும் குமைந்து போய்க்கிடக்கின்றது. பானுமதிஇவனது இல்லாள் இல்லாள் இல் வருவதற்கு இன்னும் ஒரு மணியாவது செல்லும். இந்தப் பிரச்சி னைக்கு எப்படியாவது இன்று முடிவொன்றைக் கண்டு விடவேண்டும். மனதிற்குள் தீர்மானித்தவனாக உள்ளே செல்கின்றான். சென்றவன் 'டக்கிளா"வையும் மார்கரீட்டா"வையும் எடுத்து அளவாகக் கலந்து பிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டிகளை எடுத்துப் போட்டபடி மீண்டும் பல்கனிக்கு வருகின்றான். ஊரிலிருந்த காலத்தில் இவனது பிரியமான மதுபானங்கள், உடனிறக்கிய பனங்கள்ளும், குரங்கும் (நம்மூர்ச் சாராயம்தான்), குரங்கென்று பெயர் வைத்த மகராசிக்கு வாயில் சக்கரையை அள்ளித்தான் போட வேண்டும். நமது மூதாதையர் யார் என்பதில் சந்தேகப்படுபவர்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்துவிடும் வல்லமைமிக்கது அந்தக் குரங்கு. இந்நாட்டுக்குடிவகைகளில் இவனிற்கெதுவுமே பிடிக்கவில்லை. எவ்வளவு குடித்தாலும் குரங்கின் அந்தக் கிக் இவனிற்கு இப்பொழுதெல்லாம் வருவதில்லை. ஒரு வேளை இவனிற்கு வயசாகிவிட்டதன் அறிகுறியாகயிருக்கலாம். ஆனால் இந்த டக்கிளா (மெக்ஸிகோவின் புகழ்பெற்ற மதுவகை) மட்டும் ஓரளவிற்கு இவனுக்கு பிடித்தமானது.
டக்கிளாவின் அறிமுகம் இவனிற்குக் கிடைத்தற்குக் காரணமே "கிட்டார் அடிக்கப் போனதுதான். 'கிட்டார் அடிப்பதற்கும் 'டக்கிளா' விற்கும் என்ன சம்பந்தமென்று மூக்கில் விரலை வைத்துவிடாதீர்கள். "கிட்டார் அடிப்பது என்பது ரெஸ்டாரண்டில் கோப்பை கழுவதற்குரிய பரிபாசை அவ்வளவுதான் கனடா வந்த புதிதில் இவன் செய்த முதல் வேலை கிட்டார் அடிதான். கிரேக்கனுடைய ரெஸ்டாரன்ட் வேலை செய்வதில் கவுண்டமணி அடிக்கடி கூறுவதுபோல் இவன் ஒரு மாடு மாதிரி. கிரேக்கர்களிற்குமாடு மாதிரி வேலை செய்பவர்களை நல்லாப் பிடிக்கும், மாடு மாதிரி வேலை வாங்கவும் நல்லாப் பிடிக்கும். அதேசமயம் நீங்கள் மட்டும்.நன்கு வேலை செய்து விடுகிறீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களை மாதிரி உங்களைக் கவனிக்க வேறு யாராலுமே முடியாது.

இவன் ஏற்கனவே கனடா வருவதற்கு முன்பு கிரேக்கக்கப்பலொன் றில் வேலை செய்திருந்தான். கிரேக்கர்களைப் பற்றிச்சிறிது அறிந்திருந் தான். க.பொ.த. (சாதாரணம்) பரீட்சை எடுத்த காலத்தில் பெளதிகத்தில் ஆர்க்கிமிடிசு போன்ற கிரேக்க விஞ்ஞானிகளைப் பற்றிச் சிறிது படித்திருந்தான். மனித சமுதாயநாகரீக வளர்ச்சியில் கிரேக்கர்களிற்கு முக்கியமான பங்கொன்று உண்டு. ஒரு காலத்தில் கொடிகட்டி வாழ்ந்த இனம் நம்மவரைப் போல கிரேக்கர்களிற்குப் பிடித்த இன்னுமொரு விடயம் பழம்பெருமை பேசுவது, அதுவும் நம்மவரைப் போல்தான். ஆர்சிமிடிசு பற்றியோ பிளேட்டோபற்றியோ கூறிவிட்டால் உடனடியாக மகிழ்ந்து விடுவார்கள். கிரேக்கர்களைப் பற்றிய அறிவு சபாபதிக்குக் கிரேக்கர்களுடன் வேலை செய்யும் போதெல்லாம் கை கொடுக்கத் தவறுவதேயில்லை. இவனது ‘கிரேக்க” அறிவிலும், வேலைசெய்யும் பண்பிலும் அகமகிழ்ந்து போன ரெஸ்டாரண்ட் சொந்தக்காரனான பீட்டர் வேலை முடிந்து வீடு செல்லும் சமயங்களில் இவனிற்குத் தன் கையாலேயே மது வகைகளிலொன்றை அதற்குரிய 'கொக்டெயிலுடன்' அளவாகக் கலந்து கொடுப்பான். வேலைக்களைப்பு நீங்க அதனைச் சுவைத்தபடி இவன் அரிஸ்டாட்டில் பற்றிக் கூறுவதை ஆர்வமாகக் கேட்பான், 'ஆங்கிலேயன்கள் தான் எல்லாப் பிரச்சனைகளிற்கும் காரணம், உங்களுடைய நாட்டை மட்டுமல்ல எங்களைக் கூடக் குட்டிச்சுவராக்கியவர்கள் இவர்கள் தான்' என்று அடிக்கடி பீட்டர் கூறுவதுண்டு. அந்த ரெஸ்டோரண்ட் அனுபவம்இன்று இவனிற்குக் கை கொடுக்கின்றது.
ஒரு மிடறை விழுங்குகின்றான். நெஞ்சிற்கு இதமாகவிருக்கின்றது. மீண்டும் பானுமதியின் நினைவுகள்...

பிரச்சினை இதுதான். இவனிற்கும் பானுமதிக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் தான். ஒரு வருடமாக ஏற்படாத பிரச்சினை ஒரு கிழமையாக ஏற்பட்டுவிட்டிருந்தது. அதற்குக் காரணம் போன கிழமை இவன் காதுகளில் விழுந்த ஒரு கதைதான்.

நண்பனொருவன் வீட்டில் நடந்த சிறு பார்ட்டியொன்றில் அடிபட்ட கதைதான் இவன் நெஞ்சில் பிரச்சினைத் தீயை வளர்த்துவிடக் காரணமாகயிருந்தது. குடிபோதையில்நண்பர்கள் அண்மைக் காலமாக ஏஜண்டுகள் என்ற பெயரில் ஒரு சிலர் பண்ணும் திருவிளையாடல்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். தாய்லாந்திலும், சிங்கப்பூரிலும் சீரழிந்து கொண்டிருக்கும் அப்பாவிப் பெண்களைப் பற்றிக் கண்ணிர் விட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பர்களிலொருவன் ஏஜண்ட் வேலை செய்பவன். 'ஏஜண்ட்' மாரைப் பற்றித் தரக் குறைவாகக் கதைக்கும் ஏனைய நண்பர்களைப் பார்த்துச் சீறினான்.

'எல்லாஇடங்களிலும் கிரிமினல்கள் இருக்கத்தான் செய்யிறான்கள். அதற்காக எல்லா ஏஜண்ட்மாரைப் பற்றியும் கூடாமல் கூறுவது தவறு' என்பது அவனது வாதம். உண்மைதான். ஏஜண்டமாரென்று ஒருத்தரும் இல்லையென்றால் இன்று கனடாவில் நம்மவரின் சனத்தொகை பெருகியிருக்கப் போவதில்லைதான். ஊசித்துளைகளிற் குள்ளும் தலையை நுழைத்துவிடும் ஒட்டகங்கள் அல்லவாநம்முடைய ஏஜண்டுகள்.

சபாபதி கூட ஏஜண்ட் ஒருவன் மூலமாக வந்தவன்தான். எல்லா மட்டத்திலும் கிரிமினல்கள் இருப்பதைப் போல் தான் ஏஜண்ட்காரர் விசயத்திலும் இருக்கின்றது என்பதுதான் அவனது எண்ணம். இன்று நம்மவர் சீரழிந்து கொண்டிருப்பதற்குக் காரணமே நாட்டுநிலைமைதான்.
நாட்டுநிலைமைதானே எல்லோரையும் ஒடஒட விரட்டி வைக்கிறது. அதனால்தானே பிரச்சினைகளும்.நாட்டு நிலைமை மட்டும் சீராகட்டும் தற்போதுநடைபெறும் சீரழிவுகள் அரைவாசியாகக் குறைந்துவிடும் என்று நண்பனொருவன் கூறிக் கொண்டிருந்தான். அது வரையில் சபாபதிக்குப் பிரச்சினையே ஏற்படவில்லை. அதன் பிறகு ஏஜண்ட் ஒருவனைப் பற்றி அவர்கள் கதைக்கத் தொடங்கியதும்தான் பிரச்சினை ஆரம்பமாகியது. ரொராண்டோவில் மனைவி பிள்ளைகளென்று வாழும் ஏஜண்ட் ஒருவனைப் பற்றிய கதை அது. அந்த ஏஜண்ட் தான் இவன் மனைவி பானுமதியையும் கூட்டி வந்தவன். சந்தேகத் தீ விசுவரூபமெடுத்து விட்டது. இந்த ஏஜண்டுடன் ஒரு மாதமளவில் பானுமதி சிங்கப்பூரில் நின்றிருக்கின்றாள். நினைப்பதற்கே சங்கடமாகியிருந்தது.இவனையே பைத்தியமாக்கும் அழகு பானுமதியினுடைய அழகு. மதமதர்த்த உடல்வாகு. எவ்வளவுதான் நெகிழ நெகிழ ஆடைகள் அணிந்தாலும் அவளால் திமிறித் துடிக்கும் அழகுகளை ஒளித்து வைக்கவே முடிந்ததில்லை. இவனது சந்தேகம் சுவாலைவிட்டுப் படர்வதற்குக் காரணமே அவளது அந்தப் பேரழகுதான். மீண்டும் ஒரு மிடறை விழுங்கினான். உள்ளே சென்ற மது இலேசாக வேலை செய்யத் தொடங்கியது.
கேட்டு விடுவோமா? மனதை அரித்துக் கொண்டிருக்கின்ற சந்தேகத்தைக் கேட்டு விடுவோமா? எப்படி கேட்பது காறித் துப்பி விடமாட்டாளா? கேட்காவிட்டால்இவனிற்கு மண்டை வெடித்து விடும் போலிருந்தது. என்ன செய்வது? அவளும் தான் மாடு மாதிரி தொழிற்சாலையொன்றில் வேலை செய்கின்றாள். களைத்து வரும் அவளிடம் எப்படிக் கேட்பது? எவ்வளவிற்கு அடக்க முயன்றானோ அவ்வளவிற்கு மனஉளைச்சல் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

கிறிஸ்டினா அடிக்கடி கூறுவாள். "யாரைத்திருமணம் செய்தாலும் இந்தியன் ஒருவனை செய்யவே மாட்டேன்."

'ஏன் கிறிஸ்டினாஇந்திய ஆண்களை மாதிரிப் பொறுமை சாலிகள் ஒருத்தருமேயில்லை அது உனக்குத் தெரியுமா?"

"சும்மா பொய் அளக்காதே, சபாபதி உங்களுடைய ராமாயணம் பார்த்திருக்கின்றேன். உங்களுடைய கடவுள் ராமனே மனைவியை நம் பாமல் சந்தேகப்பட்டுத் தீக்குளிக்க வைக்கவில்லையா? 'கிறிஸ்டினா இவனுடன் கிரேக்க ரெஸ் டோரண்டில் வெயிட்ரஸ்ஸாக வேலை பார்த்தவள். சிலர்நிறத்திமிர் பிடித்தவர்கள். அதிகம் கதைக்க மாட்டார் கள். இவள் அவர்களில் சிறிது வித்தியாசமானவள், அவளைப் பொறுத்த வரையில் சிறிலங்காவோ, பாகிஸ்தானோ, பங்களாதேசோ, இந்தி யாவோ. இப்பகுதிகளிலிருந்து வருபவர்கள் எல்லோருமே இந்தியர் கள்தான். இந்த விசயத்தில்இவள்நிறவெறிபிடித்தவர்களிலிருந்து சிறிது வேறுபட்டவள். நிறவெறிபிடித்தவர்களிற்குஇப்பகுதிமக்கள் யாவருமே 'பாக்கி'கள். அவ்வளவுதான் வித்தியாசம். 'சபாபதி! உங்களுடைய ராமனைப் பார், கடவுளென்று வைத்துக் கொண்டாடுகிறீர்கள். சொந்த மனைவியையே அவனால் நம்ப முடியாமலிருக்கின்றது. அவன் என்ன காரணம் சொன்னாலும் சீதையைத்தீக்குளிக்க வைத்தது.தவறு."

"ராமன் உண்மையில் மனைவியைச் சந்தேகிக்கவில்லை அவனிற்குத் தெரியும் அவள் உத்தமி என்பது. உலகிற்கு அவளது நேர்மையை வெளிப்படுத்தத்தான் அவன் அப்படிச் செய்தான்"

"அப்படிச் செய்வதைத் தான் பிழை என்கின்றேன். கடவுளின் அவதாரமான ராமனே இப்படிச் செய்வது மக்களையும் மனைவியைச் சந்தேகிப்பது சரியான செயலெனநம்பச் செய்து விடுகின்றது."

"அதிலென்ன தவறு. "

"'அதுதான் தவறென்கின்றேன். திருமணமென்பது சாதாரண விடயமொன்றல்ல. வாழ்க்கை முழுவதும் ஒருவரையொருவர் நம்பி வாழும் ஒரு வகையான உறவு. இதற்குப் பரஸ்பர நம்பிக்கை மிகவும் அவசியம். ஒருவர் உரிமையை மற்றவர் மதிக்க வேண்டும். சீதை விரும்பியா இராவணனிடம் போனாள்? ஊர்கந்தேகப்படுவதாக வைத்து ராமன் சீதையை எவ்வித சந்தேகமுமின்றி ஏற்பதாக இருந்திருந்தால் ராமாயணத்தை எனக்குப் பிடித்திருக்கும். எங்களைப் பார்திருமணம் செய்யும் மட்டும் நாங்கள் மனம் போனபடி வாழ்கின்றோம்.முடித்த பிறகோ கடந்தகாலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் இந்தியர்களானநீங்களோ. நீங்கள் எத்தனை பேருடனும் செல்வீர்கள் உங்களிற்கு உங்கள் மனைவி மட்டும் பத்தினியாகயிருக்க வேண்டும்"

கிறிஸ்டினாவின் குரல் காதில் ஒலிக்கின்றது. அருகிலிருந்து அவளிற்கேயுரிய சிரிப்புகதைப்பது போலிருக்கின்றது. இன்னுமொரு மிடறை விழுங்குகின்றான் சபாபதி மனது இன்னமும் இலேசாகி உடைகின்றது. 'பானுவிடம் கேட்பதற்கு என்ன தகுதி எனக்கிருக் கின்றது? கேட்பதற்குரிய தார்மீகமான காரணம் தான் ஏதாவதிருக் கின்றதா? மனைவிஎன்ற ரீதியில் அவள் எனக்கென்னகுறை வைத்தாள்? அவளிடம் என் சந்தேகத்தைக் கேட்பது புருஷன் என்ற என் ஸ்தானத்திற்கு மாசு கற்பித்து விடாதா? ஒரு மனைவியைச் சந்தேகப்படுவதே தவறான செயலென்றால். சந்தேகப்படுவதற்குரிய தகுதியாவது எனக் கிருக்கின்றதா?

சபாபதிக்கு வெறி ஏற ஏற பழைய நினைவுகள் சில படம் விரிக் கின்றன. நெஞ்சுப் புற்றுக்குள்ளிருந்து வெளி வந்தாடும் நினைவுப் பாம்புகள். அப்பொழுது அவன் இளமையின் ஆரம்ப படிக்கட்டில் காலடி வைத்திருந்தான். கப்பலில் வேலை செய்யத் தொடங்கியிருந்த சமயம் தாய்லாந்து அழகிகளிற்கும் தென்னமெரிக்க அழகிகளிற்கு மிடையில் உள்ள வித்தியாசங்களைக் கணக்கிட்டுக் கொண்டிருந்த காலம். அவன் எப்பொழுதாவது பானுமதியிடம் தனது கடந்த காலத் தைப் பற்றிக் கதைத்திருக்கின்றானா? ஒரு சமயம்நாளைக்கு கப்பலில் வேலை செய்பவர்கள் சிலரின் இதுபோன்ற லீலா விநோதங்களைக் கேட்டுவிட்டு சந்தேகப்பட்டு இவனிடம் வந்து பானுமதி விளக்கம் கேட்டால் எப்படியிருக்கும்?

"எங்களைப்பார்திருமணம் முடிந்தபிறகுநாங்கள் கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை ஆனால் இந்தியர்களானநீங்களோ.'

கிறிஸ்டினா அன்று நீ சொன்னதன் பொருளை என்னால் உணர முடியாதிருந்தது ஆனால் இன்று...

சபாபதி மிஞ்சியிருந்த கடைசிப்பகுதி யையும் விழுங்குகின்றான். விண்விண்னென்று வலித்துக் கொண்டிருந்த தலையிடிக்கு என்ன நேர்ந்தது? பானுமதி வரும் நேரமாகிவிட்டது. வேலை முடிந்துகளைப்புடன்வரும் மனைவிக்குச்சூடாக ஒரு கப்காப்பி போட்டுக் கொடுக்கக் கூடாதா? சபாபதிகளைத்து வரும் மனைவியை வரவேற்பதற்குத் தயாராகின்றான். கிறிஸ்டினா மட்டும் இதனைக் கண்டிருந்தால் நிச்சயமாக இந்தியக் கணவர்களைப் பற்றிய தனது கருத்தை மறுபரிசீலனை செய்திருப்பாள்.

நன்றி: தாயகம் 4.12.94, பதிவுகள்.காம்

No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்