'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Saturday, May 18, 2024
தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (6) - அத்தியாயம் ஆறு: எதிர்காலத்திட்டங்கள் பற்றிய உரையாடலொன்று.
ஒரு சில மாதங்கள் ஓடி மறைந்தன. இதற்கிடையில் பானுமதியும் மாதவனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டிருந்தனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்று உரையாடுவதும், குரோசரி ஷொப்பிங் செய்வதற்காக இரு வாரத்துக்கொருமுறை செல்வதும், நூலகங்கள்செல்வதும், அவரவர் இருப்பிடங்களில் சந்தித்துக்கொள்வதும், இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடுவதுமெனப் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன. இவ்விதமானதொரு நாளில் அன்று அவள் அவனது அப்பார்ட்மென்ட்டிற்கு வேலை முடிந்ததும் வந்திருந்தாள். சிறிது களைப்பாகவிருந்தாள்.
"ஏன்ன பானுமதி, களைப்பாகவிருக்கிறீர்கள்? ' என்றான் மாதவன்.
"இன்று நாள் முழுவதும் ஒரே பிஸி. மீட்டிங், செர்வர் அப் கிரேடிங் என்று சரியான வேலை. அதுதான். வேறொன்றுமில்லை. " என்றாள் பானுமதி பதிலுக்கு. அத்துடன் அவள் ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவனை நோக்கிக் கேட்டாள்: "இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. மாது, உனக்கு லினக்ஸ் செர்வர் பற்றி நல்லாத்தெரியும்தானே. ""ஏன் கேட்கின்றாய் பானு. எனக்கு விருப்பமான ஒபரேட்டிங் சிஸ்டமே அதுதான். "
"எங்கள் கொம்பனியில் லினக்ஸ் சேர்வர் அட்மினுக்கு ஆள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். உனக்கு விருப்பமென்றால் உன்னுடைய 'ரெசுமே'யைத் தா. பிடித்திருந்தால் இன்டர்வியுக்குக்கு அழைப்பார்கள். உனக்கு ஏற்கனவே லினக்ச் தெரிந்திருப்பதால் வேலை பிரச்சினையிருக்காது. நானும் உன்னை ரெகம்ன்ட் பண்ணுவேன்."
"பானு தாங்ஸ். படுக்கப் போவதற்குள் உன்னுடைய இமெயிலுக்கு அனுப்புவேன். "
இவ்விதம் பதிலளித்தான் மாதவன். இதனைத்தொடர்ந்து அவர்களது உரையாடல் பல்வேறு பல்வேறு விடயஙக்ளைப் பற்றித் தொடர்ந்தது.
"மாது , வாழ்க்கையிலைன் செட்டில் ஆகிற பிளான் ஏதாவதிருக்குதா?"
"பானு, செட்டில் என்று எதைச் சொல்லுறாய்?"
"குடும்பம், குழந்தை, வீடு, வாசலென்று.. ஏதாவது ஐடியா இருக்குதா என்று கேட்டேன் மாது." என்று கூறிவிட்டு இலேசாகச் சிரித்தாள் பானுமதி.
இதைக்கேட்டதும் மாதவன் பலமாகவே சிரித்து விட்டான். இது பானுமதிக்குச் சிறிது கோபத்தையே ஏற்படுத்தி விட்டது.
"ஏதற்காக இப்பிடிச் சிரிக்கிறாய் மாது? நான் சொன்னதில் அப்படியென்ன சிரிக்கக் கிடக்கு?"
அவளது மெல்லிய கோப உணர்வினை அவதானித்து, அதனை இரசித்தபடியே மாதவன் தொடர்ந்தான்:
"பானு, சிரிக்க ஒன்றுமில்லை. ஆனால் எனக்குத் திருமணம் பற்றியொரு தீர்மானத்திட்டமுண்டு."
"அப்படியென்ன திட்டம், பிளான் மாது"
"நான் திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை பானு."
"என்ன திருமணமே செய்துகொள்ளப் போவதில்லையா? ஏன் மாது?"
பானுமதியின் குரலில் வியப்பு மேலோங்கியிருந்தது. உண்மையில் அவள அவனிடமிருந்து இவ்விதமானதொரு பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. அத்துடன் தொடர்ந்து கேட்டாள்:
"ஏன் ஏதாவது காதல் தோல்வியா?" இவ்விதம் கேட்டுவிட்டு மெல்லக் கண்களைச் சிமிட்டினாள் பானுமதி. அதைக் கவனிக்கும் நிலையில் மாதவன் அப்போதிருக்கவில்லை. அவன் சிறிது சிந்தனையில் மூழ்கிப்போனான். அதைக் கவனித்த பானு கேட்டாள்:
"என்ன மாது. பெரிய யோசனை?"
அவளது கேள்வி மீண்டும் அவனது சிந்தனை நிலையைக் கலைத்தது. நனவுலகுக்கு வந்தான்.
"பானு, என்னைப்போன்ற பேர்சனால்டியுள்ளவர்களுக்குத் திருமண வாழ்க்கையென்பது ஏற்றதாகவிருக்காது என்பது என் எண்ணம். "
"ஏன் அப்படிச் சொல்லுறாய் மாது?"
"எனக்கு எப்பொழுதும் வாசிக்க வேண்டும். எழுத வேண்டும். சிந்திக்க வேண்டும். இருப்பு பற்றிச் சிந்திக்க வேண்டும். இவ்விதமாக இருப்பதே எனக்குப்பிடிக்கும். நீ கூறுவது மாதிரி குடும்பம், குழந்தை, வீடு, வாசல் என்ரு வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை. நான் ஒருவன் இவ்விதம் வாழாமல் இருப்பதால் உலகுக்கு நட்டமெதுவுமில்லை. அது தன் பாட்டில் வழக்கம்போல் இயங்கிக்கொண்டுதானிருக்கும் இல்லையா பானு?"
"மாது, ஏன் இப்பிடிச் சொல்லுறாய் என்று விளங்கவில்லை. பாரதியை விடவா உன்னால் எழுத, சிந்திக்க, வாசிக்க முடியும்? அவனது வாழ்க்கை எவ்வளவு குறுகியது. அந்தக் குறுகிய வாழ்க்கைக்குள் இவையனைத்தையும் செய்து கொண்டிருந்த அவன் இதற்குமேலும் செய்தான். சமூக, அரசியல் செயற்பாட்டாளனாக இயங்கிக்கொண்டிருந்தான். ஆனால் இத்தனைக்கு அவனுக்கும் செல்லம்மா என்றொருத்தி இருக்கத்தானே செய்தாள்."
தர்க்கரீதியாக அமைந்திருந்த அவளது பதிலை மாதவன் இரசித்தான். அத்துடன் கூறினான்:
"பானு, உனது லொஜிக் சரிதான். ஆனால் எனக்கு என் மனத்தில் சுதந்திரமாக இருப்பதையே விரும்புகிறேன். தளைகள் எவையுமற்ற வாழ்க்கை வாழவே விரும்புறேன்."
"மாது, உனது முடிவு முடிந்த முடிவா? அல்லது காலப்போக்கில் மாறக்கூடியதா?"
"பானு, இப்போதைக்கு இது எனது முடிந்த முடிவு. ஆனால் காலப்போக்கில் என் மனம் இந்தப்போக்கிலிருந்து மாறினால், அது எனக்குச் சரியென்று பட்டால் , அதை ஏற்பதில் எனக்குச் சிக்கலில்லை. இயல்பாக ஏற்றுக்கொள்வேன்."
"மாது, இருந்து பார், கட்டாயம் உன்னை மாற்ற ஒருத்தி வருவாள். அவள் இந்நேரம் எங்கோ பிறந்து , வளர்ந்து சரியான தருணத்துக்காகக் காத்திருக்கின்றாள். இந்த விசயத்தில் உன் முடிவு கட்டாயம் மாறும். "
பானுமதியின் இந்த வார்த்தைகள் அவனிதழ்களில் புன்னகையினை ஏற்படுத்தியது. அப்படி நடந்தால் அவள் இந்நேரம் எங்கேயிருப்பாள் என்று எண்ணியதால் ஏற்பட்ட புன்னகைதான் அது. இதை இலேசாகக் கவனித்தாள் பானுமதி.
"உன் புன்னகைக்குக் காரணமென்ன மாது? நான் தெரிந்துகொள்ளலாமா?" என்று கேட்கவும் செய்தாள்.
"எல்லாம் நீ கூறியதை நினைத்துத்தான். எனக்காக எங்கோ பிறந்திருக்கின்றாள் என்று கூறினாயே. அதை நினைத்துத்தான். அவள் எங்கிருப்பாள் என்று சிந்தித்துப் பார்த்தேன்.,சிரிப்பு வந்தது."
இதைக் கேட்டதும் அவனை மேலும் சீண்ட அவளது உள்ளம் விரும்பியது. அந்த விருப்பத்துடன் " ஏன் அவள் எங்கும் இருக்கலாம். ஏன் உனக்கு முன் கூட இருக்கலாம்." என்றாள்.
இதைக்கேட்டதும் மாதவன் மேலும் பலமாகச் சிரித்தான். அத்துடன் "எனக்கு முன் நீதான் நிற்கிறாய்." என்றான். அதற்குப் பதிலளித்த பானுமதி "ஓரு வேடிக்கைக்காகத்தான் அப்படிக் கூறினேன். ஆனால் காலம் எப்படியெல்லாம் எதிர்காலக் காட்சிகளைத்திட்டமிட்டு வைத்துள்ளதோ? யாரறிவார். "
இதன் பின்னர் அவர்களது உரையாடல் சிறிது நேரம் ரியல் எஸ்டேட் பற்றித் திரும்பியது.
'மாது , உனக்கு வீடு , கொண்டோ ஏதாவது வாங்கும் பிளானும் இல்லையா?"
"பானு, தற்போதுள்ள நிலைமையிலை இல்லை. "
"ஏன் மாது?"
"பானு, எனக்குப் பொதுவாக இந்த நாட்டு பொருளாதார அமைப்பில் பெரிதும் நாட்டமும், மதிப்புமில்லை. கடன்களுக்குள் எல்லோரையும் மூழ்க வைத்து, வாழ்க்கை முழுவதும் மக்களை வண்டில் மாடுகளாக்கி வைத்து விடுவதை , அவ்விதம் வைப்பதன் மூலம் பெறப்படும் வட்டியின் மூலம் தன்னிருப்பை நிலை நிறுத்திக் கொள்ளும் அமைப்பு. "
அவள் அவன் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவன் தொடர்ந்தான்.
"ஓரு கதைக்கு $500,000 மோட்கேஜ் பற்றிப்பார்ப்போம். இப்ப அந்த விலைக்கு வீடுகளை நினைத்துப் பார்க்கவே முடியாது. இருந்தாலும் ஒரு கதைக்கு வைத்துக்கொண்டால்... இருபத்தைந்து வருசத்துக்கு மோட்கேஜ் கட்டினால் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வரைக்கும் கட்ட வேண்டி வரும். ஆனால் இப்ப வீடிருக்கிற விலையிலை நல்ல வீடு வாங்கிறதென்றால் ஒரு மில்லியனுக்குக் குறையாது. மோட்கேஜ் கட்டி முடிக்க கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வரை ஆகிவிடும். வாழ்க்கை முழுக்க இரண்டு, மூன்று வேலை செய்தால்தான் கட்ட முடியும். இல்லாட்டி குறைந்தது நூற்றைம்பதாயிரம் வருடச் சம்பளம் இருந்தால்தான் ஓரளவுக்காவது சமாளிக்க முடியும் பானு."
அவனே மேலும் தொடர்ந்தான்:
"மாதச் சம்பளத்திலை 'வன் தேர்ட்'டுக்கு மேலை மாதக் கடன் செலவு , மோட்கேஜ்ஜையும் சேர்த்து போகக் கூடாது. இது என் நிலை பானு. வாழ்க்கைக்குத்தான் வீடு. வீட்டுக்காக வாழ்க்கை இல்லை."
"அப்படியென்றால் எப்படி வாழ்க்கையிலை செட்டில் பண்ணுவதாம் மாது?"
இதைக் கேட்டதும் மாதவன் சிறிது சிந்தித்தவனாகக் கூறினான்:
"இப்ப இருக்கிற சூழலைலை வீட்டு முதலீடு என்பது காலைச்சுற்றிய பாம்பு மாதிரி. இது என்னுடைய நிலைப்பாடு. இதுக்குப் பதில் நான் ஸ்டொக் மார்க்கட்டிலை முதலீடு செய்வேன். நல்ல புளூ சிப் கொம்பனி ஸ்டொக்கிலை , நீண்ட கால எதிர்பார்ப்புடன் முதலீடு செய்வேன். அதுதான் என்னுடைய திட்டம். எண்ணம். இன்னொன்று.."
"என்ன மாது?"
"பானு, இன்னொன்று வீட்டிலை முதலீடு செய்து நல்ல இலாபம் வந்தால் வித்துவிடவேண்டும், இலாபத்திலை தூரத்திலை கடனில்லாமல் இன்னுமொரு வீடு வாங்க வேண்டும்."
"அப்படியும் சிலர் செய்யினம்தானே மாது."
"ஓம். அவர்கள் ஸ்மார்ட்டானவர்கள். ஆனால் எல்லோரும் அப்படிச் செய்வதில்லை. பலர் என்ன செய்கிறார்கள் என்றால், வீட்டின் ஈகியுட்டியை வைத்துக் கடன் எடுக்கின்றார்கள். இன்னுமொரு வீட்டை வாங்குகின்றார்கள். தொடர்ந்துக் கடனுக்கு மேல் கடனாளிகளாகவே இருக்கின்றார்கள். இது தேவையா?"
"மாது, என்னை நல்லாக் குழப்பி விட்டாய். இருந்தாலும் வீடுதான் என் முதல் சொயிஸ். "
"என்னுடைய முதல் சொயிஸ்.. ஸ்டொக் மார்கட், கிறிப்டோ... இப்ப இருக்கிற சூழலை வைத்துத்தான் சொல்லுறன். இப்ப நிறைய ரென்டல் வீடுகளைக் கட்டுகின்றார்கள். இமிகிரேசன், ஸ்டுடன்ட் விசாவைக் கட்டுப்படுத்துகின்றார்கள். இன்டரஸ்ட் ரேட்டையும் பெரிதாகக் குறைக்காமல் இப்படியே நீண்ட காலம் வைத்திருந்தால், ஒருவேளை சமாளிக்கிற அளவுக்கு வீட்டு விலை குறைந்தால், இந்த விடயத்தில் என் நிலை மாறும் , அதுவரை என் முதல் சொயிஸ் ஸ்டொக் மார்க்கட்தான். இன்னுமொரு விசயம்...."
"என்ன மாது இன்னொரு விசயம்.."
"தொண்ணூறுகளின் இறுதியில் பத்தாயிரம் டொலர் அமேசன் ஸ்டொக் வாங்கியிருந்தால் அதன் பெறுமதி இப்ப என்ன தெரியுமா பானு?'
"எவ்வளவு மாது?"
"குறைந்தது பத்து மில்லியன்."
"என்ன பத்து மில்லியனா?"
பானு வாய் பிளந்தாள்.
"வேண்டுமென்றால் கூகுள் பண்ணிப்பாரு. நான் சொல்லுறது உண்மையா பொய்யா என்பது தெரியும்."
இவ்விதமாக நீண்ட நேரம் அவர்களது உரையாடல் தொடர்ந்தது. பானுமதி தன்னிருப்பிடம் சென்ற பின்பும் மாதவனின் எண்ணத்தில் அவள் நிலைத்திருந்தாள். அவள் ரெசுமே அனுப்பச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவளது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தான். அதன் பின் அவனது சிந்தனை அன்று அவளுடன் நடத்திய உரையாடலின் மீது குவிந்தது. " ஏன் அவள் எங்கும் இருக்கலாம். ஏன் உனக்கு முன் கூட இருக்கலாம்." என்று அவள் கூறியது நினைவுக்கு வந்தது. இலேசானதொரு புன்னகை இதழ்க்கோடியில் பரவியது. ஒரு வேளை அவளைப்போன்ற ஒருத்தி, அவனது சிந்தனைகளுக்கு ஈடுகட்டக்கூடிய ஒருத்தி அவன் வாழ்க்கையில் தென்பட்டால் அவனது திருமணம் பற்றிய எண்ணத்தில் மாறுதல் ஏற்படுமா என்று ஒரு கணம் எண்ணிப்பார்த்தான். மறுகணமே தலையை ஆட்டி அந்த எண்ணத்தையே மறுத்துக்கொண்டான். அவன் திருமணம் செய்யப்போவதில்லை என்பதன் காரணமே இருப்பு பற்றிய அவனது எண்ணங்களின் விளைவாக. அவ்வெண்ணங்களில் ஒருவேளை மாற்றம் ஏற்பட்டால் தவிர அவன் திருமணம் செய்து கொள்வதென்ற பேச்சுக்கே இடமில்லை என்று தனக்குத்தானே மீண்டுமொரு தடவை கூறித் தன எண்ணத்துக்கு வலுவேற்றிக்கொண்டான்.
[தொடரும்]
girinav@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)
அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
No comments:
Post a Comment