Saturday, May 11, 2024

காலத்தால் அழியாத கானம் - 'பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்'


சங்ககாலப்பாடலான 'குறுந்தொகை'யில் பதுமனார் என்னும் புலவர் ஒருவரின் பாடலொன்று பெண்ணொருத்தியின் காதல் உணர்வுகளை அழகாகப் படம் பிடிக்கும். ஓசைகள் யாவுமடங்கி ஊரே உறங்கும் நள்ளிரவில் அவள் மட்டும் உறங்காமல் விழித்திருக்கின்றாள். இதனை அழகாகப்படம் பிடிக்கும் குறுந்தொகைப்பாடல்:

"நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே"


நள் என்னும் சொல்லுக்குப் பல அர்த்தங்களை உரையாசிரியர்கள் வழங்கியிருக்கின்றார்கள். செறிவு, ஒலி, நடு என அர்த்தங்கள் பல. இங்கு நள் என்றது செறிவு மிக்க யாமம் என்பதற்கும் பொருந்தும், இரவின் நடுப்பகுதி என்பதற்கும் பொருந்தும்.  இங்கு தலைவனின் பிரிவைத் தாங்க மாட்டாதவளான தலைவி, உலகத்து மாந்தரெல்லாரும் தூங்குகையில், தலைவியின் தோழியுட்பட,  தூக்கமின்றித் தவிக்கின்றாள். அவள் தோழியை எழுப்பித் தன் நிலையை எடுத்துரைக்கின்றாள்.  'உலகமும் துஞ்சுகையில் தான் மட்டும் துஞ்சாமல் இருக்கின்றேன்' என்கின்றாள்.

இப்பாடலில் வரும் 'சொல் அவிந்து' என்னும் படிமச் சிறப்புள்ள பதம் அற்புதமான கவித்துவத்தின் வெளிப்பாடு. மக்கள் குரல் அடங்கியதை வெளிப்படுத்தும் சொற்றொடர்.  எனக்கு மிகவும் பிடித்த சொற்றொடர்களில் ஒன்று.

இவ்விதமான காதலர்க்கிடையிலான பிரிவு இருவருக்கும் தூக்கமின்மையை ஏற்படுத்தும் இயல்பு மிக்கது.  இவ்விதம் நள்ளிராவில் தூக்கமின்றித் தவிக்கும் காதல்மிகு உள்ளங்களை விபரிக்கும் பாடல்கள் பல குறுந்தொகை போன்ற சங்க  இலக்கியங்களில் உள்ளன.  கொல்லன் அழிசி என்னும் புலவர் 'கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே' என்னும் சொற்றொடரைப் பாவித்திருப்பார்.  திருக்குறளின் காமத்துப் பாலிலும்  'மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை' என்று வள்ளுவரும் காதலரின் பிரிவை விபரித்திருப்பார்.

பழந்தமிழ் இலக்கியத்தில் புலமை மிக்க திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு அவை மிகுந்த உதவியை அழிப்பதை அவர்கள்தம் பாடல்கள் புலப்படுத்தும். உதாரணத்துக்குக் கவிஞர் கண்ணதாசனின் 'நேற்று வரை நீ யாரோ நான் யாரோ' பாடலைக் கூறலாம்.  அது குறுந்தொகையில் வரும் செம்புலப்பெயனீரார் (குறிஞ்சித்திணை) எழுதிய  'யாயும் ஞாயும் யார் ஆகியரோ?, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்.
யானும் நீயும் எவ்வழி அறிதும். செம்புலப் பெயல் நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
.' என்னும் வரிகளின் தாக்கம்.  வள்ளுவரின் '"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்'
என்னும் வரிகளின் தாக்கம்.

கற்பகம் திரைப்படத்தில் வரும் 'பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்' அற்புதமான ,காதல் உள்ளமொன்றின் உணர்வினை வெளிப்படுத்தும் பாடல். இதனை நீண்ட காலம் கவிஞர் கண்னதாசனே எழுதியிருந்ததாக எண்ணியிருந்தேன். ஆனால் இதனை எழுதியவர் அவரல்லர், கவிஞர் வாலியே என்பதை அறிந்தபோது கவிஞர் வாலியைக் கண்ணதாசனின் தாசன் எனக் கூறலாமென  நான் நினைத்துக்கொண்டேன்.

இப்பாடலில் வரும் பின்வரும் வரிகள் மேற்படி 'துஞ்சும் உலகில் , துஞ்சாதிருக்கும்' தலைவியின் காதல் விரகதாபத்தை வெளிப்படுத்தும்:

"ஊரெல்லாம் உறங்கிவிடும்
உள்ளம் மட்டும் உறங்காது
ஓசையெல்லாம் அடங்கி விடும்.
ஆசை மட்டும் அடங்காது
ஆசை மட்டும் அடங்காமல்
அவனை மட்டும் நினைத்திருப்பேன்"


பழந்தமிழ் இலக்கியங்களை ஏன் கவிஞர்கள் படிக்க வேண்டுமென்பதற்கு நல்லதோர் உதாரணங்கள் இவை. அவற்றை இக்காலத்துக்கேற்ப எளிய, இனிய தமிழில் அவர்கள் தரும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி.

இனி பாடலைக் கேட்போம். களிப்போம். பாடலின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிகையர் திலகத்தின் நடிப்பில் ,  மெல்லிசை மன்னரின் இசையில்  எமை மறப்போம்,

https://www.youtube.com/watch?v=0tjaE1I7h7A

 கவிஞர் கண்ணதாசன், கவிஞர் கங்கை அமரன் ஆகியோரையும் பதுமனாரின் தாக்கம் விட்டுவைக்கவில்லையென்பதைப் பின்வரும் வரிகள் எடுத்தியம்பும்:

"பூ உறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே.
கான் உறங்குது. காற்றும் உறங்குது.
நான் உறங்கவில்லை."

கே.வி.மகாதேவனின் இசையில், பி.சுசீலாவின் குரலில், எம்ஜிஆர், சரோஜாதேவி நடிப்பில் ஒலிக்கும் இப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'தாய் சொல்லைத் தட்டாதே'.

எண்பதுகளின் நடிப்பகுதியில் வெளியான 'மெல்லத் திறந்தது கதவு' படத்தில் இடம் பெற்றுள்ள 'ஊரு சனம் தூங்கிடிச்சு' பாடலும் சங்கப்புலவர் பதுமனாரின் தாக்கத்தை எடுத்துக்காட்டும் பாடல்களில் ஒன்றுதான். இதனை எழுதியிருப்பவர் கவிஞர் கங்கை அமரன். இசை - இளையராஜா. நடிப்பு - மோகன், ராதா.

"ஊரு சனம் தூங்கிடிச்சு
ஊதற் காற்றும் அடிச்சிரிச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே"
 

 

 

 

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: காட்சியும் சித்(த)து விளையாட்டும்!

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI யு டியூப்பில் கேட்டுக் களித்திட: https://www.youtube.com/watch?v=snzGyWR-BwE காட்சியும் சித்(த)து விள...

பிரபலமான பதிவுகள்