Tuesday, May 7, 2024

சந்தியாப்பிள்ளை மாஸ்டர் என்னும் இளைஞர்!

 

சந்தியாப்பிள்ளை மாஸ்டரைப்பற்றி நினைத்தால் எனக்கு முதலில் தோன்றுவது அவரது திடகாத்திரமான உடம்பும், மீசையும், சிரித்த முகமும்தாம்.  அவருடன் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தால் சில கேள்விகள் கேட்கவேண்டுமென்று நினைப்பதுண்டு.அதற்குக் காரணம் அவரது வயதும், தோற்றமும்தாம். எண்பத்தைந்து வயது, ஆனால் தோற்றமோ நாற்பதுகளின் நடுப்பகுதிதான். எப்படி இவரால் இவ்விதமிருக்க, தோன்ற முடிகின்றது என்று வியப்பதுண்டு. அதனால்தான் அவரைச் சந்திக்கையில்  அவ்விதம் சில கேள்விகள் கேட்கவேண்டுமென்று நினைப்பதுண்டு.

இன்று அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது இளமையின் இரகசியம் பற்றிச் சில கேள்விகள் கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில்கள் பலருக்கும் உதவக்கூடும் என்பதால் அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

'சேர், நீங்கள் இவ்வளவு இளமையாகக் காட்சியளிப்பதற்கு என்ன செய்கின்றீர்கள்? எவ்விதமான உணவு வகைகளை உண்ணுகின்றீர்கள்?"

அதற்கு அவர் அளித்த பதிலின் சுருக்கம் இதுதான்:

அவர் காலையில் சாப்பிடுவது 'ஓட்ஸ்' கஞ்சி. அதற்குள் 'வால்நட்' போன்ற  பருப்பு வகைகளைக் கலந்துகொள்கின்றார். அத்துடன் மூன்று பேரீச்சை பழமும் சாப்பிடுகின்றார். இது தவிர ஒரு முட்டை சாப்பிடுகின்றார். மதிய உணவாக சோறும், மரக்கறி வகைகளுடன் மீனும் சேர்த்துக்கொள்கின்றார். இரவு இடியப்பம் போன்ற உணவு வகைகளிலொன்று. இவ்விதமான உணவுகளை உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை உண்கின்றார்.  காலையில் இஞ்சியும்,  தேன் கலந்த தேநீர் அருந்துகின்றார்.

இவ்விதமாக உணவு வகைகளில் கவனமெடுக்கும் அவர் நிறைய நடக்கின்றார். இவை தவிர முக்கிய விடயமொன்றுள்ளது. அது: அவர் ஒரு போதும் தேவையற்று மனத்தை அலட்டிக்கொள்வதில்லை. எப்பொழுதும் இன்பமாகவிருக்கின்றார்.  மன அழுத்தங்களை இதன் மூலம் தவிர்த்துக்கொள்கின்றார்.

இவை அவர் குறுகிய நேர உரையாடலில் எனக்குக்  கூறியவை. இவை பற்றி விரிவாக அவருடன் இன்னுமொரு சமயம் உரையாட வேண்டுமென்று எண்ணமுண்டு.

சந்தியாப்பிள்ளை மாஸ்டர் 'எண்பதிலும் இளமையுடன் இருப்பது எப்படி?" என்றொரு புத்தகம் எழுதினால் நல்ல விற்பனையாகும் சாத்தியமுண்டு. ஏனென்றால் அதற்கு உதாரணமாக அவரே இருப்பதால் அவரே அவரது நூலுக்கு நல்லதொரு சாட்சி.

அவரைப்பற்றி நான் முன்பும் முகநூலில் எழுதியிருக்கிறேன்.  ஆனால் அவர் அது பற்றி அறிந்திருக்கவேயில்லை. ஏனென்றால் அவர் நட்பு வட்டத்தில் இருந்திருக்கவில்லை. ஆனால் இன்றிலிருந்து அவர் முகநூல் நண்பராகவுமிருக்கின்றார்.  இப்பதிவை அவர் நிச்சயம் தவறவிடப்போவதில்லை.

இப்பொழுதும் வாகன சாரதிப்பத்திரம் வைத்திருக்கும் அவரது சுறுசுறுப்பும், திடகாத்திரமான உடல்வாகும், சிரித்த முகமும், எதனையும் மனத்தைப் பாதிக்காத வகையில் வைத்திருக்கும் மன ஆளுமையும், திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்து கடைப்பிடித்து வரும் உணவு  முறையும், தேகப்பயிற்சியும் , முதியவர்கள்  தொடர வேண்டிய  முன் மாதிரியாக  அவரை வைத்திருக்கின்றன.    அவை முதுமையில் காலடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வழிகாட்டிகளாக இருக்கக்கூடியவை.

சந்தியாப்பிள்ளை 'மாஸ்ட்டரிடம்' ஒன்பதாவது வகுப்பில் தமிழ் படித்திருக்கின்றேன். இவர் தமிழ் ஆசிரியரல்லர். மாணவர்களுக்குக் Cadet பயிற்சி கொடுத்தல், விளையாட்டு இவைதாம் இவரது பிரதானமான துறைகள்.  
பாடத்தைச் சுவையாகப் படிப்பிப்பதற்காக அவர் அவ்வப்போது சில குட்டிக்கதைகளைக் கூறுவதுண்டு. சில கதைகள் மாணவர்களின் வயதுக்கு மீறியவையாகவும் இருப்பதுண்டு. ஆனால் ஒரு போதுமே அவற்றை அவர் விரசமாகக் கூறுவதில்லை. வேடிக்கையை மையமாக வைத்தே அவற்றைக் கூறுவார். உதாரணமாக 'மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற கிராமத்தான்', 'அச்சகத்துக்குச் சென்றவரின் அனுபவம்' போன்ற குட்டிக்கதைகளை அவர் கூறியிருக்கின்றார். இவை அவர் கூறிய குட்டிக்கதைகளுக்கு நான் வைத்த தலைப்புகள்.

ஆனால் சந்தியாப்பிள்ளை 'மாஸ்ட்டர்; என்றதும் எனக்கு முதலில் ஞாபகம் வருவது இவை அல்ல. இன்னுமொரு விடயம். அது: எங்களது வகுப்பு குமாரசாமி மண்டபத்துக்கு , கே.கே.எஸ்.வீதியிலிருந்து வரும் வீதியின் வடக்குபக்கத்திலிருந்தது. எங்கள் வகுப்பு யன்னல் வழியாக அவ்வீதியையும், அங்கு நடப்பவற்றையும் காணலாம். அவ்வப்போது அவ்வழியால் இறந்தவர்கள் சிலரது இறுதி ஊர்வலங்கள் செல்வதுண்டு. அவ்விதமான சந்தர்ப்பங்களில் சந்தியாப்பிள்ளை 'மாஸ்ட்டர்' மாணவர்கள் அனைவரையும் எழுந்து நிற்கச் சொல்லி, அவ்வழியால் இறுதி யாத்திரை செல்லும் அந்த மனிதருக்கு அஞ்சலி செய்ய வைப்பார். ஒருவரின் அந்திம யாத்திரைக்குச் சந்தியாப்பிள்ளை 'மாஸ்ட்டர்' காட்டிய அந்த மானுட நேயப்பண்பு எனக்கு அவ்வயதில் ஆச்சரியத்தை மூட்டியது; இன்றும்தான். இந்த  அவரது பண்பு என்னால் மறக்க முடியாத ஆசிரியர்களிலொருவராக  சந்தியாப்பிள்ளை மாஸ்ட்டரையும் ஆக்கிவிட்டதென்பேன்.

எம் ஆசிரியர்கள் எல்லோரும் எங்களது பால்ய, பதின்ம பருவங்களுடன் பின்னிப் பிணைந்தவர்கள். அவ்வகையில் முக்கியமானவர்கள். அழியாத கோலங்களாக நிலைத்து நிற்பவர்கள்.

* இங்குள்ள அவரது புகைப்படம் 'இகுருவி ஐயா' அவரது தளத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களிலொன்று. நன்றியுடன் பாவித்துக்கொள்கின்றேன்.

No comments:

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (6) - அத்தியாயம் ஆறு: எதிர்காலத்திட்டங்கள் பற்றிய உரையாடலொன்று.

ஒரு சில  மாதங்கள் ஓடி  மறைந்தன. இதற்கிடையில் பானுமதியும் மாதவனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டிருந்தனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் அ...

பிரபலமான பதிவுகள்