![]() |
- அ.ந.கந்தசாமி - |
கொழும்பில் எனது 'மதமாற்றம்' நாடகம் நான்காவது முறை அரங்கேறியிருக்கிறது. அரங்கேற்றியவர் பிரபல சிறுகதையாசிரியர் காவலூர் இராசதுரை. டைரக்ஷன் லடீஸ் வீரமணி. நடித்தவர்களில் தான் தோன்றிக் கவிராயரென்று புகழ் படைத்த சில்லையூர் செல்வராசன், ஞானாஞ்சலி, தோத்திரமாலை போன்ற பல நூல்களை எழுதிய நவீன உவமைக் கதாசிரியர் முத்தையா இரத்தினம் என்பவர்கள் இவர்களில் சிலர்.
நல்ல முறையில் அரங்கேற்றுவதன் மூலம், தமிழ் நாடகத்துக்குப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் கொடுக்க முடியும் என்று நம்பியவர்கள் இவர்கள். இலங்கையில் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குத் தரத்தில் குறைவில்லாத தமிழ் நாடகங்களைத் தயாரித்து அளிக்க வேண்டுமென்று துடித்தவர்கள். ஆகவே இப்போது விமர்சகனின் முன்னுள்ள ஒரே கேள்வி இதில் இவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார்கள் என்பதுதான்.
நாடகம் எழுதுவது, ரேடியோவில் விமர்சனம் செய்வது, நாடக இயல் பற்றி நான் ஆராய்வது-பேசுவது ஆகிய யாவற்றிலும் நான் சிறிது காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஆனால் இவை யாவற்றிலும் பார்க்க நான் செய்து வந்த முக்கியமான வேலை நாடகங்களைப் பார்ப்பதாகும். இதில் நான் எவருக்கும் சளைத்தவனல்ல. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் கலாநிதி சு.வித்தியானந்தனின் 'கர்ணன் போர்' தொடக்கம் லடீஸ் வீரமணியின் 'சலோமியின் சபதம்' வரை அனேகமானவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கில நாடகங்களில் பெர்னாட்ஷாவின் 'மில்லியனரெஸ்' ('கோடிஸ்வரி') தொடக்கம் ஆர்தர் மில்லரின் 'டெத் ஒவ் ஏ சேல்ஸ்மேன்' ('விற்பனையாளனின் மரணம்') அனேக நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். சிங்கள நாடகங்களில் தயானந்த குணவர்த்த்னாவின் 'நரிபேனா' தொடக்கம் சுகத பால டி சில்வாவின் 'ஹரிம படு ஹயக் ' வரை பல நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன்.
'மதமாற்றம்' நாடகத்தின் முதற் சிறப்பு, அது இலங்கையில் சுயமாக எழுதப்பட்ட ஒரு மூல நாடகமென்பதாகும். மேலே நான் கூறிய நாடகங்கள்- சிங்கள நாடகமாகட்டும், ஆங்கில நாடகமாகட்டும் - எதுவுமே இலங்கையில் எழுதப்பட்ட மூல நாடகங்களல்ல. 'கர்ணன் போர்' இதிகாசத்தின் வழி வந்த கர்ணபரம்பரை நாடகம். 'சலோமியின் சபதம்' ஓஸ்கார் வைல்ட் தழுவல். ஆங்கில நாடகங்களிரண்டும் உலகின் பிரசித்தி பெற்ற அன்னிய நாடகாசிரியர்களின் சிருஷ்டிகள். 'நரிபேனா' கிராமியக் கதை. 'ஹரிம படு ஹயக்' இத்தாலிய நாடகாசிரியர் பிரான் டெல்லோ எழுதியது. என்னைப் பொறுத்தவரையில் நாடகம் என்பது எழுத்தும் தயாரிப்பும் சேர்ந்தது. ஒரு மொழியில் சுயமான நாடக இலக்கியங்கள் எழுந்து அவை மேடையில் அரங்கேற்றப்படுவதுதான் சிறப்பு. ஆனால் இதற்கு உலகின் சிறந்த நாடகங்கள் இங்கு அரங்கேற்றப்படுவதை நான் ஆட்சேபிப்பதாக பொருள் கொண்டு விடக் கூடாது. உண்மையில் அவை மூலத்திலுள்ள மாதிரியே இங்கு அரங்கேற்றப்படும்போது நமது நாடக எழுத்தாளர்களுக்கு அவை வழிகாட்ட வல்லனவாய் அமையும். அத்துடன் நமது நாடக ரசிகர்களின் ரசிகப்புலன் வரையும் அவை உதவும் என்பது என் அபிப்பிராயம்.
ஆனால் ஐந்து வேற்று நாடகங்கள் அரங்கேற்றும் பொழுது ஒரு சுயமான நாடகமாவது எழுதி அரங்கேற்றப்படாது விட்டால் நாடகம் இங்கு ஒரு இலக்கியத் துறையாக வளர்வது எப்படி? 'மதமாற்றத்தை'ப் பொறுத்தவரையில் அது சுயமாக எழுதப்பட்ட மூல நாடகம். மூலநாடகமாயிருந்து விட்டால் மட்டும் ஒரு நாடகம் சிறந்ததாகி விடாது. அதில் போதிய நாடகத்தன்மை கொண்ட நாடகக் கதையுண்டா, நல்ல உரையாடல்கள் இருக்கின்றனவா, மனதைத் தாக்கும் கருத்துகள் உள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும். இவ்வகையில் 'மதமாற்றம்' நல்ல நாடகமே. அதனால் தான் பல ஆங்கில தமிழ் விமர்சகர்கள் அதை இப்சனோடும், ஷாவோடும், சாட்ரேயோடும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். இப்படி ஒப்பிட்டவர்களில் டெயிலி மிரர் 'அர்ஜூனா' , சில்லையூர் செல்வராசன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். சென்ற வாரம் இலங்கை வானொலியின் ஆங்கில ஒலிபரப்பில் பேசிய கே.எஸ்.சிவகுமாரனும் ஷாவின் 'ஆர்ம்ஸ் அண்ட் மான்' நாடகத்துடன் 'மதமாற்றை'த்தை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் இந்நாடகத்தை இலக்கியம் என்ற முறையில் துருவி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருப்பவர் ஈழத்தின் சிறந்த கலை இலக்கிய விமர்சகரான கலாநிதி கே.கைலாசபதியேயாவர். 'இதுவே தமிழில் முதல் முதலாக எழுதப்பட்டுள்ள மிகவும் சிறந்த காத்திரமான நாடகம் (Serious Play). இவ்வாறு நான் சொல்கையில் தென்னிந்தியாவையும் அடக்கியே கூறுகிறேன்' என்று சமீபத்தில் 'சிலோன் ஒப்சேர்வர்' பத்திரிகையில் தமிழ் நாடக நிலை பற்றி எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நடிப்பு
ஒரு நாடகம் எவ்வளவு தான் சிறப்புள்ளதானாலும் அது அரங்கில் சிறப்படைவது நடிகர்களாலும் தயாரிப்புத் திறனாலுமே. காவலூர் ராசதுரையின் மதமாற்றம் இந்த வகையில் எவ்வாறு அமைந்திருந்தது? நாடகக்கதையைப் பற்றி எழுதும்போது நாடகத்தை எழுதியவன் நானென்ற காரணத்தினால் மற்றவர்களின் கருத்துகளையேதான் அதிகமாக எடுத்துக் கூறவேண்டியதாயிற்று. ஆனால் நடிப்பைப்பற்றி எழுதும்போது இந்தத் தொல்லை எனக்கில்லை. இதில் எனது கருத்துகளை நான் மிகப்பட்டவர்த்தனமாகவே கூறிவிட முடியும்.
கலாநிதி கைலாசபதி தனது ஆங்கிலக் கட்டுரையில் 'மதமாற்றத்'தின் முன்னைய தயாரிப்புகள் பற்றிக் கூறுகையில், அவை தயாரிப்புத்தரம் குறைந்திருந்ததால் முழுப் பொலிவையும் பெற்று மிளிரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். புதிய 'மதமாற்றத்தைப்' பற்றி எவரும் அவ்வாறு கூறுவதற்கில்லை. பல இடங்களில் அது முழுப் பொலிவையும் பெற்றுச் சோபித்ததென்றே சொல்ல வேண்டும். ஆகச் சிறந்த ஆங்கில சிங்கள நாடகங்களுக்குச் சமதையான, சிறந்த நடிப்பை நான் 'மதமாற்றத்தில்' கண்டேன். நடிப்பைப் பொறுத்தவரையில் ஈழத்தில் அதிகப் புள்ளிகள் பெறும் தமிழ் நாடகம் இதுதான். நடிகர்களில் என் மனதைக் கொள்ளை கொண்டவர் சில்லையூர் செல்வராஜனே. அர்த்தபுஷ்டியுள்ள வசனங்களை நறுக்குத் தெறித்தாற்போல் பேச வேண்டிய பொறுப்பு அவருக்கேற்பட்டது. அதை அவர் மிகச்சிறப்பாகவே நிறைவேற்றி விட்டார். இயற்கையான நடிப்பு. அவர் நடிக்கவில்லை என்ற பிரமையை எவருக்கும் ஏற்படுத்தத்தான் செய்யும்.
பொதுவாகக் கருத்து நாடகங்களை எழுதும் ஷா போன்ற பெரிய நாடகாசிரியர்களின் படைப்புகளில் சில சமயங்களில் பாத்திரங்கள் மிக நீண்ட பிரசங்கங்களைச் செய்ய ஆரம்ப்பிப்பார்கள். செயிண்ட் ஜோன், பாக்டு மெதுசேலா என்ற அவரது நான்கு மணி நேர நாடகங்களில் நாலைந்து பக்கங்களுக்குச் செல்லும் இப்படிப்பட்ட அதிகப் பிரசங்கங்களைக் காணலாம். நல்ல வேளையாக 'மதமாற்றத்'தில் இக்குறையில்லை. எந்த பாத்திரமுமே தொடர்ந்தாற்போல் ஐந்து வசனங்களைக் கூடப் பேசவில்லை. இது செல்வராஜனின் நடிப்புக்கும் பேச்சுக்கும் ஓரளவு உதவி செய்யவே செய்தது. இதனால் தனது கருத்து நிறைந்த வசனங்களை அதிகப் பிரசங்கத் தன என்று தோன்றாமலே பொழிந்து தள்ள முடிந்தது அவரால்.
செல்வராஜனுக்கு அடுத்தபடி என் மனதைக் கவர்ந்தவர் கதாநாயகியாக நடித்த ஆனந்தி. தன்னம்பிக்கையோடு மேடையைத் தன் வீடுபோல் கருதி வசனங்களைக் கொட்டித் தள்ளினார் ஆனந்தி. சபையோரிடையே மிகுந்த பரபரப்பையூட்டிய பாலச்சந்திரன் - ஷீலா சந்திப்பு சீனில், அவர் நடிப்பு மிகச் சோபித்தது. ஆனால் இரண்டோர் இடங்களில் அவர் வசனங்களை மறந்து திண்டாடியதை மட்டும் என்னால் மன்னிக்க முடியாது. நாடகத்தில் நடித்த மற்றையவர்கள் எல்லோருமே தம் தம் பாகங்களுக்குப் பொருத்தமாகவே இருந்தனர். சில நடிகர்கள் சிறிய பாகங்களை வகித்ததால், தமது முழு நடிப்புத் திறனையும் காட்ட முடியவில்லை. ஆனால் அதற்காக எல்லோருக்கும் சமசந்தர்ப்பம் அளிக்கு நாடகத்தை யாராலும் எழுதிவிட முடியாதல்லவா?
செட்டுகள்
நாடகத்தின் அடுத்த சிறப்பம்சம் அதன் செட்டுகளாம். அனேகமான தமிழ் நாடகங்களில் ஆர்ப்பாட்டமான செட்டுகளை அமைத்து சபையோரின் கவனத்தை நாடகத்திலிருந்து செட்டுக்குத் திருப்பி விடுகிறார்கள். லடீஸ் வீரமணியின் செட்டுகளில் இக்குறையில்லாதிருந்ததே அதன் தனிச் சிறப்பு. ஆனால் கடைசிக் காட்சியில் ஒளி அமைப்பு பிரமாதமாயிருந்த போதிலும் நாடகத்தின் சுறுசுறுப்பை ஓரளவு குறைத்து விட்டதென்றே கூற வேண்டும். பின்னணியைப் பொறுத்தவரையில் லடீஸ் வீரமணியின் 'நாடகத்தின் காவியத்தில்..' என்ற பாரதி பாட்டு அதிக அற்புதமாக இருந்தது.
![]() |
லடீஸ் வீரமணி, அ.ந.கந்தசாமி & காவலூர் இராசதுரை |
டைரக்ஷன்
'மதமாற்றம்' டைரக்டர் லடீஸ் வீரமணி ஏற்கனவே பல நாடகங்களை அரங்கேற்றிப் புகழ் பெற்றவரென்றாலும் இந்நாடகமே அவரது மிகசிறந்த தயாரிப்பு என்று நான் கருதுகிறேன். இதற்குக் காரணம் அவர் நாடகப் பிரதியை கூடியவரை அடியொற்றிச் சென்றமையும் நல்ல நடிகர்கள் பலர் அவருக்குக் கிடைத்தமையுமேயாகும்.
பொதுவாகச் சொல்லப் போனால் 'மதமாற்றத்தின்' நான்காவது அரங்கேற்றம் அந்நாடகத்துக்கு முன்னில்லாத சிறப்பை அளித்திருக்கிறது. நடிப்புத் துறையிலும் தயாரிப்பிலும் இலங்கையின் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குச் சமமாக விளங்கும் அது, எதிர்காலத்தில் நமக்கு நம்பிக்கையையூட்டுகிறது. இத்தகைய ஒரு நாடகத்தை தயாரித்தளித்தற்காக தன் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரையைப் பாராட்டுகிறேன்.
நன்றி: 'செய்தி' , ஜுலை 3, 1967 ; பதிவுகள் நவம்பர் 2003 இதழ் 47
* டிஜிட்டல் ஓவியத் தொழில்நுட்பம் - VNG
******************************************************************************************************
எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தின் (இலங்கை) பதின்மூன்றாவது வெளியீடாக 1989இல் நூலாக வெளியானது 'மதமாற்றம்' நூலில் மதமாற்றம் வெளிவந்த காலத்தில் பல்வேறு ஊடகங்களில் அது பற்றி வெளியான கருத்துகளையும் தொகுத்துப் பிரசுரித்திருந்தார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே ஒரு பதிவுக்காக, ஞாபகத்துக்காகப் பதிவு செய்கின்றோம்.
'மதமாற்றம்' 1967இல் அரங்கேறியபோது...
1. 'மதமாற்றம்' தமிழ் நாடகத்துறையில் புதியதொரு திருப்பம். - 'தினகர'னில் த.ச -
2. ஈழத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய 'மதமாற்றம்' புரட்சிகரமான கதாம்சத்தைக் கொண்ட ஒரு சிறந்த நாடகம். மனித பலவீனங்களை, மூட நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து குத்திக் காட்டுகையில் சிரிப்புடன் சிந்தனையையும் கிளறிவிடும் வகையில் கதை மிக நுணுக்கமாகப் பின்னப்பட்டிருக்கிறது. - 'வீரகேசரி'யில் எஸ்.எஸ்
3. 'மதமாற்றம்' புதியதோர் நிலையைத் தமிழ் நாடக உலகில் தோற்றுவித்திருக்கின்றது. மத சம்பந்தமான பிரச்சினைகள் நகைச்சுவையோடு மேடைக்குக்கொண்டு வரப்பட்டிருக்கின்றன. - 'டைம்ஸ் ஒப் சிலோ'னில் டி.ஆர்4. திரு கந்தசாமியை எவ்வித தயக்கமுமின்றி அவரது நாடகப்புலமைக்காக மெச்சுகின்றேன். கடைசிக் காட்சிக்கு முன்னைய காட்சி ஒரு இப்சன் அல்லது ஒரு ஷாவின் வாத விவாத நாடகக் காட்சியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. கடைசிக்காட்சியில் மிகச்சிறந்த நாடகப்பண்புகள் அமைந்துள்ளன. - 'டெய்லி மிரரி'ல் அர்ஜூனா -
4. கதையைக் கட்டி எழுப்பி நடாத்திச் செல்லும் விதத்தில் ஆசிரியரின் கலை நுணுக்கமும், சாதுரியமும் பளிச்சிடுகின்றன. ஒன்றின் மீதொன்றாக முறுகி இறுகும் கட்டங்கள் கலைஞர்களைப் பிணித்து வசப்படுத்துவதுடன் அமையாது மதச்சார்பு பற்றிய பற்றிய உளவியல் அடிப்படைகளைக் குறிப்பாக உணர்த்திச் செல்லுகின்றன. - 'வசந்தத்தில்' கவிஞர் முருகையன் -
5. அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றத்தில்' கதா நகழ்சி திடீர்த்திருப்பங்களும் மாற்றங்களும் கொண்டது. ஓ ஹென்றிச்சூழல்கள் நிறைந்த்து. பேர்னாட்ஷாவின் 'டெவில்ஸ்டிசைப்பிள், அன்ட்ரோக்கில்ஸ் அன்ட் த லயன்' போன்றவற்றின் பின்னால் ஷாவின் நகையொலி கேட்பது போல 'மதமாற்றத்தின்' கதாநிகழ்ச்சிக்குப்பின்னாலும் கதாசிரியரின் நகையொலி கேட்கிறது. இலங்கையில் சொந்தமாகத்தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த நாடகம் இதுவே. அ.ந.கந்தசாமியின் மதமாற்றத்தோடு ஒப்பிடக்கூடிய எந்நாடகத்தையும் இந்திய எழுத்தாளர் படைப்புகளிடையேகூட இவ்விமர்சகன் ஒரு போதும் கண்டது கிடையாது. - 'ரிபியூனில்' சில்லையூர் செல்வராசன் -
6. கதையில், மொழியில், கருத்தில் உயர்ந்த தரத்தை எட்டிப்பிடிக்கும் நண்பர் அ.ந.கந்தசாமியின் இந்நாடகம் ஈழத்து நாடகக்கர்த்தாக்களுக்கு ஒரு தீபஸ்தம்பமாக, விடிவெள்ளியாகத் திகழ்கின்றது. - 'தேசாபிமானி'யில் எச்.எம்.பி
7. அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' கதை திடீர்த்திருப்பங்கள் பல கொண்ட நெஞ்சைப்பிணிக்கும் சுவையான கதை. நையாண்டிக்கதையானாலும் நவரசங்களும் பொதிந்து படித்தவர், பாமரர் யாவரையும் கவரவல்லவவாக அமைந்திருக்கின்றன. உரையாடல்கள் உலகப்பெரும் நாடகாசிரியர்களான பேர்னாட்ஷா, இப்சென், சாட்டர் போன்றோரின் படைப்புகள் கலைஞர்களால் கொண்டாடப்படுவதற்கு இவ்வம்சங்கள் யாவும் ஒரு சேர அவற்றில் அமைந்திருப்பதே காரணம். மதமாற்றம் நாடகத்திலும் இப்பண்புகள் குறைவில்லாது அமைந்திருக்கின்றன. - 'ராதா'வில் 'கலாயோகி' -
8. தற்கால இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் கை வைத்துத் தாம் தொட்ட துறை எல்லாம் வெற்றி பெற்ற திரு.கந்தசாமி 'மதமாற்றத்'தில் ஈழத்தில் மிகச்சிறந்த மேடை நாடகாசிரியர் என்று வர்ணிக்கும் அளவுக்குப் பெரும் வெற்றி ஈட்டியிருக்கிறார். சுருக்கமாய்ச் சொன்னால் மதமாற்றம் ஒரு உயர்ந்த அனுபவம். தமிழுக்கு வாய்த்த நாடகச்செல்வம். புதுமைக் கருத்தோவியம். இன்றைய சமுதாயத்தின் தத்துவச்சிக்கல்களின் கண்ணாடி. - - தேசபக்தனில் எஸ்.ஸ்ரனிஸ் -
9. இலங்கையில் பல மேடை நாடகங்களைப் பார்த்துள்ளேன். ஆயினும் 'மதமாற்றம்' என்ற இந்நாடகம் என்னுள் ஏற்படுத்திய மதிப்பை வேறு எந்த நாடகமும் ஏற்படுத்தவில்லை. மேடை நாடகக்காட்சிகளை அமைக்கும் திறமையை அவர் எங்கு பெற்றார் என்று தெரியவில்லை. இம்முதல் நாடகத்திலேயே அச்சிறப்பைக் காணக்கூடியதாக இருந்தது. உரையாடல்களையும் கதையையும் நகர்த்திச்செல்லும் முறையில் பார்வையாளரை ஈர்த்துச்செல்லக்கூடிய உத்தியைக் கையாண்டுள்ளார். ...
சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னாரின் அறிவையும் இந்நாடகத்தில் காணலாம். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந்நாடகத்தில் சாடி இருப்பது இந்நாடகத்தின் தனிச்சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம்மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப்பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தனை மூலம் அறிவர். கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப்பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத்தழுவி காதலைக்கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவானபோதும் 'மதம்', 'காதல்' என்ற பொய்மையை கந்தசாமி சாடும் திறமை அபாரம். 'மதமே பொய், ஒருவரும் பொய்களை நம்புகிறார்கள். ஆனால் வெவ்வேறு பொய்கள்.' - கந்தாசமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகின்றார். - நூலுக்கான முன்னுரையில் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் -
10. நாவல் துறையில் மாத்திரமின்றி நாடகத் துறையிலும் அ.ந.க.வின் விசேட கவனம் சென்றது. வீழ்ச்சியுற்றுக் கிடக்கும் நாடகத்துறையில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தார். 'மதமாற்றம்' என்ற நல்லதொரு நாடகத்தை தந்தார். 'மதமாற்றம்' நாடகத்தைப் போல் அந்தக் காலகட்டத்தில் ஈழத்து நாடக மேடையைப் பாதித்தது வேறு எந்த நாடகமும் இல்லை எனலாம்.கொழும்பில் தற்போது அரங்கேற்றப்படும் சில நாடகங்களைப் பார்க்கும் பொழுது பார்வையாளர்கள் 'ஆகா' எனக் கைதட்டிச் சிரிப்பதைக் காண்கின்றோம். நாடகத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்ததும் எதுவும் மனதில் தங்கும்படியாக இல்லை. இப்படிப்பட்ட போலி இரசிகத்தன்மையை வளர்க்கும் நாடகங்களில் மாறுபட்டு நின்றது 'மதமாற்றம்'.
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 'ஒப்சேவர்' ஆங்கிலப் பத்திரிகையில் தமிழ் நாடகங்களைப் பற்றி எழுதியபொழுது 'இதுவே தமிழில் எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச் சிறந்த நாடகம்' எனக் குறிப்பிட்டார். ஆமை வேகத்தில் இயங்கிய ஈழத்துத் தமிழ் நாடகமேடை அ.ந.க. 'மதமாற்றம்' ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக சிறிது துரித வேகத்தில் இயங்க ஆரம்பித்தது என்பது நாடக அபிமானிகள் ஒத்துக் கொண்ட உண்மையாகும்.
'மதமாற்றம்' முதன் முதலில் அரங்கேற்றப்பட்டதும் அதைப் பற்றிய காரசாரமான விவாதங்களும், விமர்சனங்களும் இலக்கிய உலகில் பெரும பரபரப்பை ஏற்படுத்தின. சில விமர்சகர்கள் அ.ந.க. முற்போக்குவாதி என்ற காரணத்தினால், அவரை வைத்தே நாடகத்தை எடை போட்டு, நடுநிலை நின்று உண்மை கூறாது 'மதமாற்றத்'தைக் குறை கூறினார்கள். 'மதமாற்றத்'தைப் பிரசாரபலத்தினால் பிரபலப்படுத்த முனைகிறார்கள் என ஒரு விமர்சகர் நாடகத்தைப் பார்க்காமலே விமர்சனம் பண்ணினார். ஆனால் கண்டனத்திற்கு எல்லாம் கலங்காத கந்தசாமி 'மதமாற்றம்' தலை சிறந்த நாடகம் என்பதை நிரூபித்தார்.
எதிர்காலத்தில் ஈழத்து நாடகத்தைப் பற்றி விமர்சகர்கள் விமர்சிக்கும் பொழுது அ.ந.க.வின் மதமாற்றத்தை மைல்கல்லாக வைத்துத் தான் கணக்கிடுவார்கள். நாடகத்தை ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவின் நாடகங்களோடு ஒப்பிடலாம் என்று சில இலக்கிய விமர்சகர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர். 'அமரவாழ்வு' என்ற இன்னொரு நாடகத்தையும் அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'மனக்கண்' நாவலை நாடகமாக எழுதித் தருவதாக என்னிடம் குறிப்பிட்டார். அவரது ஆசையை நாடகக் கலைஞர்களாவது நிறைவேற்றுவார்களா? - அந்தனி ஜீவா ('சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் கட்டுரைத்தொடரில்) -
**********************************************************************************
- செ.கணேசங்லிகன் - |
எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்களின் எழுத்துகளில் தென்படும் ஆய்வுச் சிறப்பு என்னைக் கவர்ந்ததொன்று. அவர் எழுதும் நூல்களுக்கான முன்னுரைகளை நான் விரும்பி வாசிப்பவன். 'எழுத்தாளர் ூட்டுறவுப் பதிப்பகத்'தினால் வெளியிடப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் புகழ் பெற்ற நாடகமான 'மதமாற்றம்' நாடக நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையிது.
அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகம் 'எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்'தினால் நூலாக வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரை இது -
அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' - செ.கணேசலிங்கன் -
விழாக்களிலும் சடங்குகளிலும் ஆடலும் பாடலும் இயல்பாக ஏற்பட்டன; பின்னர் மதச் சார்பான கதைகளும் கிராமியக் கதைகளும் ஆடியும் நடித்தும் காட்டப்பட்டன. இதுவே இந்திய நாடகத்தின் தோற்றவாயில் என ஆய்வார் கூறுவர். கூத்து என்ற கலைவடிவம் தமிழரிடை இதே தோற்றுவாயுடன் ஏற்பட்டது எனக் கூறின் தவறாகாது.. கூத்து, ஆடல் பாடல் சார்ந்தது; நீண்டகாலமாக நிலைபெற்று வந்துள்ளது. 'கூத்தாட்டவைக் குழாத்தற்றே" என்றார் வள்ளுவர்.
சிலப்பதிகாரமும் கிராமியக் கூத்து வடிவில் பிரபல்யமடைந்திருந்த கதையையே இளங்கோ காவியமாக்கினர் என்பர். "பாட் டிடையிட்ட உரைநடையாக" காவியம் அமைத்திருப் பதும் இக் கருத்தை நிரூபிக்கிறது. புலவர்களாலேயே நாடகம் போன்ற கலை வடிவங்களும் உலகெங்கும் எழுதப்பட்டன என்பர். இளங்கோ, காளிதாசன், சேக்ஸ்பியர் யாவரும் கவிஞர்களே. இன்றைய நாடகம் என்ற கலைவடிவம் எமக்குப் புதிதே. கலைவடிவங்கள் நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி வேறுபடலாம், உற்பத்தி உறவுக்கேற்ப இவை மாற்றமடையும். உதாரணமாக நவீன காலத்தில் பிரபல்யமடைந்துள்ள நாவல், சிறுகதை என்ற கலை வடிவங்கள் முதலாளித்துவத்தில் - கூலி உழைப்பு உற்பத்தி உறவுக்காலத்தில் எழுந்தவையே. எமது சிறுகதை, நாவல் போன்று இன்றைய நாடகமும் மேல் நாட்டிலிருந்து நாம் பெற்ற கலைவடிவமே. ஆங்கிலத்தின் மூலம் இங்கு நாம் பெற்றபோதும் இன்றைய மேடை நாடகம் ஆங்கிலேயர் ஆரம்பித்ததல்ல. ஹென்றிக் இப்சன் (1826-1906) என்ற நோர்வே நாடகாசிரியர் ஐரோப்பாவிற்குத் தந்த வடிவமே இன்று உலகெங்கும் மேடை நாடக வடிவமாகப் பரவியது; பல்வேறு பரீட் சார்த்தங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிறது. இங்கிலாந்தில் இப்சனுக்கு முன்னர் நாடக மரபு இருக்கவில்லை என நான் கூறவரவில்லை. சேக்ஸ்பியர் (1564 - 1616) மார்லோ (1564-93) அன்றிருந்த நாடக மரபிற்கு வலுவூட்டியவரே. இன்று வரை நிலை பெற்றுள்ளனர்.
அன்றைய நாடக அமைப்பு முறையும் இப்சனின் பின் ஏற்பட்ட மாற்றமும் வேறு. மேடைக் காட்சிகள் தொடர்ந்து மாறும் முறை, நடைமுறைச் சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை கையாளும் போக்கு ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன். நாடகமாக எழுதப்படுவது, மேடையில் பேசுவதற்காக கூறப்படும் உரையாடல், காட்சி அமைப்புப் பற்றியவை முதலான விபரங்களே. இவற்றை நாம் மேடையில் பார்க்காது படிப்பதென்பது இரண்டாந்தரமானது. நாடகங்கள் நூல் வடிவில் தமிழில் வெளி யிடப்படுவதில்லை என்ற குறைபாடும் உள்ளது. அவர்கள், 'நாடகம் மேடைக்காக" என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும். சேக்ஸ்பியரின் நாடகங்கள் நூலுருப் பெற்று உலகெங்கும் படிக்கப்படுகிறது உண்மையே. நடிப்பதிலும் பார்க்க தாராளமாகப் படிக்கப்படுகிறது. அவை நாடகம் என்பதிலும் பார்க்க இலக்கிய நயம் செறிந்த எழுத்தாக இருப்பதுவே காரணம். இந்த அடிப்படை உண்மையை நாம் மறந்து விடப்படாது. தனிமனிதன் மேடையில் நின்று தன் துன்பங்களைக் கொட்டுவதை, நாம் தனிமையில் படித்துச் சுவைக்கலாம். அவை இன்றைய நாடக மரபுக்கு ஒவ்வாதவை. சேக்ஸ்பியரின் பல நாடகங்களில் தனிப்பேச்சு (Soliloquy) இடம் பெறுவதைக் காணலாம். சேக்ஸ்பியரின் சிறப்பிற்கும் அவை உதாரணமாகக் கூறப்படுவதைக் காணலாம். ( உதாரணம்: To be or not to be - ஹம்லெட்) பர்னட் ஷாவின் நாடகங்களும் படித்துச் சுவைக்கக் கூடியவையே. காரணம் கருத்துகள் செறிந்தவை. முரண்பாடுகளைச் சொற்களால் சாடுவார். அவர் ஆக்கிய பாத்திரங்கள் அனைவர் மூலமும் ஷாவே உரையாடுவார். இன்று பிரபலமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவலாக ரசிக்கப்படும் டி. வி.தொடர் நாடகங்களிலும் நகைத்திறம் மிக்க உரையாடல்களே முதன்மை பெறுவதைக் காணலாம். டி. வி. என்ற கருவிக்குரிய வடிவம் இதுவாகலாம். இப்சனின் பின் நாடகத்திற்கு என்றோர் புதிய வடிவமும் கலை களுக்கெனத் தனிச் சித்தாந்தமும் தந்த பெருமை Bertolt Brecht - பெர்ரோல்ட் பிரெஸ்ட் (1898 - 1956) என்ற ஜெர்மன் நாடகாசிரியருக்கே உரியதாகும். அவர் ஒரு மார்க்சிய நாடகாசிரியராக இருந்தபோதும் முதலாளித்துவ நாடுகளிலும் அவர் போற்றப்பட்டார்.
அவரது நாடகங்கள் நடிக்கப்பட்டன. இவ்வாறு பரவலாக்கி அவரது புரட்சிக் கருத்துச்களை மழுப்பி விட்டனர் என்றே கூற வேண்டும். நாடகத்தின் கரு, உட்பொருள் மட்டுமல்ல அதன் அமைப்பு, வடிவத்திலும் அவர் புரட்சிகர மாற்றம் ஏற்படுத்தினர். அத்தோடு மேடை, நடிகர்கள் பற்றி மட்டுமல்ல பார்வையாளனைப் பற்றியும் அவர் சிரத்தை எடுத்தார்.
பார்வையாளனை கலை உணர்வுத் தூரத்தில் (Aesthetic Distance) வைக்க வேண்டும் எனவும் சொன்ஞர். பார்வையாளன், கலைகளே நுகர்வோன் கலை வடிவத்தினூடாக வாழ்க்கையின் முரண்பாடுகளை, சம்பவங்களை, கதா மாந்தர்களைக் காண்பதாக நினைவு பூர்வமாக எண்ணிக் கொள்ளவேண்டும். தவருக பாத்திரங்களுடன் ஐக்கியப் பட்டு ஒன்றிவிடப்படாது என எச்சரித்தார்.
சுருங்கக் கூறின் கலையை நுகர்வோர் அதனிலிருந்து அந்நியப் பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்றார்,
மக்களே வரலாற்றை ஆக்குபவர், வீரபுருஷர்களல்ல என்ற மார்க்சின் கோட்பாட்டை முன் வைத்து வீர புருஷர்களை நாடகததில் நுழைப்பதையும் தவிர்த்தார். கிராமியக் கதைகளை, நடை முறைச் சம்பவங்களை நாடகமாக்கினர். மேடையில் 'செட் டுகள், மின் ஒளி விளையாட்டுகள் மூலம் மக்களைக் கவர்வதையும் தவிர்த்தார். பார்வையாளரை மயக்க மூட்டி கனவு நிலைக்கு ஈர்த்துச் செல்லாது விழிப்பு நிலையில் வைக்க வேண்டும்; மேலும் சிந்தனையூட்ட வேண்டும் என்றார், தீவிர நடிப்புகளையும் தவிர்த்தார். அதாவது மேடையில் தோன்றி தமிழ் நாடகங்களில் நடிப்பது போல, மிகை உணர்ச்சிகளைக் காட்டி உரத்துக் கத்தும் போக்கையும் தடுத்தார்.
மேல்நாட்டு நாடக வடிவம் சிங்கள மேடையில் ஏற்படுத்திய மாற்றம் போல தமிழ் நாட்டில் ஆக்கவில்லை. சினிமா வின் தாக்கம் மேடை நாடகத்திலும் நாடக முறைகள் சினிமா விலும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன. அதற்குக் காரணம் சினிமா வின் பரவலான அறிமுகமும் ஆதிக்கமும் ஒன்று. மற்றது சினிமா உலகிற்கு நுழைய நாடக மேடை முதல் வாய்ப்பாக அமைந்துள்ளதுமாகும். இன்றைய பிரபல இந்திய நடிகர், டைரக்டர்கள் நாடக மேடையிலிருந்து திரையுலகுக்கு வந்திருப்பதைக் காணலாம்.
அ. ந. கந்தசாமி ஈழத்து மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீளா நோய் வாய்ப்பட்டு இறந்தவேளை அன்னாரது ஆக்கங்கள் சிலவற்றையாவது வெளியிட வேண்டும் என முயன்றவர்களில் நானும் ஒருவன். அம்முயற்சிகள் யாவும் பல காரணங்களால் பயனற்றுப் போயின. 1, 16 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அன்னுரை நினைவு கூரத் தக்கதாக நூல் வெளியிட வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது. நாட்டில் கலை, இலக்கிய விழிப்பின் ஒர் அம்சம் என்றே கொள்ள வேண்டும்.
இச் சந்தர்ப்பத்தில் "மதமாற்றம்" என்ற இந் நாடகத்தை நானே முதலில் நினைவுபடுத்தினேன். அதற்குப் பல காரணங்கள்.
கந்தசாமியைப் பற்றி அறிந்திருந்து, ஒரு சிலவற்றை மட்டும் படித்த காலத்தில் இந்நாடகத்தை மேடையில் ஒரு தடவை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
அவ்வேளையே கந்தசாமியின் அறிவையும் திறமையையும் என்னால் காண முடிந்தது. ஆயினும் அன்னருடன் நெருங்கிப் பழகும் காலம் அவரது வாழ்வின் கடைசி இரண்டு ஆண்டுகளிலேயே எனக்கு ஏற்பட்டது.
அவரது அறிவும் திறமையும் பலதுறைகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்டேன். முதலாளித்துவ சமூக அமைப்பில் பேசுவது, பிறருடன் பழகி வெற்றி கொள்வது, பண்டங்களை விற்பனை செய்யும் விவேகம் ஆகியவை பற்றி மேல்நாடுகளில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அத்தகைய நூல் ஒன்றையும் கந்தசாமி எழுதி என்னிடம் தந்தார். அவரின் சிறப்பான வெளியீடாக ‘வெற்றியின் இரகசியங்கள்" என்ற அந்நூலை தமிழ் நாட்டில் வெளியிட்டேன். ஆயினும் விற்பனையில் வெற்றி கிட்டவில்லை. இன்னும் எமது சமூகம் முதலாளித்துவ நிலையை அடையவில்லை என ஆறுதலடைந்தேன். இலங்கையில் பல மேடை நாடகங்களைப் பார்த்துள்ளேன். ஆயி னும் "மத மாற்றம்" என்ற இந் நாடகம் என்னுள் ஏற்படுத்திய மதிப்பை வேறு எந்த நாடகமும் ஏற்படுத்தவில்லை. மேடை நாடகக் காட்சிகளை அமைக்கும் திறமையை அவர் எங்கு பெற்றார் என்று தெரியவில்லை. இம் முதல் நாடகத்திலேயே அச் சிறப்பைக் காணக் கூடியதாக இருந்தது.
உரையாடல்களையும் கதையையும் நகர்த்திச் செல்லும் முறையில் பார்வையாளரை ஈர்த்துச் செல்லக்கூடிய உத்தியைக் கையாண்டுள்ளார். அற்புதங்களை வைத்தே மதம் வலுப்பெற முயல்கிறது. எதிர் பாராத நிகழ்ச்சிகளையும் மதவாதிகள் அற்புதமாக்கிவிடுவர். கதாநாயகி தோழியிடம் செல்லும்வேளை பத்திரிகையில் தன் தோழி பற்றிய செய்தியைப் பார்த்துவிட்டு தோழியும் கணவரும் வழிபடுகின்றனர். அவ்வேளை தோழியைக் கண்டதும் 'தேவனின் அற்புதம்" எனக்கூறி அவளையும் நம்பவைக்கின்றனர்.
சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னரின் அறிவையும் இந் நாடகத்தில் காணலாம்.
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கருத் தியல் (Ideology) மதம் என்றும் முதலாளித்துவத்தில் கல்வி என்றும் நவ மார்க்சிய அறிஞர் அல்துரசர் கூறுவார். கலை, இலக்கியத்தில் கருத்தியல்கள் உடைக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான சிந்த னையைக் கொணர வேண்டும் என்பதும் அன்னாரின் கோட்பாடாகும். அத்தோடு இத்தகைய போக்கு பண்டைய நாடகங்கள், இலக்கியங் களில் காணமுடியாதது அவற்றின் பயனற்ற தன்மையைக் காட்டுகிறது என்பதும் அவரது கூற்றகும்.
கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப்பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை.
பார்வையாளர் எம் மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப் பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தண்மூலம் அறிவர். இராமலிங்கம் என்றேர் பாத்திரத்தை ஆசிரியர் தன் பகுத்தறிவுக் கருத்துக்களையும் தருக்க நியாயங்களையும் கூறுவதற்காக நாடகத்தில் கொண்டு வந்துள்ளார். இராமலிங்கம் என்ற பாத்திரம் கந்தசாமியே. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப் பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவி காதலைக் கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவான போதும் "மதம், காதல்" என்ற பொய்மைகளை கந்தசாமி சாடும் திறமை அபாரம்.
'மதமே பொய். இருவரும் பொய்களை நம்புகிறர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள் - கந்தசாமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகிறார்,
நல்ல நாடகம் சமூக முரண்பாடுகளைக் கையாள வேண்டும். சிந்தனையில் மோதலை ஏற்படுத்துவதோடு தன்னை உணர்ந்து கொள்ள உதவ வேண்டும். நாடகம் பார்க்கும் வேளை நடிகனக இருந்தவன் நாடகம் முடிந்ததும் புது நடிகனாக வேண்டும், வாழ்க்கையில்.
இந் நாடகம் மேடையில் நடிப்பதற்காக எழுதப்பட்டபோதும் படித்துச் சுவைப்பதற்குமாக அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பாகும். புதிதாக நாடகம் எழுதுவோருக்கும் காட்சி அமைப்பையும் கருத்தின் ஆழத்தைக் கையாளும் முறையையும் கற்பிக்கத் தக்கதாக இந் நாடகம் உள்ளது. இத்தகைய நாடகங்கள் அரிதே. அதனலேயே இந் நாடகத்தை வெளியிட வேண்டும் எனவும் நான் விரும்பினேன். இந் நாடகத்தை வெளியிட முன்வந்த எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், அதற்கு உதவியவர்களும் பாராட்டுக்குரியவர்.
No comments:
Post a Comment