[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
ஏப்ரல் 2005 இதழ் 64
கனடா - 12வது அரங்காடல்!
நான் 98 இல் பார்த்த அரங்காடலைப்பற்றிய மனப்பதிவு மிகவும் அற்புதமாய் இருந்தது. இன்றும் அந்த உணர்வு தந்த பாதிப்பிலேயே அரங்காடல் பார்த்து வருகிறேன். நல்ல நாடகங்கள் நல்ல நடிப்பு எல்லாவற்றிலும் ஒரு முழுமையை பேணிய காலம் அது. இன்று மிகவும் மலிவான இரசனையை மக்களிடம் புகுத்தி பணம் பண்ணும் முயற்சியாகவே அரங்காடல் இருக்கிறது. நிறைய நடிகர்கள், பற்றாக்குறையின்றி நடிக்கும் நல்ல நடிகைகள் என்று முன்னோக்கி வந்த போதும். நல்ல தரமான நாடகப் பிரதியாளர்கள் இன்றி 'வெறும்' நாடகங்களாய் மட்டுமே ஆகி விட்டது. 1999 ஆம் ஆண்டில் 10க்கு மேற்பட்ட நடிகர் நடிகைகளைக் கொண்டு மேடையேற்றிய குழந்தை சண்முகலிங்கத்தின் 'அன்னையிட்ட தீ' அப்போதைய அமைதியற்ற சூழலில், போரால் ஏற்பட்ட உளவியல் பிரச்சனைகளை எடுத்து வந்து 'அன்னை இட்ட தீ', பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக ஆட்கொண்டது. வழமையான பழமைவாத கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அது மீள்பிரதியாக்கம் செய்யப்பட்டபோது தனித்துவமாய் இருந்தது. 2005 இல் அரங்காடல் தன் பேரை மட்டுமே தன்னகத்தில் வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் மறுபடியும் குழந்தை சண்முகலிங்கத்தின் 'நரகோடு சுவர்க்கம்" என்ற நாடகம் மேடையேறியிருக்கிறது. அதை நான் பிரதியாய் வாசித்ததில்லை ஆதலால் நாடகத்தில் என்ன மாற்றம் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லமுடியவில்லை. ஆனால் இன்றைய காலத்திற்குப் பொருந்தாமல் இடப்பெயர்வு செல் அடி போன்றவையை மேடையில் பார்த்தபோது, பார்வையாளர்களிடத்தில் சலிப்பைத்தான் காணமுடிந்தது. 'இந்த நேரத்தில் எதற்கிந்த நாடகம்' என்ற எரிச்சலைத் தவிர வேறெந்த உணர்வும் வரவில்லை. நாடகத்தில் இடம்பெயர்ந்துபோனவர்கள், திரும்பி வந்து தங்கள் வீட்டை வர்ணிக்கையில், 'எங்கட வீடு கற்பழிக்கப்பட்டிருந்தது' என்கையில் வீட்டைப் பெண்ணாக ஒப்பிட்டிருப்பார்கள். இந்த பழைய கற்புசார் மதீப்பீடுகள் கொண்ட இந்த வசனத்தை மீள்பிரதியாக்கம் செய்தவர் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில், 'அரங்காடல்' போன்ற முற்போக்கின் பிரதிநிதிகளிடம், 'இவற்றை விமர்சிக்க வேண்டியிருக்கிறதே' என்பது அயர்ச்சி தருகிறது.
முன்பெல்லாம் அரங்காடலைச் சேர்ந்தவர்கள் இந்த பள்ளிக்கூட ஒன்றுகூடல்கள் மற்றும் வானவில் திரையிசை நடனங்களை நக்கலடிப்பார்கள். குறிப்பாக ஊரைப்பற்றி எடுக்கும் நாடகங்களை அவர்கள் மிகவும் மோசமாக விமர்சிப்பார்கள். இன்று அவர்களே அந்த இடத்தில்தான் வந்து நிக்கிறார்கள்! சென்ற அரங்காடல்களைப் பற்றியும் இதே மாதிரியான மனப்பதிவே மிஞ்சுகிறது. இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பின்பு வந்த அரங்காடல்கள் தம் கலைத்தன்மையை முற்றாக இழந்து விட்டன. இனி என்கிற நம்பிக்கையும் போய்விட்டது. வெறும் கேளிக்கையாகவும், அரங்காடல் என்பது ஒரு உயர்வர்க்கத்தினர் விழாவாகவும் ஆகிவிட்டது.
இரண்டாவதாக அரங்கேற்றப்பட்டது சகாப்தனின் 'அரியது கேட்பின்...' ஒரு வித்தியாசமான முயற்சி என்று சொல்லலாம். விஞ்ஞானத்தால் எல்லாவற்றையும் சாதித்து விட முடியாது என்ற கருத்தை வைத்து எடுத்திருந்தார்கள். 'பார்த்தவற்றுள்' இது பரவாயில்லை. வித்தியாசமான முயற்சி நல்ல நடிப்பு.'மறுமுகம்' என்ற நாட்டிய நாடகத்தைப் பற்றிச் சொல்லுவதற்கு முன்னம் இன்டிகோ (Indigo) என்கிற -1999ம் ஆண்டு அரங்காடல் அரங்கில்- சுதர்சன் அவர்கள் போட்ட நாடகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். சுதர்சன் இன்டிகோவில் பெண்ணுக்கும் இயற்கைக்குமான தொடர்பை நவீன முறையில் யோகா அடிப்படையில் நடனம் அமைத்திருந்தார். மேடையில் பருத்த கறுப்புப் பெண். பெரிய இடைகளைக் கொண்ட அந்தப் பெண்ணின் உருவமோ வழமையான அழகுசார் மதிப்பீடுகள் அற்று நடனமாய் மட்டுமே இருந்தது. பூவிரிவது போல அவள் கால்களை விரிப்பாள் அந்தப் பெண், பிறப்பை சொல்வதென்று நினைக்கிறேன். அவர் அதை பரதநாட்டிய அடிப்படை முறையிலேயே எடுத்திருப்பார். அப்போ சுதர்சன் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளானார். குறிப்பாக அந்த கறுத்தப் பெண் மற்றும் அவள் உடல் அசைவுகளே கலாச்சாரவாதிகளாலும் பெண்களாலும் விமர்சிக்கப்பட்டது. சுதர்சனிடம் 'ஏன் தமிழ் பெண்ணை நடிக்க வைக்கவில்லை' என்று கேட்ட போது அவர்கள்யாரும் நடிக்க மாட்டார்களே என்று சொன்னார். ஆமாம் தமிழ் பெண்கள் யாரும் கால்களை விரிக்க மாட்டார்கள்தான். இந்த நேரம் மாலினி பரராஜசிங்கம் அவர்களையும் நினைவு கூற வேண்டியிருக்கிறது. தான் கற்ற பரதநாட்டியத்தை அதே பழைய ஆடம்பரமான தன்மையிலிருந்து மாற்றி "தனிமரம்" போன்ற வித்தியாசமான முயற்சிகளும் செய்திருக்கிறார்கள்.இந்த பின்னணிகள் பற்றிய அறிமுகம் "மறுமுகம்" நாட்டிய நாடகத்திற்கு தேவையாய் இருக்கிறது. ஏனெனில் இதில் நடித்த எவருக்கும் இந்தத் தகவல்கள் தொ¢யாது. அவர்கள் மேடையில் நிகழ்த்தியது ஒரு திரையிசை நடனத்திற்கு ஒப்பானது. அன்று சுதர்சனை விமர்சித்த கலாச்சார காவலர்கள் இதை விமர்சிக்கப் போவதில்லை ஏனெனில் மேடையில் இந்த நடனத்தை நிகழ்த்தியவர்கள் நாங்கள் எல்லோரும் பார்க்க விரும்புகிற இளைய தலைமுறைப் பெண்கள். சினிமாவிலோ நாடகங்களிலோ பாத்திராத யதார்த்தமான ஒரு பெண்ணை சுதர்சனால் படைக்க முடிந்தது. அவர் அதை ஒரு புதிய முயற்சியாய் எடுத்துக் கொண்டார். அது பலருக்கு உறுத்தியது. ஏனெனில் அந்தக் கறுத்தப் பெண்ணின் உடல் இந்த 'முற்போக்கு' ரசனைக்குரியவர்களும் பார்க்க விரும்புகிற ஒன்று அல்ல. ஆனால் இந்த திரையிசைநடனத்திற்கு பலரது அபிப்பிராயம் 'இளம் பிள்ளைகள் ஆடினார்கள் பார்க்கலாம்தானே!'.
அம்பை ஒருமுறை அவரது பேட்டியில் சொல்லியிருந்தார் தங்கட வீட்டில் ஒரு நாய் வளர்த்தார்களாம் அந்த நாயை அவர்களுடைய அம்மா சமையல் அறைக்குள் விடுவதில்லை ஆனால் அந்த நாய் என்ன செய்யுமென்றால் அது முக்காவாசி உடம்பை கிச்சினுக்குள்ள வைச்சுக்கொண்டு ரெண்டு கால மட்டும் வெளிய வைச்சிருக்குமாம், வெளியேதான் இருக்கிறேன் என்கிற மாதிரி... அப்படித்தான் இந்த நடனம் பார்க்கும் போது எனக்குத் தோணியது. அதாவது அவர்கள் ஆடியது ஒரு திரையிசை நடனம் (நீங்க உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு துள்ளல் பாட்டைப் போடலாம்) ஆனால் குழந்தை துஸ்பிரயோகம் எயிட்ஸ் போன்ற விசயங்களை எடுத்து அவர்கள் தாங்கள் போட்டது ஒரு புதுமையான நாடகம் என்ற உணர்வை உண்டு பண்ண முயன்றார்கள். (அரங்காடலின் தற்போதைய நிலைப்பாடும் இதுவே. நாங்கள் முற்போக்காளர்கள், எங்கள் முற்போக்கு கீழே விழாதபடி நாடகங்களும் 'பாவனையோடு' இருந்தால் போதுமானது.) ஆனால் இவர்கள் கெட்டிக்காரர்கள் சுதர்சனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவர்களிடம் கேட்கப்படமாட்டாது ஏனெனின் வித்தியாசமாய் மரபை மீறி இவர்கள் எதையும் செய்யவில்லை, செய்யப்போவதுமில்லை. 1999 களிற்குப்பின் சுதர்சனை அரங்காடலும் மறந்து போனது. அரங்காடலுக்காக தர்சினி இயக்கிய(?) இரண்டாவது நடனம் இது. இதிலிருந்து பெண்கள் குறித்தும் இன்ன பிற விடயங்கள் குறித்தும் எதை இவர்கள் மேடையேற்ற விரும்புகிறார்கள் என்பது புலனாகிறது. இங்கு எத்தனையோ எழுதுகிற செயற்படுகிற பெண்கள் நாடகங்களில் ஆர்வமுள்ள (நிச்சயமாய் நான் இல்லை) நிறையப் பெண்கள் இருக்கிறபோது, இத்தகைய பாணி திரையிசைநடனம் வகையறாக்களை முன்னிறுத்துவதில் அவர்கள் தமது வியாபார வெற்றியையே நோக்கமாகக் கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இதில் ஒரு பிரச்சினையுமுமில்லை, ஆனால் முற்போக்கு 'முகம்' எதற்கு? ஒரே குப்பையைத்தான் கொட்டுகிறோம் என்பதையும் 'நல்ல நாடகங்கள் பார்க்க பா.அ.ஜயகரனிடமும் ஞானம் லம்பேட் இடமும் போங்கள்' என்று போன அரங்காடல் விமர்சனக் கூட்டத்தில் சொன்னதுபோலவே சொல்லிவிடவேண்டியதுதானே?
கடைசியாக 'வதை.' நல்ல தலைப்பு -குறியீட்டுரீதியாக பார்த்தால்- இந்த அரங்காடல் நிகழ்வே ஒரு வதை தானே. பாப்லோ நெருடாவின் கதை. பாப்லோ நெருடாவின் அதிகமான கவிதைகளை ஆங்கிலத்தில்தான் வாசித்திருக்கிறேன். அவருடைய படைப்புக்கள் அவரது பெண் தொடர்புகள் அவர் துரொகங்கள் பற்றி வாசித்திருந்ததால் அவருடைய மனிதநேயத்தைப் பற்றிக் கதைக்கையில் எங்கள் நாட்டில் இவரால் பலாத்காரப்படுத்தப்பட்ட ஒரு தலித் பெண்ணைப்பற்றி "காலச்சுவட்டில்" இரவிக்குமார் எழுதியது தான் ஞாபகம் வந்தது. எல்லா முக்கியமான ஆண்கவிகளுக்குப் பின்னும் இருக்கிற வாழ்கை தெரியாமல் இருந்தால் இதை இரசிக்கலாம். மற்றது அவரது இறுதிக்கால வாழ்வில் நடந்த சம்பவம் என்பதால் மற்றவைகளோடு ஒப்பிட்டுத் திருப்திப்படலாமே ஒழிய மிகவும் சிறந்தது என்று சொல்லமுடியவில்லை. அதுவும் பாப்லோநெருடா என்கிற கவிஞனிற்கு கொஞ்சமும் பொருந்தாது (அவரே ஒரு கவிஞர், அவருக்கேன் இன்னொரு கவிஞா¢ன் இரவல் வரிகள்??) முடித்த பாரதியின் கவிதை. இங்கு அவரது கவிதைகளை -ஆங்கிலத்தில்- பெற்றக்கொள்வது கடினமா என்ன? அதற்குக்கூட உழைக்க முயலாத ஒருவரிடம் எதை எதிர்பார்ப்பது? எல்லாம் ஒரு அரைகுறைத் தன்மையாய் மட்டுமே இருந்தன. 12வது அரங்காடல் பழைய பத்தாம்பசலிக் கருத்துக்களையே தரும்' என அடுத்த அரங்காடல் பிளையா¢ல் அறிவித்துவிட்டால் சிறப்பாயும் சாலப் பொருத்தமாயும் இருக்கும். எங்களுக்கு நேரமும் மிச்சம்.
ktnirmala@hotmail.com
ஏப்ரல் 2005 இதழ் 64
கனடா- கருமையம்: நிறைவைத் தந்த முதல் நிகழ்வு!
19ம் திகதி சனிக்கிழமை பின்னேரம் 6 மணிககு கருமையம் வழங்கிய நாடகங்கள் பார்த்தேன். கருமையத்தால் மூன்று நாடகங்கள் மேடையேற்றப்பட்டது. முதலாவதாக "கட்டவிழ்ப்பு" எனும் நாடகம் பெண்கள் பயிற்சிப் பட்டறையால் மேடையேற்றப்பட்டது. இரண்டாவதாக சபேசனின் இயக்கத்தில் "நடுக்கடலில்" எனும் மொழிபெயர்ப்பு நாடகம். இறுதியாக சக்ரவர்த்தியின ;"என் மெளனத்தின் மொழிபெயர்ப்பு'. "கட்டவிழ்ப்பு" நாடகம் பெண்கள் கூடிப் பேசி அதிலிருந்து கதைகள் எடுத்து வெளியான கூட்டுமுயற்சி. பல பெண்கள் பல மாதக் கணக்கில் உரையாடி தாங்களே வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். நல்ல முயற்சி. இப்படியான முயற்சிகள் இதற்கு முன் எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை. இதை ஒரு Role Play என்று சொல்லலாம். அதாவது பல கருத்துக்களைத் தாங்கி வந்த Role Play. பொதுவாக உயர் பாடசாலைகளில் எதாவது ஒரு தலைப்பைக் கொடுத்து அதைப்பற்றி கலந்துபேசி வசனம் அமைத்து நடித்துக் காட்டவேண்டும். உதாரணமாக கருக்கலைப்பைப்பற்றி என்று சொன்னால் அதில் எதிர்ப்பும் வரும் சார்ப்பும் வரும் அதை சரி, பிழை ஏன் சரி, ஏன் பிழை, போன்ற கேள்விகளுக்கான பதிலை மாணவர்கள் நடிப்பில் கொணரவேண்டும். அவ்வகையான ஒரு முயற்சி. முதலாவதாக வந்தது கருக்கலைப்பு பற்றிய ஒரு சம்பவம் அதாவது கருவுக்குக் காரணம் ஆணும் பெண்ணுமாக இருந்தாலும் அதை அழிக்கிற உரிமை பெண்ணுக்கு என்பதை வலியுறுத்தியது. முதலாவதாக வந்ததால் அது கொஞ்சம் எதிர்பார்ப்பை தூண்டியது ஆனால் நடிப்பு மற்றும் நீண்ட காட்சிகளால் அது சொல்லவந்த விடயத்தை மீறி சலிப்பை உண்டு பண்ணியது. சொல்லவந்த கருத்தை மிகவும் நீட்டினார்கள், சம்பவத்துக்கு தேவையில்லாமல் பாத்திரங்களை நீட்டியிருக்கத்தேவையில்லை. இது பலரின் வெளிப்பாடு ஆகையால் அவர்களுக்கு எது தேவை எது தேவையில்லை என்று தெரியவில்லைப் போலும். ஒண்டரை மணித்தியாலம் தொடர்ந்து பார்ப்பதென்பது மிகவும் கடினமான விடயம். அதுவும் சில இடங்களில் தொய்ந்து இழுபடும் போது அவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றவே செய்தது. பல சம்பவங்களின் கோர்வையாக இருந்ததால் சிலவற்றைமட்டுமே விமர்சனம் செய்யலாம் என்று தோன்றியது.
இன்னொரு சம்பவம் ஒரு கனேடியச் சூழலில் வளரும் பிள்ளை சொல்கிறது மாதவிடாய் காலங்களில் 'கிணத்தில தண்ணியள்ள விடமாட்டினம்' என்று, இந்த வசனத்தை யாராவது இலங்கையில் வாழ்ந்தவர் பேசியிருக்கலாம் அதை கனடாவில் வளரும் பெண் சொல்கையில் அந்த வசனம் செயலிழந்து போயிற்று அதற்கு பதிலாக இன்னொரு இடத்தில் அந்த வசனத்தை போட்டிருக்கலாம். பேரப்பிள்ளை சாமத்தியப்பட்ட நேரத்தில் விளையாடப்போகையில் பாட்டி மறிப்பா ஆனா பிள்ளை போய்விடும் அப்ப அவா சொல்லலாம் 'அங்க நாங்க 30 நாளுக்கு வெளிய போகேல்லை கிணத்தில தண்ணி அள்ள விடேல்லை' எண்டு அது பொருத்தமாக இருந்திருக்கும். இன்னும், இங்க வாழுற குழந்தைகள் கூட சுகமில்லாத நாள்ள கடவுள் அறைப் பக்கம் போகக் கூடாது, மூன்று நாளும் எழும்பின உடன உடுப்புகள் கழுவி குளிக்கோணும், குளிக்காமல் வீட்டுக்குள்ள திரியக்கூடாது, போன்ற சட்ட திட்டங்களை கடைப்பிடிக்க வைக்கிறார்கள். - அவற்றைச் சொல்லலாம். இவை பார்வையாளர்களையும் யோசிக்க வைக்கும். அதை விடுத்து, கிணறு என்றால் இங்க இப்படியெல்லாம் இல்லைத்தானே என்று சும்மா கதைபோல கேட்கத்தான் முடியும். பாடசாலைகளில் கூட உடற்பயிற்சி வகுப்புகளில் பொதுவாக எல்லா இனப்பெண்களும் மாதவிடாயின் போது சுகமில்லை என்று சொல்லி விளையாடாமல் இருப்பார்கள் பல தமிழ்பெண்களுக்கு அடிக்கடி வருவதுமுண்டு. இப்படியான விடயங்களை பொதுத்தளத்தில் ஆராய்வதும் ஆரோக்கியமான விடயமாக இருக்கும். கள்ளிப்பால் கொடுத்துப் பெண் குழந்தைகளைக் கொல்லுவதாய் ஒரு சம்பவம் எடுத்திருந்தார்கள் அப்படியான ஒரு நிகழ்வு ஈழத்தில் கூட நடப்பதில்லை அதை கனடாவில் மேடையேற்றுவது இவர்கள் சமூக நிகழ்வுகளிலிருந்து விலகியிருப்பதையே காட்டுகிறது. கள்ளிப்பால் சம்பவம் சினிமாத்தனமான பிரதியாக இருந்தது.
மாலினி பரராஜசிங்கம் அவர்கள் திறமையானவர் அவருடைய நடனம் நன்றாக இருந்தது. ஒரு பெண் சமூகத்திலிருந்து வெளிவந்து தன் இயல்புகளுடன் தன்னை வெளிப்படுத்தும் போது நாலாபக்கமிருந்தும் வரும் கடும் எதிர்ப்பை அடக்குமறையை அவரது நடனம் எடுத்துக்காட்டிற்று. ஆனால் அதை ஓரிரு முறை மட்டும் ஆடியிருந்தால் உணர்வு பூர்வமாக ஒன்றிப் போயிருக்கலாம். ஆனால் பலமுறை வந்து ஒரே நடனத்தை ஆடிய போது அயர்ச்சி தான் ஏற்பட்டது. இந்த நாட்டுடன் தொடர்பில்லாத விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அம்மா மகள் தலைமுறை இடைவெளி மற்றும் அவர்களுக்குள் நிகழும் power struggles, போதைப்பழக்கங்கள், சிறுவர் துSபிரயோகம் மற்றும் ஆண் பெண் உறவுகளில் ஏற்படும் உறவுசார் பிரச்சனைகள் வன்முறைகள் பற்றி அடுத்தடுத்த நிகழ்வுகளில் கவனம் எடுக்கலாம். பெண்கள் கூட்டு முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு இன்னும் பல நல்ல நாடகங்களை மேடையேற்றவேண்டும். 20க்கும் மேற்பட்ட பெண்களை மேடையேற்றுவது சாதாரணமான விடயமல்ல அதை நிகழ்த்திக் காட்டியதே பெரிய சாதனை தான். இதில் என்னை அதிகம் பாதித்தது பெண்களின் உடல் மொழி. மிகமிக இயல்பாக உடல் சார்ந்த கூச்சங்கள் அற்று நடித்திருந்தார்கள், முக்கியமாக நடனங்களில் வீட்டில் இருப்பது போன்று இயல்புடன் இருந்தார்கள். கால் கை அசைவுகள் கூட மிகவும் இயல்பாக வந்திருந்தது. பெண்கள் மட்டுமே பங்கு பற்றி உருவாக்கப்பட்டதால் ஏற்பட்ட மாற்றம் என்று கொள்ளலாம். இளந்தலைமுறையினரின் வருகை கூட இனி வரும் காலத்தில் மாற்றத்தை இந்நிகழ்வுகளில் ஏற்படுத்தும். இங்கு நான் குறிப்பிடும் குறைகள் இனிவரும் காலங்களில் நிவர்த்திசெய்யப்படும் என்ற நம்பிக்கையிருக்கிறது ஏனெனில் இந்தக் குறைகள் நாடகம் பார்க்கும்போது துருத்திக்கொண்டு நிற்கவில்லை. மற்றும்படி பெண்களின் இந்த வெளிப்பாட்டை மற்ற நாடகங்களுடன் ஒப்பிட்ட போதும் அதன் தாக்கம் குறைவானதல்ல. கட்டியம் கூறுபவராக வந்த பவானியின் நடிப்பு, மனநிலை பிறழ்வானவராக நடித்த தனா, கன்னிகா, மற்றும் தன் விதவைத் தாயை தனது கல்யாணத்தின்போது புறக்கணிப்பதை ஏற்கமுடியாது தவிக்கும் பெண்; (பெயர் தொ¢யவில்லை) ஆகியோர் நடிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
இரண்டாவது நிகழ்வாக சபேசனின் இயக்கத்தில் "நடுக்கடலில்" என்ற மொழி பெயர்ப்பு நாடகம். மூலப்பிரதி ஸ்லோ விமித் ரித்விக் இனுடையது. எப்படியெல்லாம் மனிதர்கள் தாங்கள் விரும்பியது மாதிரி நியாயங்களை போடுகிறார்கள் அல்லது எப்படி தங்களிலும் பலம் குறைந்தவர்களை அடித்துக் கொள்கிறார்கள் என்பதே கதை. மித்திரன் நன்றாக நடித்திருந்தார். கோபம் சோர்வு தனிமை கவலை எல்லாம் ஒரு மனிதனை ஒரேயடியாய் பாதித்தால் எப்படியிருப்பான் என்பதை அவர் முகத்தில் கொண்டுவந்திருந்தார்.
மொழிபெயர்ப்பு மூலப்பிரதி போலவே அசலாய் இருந்தது. இதற்காக சபேசனை பாராட்ட வேண்டும். மொழிபெயர்ப்பு என்ற பெயரில் மிக இறுக்கமாய் மொழியை அப்படியே பெயர்க்காமல் எமது சமூகத்தை பிரதிபலிக்கும் மொழிபெயர்ப்பு. நாடகம் ஆரம்பத்தில் இழுத்தாலும் முடிவில் சொல்லவந்த விடயம் அழுத்தமாக சொல்லப்பட்டிருந்தது.
மூன்றாவது நிகழ்வாக சக்கரவர்த்தியின் "என் மெளனத்தின் மொழிபெயர்ப்பு'. சக்கரவர்த்தியின் பிற படைப்புக்களான யுத்தசன்னியாசம், யுத்தத்தைத்தின்போம், யுத்தமும் அதன் இரண்டாம் பாகமும் போன்ற படைப்புகளில் பேசப்பட்ட விடயங்களை மீண்டும் ஒரு முறை பேசியிருக்கிறார். "த்திரியன், கழுவேற்றல் போன்றவையைக் குறிப்பிடலாம். வழமையான இந்தக் கலவையை ஆர்வம் தரும் விதமாக மேடையேற்றியிருந்தார். நல்ல இயக்கம் சிறப்பான நடிகர்கள் என்று பார்ப்பவர்களை ஏமாற்றாத நாடகம். நகைச்சுவை நன்றாக வந்திருந்தது. நாடகத்தில்; கன்னித் தமிழ் என்று ஒரு வசனம் உபயோகிக்கப்பட்டிருந்தது. எத்தனை நாளைக்குத்தான் தமிழை கன்னியாகப் பார்க்கப்போகிறார்கள்? இனிவரும் காலத்திலாவது பாரபட்சமிற்றி முத்தமிழ், பேரிளம் தமிழ், வயோதிபத் தமிழ் என்றும் தமிழைச் சொல்லலாம். கன்னிமை என்ற வார்த்தை பிரயோகம் பெண்ணை புத்தம் புதிதான மலர், என்று சொல்லும் ஒப்பனையை ஒத்தது. சக்ரவர்த்தியின் அதிகமான படைப்புகளில் இவற்றைக் காணலாம். இதில் வந்த விடயங்களை பலமுறை விமர்சித்தாகிவிட்டது. சக்கரவர்த்தியிடம் நான் வியக்கும் விடயமே அது தான் யாரு என்ன சொன்னாலும் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தான் நினைத்ததைச் செய்வது. 'சக்கரக்கட்டி' போன்ற கதைகளை எழுதியவரிடம் பெண்ணியத்தை எதிர்பார்ப்பவர்கள் முட்டாள்களாய்த்தான் இருப்பார்கள் ஆகையால் இந்தச் சொற்களின் பின்னணியில் இருக்கும் ஆணாதிக்கத்தை ஆராய நானும் விரும்பவில்லை. வன்முறை மிருகங்களை கொல்வதில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதை சொல்லுகிறது இந்த நாடகம். கோழியை அறுப்பவராக நடித்த திலீபன் நன்றாக நடித்திருந்தார். சுமதிரூபன், சபேசன் போன்றவர்கள் நல்ல நடிகர்கள் ஆனால் இதில் அவர்களின் ஆளுமையை காட்டக் கூடிய கனதியான கதாபாத்திரம் என்று சொல்ல முடியாது. பாத்திரத்திற்கு ஏற்றாற் போல நடித்திருந்தார்கள்.
கருமையத்தின் முதலாவது நிகழ்வு நிறைவான உணர்வைத் தந்தது. முதலாவதென்பதால் நன்றாக உழைப்பை போட்டிருக்கிறார்கள். இதையே இனிவரும் காலத்திலும் எதிர்பார்க்கலாமா என்று தெரியவில்லை அப்படி எதிர்பார்த்து ஏமாற்றிய மற்ற குழுக்களைப் போல் தான் கருமையமும் ஆகுமா என்பதை அடுத்த வருடம் பார்ப்போம்.
ktnirmala@hotmail.com
No comments:
Post a Comment