Monday, September 15, 2025

'பதிவுக'ளில் அன்று - அஜீவனின் 'எச்சில் போர்வை' குறும்படம் ஒரு பார்வை! & அஜீவனின் 'நிழல் யுத்தம்' ஒரு பார்வை! - சந்திரவதனா செல்வகுமாரன் (யேர்மனி) -

- அஜீவன் (ஜீவன் பிரசாத்) -

[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 


அண்மையில் மறைந்த பன்முக ஆளுமையாளரான அஜீவனின் 'எச்சில் போர்வை', 'நிழல் யுத்தம்' ஆகிய திரைப்படங்கள் பற்றி எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதிய இரு கட்டுரைகள். 

செப்டம்பர் 2003 இதழ் 45
அஜீவனின் 'எச்சில் போர்வை'  குறும்படம் ஒரு பார்வை!   

புலம்பெயர்ந்த உறவுகள் குறிப்பாக இளைஞர்கள் தாய்நிலத்தை மறந்து விட்டார்கள். தமது உறவுகளுக்குப் போதிய அளவு பணம் அனுப்புவதில்லை என்பது தாயக உறவுகளின் மனக்குறையும் புலம்பலும் என்றால், தாயக உறவுகள் கடிதம் போடுவதே பணத்துக்காகத்தான், எங்களை பணம் காய்க்கும் மரங்களாக அவர்கள் நினைக்கிறார்கள் என்ற மனக்குறையுடன் புலம்புகிறது புலம் பெயர்ந்த இளைஞர் சமூகம்.

இங்கு நாம் யார் மீது குற்றம் சொல்வது? மகன் வெளிநாடு போய் விட்டான். இனி எமக்கென்ன குறை என்ற நினைப்போடு பணத்தை எதிர் பார்த்து, எதிர்பார்த்து, எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்காத போது ஏமாந்து நின்ற பெற்றவர்களினதும் உடன் பிறப்புகளினதும் நொந்த உள்ளங்களின் மீதா, அல்லது உயிர்ப் பாதுகாப்பையும் அத்தோடு வசதியான வாழ்வையும் தேடி வந்து வதிவிட அனுமதி கூடக் கிடைக்காத நிலையில் இளமைக்கால வசந்தங்களைத் தொலைத்து விட்டு வெறும் பணம் தேடும் இயந்திரகளாகி விட்ட எமது புலம்பெயர் இளைஞர்களையா? யாரை நோவது? யார் குற்றம் இது? விடை கிடைக்காத கேள்விகளா இவை...? அல்லது என்றைக்குமே தீராத சங்கிலித்தொடரான பிரச்சனைகளா இவை..? பெற்றவர்களையும் உடன் பிறப்புகளையும் பண விடயத்தில் திருப்திப்படுத்த வேண்டியவன் ஆண் பிள்ளைதான் என்ற காலங்காலமான நியதியில்  ஆண் பிள்ளை என்பவன் ஒரு பாவப் பட்ட சுமைதாங்கியாகிறான். ஏன் இப்படியான பிரச்சனைகள் இன்னும் தொடர்கின்றன என்ற உளைச்சலான கேள்வியில் மனசு சங்கடப் படுகிறது.

எங்கே பிரச்சனை...? பிள்ளைகளிடமா பெற்றவர்களிடமா..? ஆழ்ந்து சிந்திக்கும் போதுதான் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணம் இரண்டு இடங்களிலுமே இல்லை என்பது பூ¢கிறது. அப்படியானால் எங்கே பிரச்சனை? எம்மை ஆள்பவர்களிடமா? அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. நாட்டில் சுபீட்சமான ஒரு நிலை இருந்தால்... வயது வந்தவர்களுக்கு உதவும் சரியான சமூக நலத் திட்டங்கள் இருந்தால்........... அடுத்து.. பெண்ணைப் பெற்றவர்கள் சீதனம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாய நிலை இல்லாது இருந்தால்........ இப்படிப் பல இருந்தால்கள் இருந்தால்... ஒரு ஆண்மகன் குடும்பத்துக்காகத் தன்னையும், தனது வாழ்வையும் அர்ப்பணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. 

இங்கு இந்த 'எச்சில் போர்வை'  குறும்படத்தில் இந்த 'இருந்தால்'கள் எதுவுமே இல்லாததால் வாழ்வே இல்லாது போன ஒரு ஆண்மகனின் கதை சொல்லப் படுகிறது.

லூயிஸ் அவன்தான் இந்த அரசியல், சமூக சூறாவளிக்குள் சிக்குண்ட புலம்பெயர் இளைஞன். இளைஞன் என்ற சொல்லுக்கே உரிய அந்த இளமைப் பருவத்தை அவன் அனுபவித்திருப்பானா..? இருக்காது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அது காலச்சூறவளிக்குள் சிக்கி உருத் தொ¢யாமல் சிதைந்து கொண்டிருக்கிறது.

உயிர் காக்க என்று சொல்லித்தான் அனேகமாகப் புலம் பெயர்ந்திருப்பான். பின்னர்தான் பணம் காய்க்கும் மரமாக உரு மாற்றப் பட்டிருப்பான். 

வீட்டுக்குள் நுழைபவன் சப்பாத்து நாடாவைக் கூட அவிழ்க்காமல் வாசலிலேயே சப்பாத்தைக் கழற்றும் போது அவனுக்கு அவன் மீதே உள்ள அலட்சியம் தொ¢கிறது. தன்னைப் பற்றியோ அன்றி தனது இருப்பிடத்தின் ஒழுங்கைப் பற்றியோ சா¢யாக சிந்திக்க முடியாத அளவுக்கு அவன் மேல் சுமை அழுத்துவதை விரிக்கப் படாத அவன் படுக்கையும், அது பற்றிய எவ்வித பிரக்ஞையும் இன்றி வெறும் ஜடமாக அதன் மேல் அவன் அமரும் தன்மையும் எடுத்துக் காட்டுகின்றன. 

அவன் அமரும் போதே தலையணையின் மேல் வைக்கப் பட்டிருக்கும் ஊர்க் கடிதத்தைக் காண்கிறான். உறவுகளை விட்டு பல்லாயிரக் கணக்கான மைல்களைத் தாண்டியிருக்கும் எந்த ஒருவனுக்கும் ஊர்க்கடிதம் கண்டால் மனசில் இனிய அலை அடிக்கத்தான் செய்யும். ஆனால் இவனின் பார்வையில்.. முக பாவத்தில்.. எந்த விதமான மாற்றமும் இல்லை. இந்தக் கடிதங்கள் அவனை வருத்தியிருக்கின்றன. அவனால் தூக்க முடியாத சுமையை வலுக்கட்டாயமாக அவன் தலையில் ஏற்றி விட்டு நின்று வேடிக்கை பார்க்கின்றன என்பதை இறுகிப் போன அவன் முகமே எடுத்துக் காட்டியது. 

நினைத்தது போலவே கடிதம் பணம் கேட்டு வந்திருந்தது. நலம் கேட்டு விட்டு... நலமாயிரு என்று கூறி விட்டு..... பணம் கேட்டு மனநலத்தையே கேள்விக்குறியாக்கும் பெரும்பாலான தாயகக் கடிதங்களின் பிரதி பிம்பமாகவே அக்கடிதமும் இருந்தது. அதை அவன் குழம்பியிருந்த கட்டிலிலேயே இருந்தும் படுத்தும் வாசித்த விதம் அவனது நிலை கொள்ளாது குழம்பியிருந்த மனதுக்குச் சான்றாகியிருந்தது. அம்மா, தங்கையின் மீதான பாசம்.. பிரச்சனைகளை விளக்கக் கூட முடியாத அளவுக்கு இருப்புகள் தூரமாகி விட்டதால் இயல்பாகவே நெஞ்சில் ஊறி விட்ட ஏக்கம்.. எல்லாம் சேர்ந்து தான் ஒரு கடமை தவறிய மகன் என்பதான பிரமையை அவனுள் ஏற்படுத்த அதனால் குறுகிப் போன குற்ற உணர்வுடனான மனத்துடன் அவன் காணப் பட்டான். 

கடிதத்தின் மூலம்; ஒன்றரைலட்சம் ரூபாவுக்கான விண்ணப்பம் மிகவும் சாதாரணமாக அவனிடம் வைக்கப் பட்டிருந்தது. தம்பியை விரைவில் கூப்பிடு. அது இன்னொரு விண்ணப்பம். உனக்கு இயலுமா இயலாதா என்பதான எந்தக் கேள்விகளும் இன்றி இது உனது வேலை, இது உனது கடமை. இதை நீதான் செய்ய வேண்டும் என்பது போன்ற கட்டாயத்தனமான விண்ணப்பங்கள் அவை. தங்கை சுபாதான் அம்மாவின் சார்பில் விண்ணப்பித்திருந்தாள். அன்பையும் கலந்துதான் எழுதியிருந்தாள். அன்புக்குரியவர்களின் விண்ணப்பங்கள் அவை.தட்டிக்கழிக்க அவனால் முடியவில்லை.

இதனிடையே தொலைபேசி அழைப்பு. கடித வரிகள் அவனது தலைக்குள் எதிரொலித்ததால் தொலைபேசி அழைப்பு அவனை எதுவுமே செய்யவில்லை. அறை நண்பன் வந்து தொலைபேசியை எடுத்து அவனிடம் கொடுக்கும் வரை அவன் வெறுமனே திரும்பிப் பார்த்து விட்டு அது பற்றிய பிரக்ஞைகள் இன்றி சூறாவளிக்குள் சிக்குண்ட அவனது சிந்தனையோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

தொலைபேசியாவது இதமாக இறுக்கத்தைத் தளர்த்துவதாக வருமென்று பார்த்தால் அது இன்னும் தொல்லைப்பாடாக இருந்தது. ஏஜென்சியிடம் பிணைக்கு நின்றவர்தான் எதிர்முனையில் நின்று இரண்டு கிழமைக்குள்ளை பணத்தை வை. இல்லையென்றால் உன்ரை ஆக்களை வைச்சு அடிப்பிப்பன்;.... என்று அநாகாரிகமாகக் கத்தினார்... 

மேல்மாடியில் இருப்பவரிடம் லிப்றில் செல்லும் போது  வழமையான வாழ்வின் சலசலப்புகள் வெளியே கேட்டுக் கொண்டிருந்தன. அவனின் தலைக்குள் அவன் முன் குவிந்திருந்த பிரச்சனைகளே ஒலித்துக் கொண்டிருந்ததால் காலத்துக்கேற்ப வயசுக்கேற்ப ஒலித்துக் கொண்டிருந்த இயல்பான வெளிப் பேச்சுக்கள் அவனுக்கு வெட்டிப் பேச்சுக்களாகவே தொ¢ந்தன. அதை அவனது தலையசைப்பே காட்டியது.

தம்பி யோசிச்சுப் பிரயோசனமில்லை கெதியா நாட்டை விட்டு மாறு  என்ற மேல் மாடி நண்பரின் உபதேசம் இத்தனை பிரச்சனைகளையும் சுமப்பவனுக்கு இன்னும் இருப்பதற்கு ஒரு நிரந்தர வதிவிடம் இல்லை. அவன் எந்தக் கட்டத்திலும் நாட்டை விட்டு வேளியேற்றப் படலாம். அதற்குள் அவன் வேறு ஏதாவது நாட்டுக்குச் சென்று விட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியது. 

பணம் கேட்டு வந்த தங்கையின் கடிதம், வந்த பணத்தைத் தரவில்லையே என சுட்டும் பயணத்துக்குப் பிணை நின்றவரின் தொலைபேசி மிரட்டல், கலாச்சாரம் பண்பாடு என்று பேசிக் கொண்டு பர்தாவுக்குள்ளும் சினிமாவுக்குள்ளும் தமது துணைகளைத் தேடும் இன்றைய புலம்பெயர் கனவுலக இளைஞர்கள், யாழ்ப்பாண ஓலம்..... இத்தனையையும் மூளைக்குள் பதித்துக் கொண்டு வதிவிட அனுமதி கூட இன்றி அவதியுறும் இளைஞன் ஒருவனை ஒரு வார்த்தை கூடப் பேச விடாது எம் முன்னே கொண்டு வந்திருந்தார் அஜீவன். பாராட்டுக்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல லூயிஸின் பாத்திரம் புலம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு பதம்.. இக் குறும்படம் புலம்பெயர்ந்தவர் பார்க்க வேண்டிய படமல்ல. புலம்பெயர்ந்தவர்கள் மீது குற்றச் சாட்டுக்களையே அள்ளி வீசுபவர்களும், எவ்வளவுதான் பணம் அனுப்பினாலும் அப்பணம் தமது குழந்தைகளின் கசக்கிப் பிழியப் பட்ட வாழ்க்கை என்பதை உணராது இன்னும் இன்னும் என்று தேவைகளையும் வசதிகளையும் கூட்டி படாடோபமாக வாழ்பவர்களுமான எமது தாயக உறவுகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.

படத்தை ஆக்கிய அஜீவன் ஒரு புலம்பெயர் இளைஞனின் சோகத்தைக் காட்ட பிரச்சனைகளைக் காட்ட என்று படத்தில் நிறையவே கவனம் செலுத்தி இருக்கிறார். தொலைபேசி அழைப்பின் போது வெறுமனே அதைப் பார்த்து விட்டுத் தன்பாட்டில் இருப்பது.. வந்த பணத்தைக் கூட இன்னும் திருப்பிக் கொடுக்க வில்லையென்பதை ஏஜென்சியிடம் பிணை நின்ற உறவினன் தொலைபேசியினூடு கத்துவது.. என்று ஒவ்வொன்றுமே மிகவும் யதார்த்தமாக அமைந்திருந்தன.

லூயிஸ் மூக்கைச் சீறி எறிவதுதான் கொஞ்சம் அருவருப்பாக இருந்தது. அவரது கையில் நாம் தாயகத்தில் பாவிக்கும் ஒரு  கைக்குட்டையையாவது கொடுத்திருக்கலாமே என எண்ணத் தோன்றுகிறது. சும்மா ரோட்டில் சீறி எறிந்து விட்டுப் போவது இந்த யுகத்துக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை. 

மற்றும் படி லூயிஸின் நடிப்பு அபாரம். எப்போதுமே கண்களில் நிரம்பியிருந்த சோகம்.. இறுக்கமான முகம்.. நியமாகவே பிரச்சனையில் சிக்குண்ட ஒரு ஜீவனின் தன்மையைக் காட்டி நின்றன. இந்தப் படத்தின் வெற்றியில் அவருக்கும் முக்கிய பங்குண்டு.

அஜீவனின் சமூகப் பிரக்ஞை நிறைந்த தயாரிப்புகளில் இது எனக்கு கிடைத்த இரண்டாவது படம். இதைக் கண்டிப்பாக எமது தாயக உறவுகளின் மத்தியில் உலா வர விட்டு அவர் தம் பிழைகளை அவர்கள் உணர அஜீவன் ஆவன செய்திருப்பார் எனப் பெரிதும் நம்புகிறேன்.

இங்கே பலியாவது லூயிஸ் போன்ற புலம்பெயர் இளைஞன் ஒருவனின் வாழ்க்கை மட்டுமல்ல. இவனைத் தனது துணையாக்கிக் கொள்ளப் போகும் இன்னொரு ஜீவனான பெண்ணின் வாழ்க்கையும்தான். இதையும் எம்மவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன். அதற்கு வழி சமைத்த அஜீவனுக்கு நன்றி.

4.9.2003

செப்டம்பர் 2003 இதழ் 45
அஜீவனின் 'நிழல் யுத்தம்'  ஒரு பார்வை!   

சூரிய உதயத்தையோ, அல்லது அஸ்தமனத்தையோ காண முடியாமல் பல புலம் பெயர் தமிழர்களின் வாழ்வு தொழிற்சாலைகளுக்குள்ளும், உணவு விடுதிகளுக்குள்ளும் கரைந்து கொண்டிருப்பது மனதைப் பிசையும் உண்மை. நிழல்யுத்தம் குறும்படம் தொடங்கிய போது எந்த வித ரம்மியமான சூழ்நிலையும் இல்லாத இயந்திரங்களின் நடுவே வேலை செய்யும் எம்மவர் ஒருவரைப் பார்த்ததும் மெல்லிய சோகத்தனம் மனத்தில் தோன்றத்தான் செய்தது. ஆனால் எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் கதை சற்று வேறு கோணத்தில் திரும்பியது. ராதிகா வானொலியில் பாட்டைப் போட்டு விட்டுச் சமைக்கும் விதமும், கறியை கையில் ஊற்றி சுவை பார்க்கும் விதமும் மிகவும் யதார்த்தமாகவும், ராதிகாவின் முகம் ஏதோ ஒன்றை இழந்த அதிருப்தியான தன்மையைக் காட்டுவதாகவும் அமைந்திருந்தன. குடும்பத்தில் வரும் குழப்பங்களுக்கு சிறு பொறியொன்றே போதும். இங்கு அது நண்பனின் வடிவில் பஞ்சாபியாக வந்திருந்தது. ஆனாலும் ஒரே ஒருநாள் வரும் பஞ்சாபி மட்டும் மனதை அந்தகாரத்துக்குள் தொலைத்து விட்டுக் குமுறி, கறியை எரிய விடுமளவுக்கு பாரதூரமானதாக இருக்காது. அந்த ஒரு சம்பவம் ஏற்கெனவே அங்கு சந்தேகம் வெறும் பொறியாக இல்லாமல் தீப்பிடிக்கவே தொடங்கியிருப்பதற்கு தாரமாக அமைந்திருந்தது. புரிந்துணர்வு என்ற ஒன்றுக்கு வருவதற்கான புரிதல் நிலைக்கே அவகாசம் இல்லாமல், அவர்களையும் தாண்டிய குடும்பச் சூழ்நிலைகளால் பணம் என்ற ஒன்றைத் தேடி வேலை வேலை என்று ஆண் திரியும் போது, ராஐவாழ்க்கை, காதல் கணவன்... என்ற கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வந்து தனிமையே துணையாகி, அதனால் ஏற்படும் விரக்தியில் பெண் வாடிக் கொண்டிருப்பது.. புலத்தில் இன்று நேற்றல்ல. இது தொடர்கதையாய்.. தொடர்கிறது. அதன் ஒரு பதிவுதான் நிழல்யுத்தம்.

இயந்திரங்களின் நடுவே இயந்திரமாகிப் போனவர்தான் பாலகிருஸ்ணன். அவரை மணம் செய்து கொள்ள என்று தாய்நிலத்திலிருந்து வந்து அவரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா. இவர்களுக்கிடையேயான நிழல்யுத்தம் எமது புலம் பெயர் சமூகத்தின் ஒரு பிரதிபிம்பம். இந்தப் படம் பார்த்து ரசிப்பதற்கான வெறும் குறும்படமாக மட்டுமாக இல்லாமல், புலம்பெயர்ந்த குடும்பங்களில் தொடர்கதையாகும் நிழல்யுத்தங்களின் காரணங்களைக் கண்டு திருந்திக் கொள்ள ஏதுவான கருவியாகவும் இருக்குமென நம்புகிறேன். தம்மைத்தாமே புரிந்து கொள்ளாத.. திருத்திக் கொள்ளக் கூட முயலாத நிலையில் உள்ள தன்மைகள் கொண்ட பாத்திரங்களை இப் படத்தில் கண்டு கொள்ள முடிந்தது. இது பார்ப்பவர்கள் மனதில் சிந்தனையைத் தூண்டி அவர்தம் பிழைகளை உணர வைக்குமென்றே நம்புகிறேன். உதாரணமாக பாலகிருஸ்ணன் களைத்துத்தான் வீடு திரும்புகிறார். இல்லை என்று சொல்வதற்கில்லை. அவருக்கு இந்த வாழ்க்கை சில வருடப் பழக்கமாகி விட்டது. ஆனால் அவர் மனைவி ராதிகாவோ சுற்றம், சூழலை விட்டு இப்போதான் வந்திருக்கிறாள். கணவனில் இருந்து தனிமை வரை அத்தனையும் புதிது. அவள் மனநிலையை உணர்ந்து கொள்ளும் தன்மையில் பாலகிருஸ்ணன் இல்லை. தனியே பஞ்சாபி விடயத்தைப் பார்த்து விட்டு அவளைத் திட்ட முடியாது. 

நான் மேலே குறிப்பிட்டது போல, ஒரே ஒருநாள் வரும் பஞ்சாபி மட்டும் மனதை அந்தகாரத்துக்குள் விட்டுக் குமுறி, கறியை எரிய விடுமளவுக்கு பாரதூரமானதாக ஒரு போதும் இருக்காது. அந்த ஒரு சம்பவம் ஏற்கெனவே அங்கு சந்தேகம் வெறும் பொறியாக இல்லாமல் தீப்பிடிக்கவே தொடங்கியிருப்பதற்கு தாரமாக அமைந்திருக்கிறது. அதற்கான காரணம் எங்கே என்று தெரிய வேண்டும். அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வேறு சம்பவங்கள் அங்கு நடந்திருக்க வேண்டும். பாலகிருஸ்ணன் அதற்கான சரியான விளக்கங்களை அங்கு அவளுக்குக் கொடுக்காதிருந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் கள்ளம் பிடிபட்டுப் போச்செண்டு.. என்ற வார்த்தைகளை அவள் கொட்டியிருக்கத் தேவையில்லை. வேலையிடத்தில் அவன் நாய் மாதிரி... இங்கை வந்தால் நீ வெறி பிடிச்ச நாய் மாதிரிக் கத்திறாய்... இவை பல ஆண்களின் வாயில் இருந்து வரும் அநாகரிகமான வார்த்தைகள்தான். ஆனால் அந்த வார்த்தைகள் எந்தளவு தூரத்துக்கு ஒரு மனைவியைப் பாதிக்கும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கத் தவறி விடுகிறார்கள். நண்பன் வீடு மாற உதவி செய்தவன் மனைவி காத்திருப்பாள் என்பதை எண்ணியிருந்தால் ஒரு தடவை தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது நிலையை அவளுக்கு விளக்கியிருக்கலாம். நான்கு சுவர்களுக்குள்ளான தன்னந்தனியான அந்தக் காத்திருப்பு என்பது அந்தப் படத்தில் காட்டியதையும் விட- மனதில் அதி விரக்தியையும் வேதனையையும் வெறுப்பையும் கொடுக்கக் கூடிய ஒன்றாகும். போகும் போதாவது இன்று நண்பனுக்கு உதவி செய்ய வேண்டிய பிரச்சனை ஒன்று உள்ளது. நான் வரத் தாமதமாகலாம் என்ற முன்னறிவிப்பைக் கொடுத்துச் சென்றிருக்கலாம். எனக்கு மட்டுந்தான் பிரச்சனை. நீ இவைகளை அனுசரி என்பது போலல்லவா பாலகிருஸ்ணனின் செயல்கள் அமைந்துள்ளன.

இப் படத்தின் மூலம் ஆண்கள் இப்படியான தவறுகள் பலதைத் தாம் செய்கிறோம் என்பதை உணர்ந்து தம்மைத் தாமே திருத்திக் கொள்வார்களேயானால் அதற்கான நன்றி அஜீவனையே சென்றடையும். வேலை முடிந்து வீட்டுக்கு பாலகிருஸ்ணன் வந்த போது கறி எரிந்து சட்டியும் கரியாகத் தொடங்கியிருந்தது. பாலகிருஸ்ணனின் தலையாட்டல் இது இன்றைக்கு மட்டுமல்ல, அடிக்கடி நடந்து அவனை வெறுப்பூட்டியிருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறது. அந்த சந்தர்ப்பத்திலும் சரி, காத்திருந்து காத்திருந்து அலுப்பாகி, வெறுப்பாகி, வெளிச் செல்லும் உடையுடனேயே படுக்கையில் கோபமாகப் படுத்திருந்த மனைவியிடம் சாட்டுச் சொல்லும் போதும் சரி பாலகிருஸ்ணனின் நடிப்பு யதார்த்தமாக அமைந்திருந்தது. ஆனால் கட்டிலில் சாட்டுச் சொல்லும் போது கூட அவர்களுக்கிடையேயான உறவு சற்று எட்ட நிற்பது போலவே தோன்றுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் பாலகிருஸ்ணன் இன்னும் சற்று ஆதரவாக ராதிகாவை நெருங்கியிருக்கலாம். காலை அவள் கண்ணாடி கழுவிக் கொண்டிருந்த நேரத்திலிருந்து இந்த நிமிடப் பொழுது வரை அவள் தன்னந் தனியாகத்தான் அந்த வீட்டில் இருந்திருக்கிறாள். தொலைபேசி கூட இயங்கவில்லை. அவளுக்கு இப்போ வேண்டியது பாலகிருஸ்ணனுக்குக் கிடைக்க வேண்டிய உடல் ஆறுதலை விடப் பன் மடங்கு அதிகமான மன ஆறுதலும் அன்பான அரவணைப்பும். இப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இதை ஒவ்வொரு பார்வையாளனாலும் புரிந்து கொள்ள முடியும். 

ஒருவரின் தவறை மீண்டும் மீண்டும் ஒரு குற்றச் சாட்டுப் போல சுட்டிக் காட்டுவதை விட ஒரு கதை மூலமோ, படம் மூலமோ எடுத்துக் காட்டிப் புரிய வைப்பது மிகவும் ஆரோக்கியமானதும் பயனானதும். அந்தப் புரிவில் அவர்களுக்குத் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிட்சயம் தோன்றும். அந்த வகையில் அஜீவனின் இந்தப் படைப்பு புலம் பெயர் சமூகத்துக்குக் கிடைத்த ஒரு அரிய படைப்பு. இன்றைய காலத்தின் ஒரு பதிவும் கூட. இதில் ஒரு பெரிய பிரச்சனை சில நிமிடங்களுக்குள் மிகவும் யதார்த்தமாக முன் வைக்கப் பட்டுள்ளது. படத்தின் மற்றைய விடயங்களை ஆராய்ந்தால் இயக்கம், தொழில் நுடபம் போன்ற விடயங்களில் மிகுந்த அவதானம் செலுத்தப் பட்டிருப்பது தெரிகிறது. தேவையற்ற விரிசல்களோ, ஒடிசல்களோ ஏற்படாதவாறு கன கச்சிதமாக வெட்டல்களும், ஒட்டல்களும் செய்யப் பட்டுள்ளது. இது இந்தத் துறையில் அஜீவனுக்குள்ள அனுபவத்தையும் திறமையையும் காட்டுகிறது. கண்டிப்பாக அவரைப் பாராட்ட வேண்டும் என்றே தோன்றுகிறது.

உரை வடிவமும் எந்த வித செயற்கையும் கலக்காமல் மிகவும் யதார்த்தமாகவே அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. காரிலே போகும் போது இப்படிச் சண்டை போடுகிறார்களே..! ராதிகா இந்தக் கட்டத்தில் பொறுமை காக்காலாமே..! ஒரு பெரிய விபத்துக்கு இது வழியாகலாமே..! என மனசு அந்தரப் படுகையில் விபத்து நடப்பதாகக் கனவு-நன்றாகவே அமைந்துள்ளது. இன்னும் இப்படத்துக்குள் நிறையவே தேடலாம். புரியலாம். படத்தின் வெற்றிக்குப் பாத்திரமான ஒவ்வொரு படைப்பாளிக்கும் சமூகத்தின் சார்பாக நிறைந்த பாராட்டுக்கள். அஜீவனிடமிருந்து சமூகப்பிரக்ஞை நிறைந்த இப்படியான படங்கள் இன்னும் வரும் என எதிர் பார்க்கிறேன்.

chandra1200@yahoo.de
30.7.2003

No comments:

'பதிவுக'ளில் அன்று - ''காதல் கடிதம்'' - உலகத் தமிழருக்கான திரைப்பொங்கல்! - வசீகரன் (ஒஸ்லோ,நோர்வே) -

பெப்ருவரி 2008 இதழ் 98   [பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும்...

பிரபலமான பதிவுகள்