Friday, September 12, 2025

நினைவில் நிற்கும் யாழ் இந்து அதிபர் மு.கார்த்திகேசன் மாஸ்டர்!


யாழ் இந்துக் கல்லூரியின் அதிபராக திரு மு.கார்த்திகேசன் மாஸ்டர் சிறிது காலம் இருந்தது நான் யாழ் இந்துக் கல்லூரியில் படிப்பதற்காகச் சென்றிருந்த காலம். சிறுவனான எனக்கு அவருடன் உரையாடும் சந்த்ரப்பம் வாய்த்தது. சில நிமிடங்களே உரையாடியிருந்திருப்பேன். அப்போது அவர் யார் அப்பா என்று விசாரித்தார். கூறியதும் உடனேயே அப்பாவை , அப்பாவின் கல்வித் திறமையை வியந்து நினைவு கூர்ந்தார். து தான் அவருடன் படித்தவர் என்று கூறினார். இச்சில நிமிடங்கள் எனக்கு எப்போது அவரைப்பற்றி நினைத்தாலும் நினைவுக்கு வருவதுண்டு. அப்போது அவர் முகம் அவருக்கேயுரிய முறுவலுடன் காட்சியளித்ததும் நினைவுக்கு வருகின்றது.


நூற்றுக்கணக்கான மாணவர்களில் ஒருவனான என்னுடன் அவருக்குப் பேச வேண்டிய தேவை இல்லை. இருந்தாலும் யாழ் இந்து விறாந்தையில் எதற்காகவோ ஒடிக்கொண்டிருந்த , சிறுவனான என்னை இடை மறித்து உரையாடினார். அது அவரது ஆளுமையின் வெளிப்பாடு என்பதை இன்றுணர முடிகின்றது. அதனால்தான் அந்தச் சில நிமிடங்கள் இன்றும் என்னை அவரை நினைவு கூர வைக்கின்றது. வயது வேறுபாடின்றி மாணவர்களுடன் உரையாடும் அவரது அந்த ஆளுமை அவரது முக்கிய பண்புகளில் ஒன்று என்பதை உணர முடிகின்றது.

அப்போது அவரைப் பற்றிய முழுச் சித்திரத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. புரிந்துகொள்ளும் வயதுமில்லை. பின்னரே காலப்போக்கில் என் வயதின் வளர்ச்சியுடன் வாசிப்பும் வளர்ச்சியும் அதிகரித்தபோது அவரது மார்க்சியச் சிந்தனைகளையும், அது அவரை இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கிய, அரசியற் சூழலில் வைத்திருந்த இடத்தையும் அறிந்துகொள்ள முடிந்தது. வியக்க வைத்தது. இன்றுவரை வியந்து கொண்டிருக்கின்றேன். இலங்கைத்த்மிழ் இலக்கியத்தின் முற்போக்கு எழுத்தாளர்கள்தம் நனவிடை தோய்தல்கள் பலவற்றின் மூலம் 'கார்த்திகேசன் மாஸ்ட'ரின் ஆளுமையை இன்னும் விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

அவரது நினைவு தினம் செப்டம்பர் 10. அவரது நினைவாக அவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு, அவரது மகள் ஜானகி பாலகிருஷ்ணன் வெளியிட்ட நினைவு மலர் ஆகியவற்றையும் பகிர்ந்து கொள்கின்றேன். இவை அவரைப்பற்றிய , அவர் யாழ் மாநகரசபையில் வண்ணார்பணையின் வட்டார உறுப்பினராக இருந்தது போன்ற , பல அரிய தகவல்களை உள்ளடக்கியுள்ளன. ஆதலால் மிகுந்த பயனுள்ளவை. அவரது புத்திரிகள் திருமதி ஜானகி பாலகிருஷ்ணன், திருமதி ராணி சின்னத்தம்பி இருவரும் இன்று என் முகநூல் நண்பர்களாக இருக்கின்றார்கள். அதற்காக முகநூலுக்கு என் நன்றி. இருவர்தம் ஆளுமையிலும் அவர் முழுமையாக ஒளிர்கின்றார் என்பதையும் அவர்களைப்பற்றி அறிந்த அனைவரும் அறிவர். கார்த்திகேசன் மாஸ்டரின் மறைவையொட்டி, 'மல்லிகை' சஞ்சிகை அதன் அக்டோபர் 1977 இதழில் அட்டைப்படமாக அவரது புகைப்படத்தைப் பிரசுரித்தது. அதற்கான கட்டுரையாக , ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் 'சில வேளைகளில் சில தீரர்களை வெளியுலகம் அறிவதில்லை' என்னுமொரு கட்டுரையினையும் எழுதியிருந்தார். அவ்விதழுக்கான இணைப்பினையும் கூடவே தந்திருக்கின்றேன். கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் - https://noolaham.net/project/137/13686/13686.pdf விக்கிபீடியாக் குறிப்பு - மு.கார்த்திகேசன் - https://ta.wikipedia.org/s/bkg5 மல்லிகை அக்டோபர் 1977 இதழ் - https://noolaham.net/project/635/63500/63500.pdf



கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்
-
https://noolaham.net/project/137/13686/13686.pdf

விக்கிபீடியாக் குறிப்பு - மு.கார்த்திகேசன் - https://ta.wikipedia.org/s/bkg5

கம்யூனிஸ்டு கார்த்திகேசன் என அழைக்கப்பட்ட மு. கார்த்திகேசன் (25 யூன் 1919 – 10 செப்டம்பர் 1977) இலங்கைத் தமிழ் இடதுசாரி அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கார்த்திகேசன் 1919 யூன் 25 அன்று மலாயாவில் தைப்பிங் என்னும் இடத்தில் முருகபிள்ளை, தங்கரத்தினம் ஆகியோருக்கு மூத்த ஆண் குழந்தையாகப் பிறந்தார். தந்தை முருகபிள்ளை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மலாயா சென்று அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியவர்.[1] தனது ஐந்தாவது அகவையில் தாயுடன் இலங்கை வந்த கார்த்திகேசன் வட்டுக்கோட்டை திருஞானசம்பந்த வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி கற்று, மீண்டும் தைப்பிங் சென்று அங்குள்ள ஒர் ஆங்கிலக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு அவர் இலண்டன் மூத்த கேம்பிரிட்ச் தேர்வில் திறமையான சித்தி பெற்றார். பின்னர் இலங்கை திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1937 முதல் 1941 வரை உயர் கல்வி கற்றார். பல்கலைக்கழகத்தில்

1935 ஆம் ஆண்டில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக லங்கா சமசமாஜக் கட்சி தொடங்கப்பட்டது. இலண்டனில் கல்வி கற்றுத் திரும்பிய எஸ். ஏ. விக்கிரமசிங்க, அ. வைத்திலிங்கம், பீட்டர் கெனமன் போன்றோர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கம்யூனிசப் பரப்புரையில் ஈடுபட்டனர். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கும் திரொத்சுக்கியவாதிகளுக்கும் இடையே தோன்றிய கருத்து வேறுபாட்டால், இலங்கையில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சிலர் சமசமாசக் கட்சியில் இருந்து விலகிக் கம்யூனிஸ்டுக் கட்சியைத் தொடங்கினர். இந்த அரசியலில் கார்த்திகேசனும் இணைந்தார். பல்கலைக்கழகக் காலத்தில் ஆங்கிலப் பிரசுரங்களை வெளியிட்டார். "மாணவர் செய்தி" (Student News) என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். திரொக்சியத்திற்கு எதிராகவும், சோவியத் கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் அவர் பல பிரசுரங்களை வெளியிட்டார். ஆங்கிலத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.

திருமணமும் கட்சிப் பணியும்

கார்த்திகேசன் 1942 ஆம் ஆண்டில் அவரது உறவினர்களில் ஒருவரான சங்கரத்தை என்ற ஊரைச் சேர்ந்த வாலாம்பிகை என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தார்.[1] திருமணம் முடிந்ததுமே இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராகச் சேர்ந்தார். கொழும்பில் பொரளை கொட்டா வீதியில் ஏனைய கம்யூனிசத் தலைவர்களுடன் சேர்ந்து வசித்து வந்தார். கட்சியின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்காற்றினார். கட்சியின் "போர்வார்டு" என்ற கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில வாரப் பத்திரிகையின் நிறுவன ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ்ப் பகுதிகளில் கட்சியை வளர்க்கவென கட்சியால் பணிக்கப்பட்டு 1946-இல் யாழ்ப்பாணம் வந்தார். யாழ்ப்பாணம் விக்டோரியா வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடி புகுந்தார். அதுவே கட்சி அலுவலகமாகவும் விளங்கியது. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ப. ஜீவானந்தம் 1947 இல் இந்தியாவில் தலைமறைவாகி யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் கார்த்திகேசன் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரது நினைவாக தனது மூத்த மகனுக்கு ஜீவானந்தம் எனப் பெயரிட்டார், அக்குழந்தை இறந்துவிடவே, பின்னர் பிறந்த பெண் குழந்தைக்கு ஜீவஜோதி எனப் பெயரிட்டார்.

தோழர்கள் சு. வே. சீனிவாசகம், வீ. ஏ. கந்தசாமி, ஆர். பூபாலசிங்கம், எம். சி. சுப்பிரமணியம், இராமசாமி ஐயர் ஆகியோர் இவருடன் இணைந்து கட்சிப் பணியாற்றினர். யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆசிரியப் பணி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நீண்ட காலம் ஆசிரியராகவும், பின்னர் அதிபராகவும் பணியாற்றினார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் அதிபராகப் பணியாற்றினார். இப்பணிகளின் போது, கல்லூரிகளின் வெளியீடுகளில் பல கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

தேர்தல்களில் பங்களிப்பு

1947 இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்டுக் கட்சியின் வேட்பாளராக பொன்னம்பலம் கந்தையா பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரையில் கார்த்திகேசன் ஈடுபட்டார். 1947 முதல் இறக்கும் வரை சிறந்த மேடைப் பேச்சாளராகத் திகழந்தார். பொன். கந்தையா 1956 தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். கார்த்திகேசன் 1956 தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 3,289 (14.7%) வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள் பலர் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட்டு பெரும்பாலானோர் வெற்றி பெற்றனர். கார்த்திகேசனும் யாழ்ப்பாண மாநகர சபையின் வண்ணார்பண்ணைத் தொகுதியில் போட்டியிட்டுத் தெரிவானார். கார்த்திகேசன் மீண்டும் 1960 மார்ச் தேர்தலில் நல்லூர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

கட்சியில் பிளவு

1963 இறுதியில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவடைந்தபோது, கார்த்திகேசன் நா. சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்புக் கம்யூனிஸ்டுக் கட்சியுடன் இணைந்தார். 1966 இல் தீண்டாமை ஒழிப்பு போராட்ட நடவடிக்கைகளில் பெரும் பங்காற்றினார். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டங்களை நடத்தினார்.

மறைவு

மு. கார்த்திகேசன் 1977 செப்டம்பர் 10-ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் காலமானார். இவரது மகள் ராணி சின்னத்தம்பி, மருமகன் வீ. சின்னத்தம்பி (பாரதிநேசன்) ஆகியோர் சீன வானொலி நிலையத்திலும், பீக்கிங்கில் உள்ள அயல்மொழிப் பதிப்பகத்திலும் பணியாற்றியவர்கள் ஆவர்.

நன்றி: https://ta.wikipedia.org/s/bkg5

No comments:

வ.ந.கிரிதரனின் குழந்தைகளுக்கான நூல் 'சாவித்திரியின் பெரிய விருப்பம்'

"சாவித்திரியின் பெரிய விருப்பம் " என்பது, அதன் இளம் கதாநாயகியான பெண் குழந்தை சாவித்திரியின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்துமொரு குழ...

பிரபலமான பதிவுகள்