![]() |
- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி - |
*அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - வ.ந.கி
இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், அவரது பன்முகத்திறமை காரணமாக அறிஞர் என்று அழைக்கப்பட்டவருமான எழுத்தாளர் 'அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்' என்றொரு மெய்நிகர் வழியான நிகழ்வு மூலம் சிறப்பானதொரு நினைவு கூரலை நடாத்தியிருக்கிறது 'பைந்தமிழ்ச்சாரல்' அமைப்பு. உடகவியலாளர்கள் ராஜ் குலராஜின் நெறிப்படுத்தலில், பவானி சற்குணச்செல்வம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடந்த நிகழ்வின் முக்கியமான அம்சம் கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தனின் அ.ந.கந்தசாமி பற்றிய நீண்ட , விரிவான, முக்கியமான, ஆவணச்சிறப்பு மிக்க உரை.
திரு. மு.நித்தியானந்தன் அவர்கள் அ.ந.க அவர்களைப் பதுளை ஊவாப் பாடசாலையில் மாணவனாக இருந்த சமயம் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தவர். அது பற்றிய தன் நினைவுகளை தனதுரையில் பகிர்ந்திருந்தார். மிகவும் முக்கியமான தகவல்கள் அவை. அ.ந.க அவர்களின் நாவல்கள், நாடகம், சிறுகதை, கவிதை எனப் பல விடயங்களை உள்ளடக்கிய் அவரது உரை அவரது அ.ந.க.வின் படைப்புகள் மீதான வாசிப்பின் ஆழத்தை வெளிப்படுத்தின. உரை எழுத்து வடிவில் பதிவு செய்ய வேண்டியதொன்று. பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பி வைப்பாரென்று நம்புகின்றேன். நிச்சயம் பதிவுகளில் ஏனைய அ.ந.கந்தசாமியின் படைப்புகளுடன் அதுவும் ஆவணப்படுத்தப்படும்.
![]() |
மு.நித்தியானந்தன் |
நிகழ்வின் முடிவில் எழுத்தாளர்கள் தாமரைச்செல்வி, நவஜோதி ஜோகரட்னம், விமலாதேவி பரமநாதன், அஜந்தன் எனப் பலர் தமது கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்கள்.
நிகழ்வில் அ.ந.க இளமையில் வறுமையில் வாழ்ந்ததாகச் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். உண்மையில் அ.ந.க.வின் இளமை வறுமை மிக்கதல்ல.அவரது தந்தையார் யாழ் சிறைச்சாலை மருத்துவர். பல சொத்துகளுக்கு அதிபதி. கே.கே.எஸ் வீதியிலேயே அவருக்குச் சொத்துகள் பலவிருந்தன. தாய், தந்தையர் அடுத்தடுத்து மறைந்ததால் தகப்பன் வழி உறவினர்களுக்கும், தாய் வழி உறவினர்களுக்குமிடையில் யாழ் குழந்தைகளைப் பராமரிப்பது என்பதில் பிரச்சனை ஏற்பட்டு, அது நீதிமன்றம் வரை சென்றிருக்கின்றது. பின்னர் தாய் வழி உறவினர்கள் அதில் அனுமதி பெற்று குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பினை ஏற்றிருக்கின்றார்கள். அதன் காரணமாகவே இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி முறையாக இவர்களுக்குக் கிடைக்கவில்லை. மேலும் அ.ந.க தனது இலக்கிய ஆர்வம் காரணமாகவும், சமூக, அரசியற் செயற்பாடுகள் காரணமாகவும் தான் விரும்பிய வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அதுவே மேற்கொண்டு அவர் கல்வியைத் தொடராமல் போனதற்கான காரணங்களில் ஒன்று என்பது நான் அறிந்த தகவல்களிலொன்று. என் ஊகமும் அதுவே.
அ.ந.க கல்வி கற்ற காலம் ஆங்கிலேயரின் ஆட்சியிருந்த காலம். அவரது தீவிர வாசிப்பு, எழுத்தாற்றல் காரணமாகத் தன் ஆங்கிலம் , இலத்தின் மற்றும் இலக்கியப் புலமையினை இள வயதிலேயே மிகவும் அதிகமாக வளர்த்திருக்கின்றார் என்றே நான் கருதுகின்றேன்.
இந்நிகழ்வு மூலம் பைந்தமிழ்ச்சாரல் அமைப்பு வரலாற்றில் கால் பதித்துள்ளது. அ.ந.க.வின் மறைவிற்குப் பின்னர் நான் அறிந்தவரையில் வேறெந்த புலம்பெயர் தமிழர்களின் அமைப்பும் அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம் பற்றி நிகழ்வு நடத்தி நினைவு கூர்ந்ததாக நினைவிலில்லை. அவ்வகையிலும் இந்நிகழ்வுக்கு வரலாற்றுரீதியிலான முக்கியத்துவமுண்டு. அதற்காகப் பைந்தமிழ்ச்சாரலுக்குப் பாராட்டுகள்.
இந்நிகவுக்கான காணொளியைக் காண்பதற்கான இணைப்பு - https://www.youtube.com/watch?v=B59dIydkDvI
No comments:
Post a Comment