செப்டம்பர் 9 என் அபிமான எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான டால்ஸ்ட்டாயின் பிறந்த நாள். அவரது நாவல்கள் எல்லாமே சிறந்த படைப்புகள். உலக இலக்கியத்தில் முதல் தரப்பில் வைத்துப் போற்றப்படுபவை.
இவரது படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த படைப்பாகப் புத்துயிர்ப்பு (Resurrection) நாவலைக் கூறுவேன். அதற்கு முக்கிய காரணம் அது அறிமுகமானபொது எம் நாடிருந்த சூழல். எண்பதுகளின் ஆரம்பம். நாட்டில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆயுதமயப்படத்தொடங்கியிருந்த காலகட்டம். இளைஞர்கள் மக்கள் பற்றி, தொழிலாளர், விவசாயிகள் பற்றி, மார்க்சியம் பற்றியெல்லாம் சிந்திக்கத்தொடங்கியிருந்த காலம்.
டால்ஸ்டாய் மதவாதியாக இருந்தபோதும், தன் புனைகதைகளின் இறுதியில் மதரீதியிலான தீர்வினை எடுத்துரைத்தபோதும், அவரது கதைகளில் மானுடரின் வாழ்க்கை, வர்க்க வேறுபாடுகள் ஏற்படுத்தும் மானுடர் மீதான பாதிப்புகள், சமூக அநீதி கண்டு கொதிக்கும் மானுடச் சிந்தனைகள் இவையெல்லாம் நிறையவே இருக்கும். அவை என்னை மிகவும் கவர்ந்தவை.
புத்துயிர்ப்பு நாவல் பிரபுத்துவக் குடும்பத்து இளவரசர் ஒருவர் தன்னால் பாதிக்கப்பட்ட , கீழ் வர்க்கத்துப் பெண் ஒருத்திக்கேற்பட்ட துயர் நிலை கண்டு வருந்துவதுடன், அதற்குப் பிராயச்சித்தமாக அவளுக்கு உதவ விரும்புகின்றார். குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்ட அவள் சைபீரியாச் சிறைக்கு அனுப்பபட்டபோது அவளைப் பின் தொடர்ந்து , தன் செல்வாக்கைப் பாவித்து எப்படியாவது விடுவித்துத் தன்னுடன் கூட்டி வரவேண்டுமென்று கடும் முயற்சி செய்கின்றார். அதன் மூலம் தான் அவளுக்குத் தன் இளம் வயதில் புரிந்த துயர் நிலைக்குப் பரிகாரம் காண முயற்சி செய்கின்றார்.
அப்பெண் தன் இளவயதில் அவரது வீட்டில் பணிபுரிய வருகின்றாள். அச்சமயம் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் இளவரசர் அவளுடன் உறவு வைத்துக் கைவிட்டுச் சென்று விடுகின்றார்,. அதனால் கர்ப்பமுற்ற அப்பெண்ணின் வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர் நிலைகளால் கொலைக்குற்றஞ் சாட்டப்பட்ட அவள் மீதான வழக்கின் ஜூரிகளில் ஒருவராக இளவரசர் வருகின்றார். அப்போதுதான் அவளை அடையாளம் கொண்ட இளவரசர், அவளுக்கு ஏற்பட்ட நிலைக்கு அடிப்படைக்காரணகர்த்தா தானே என்றுணர்ந்து அவளுக்கு உதவுவதன் மூலம் பாவமன்னிப்புப் பெறவிரும்புகின்றார். அதற்காகத் தண்டனையினை அனுபவிக்கச் சைபீரியாவுக்கு அனுப்பப்படும் அவளைப் பின் தொடர்கின்றார்.
அவளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் மேலும் கைதிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் அரசியல் கைதிகளும் இருக்கின்றார்கள். அவர்கள் மக்களின் வர்க்க விடுதலைக்காகப் போராடியதன் மூலம் தீவிரவாதிகளாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற அரசியல் கைதிகள். அப்பெண்ணுக்கு அவர்களுடன் தொடர்பு ஏற்படுகின்றது. தன்னைபோன்ற அடிமட்ட வர்க்கத்து மக்களின் விடுதலைக்காகத் தம் வாழ்வை இழந்து, போராடிய அவ்விளைஞர்களைப் பற்றி அப்போதுதான் அவள் முதல் தடவையாக அறிந்துகொள்கின்றாள். புரிந்து கொள்கின்றாள். இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா என்று வியக்கின்றாள். அவர்களை மதிக்கத்தொடங்குகின்றாள். விளைவு? தன் இழி நிலைக்குக் காரணமான இளவரசரின் உதவியினை நிராகரிக்கும் அவள் , அவ்வரசியல் கைதிகளில் ஒருவனுடன் தன் வாழ்ககையைப் பிணைக்கும் எண்ணத்துடன் சைபீரியாவுக்குச் செல்கின்றாள்.
உண்மையில் இளவரசர் தான் அவளுக்குப் இழைத்த அநீதிக்குப் பாவமன்னிப்பாக அவளை மணந்து, தன் வாழ்க்கையில் புத்துயிர்ப்பு அடைய விரும்புகின்றார். அதை அவள் நிராகரித்து விட்டு, தங்களைப்போன்றவர்களுக்காகத் தம் வாழ்க்கையை இழந்து , சிறைக்கு அனுப்பப்படும் அரசியல் கைதிகளில் ஒருவனை ஏற்று அவள் தன் வாழ்க்கையில் புத்துயிர்ப்பினைப் பெறுகின்றாள்.
நாவலின் அரசியல் கைதிகள் பற்றிய பகுதி என்னை மிகவும் கவர்ந்தது. மக்களுக்காக, மக்களின் பிரச்சனைகளுக்காகப் போராட எம் நாட்டு இளைஞர்கள் புறப்பட்ட காலத்தில் , சூழலில் நாவலைப் படித்தப்போது நாவலுடன் என்னால் முற்றாக மனமொன்றிட முடிந்தது. அப்பெண்ணைப்போல் என்னையும் அவ்விளைஞர்கள் கவர்ந்தார்கள். அதனால் இந்நாவல் என் மனத்துக்கு மிகவும் நெருக்கமான படைப்பாக, டால்ஸ்டாயின் ஏனைய நாவல்களை விட இருந்தது. இருக்கின்றது.
மொஸ்கோ பதிப்பக வெளியீடாக வெளிவந்த நாவலை கொழும்பு கம்பனித்தெருவிலிருந்த மக்கள் பிரசுரலாயப் புத்தகக் கடையில் வாங்கிய நினைவும் இத்தருணத்தில் எழுகின்றது.
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Subscribe to:
Post Comments (Atom)
காலத்தால் அழியாத கானம்: 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!"
'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Googel Nano Banana) உதவி; VNG பாடகி வாணி ஜெயராமுக்குச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின்...
.png)
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
No comments:
Post a Comment