![]() |
- எழுத்தாளர் குந்தவை - |
[ குந்தவை - டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையா.]
சுதந்திரன் பத்திரிகையின் , 1967 ஜனவரி வெளியான பொங்கல் மலருக்கான சிறுகதைப் போட்டிக்காக எழுத்தாளர் குந்தவை சிறுகதை அனுப்பிப் பாராட்டினைப்பெற்ற சிறுகதையாக , 24.2. 1967 இல் வெளியான சுதந்திரனில் பிரசுரமான சிறுகதை 'மாயை'. வித்தியாசமான சிறுகதை கதையின் நாயகி புனிதம் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்ப்பிட மாணவி. அவள் தன் தோழிகள் இருவருடன் பொல்காவகைத் தொடருந்து நிலையத்தில் , காத்திருந்து யாழ் மெயில் தொடருந்தில் ஏறுகின்றாள். அவளது தோழிகளில் ஒருத்தியின் பெயர் மாயா. அப்புகைவண்டியில் இன்னுமோர் இளைஞன் வந்து அவர்களுடன் இணைகின்றான். அவனை மாயா தம்பி என்று கூறுகின்றாள். அவன் மாயாவுக்கும் , அவளுக்கு அருகில் தள்ளியிருந்த மனிதனுக்குமிடையில் அமர்கின்றான்.
புனிதம் தூக்கக் கலக்கத்தில் மாயாவையும், அவளருகில் வந்தமர்ந்த இளைஞனையும் அவதானிக்கின்றாள். அவர்கள் இருவரும் அக்கா தம்பி போல் நடப்பதாகத் தெரியவில்லை என்றுணர்கின்றாள். உண்மையில் அவ்விதம்தான் அவர்கள் நடந்த்துகொண்டார்களா அல்லது புனிதம்தான் அவ்விதம் தூக்கக்கலக்கத்தில் உணர்கின்றாளா என்பதை உறுதியாகத் தீர்மானிக்க முடியாத வகையில் குந்தவையின் எழுத்து மிகவும் நுட்பமாகப் பின்னப்பட்டிருக்கின்றது.
இறுதியில் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் மாயா இன்னுமொர் இளைஞனுடன் வருகின்றாள். அவனே மாயாவை மணம் பிடிக்க இருப்பவன் என்று அவளது தோழி கூறுகின்றாள். புனிதத்துக்கு அதிர்ச்சியாகவிருக்கின்றது.அவளது மனத்திரையில் மாயாவுக்கும், தம்பி என்ற வந்திருந்தவனுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய எண்ணங்கள் ஓடுகின்றன. அதே சமயம் மாயாவின் தம்பியாக முன்பு அறியப்பட்டவன் , மாயா திருமணம் செய்யப்போகின்றவனின் இளைய சகோதரன்.
புனிதம் மாயாவையும், அவளது தம்பியாக வந்தவனையும் நினைத்துப்பார்க்கிறாள். அவர்களுக்கிடையில் உணமையில் நிலவிய தொடர்புதானென்ன? தன் தம்பிக்கும், மனைவிக்குமிடையில் நிலவும் உறவு பற்றி , தம்பியாக வந்த இளைஞன் பற்றிய உண்மை தெரிந்தால் என்ன நடக்கும்? அவ்விதம் தெரியும்போது அவன் தன் தம்பியையும்,மாயாவையும் கொன்று விடுவானா? ஆனால், மாயா துணிச்சல் மிக்கவள். அவள் மீண்டுமொரு கோகிலாம்பாள் ஆகி விடுவாளோ? இவ்விதமான சிந்தனையோட்டம் புனிதத்தின் மனத்தினில் ஓடுகின்றது.
இறுதியில் கற்பனை பலூன் வெடிக்கின்றது என்னுமொரு வரி வருகின்றது. அதைத்தொடர்ந்து 'நான் கமலாவுடன் நடந்து கொண்டிருக்கின்றேன்' என்று புனிதா கூறுவதுடன் கதை முடிகின்றது. கதை முழுவதுமே புனிதாவின் தன் கூற்றாகவே நடைபோடுகின்றது.
உண்மையில் மாயா தனக்குக் கணவனாக வர இருப்பவனின் தம்பியுடனும் பாலியல்ரீதியிலான தொடர்பு வைத்திருக்கின்றாளா? என்னும் கேள்வி புனிதாவுக்கு எழுகின்றது. கதையை வாசிக்கும் வாசகர்களுக்கும் எழுகின்றது. உண்மையில் மாயா பற்றிய புனிதாவின் மனச்சித்திரம் அவளது கற்பனையா? உண்மை போல் தெரிவதெல்லாம் மாயைதானா? இவ்விதமான கேள்விகளை வாசகர்களிடம் எழுப்பித் தீர்வினை அவர்களே கண்டுகொள்ளட்டும் என்று கதாசிரியை குந்தவை விட்டு விட்டதாகவே உணர முடிகின்றது. என்னைப்பொறுத்தவரையில் மாயா பற்றிய புனிதாவின் எண்ணங்கள் அவளது உள்ளத்துக் கற்பனைச் சித்திரங்கள். உண்மைபோல் தெரியும் மாயச்சித்திரங்கள். இது நான் வந்திருக்கும் முடிவு. அதற்காக நீங்களும் இவ்விதமானதொரு முடிவுக்கு வரவேண்டுமென்னும் அவசியமில்லை.
சிறுகதையை வாசிக்க - https://noolaham.net/project/436/43524/43524.pdf
No comments:
Post a Comment