[* டிஜிட்டல்'ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையா.]
இன்று, செப்டம்பர் 11, மகாகவி பாரதியார் நினைவு தினம். கவிஞர்களில் என்னை ஈர்த்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாரதியார்.
குறுகிய அவர் வாழ்வில் அவர் சாதித்தவை பிரமிப்பினையூட்டுபவை. , தேசிய விடுதலையை, வர்ண விடுதலையை, வர்க்க விடுதலையை, மானுட விடுதலையைப் பாடிய கவிஞர் அவர். நாட்டு, உபகண்ட , சர்வதேச அரசியலை நன்கு அறிந்தவர் அவர். அதை அவரது எழுத்துகள் புலப்படுத்தும். அவை கூடவே அவரது பரந்த வாசிப்பையும், சிந்தனையின் ஆழத்தையும் வெளிப்படுத்தும்.
அவரது சொற்கள் எளிமையானவை. தெளிவானவை. அதே சமயம் ஆழமானவை. அத்துடன் தர்க்கச்சிறப்பையும், இருப்பு பற்றிய தேடலையும் கொண்டவை. அத்துடன் அவை தீர்க்க தரிசனம் மிக்கவை. தான் வாழ்ந்த காலத்தை மீறிச் சிந்தித்த , செயற்பட்ட எழுத்தாளர் அவர். அதனால்தான் அவரால் அக்காலகட்டத்தில் தான் வாழ்ந்த சூழலை மீறிப் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்க முடிந்தது. தீண்டாமைக்கெதிராகக் குரல் கொடுத்த முடிந்தது.
கவிதை, புனைகதை, மொழிபெயர்ப்பு, அரசியல் ஆய்வு, வசன கவிதை என அவரது இலக்கியப் பங்களிப்பு பரந்து பட்டது. அவரது நினைவு நாளான இன்று எனக்குப் பிடித்த அவர்தம் கவிதை வரிகளில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கின்றேன். அத்துடன் டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்பவியலாளரான எழுத்தாளர் இரமணிதரன் கந்தையா (Ramanitharan kandiah) அண்மையில் வரைந்த பாரதியாரின் ஓவியத்தையும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக்குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!'
"நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை'
'விட்டு விடுதலை யாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே'
'யான்எதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல்வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவுஇயற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழில்இங்கேஅன்புசெய்தல் கண்டீர்!'
'நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்,
இமைப்பொழுதும் சோராதிருத்தல்!'
"..நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ?
பலதோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே! இளவெயிலே! மரச்செறிவே!
நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதினால்
நானுமோர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்ற ஒரு நினைவும்
காட்சியென்ற பல நினைவும்
கோலமும் பொய்களோ?
அங்கு குணங்களும் பொய்களோ?.
சோலையிலே மரங்களெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?
இதைச் சொல்லொடு சேர்ப்பீரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம்
விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதி கண்டோம்.
காண்பதல்லால் உறுதியில்லை.
காண்பது சக்தியாம்.
இந்தக் காட்சி நித்தியமாம்..."
"காக்கை, குருவி எங்கள் ஜாதி -- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம். "
* டிஜிட்டல்'ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையா.
No comments:
Post a Comment