மலையாளத்திரைப்படங்களில் எனக்குப் பிடித்த ஒரு விடயம் - அது கலைப்படைப்பாக இருக்கட்டும் அல்லது வெகுசனப் படைப்பாக இருக்கட்டும், இயக்குநர்கள் இயல்பாக மானுடர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை உள் வாங்கிக் காட்சிகளை அமைத்திருப்பார்கள். அதற்கு நல்லதோர் உதாரணம் இந்தப்பாடல்.
மம்முட்டி, பார்வதி நடித்த 'கார்னிவல்' (1989) திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலிது. 'ஒரு நாலு நாளாய் என்னிலுள்ளே தீயாக' என்னும் இப்பாடல். இப்பாடல் எனக்குப் பிடித்ததற்கு முக்கிய காரணம்?
மம்முட்டி தன் நண்பர்கள் மூவருடன் கள்ளுக்கொட்டிலில் கள் , அநேகமாகத் தென்னங் கள் ஆகவிருக்க வேண்டும். அவரது நினைவெல்லாம் அவரது உள்ளங்க கவர்ந்தவள் பற்றிய நினைப்புகள்தாம். அவளைப்பற்றிய நினைவுகளில் , குடிக்கும் கள் ஏற்றிய வெறி மயக்கத்தில் அவர் தன் அவளைப்பற்றிய உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கின்றார். அப்போது அவருடைய, அவரது நண்பர்களுடைய உடல் அசைவுகளை அவதானியுங்கள் , நிச்சயம் பிரமித்துப் போவீர்கள். மிகவும் இயல்பாக அமைந்திருக்கும் அவ்வுடல் அசைவுகளை உள்வாங்கிய இயக்குநருக்கு ஒரு சபாஷ். இதில் மம்முட்டியின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
இவ்விதமான, மிகவும் இயல்பான மானுடரின் நடத்தையை வெளிப்படுத்தும் காட்சிகள் பலவற்றை மலையாளத் திரைப்படங்களில் காணலாம்.
இதில் வரும் பார்வதி எண்பதுகளின் இறுதியில் மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையர்களில் ஒருவர். அடுத்த வீட்டுப்பெண் போன்ற அவரது தோற்றமே அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. இவரே நடிகர் ஜெயராமின் மனைவி. ஜெயராம் இயக்குநர் மணிரத்தினத்தின் 'பொன்னியின் செல்வன்'திரைபப்டத்தில் ஆழவார்க்கடியானாக வந்து எம்மைச் சிரிக்க வைத்தவர். மலையாளத் திரையுலகில் இவர் புகழ்பெற்ற நாயக நடிகர்களில் ஒருவர்.
பாடலைக்கேட்டுக் களிக்க https://www.youtube.com/watch?v=kAgchoDbYj4&list=RDkAgchoDbYj4&start_radio=1
No comments:
Post a Comment