Wednesday, September 17, 2025

'பதிவுகளி'ல் அன்று - எழுத்தாளர் முல்லை அமுதனின் நூல் விமர்சனக் குறிப்புகள்!


[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 


1. பெப்ருவரி 2011  இதழ் 134    1. வாழ்வாங்கு வாழ்ந்தவர்!  

இளவாலை என்றதுமே கல்வியாளர்கள் நினைவுக்கு வருகிறார்கள் .. இளவாலை.அமுது, தாசிசியஸ், ஜேசுரத்தினம்(1931-2010) அவர்களோடு பலரும் சேர்வர். இனம் காணப்பட்ட கலைஞர்களுள் ஜேசுரத்தினம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இளவாலை என்றதுமே கல்வியாளர்கள் நினைவுக்கு வருகிறார்கள் .. இளவாலை.அமுது, தாசிசியஸ், ஜேசுரத்தினம்(1931-2010) அவர்களோடு பலரும் சேர்வர். இனம் காணப்பட்ட கலைஞர்களுள் ஜேசுரத்தினம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அந்தக் காலத்தில் நம்மிடையே பேசப்பட்ட ஹாஷ்ய நாடகங்கள் கலைஞர்களையும் இனம் காண வைத்தன. புளுகர் பொன்னையா, புளுகர் பொன்னம்பலம், அடங்காப்பிடாரி, வெளிக்கிடடி விசுவமடுவுக்கு, இண்டைக்குச் சமைக்காதே, சந்தியில் நில்லாதே, அண்ணை றைட் என அந்தக் காலத்து நகைச் சுவை நாடகங்களை தந்திருந்த நமது கலைஞர்கள் சில சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் சொல்லி வந்துள்ளதை மறுக்கமுடியாது. அதே போல் தான் இலங்கை வானொலியில் சுமார் ஐந்து வருடங்கள் கமத்தொழில் திணைக்களத்தாரின் அனுசரணையுடன் ஒலிபரப்பப் பட்ட முகத்தார் வீட்டில் நாடகம் மூலம் கமத்தொழில் சார்ந்த விஷயங்களை சொல்லி பாமர மக்களும் தெரிந்து கொள்ள வைத்தார். அதுவே பின்னாளில் அவருடன் ஒட்டிக்கொண்டு நமக்கு முன் முகத்தார் என்று அறியப்பட்டார். உண்மையில் சாதனையாளர் தான். தன் குரல் வளத்துடன், கூடவே திடகாத்திரமான நடையுடன் பார்ப்பவரை ஒரு பண்ணையார் அல்லது பொலிஸ்காரன் என்றே எண்ணத்தோன்றும் . அதனால் தான் மிடுக்கான அவரை 'பாசச்சுமை’ நாடகத்தில் பலரையும் 'அப்லாஷ்' வாங்க வைத்தது எனலாம். சில வருடங்களுக்கு முன் மணிமேகலை பிரசுரத்தாரின் நூல் அறிமுக விழாவின் போதும், அதற்கு முதல் நாள் 'அமரர்'டாக்டர். இந்திரகுமார் அவர்களின் இரவு விருந்துபசாரத்தின் போதும் அவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. பாரதியாரை நேரில் பார்த்தது போல் இருந்தது.அவரை அறிமுகப் படுத்திய விதமே அலாதியானது. நகைச் சுவையுடன் பழைய நாடக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாகவே அமைந்திருந்தது.

தான் பார்த்த உத்தியோகம் , நாடக அறிமுகம் எல்லாம் சொல்லி தன்னுடன் நம்மையும் ஒன்றிப் போக வைத்தது மறக்க முடியாது. வாடைக்காற்றின் மூலம் துணை நடிகருக்கான விருது பற்றி பெருமையாகச் சொன்ன போது 'கொடுத்துவைத்தவர்' என்று அனைவரும் சொல்லிக் கொண்டது ஞாபகத்தில் இருக்கிறது. அவர் நடிக்கத் தொடங்கிய காலப் பகுதி சிரமமானது தான். கிராமத்தில் எவ்வளவு படித்தவர்கள் இருந்தாலும் சமூகம் ஏற்றுக் கொள்ள பழகவில்லை. ஆனாலும் படிப்பில் அதி சிரத்தையுடன் இருந்து உத்தியோகம் பார்க்க வந்த பின்பு தான் சமுகத்தின் அங்கிகாரம் வந்திருக்க வேண்டும்.அவருக்குப் பின்னாளில் வாய்த்த நண்பர்கள் அனேகம். வரணியூரான், கே.எஸ்.பாலச்சந்திரன், சிவதாசன்(கமலாலயம்) ,வேலனையூர். வீரசிங்கம்(பிரவுண்சன் கோப்பி), ராமதாஸ், பி.ஏச்.அப்துஹமீட், பி.விக்னேஸ்வரன், மதியழகன், விமல்.சொக்கநாதன், ராஜகோபால் என தொடங்கி வண்ணை தெய்வம், இரா.குணபாலன் வரை பலரிடம் நட்பு கொள்ள வைத்துள்ளதை பார்க்க முடிந்தது. அவர் கால்த்தில் நாம் வாழ்ந்ததாக பெருமை கொள்ள வைக்கிறது.அவரின் நாடக பிரதியாக்கத்திற்கு ‘முகத்தார் வீடு’ நல்ல உதாரணம். கலைஞர்களை ஒருங்கிணைத்து நடிப்பும் சொல்லிக் கொடுத்து மேடையேற்றுவது என்றாலே எத்தனை சிரமமானது என்பதை அறிவேன்.அத்தனை சிரமங்களையும் தாங்கி இன்றும் பேரோடு வாழமுடிகிறதென்றால் கலைத் தாயின் அருட் கொடை தான். பாக்யம் செய்தவர் தான். அனுபவம் தந்த பாடங்கள் அவரை கலைஞராக மிளிர வைத்தது .அவருக்காகவே தரப்பட்ட 'கலை முரசு' 'கலைப்பணிச்செல்வர்' 'கலைவேள்' 'கலைப் பூபதி' 'ஈழவிழி' கலைமாமணி' பட்டங்கள் தாங்களாகவே பெருமையை தட்டிக் கொண்டன எனலாம். பிரான்ஸ் அவருக்கு மேலும் வரப்பிரசாதமாக அமைந்தது.ஏனெனில் அதிகமான ஈழத்துக் கலைஞர்களும் வாழுமிடமாக ஆகியது.ஈழத்து நாடக –திரைக்கலைஞர் .திரு.ஏ.இரகுநாதன், திரு.அருமைநாயகம்,'அப்புக்குட்டி' ராஜகோபால், எம்.ஏ.குலசீலநாதன், ,தயாநிதி,இரா.குணபாலன்,வண்ணைதெய்வம், இன்னும் பலர். தணியாத தாகம் எப்படி எங்களை குடும்பமாக உட்காரவைத்து அழவைத்ததோ,ஒரு வீடு கோவிலாகிறது எப்படி நமக்கு குணசித்திரநடிகர்களை(பி.ஏச்.அப்துல்ஹமீட்,ஆமீனா பேகம் பாறூக்)அறிமுகப் படுத்தியதோ முகத்தார்வீடும் எங்களை வானொலி முன்னால் உட்கார வைத்ததை இன்றும் நினைக்கத் தோன்றுகிறது.புலம் பெயர் உலகில் எத்தனைதான் வானொலிகள் வந்தாலும் அந்த நாளின் இலங்கை வானொலி கிடைத்தது வரப்பிரசாதம் தான்.

கலைஞர்களின் ஆத்மார்த்த அர்ப்பணிப்பு இருந்தது. அப்படித்தான் ஜேசுரத்தினம் வளர்க்கப்பட்டார் .கடமை தவறாதவர். சக கலைஞர்களை நேசித்தவர். ஒழுக்கம் பேணியவர் என நண்பர்கள் சொல்வார்கள். எனக்குள்ள வருத்தம் இதுதான். இத்தனை அனுபவம் கொண்ட கலைஞன் பல நூல்களை தந்திருக்க வேண்டும். ஈழத்து நாடக வரலாற்றுப் பதிவாக இருந்திருக்கும். ஒரு நூலுடன் (முகத்தார் வீட்டுப் பொங்கல்-நாடகம்-1999) நின்றது ஏமாற்றமே! நமது கலைஞர்கள் அவரின் தேடல்களை தொகுத்து தருவரெனின் அடுத்த தலைமுறை எழுதப்போகும் ஈழத்து சரித்திரத்திற்கு அமைவாக இருக்கும்.

இலங்கை முதல் உலகின் எல்லாப் பாகங்களிலும் வாழும் ஈழத்துக் கலைஞர்களுக்குத் தெரியாதவராக முகத்தார் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏமாளிகள், கோமாளிகள் என திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வாடைக்காற்று படமே பலருக்கு வியப்பைத் தந்தும், பாராட்டையும் தந்த ஈழத்து திரைப்படமாகும். பத்திரிகைகளின் ஏகோபித்த பாராட்டையும் பெற்ற திரைப்படமாகும்.அதிக புள்ளிகளை(64) பெற்ற கதாபாத்திரம் பொன்னுக்கிழவர் ஆகும். திரை அனுபவம் வித்தியாசமானது தான்.அதை திறம் படச் செய்தவர்.

மேடையில் கூடப் பிரகாசித்தார். நாடகம் மீதான தணியாத இவரின் தாகம் அளப்பரியது.பலரையும் ஒருங்கிணைத்து இவரும் நடித்த 'பாசச் சுமை(பிலஹரியின் கதை) அப்போதே இலங்கையின் பலபாகங்களிலும் மேடையேறியதுடன்,யாழ்ப்பாணத்துத் தமிழை ஹாஸ்யத்துக்கு மாத்திரமின்றி சிறந்த குணசித்திர நடிப்புக்கும் பயன்படுத்தியது பாராட்டத்தக்கது.அங்கும் மிளிர்ந்தார். தேசத்தின் மீதும் தேசியத்தின் மீதும் பற்றுக்கொண்டிருந்தார். அவரின் அந்தப் பற்றுத்தான் கார்த்திகை 27ஐ காலம் தேர்ந்தெடுத்தது. ஆம்.! 2010 கார்த்திகை 27உம் தன் அசைவை நிறுத்திக்கொண்டது. இவரின் குடும்பத்தாருடன் நாமும் அஞ்சலிப்போம்!!.

2 .  அக்டோபர் 2009 இதழ் 118   நூல் அறிமுகம்: கருணாகரனின் 'பலிஆடு'  

கவிஞர்.கருணாகரன் நமக்குத் தந்திருக்கும் மூன்றாவத் கவிதை நூல் 'பலிஆடு' ஆகும்.

'..உனனை என்னுள் திணிப்பதையும்
என்னை உன்மீது ஏற்றுவதையும் வெறுக்கிறேன்
உன் மகிழ்ச்சியை நீயே பாடுவதிலும்
என் பாடலை நானே இசைப்பதிலும்
ஆனந்தமுண்டல்லவா?...'

கவிஞர் முதல் நூலின் முதல் கவிதையுடன் தன்னை அறிமுகம் செய்தாலும் கவிஞருக்கு அறிமுகம் தேவையற்றது. ஏற்கனவே 'வெளிச்சம்' சஞ்சிகை மூலமும், தமிழீழ தேசிய தொலைக்காட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தவர். உலக இலக்கியங்களில் அதி தீவிரம் காட்டியவர். நல்ல இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தவர்.எனக்கு சுந்தரராமசாமியின் எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்தவர். இவரின் கவிதைகள் வாழ்வின் அணைத்து பரிமாணங்களையும் உள்வாங்கிய படி எழுதப்பட்டிருக்கிறது. காலடிக்குள் நழுவிப்போகும் வாழ்வின் வசந்தங்கள்..கைகளுக்குள் அகப்படாமல் விலகிப்போகும் சுதந்திரம்..வண்ணாத்திப்பூச்சியை தேடி ஓடும் குழந்தையை பதுங்கு குழிக்குள் அடைக்கின்ற சோகம்,வீரியன் பாம்பு நகரும் போதும்...குண்டுகள் வீழ்கின்ற வளவுக்குள் இருளில் அருகாய் கேட்கின்ற துப்பாக்கி வேட்டுக்கள்...எது வாழ்க்கை?எங்கே வாழ்வது?பசிக்கின்ற வயிற்றுக்கு உணவு எங்கே?எல்லாவற்றுக்கும் மேலான சுதந்திரம் பற்றிய சிந்தனை அறவே அற்று வாழ்வா சாவா என்கிற ஓட்டத்தில் நின்று நிதானித்து கவிதை பாடும் நேரப் பொழுதை ஒதுக்க முடியுமா? அதற்குள்ளும் தன்னை பதிய வைக்கின்ற முயற்சிக்கிற ஒரு கவிஞனின் முயற்சியைப் பாராட்டத் தான் வேண்ட்டும்.

அறுபதிற்குப் பிறகு முகிழ்க்கின்ற நமது நவீன கவிதைப் படைப்புக்கள் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையிலேயே சென்று கொண்டிருப்பதையே உணர முடிகிறது.மகாகவி முதல் இன்றைய த.அகிலன் வரை விதைக்கப்பட்டிருக்கிறது எனலாம். 'உண்மையைக் கண்டறியும் போதும் அதனோடு இணைந்திருக்கும் போதும் தனிமையும் துயரமும் இயல்பாக வந்து சேர்கின்றன.இந்த தனிமையும் துயரமுமே என் வாழ்வின் பெரும் பகுதியாகவும் இருக்கின்றது.ஆனாலும் இது பேராறுதலைத் தருகின்றது....'என கவிஞர் சுதாகரிப்பதும் தெரிகிறது.

'என்னுடைய புன்னகையைத் தந்துவிட்டு
எல்லோருடைய கண்ணீரையும்
எடுத்துச் செல்கிறேன்.
மாபெரும் சவப்பெட்டியில்
நிரம்பியிருக்கும் கண்ணீரை போக்கி விடுகிறேன்.
கள்ளிச்செடிகள் இனியில்லை.
காற்றுக்கு வேர்களில்லை.
ஒளிக்குச் சுவடுகளிலை.
எனது புன்னகை
நிலவினொளியாகட்டும்.'

இவரின் முதல் இரண்டு (ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்(1999),ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்.(2003) நூல்களினூடாக தன்னை ஒருமுகமாக ஸ்திரப்படுத்தியபடி 'பலிஆடு' எனும் மூன்றாவது கவிதை நூலுடன் னம்மைச் சந்திக்க வந்துள்ளார்.

'நிலவெறிக்குது வெறுங் காலத்தில்
வீடுகள்
முற்றங்கள்
தோட்டவெளி
தெரு
எல்லாமே சபிக்கப்பட்டு உறைந்தன போல
அமுங்கிக் கிடக்கின்றன..'
கவிஞனின் கவலை
நமக்கும் வலிக்கவே செய்கிறது..
'நாங்கள் எதற்கு
சாட்சிகளாக்கப்
பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக
சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கேதும்
புரியவில்லை.
பகலையும் இரவையும்
கண்டு
அஞ்சும் என்
கண்களை
என்ன செய்வேன்..'

போரினுள் அன்பையும் கருணையையும் எதிர்பார்க்கும் உண்மைக் கவிஞனின் வார்த்தை வடிவங்கள் அவைகள். இன்பங்கள் அணைத்தும் துடைத்தெறியப்பட்டுள்ள சூழலில் துன்பத்தை மட்டுமே காவியபடி பதுங்குகுழி,காடுகள்,அகதிமுகாம் என வாழ்விழந்து பலிக்கடாவாக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதகுலத்தின் விடுதலை எப்போது என்கிற ஏக்கம்...

'பூக்கள் இனி எப்படியிருக்கும்
மரங்கள் மிஞ்சியிருக்குமா
பறவைகளின் சிறகுகளில்
சாவு வந்து குந்திக் கொண்டிருக்கும்
காலம் இதுவல்லவா...'
'நாடு கடக்க முடியவில்லை
சுற்றி வரக் கடல்
சிறைப் பிடிக்கப்பட்ட தீவில்
அலைகளின் நடுவே
துறைமுகத்தில்
நீண்டிருக்கும் பீரங்கிக்கு
படகுகள் இலக்கு.
மிஞ்சிய பாதைகளில்
காவலர் வேடத்தில் கொலையாளிகள்..
குற்றமும் தண்டனையும் விதிக்கப்பட்ட
கைதியானேன்...'

ஒவ்வோரு முறையும் தப்பி ஓடுதல் ஆபத்தானது.சுடப்படுவர்.கடலுக்குள் மூழ்கடிக்கப் படுவர்.கைதியாக்கப்படுவர்.

'எனது மொழி என்னைக் கொல்கிறது
மொழியொரு தூக்கு மரம்
என்றறிந்த போது
எனது தண்டனையும் ஆரம்பமாயிற்று
எனது குரல்
என்னை அந்தர வெளியில் நிறுத்துகிறது
விரோதியாக்கி...'

நமது சாவு நம்மை நோக்கி வருகிறது அல்லது நாமே அதை நோக்கி நகர்கிறோம்.முப்பது வெள்ளிக்காசுக்காய் யேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஒருபுறம்...உலக வல்லாதிக்கப் போட்டிகளில் அழிகிறது எம் பூமி..இரத்தவாடை வீசுகின்ற நிலத்தில் நிமிடத்திற்கொரு பிணம் வீழ்கிற கொடுமைக்கு விதியா காரணம்?

எமக்கான நிலத்தில்,எமக்கான கடலில் வாழ்வுக்கான தேடலை சுதந்திரமாக தேட முடியாத அவலம்....கொடுமையிலும் கொடுமை! முகம் தெரியாத துப்பாக்கிகளின் விசையை அழுத்தும் வேகத்தில் மனிதம்...

'யாருடயதோ சாவுச் செய்தியை
அல்லது கடத்தப்பட்டதான
தகவலைக் கொன்டுபோகக்
காத்திருந்த தெரு...'
....'சொற்களை முகர்ந்து பார்த்த நாய்கள்
விலகிச் சென்றன அப்பால்
கண்ணொழுக..
பாம்புகள் சொற்களினூடே
மிக லாவகமாய் நெளிந்து சென்றன
நடனமொன்றின் லாவகத்தோடு...'

சொற்கள் சுதந்திரமாய் விழுந்திருக்கின்றன. அணைத்து விஞ்ஞான பரீட்சாத்தங்களும் பரீட்சித்து பார்க்கப்படுகின்ற பூமி எங்களது. பலஸ்தீனம் பற்றி பேசத் தெரிந்த பலருக்கு நமது பலம், பலவீனம், கொடூரம், சோகம் தெரியாதது மாதிரி இருப்பது தான் வலிக்கிறது. மனு நீதி சோழனின் வருகை எதுவும் நடந்துவிடவில்லை.

...'வானத்தை நான் பார்க்கவில்லை
நட்சத்திரங்களையும் காணவில்லை
பதுங்கு குழியின்
இருளுக்குள் வீழ்ந்த வாழ்வின்
சருகு நான்....
..... நிலம் அதிர்கிறது.
குருதியின் மணத்தையும்
மரணத்தின் அருகாமையையும் உணர்கிறேன்
கந்தகநெடில்
கபாளத்தைப் பிளக்கிறது
வீரர்கள் முழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்
அழியும் வாழ்வின் பிரகடனத்தை
ஒவ்வொரு துப்பாக்கியிலும்
ஒவ்வொரு பீரங்கியிலும்...'

உண்மையாக,உண்மைக்காக,சொல்லவந்த சேதியை சரியாகச் சொன்ன கவிஞனின் வரலாற்றுப் பதிவு இந் நூலாகும். உலக ஒழுங்கின் மாற்றத்தால் ஏற்பட்ட அழிவுகளை ஓரளவுக்கேனும் தன் மொழியில் சொல்லியுள்ள கருனாகரன் 'பலிஆடு' போன்று தொடர்ச்சியாக நூல்களைத் தருவதனால் உலகம் தன்மௌனம் கலைக்கலாம். அன்று தொட்டு இன்று வரை வீச்சுள்ள படைப்புகளை போருக்குள் வாழ்ந்த எழுத்தாளர்களே தந்துள்ளார்கள்.புதுவை. இரத்தினதுரை, தீபச்செல்வன்,சித்தாந்தன், வீரா,அமரதாஸ், த.அகிலன் என கருனாகரனுடன் வளர்கிறது. 113 பக்கங்களில் அழகிய வடலி வெளியீடாக (2009) நம் கரம் கிட்டியுள்ள நூலுக்குச் சொந்தக்காரர்களுக்கு (படைப்பு / பதிப்பு) வாழ்த்துச் சொல்வோம்.

3. அக்டோபர் 2009 இதழ் 118  த.அகிலனின்.. 'மரணத்தின் வாசனை.' (போர் தின்ற சனங்களின் கதை)  

ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான ஆர்னல்ட் சதாஸிவம் பிள்ளை எழுதிய சிறுகதையே முதல் கதையென அறிஞர்கள் சுட்டுவர். நவீன சிறுகதை 1930ற்கு பின்பே ஆரம்பமாகிறது எனவும் கொள்ளப்படுகிறது.1983ற்குப் பின்னரே அதிக படைப்பாளர்களின் வருகை நிகழ்ந்துள்ளது.இனக் கலவரம், இடப்பெயர்வு, பொருளாதார இழப்பு / தடை,  விமானத் தாக்குதல்கள், போக்குவரத்து அசொளகரியங்கள், உள்ளக / வெளியக புலப்பெயர்வுகள் என்பன படைப்பாளர்களையும் உருவாக்கியிருக்கலாம். வளர்ந்து வந்த இனச் சிக்கல் பெரும் போராக வெடித்ததில் போருக்குள் வாழ்ந்த / வாழ்கின்ற / வாழ்ந்து மடிந்த மக்களிடமிருந்து எழுதிய படைப்பாளர்கள் நிஜத்தை எழுதினார்கள்/எழுத முற்பட்டார்கள். போருக்குள் நின்று புதுவை இரத்தினதுரை , கருனாகரன் ,நிலாந்தன் , அமரதாஸ், வீரா , திருநாவுக்கரசு , சத்தியமூர்த்தி ,புதுவைஅன்பன் ,முல்லைகோணேஸ் , முல்லைகமல் , விவேக் , மலரன்னை ,மேஜர்.பாரதி , கப்டன்.வானதி என விரிந்து இன்றைய த.அகிலன் வரை தொடர்கிறது.

'தனிமையின் நிழற்குடை'யைத் தொடர்ந்து நமக்கு அகிலன் தந்திருக்கும் நூலே 'மரணத்தின் வாசனை'.போர் தின்ற சனங்களின் கதை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதனை 'வடலி.கொம்' பதிப்பகம் வெளியிட்டுள்ளனர்.

1.ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப் போனார்..
2.ஓர் ஊரிலோர் கிழவி.
3.மந்திரக்காரன்டி அம்மான்டி.
4.குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்.
5.ஒருத்தீ.
6.சித்தி.
7.நீ போய்விட்ட பிறகு.
8.சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்.
9.தோற்றமயக்கங்களோ.
10.கரைகளிற்க்கிடையே
11.செய்தியாக துயரமாக அரசியலாக...
12.நரைத்த கண்ணீர்.  

என பன்னிரண்டு கதைகளைக் கொண்ட தொகுதி சிறப்பான தொகுதியாக கொள்ளலாம்.அழகிய பதிப்பு. வெளியீட்டுத் துறையில் ஓர் மைல் கல்.

சிறுகதைக்கான தொடக்கம் விரிவு உச்சம் முடிவு என படித்த எமக்கு விதியாசமான கதை நகர்வினைக் கொண்டது. சிறந்த ஆவணப்பதிவு. முழுமையான ஒரு இனத்தின் வரலாற்றுப்பதிவின் ஒரு சிரு துளி எனினும் நல்ல பதிவு. 83 தொடக்கம் அல்லது இந்திய இராணுவத்தின் கொடூரங்கள் / மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையான கொடுமைகள், இன்று வரை தொடர்கின்ற இன அழிப்பு,அவலம் என்பவற்றின் ஒரு புள்ளி. அவலத்துள் வாழ்ந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். பதுங்கு குழி வாழ்வு, காடுகளுக்கூடான பயணம்... ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்கு களத்துக்குள் அழைத்து செல்லுகின்ற வல்லமை அகிலனின் கதைகளுக்கு கிடைத்திருக்கின்றது.  பாம்பு கடித்து இறக்கின்ற தந்தை,கடலில் மூழ்கிப் போகும் இளைஞன்,தான் வாழ்ந்த மண்ணில் மரணிக்கிற கிழவி,தான் நேசித்த தோழி பற்றிய நினைவின் வலி .... பாத்திர வார்ப்பு அபாரம்.அகிலனின் சொந்த கதையாகவும் இருக்கலாம்.ஆனால் நமக்கு நடந்தது போல உணர முடிகிறது. அனுபவம் தனக்கு நடந்தது அல்லது பிறருக்கு நடந்தது.எனினும் நமக்குள் நடந்த நமக்கான சோகத்தை சொல்லிச் செல்வதால் நெருக்கமாகின்றது.சொல்லடல் இயல்பாகவெ வந்து வீழ்கிறது.எங்கள் மொழியில் எழுத முடிகின்றதான இன்றைய முயற்சி வெற்றி பெற்றே வருகிறது எனலாம்.சில சொற்களுக்கான விளக்கங்கள் தரப்பட்டுள்ளனவெனினும் நம் மொழியில் பிறழ்ச்சி ஏற்படாதவாறு எழுதியுள்ளமை வரவேற்கக் கூடியதே.போரின் கொடுமைகளை அவர்களின் மொழியில் பேசவேண்டும்.இங்கு அது சாத்தியமானது அகிலனுக்கு கிடைத்த வெற்றி. கதியால் , குத்தியாக , திரிக்கிஸ் , குதியன்குத்தும் , அந்திரட்டி, உறுக்கி, கொம்புபணீஸ் , புழூகம் ,தத்துவெட்டி, தோறை , எணேய் , நூக்கோணும், அம்மாளாச்சி , ரைக்ரர், விசர் , மொக்கு , சாறம் , சாமத்தியப்பட்டிட்டாள் ... இவைகள் சில விளக்கங்களுக்கான சொற்கள்..

'நரைத்த கண்ணீர்' எனும் கதையில் வயதான தம்பதியரைப் பார்க்கப் போகும் இளைஞனின் நிலை பற்றிச் சொல்கிறது.தங்கள் மகன் பற்றிக் கேட்டதற்கு விசாரித்துச் சொல்ல முற்பட்டும் அந்த தம்பதியர்க்கு அவர்கள் மகன் வீரமரணம் அடைந்தது பற்றிச் சொல்லி அவர்களை சோகத்தில் ஆழ்த்த விரும்பாது தவிர்த்த போதும் மணைவியின் சந்தோசமே பெரிதென அந்த பெரியவர் மறைத்தது தெரிய வர அவனுடன் சேர்ந்து எமக்கும் வலிக்கிறது. தப்பிச் செல்ல இன்றோ நாளையோ என்றிருக்கையில் திடீர் பயணிக்க நேர்கையில் மூட்டை முடிச்சுகளுடன் பயத்துடன்... தோணிக்காரனுடன் புறப்படுகின்ற அவர்களுடன் நாமும் பயணிக்கிற அனுபவம் (கிளாலி,கொம்படி,ஊரியான் பாதைப்பயணங்கள்/96ன் பாரிய இடப்பெயர்வுகள்) தோணிக்காரன் இடை நடுவில் ஒரு மணற் திட்டியொன்றில் இறக்கிவிட்டுச் சென்றுவிட தவித்த தன் குடும்பத்தை தானே காப்பாற்ற எண்ணி படகுக்காரனுடன் வருவதாகக்க் சொல்லி கடலுள் குதிக்க மூழ்கிப் போகிறான்.பத்திரிகைச் செய்தியில் படித்திருந்தாலும் உண்மைக்கதையின் பதிவாகியிருக்கிறது 'கரைகளிற்கிடையே' கதையில்..  மக்களுடன் இடம்பெயர்ந்து பின் தன் காணி/மிளகாய்க் கண்டுகளை பார்க்கச் சென்ற குமார் அண்ணையின் அவலம்/சோகம் 'குமார் அணாவும் மிளகாய்ச் செடிகளும்'கதை சொல்கிறது.

இப்படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கதை சொல்லி அசத்துகிறது.  ஏகலைவர்களின்றி நகர்கின்ற போருக்குள் வாழ்ந்த மக்களிடத்திலிருந்து புறப்பட்ட படைப்பாளர்கள் சரியான தளத்தை நோக்கிப் பயணிப்பது 'மரணத்தின் வாசனை' சொல்லி நிற்கிறது. ஜனவரியிலும்(2009)மேயிலும் இரண்டு பதிப்புக்களை கண்டுள்ள இந் நூலின் அட்டைப்படம் மருதுவின் ஓவியத்தால் மிகச் சிறப்பாக இருக்கிறது. த.அகிலனிடமிருந்து நிறைய ஆவணப்பதிவுகளை படைப்புலகம் வாழ்த்துக்களுடன் எதிர் பார்த்து நிற்கிறது.

mullaiamuthan_03@hotmail.co.uk

4. ஜூலை 2009 இதழ் 115  - ‘இரண்டு கார்த்திகைப்பறவைகள்’

எஸ். புஸ்பானந்தன்ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பைச் செய்த கிழக்கிலங்கை மண்டூர் என்னும் கிராமத்தில் இருந்து எஸ். புஸ்பானந்தன் அவர்களிடம் இருந்து கவிதைநூலாக எமக்குக் கிடைத்துள்ளது. அரசாங்க நிலஅளவையாளராக பணிபுரியும் நிலஅளவை விஞ்ஞானமானி பட்டதாரியான இவர் எண்பதுகளிலேயே தன் இலக்கியம் படைத்து வரும் இவரது கவிதைகளின் தொகுப்பே இந்நூலாகும். ஏற்கெனவே கவிஞர் மண்டூர் மு. சோமசுந்தரம்பிள்ளை, பொன். சிவானந்தன், மண்டூர் அசோகா, மாணிக்கசபாபதி, மண்டூர் தேசிகன், சுதந்திரோதையன், மண்டூரான் ராசதுரை வரிசையில் புஸ்பானந்தனும் நினைவுக்கு வருகிறார். இவரின் கவிதைகளை சுடர். தாரகை, மேகம், வீரகேசரி, தினக்குரல் என தொடர்ந்து அச்சு ஊடகங்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பே இந்நூலாகும்.

காத்திரமான கவிதைகளை சுடர், தாரகை, மேகம் ஆகியன தங்கள் தேர்வில் இணைத்துக்கொண்டிந்ததனால் இவரின் கவிதைகளும் சிறப்பிடம் பெற்றிருதமையை மறுக்கமுடியாது. 67 பக்கங்களில் மண்டூர் கலைஇலக்கியஅவை 2007 ல் வெளியிட்டுள்ள நூலில் நல்ல கவிதைகளில் எம்மை லயிக்க வைத்துள்ளது.

நீயும் நானும்
குண்டுகள் பாய்ந்து
ஒரு நாள் சாகலாம்!
அதற்காய் சாவை நினைத்தே
சாவது சரியா!

இல்லை
நீ உடைவதில
எனக்கு
உடன்பாடில்லை!

பிறிதொரு கவிதையில்-

வாவியின் மடியில் வலை வீசி
வாழ்கைக குளிர் காயும்
வாயில்லாப் பூச்சிகளின் தலைதானா
வழமை போல
உனக்குப் பயங்கரமாய்த் தெரிந்தது.

என் இதய ஊரை
தீ மூட்டிய பறவையே …
சேறெடுத்து வரப்பப்பி
தேசப்பசியின் குரல்வளையை நெரிக்கும்
கலப்பை மனிதரின்
இரைப்பையில் அல்லவா
நீ
நெருப்பு முட்டை இட்டாய்…
இது – 1985 கார்த்திகையில்

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய கலாநிதி. செ. யோகராசா அவர்களும் இவரின் கவிதைகளை உள்வாங்கி சிறப்பாகக் கூறுகிறார். நூலின் கவிதைகளின் வார்த்தைகள் அழகாக காலச்சூழலுக்கேற்ற பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

அராஜக்க காற்று வீசும்
வாழ்க்கை வெளி….
பாதுகாக்க வேண்டிய பலவற்றை
பறக்கவிட்ட படிதான்
எத்தனை அஃறிணை மனிதர்கள்!
….
இரவு வரும்
மனித மனசுகளை
அச்ச இருட்டுக்கு
இட்டுச் செல்லும்!
அராஜக முற்றவெளிக்கு
அழைத்துச் செல்லும்

கறுத்த யூலை
நெருப்புப் போன்ற
கவலைத் தீயில் வாழ்க்கை வேக…
இன்னும் மேலே செல்ல முடியா
இறுக்கக் கருமை நிகழ்வுகளுடனே
இரவு வரும்!
இரும்புப் புழுக்கை பீச்சும் இயந்திரம்
இதயத்துடிப்பை
கூட்டும்… நிறுத்தும்.

இன்றைய யதார்த்தத்தை ஆங்காங்கே விதைத்துச் செல்கிறார். அவருக்குள்ளேயான பயம் கவிதைகளில் தெரிகிறது. அந்தப்பயமே ஒரு தீர்வைச்சொல்ல மறுக்கிறது. கள யதார்த்தம் வார்த்தைகளில் பூடகமாக நமக்குப் புரியவைக்கிறது. சொல்லாத பல செய்திகளை சொல்லி நிற்கிற கவிதைகள் நமக்குள்ளும் வலியைத் தருகிறது. இன்றைய யதார்த்தத்தை ஆங்காங்கே விதைத்துச் செல்கிறார். அவருக்குள்ளேயான பயம் கவிதைகளில் தெரிகிறது. அந்தப்பயமே ஒரு தீர்வைச்சொல்ல மறுக்கிறது. கள யதார்த்தம் வார்த்தைகளில் பூடகமாக நமக்குப் புரியவைக்கிறது. சொல்லாத பல செய்திகளை சொல்லி நிற்கிற கவிதைகள் நமக்குள்ளும் வலியைத் தருகிறது. இன்னும் சிறப்பாக சொல்ல நினைத்தும் சொல்லப்படவில்லையே என்கிற ஆதங்கமும் உண்டு. பாரதியின் கவிதைத் துணிச்சல் நம்மில் பலருக்கு இருந்தாலும் ஒரு சிலராலேயே அத்தகைய வீச்சை தந்திருக்கிறது உண்மையெனினும் புஸ்பானந்தன் போன்றவர்கள் இன்னும் துணிச்சலாக எழுதி இலக்கிய வீச்சை நமக்குத் தந்து திசைகள் காட்ட வேண்டும்.

5. ஆகஸ்ட் 2008 இதழ் 104  ‘மண்ணில் துலாவும் மனது’ 

‘மண்ணில் துலாவும் மனது’ வஸீம் அக்ரம்அநுராதபுர மண்ணில் இருந்து இன்னொரு தமிழ்ப்பூ விரிந்திருக்கிறது. தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவனான வஸீம் அக்ரம் இருபது வயதில் இப்படி முதிர்ச்சியா? என்னுள் வியப்பு! எனினும் இன்றைய யுகத்தில் ஞானசம்பந்தர்களே அதிகம். போர்ச்சூழல், இராணுவ அடக்குமுறை, வாழ்வுக்கான போராட்டம் …. இப்படித் தொடர்கிறது. நெருக்கடிகளுக்குள் வாழும் ஒவ்வொரு மனிதர்களும் ஞானசம்பந்தர்கள் தான். மொழி முரட்டுத்தனமாக வாழவே செய்யும்.  ‘படிகள்’ இதழாசிரியர் என்கிற போது இரட்டிப்பு மகிழ்வு தருகிறது. இன்றைய புதிய கிராமத்து தமிழ் மணங்கள் வசீம் அக்ரம் போன்ற கவிஞர்களால் தான் உணரப்படுகிறது. அன்புஜவகர்ஷா, அநு. வை. நாகராஜன், தம்பு சிவா, மு.கனகராஜன், பேனா. மனோகரன் எனப்பலர் இலக்கியம் வளர்த்த ஊர். மல்லிகை கூட ‘அநுராதபுரம் சிறப்பிதழை’ வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொண்டது.

ஒரு கிராமத்தின் அடையாளம் அந்தக்கவிஞனே. பண்புகளை நேர்த்திப்படுத்துபவனும் அவனே. ஒரு எழுத்தை லாவகப்படுத்தும் முறைமை கவிஞனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். வார்த்தைகள் வந்து விழும் போது சொற்களாகி எம்மைக் கூட நெறிப்படுத்த, நெகிழவைக்கக் கூடியது.

உண்மையில் ஒரு காலத்தின் பதிவு கவிஞன் தான். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கம் தன் பணியைச் செவ்வனே செய்துள்ளது. எமது கிழக்கிலங்கைக் கவிஞன் பஸீல் காரியப்பரின் ‘ஆத்ம அலைகள்’ நூலைவெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வசீம் அக்கிரமின் கனவுகள் அவர் கவிதைகளில் அதிகம் தெரிகிறது. அதிகமாய் வாசிக்கிறார் என்பதும் தமிழை அதிகமாகவே நேசிக்கிறார் என்பதும் மொழிகளின் சொல்லாடலில் தெரிகிறது.

நாம் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தும் திரும்பவும் ஏமாற்றப்படவே செய்கிறோம். ஒரு வகையில் கையாலாகாத்தனம் போலும். இப்படித்தான் வாழவேண்டும் என்று சமூகம் கற்றுத்தந்திருக்கிறபாடம். சகமனிதனுக்கு, துப்பாக்கிகளுக்கு, அரச இயந்திரங்களுக்கு அல்லது அரசின் ஏவல்களுக்கு அடங்கிப்போகிற ஒரு சமூக்க கூட்டம். மாற்றம் எங்கும் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்று தெரிந்தும் வாழப்பழகிக் கொண்ட மௌனங்கள்.

தன் கண் முன்னாலேயே மகள் வல்லுறவுக்குட்படுத்துகையில், மணைவியின் முன் கணவன் வெட்டிக்கொல்லப்படுகையில், வீடு சூறையாடப்படுகையில்- மதங்களின் பெயரால், இனங்களின் பெயரால் இழந்து போயினும் வாழ்கிறோமே. எது கொடுமை?

கவிஞன் அமைதியானவன். அவனுள்ளும் எரிமலை. ஆனாலும் தன்னைப்பண்படுத்திக்கொள்கிற பக்குவம். சந்திரனைத் தொட்ட நாட்டில் கூட மாறாத சோகம் தான் மக்கள் பட்டிருக்கிறார்கள். சொந்த மண்ணின் மைந்தர்களே ஆக்கிரமிக்கின்ற அவலம்.

யார் கற்றுத்தந்தார்கள்? யார் அனுமதித்தார்கள்? ஈராக்முதல் நமது மண்வரை தொடர்கிறது. கவிஞரின் வரிகள் பலஇடங்களில் சோகம் சொல்கிறது.

சில கவிதைகள் மல்லிகை சஞ்சிகையில் வெளிவந்துள்ளது எனில் அங்கு கவிதை செப்பனிடப்படுகிறது என்றே அர்த்தம்.

அட்டைப்படம், அச்சிடல், எழுத்துப்பிழையின்மை என அதிக கவனம் எடுத்து இந்த நூல் வெளிவந்துள்ளது.

‘மாமிசப்பாடலுக்கான
குருதிப்புனைவுகளில்
கல்லறை தூரத்தைக்
கணக்கிட்க் கொண்டு
உயிரின் இருத்தல் தொடர்கிறது’

‘எங்கள் தேசம் 2006’ என்னும் கவிதையில் இப்படிச் சொல்லும் இவர் பிறிதொரு கவிதையில்

‘ அமாவாசை அடகு வைத்துக்கொண்டிருந்த
இரவில்
என் கடைசி துளி உயிரின் கதறலை
கடலலைகள் காற்றின் துனைகொண்டு
உன் முகத்தில் துப்பிவிடும்’

என எழுதுகிறார். இன்னொரு கவிதையில்

‘ மீண்டும் நான் என்
இருட்டறை நோக்கி
உட்காயங்களுடன்
உருகி உறைகிறேன்’

ஒவ்வொரு கவிதைக்குமான தலைப்பே கவிதைகள் தான்.

மண்ணில் துலாவும் மனது.
மரணவெளி விவரணைகள்.
வாழ்வு வரைந்த விதி.
மரணப்பொழுது.
காதல் அல்லது கவிதை சொல்லும் காலம்.
யதார்த்தின் தோல்வி குறித்து….
ஆயுதத்தின் ஓலம்.

இங்கு இன்னொரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. புதிய வீச்சுடன் ஒரு இனத்தின் பரிணாம வளர்ச்சியின் எழுச்சியுடன் எழுத்துக்கள் அச்சில் வருகின்றன. மஜீத், ஆத்மா, பௌ~ர், சோலைக்கிளி, பொத்துவில் ~hஜகான், சுல்பிகா, நாச்சியாதீவு பர்வீன், பஹிமா ஜெகான் இவர்களுடன் வசீம் அக்ரம்.

பலவகையில் காயப்பட்ட நகரம் அநுராதபுரம் எனினும் அங்கும் தமிழ் வளர்கிறதே எனும் போது அதிக மகிழ்ச்சி தருகிறது. அநுராதபுரம் சார்ந்த குக்கிராமங்களில் இருந்தும் தமிழ் தன் அடையாளத்தைக் காட்டி நிற்கிறது. பதிப்புத்துறையிலும் முன்னணியில் நிற்கும் நம்மவர்கள் எதிர்காலத்தில் நல்ல படைப்புகளை வசீம் அக்ரம் போன்றோர்கள் ஊடாக எதிர்பார்க்கிறது.

நூலைப் பெற……
வசீம் அக்ரம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
ஒலுவில் 32360
இலங்கை.

No comments:

காலத்தால் அழியாத கானம்: 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!"

    'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Googel Nano Banana) உதவி; VNG   பாடகி வாணி ஜெயராமுக்குச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின்...

பிரபலமான பதிவுகள்