Sunday, September 14, 2025

'பதிவு'களில் அன்று - எழுத்தாளர் திலகபாமாவின் (சிவகாசி) நிகழ்வுக் குறிப்புகள்!

[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முர்சு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]

இலக்கியம்! பதிவுகள் செப்டம்பர் 2004 இதழ் 57 

செப்டம்பர் மாத சந்திப்பு!  நவீன இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள்!  சிறப்புரை: கவிஞர் பிரம்மராஜன்! பாரதி இலக்கியச் சங்கம் சிவகாசி 

5.09.04 அன்று காலை 10.30 மணிக்கு  நிகழ்ச்சி ஆரம்பமானது. திலகபாமாவின் “நவீன இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள்  பற்றிய”   ஆரம்ப உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அவரது உரையில் “வாழ்வோடுதான் என் எழுத்து என வாழ்ந்து கொண்டிருந்தவள் நான். முதன் முறையாக2000த்தில்  தான் எழுத்துலகை நின்று கவனிக்கத் துவங்குகின்றேன். இனிமேலும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது  என்கின்ற சூழலில் தான்   எழுத்து பற்றிய என்  விமரிசனங்களை வெளியிடத் துவங்குகின்றேன். இந்த 4 வருட அவதானிப்பு  நிறைய எனக்குள் கேள்விகள்: எழுப்பியிருக்கின்றது.. மனிதத்துள் நுழைய முடியாது தவிப்பவர்கள்,சமுகப் பொறுப்புணர்வு அற்றிருப்பவர்கள் எல்லாம்  இலக்கியம் செய்ய வந்திருப்பதும், செய்து கொண்டிருப்பதும் தாங்கள் செய்து கொண்டிருந்தவற்றை பலரும் பின் பற்றும் படி செய்ய தொடர் பழக்க வழக்கமாக்கி அதை நிலை நிறுத்துவதும் தொடர்ந்து நடந்த படி இருப்பது இலக்கியத்துள் குறிப்பாக கவிதைகளில் ஒரு ஆரோக்கியமற்ற போக்கை உருவாக்கி வைத்திருக்கின்றது. வாழ்வியலில்   இருளும் ஒலியும் இரண்டரக் கலந்திருப்பினும் இருளை வெல்வதற்கான போராட்டமே மனிதனது அப்படியான போராட்டத்தையும் அதன் வலிகளைப் பேசுவதன் மூலம் போரட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுமே இலக்கியம். ஆனானப் பட்ட தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைகையிலேயே  கூட விசம் வருகின்றது. இலக்கியத்தின் புதிய போக்குகள் தோன்றும் போது அதன் பக்க விளைவுகளும் எதிர் விளைவுகளும்  இருக்கும்.. ஆனால் பக்க விளைவுகளும் எதிர்விளைவுகளும் முழுமையாக ஆக்கிரமிக்கப் பார்க்கின்றன. வெளிப்படும் விசத்தை அள்ளி விழுங்கி தனை பலி கொடுக்க ஒருவர் முன் வந்தால் மட்டுமே அமிர்தம் என்பது சாத்தியம் என்றே எனக்குத் தோன்றுகின்றது. நடக்க இருக்கின்ற போரில் எனக்கு முன்னால் முப்பாட்டனாரும், பழம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலிகளும் கூட  இருக்கின்றார்கள்.. என்ன செய்ய எல்லாம் கௌரவ சேனையி;ல்  இருக்க உணமையை நிலை நிறுத்த, உணர வைக்க வில் எடுக்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு. 

எனைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பை, அது கவிதை சிறுகதை நாவல் எந்த வடிவமாகட்டும் அதை தினந்தோறும் பிறக்கும் வடிவெடுக்கும் , ஒவ்வொரு நிமிடமும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஒன்றாகவே காணுகின்றேன் .. சங்க காலக் கவிதைகளுக்குப் பின்னர் தோன்றிய மரபுக் கவிதைகள் அன்றைய நவீனமே. யாப்பு வடிவங்களை உடைத்துக் கொண்டு வெளிவந்த புதுக் கவிதை அன்றைய கால நவீனமே எனவே புதிய , நவீனம் எனும் வார்த்தைகள் அர்த்தமற்றவை. அந்தந்த காலத்திற்கு அந்தந்த படைப்பு நவீனமே. நவீனப்படைப்புகளென்று இன்று  அடையாளப் படுத்தக் கூடிய படைப்புகள் தொழில் நுட்பங்களுக்குள் உத்திகளூக்குள் தனை சிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.. நிஜமாகவே இயல்பாக வெளிப்படும் கலைப்படைப்பானது எந்த தொழில் நுட்பங்களுக்குள்ளும் , உத்திகளுக்குள்ளும் தனை சிக்க விட்டு விடாது என்றே எனக்குத் தோணுகின்றது. எனைப் பொறுத்தவரை இலக்கியத்தை நவீனம் பின் நவீனமெனும் உத்திகளூக்குள் சிக்கி விடக் கூடிய மிகச் சிறிய விடயமாக நான் கருதவில்லை. அதீதப் புனைவியலுக்குள் தனை சிக்க விட்டுக் கொள்ளும் தீர்மானங்களோடு வெளிப்படும் படைப்புகள், செய்யப் படும்  படைப்புகள் நிகழ் நிமிடங்களை தவறவிட்டு விடுகின்றன..அப்படியான படைப்புகளைத்தான் இன்றைய  இலக்கிய உலகம் நவீனப் படைப்புகளாக முன்னிறுத்தி வருகின்றது.

இதுவரை பேசப் படாத விசயங்கள் , இதுவரை சொல்லப் படாத மொழிகள், இதுவரை பரிசோதனைக்கு உட்படாத உத்திகள் எனும் போலியான தீர்மானங்களோடு ஒரு போலியான இலக்கியம் ஒன்று உற்பத்திப் பொருளாய் உருவாக்கப் படுவதை இன்று நவீனப் படைப்புகளாக ஆதிக்க மனோபாங்களுக்கு:ள் இருப்பவர்கள் நிகழ்த்தி வருகின்றனர்.கலை கலைக்காகவே  என்பது அவர்களால் செய்யப் படுகின்ற சதியாகவே நான் பார்க்கின்றேன்.

அவர்களால் உருவாக்கப் படும் ஒரு போலியான போக்கு , அதை பின்பற்றுவது தான்  நவீனம் எனும் போலியான மதிப்பீடுகளுக்குள் சிக்கியிருக்கும் படைப்பாளிகள்  அதீதப் புனைவியலுக்குள் மறக்கடிக்கப் படும் நிகழ் நிமிசத்தின்  கொதி நிலையை உணர வேண்டும்.

எனைப் பொறுத்தவரையில்  நவீனம் , முற்போக்கு என்பதெல்லாம் இன்றைய , அந்த அந்த கால கட்டங்களில் சமுதாயத்தில் நிகழும் மாற்றங்கள்.  அந்த மாற்றங்கள்  தனி மனிதனில் நிகழ்த்தும் மாற்றங்கள் , இச்சமுதாயம் மனிதனின் முன் வைக்கும் விழுமியங்கள் , அவைகள் உருவாக்கி வைத்திருக்கின்ற கருத்தியல்கள் , சமுதாயம் நமக்குள் திணிக்கும் விடயங்கள் , அவற்றுக்கு எதிராண விசாரனைகள்  இவற்றை கலைப் படைப்பாக்கும் போதே நிகழ்வதாகவே கருதுகின்றேன் ஒரு படைப்பை வாசிக்கையில் எனக்குள் இருக்கும் மதிப்பீடுகள் வாழ்வு சார்ந்தவை. வாசிக்கப்படுகின்ற படைப்பு வாழ்வு சார்ந்து எனக்குள் பேச வேண்டும் அல்லது உணர்த்த வேண்டும். மனிதன் சந்திக்கின்ற வலிகள், அவ நம்பிக்கைகளிலிருந்து அவனை கொஞ்சமாவது  முன் நகர்த்தக் கூடியதாக இருக்க வேண்டும் கட்டுடைப்பதாக சொல்லிக் கொள்ளும் நவீனங்கள், எதையும் நிகழ்த்த முடியாத கையாலாகதவைகைலாக இருக்கின்றன.. பீறிட்டு வரும் எரிமலையை விட  மண்ணைத் தகர்த்து இலை முகிழ்க்கும் விதைகள் வீரியமானவை

ஆனால் நவீனப் படைப்புகளாக  அடையாளப் படுத்தக் கூடிய படைப்புகளுக்கு எழுகின்ற சிக்கல் களாக நான் கருவது என்ன வென்றால் சொற்றொடர்களின் வெறும் சேர்க்கை மட்டும் படைப்பு அன்று புதிய வார்த்தைகளை உருவாக்குவது ஒரு படைப்பாளியின் வேலையாக இருந்த போதும் கூட, படைப்பாளி அதை தேடித் திரிவதில்லை. படைப்பின் உள்ளடக்கம் எப்படித் தானே தன்னை தீர்மானித்துக் கொள்கின்றதோ அப்படியாகவே மொழியும் வார்த்தைகளும் படைப்பில் தனக்கான இடத்தை தீர்மானித்துக் கொள்கின்றன.

அப்படியில்லாமல் வலியச் செய்யப் படுகின்ற படைப்புகள், இன்று உடல் மொழிக் கவிதைகள் சந்திக்கின்ற பிரச்சனைகளையே சந்திக்க நேரும்..  மிக அதிகமான சொற்களைக் கொண்டு எழுதப் பட்டதாக சொல்லப் படுகின்ற பிதிரா நாவலும் இப்படியான நவீனத்துள் சிக்கித்தான் தவிக்கின்றது. படைப்போடு பயணப் பட நினைக்கின்ற வாசகனை இடித்துத் தள்ளி விடுகின்றது சொற்கூட்டங்கள். இது நவீன மல்ல . வியாதி எழுதப் படுகின்ற படைப்பை விட வாழுகின்ற வாழ்வுதான் மிகச் சிறந்த கவிதை என நினைப்பவள் நான். மேலைய இலக்கியத்தின் தாக்கத்தின் விளைவாகத்தான் நவீன இலக்கியம் சாத்தியமாகியிருப்பதாகச் சொல்வதையும் ஒத்துக்கொள்வதற்கில்லை. நவீன இலக்கியங்களிடையே நமது மரபுக் கூறுகளும் , தொடர்ச்சிகளும் நிச்சயமாக உண்டு என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும் மேலைய நாடுகளில் இருக்கும் வணிக பண்பாட்டுப் போக்கு  செல்லும் திசையறியாது சென்று அந்த சமூகத் தன்மையையும் சிதைத்தும் கொண்டது.  அதனால் தனி மனிதர்களிடையே மனமுறிவையும், மிகை உணர்ச்சியையும் தோற்றுவித்திருக்கிறது. மேலைத் தேய இலக்கியங்கள் அதனாலேயே தனி மனித முறிவையும், மிகை உணர்ச்சியையும் தன் கையிலெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆல்பெர் காம்யுவின் அன்னியன் நாவல் மிக அதிகமான பிரதிகள் விற்ற நோபல் பரிசு பெற்ற நாவல் ஆனால்  அது மேலல தேயத்தின் வாழ்வியலை பேசுகின்றது. நம் வாழ்வியலோடு ஒப்பிடுகையில் அந்த நாவலை நம்மால் சிலாகிக்க முடியாமல் போகின்றது. அ. மாதவையவின் கிளாரிந்தா நாவல் ஒவ்வொரு எழுத்துல் சொல்லும் போகும் இடமெல்லாம் நமையும் தூக்கிச் சென்று பயணப் பட வைக்கின்றது. அந்த  நேரத்தில் தான் அந்த நாவல் எவ்வலவு காளங்களுக்க்கு முன்னர் எழுதியிருப்பினும் நவீனமாக என்னால் ஒத்துக் கொள்ளக் கூடியதாக  இருக்கின்றது  இங்கோ இலக்கியங்களை படிப்பவர்கள் அவர்களது வாழ்வியல் சூழ்னிலையை யோசிக்காமல், அந்த இலக்கியங்களின் போக்கை , அப்படியே இங்கே இறக்கு மதி செய்யத் துணிகின்றனர்,.அந்த போக்கு நமக்குத் தேவையா என்று யோசிப்பதில்லை. நமது வாழ்வியல் சூழல் வேறு . பாரதி எழுதிய கவிதைகளை வால்ட் விமனோடு ஒப்பிட்டு பேசலாமே ஒழிய வால்ட் விட்மனின் தாக்கம் தான் பாரதி என்பதை ஒரு நாளும் நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பாரதி கவிதையின் உள்ளடக்கத்திற்கு அவருள்ளிருந்த சுதந்திரச் சிந்தனையே  காரணமாக இருந்ததே அன்றி நிச்சயமாக வேறு எதுவும் தாக்கமாகயிருந்திருக்க முடியாது. கவிதைகளின் உள்ளடக்கம் தனக்கான வடிவத்தை தானே நிகழ்த்திக் கொள்கின்றது. கவிதை கவிஞனிடமிருந்து வெளிவந்த பின்னர்  வால்ட் விட்மனது போல இருப்பதாக ஒப்பீடு செய்து விமரிசகர்கள் பேசலாம். பாரதிக்குள் இருந்த சமூகப் பொறுப்புணர்வுதான் அவனது ஒவ்வொரு கவிதைக்குமான தாக்கம். என்பதை பாஞ்சாலி சபதமும் சரி ஏனைய பாடல்களும் சரி நிரூபணம் செய்கின்றன.  , 

ஆனால் இன்றோ உள்ளடக்கத்திலிருந்து எல்லாமே தான் படித்த உலக இலக்கியங்களை  “போலச் செய்தல்” என்பது நிகழ்ந்து கொண்டே இருப்பது தான் சரியாக எதுவும் வராததற்கு காரணம் சமூகப் பிரச்சனைகளுகான எதிர்வினைதான் இலக்கியம்.  இயல்பாக வெளிவரும் படைப்பில் ஒரு படைப்பாளியை   அறியாமல் அவனுக்குள் அவன் வாழும் சமுதாயத்தின் அறங்களும் அரசியலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன .ஆனால் இந்த போலச் செய்கின்ற  நவீனத்தினால் விதி விலக்குகளை முன்னிறுத்தி அவலங்களை மட்டுமே நிஜம் என்று பேசுகின்றன.நெடுங்குருதி அந்த வகையில் தான் தோற்றுப் போனது.

ஒரு படைப்பு இரவில் வரும் இருள் போல , பகலில் வரும் விடியல் போல தானாகவே நிகழ்ந்த போதும் அதுவே தீர்மானிக்காது அதன் பயன்பாடு நிகழ்ந்து கொண்டே இருக்கும். எல்லாராலும் சிலாகிக்கப் பட்ட படைப்பு அல்லது படைப்பாளி என்பதாலேயே அந்த படைப்புகளின் மேல் தனக்கான கேள்விகள் ஆயிரம் இருந்தும் கூட உலகமே சிலாகிக்கின்றது என்பதலேயே , நவீன படைப்புகளோடு பரிச்சயம் இல்லாதவராக தன்னை அடையாளப் படுத்தி விடக் கூடும் என்பதாலேயே சிலாகிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர் 

நிர்பந்தங்கள், முன் தீர்மானங்கள்,  போலி போக்குகள்  இவையெல்லாம், தாண்டி உண்மையான இலக்கியத்தையும்  அடையாளம்  காண் வேண்டிய பொறுப்பும், அதன் திசைகளை தீர்மானிக்க வேண்டிய கடமையும், இதுவரை வாழ்வியலிலும், இலக்கியத்திலும் இருந்த வரையரைகளை மறுவாசிப்பு , அல்லது மறு கட்டமைப்பு செய்ய வேண்டிய நிர்பந்தமும் இன்றைய  படைபாளிகளின் கையில் இருக்கின்றது. அதன் தீவிரத்தை உணர்ந்தே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய நினைத்தேன். “

தொடர்ந்து தெவேந்திர பூபதி பிரம்மராஜன் பற்றிய அறிமுக உரை நிகழ்த்த, பிரம்ம ராஜன் தனது தலைமை உரையை எல்லாருடனுமான பகிர்தலாக நிகழ்த்தினார்.

அதில் “70 களில் இருந்து துவங்கிய தனது இலக்கியப் பயணத்தைப்  பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ‘· ‘எனும் சிறு பத்திரிக்கைக்கான வேலையிலிருந்து  தனக்கான இலக்கிய ஆர்வம் வந்ததையும் எனக்குள்ளாக நிறைய தயக்கங்கள் இருந்தது . எழுதுவதை வெளியிட.. 81-91 என்னுடைய மீட்சி பத்திரிக்கையை பத்து ஆண்டுகளாக 35 இதழ்கள் நடத்தியிருக்கிறேன். அதில் எழுதுனவங்க எல்லாமே நல்ல கவிஞர்களாக வந்திருக்கிறார்கள். கோணங்கி அப்பாஸ், யுவன் சங்கர் , லதா ராமகிருஷ்ணன் போன்ற நிறைய எழுத்தாளர்கள் வந்திருக்காங்க. எந்த விதமான அரசியல் தன்மையுமில்லாமலும் வந்திருக்கிறது. எனக்குள்ளாக நான் கவிஞன் மட்டுமல்ல. நான் ஒரு சாஸ்திரிய இசையை நேசிப்பவன் மொழி பெயர்ப்பாளன். அப்புஅம் புதிய விசயங்களை அறிமுகப் படுத்தனும்கிற அக்கறையுள்ளவன்.

பாமா இன்றைக்கு வாசித்த கட்டுரையில் கிளப்பிய பல விசயங்களுக்கான பதில்களை எல்லாம் சந்திக்கக் கூடிய விசயங்களை கட்டுரையாக எழுதியிருக்கிறேன். ஆனால் தொகுத்து வெளியிடலை.  எல்லாகாலத்திற்கும் பொருந்தக் கூடிய கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ப்ரெக்ட் அவர்களை ஒரு வறட்டு கோசக்காரர் என்பதை மாற்றி, வேற ஒரு பரி மாணத்தி¢ல ப்ரெக்டை அறிமுகம் செய்தேன். ப்ரெக்டை எப்படி புரிஞ்சுக்கனும் முற்போக்கு பிற்போக்கு எல்லாம் சொல்லி ஏமாத்த முடியாது, கூடாதுன்னு நான் சொல்லலை ப்ரெக்டை அறிமுகப் படுத்துற விசயத்துல செய்தோம். 

இந்த  30 வருடத்தி;ல் பல இசங்கள் தோன்றி மறைத்திருக்கிறது.  அரசியலும் , பண்பாடும் சேர்ந்த இசங்களாக இருக்கலாம் விமர்சனம்கிற பேர்ல  வருகின்ற இசங்களாக இருக்கலாம் அதுல இப்ப நவீனத்துவம் , பின் நவீனத்துவம் ன்னு சொல்றா¡ங்க. இரண்டுமே அதிகம் புரிந்து கொள்ளப் படாத இயக்கம். குறிப்ப modern modernist அப்படீங்கறதுக்கும் வேறுபாடு தெரியாமலே நிறைய பேர் பயன் படுத்திகிட்டு இருக்காங்க.. இன்னொரு எடுத்துக் காட்டு உடல் மொழிங்கிற வார்த்தையை நீங்க கேள்விப் பட்டிருப்பீங்க. இந்த body language ங்கிற வார்த்தை 1960 ல் எல்லாருக்கும் புரியக் கூடிய சைக்ரியாசிஸ்ட் சில பேர்  self promotion ன்னு புத்தகங்கள் எழுதுறாங்க அதில பயன்படுத்தப்  பட்ட வார்த்தை ஒருவர் எப்படி பேசுகிறார் அப்படிங்கிற மேனரிசம் தான் அர்த்தம். துரதிர்ஷ்டவசமாக  அது இன்னைக்கு இலக்கியத்துல குறிப்பா கவிதைல  அது technical use ஆக பயன்படுத்துவது வருத்தம் தருகின்றது .அது language of bodynnu ன்னு சொன்னாக் கூட பரவாயில்லை இந்த மாதிரி நிறைய தவறுகள் இருக்கு  இரண்டாவதா நவீந்த்துவம் சரியா புரியாததுனாலதான்  பின் நவினத்துவததையும் சரியா புரிஞ்சுக்கலை. ஏன்னா நவீனத்துவத்தை எந்த காலத்திலும் இலக்கிய இயக்கமா யாரும் சொன்னது கிடையாது. அது ஓவியத்திலேயும், இசையிலேயும், நாட்டியத்திலேயும்   ஒரே நேரத்தில நடந்து முடிஞ்ச கலை இயக்கம் அதை நாம எப்படி சுவீகரிச்சுருக்கோம்னா அதை வெறுமனே கலைச்சுப் போட்டு எழுதுற வசதின்னு.. disipline இல்லாம எழுதுறவனுக்கு வசதின்னு ஆனா அது கூட  பின் நவீனத்துவத்தில கூடுதல். Disiplin னோடதான் எல்லா நவீனத்துவவாதிகளும் எழுதுனாங்க .அதி நவீனத்துவ வாதிகள்ன்னு சொல்லப் பட்ட சாமுவேல் பெக்கட் ஜாய்ஸ் கூட modernist டோட ஆரம்பத்துலதான் சொல்றோம் அதுக்கு பிற்பாடு வந்ததுதான் பின் நவீனத்துவம். இது எல்லாமே கட்டிட  கலையில இருக்கு கட்டிட கலையை சிற்பக் கலையோட சேர்த்துத்தான் சொல்றாங்க. இன்னைக்கு வந்து பின் நவீனத்துவத்துல தனியான  டிசிப்பிலின் இருக்கு.  அது மாதிரி பின் நவீனத்துவ இசை இருக்கு ஏர் டோன் இசை இருக்கு காதுக்கு லயமா திரியதை டோன் இசைங்கிறோம். ஆனால்  காதுக்கு லயமா திரியாத  ஆனால் லயத்தை உடைக்கிற ஒரு விசயத்தை அர்னால்டு ஷான் பெர்க் செய்திக்கிறார். இவங்க வாங்கிகிட்டதெல்லாம் அவங்களோட , அவங்களுக்கு வலுவா இருக்கக்கூடிய தங்களுடைய குறைபாடுகளை மறைக்கக் கூடிய ஒரு தப்பித்தலாகத்தான் எடுத்திருக்கிறார்கள். சரியான ஜீரணமாகாம நம்முடைய சூழலுக்கு மாத்தி அமைக்க கூடைய சக்தி இல்லாதுனாலயும் தான்  நவீனத்துவத்தில் இத்தனை சிக்கல். இப்போ சிம்பலிசத்தை அப்படியே எடுத்துக்கலை ரஷ்யாவில் இருக்கக் கூடிய மாயாகோஸ்கி  புயூசரிசம் அப்படின்னு மாத்திக்கிறாங்க. இங்கே படித்த அறிமுகப் படுத்திய நண்பர்களெல்லாம்   நாகார்ஜூனன் போன்றோர்களெல்லாம்  அப்படி சூழலுக்கு ஏற்றார் போல மாற்ற முயற்சிக்கலை

உடல் ஆரோக்கியம்  தேவையில்லை ன்னு சொல்கிற படைப்பாளிகள் இருக்கிறார்கள் ஆனால் டிசிப்பிலின் மிக  முக்கியம். மன விசாலப்பட படிப்பு குறுகக் கூடாது . திலகபாமா சொன்னது மாதிரி “போலச் செய்தல்”  “ போலிச் செய்தல்” இது இரண்டும் நடக்குது. அதை ஒத்துக்கிறேன் ஆனால் விசேசம் என்னான்னா எல்லா ஆரம்ப கட்ட கவிஞர்களும் போலச் செய்தல்ல ஆரம்பிச்சு தன்னோட கவிதைகளை எழுதியிருக்கிறாங்க. போலச் செய்தலை ஒரேயடியா கண்டிக்க முடியாது ஆனால் அதையே மிகப் பெரிய சாதனையா சொன்னால் நாம கண்டிக்கனும். தாக்கத்தில கவிதை வரலாம் ஆனால் நமக்கான கவிதை  எழுதும் போது எங்கே ஆரம்பிக்கிறோம்ங்கிறது முக்கியம். எல்லாருமே வார்த்தை வஸ்துங்கிறதை பற்றித்தான் பேசிக்கிட்டு இருக்கிறோம் இலக்கியம்கிறது ஒரு வார்த்தை வஸ்து. ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு பொருளை பற்றி சொல்வதை விட பொருளுக்குள்ளேயே  வார்த்தையை போட்டுவிட முடியுமானால் அவர்தான் பெரிய கவிஞர். வார்த்தையை வஸ்துக்குள்ள போட்டுற விசயம். இதை செய்த மிகப் பெரிய கவிஞர். ரெய்னர் மரியா ரில்கே இவர் ஜெர்மென் மொழியில் எழுதினார். ஆனால் அவரோட கவிதைகள் நிறைய மொழிபெயர்க்கப் படவில்லை. யாதுமாகில ஒரு கவிதை சமீபத்தில வந்தது. 

ஆனால் சொல்லும் படியான மொழி பெயர்ப்புகள் வரலை.. ரில்கேயின் பேந்தர் சிறுத்தைங்கிற கவிதை சிறுத்தைக்குள்ளேயே போயிடுகிறது அந்த கவிதை வார்த்தையை வஸ்துக்குள்ள போடக் கூடிய அந்த பெரிய விசயம் ரில்கேயிடம்  இருந்தது.

85 90 க்கு பிறகு வந்த கவிஞர்களுக்கு நிறைய விசயங்கல்ல பரிச்சயமே இல்லை. இந்த கவிஞர்களின் பேரை எடுத்துட்டா ஒருத்தரே எழுதுன மாதிரி இருக்கு அது இருக்கக் கூடாது தெளிவு படுத்தல்கள் , புரிந்து கொள்ளல்கள் நோக்கி இந்த மாதிரி சந்திப்புகள் இருந்தால் தமிழ் புனைகதைகளுக்கும் சரி, கவிதைகளுக்கும் , சிறு பத்திரிக்கை உலகத்துக்கும் உதவியாக இருக்கும். என்று பேசினார்

தொடர்ந்து  கவிஞர் அப்பாஸ் "கவிதை ஒரு சல சலக்கும் மரம் அது எந்த திசையும் சுட்டிக் காட்டுவதிலை. புதுக் கவிதை யதார்த்த வாதத்திலும்  சித்தாந்த கருத்துக்களிலும் இருந்து வெளி வந்த  கவிதை தளத்தில்  வேறு திசை நோக்கி நகர்த்தியது 80களுக்குப் பிறகுதான். கவிதை எப்படி இருக்கும்  என்பதை விட , எப்படி உருவாகிறது என்பதை விடவும் ஒரு நவீன பிரக்ஞையை எப்படி வளர்த்தெடுப்பது என்பது எனக்கு முக்கிய விசயமாகி விட்டது. உலக மயமாக்கல் என்ற பேரில் வணிக மொழி இயலாலர்கள் தங்கள் தொழிலுடன் சம தள  மொழியோடு இணைந்து வெறும் விளம்பர உத்திகளுக்காக நவீன  மொழிப் பரப்பையே அழித்துக் கொண்டிருப்பதாக படுகின்றது வாழ்பவனுத்தின் தன் இருப்பிலேயே  தன்னை அன்னியப் படுத்திக் கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்குள் வணி¢க பத்திரிக்கைகள் பெரும் பங்கு ஆற்ரிக்கொண்டிருக்கின்றன  இன்றைய நவீன கவிதை வாசிப்புத் தளத்தில் எதையோ  தேடுவது  அல்லது அதில் ஏதாவது இருக்கிறதா எனும் நிலை மாறி  கவிதையில் கவி தான் மொழித் தளத்தில் உருவாகும் இயங்கியல் போக்கிலேயே ஒரு அனுபவம் விரிந்த தளத்திற்கு செல்லலாம் என்ற முழு சுதந்திர பொறுப்பிற்கு  நவீன கவிதை வந்துள்ளது. இதை வேறு விதமாக கூறினால் வாசிப்புத் தளத்தில் இதுவரை கொண்டிருந்த கருத்துக்களுக்கு இசைவாகவோ அல்லது முரணாகவோ என்ற கோட்பாடு இல்லாமல்   புதியதாக  இதுவரை உள்ள விசயங்களுக்கு புதிய பொழிவு கவிதான் மொழி மூலம் இட்டுச் செல்வது. இங்கு உன்னதம் என்ற வார்த்தை தத்துவ நிலையாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு கவிதா மொழி என புரிந்து கொள்ளலாம். ஆகவே இங்கே கொடுப்பவர் பெற்றுக் கொள்பவர் கவிஞர்ளாக, இருவருமே பிரதியில் மொழிபெயர்ப்பு செய்யும் நிலைக்கு ஆளாக வேண்டி இருக்கிறது மேலும் இன்றைய நவீன கவிதையின் போக்கு என்பது சூடான உண்மையை தருவதும் நிலைநா¡ட்டுவதும் என்ற தத்துவ உணர்வின் விடிவு நிலை இனி நவீன கவிதைக்கு இல்லாமலும் தன் போக்கிலே அர்த்தங்களை விளைவிப்பதும் இல்லாமல் செய்வதும் இருக்கும் நிலையை அடைவதும் நடப்பதும் வினோத நிலைகளை  சிருஸ்டிப்பதும் அந்தரங்க காட்சி படிமங்களை மொழியில் கொண்டுவருவது இன்றைய நவீன கவிதையில் நடைப்பெற்று வருகிறது . மேலும் கவிதை எப்போதும் ஒரு முன் வரலாறு கொண்டதாக இருக்கிறது . . கவிதை வரலாறு என்பது மனித அனுபவத்தில் அடுத்தடுத்த முன் கால படிவுகளை நுட்பமாக பதிவு செய்கிறது. மேலும் இனி எதிர்கால நவீன தமிழ் போக்கு என்பது முற்றிலும் சமூக தளத்தில் அன்னியமாக்கப் பட்ட மனச் சூழலில் அல்லது வெற்றிடமாய் கொண்டிருக்கும் ஒரு தனி மனித மனநிலையில் ஒரு துணிவின் எதார்த்தத்தையும் அதற்கான சமூக தளத்திலும் கவிதான் மொழிதளத்தில் உருவாகும்  அனுபவத்தின் இறந்த காலத்தில் தோன்றி பிறப்பதை விட இது சலிப்பான செயல். எதிர்காலத்தின் அனுபவங்களை ஒரு அழுத்தமான       போன்று எதிர்கொள்வதும் இனிவரும் தமிழ் கலையாகவே இருக்கும் என நம்புகிறேன்" என்று பேசினார். 

அடுத்து கவிஞர் பா வெங்கடேஷ், கவிஞர் பிரம்மராஜன் அந்த பேந்தர் கவிதையை இங்கே சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன். கூண்டுக்குள்ள அடைபட்டிருக்கிற புலி பற்றிய கவிதை. அந்த புலியின் உலகத்தில் கம்பி இருக்கு என ஆரம்பிக்கும் கவிதை  ஒரு முறை புலி கண்ணை திறக்கிறது கூண்டு  கதவை திறந்து ஒரு உருவம் புலி கண் வழியாக இதயத்துள் நுழைக்கிறது என வருகின்றது வார்த்தை வஸ்துவாகின்ற சாத்தியத்தை அக்கவிதை நிகழ்த்துகிறது 

நவீன கவிதைகளின் போக்கு பற்றி பேசும் போது 80க்கு அப்புறம்  நிறைய பேசி பேசி சில வகைமைகளை எடுத்து எரிந்து விட்டோம். ஆனா  வகைமைகளை பேண வேண்டும் என்பதும் ஒரு பெரிய மாஸ்டர் குரல் இருக்கக் கூடாது என்றுதான் 80க்களுக்கு பிறகு ஆரம்பித்தோம் ஆனால் மூர்க்கமா பேச்¢ப் பேசி  வகைமைகளை உடைத்து மாவு போல் பிசைந்து விட்டொம்ன்னு தான் தோணுது. உதாரணமா

உரைநடைக்கும் கவிதைக்கும் ஒரு வித்தியாசம் உண்டு அது கவிதையின் வடிவத்திலோ , உரை நடையின் வடிவத்திலோ ஆனது அல்ல . கவிதையினுடைய அனுபவம், உரைநடையின் அனுபவம்  அந்த அனுபவத்தின் மூலமாக சாத்தியப் படக்கூடிய அனுபவத்தைச் செய்வதாகச் சொல்லி, கவிதையின் அனுபவத்தை உரை நடைக்குள்ளேயோ, உரை நடையின் அனுபவத்தை கவிதைக்குள்ளாகவோ  கொண்டு போறதா சொல்லி ரெண்டுமே  இல்லாம பண்ணிட்டோமோன்னு எனக்கு வருத்தம்.கவிதைக்கான அனுபவம்ன்னு  ஒன்னு இருக்கு அது தர்க்கத்தின் வசப் படாது.  எனைப்பொறுத்த வரைக்கும் கவிதை ஒரு வார்த்தை வஸ்து.

உரைநடை தனியான வார்த்தை மூலமா ஒரு அனுபவத்தை சாதிக்க முடியாது .உரை நடையை பொருத்த வரைக்கும் வார்த்தையின் கோர்ப்பு..   நிறைய உரைநடை கவித்துவமான வார்த்தைகளால் எழுதப் படுது நல்லாயிருக்கு தொடர்ந்து கவித்துவமான வார்த்தைகளால் எழுதியே ஒரு உரைநடை முடிஞ்சு போயிடுது அதில் தான் பிரச்சனையே உள்ளது ஒரு 300 பக்க புத்தகத்தில் கதையானது முழுக்க கவித்துவமாகவே நகர்க்கிறது ஆனால் புத்தகத்தின் முடிவில் கதை என்ற ஒன்று எனக்கு கிடைக்கவேயில்லை கவ்¢த்துவமான வார்த்தை போடாமலேயே அற்புதமான கதை சிருஸ்டிக்க முடியும். இன்றைக்கு கவிதை பற்றி சூழ்னிலையை வரையரை பண்ணக் கூடாதுன்னு பேசிட்டே வந்தோம். ஆனால் இன்னைக்கு வரையறை செய்யனுமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. டிசிப்லின் பற்றி பேசினார் பிரம்மராஜன் .  டிசிபிலின் இல்லாம நிறைய காரியம் பண்ணி விட்டோம்ன்னு தோணுது என்னுடைய பிரச்சனை என்னவென்றால் கதையையும் விட்டு விலகிப் போகிறோம், கவிதையும் விட்டு விலகி போகிறோம் .ஒரு பரந்த தளத்தில் நம் கற்பனை சென்று அடைவதே இல்லை. அப்பாஸ் நீல வானத்தையும் மஞ்சள் திரவத்தையும் விட்டு வெளியில் வந்து நிறைய  சொல்ல வேண்டும் என்பது ஆசை. நாம் எழுதுகின்ற அளவுக்கு படிக்கிறோமா என்பது பிரச்சனை

வெங்கடேசனின் உரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரம்மராஜன்"  புனைகதைகளுக்கான களம்  கைதைகளுக்கான களம் தொடர்ந்து  10 வருடத்தில் குழப்பட்டுக் கொண்டே  இருக்கின்றது புனை கதை எழுதுகிறவர் கவிதை மேல ஆசைப்படுகின்றார். கவிஞன் மாதிரி எழுத ஆசைப்படுகின்றான். வீணாப் போகிறான். கோணங்கி. இதுக்கு நல்ல உதாரணம்.  ஒரு திறமை படைத்த எழுத்தாளர் . கவிதைக்கும் புனை கதைக்குமான வேறுபாடு என்னன்னா? அது நனவு மனம் சார்ந்தது. கவிதை நனவிலி மனம் சார்ந்தது. புற உலகம் எப்படி இருக்கும்ங்கிறதுக்கு நமை நம்ப வைப்பதற்கு அவர் ஒரு விசயத்தை கட்டிக் கொண்டே இருக்கிறார். அது நமக்கு  கம்யூனிகேட் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கு. அதாவது அவர் சொல்கிற கதையை நாம நம்ப வேண்டிய   ஒரு நம்பகத்தனமை தரவேண்டிய  கட்டாயத்தில்; இருக்கின்றார். இதுக்கு போர்கே நல்ல உதாரணம் ஒரு குழப்பம் கிடையாது. தெள்ளிய நீரோடை போல இருக்கும். அவர்கள் கதையை சொல்ல விரும்புகின்றார்.  மொழியை இல்லை. பிரச்சனை எங்கு இருக்கிறது என்றால் கவிஞன் ஒரு narration செய்யும் போது   கதை மாதிரி செய்து கொண்டிருக்கிரார்கள் இதுனால கவிதை பலகீனமாகிறது உடைச்சு போட்டிருக்கோம்ன்னு சொல்கிற குற்றச் சாட்டுக்கு ஆளாகி விடுகிறோம். மாற்றிப் போட முடியாத வார்த்தைகளை நோக்கிதான் கவிஞன் பயணப் படனும். அதாவது அந்த வார்த்தை எடுத்து விட்டால் வேற வார்த்தை போட முடியாதுன்னு இருக்கனும்.

உங்களுடைய உணர்ச்சிகளை அதை அசை போட்டு நினைவு படுத்துக்கிறீங்க அதை இன்னைக்கு நடக்கிறது மாதிரி எழுதுறீங்க.  உணர்வேயில்லாம கவிதை எழுதுகிறாங்க. அதுவும் வறட்சியைத்தான் தரும். கவிஞன் மாற்றிப் போட முடியாத வார்த்தையும் புனை கதை எழுதுகிறவர் மொழியில் மாட்டினால் கதை சொல்வதற்கான வாய்ப்பே கிடையாது. மொழியில் மாட்டிக்கொண்டு திளைத்தால் கதை எப்படி வரும். தமிழ் புனை கதை வீணாப் போய் விடும் புனை கதை வேற கவிதை வேற என்பதை தெளிவாக புரிஞ்சுகிட்டு கதையை மட்டும் விறு விறுப்புடன் சொல்லலாம் தெளிவா எழுதினா புரிஞ்சிட்டு தூக்கி வைத்திடுவார்களோன்னு புனை கதை எழுத்தாளர்களிடம் பயம் இருக்கு அது வேண்டியதில்லை. இது கோணங்கிக்கும் பொருந்தும் , எஸ் ராமகிருஷ்ணனுக்கும் பொருந்தும். ராமகிருஷ்ணன் கொஞ்சம் கதை சொல்கிறார்  ஆனா அவரும்  .மொழியில திளைக்கிறார். மூழ்குதல் கவிதை மாதிரி எழுதுதல். அது முக்கியமா ஜெயமோஹனிடமும் இருந்தது அவர் வெற்றியடையாத கவிஞர் அதனாலேயே கவிதை மேல இந்த மோகம் இருக்கு. விஸ்ணுபுரம் அப்படித்தான் இருக்கு. தொடர்ந்து நவீன கவிதைக்கான காலண்டிதழான யாதுமாகி நடத்தி வரும் லேனா குமார். கோணங்கியை பிரம்மராஜன் இவ்வளவு simple ஆய் செய்வார்னு நான் நினைக்கலை  நமது வாழ்க்கை நமது சிந்தனைகள் எதுவுமே நேர்கோட்டுத் தளத்தில் இயங்கவில்லை.. இயல்பா நேர்கோட்டுப் பாதைலையா இயங்கிகிட்டு இருக்கு. எனக்கு பிடித்தது கவிதை கோணங்கி எழுத்து புரியனும்க்கிற அவசியம் இல்லை. இலக்கியம் பேசம்போது மட்டும் அர்த்தம் தேவையா  அர்த்த மற்றதாக இருக்கட்டுமே. அப்பாஸ் கவிதைக்கு கோணார் தமிழுரையா போட முடியும். ஒரு கவிதை புரியனும்ன்னு அவசியம் இல்லை. உணரப் படனும்.  அது எனது கவிதையா மாறனும் அப்பதான் அக்கவிதை என்னுள் நிற்கிறது. மரபுக்கவிதை நினைவு வைத்துக் கொள்ள சரியாக இருந்தது. நவீன கவிதை எனையே கண்ணாடியில பார்த்துக் கொள்வது போல. இப்ப உள்ள பெண் மொழி  பற்றி பேச ஒரு நாள் தேவைப்படும்.  எல்லாரும் ஒரே இடத்தில் குவிந்திருக்கிறாங்க. அது ரொம்ப அலுப்புத் தருகின்றது நம்மிடையே அரசியல் கவிதைகளே இல்லை. புறவயப்பட்ட அரசியல் நம்மக்கிட்டே இல்லை  நம்ம நவீன கவிதையை எப்படி அணுகனும்கிறதுக்கு  வாழ்க்கை எப்படி இருக்கிங்க்¢றது முக்கியம். வானத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் கோடு போடுங்க வானம் ரெண்டாகி விடுகின்றது இதில் என்ன இருக்கு . கவிதை வாழ்வு சார்ந்த விசயம்

பிரம்மராஜன், நேர்கோட்டுப் பாதையில போக முடியலைங்கிறது சரி . ஆனா கவிதைநேர் கோட்டுப் பாதையிலதான் இருக்கு. கவிதை அப்படியே இருக்கட்டும் ஆனால் புனை கதை அர்த்தப் படுத்திதான் ஆகனும். வாசகனுக்கு ஏதோ தரணும். எல்லாம் புரியனும்ன்னு சொல்லலை ஆனா வாழ்க்கையே புரியாம இருக்கிறதுக்கும் ஒரு கலை புரியாம போறதுக்கும்  வித்தியாசம் இருக்கு.

இந்த நிகழ்ச்சிக்கு வர இயலாது போன வைகைசெல்வி  தனது கருத்துக்களை கட்டுரையா தந்திருக்க கூட்டத்தில் திலகபாமாவால் வாசிக்கப் பட்டது.

'உணர்வுகளை கவிதையில் வடிக்க வெண்டும் என்றால் பெண்ணியம் பேச வேண்டும் என்றால் பெண்ணியம் என்றால் என்ன எனபதை புரிந்து கொள்ள வெண்டும். செக்ஸ் என்பதற்கும் gender என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது என்பதை  சொற்களின் பின்னால் பயணிக்கின்ற எழுதுகின்ற கவிஞர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே எனக்குத் தோணுகின்றது. பெண்ணியம் எனபது குடும்பம் வேலை பார்க்குமிடம் மற்றும் சமூகத்தில் பெண்களின் உழைப்பு பாலியல் மற்றும் கருத்தரிப்பில் ஆண் ஆதிக்கத்தின் கட்டுப் பாடு சுரண்டல் அடக்கு முறை இவைகளை  பற்றி விழிப்புணர்வு பெற்று சுரண்டல் நிலையை மாற்ற எடுக்கும் இயக்கமாகுக்.  இந்த விளக்கத்தில் so called காமத்தைப்  பற்றி இருக்கிறதா என்ன? இன்றைய சமுதாயத்தில் பெண்ணின் உண்மையான நிலையை இலக்கியம் எடுத்துக் கூற வேண்டும் தான் நினைக்கும் வக்கிர உணர்வினைப் பெண் பாத்திரத்தி¢ல் ஊற்றி இதுவே பெண்ணின் ஏக்கம் உணர்வு என்று சொல்வது பொய் . இலக்கியத்தில் நேர்மை தேவை.. நவீன இலக்கியம் என்பது இலக்கியமா இல்லையா புரிகிறதா  இல்லையா என்ற சர்ச்சைகளைக் கடைந்து ஆபாசச் சொற்களும் வர்ணனைகளூம் இருந்தால் மட்டுமே  அது நவீன இலக்கியம் என்ற ரீதிய்¢ல் போய்க் கொண்டிருக்கின்றது அதனால் தான் இணையத்தில் ஒருவர் எழுதியிருப்பதைப் போல திரைப் படங்களில் கட்டாயம் ஜெயமாலினி நடனம் ஒன்று இருக்க வேண்டும் என்பது அன்றைய எழுதப் படாத விதி அதைப் போல நம் பத்திரிக்கைகள் ஆபாசமான கவிததகளை பெண் கவிஞர்களிடம் வாங்கிப் போடுகின்றனர் என்று தீட்டி விட்டார், நமது பெண் கவிஞர்கள்  அதுவும் ஒரு உறுப்புதானே என்று எழுதப் போய் இன்று பெண் கவிஞர்களை கவர்ச்சி காட்டும் நடிகைகளோட ஒப்பிட வேண்டிய துரதிர்ஷ்டம் நேர்ந்திருக்கிறது நவீன இலக்க்¢யம் என்றால்  அது புரியாமல் இருக்க வேண்டும் என்பதாக சிற்றிதழ்கள் சித்தரித்தது போய் மாலதிமைத்ரி சொல்வது போல் அது நியூடிஸ்ட் காலணியாக(பன்முகம்)மாறி விட்டது. இதனை கவலை தரும் போக்காகவே நான் நினைக்கிறேன் தீவிர இலக்கியப் பத்திரிக்கைகளுக்கெல்லாம் முன்னோடி எனக் கருதப் படும் காலச் சுவடு அதன் அடிச்சுவட்டில் வரும் பத்திரிக்கைகளும் தொடர்ந்து இப்படிப் பட்ட கவிதைகளையும் கதைகளையும் பிரசுரிப்பதன் மூலம் நவீன இலக்கியத்தின் முகம் ஆபாசத்தின் கூறுகளை  உடையது என்பது போலத் தான் பிம்பம் தோன்றும்  இப்படிப் பட்ட இலக்கியப் போக்கை காலச் சுவடிலேயே ஒர் முறை பிரம்மராஜனும், மனுஷியில் ராஜம் கிருஷ்ணனும் அரும்பு பத்திரிக்கையில் அநுத்தமாவும் கணையாழியில் நாஞ்சிலமுதனும் கண்டித்துள்ளனர். ஆபாசத்திற்கும் கலைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகின்றனர் எனும் குற்றச் சாட்டை முன் வைக்கின்றனர். ஜே.பி .சாணக்கியாவின் கதைக்கு விருது கிடைத்திருக்கின்ற நிலையில் இன்றைய நவீன இலக்கியம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பதே  எனைப் போன்றவர்களின் கவலை.' 

அவரது கட்டுரை வாசிப்பிற்கு பின் கவிஞர் ரெங்கநாயகி பெண் மொழி பற்றிய தனது கருத்துக்களை முன் வைத்தார்.

'அதில் இலக்கியத்தில் நேரடிக் கேள்விகள் எதுவும் கிடயாதுன்னு நினைக்கிறேன் . நான் பெண் என்பதால் பெண்மொழியை பேச வந்ததாய் நினைக்க கூடாது பெண்கள் பெண் உடல் மொழியை அதிகமா உபயோகிக்கிறாங்கிறதை விட ஆண்கள் தான் அதிகமா உபயோகிக்கிறாங்க. சங்கர ராம சுப்ரமணியம் , யவனிகா ராம் போன்ற  கவிஞர்கள் இதற்க்கு நல்ல உதாரணம். வேத கால பெண்டிர்களுடைய கவிதையில் கணவனை பிரிந்த மனைவிக்கு நேரக்கூடிய உடல் உபாதைகளை கவிதையா தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்காங்க.  ஆண்டாள் எழுதியிருக்கிறாங்க. ஆனா கவிதையா சொல்லியிருக்காங்க.  ஆண்டாள் நிறைய தடவை உபயோகப் படுத்திய வார்த்தை  அந்த வார்த்தைக்குன்னு ஒரு உன்னதம் இருக்கு.  வார்த்தைக்கு ஒரு உயிர் இருக்கு. ஆனால்  திடுக்குறச் செய்தல் என்கிற ரீதியில் செய்கிறாங்க. பெண் என்கிறவள் அவள் உடல் சார்ந்த உபாதைகளையும் அதன் ரீதியாக வருகின்ற கருத்துகளையும் சொல்வது ஒன்னும் தமிழுக்கு புதிதில்லை. ஆனால் இன்னைக்கு  ஏதோ பாரம்பரியமா ஒரு லஷ்மண கோடு போட்ட மாதிரியும் அதை ரொம்ப  தைரியமா தாண்டின மாதிரியும்  ஒரு  திடுக்குரச் செய்தல் , கலாசார அதிர்வு கொடுப்பதாக சொல்கிறாங்க . நிச்சயமா இல்லை. காதல் பற்றி ஒரு கவிஞன் பேசும் போது எப்போது கவிதையாகும். எப்போது போர்னோகிராவி படத்தை பார்ப்பது போல்  ஆகிறது என்பதை சொல்ல வேண்டும் என்று பிரம்ம ராஜனை கேட்டுக் கொள்கிறேன்'. 

அதற்கு பிரம்மராஜன் 'கவிதை வாசகனுக்கு காட்சி வடிவமாகுவது. உறுப்புக்களை குறிப்பிடுகின்ற வேளை கவிதைக்கு இல்லை. அது அனாடமிக்குத்தான் வாசகனுக்கு உள்ளுறையா உணர்த்த வேண்டியது. . கவிதையா வந்து முடிந்தால்  சீர்தூக்கி பார்க்கலாம் யார் எழுதினாலும். பெண் உடல் மொழி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. கவித்துவத்தை சிதைக்கும் அளவிற்கு உடல்  உறுப்புக்களை பற்றி சொல்வதில் எங்கு கவிதை வருது அசூசை ஏற்படுகின்ற அளவுக்கு ஏன் செய்யனும்.. இலக்கியப் பத்திரிக்கைகள் வாசிப்பவர்கள் கொஞ்சப் பேர்கள் தான் என்பதால்  அதுல நியூடா இருந்தா என்ன என்கிற தொனி இருக்குமானால் அப்பவும் கூட என்னால ஏற்றுக் கொள்ள முடியாது' என்று பதிலளித்தார்.

தொடர்ந்து கவிஞர் தேவேந்திர பூபதி அவர்கள் தனது புரிதல்களை முன் வைத்தார். 'சங்க கவிஞர்கள் என்றுதான் பார்த்து இருக்கின்றோம். ஆண் கவிஞர்கள் பெண் கவிஞர்கள் என்று பிரித்து பார்த்தது இல்லை. இப்ப துரதிர்ஷ்டமான சூழலில் நவீன இலக்கியம் அப்படி உருவாக்கி வைத்திருக்கிறது. ஆத்மாநாமிற்கு பிறகு அதிக அரசியல் கவிதைகள்   எழுதியவர் நான் தான் என்று சொல்கிறார்கள் அப்படி என்ன அரசியல் கவிதைகள் எழுதினாங்கன்னு தெரியலை. சாக்த மரபில் வந்த கவின்னு சொல்றாங்க. சாக்தம்னா என்னான்னு பாமா கேட்டதுக்கு இதுவரைக்கும் பதில் சொல்லலை இவங்களுக்கு அடிப்படையே கிடையாது . ஆண்டாள் எழுதுவது கணவன் மனைவிக்கு இடையேயான உறவை . நாம நம்ம குழந்தையை கொஞ்சும் போது அது நிச்சயமா அருவருப்பான மொழியா இருக்காது. ஒரு பிரதி தனக்கு முரணான பிரதியா இருக்கக் கூடாது ஆனா பச்சை தேவதை புத்தகத்தில் வருகின்ற கவிதை  முன்னுக்கு பின் முரணா இருக்கு. செக்ஸ் என்பது இரு  வேறு பாலினம் சம்பந்தப்பட்ட விசயமே கிடையாது. அது கால நேர வர்த்த மானங்களால் தீர்மானிக்கப் படக் கூடிய அன்னியோன்யமான உறவு. இன்று பெண்களால் பிரயோகிகப் படுகின்ற வார்த்தைகள்  எல்லாமே ஆண்களால் பிரயோகிகப் பட்ட வார்த்தைகள் பெண்களுக்கான பிரச்சனைகளை பெண் மொழி பேசுவதாக சொல்கின்ற கவிதைகள் ஒரு பொழுதும்  இதுவரைக்கும் அணுகவே இல்லை. அரசியலா இதுவரைக்கும் பெண்களிடமிருந்து கவிதைகள் வரவே இல்லை. உலக இலக்கியத்தில இந்த கலகக் குரல் எல்லாம் பெண்களிடமிருந்து தான் ஆரம்பமாயிருக்கு. ஆனால் தமிழ் சூழலில் அது இல்லவே இல்லை' என்று சொல்ல 

பிரம்மராஜன் மரபுகளிலிருந்து இன்னும் நாம் எதையுமே வாங்கி கொள்ளவில்லை.  என்று வெள்ளி வீதியாரை உதாரணம் காட்டி பேசினார். 

விவாதத்தில் இடை புகுந்த திலகபாமா 'பெண்கள் அரசியல் பேசவே இல்லை என்பதை நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்  .பெண்மொழி உடல்மொழி பேசகின்றதாய் சொல்கின்ற கவிஞர்களை தவிர்த்து வேறு பெண் கவிஞர்களை நீங்கள் படிப்பதில்லையா.?  அவர்கள் அரசியல் பேசவில்லையா.? பெண்கள் அரசியல்  பேசவில்லை என்று ஒட்டு மொத்த குற்றச் சாட்டு எப்படி வைக்கலாம். எது அரசியல்? பெண்ணுக்கான அரசியல் என்று ஒன்று நிச்சயமா இருக்கு. அது நீங்க தீர்மானிக்கிற அரசியல் இல்லை கூட்டங்களில்  எல்லாரும் சொல்லுகிற வசனம் எனது கணவர்  எல்லாதுக்கும் விட்டு விடுகிறார்கள் என்று என்னிடமே பேசுவது ஒரு அரசியல். . அந்த அரசியல் எங்கள் கவிதைகளில் பேசுகின்றது. ஆனால் பெண்  மொழியை எதிர்க்கின்ற ஆட்கள்,, இதுக்கு மாற்றாக எழுதப் பட்டுக்கொண்டிருக்கின்ற கவிஞர்களை அடையாளம் காட்டுவதில்லை. சுகந்தி சுப்ரமணியம் இல்லையா? ஏன் நாங்கள் இல்லையா?பெண் மொழியை எதிர்க்கின்ற ஆட்களும் உடல் மொழியை  பேசுகின்ற கவிஞர்களை மட்டும்தான் பேசுகின்றீர்கள். அப்ப உடல் மொழி பேசுகிறவர்களை மட்டும்தான் நீங்கள் கவிஞர்களாய் தீர்மானித்திருக்கிறீர்களா? இதுவரை பெண் மொழி- உடல் மொழியை குறை சொல்லும் எந்த விமரிசகனும் மாற்றாக அந்த வார்த்தைகள் இல்லாமலே அதை விட அழுத்தமா எழுத முடியும்ன்னு  எழுதுகின்ற கவிஞர்களை பேசுவதில்லை.. பேசமாட்டீங்க..  மாலதி மைத்ரியை குட்டி ரேவதியை குறை சொல்றீ¢ங்க அதுக்கு மாற்றா கவிதை பெண்களிடமிருந்து வரலைங்கிறது பொய்.  இவர்களை குறை சொல்வதன் மூலம்  ஒட்டு மொத்த பெண்களையும் நிராகரிகரித்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்று கோபமாக பேசினார்.

இன்னும்  ஜெகன்னாதன், நடராஜன் பொ.நா கமலா ஆகியோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். ஒட்டு மொத்தத்தில்  பல கேள்விகளையும் விசாரணைகளையும், படைப்பாளிகளும் வாசகர்களும் இணைந்து பகிர்ந்து  கொண்டது நல்ல அமர்வாக இருந்தது. நவீன இலக்கியத்தின் போக்குகள் மேலைய நாகரிகத்தின் அடியொற்றியதாக இருந்து விடக் கூடாது என்கிற விழிப்புணர்வும் அதே சமயத்தில் நமது சூழலுக்கு அவற்றை சாத்தியமாக்கும் முயற்சிகள் நோக்கிய சிந்தனையும் நமது படைப்பாளிகள் கைவரப் பெற்றிருப்பதும் மகிழ்வே . 

கதை கருத்தரங்கு  பற்றிய பதிவுகள்! ( பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி;  23.5.04 )  - திலகபாமா -


திலகபாமாவின் வரவேற்புரையோடும் , இந்த கவிதை கருத்தரங்கின் தேவை பற்றிய சுருக்கமான முன்னுரையோடும் நிகழ்ச்சி ஆரம்பமானது. முன்னுரையில்" எனைப் பொறுத்தவரையில் கவிதை பேசக் கூடியதல்ல. உணரக் கூடியது . கவிதையின் யதார்த்தம், அழகியல் சமூகப் பிரக்ஞை எல்லாமே மொழி வழியாக, வார்த்தைகளின் ஊடாக உணரக் கூடியது .  இன்றோ கவிதை பற்றி பேசுவதும், உரத்துச் சிந்திப்பதும் தேவையானதாய் இருக்கின்றது இன்றைக்கான நிகழ்காலக் கவிதைகள் மிகத் தீவிரமான பாய்ச்சலோடு உடைப்பெடுத்து வந்து கொண்டிருப்பது சந்தோசம் தருகின்ற அதே வேளையில், பிரவாகங்களின் பாதையைத் தீர்மானிக்கின்ற பொறுப்பும் , வழி நடத்த வேண்டிய கடமையும், தான் வாழும் சூழல் சார்ந்தும், மண் சார்ந்தும் சிந்திக்கின்ற ஒவ்வொருவரின் கடமையாகவும் இருக்க வேண்டும். மொழி பெயர்ப்புகள் உலகளாவிய சிந்தனைகளை உள்ளே கொண்டு வந்த அதே நேரத்தில் தான் வாழும் சமூகம் சார்ந்த பிரக்ஞையும் ,விழிப்புணர்வும் அற்று உத்திகளின் பின்னால்  படைப்புகள் உற்பத்திப் பொருளாக மாறி வளரத் துவங்கியிருக்கின்றன. இந்தப் போக்குகள் சரிதானா? இவை இட்டுச் செல்லும் இலக்குகள் சரியாக இருக்குமா? இந்த கேள்விகளுக்கான பதில்களை தேடும், அல்லது தேடல்களுக்கான வினாவை எழுப்பும் அரங்காக இந்த அரங்கு அமைக்கப் பட்டிருக்கிறது"என்றார்.

திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் "தற்கால தமிழ்க் கவிதையின் போக்கு" எனும் தலைப்பில் தனது சிறப்புரையை ஆற்றினார். அவ்வுரையில்  தற்கால கவிதைகள் என்பதை பாரதியிலிருந்து எடுத்துக் கொள்லலாம். ஒரு காலத்தில் புதுக்கவிதையை ஏற்றுக் கொள்லாதவர்கள் இருந்தார்கள்.இன்றோ   புதுக்கவிதையில் பலவித போக்குகள் நிலவுகின்றன. பாலியல் கவிதைகள், பெண் மொழி  என்று சரியான போக்கில் தான் புதுக் கவிதை போகிறதா? மரபுக் கவிதையைத் தாண்டி வந்த புதுக் கவிதை  இலக்கணச் சட்டத்தை உதறி விட்டு கவிதையை மட்டுமே சுவீகரித்துக் கொண்டு   வந்தது. புதுக்கவிதை சரியான சாக்கிரதை உணர்வுடன் எழுதப் படாவிட்டால்  அது வார்த்தைக் குப்பையாகி விடும். புதுக்கவிதைக்காரர்கள்  மரபுக் கவிதையின் காட்சிப்படுத்தும் திறனை  கையிலெடுக்க வேண்டும். கதை சார்ந்த விசயத்தை கவிதையில் பேசுவது குறைவாகவே இருக்கிறது இயற்கை வர்ணனைகள், கதை சொல்லும் கவிதைகள் ஆகியவற்றையும்  புதுக் கவிதை கையிலெடுக்க வேண்டும்.  இன்றைக்கு  அதிகமான விவாததக்குள்ளாகிக் கொண்டிருக்கும் பாலியல் சொற்களை கலந்து பெண் எழுதுவது சரிதானா? என்பது, பெண் பாலியல் விசயங்களை எழுதக் கூடாது என்பதல்ல. இதற்கு முன்னாலும் பாலியல் விசயங்களை எழுதியவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் கலைக்கென்று ஒரு நாகரீகம் வைத்திருந்தனர். பாலியல் வார்த்தைகள் இல்லாமலேயே அவற்றை பேச முடிந்திருந்தது. எந்த ஒரு விசயத்தையும் கலைக்கு உட்படுத்தி, கலை நயமாக எழுத வேண்டும்" என்று பேசினார்.

அதை தொடர்ந்து பேசிய திலகபாமா" பெண்கள்: எழுதுகிறார்கள் என்பது தவறு . கலாப்பிரியா காலம் தொடங்கி, இன்றைய சங்கர ராம சுப்ரமணியன் வரை ஒரு குறிப்பிட்ட  குழுவினரிடையே பாலியல் வார்த்தை பிரயோகங்கள் எனும் போக்கு நிலவி வருகின்றது. இந்த போக்கு பற்றிய விவாதங்களின் போதெல்லாம் காலம் தீர்மானிக்கும் எனும் ஒற்றை பதில் எல்லாரிடமும் தயாராக இருக்கிறது, தான் வாழும் சமூகம் சார்ந்தும், மண் சார்ந்தும் சமூகப் பிரக்ஞையோடு சிந்திப்பவர்கள்  தங்கள் படைப்புக்கு பொறுப்பேற்றே ஆக வேண்டும்" என்றார்.

"தமிழ் நாவலில் பெண்கள்"  எனும் தலைப்பில் பேசிய தோதாத்ரி அவர்கள்  "நாவலில் பெண் சித்திரங்களை மையப் படுத்தி பேசினார் விடுதலை பேசக் கூடிய பெண்கள்:, குடும்பச் சிக்கலில் தாழ்வுக்குள்ளான பெண்கள், பாரம்பரியத்திற்கு உட்பட்ட பெண்கள் என்று நாவலில் வரும் பெண் சித்திரங்களின் போக்கு பற்றி பேசினார். லஷ்மி, வை.மு.கோ. ராமகிருஷ்ணன், சிவசங்கரி ஆகியோரது நாவல்களிலிருந்து பெண் சித்திரங்களை முன் வைத்து பேசினார்.

"இலங்கை கவிதைகள்" எனும் தலைப்பில் பேசத் துவங்கிய  சுசீந்திரன் அவர்கள்  "பெண் விடுதலை பேசிய பாரதிக்கு பின் பாரதியின் மனைவி செல்லம்மாவுக்கு என்ன நடந்தது? மொட்டை அடித்தார்கள்  சமூகம் பெண்ணை எப்படி வைத்திருக்கிறது? என்று பார்க்கப் போனால் வருத்தமே. ஆகவே எழுத வந்திருக்கும் பெண்கள் எந்த வித தடைகளும் இல்லாது நிறைய எழுத முன் வரவேண்டும்  என்றும் பின் விபுலானந்த அடிகளாரின் பாடலோடு ஆரம்பம் செய்தார் தனது இலங்கை கவிதைகள் பற்றிய கருத்துக்களை. பாரதி தாசனது வாரிசாக வந்த காசி ஆனந்தன், மகாகவி உருத்திர மூர்த்தியின் பேச்சு ஓசைப் பண்பு மிகுந்த கவிதைகள் பின்பு வந்த தேசிய வாத, முற்போக்கு கவிதைகள், 1983க்குப் பிறகு இலங்கை கவிதைகள் தங்களது பாடு பொருளையும் , வீச்சையும் தானாகவே  தீர்மானிக்க நேர்ந்த வரலாறுகள் எனப்பேசினார். அவரது சுகவீனம் காரணமாக உரையை சுருக்கமாகவே முடித்துக் கொண்டார்.

"சித்தர் பாடலில் பெண்" எனும் தலைப்பில் பேசிய தேவேந்திர பூபதி தனது உரையில் "சித்தர்கள் பெண்ணை தாயாய் பார்த்தவர்கள். பெண்ணை போகப் பொருளாயும் நுகர்வுப் பொருளாயும் பார்ப்பதை தவிர்க்கச் சொன்னவர்கள். ஆனால் இன்றைக்கு பெண் எழுத்து அவர்களது வலியை பேசுவதாய் இருக்க வேண்டும் உறவுச் சிக்கல்கள் உணர்வுச் சிக்கல்கள் என்று பெண்ணுக்கு பேச வேண்டிய விசயங்கள் இருக்க  பெண்கள் எழுத்து போகும் போக்கு பெண் விடுதலையை திசை திருப்பும் என்றும் பேசினார்.

இரண்டாம் அமர்வில் "கவிதைப் பெண்கள் " எனும் புத்தகம் பற்றி தோதாத்ரி தன் விமரிசன உரையை ஆற்றினார். அந்த உரையில் "பெண் கவிஞர்களை பற்றிய இந்த தொகுப்பு பெண்ணியம் தவிரவும்  சமூகப் பார்வையோடு பெண்கள் படைப்புகள் வந்து கொண்டிருப்பதை உணர்த்துகிறது . ஆணுக்கு இருக்கும்  சமூ.கப்பார்வை போல பெண்ணுக்கும் ஒரு சமூகப் பார்வை உண்டு. பெண்ணுக்கான அந்த சமூகப் பார்வையை, சமூக அறிவை அழுத்தமாக பதிவு செய்வதில் தான் பெண்ணியவாதிகளின் கருத்து முழு முனைப்போடு செயல் பட வேண்டும் ஆனால் இன்றோ பெண்ணியம் என்பது  ஆண் பெண் உறவு மட்டுமே  என்கிற வகையில் அர்த்தப் படுத்துவதை தவிர்க்க வேண்டும். என்றும் பேசினார். 

வைகைச் செல்வி அவர்களின் "அம்மி" தொகுப்பு பற்றி பொன்னீலன் அவர்கள் விமரிசன உரை நிகழ்த்தினார்கள்.  அதில் சிந்தனைப் போக்கிலும் தெளிவிலும் வானம்பாடிகளை வளர்க்கிறார். சமூகப் பிரச்சனைகளின் ஊடாக இவரது கவிதைகள் வெளிச்சம் பெறுகின்றன.சமூகத்தை முதன்மை படுத்துகின்றது இவரது கவிதைகள். மனித நேயத்தை பேசுகின்றது. சமூகத் தீமைகளை எதிர்க்கின்றது. சில இடங்களில் தேவையற்ற சதைப் பிதுக்கங்கள் தெரிகிறது. அதையும் தாண்டி நெகிழ்ந்த கவிஞனின் ஆன்மா தெரிகிறது" என்றார்.

அதைத் தொடர்ந்து வைகைச் செல்வி தனது ஏற்புரையை வழங்கினார். மொத்தத்தில் ஒரு  படைப்பாளியின் பொறுப்புணர்வு, வாசகனின் புரிந்துணர்வு, பற்றி எல்லாபேச்சாளர்களாளும் விவாதிக்கப் பட்டது. இன்றைய மிகப் பெரிய சர்ச்சையாக இருக்கும் பெண் மொழி பற்றியும் தொடர் விவாதம் எல்லார் பேச்சூடாகவும் வந்து போயின. ஆண் பெண் மற்றும் வர்க்க பேதங்கள் இருந்து கொண்டே யிருக்கின்ற உலகினில் அதை தவிர்க்கும், ஒன்றாக்க நினைக்கும்  பிரக்ஞையுள்ள படைப்பாளிகளின் படைப்புகள் பெண்மொழி, பெண்ணியம் எனும் பாகுபாடுகளை உதிர்க்கும் நாள் எப்போது? எனும் கேள்வியை எழுப்பியபடி அன்றைய நிகழ்வு இனிதே முடிந்தது.

கவிதைக் கண்காட்சி! மகாகவி நினைவாக! 
 
மகா கவி பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு 11.12.2003 அன்று கோட்டூர் புரத்தில் உள்ள்ச் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச் சூழல் கலை அரங்கத்தில் சுற்றுச் சூழல் கவிதைக் கண் காட்சி துவக்கப் பட்டு 31.12.2003 வரை நடை பெற்றது. இதில் பிரபல கவிஞர்களாகிய வைரமுத்து, அப்துல் ரகுமான், மு. மேத்தா, ஞானக் கூத்தன் உட்பட திரைப்படக் கவிஞர்கள் பழனி பாரதி, அறிவு மதி ,தாமரை , கனடா வாழ் கவிஞர் புகாரி ஆகியோர்களது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இன்றைய கவிஞர்களான பச்சியப்பன், திலகபாமா, தேவேந்திர பூபதி, விஜி வைகை செல்வி, இளஞாயிறு, தமிழ் நாடு மாசு கட்டுப் பாடு வாரியப் பணியாளர்கள் ராதா கிருஷ்ணன், முரளிதரன், மணி மார்பன், ஆறுமுகம் ஆகியோர்களின் கவிதைகளும் இடம் பெற்றிருந்தன நீர் , நிலம், காற்று ஒலிமாசு, மரம் வளர்த்தல் , பிளாஸ்டிக்கின் பயன் பாட்டை தவிர்த்தல் தொழிற்சாலைகளால் நீர் நிலைகள் மாசுபடுதல் போன்ற சுற்றுச் சூழல் மாசு குறித்து சுமார் 5 கவிதைகள் இடம் பெற்றிருந்தன. புறநானூற்றில் மழை நீர் சேகரிப்பு குறித்த புலவர் குடபுவியனாரின் பாடலும் இடம் பெற்றிருந்தது

இக்கவிதை கண்காட்சியினை கவிஞர்களாகிய ஜெயபாஸ்கரன் ,பாப்லோ அறிவுக் குயில், திலகபாமா, பாலுமணிவண்ணன் , லஷ்மியம்மாள் கனக சபாபதி நெல்லை ஜெயந்தா மற்றும் பல கவிஞர்களும் எழுத்தாளர்களும் பள்ளி கல்லூரி மாணவர்களும் பார்வையிட்டனர். இக்கவிதைகளை அழகான ஓவியங்களாக்கி உள்ளவர் கலைமாமணி முத்துக் கூத்தனின் புதல்வர் திரு .கலைவாணன் என்பவர்

இக்கவிதை கண்காட்சியினைத் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மேலாளரும் கவிஞருமாகிய வைகைச்செல்வி ஏற்பாடு செய்து முனைப்புடன் நடத்தி வருகிறார் .இவரின் “பொம்மை” , “மெல்லச் சாகுமோ மலைக்காடுகளும்”  ஆகிய கவிதைகளும் இடம் பெற்றிருந்தன. 

mathibama@yahoo.com

No comments:

'பதிவுக'ளில் அன்று - ''காதல் கடிதம்'' - உலகத் தமிழருக்கான திரைப்பொங்கல்! - வசீகரன் (ஒஸ்லோ,நோர்வே) -

பெப்ருவரி 2008 இதழ் 98   [பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும்...

பிரபலமான பதிவுகள்