Friday, November 24, 2023

வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலை முன் வைத்து.... - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -


- அண்மையில் நிகழ்ந்த வ.ந.கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை  (ஈஸ்வரமூர்த்தி) ஆற்றிய உரையிது. -


மூன்று விதமான அறிமுகங்களாக  என் பேச்சை ஆற்றலாம் என்றுள்ளேன்.  புத்தக வெளியீட்டின் அழைப்பிதழில் அறிமுகம் என்றாக சொல்லப்பட்டிருப்பதால் அறிமுகம் என்ற விடயத்திற்குள் அதிகம் எனது பேச்சைச்  சுருக்க விரும்புகின்றேன். ஆனால் இதற்குள் சிறிய அளவில் புத்தகம் பற்றிய எனது பார்வையை எனது வாசிப்பின் அடிப்படையில் இணைக்கின்றேன். முதலில்  அது என் அறிமுகம் , புத்தக ஆசிரியர் வந கிரிதரன் பற்றிய அறிமுகம் , இறுதியாக புத்தகம் பற்றிய அறிமுகமாக இருக்கும்.

முதலாவதாக என்னைப் பற்றிய அறிமுகம்.  இலக்கியம் என்பதற்கு எனக்கு வரவிலக்கணம் தெரியாது.  கபொத சாதாரண தர  வரையில் தமிழை ஒருபாடமாக கற்று இறுதிப் பரிட்சையில் மிகக்குறைந்த சாதாரண சித்தியை மட்டும் பெற்றவன். மக்களே என் ஆசான்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை அனுபவங்களே எனக்கான வழிகாட்டி. இவற்றின் அடிப்படையில் எனது தாய் மொழில் எழுதுகின்றேன் மேடைகளில் பேசுகின்றேன் கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றேன். மக்களிடம் இருந்து கற்றவையை செழுமைப்படுத்தி மக்களின் மன்னேற்றத்திற்காக அவர்களிடமே அதனை சமர்பிக்கின்றேன் . நான் கற்றலுக்குத் தயாராக இருக்கும் மாணவன்தான்.விடுதலைப் போராட்ட வாழ்வு,  அதனைத் தொடரந்து அரசியல் சமூக செயற்பாடு போன்றவற்றில் பல்வேறு பெயர்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இது பொது வெளியில் எனது முகத்தை மறைத்துச் செயற்படுவதற்காக அல்ல. என்னைச் சூழு உள்ள உறவுகளுக்கு ஏற்படும் சில அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக. மற்றயபடி என்னைப்பற்றிய தகவல் தேவையானவர்களுக்கு எம்மைப் பற்றித் தெரியும். அவர்களுக்கு நாம் தேவைப்படும் போது அழைத்தும் செல்வார்கள் என்பதுவும் தெரியும்.  இதற்கான புரிதலும் உண்டு.

இனி புத்தக ஆசிரியர் கிரி என்கின்ற கிரிதரன் பற்றிய அறிமுகத்துடன் என் பேச்சை தொடங்குகின்றேன்.  1970 களின் முற் கூற்றில் ஆரம்பித்து பிற்கூறு வரைக்கும் எனது யாழ் இந்துக் கல்லூரி மாணவப் பருவத்தில் இருந்து ஒரே வகுப்பில் பல்கலைக் கழகம் புகுதல் வரை ஒன்றாக பயணித்தவர் கிரிதரன். மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலையை கற்பதற்கான திறன் காண் தேர்வுப் பரீட்சையில் நான் தோற்றுப் போக எம்டையே தொடர்பற்ற நிலமை எற்பட்டாலும், அதற்குப் பின்னரான ஈழ விடுதலைக்கான பொது வாழ்வில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இடதுசாரி சிந்தனைக் கொண்ட அமைப்புகளின் பயணித்தவர்கள் நாம் இருவரும்.

கிரியின் பாடசாலை வாழ்கையில் சினிமா என்ற அன்றைய முதன்மையான பொழுது போக்கு அவரை எம்ஜிஆர் பக்கம் வைத்திருக்க  என்னை சிவாஜியின் பக்கம் வைத்திருந்த எதிர் முனையாக இருந்தாலும் அளவளாவல்கள் நட்புகள் தொடர்ந்தன. அவர் எழுத்துலகின் குழந்தை நட்சத்திரமாக அன்று  இலங்கையின் அனைத்துப் பத்திரிகைளிலும் அவரின் ஆக்கங்கள் வெளிவரும் அளவிற்கான ஆற்றலை வைத்திருந்தவர். இதனை அருகில் இருந்த பாரத்தவன் நான்.  அது சிரித்திரன் சஞ்சிகை வரை விரிந்து இருந்தது.

எமக்கெல்லாம் குழந்தை இலக்கியம்,  ஜனரஞ்சக் இலக்கியம் என்றால் என்ன என்பதே தெரியாத ஆர்வமில்லாக் காலம் அது. அவரின் எழுத்து ஆர்வத்திற்கு அவரின் பெற்றோரின வளர்ப்பே காரணமாக அமைந்தது என நம்புகின்றேன்.  அவர்களின் ஆசிரியம் அதற்கு காரணமும் ஆயிற்று.  அன்று எழுத்தாக,  தேடலாகத் தொடங்கிய அவரின் இலக்கியப் பயணம் இன்றுவரை தொடர்வதாக உணர்கின்றேன். விடாத வாசிப்பு, எழுதுபவர்ளை ஒருங்கிணைப்பது,  ஆவணப்படுத்துவது என்பதாகப் பயணம் தொடர்கின்றது.

இனி புத்தகம் பற்றிய விடயத்திற்கள் வருவோம்.  மேலே கூறிய பண்புகளை வெளிப்பாடுகளை கிரியிடம்  இந்த புத்தகத்தை வாசிக்கும் போது நீங்கள் உணர்வீர்கள். அதனை நான் உணர்ந்தேன்.  தேடலும் ஆராய்ச்சியும் அதனை சரியான இடங்களில் பொருத்தலுமாக பயணிக்கும் அவர் எழுத்துகள் எளிய நடையானவை என்பதை விட பல உசாத்துணைக்குரியவையாக எனக்குள் உணர்வை ஏற்படுதியிருக்கின்றன.

அவரது விருப்பமாக கனவாக ஏன் நனவாக வாழ விரும்பும் வாழுகின்ற ஒரு இலட்சிய தம்பதிகளாக காதலர்களாக இயங்கியல் இயற்கை என்றாக இலக்கியம் படைத்திருப்பதை இந்த புத்தகம் எடுத்துக் கூறு நிற்கின்றது.

ஒரே அலை வரிசையில் பயணிக்கும் கண்ணம்மா, கண்ணா என்ற செல்லப் பெயர்களுடன் மனோ ரஞ்சிதத்தையும் நவீன விக்கிராமித்தனையும் நீங்கள் அவரின் இந்த புத்தகத்தில் காணலாம். தொடர்ந்தும் விடா முயற்சியாக தேடலாக பயணிக்கும் ஒருவரின் எண்ண உணர்வாக இந்த பயணம் தொடர்கின்றது. இதற்குள் காதலும் அறிவியலும் புரிந்துணர்வும் விவாதங்களும் என்றாக ஒன்றாக பயணிப்பதற்குரிய வாழ்க்கை அமைகிறது.  தற்காலத்தில் 'தனித்துவம்' என்பது மேலோங்கி இணையர்கள் பிரிந்து செல்வதற்கு பெரிய தடையாக இருக்கும் தம்பதியினராக மனோரஞ்சிதம் விக்கிரமாதித்தனையும் காணலாம். எனக்கும் இந்த கண்ணம்மா மனோரஞ்சிதம் என்ற பெயர்களுடன் பெரிய ஈர்ப்பு இணைப்பு உண்டு.  இவை எல்லாம் எனது பால்ய வயது ஏன் தற்போதைய வாழ்வு என்று பலதாகவும் என் வாழ்வில் இப் பெயர்கள், 'செல்லங்கள்', பிணைந்து இருப்பதினால் அவரின் இந்த புத்தகத்துடன் இணைந்து ஈர்ப்புடன் பயணிக்க முடிகின்றது.

ஜன்ஸ்ரைனின் சார்ப்புக் கோட்பாடு, ஆற்றல் கோட்பாடு திண்மத்தில் இருக்கும் ஆற்றல் என்பதாகவும் இதில் அதிகக் கதைகளை உண்டு. அவை பற்றிய  விஞ்ஞானமாக,  எதிர்காலக் கண்டுபிடிப்பாக நகர்கின்றது இந்த புத்தகம். மொத்தமும் ஒரு கதையா அல்லது தனித் தனிக் கதைகளின் இணைப்பா என்றால் இரண்டுமே என்பேன்.  இது நாவலா? கட்டுரையா? உரையாடலா? அல்லது கவிதையும் கதையாடலும் இணைந்து எம் இளமைக் காலத்து இலங்கை வானொலியின் இசையும் கதை போன்றதா என்பது வாசிப்பவர்களின் மன நிலையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படலாம். என்னைப் பொறுத்த வரையில் கதையும் கவிதையும் என்றாக அறிவியல் அடிப்படையிலான தேடல் என்பேன்.

இதன்  ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு விஞ்ஞானக் கருப்பொருளை எடுத்து மனோரஞ்சிதமும் விக்கரமாதித்தனும் நடாத்தும் உரையாடல்கள்  கவித்துவமான பாணியில் நகர்ந்து இறுதியில் கவி வரிகளாக முடித்து வைக்கப்படுகின்றன. கவி வரிகளை மீண்டும் மீண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை வாசிப்பது போல் உள்ள பாணியை  இந்தப் புத்தகம் முழுவதும் நாம் காணலாம் , பாடல்களில் பல்லவி மீண்டும் மீண்டும் பாடப் படுவதைப் போல. அவை சுகமான சுவையாகத்தான் இருக்கின்றன.

இந்த விஞ்ஞான விடயங்களை கையாளுவதில் அவருக்கு தமிழின் தொன்மையான இலக்கியங்கள் உட்பட சமகால இலக்கியங்களில் வந்த பதிவுகள் குறிப்பாக கவிதைகள் இது மாதிரியான எழுத்தை நோக்கி எழுதுவதற்கு அவரைத் தள்ளியதாக என்னால் உணரப்படுகின்றது. தனது விஞ்ஞான எண்ணங்களுக்கும் ஏலவே கவிஞர்கள் கவிதைகளில் சொல்ல வந்த விடயங்களை ஆதாரமாக எடுத்துக் கையாளும் விதம் என்றாக சிறப்பாக நகர்கின்றது புத்தகம்.

பலரைப் போலவே பாரதியின் கவி வரிகளை அதிகம் தனது எழுத்திற்கு உறுதுணையாகவும் பாரதியின் பார்வையில் இருக்கும் பல்வேறு பரிணாமங்களையும் கோணங்களையும் கையாள முற்பட்டிருப்பது சிறப்பு. இதற்குள் Twinkle Twinkle little Star என்ற எமது பாலர் வகுப்பு ஆங்கிலப் பாடலையும் விட்டுவைக்கவில்லை கிரி.  எனக்குள் பிரமிப்பை ஏற்படுத்தியது எவ்வாறு புறநானூற்றில் ஆரம்பித்து சுஜாதா, சுரா , தளையசிங்கம் அ.ந.கந்தவாமி வரைக்கும் அவர்களின் எழுத்துகளை இவ்வளவு ஆழமாக வாசித்தறிந்திருக்க முடியும் என்பது. இது ஒரு மிகப் பெரிய ஆற்றல்தான் அது அணுவைப் பிளக்கும் போது எமக்கு கிடைக்கும் மிகப் பெரிய ஆற்றலான E = MC2ஐ விட அதிகமானது பலமானது என்றே என்றால் உணர முடிகின்றது. இந்த ஆற்றல் அழிவிற்கா? ஆக்கத்திற்கா? பாவிக்கப்பட போகின்றது என்பதும் வாசகர்களின் கையில் தங்கியுள்ளது. ஆனால் இந்த ஆற்றல் ஆக்கத்திற்கே பாவிக்கப்பட வேண்டும் என்ற சமாதான புறாவாகவே அவரின் மனேரஞ்சிசத்துடனான உரையாடல்கள் கூறி நிற்கின்றன.

நவீன விக்கிராமித்தன் இயற்கையுடன் கூடிய அமைதியான சமாதானமான எல்லோருக்குமான உலகை காண விரும்புகின்றான் என்பதை சகல இடங்களில் காண முடிகின்றது.  இதற்கான கனவுகளைக் காண்கின்றான். அதற்கான தேடலில் ஈடுபடுகின்றான். அது  பதின்ம வயது வவுனியா குளத்தங் கரை சூழல் வாழ்வாக இருக்கட்டும் யாழ் இந்துக் கல்லூரியில்  சிறகடிக்கும் வாழ்வாக இருக்கட்டும் பல்கலைக் கழக வாழ்வாக இருக்கட்டும் என்பதாக எங்கும் பரவி இருப்பதாக இந்தப் புத்தகம் உணர்த்துகின்றது.

தட்டையான இருபரிமாணத்தில் ஆரம்பித்து முப்பரிமாணம் என்கின்ற மனிதர்களின் கியூபிசம் என்று ஆரம்பித்து நேரத்தை இணைத்த நான்காவது பரிமாணம் என்று ஐஸ்ரனின் கோட்பாட்டிற்குள் புகுந்து, அணுவிற்கு வெளியேயும் உள்ளேயுமான முறையே செவ்வியல் இயற்பியல் (Classical Physics) குவாண்டம் இயற்பியல் (Quantum Physics) என்பதாகப் பயணிக்கின்றது. நான்கு பரிமாணங்களுக்கு அப்பால் இன்னும் பல பரிணாமங்கள் இருக்கலாம். ஆனால் அதனை மனிதர்களாய் நாம் காண்பது  உணர்வது முடியாது என்பதாகவும் செல்கின்றது புதினம்.  இது பின்பு அண்டமாக விரிந்து பிரபஞ்சம் என்று போய் எமது சூரியக் குடும்பத்தைத் தாண்டி வேறு சூரியக் குடும்பங்களை நோக்கி பயணிக்கும் தேடலாக பயணிக்க முற்படும் அத்தியாங்களை  நீங்கள் இந்தப் புத்தகத்தில் காண முடியும்.

இதற்கான கலைச் சொற்களாக  காலவெளி, காலக் கப்பற் பணயம், கூர்ப்பு, பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் என்ற காந்த மணிகள் போன்றவற்றை அவர் பாவிக்கின்றார். இன்னொரு முக்கியமான சிறப்பு மொழி நடையாக இப் புத்தகத்தில் தமிழ் சொற்களை கையாண்டு இருப்பதில் என்னால் உணரப்பட்ட வகையில்,  தமிழில் சொற்களை இணைத்துப் பேசுதலும் அவற்றை தனித்தனியாக பேசுதலை விட சிறப்பான சுவையைத தரும் என்பதுதான். இதனை புரிந்து கொண்டு இந்த புத்தகத்தில் இணைத்தலும் சேர்த்தலுமாகச் சொற்களை கையாண்டு எழுத்துகளைக் கையாண்டது மிகவும் சிறப்பாக உள்ளது. இதனை இந்தப் புதினம் முழுவதும் நீங்கள் காணலாம்.

இந்த சொற்களை இணைத்துப் பேசுதல் தனித்தனியாக பேசுதல் என்பது சுவைகளை ஏற்றும் இறக்கும் என்பது எமக்கு ஓரளவு பரிட்சயமான ஆங்கில மொழியிலும் ஏனைய மொழிகளும் உண்டு என்றாலும்  தமிழில் எதனைச் சேர்ப்பது எதனைப் பிரிப்பது என்பதை மிகச் சரியாக எழுத்து இணைவுகளைச்  செய்திருப்பது சிறப்பு. 'கண்களாக காப்பேன் கண்ணம்மா...' என்று காதலுடன் மனோரஞ்சிதத்தை பார்த்துக் கூறுவதும்,  ஆண் பெண் சமத்துவத்தை மறுதலிக்கும் பெண் ஆணில் தங்கியிருக்கும் ஒருத்திதான் என்ற பார்வையும், கருத்து முதல்வாதமும் பொருள் முதல்வாதமும் பிரிக்க முடியாமல்  காந்தத்தின் திணிவு(பொருள்) காந்த சக்தி என்பது போன்ற ஒப்பீட்டில் எனக்கு உடன்பாடு இல்லையாயினும் அது ஒரு விவாதத்தை கிளப்பித்தான் இருக்கின்றது.
 
புத்தக வாசிப்போருக்கு ஒரு வேண்டுகோள் இந்த புத்தகத்தில் 23 அத்தியாயங்கள் இருக்கின்றன. ஒரு அத்தியத்தை ஒரு நாள் வீதம் சற்று இடைவெளிவிட்டு வாசித்துவிட்டு  அதற்கான புரிதல் தேடலில் ஈடுபட்ட பின்பு சில நாட்களின் கழித்து மறு அத்தியாயம் என்று வாசித்தால் இதன் பயன்பாடுகளை புரிதலை சுவைகளை நாம் அதிகம் அடைய முடியும் என்பது என் உணர்வு . இந்தப் புத்தகம் மொத்தத்தில் வாசிக்க வேண்டிய புதினம்.

siva_easwaramoorthy@yahoo.com>

No comments:

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதும் சார்பானது!

எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது...

பிரபலமான பதிவுகள்