எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கத்துரை) என் பால்யப் பருவத்தில், எனக்குப் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். அக்காலகட்டத்தில் தினமணிக்கதிரில் வெளியான 'நீ நான் நிலா' தொடர் நாவலை (ஓவியர் கோபுலுவின் ஓவியங்களுடன் வெளியான தொடர்) விரும்பி வாசித்தேன். கல்கி இதழின் அல்லது தினமணிக்கதிரின் இலவச இணைப்பாக வெளியான இவர் எழுதிய நெடுங்கதையான 'நடு வழியில் ஒரு ரயில்' எனக்கு மிகவும் பிடித்த கதைகளிலொன்றாக அக்காலகட்டத்தில் விளங்கியது. இவையெல்லாம் அவர் ஶ்ரீ வேணுகோபாலன் என்னும் பெயரில் எழுதியவை. இவர் முதன் முதலாக புஷ்பா தங்கத்துரை என்னும் பெயரில் எழுதிய தொடர் நாவல் 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்று நினைக்கின்றேன். அது தினமணிக்கதிரில் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியானது. வெளியான காலத்தில் மிகுந்த வரவேற்பைப்பெற்றிருந்தது.
அறுபதுகளில் கல்கி சஞ்சிகையில் இவரது சிறுகதைகள், நெடுங்கதைகள், சிறப்புச் சிறுகதைகள் பல வெளியாகின. 'நடுவழியில் ஒரு ரயில்' நெடுங்கதை கூட முதலில் கல்கி சஞ்சிகையிலேயே வெளியானது. பின்னர் தினமணிக்கதிரின் இலவச இணைப்பாக வெளியானது. மறக்க முடியாத நெடுங்கதை அது. அவனோ அவளுக்கு எவ்வகையிலும் பொருத்தமற்ற ஆளுமை. ஆனால் அவள் மேல் அவன் உயிரையே வைத்திருக்கின்றான். பிரிந்து விடுகின்றார்கள். ஒரு தடவை அவள் பயணித்த புகையிரதம் நள்ளிரவில் நடு வழியில் நின்று விடுகின்றது. அதனைப் பாதுகாப்பாகக் கரை சேர்க்க வேண்டும். அதனைத் திருத்துவதற்கு அங்கிருந்த யாருக்குமே தெரியவில்லை. இந்நிலையில் படிப்பறிவற்ற, முட்டாள் என்று சமூகத்தால், அவனது அழகான மனைவியால் ஒதுக்கப்பட்ட அவன், தன் அனுபவ அறிவால் நள்ளிரவில் நடு வழியில் நின்று விட்ட அந்தப் புகையிரதத்தைத் திருத்திப் பாதுகாப்பாகப் பயணிகளைக் காப்பாற்றூகிறான. அதில் அவனது மனைவியும் பயணிக்கின்றாள். தன்னால் ஒதுக்கப்பட்ட தன் முன்னாள் கணவனைப் பார்த்து 'எவ்வளவு பெரியவர்' என்று நினைக்கின்றாள். அதை அவனுக்கும் கூறுகின்றாள். அது அவனுக்குப் பெருமையாகவும் இருக்கிறது. புகையிரதம் நகரத்துவங்குகின்றது. தன் அழகியான முன்னாள் மனைவியுடன் நகரமும் புகையிரதத்தைப் பார்த்து அவன் நிற்பதுடன் கதை முடிவுக்கு வருகின்றது. இவ்விதம் கதை நகர்கிறது.
முதல் வாசிப்பிலேயே உணர்ச்சிகரமாகப் படைக்கப்பட்ட கதை மறக்காமல் நெஞ்சில் ஆழத்தில் நிலைத்து நின்று விட்டது. இன்றுவரை நிற்கிறது. இது கதாசிரியரின் படைப்பின் வெற்றி. நான் இதனை முதன் முதலில் வாசித்தது தினமணிக்கதிர் இலவச இணைப்பாக வெளிவந்தபோதுதான்.
கல்கி - பெர்க்லி சிறுகதைப்போட்டியொன்றில் இவரது சிறுகதையான 'நாங்களும் நடிகைகள்' இரண்டாவது பரிசு பெற்றிருக்கின்றது. அவ்வருடத்துக்கான அப்போட்டியில் முதற் பரிசினைப்பெற்ற சிறுகதையான 'இவள் என் மனைவி' சிறுகதையினை எழுதியிருந்தவர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. அதுவே இ.பா. எழுதி நான் வாசித்த முதலாவது அவரது படைப்பு.
நான் ஶ்ரீ வேணுகோபாலனின் எழுத்துகள் என் வாசிப்பு அனுபவத்தில் இன்பமளித்த வெகுசன எழுத்துகளில் குறிப்பிடத்தக்கவை.
பொதுவாக எழுத்தையே நம்பி வாழும் , வாழ்ந்த எழுத்தாளர்களை நான் பெரிதும் மதிப்பவன். பொருளியல்ரீதியில் அவர்களது பங்களிப்பு சிறப்பாக அமையாது விட்டாலும், அவர்களது எழுத்துலகப் பங்களிப்பு முக்கியமானது என்று கருதுபவன். அவ்வகையில் எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலனையும் மதிப்பவன்.
வருமானத்தை மையமாக வைத்து புஷ்பா தங்கத்துரை என்னும் பெயரில் அவர் எழுதிய படைப்புகளில் 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகின்றது' படைப்பினைத் தவிர ஏனையவை என் கவனத்தைக் கவரவில்லை. அவை பெரும்பாலும் பாலுணர்ச்சியைத் தூண்டி பணம் சம்பாதிப்பதை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட வணிக எழுத்துகள். ஆனால் ஶ்ரீ வேணுகோபாலன் என்னும் பெயரில் அவர் எழுதிய பல படைப்புகள் இன்னும் நினைவிலுள்ளன.
எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலனின் நினைவு தினம நவம்பர் 10
ஶ்ரீ வேணுகோபாலனின் 'மதுரா விஜயம்'
எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலனின் சரித்திர நாவல்கள் முக்கியமானவை. திருவரங்கன் உலா என்னும் நாவலின் இறுதிப் பகுதி மதுரா விஜயம் என்னும் பெயரில் தினமணிக்கதிரில் தொடராக வெளியானது,. அதனை யாரோ ஒரு புண்ணியவான் கதிரில் வந்த தொடரை அழகாகக் கட்டி இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தியுள்ளார். ஓவியர் ராஜத்தின் ஓவியங்களுடன் வெளியான அத்தொடரை நீங்கள் பதிவிறக்கி வாசிக்கலாம். ஓவியர் ராஜத்தின் ஓவியங்களைப் பார்த்து மகிழலாம். ஓவியர் ராஜத்தின் ஓவியங்கள் ஓவியர் கோபுலுவை நினைவு படுத்துகின்றன.
எழுபதுகளில் வெளியான பக்கங்களை மீண்டும் பார்க்கையில் மனது அக்காலகட்டத்துகே சிறகடித்துப் பறந்து விட்டது. ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ரிஷி மூலம்', ஶ்ரீ வேணுகோபாலனின் 'நீ நான் நிலா', ஜெயகாந்தனின் 'ஒரு பிடி சோறு' தொகுப்புச் சிறுகதைகள், லட்சுமி சுப்பிரமணியத்தின் 'பொன் மாலைப் பொழுது' இவையெல்லாம் தினமணிக்கதிரில் நான் அக்காலகட்டத்தில் வாசித்து மகிழ்ந்தவை.
பதிவிறக்கி வாசிக்க - https://ia902708.us.archive.org/27/items/20230625_20230625_1057/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf
girinav@gmail.com
No comments:
Post a Comment