Sunday, November 5, 2023

தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலையம்) அமைப்பின் சமூக, அரசியல், கலை இலக்கியப்பங்களிப்புகள் பற்றிய சுருக்கமான அறிமுகப் பதிவு! - வ.ந.கிரிதரன் -


கனடாத் தமிழ்க் கலை, இலக்கிய உலகில் , சமூக,அரசியற் செயற்பாடுகளில் ஓர் அமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் இதுவரை இவ்வமைப்பு பற்றிய ,விரிவான , பூரணமானதோர் ஆய்வெதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்காக இவ்வமைப்புக்கு விருதுகள் எவையும் கொடுக்கப்பட்டதாகவும்  தெரியவில்லை. இருந்தாலும் இவ்வமைப்பு, எவ்விதப் பயன்களையும் கருதாமல் , இன்னும் இயங்கிக்கொண்டுதானுள்ளது. காலத்துக்குக் காலம் இவ்வமைப்புடன் இணைந்து இயங்கியவர்கள் பலர் ஒதுங்கி விட்டாலும், இன்னும் சிலர் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டுதானுள்ளார்கள்.  இவ்வமைப்பு பற்றிய விரிவான ஆய்வில் இதுவரை இவ்வமைப்புடன் இணைந்து  இயங்கியவர்கள் பற்றிய விபரங்களும் ஆவணப்படுத்தப்படுவது அவசியம். இப்பொழுது இந்த அமைப்பு எதுவென்னும் கேள்வி உங்கள் உள்ளங்களில் எழும்பத்தொடங்கியிருக்கும். இந்த அமைப்பு தேடகம் என்று அறியப்பட்ட தமிழர் வகைதுறை வளநிலையம்.

தேடகம் அமைப்பின் இதுவரை காலப் பல்வகைப் பங்களிப்புகளையும் நோக்கினால் பின்வரும் வகைகளில் அவற்றைப் பிரித்துப்பார்க்கலாம்:

1. நூலகப் பங்களிப்பு.
2. சமூக, அரசியற் செயற்பாட்டுப் பங்களிப்பு.
3. நாடகத்துறைப் பங்களிப்பு.
4. பதிப்புத்துறைப் பங்களிப்பு.
5. சஞ்சிகைப் பங்களிப்பு.
6. பல்வகை இலக்கிய நிகழ்வுகளை (நூல் வெளியீடு உட்பட) ஏற்பாடு செய்து நடத்தும் பங்களிப்பு.

1. நூலகம்

எண்பதுகளில், தொண்ணூறுகளில் பார்ளிமெண்ட் & வெலஸ்லி பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த தேடகம் அமைப்பினரின் நூலகம்  கனடாத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நூலகம்.  அங்கு தமிழப்பத்திரிகைகள், சஞ்சிகைகளை வாசிப்பதற்காகவும், நூல்களை இரவல் பெறுவதற்காகவும் சென்றவர் பலர். தேடகம் நூலக எரிக்கப்பட்டதானது கனடாத் தமிழர் மத்தியில் ஒரு கரும்புள்ளியாக எப்போதுமிருக்கும்.

2.  சமூக, அரசியற் செயற்பாட்டுப் பங்களிப்பு.

காலத்துக்குக் காலம் தேடகம் அமைப்பானது தாயகத்தில், உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் அடக்கு ஒடுக்குமுறைகளுக்கெதிராகக் குரல் கொடுத்ததுடன் , ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை  நடத்தியும் , பிறர் நடத்தும் ஊர்வலங்களில் பங்குபற்றியும் வந்துள்ளது.  எண்பதுகளில் இனவெறி பிடித்த தோற்தலையர்கள் (Skin Heads) ஏனைய இனமக்கள் மீது நடத்திய தாக்குதல்களில் தமிழர் ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார். அச்சமயம் இனவெறிக் குழுவான தோற்தலையர்களுக்கெதிராகப் பார்ளிமண்ட் வீதியால் தேடகம் அமைப்பால் நடத்தப்பட்ட கண்டன ஊர்வலத்தில் பலர் கலந்துகொண்டனர். அக்காலகட்டத்தில் தோற்தலையர்களுக்கெதிராகக கடுமையாக இனவாதத்துக்கெதிராக இன்னுமொரு கனடிய அமைப்பும் டொரோண்டோ மக்கள் மத்தியில் இயங்கிக்கொண்டிருந்தது. அந்த  அமைப்பின் தோற்தலையர்களுக்கெதிரான தொடர்ச்சியான செயற்பாடுகளே இறுதியில் தோற்தலையர்களின் செயற்பாடுகளை முடங்க வைத்தன.

3. நாடகத்துறைப் பங்களிப்பு.

தேடகம் அமைப்பினரின் நாடகத்துறைப் பங்களிப்பு முக்கியமானது. தமிழர் வகைதுறை நிலையம் என்பதன் சுருக்கமான 'தவநி' என்னும் பெயரில் நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. எழுத்தாளர் ப.அ.ஜயகரனின் 'எல்லாப் பக்கமும் வாசல்', 'உள்ளிருந்து' , பொடிச்சி, சப்பாத்து, போன்ற  நாடகங்கள், புகழ்பெற்ற ஜெர்மனிய நாடகாசிரியரான ஸீக்ஃப்ரீட் லென்ஸின் 'நிரபராதிகளின் காலம்' , பலிக்கடாக்கள்', 'பொடிச்சி' என அதன் நாடகத்துறைப் பங்களிப்பு விரிவாக ஆராயப்பட வேண்டியதொன்று. தேடகம் அமைப்பு நடத்திய நாடகப் பட்டறைகளும் முக்கியமானவை. இப்பட்டறை மூலம் தம்மைப் புடமிட்டு சிறந்த நடிகர்களாக வளர்ந்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர்  பாபு பரதராஜா. இவரது மறைவின்போது எழுத்தாளர் பா.அ.ஜயகரன் எழுதிய அஞ்சலிக் குறிப்பில்  பின்வருமாறு குறிப்பிட்டுருப்பார்:

"தேடகத்தினால் நடாத்தப்பட்ட நாடகப் பட்டறைகளிலும் பங்குபற்றி தன்னையொரு வளமிகு நடிகனாக வளர்த்துமிருந்தார். நாடகத்தின்பால் கொண்ட ஈடுபாட்டால் ரொரன்டோவில் தீவிர நாடகத்திற்காக 'மனவெளி கலையாற்றுக் குழு' வை தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து உருவாக்கி 'அரங்காடல்' எனும் தீவிர மேடை நாடக நிகழ்வை நிகழ்த்துவதுற்கு முன்னோடியாக நின்றவர்."

டொராண்டோவில் 'மனவெளி கலையாற்றுக் குழு' ('அரங்காடல்' நாடக நிகழ்வை நடத்தும் அமைப்பு), நாளை நாடக அரங்கப்பட்டறை. கருமையம் போன்ற நாடகத்துறை அமைப்புகள் உருவாவதற்கு உந்து சக்தியாவிருந்தது தமிழர் வகைதுறைவள நிலையம் (தவநி) அமைப்பும்  அதன் நாடகப்பட்டறை என்றும் கூறலாம்.

'தவநி' பற்றி பதிவுகள் இணைய இதழுக்கு வழங்கிய நேர்காணலில் பா.அ.ஜயகரன் பின்வருமாறு கூறியுள்ளார்:

"கனடாவில் தமிழ் நவீன நாடகத்துறைக்கு ஊற்றுகோலாய் இருந்தது தேடகம் அமைப்புத்தான். (தமிழர் வகைதுறைவள நிலையம் - தவநி). தவநி தான் எனது முதலாவது நாடகமான பொடிச்சியையும் இரண்டு புள்ளிகள் நாடகத்தையும் தயாரித்து அளித்தது. கனேடிய தமிழ் நாடக சூழலின் முனைப்புக்கு தவநிதான் முதற் காரணம். மனவெளி, நாளை நாடக அரங்கப் பட்டறை போன்றவற்றின் தோற்றத்திற்கும் தவநியே காரணம். நாம் எல்லோருமே தவநியின் அளிக்கைகளாலும், பட்டறைகளாலும் வளக்கப்பட்டவர்களே. எல்லாப்பக்கமும் வாசல் நாடகப் பிரதியை நு¡லாக தவநியே வெளியிட்டது."


4. பதிப்புத்துறைப் பங்களிப்பு.

கவிஞர் சேரனின் 'எலும்புக்  கூடுகளின் ஊர்வலம்', கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் 'ஒரு அகதியின் பாடல்', கலாச்சாரப் பேரவையுடன் (கரவெட்டி) இணைநது வெளியிட்ட செ.கதிர்காமநாதன் கதைகள்  இவையெல்லாம் தேடகம் அமைப்பின் பதிப்புத்துறைச் சாதனைகள்.  இங்கு நான் உதாரணங்களாகச் சிலவற்றைக் குறிபிட்டாலும் , தேடகம் அமைப்பின் சரியான பங்களிப்பை அறிவதற்கு முறையான ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதையும் இத்தருணத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்.

5. சஞ்சிகைப் பங்களிப்பு.

கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் ஒன்றான 'தேடல்' சஞ்சிகை தேடகம் அமைப்பினரால் வெளியிடப்பட்டது. பதினாறு இதழ்கள் வெளியாகியுள்ளன. இதழ் 14 என்று இரு இதழ்கள் (1994 மற்றும் 1996) வெளியாகியுள்ளன. வடிவமைப்புச் செய்தவரின் தவறாக இருக்க வேண்டும். வெளிவந்த இதழ்களில் முதலிரண்டையும் தவிர ஏனையவற்றை 'படிப்பகம்' இணையத்தளத்தில் ஆவணப்படுத்தி வைத்துள்ளார்கள்.

'தேடல்' சஞ்சிகையில் கவிதைகள், மனித உரிமை சார்ந்த கட்டுரைகள் , அறிவியற் கட்டுரைகள், சினிமா பற்றிய கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள் எனப் பல்வகையான காத்திரமான ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. செழியன், விதுரன், பா.அ.ஜயகரன், வ.ஐ.ச.ஜெயபாலன், அமுதன், பாமதி, சகாப்தன், ஆனந்தபிரசாத், சிவம், கிறிசாந் பாக்கியதத்தா என்று பலர் கவிதைகள் எழுதியிருக்கின்றார்கள். மொழிபெயர்ப்புக் கவிதைகள் சிலவும் பிரசுரமாகியுள்ளன. சபா வசந்தன், விதுரன், சகாப்தன், வ.ந.கிரிதரன், ஜோர்ஜ்.இ.குருஷேவ் , கோவை றைதன் (இவர் எழுத்தாளர் சகாப்தன், இயற்பெயர் வேல்றைதன் என எழுத்தாளர் பா.அ.ஜயகரன் அறியத்தந்தார்), அருள்தாஸ் என்று பலர் சிறுகதைகளை எழுதியுள்ளார்கள். கட்டுரைகளை செழியன் (இவரது 'ஒரு போராளியின் நாட்குறிப்பு' தொடராக வெளிவந்துகொண்டிருந்தது), பேராசிரியர் சி.சிவசேகரம், வ.ஐ.ச.ஜெயபாலன், பா.அ.ஜயகரன், வ.ந.கிரிதரன், நேசன், ரதன் , ஆரூரான், எஸ்.வி.ராஜதுரை.. .. என்று பலர் எழுதியிருக்கின்றார்கள். இவை தேடலில் எழுதியவர்களின் முழுமையான பட்டியல் அல்ல. ஓருதாரணத்துக்காகக் குறிப்பிட்டுள்ளேன்.

நந்தலாலா ஆசிரியர் குழுவைச்சேர்ந்த எழுத்தாளார் ஜோதிகுமார் கனடா வருகை தந்திருந்தபோது அவருடன் நடாத்திய நேர்காணல். நீண்டதொரு விரிவான நேர்காணல். அதனைத் தேடல் சஞ்சிகைக்காக நான் செய்திருக்கிறேன். இன்னும் தேடல் சஞ்சிகைகளின் தொகுப்பொன்று வெளிவராதது துரதிருஷ்ட்டமானது. எதிர்காலத்தில் வெளியாகுமென்று எதிர்பார்ப்போம்.


                               - தமிழர் வகைதுறைவள நிலையச் சின்னம் -

6. பல்வகை இலக்கிய நிகழ்வுகளை (நூல் வெளியீடு உட்பட) ஏற்பாடு செய்து நடத்துதல்.

தேடகம் நடத்தி வரும் பல்வகை இலக்கிய நிகழ்வுகள் முக்கியமானவை. நூல் வெளியீட்டு அறிமுக நிகழ்வுகள், இலக்கியப் போக்குகள் பற்றிய கலை, இலக்கிய ஆளுமைகளின் உரைகளும், அவை  பற்றிய கலந்துரையாடல்கள் இவ்விதத்தில் முக்கியமான அதன் பங்களிப்புகள். இவை இதுவரை முறையாக ஆவணப்படுத்தபபடவில்லை. ஒருகாலத்தில் தேடகம் தொடர்ச்சியாக நடத்திய பின் நவீனத்துவம் பற்றியஇலக்கிய நிகழ்வுகள் முக்கியமானவை. முன்னாள் யாழ் பல்கலைகழக விரிவுரையாளர் ராஜேந்திரன் நடத்தினார்.

இவ்விதமான இலக்கிய நிகழ்வுகளில் முக்கியமானவைகளில் ஒன்றாகத்   தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் அறிமுக நிகழ்வைக் குறிப்பிடலாம். இதில் நானும் கலந்துகொண்டு விரிவானதோர் உரையினை ஆற்றியிருந்தேன்.

தேடகம் அமைப்பென்றதும் எனக்கு நினைவுக்கு வருபவர்கள் எழுத்தாளர் பா.அ.ஜயகரன், மயில், சேனா, குமரன், அமரர் நெல்லியடி சிவம் (கணேசமூர்த்தி சிவகுமாரன்), கவிஞர் செழியன், சபேசன், அருள் நாகமுத்து, பாபு பரதராஜா, ரதன், ராதா, 'காந்தியம் சண்முகலிங்கன்', தேவன், இளங்கோ, குமார் மூர்த்தி.  இவர்களை ஓர் உதாரணத்துக்குக் குறிப்பிட்டேன். இவர்களில் சிலர் தற்போது தேடகம் அமைப்பிலில்லை.  இது முறையான, முழுமையான பட்டியல் அல்ல. தேடகம் அமைப்பைத் தொடங்கும்போது இருந்தவர்கள், இடையில் வந்து இணைந்தவர்கள், இணைந்து விலகியவர்கள், தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் பற்றிய சரியான விபரங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.  அதனைத் தேடக நண்பர்கள் செய்வார்களென்று நம்புகின்றேன்.

இவ்விதமான ஆவணப்படுத்தலுக்கு 'தேடகம்' பற்றிய ஓர் இலக்கிய மலரினை வெளியிடலாம். அதில் அனைத்து விபரங்களையும் உள்ளடக்கலாம். அதே சமயம் தேடகம் வெளியிட்ட 'தேடல்' இதழ்களின் தொகுப்பொன்றைக் கொண்டு வரலாம். அதில் தேடகம் பற்றிய விரிவானதோர் ஆய்வுக்கட்டுரையினையும் உள்ளடக்கலாம்.

தேடகம் அமைப்பின் வருடந்தோறும் நடைபெறும் ஒன்று கூடலும் முக்கியமானதொரு கலை, இலக்கிய நிகழ்வு. கடந்த சில் வருடங்களாக , 'கொரோனா' பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை.

இவ்விதமாகத் தேடகம் அமைப்பின் பல்வகைப்பங்களிப்புகள் பற்றிய விரிவான தகவல்கள் திரட்டப்பட்டு அவை ஆவணப்படுத்தப்படுவது மிகவும் முக்கியமானது. இதுபோல் இதுவரை தேடகம் அமைப்பில் இணைந்து இயங்கியவர்கள், இப்போதும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் இவர்கள் பற்றிய விபரங்கள் எல்லாம் ஆவணப்படுத்தப்படுவது மிகவும் அவசியம். ஏனென்றால் இவை  கனடியத் தமிழர் வரலாற்றின் முக்கியமான தவிர்க்க  முடியாத பகுதிகள்.

girinav@gmail.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்