Saturday, November 25, 2023

(பதிவுகள்.காம்) முதலாவது சந்திப்பு 50: உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் ‘ பதிவுகள் ‘ கிரிதரன் ! - முருகபூபதி -


- எழுத்தாளர் முருகபூபதி , யாழ் மாவட்டத்திலிருந்து  வெளியாகும் 'தீம்புனல்' வாரப் பத்திரிகையின் நவம்பர் 20, 2023 பதிப்பில் 'முதலாவது சந்திப்பு' தொடரில் 'உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் பதிவுகள்  கிரிதரன்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை. பதிவுகள் இணைய இதழ் பற்றியும் என்னைப்பற்றியும்  எழுதியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி.

எழுத்துலகம் விசித்திரமானது. ஒரு எழுத்தாளரை மற்றும் ஒரு எழுத்தாளர் எளிதில் அங்கீகரித்துவிடமாட்டார். புராணத்தில் வரும் சிவனுக்கும் அரசவைப் புலவர் நக்கீரனுக்குமிடையே நிகழ்ந்த வாதம் பற்றி அறிவீர்கள்.

“ ஒரு பெண்ணின் கூந்தலின் மணம் எவ்வாறிருந்தால்தான் என்ன..? அதற்காக வாதப்பிரதிவாதமா..? அதற்காக நெற்றிக்கண்ணால் சுட்டு பொசுக்க வேண்டுமா..? இதுவும் வன்முறைதானே ! “ என்று இன்றைய எமது குழந்தைகள் வினா தொடுக்கிறார்கள். அடுத்துவந்த, கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் மத்தியில் நிகழ்ந்த வாதங்களும் பேசப்பட்டுள்ளன. மொத்தத்தில் எழுத்துலகம் விமர்சனம், அவதூறு, மோதல், எதிர்வினை, தாக்குதல் எனத்தொடருகின்றது. முகநூல் அறிமுகமானதன் பின்னர், நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. இந்தப்பின்னணிகளுடன்தான், கனடாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் இணைய இதழை தங்கு தடையின்றி நடத்திவரும் வ. ந. கிரிதரன் அவர்களை அவதானிக்கின்றேன்.இவரது பதிவுகள் இணைய இதழில் நான் தொடர்ந்து எழுதிவந்திருந்தாலும், அபூர்வமாக எப்போதாவது சந்தர்ப்பம் கிடைக்கும்போதுதான் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றேன். அதற்கு நான் வதியும் அவுஸ்திரேலியா – அவர் வதியும் கனடா நாடுகளின் நேர வித்தியாசமும் முக்கிய காரணம்.

கடந்த ஜூன் மாதம் கனடா ஸ்காபரோவில் நடந்த தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழாவில்தான் முதல் முதலில் கிரிதரனை சந்தித்தேன். நீண்ட காலம் உறவாடிய உணர்வுடன்தான் நாம் அன்றைய தினம் ( ஜூன் 04 ஆம் திகதி ) பேசிக்கொண்டோம். அதற்குக்காரணம் அவரது பதிவுகள் இணையத்தளத்தை நானும் எனது எழுத்துக்களை அதில் பதிவேற்றிவரும் அவரும் பரஸ்பரம் எழுத்தின் ஊடாகவே நெஞ்சத்திற்கு நெருக்கமாகியிருந்தோம்.

அவர் எனக்காக இரண்டு சந்திப்புகளையும் கனடாவில் ஏற்பாடு செய்திருந்தார். இலக்கியவாதிகளை இணைக்கும் பண்பும் கொண்டிருப்பவர்தான் கிரிதரன். பதிவுகள் இணைய இதழில் உலகெங்கும் வாழும் எழுத்தாளர்கள் பலர் தொடர்ந்தும் எழுதிவருகின்றனர். அவர்களின் கடிதங்கள், மற்றும் எதிர்வினைகளுக்கும் கிரிதரன் போதியளவு களம் வழங்கிவருகிறார். கிரிதரனுக்கும் கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் இம்முறை இலக்கிய சாதனை விருது வழங்கி கௌரவித்து பாராட்டியது.

விருது விழாவில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் கிரிதரன் பற்றி பதிவாகியிருக்கும் குறிப்புகளில் சிலவற்றை இங்கே தருகின்றேன்.

“வண்ணார்பண்ணை , யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர் வ. ந. கிரிதரன், தற்போது கனடாவில் வசித்துவருகின்றார். கட்டடக்கலை பட்டதாரியான இவர், ரொறொன்ரோ சென். டானியல் கல்லூரியில் இலத்திரனியல் பொறியியல் துறையிலும் தகவல் தொழில் நுட்பத்துறையிலும் பல்வேறு கல்வித் தகைமைகளைப் பெற்றவர். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம், நகர அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய இவரது படைப்புகள், இலங்கை, தமிழகம், மற்றும் புகலிடத் தமிழர்கள் வெளியிட்ட சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. தமிழகப்பல்கலைக்கழகங்களில் இவரது படைப்புகளைப்பற்றி முனைவர், இளமுனைவர் பட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

பொந்துப்பறவைகள் என்னும் சிறுகதை சிங்கப்பூர் கல்வி அமைச்சினால் தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டமொன்றில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா என்ற இவரது நூல், தமிழ்நாடு அமெரிக்கன் கல்லூரியின் பாடத்திட்டத்திலுள்ளது.

ஆனந்தவிகடனின் பவளவிழாப்போட்டி எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை மற்றும் ஆழி பப்ளிஷர்ஸ் இணைந்து நடத்திய உலக அளவிலான அறிவியற் சிறுகதைப்போட்டி ஆகியனவற்றில் பரிசுகளை பெற்றுள்ளன.

மனோன்மணியம் மீனாட்சி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறையில், முனைவர் பட்ட ஆய்வுக் கைநூலில் புகலிட நாவல்களில் படிக்கவேண்டிய நாவலாக இவரது An Immigrant – குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பதிவுகள் இணைய இதழின் ஆசிரியராக 2000 ஆம் ஆண்டிலிருந்து செயலாற்றி வருகிறார். முனைவர் பட்ட ஆய்வாளர்கள், இள முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்களின் ஆய்வுக்கட்டுரைகளை பிரசுரிக்கும் பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழாகவும் பதிவுகள் விளங்குகின்றது. இவர்களின் ஐநூறுக்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகள் பதிவுகள் இணைய இதழின் ஆய்வுப்பிரிவில் பிரசுரமாகியுள்ளன. சிறுகதை, கவிதை, இலக்கியம், நாவல், நூல் விமர்சனம் என பல்வகைப்பிரிவுகளில் படைப்புகள் வெளிவந்துள்ளன. “


இவ்வாறு தனது வாழ்நாளில் பல இலக்கிய சாதனைகளை புரிந்திருக்கும் கிரிதரன், தமது பதிவுகள் இணைய இதழில் பல படைப்பாளிகளின் நூற்றுக்கணக்கான ஆக்கங்களை பாதுகாப்பாக சேமித்தும் வைத்துள்ளார். இலக்கிய மாணவர்களுக்கும், எழுத்தாளர்களின் வாழ்வையும் பணிகளையும் தெரிந்துகொண்டு தத்தமது பார்வையில் எழுதவிரும்புபவர்களுக்கும் அந்த ஆக்கங்கள் உசாத்துணையாக விளங்குகின்றன. இலங்கை, தமிழகம், சிங்கப்பூர், மலேசியா, மற்றும் தமிழர் புகலிடம்பெற்று வாழும் உலக நாடுகளில் வதியும் கலை, இலக்கியவாதிகள், தமிழ் வாசகர்கள் விரும்பிப்படிக்கும் சிறந்த இணைய இதழாக பதிவுகள் இணையத்தளத்தை நடத்திவரும் கிரிதரன், அதனை அவர்களை இணைக்கும் பாலமாகவும் அமைத்திருப்பதுதான் விதந்து குறிப்பிடப்பட வேண்டிய சாதனை.

அண்மையில் கிரிதரன், ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் , வ. ந. கிரிதரனின் கட்டுரைகள், நவீன விக்கிரமாதித்தன் ஆகிய மூன்று நூல்களை வரவாக்கியிருக்கிறார். இவற்றின் வெளியீட்டு அரங்கு சமீபத்தில் கனடா, ஸ்காபரோவில் நடந்தது. தானும் தொடர்ந்து எழுதியவாறே, ஏனையவர்களையும் எழுதத்தூண்டி, அவர்களின் படைப்புகளுக்கும் தனது பதிவுகள் இணைய இதழில் போதிய களம் வழங்கி வருகின்றார்.
அரசியல். இலக்கியம், சிறுகதை கவிதை, நிகழ்வுகள், ஆய்வு, நாவல் முதலான பிரிவுகளில் இந்தத் துறைகள் சார்ந்த எழுத்துக்கள் அதில் வெளியாகின்றன.

இலங்கையில் ஊடகக்கற்கை நெறி பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள் எமது எழுத்தாளர்களின் படைப்புகளை முன்வைத்து தமது இளமாணி , முதுமாணி மற்றும் MPhil பட்டங்களுக்காக ஆய்வுசெய்துவருகின்றனர். அத்தகைய மாணவர்களுக்கு தேவைப்பட்ட உசாத்துணை தகவல்கள் நிரம்பப்பெற்றிருக்கிறது கிரிதரனின் பதிவுகள் இணைய இதழ். பாடசாலை, கல்லூரி அதிபர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்த இணைய இதழை தமது மாணவர்களுக்கு பரிந்துரை செய்யலாம்.

இணையத்தளம்: https://www.pathivukal.com  https://www.geotamil.com

 தொடர்ச்சியாக அயராமல் தானும் எழுதி, மற்றவர்களையும் எழுதத்தூண்டிவரும் வ. ந. கிரிதரனுடைய இலக்கியப்பணி விதந்து போற்றுதலுக்குரியது.

letchumananm@gmail.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்