Monday, November 6, 2023

வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிய ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -


எழுத்தாளரும், இலக்கியத் திறனாய்வாளருமான ரஞ்ஜனி சுப்ரமணியம்   அண்மையில் ஓவியா (தமிழகம்)  பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிச் சிறப்பானதொரு விமர்சனத்தை எழுதியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி.  பதிவுகள் இணைய இதழில் வெளியான அவ்விமர்சனத்தை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.



அகவயமான வாசிப்பினை வேண்டுவதே இலக்கியம். எனினும் புற உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப அமைப்பாலும் உட்பொருளாலும் மாற்றம் காண்பது தவிர்க்க முடியாதது. மனிதகுலமே கூர்ப்பின் வழி இன்றிருக்கும் வடிவில் வந்திருக்கும் போது, இலக்கிய வடிவங்களும் அதன் இலக்கணங்களும் மாறக்கூடாது எனக் கூறமுடியுமா?

'இலக்கியம் ஒரு யானை . நம்நாட்டு இலக்கியவாதிகள் தமக்குள் குழுக்களாகப் பிரிந்து தாம் சொல்வதுதான் சரியென, யானை பார்த்த அந்தகர் போல வாதிட்டுக் கொண்டு இருக்கின்றனர்' என்கிறது நாவலில் வரும் உரையாடல் ஒன்று. உண்மை. எல்லைகள் அற்றதே இலக்கியம்.

'இலக்கியம் சமுதாய பயன் கொண்டதாக அமைய வேண்டிய அதேசமயம் அது எழுத்தின் கலைத்துவத்தை சிதைத்து விடவும் கூடாது' எனும் கருத்தும் நாவலில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படைப்பின் ஆசிரியர் ஆரம்பத்திலேயே கூறிவிட்டார் இது நாவல் தான் என. ஆம்.நாவல்தான். இதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் சுதந்திரம்.இந்த நாவல் அறிவும் அழகும் இணைந்த புதியதோர் வடிவம் எனக் கொள்ளலாம். இங்கும் காலம், களம், கதைமாந்தர், மையக்கருத்து அனைத்தும் உண்டு.இங்கு கூறப்பட்டிருக்கும் விடயங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கும் வழமைக்கு மாறான அழகியல் ரசனைக்கும் உரியவை என்பதிலும் சந்தேகம் ஏதும் இல்லை.

உரைநடையும் கவிதையும் இணைந்தது இப்படைப்பு.  இலக்கணங்களுடன் கூடிய அன்றைய மரபுக் கவிதைகள், மகாகவி பாரதியால் புதுக் கவிதைகளாகி, இன்றைய நிலையில் சில சமயங்களில் புரியாத கவிதைகளாயும் உருமாறி உள்ளன. அதுபோல ஒரு சில புரியாத கவிதைகளும் இங்கு உண்டு. படைத்தவருக்குத் தெரியும். கவிதை வல்லுனர்களுக்கு அதன் உள்ளார்ந்த அர்த்தங்களும் உணர்வுகளும் புரியும். அதனால் கதையும் கவிதையும் இணைந்த 'நவீன விக்கிரமாதித்தன்' எனும் இந்நாவலில் படைப்பாளரின் தேடுதல் என்னவாக இருக்கும் என்பதை அறிதல் ஆர்வத்துக்கு உரிய விடயம்.

"A good novel tells us the truth about its hero; but a bad novel tells us the truth about its author." - G.K. Chesterton -

''ஒரு நல்ல நாவல் அதன் நாயகனைப் பற்றிய உண்மையைச் சொல்கிறது; ஆனால் ஒரு மோசமான நாவல் அதன் ஆசிரியரைப் பற்றிய உண்மையைச் சொல்கிறது''. - ஜி.கே. செஸ்டர்டன் -

இந்த நாவலின் நாயகனூடாக வெளிப்படுவது படைப்பாளரின் சிந்தனைகளே என சமர்ப்பணஉரை, சாட்சி கூறுகின்றது. அவை மானுட உணர்வுகளை மட்டுமல்ல, கலை . இலக்கியம்,  அரசியல்,  பொருளாதாரம்,  வானியற்பியல் முதலான அனைத்தையும் பேச முயல்கின்றன என நாவலின் நாயகனாகவும் வெளிப்படுத்தி உள்ளார். சிறப்பான சிந்தனைகள்.

படைப்பாளரும் கதைநாயகனுமாகிய அந்த ஒருவர், நவீன இயற்பியலின் தந்தையான அறிஞர் ஐன்ஸ்டீனின் அறிவியலிலும், மகாகவி பாரதியின் கவிதைகளிலும் மனதைப் பறிகொடுத்தவர். இந்நாவல் கூறும் இயல்புகளின் படி , படைப்பின் நேர்த்தி பற்றியும் இயற்கையின் தூய்மை நிலைப்பினைப் பற்றியும் சிந்திப்பவராக இருக்கிறார். பால்வெளி, அண்டம், காலம், வெளி பரிமாணம் பற்றியதான பெருவியப்பும் அவரது உள்ளத்தில் உறைந்து இருப்பதாக உணரத் தருகிறார்.   'கனலுதிர்க்கும் கட்டடக் காடுகளால்' சூழப்பட்டு , 'வாயுப்படைகளின் வடிகட்டலில் வடியும் உஷ்ணக் கதிர்களால்' சிந்தையில் வெம்மை தகித்து வாடுகிறார். மானுடத்தின் 'இருப்பு' பற்றிய விந்தையை நிதமும் சிந்திக்கிறார்.

கலை இலக்கியங்களில் தீராத வேட்கை கொண்டவராக தன்னை வெளிப்படுத்தும் இவர் கியூபிசப் பாணி ஓவியங்களின் மேலும் தன் ரசனையை முன்வைக்கிறார். சிக்கலான இவ்வடிவங்கள் போலவே நாயகனது உணர்வுகளும் பகுத்தறிந்து நோக்கப்பட வேண்டிய தன்மை கொண்டன.

காலவெளிச் சட்டகங்களின் சாத்தியம் பற்றி சிந்திக்கும் கதைநாயகன், காலக்கப்பலில் ஏறி முன்னோக்கியும் பின்னோக்கியும் பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர். தனது அகவெளி நட்புகளாக சதுரன், வட்டநிலா தம்பதி, மின்காந்தமணி, பரிமாணச் சித்தன் எனும் விநோத மனிதர்களைக் கொண்டுள்ளார். பரிமாணத்திலும் தோற்றத்திலும் மனிதர்களை விட வேறுபடும் இவர்கள் எம்மை விட முன்னேறிய அல்லது முன்னேற்றமடையாத வேறோர் கிரகத்தில் வாழும் சாத்தியம் கொண்டவர்கள். 'உனக்கும் எனக்கும் இடையில் ஒளியாண்டு தடைச்சுவர்கள்' என்ற ஏக்கத்துடன், இவர்களிடையே நடக்கும் உரையாடல் மிகவும் சுவாரசியமானது.

தன்னை ஒத்த ரசனைகள் புரிந்துணர்வு மற்றும் வாதத்திறன் கொண்ட அழகி 'மனோரஞ்சிதம்' என்னும் கண்ணம்மாவின் மேல் பதின்ம வயதில் இருந்தே தீராக்காதல் கொண்டவராகவும் இருக்கிறார். 'விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றைத்தான் இருவேறு பார்வைகளில் அணுகுகின்றன' என்பது கண்ணம்மாவின் வாதம்.  அண்டவெளி முதலாய் இன்றைய உலகியல் நடப்பு  பற்றிய தெளிவினைப் பெறும் முகமாக, இருவரிடையே அறிவியல் ரீதியான தர்க்கங்களும் உரையாடல்களும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.  ஓயாத தேடல்களுடன் கவிதைகளும் காதல் சரசங்களுமாக நகரும் இப்படைப்புக்கு முடிவு ஒன்று இருக்க வேண்டுமல்லவா?  தத்துவ நிறுவல்களும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் மாற்றம் காணும் இவ்வுலகில், அந்த முடிவுரையை எழுதும் பொறுப்பை அதிசயங்கள் நிறைந்த உலக நியதியிடமே கையளித்து காலவெளியில் களித்துக் கிடக்கின்றனர், இந்த வினோத காதலர்கள். 'இருப்பை, இருப்பது போல் ஏற்றுக் கொள்வோம். இன்பமாக இருப்போம். என்றும் இருக்கும் வரை புதிதாய் பிறப்போம்' என்ற வசனங்களை நாவலின் முடிவுரையாகக் கொள்ளலாம்.

இந்த இருவரின் உரையாடலிலும் எண்ண ஓட்டங்களிலும் இருந்து மனதைக் கவர்ந்த அல்லது பாதித்த சில விடயங்கள்.....

அனுமானிக்கப்பட்ட (Hypothetical) விஞ்ஞான தத்துவமாக இன்று உள்ள, ஒளியின் வேகத்தை மிஞ்சிய துகள்களான டகியோன்ஸ்( Tachyons) பற்றிய அறிமுகம்....

விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றத்தில் 'தொலைகாவுதல்' மூலம் அன்றாட பயணங்கள் சாத்தியமாகும் என்ற வியப்புமிகு சிந்தனை.....

தேசிய இன மத மொழி வர்ணப் பிரிவுகளை மேலோங்கச் செய்து பிளவுகளை ஊக்குவித்து, உலகின் வறிய நாடுகளின் வளங்களைச் சுரண்டும் செல்வந்த நாடுகளின் கீழ்மை நிறைந்த எண்ணம்...

இரைப்பையில் நீரையும் திமிலில் கொழுப்பையும் சேமித்து வைத்து நெடுந்தூர பாலைவனம் கடக்கும் ஒட்கங்கள், அகதிகளுக்கான குறியீடாகக் கொள்ளப்படுதல்...

யுத்தங்களாலும் சூழல் மாசடைதலாலும் அழிவை நோக்கிய பூமிப்பந்தில் 'அதிமானுடரின்' வருகை எதிர்பார்க்கப்படுதல்..

பலங்குறைந்தவை அதிகளவிலும், பலம் கூடியவை எண்ணிக்கையில் குறைவாகவும் உள்ள உணவுச் சங்கிலியானது, இயற்கைச் சமநிலையின் விந்தையாதல் பற்றிய கருத்து....

பிறமொழிச் சொற்கள் தமிழில் உள்வாங்கப் படுவதால் தமிழ் சிதைவுறப் போவதில்லை எனும் உட்கருத்து

தன் பால்யகாலச் சினேகிதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகமொன்றை பழைய புத்தகக் கடையில் நீண்டகாலத்தின் பின் காணும் போது 'பழைய புத்தகக் கடையில் பழசாகி விட்ட இதயங்களும் கிடைப்பதுண்டு' எனும் உருக்கம்மிகு வசனம்....

அதேபோன்ற மனதைத் தாக்கிய வேறோர் நீண்ட கவிதையில்  (P 136 & 137)

'அந்தப் பார்வையைத் தப்பியோட ஒரு போதுமே விட்டிடாதே...'
'உன்னிதயத்தின் ஆழத்தே அந்தப் பார்வைத் துண்டத்தைச் சிறைப்பிடித்து வைத்திடு
பாலைகளில் பசுமையென
கோடைகளில் வசந்தமென
அன்பே, உன் வாழ்வில்,
நெஞ்சில் இதமான ஸ்பரிசத்தை தந்திடப் போவது அது ஒன்றுதான்'

அருமையான உணர்வு. உண்மையான காதல் வென்றால் சொர்க்கம். தோற்றால் காவியம். ஆனால் எப்போதும் கவித்துவம்.

இவ்வாறாக, வழமையான நாவல்களின் அமைப்பிலும் போக்கிலும் இருந்து வேறுபடும் இந்நாவல் இடையிடையே, வேறோர் உலகத்திற்கு வாசகரை அழைத்துச் செல்கிறது. பரந்து விரிந்த வானில் பிரபஞ்சத்தின் அதிசயங்களைத் தேடச் செய்கிறது. பெருமழையின் பொழிவில் நனையச் செய்கிறது. இலக்கியத்தில் புதிதான சிந்தனைகளை வரவேற்கும் ஆர்வலர்களை மின்காந்த விசையாய் ஈர்த்துக் கொள்கிறது.  அதனால் , படைப்பில் எழுதப்பட்ட  சில வரிகள் அல்லது சொற்கள் ரசனைக் குறிப்பிலும் உள்வாங்கப் பட்டிருக்கின்றன.இவ்வாறான, அறிவியல் அழகுமிகும் வசனமொன்று ...

'விரிந்திருக்கும் இரவு வான் எப்போதுமே என் மனதில் இனம் புரியாத இன்பக் கிளர்ச்சியைத் தருமொன்று....  தெளிந்த வானில், நகரத்து ஒளி மாசினூடும் நூற்றுக் கணக்கில் நட்சத்திரங்களை என்னால் காணமுடிந்தது.....

விரிந்திருக்கும் வானில் கொட்டிக் கிடக்கும் சுடர்களில் ஒன்று இன்னுமொரு 'கலக்சியாக' அண்டமாகவிருக்கக் கூடும். அதன் மூலையிலுள்ள சுடரொன்றின் கிரகத்தில் என்னைப் போல் ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒன்று விரிந்திருக்கும் ஆகாயத்தின் ஆழங்களைக் கண்டறிவதற்கான தேடலில் மூழ்கிக் கிடக்கக் கூடும். இவ்விதம் நினைக்கையில் நெஞ்சில் இன்பம் பொங்கியது'.

இவ்வாறான வித்தியாசமான அனுபவங்கள் உண்மைகள் கற்பனைகள் பலவொடு இம்முயற்சியை மேற்கொண்ட எழுத்தாளருக்கு பாராட்டுகள்.

ranjani.subra54@gmail.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்