Wednesday, October 30, 2024

அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்,கவியரசன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்'! - கவிதைத்தொகுப்பு!


இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக நான் நிச்சயம் கவீந்திரனைக் (அ.ந.கந்தசாமி) குறிப்பிடுவேன். மகாகவி பாரதியாரை தவிர்த்து விட்டு நவீனத் தமிழ்க் கவிதையைப் பற்றிப் பேச முடியாது. அதுபோல் இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையைப் பற்றி அதன் முன்னோடிகளைப் பற்றிப் பேசும் எவரும் அ.ந.கந்தசாமியைத்தவிர்க்க முடியாது என்பது என் கருத்து.
 
அ.ந.கந்தசாமியின் கவிதைப் பங்களிப்பை அறிய நிச்சயம் வாசிக்க வேண்டிய கவிதைத்தொகுப்பு எதிர்காலச்சித்தன் பாடல். தற்போது நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு - https://noolaham.net/project/1207/120622/120622.pdf
 
இந்நூல் தற்போது கிண்டில் - அமேசன் மின்னூலாகவும் கிடைக்கின்றது - https://www.amazon.com/dp/B0DJSK811V
 
நூலை வாசிப்பவர்கள் தட்டச்சுப் பிழைகளை அவதானித்தால் அறியத்தாருங்கள். எதிர்காலப் பதிப்புகளில் அவை நீக்கப்பட்டு வெளிவருவதற்கு உதவியாகவிருக்கும்.
 
தீண்டாமைக்கெதிரான அவரது வில்லூன்றி மயானம் கவிதை, இலங்கையின் முதலாவது இடதுசாரிச் சஞ்சிகையாகக் கருதப்படும் பாரதி சஞ்சிகையில் வெளியான முன்னேற்றச்சேனை, தேயிலைத்தோட்டத்திலே கவிதைகள், முதலாவது அறிவியல் கவிதையாகக் கருதப்படக்கூடிய அவரது 'தேன்மொழி' சஞ்சிகையில் வெளியான 'எதிர்காலச்சித்தன் பாடல்' இவையெல்லாம் அவர் பல்வேறு விடயங்களில் முன்னோடி என்பதை வெளிப்படுத்துவன.
 
அவரது வில்லூன்றி மயானம் கவிதை தினகரன் பத்திரிகையில் 9.11.1944 அன்று வெளியானது.
 
26.9.1944 அன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகனின் உடலை அவனது மனைவி வில்லூன்றியில் நகரசபைக்குச் சொந்தமான முடிக்குரிய காணியில் அமைந்திருந்த மயானத்துக்கு எடுத்துச் செல்கையில், சென்ற கூட்டத்தில் ஒருவனே ஆரியகுளத்து முதலி சின்னத்தம்பி. அம்மயானத்துக்கு முருகனது உடலை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாதி வெறியர்களின் துப்பாக்கி அவனுயிரை எடுக்கின்றது. இப்படுகொலையைக் கண்டித்து எழுத்தாளர்கள் எவரும் எழுதப் பயந்திருந்த காலத்தில் இதற்கெதிராகத் தன் கவிதை மூலம் குரலெழுப்பியவர் அ.ந.கந்தசாமி. அக்கவிதை 9.11.1944 தினகரன் பத்திரிகையில் வெளியானது.ல் அப்போது அவருக்கு வயது 20. 
 
இந்நிகழ்வையும் கவிதையையும் நினைவு கூர்ந்து அ.ந.க 15.10.1967 வெளியான மல்லிகை சஞ்சிகையில் 'வில்லூன்றி மயானம்' என்றொரு கட்டுரையினையும் எழுதியிருக்கின்றார். 
 
எண்பதுகளில் யாழ் பல்கலைக்கழக மாணவியான செல்வி ஜுவானா அ.ந.கந்தசாமியின் படைப்புகள் பற்றி ஆய்வுக் கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றார்.அதில் அவர் பின்வருமாறு கூறுவது முக்கியமானது. அம்மாணவியின் கூற்று வருமாறு:
 
"ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால்பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது" 
 
அ.ந.கந்தசாமியின் கவிதைப் பங்களிப்பை அறிய நிச்சயம் வாசிக்க வேண்டிய கவிதைத்தொகுப்பு எதிர்காலச்சித்தன் பாடல். தற்போது நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு - https://noolaham.net/project/1207/120622/120622.pdf
 
இந்நூல் தற்போது கிண்டில் - அமேசன் மின்னூலாகவும் கிடைக்கின்றது - https://www.amazon.com/dp/B0DJSK811V
 

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்