Wednesday, October 2, 2024

எழுத்தாளர் மயிலங்கூடலூர் பி. நடராசனின் 'மறுமலர்ச்சி'ச் சங்கம், 'மறுமலர்ச்சி'ச் சஞ்சிகை பற்றிய 'சஞ்சீவி' கட்டுரைகளும், அவற்றின் முக்கியத்துவமும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -

மயிலங்கூடலூர் பி. நடராசன்


எழுத்தாளர் செங்கை ஆழியான் (க.குணராசா) அவர்களின் கட்டுரைகள் பலவற்றில் தவறான வரலாற்றுத் தகவல்கள் இருப்பதை அவ்வப்போது கண்டிருக்கின்றேன். சுட்டிக்காட்டியுமிருக்கின்றேன். தான் எடுக்கும் முடிவுகளுக்கேற்ப எழுதும் கட்டுரைகளைக் கூட மாற்றி எழுதுவதுமுண்டு. உதாரணத்துக்கு நல்லூர் இராஜதானி, யாழ்ப்பாணத்துச் சாமி பற்றிய அவரது கட்டுரைகளில் இவற்றைக் காணலாம். அவை பற்றி என் கட்டுரைகளில் குறிப்பிட்டுமிருக்கின்றேன்.  

அண்மையில் அவர் தொகுத்து வெளிவந்த மறுமலர்ச்சிக் கதைகள் தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையிலும் இவ்விதமான தகவற் பிழைகளைக் கண்டேன்.அது இலங்கைத்  தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய அமைப்பான மறுமலர்ச்சிச் சங்கம் பற்றியது. அதில் அவர் பின்வருமாறு கூறுவார்:

"1943 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இலக்கிய ஆர்வம் மிக்க இளம் எழுத்தாளர்கள் சிலர் ஒன்றிணைந்து தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்  என்ற பெயரில் எழுத்தாளர் சங்கம் ஒன்றினை நிறுவிக்கொண்டனர்.  இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் எழுத்தாளர் சங்கம் இதுவெனலாம்.  இந்தச் சங்கத்தை உருவாக்கவேண்டுமென்ற எண்ணத்தை யாழ்ப்பாண இந்துக் கல்லூரி ஆசிரியராகவிருந்த அமரர்  வை. ஏரம்பமூர்த்தியும் (ஈழத்துறைவன்), அமரர் இரசிகமணி கனகசெந்திநாதனும் முன்னெடுத்தனர். இவர்களோடு  அசெமு (அ. செ. முருகானந்தன்), திசவ (தி.ச.வரதாராசன்), ககமா (க.கா.மதியாபரணம்), கசெந (க. செ.நடராசா), சபச (ச.பஞ்சாட்சரசர்மா) அநக (அ.ந.கந்தசாமி) முதலானோரும் இணைந்து கொண்டனர்.  மறுமலர்ச்சிச் சங்கம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு, 'மறுமலர்ச்சி' என்ற பெயரில் சஞ்சிகையொன்றை வெளியிடுவதெனத் தீர்மானித்தது."

இது அப்பட்டமான தவறான வரலாற்றுத் தகவல். எங்கிருந்து இத்தகவலைச் செங்கை ஆழியான் பெற்றுக்கொண்டாரோ தெரியவில்லை. தானாகவே வரலாற்றை மாற்றத்தீர்மானித்து இவ்விதம் எழுதினாரோ தெரியவில்லை.

மறுமலர்ச்சிச் சங்கம் பற்றி, மறுமலர்ச்சி இதழ் பற்றி , அவை பற்றிய எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் கடிதங்கள் பற்றி ஒருவர் விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார். அவர் மயிலங்கூடலூர் பி. நடராசன் அவர்கள். அவர் இலங்கையிலிருந்து  வெளிவரும் யாழ் உதயன் பத்திரிகையின் சனிக்கிழமைப் பதிப்பான சஞ்சீவில் எழுதிய  மறுமலர்ச்சிச் சங்க உருவாக்கம் பற்றியும், மறுமலர்ச்சிச் சஞ்சிகை பற்றியும் பின்வரும் கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். அவை ஆவணச் சிறப்பு மிக்கவை. மறுமலர்ச்சிச் சங்கம், சஞ்சிகை பற்றிய அறிய விரும்பும் எவரும் வாசிக்க வேண்டியவை;

1. மறுமலர்ச்சிக் காலக் கடிதங்கள் கூறும் இலக்கியச் சிந்தனை விழுமியம் (1). (சஞ்சீவி, 18.7.1987)
2. மறுமலர்ச்சிக் காலக் கடிதங்கள் கூறும் இலக்கியச் சிந்தனை விழுமியம் (2). (சஞ்சீவி, 25.7.1987)
3.. மறுமலர்ச்சிக் கடிதங்கள் (3) (சஞ்சீவி, 18.8.1987)
4. மறுமலர்ச்சிக் கடிதங்கள் (4) (சஞ்சீவி, 22.8.1987)
5. மறுமலர்ச்சி இதழ் மலர்ந்த கதை (சஞ்சீவி 29.8.1987)
6. மறுமலர்ச்சியின் முதற் காரணர் எழுத்தாளர் பஞ்சாட்சர சர்மா ( சஞ்சீவி 5.9.1987)

மேற்படி மயிலங்கூடலூர் பி.நடராசனின் கட்டுரைகள் பின்வரும் காரணங்களால் முக்கியத்துவம் மிக்கவை;

மறுமலர்ச்சிச் சங்க உருவாக்கம் பற்றிய தகவல்களைத்  தருகின்றன. அக்காலகட்டத்தில் அ.ந.கந்தசாமி எழுதிய கடிதங்கள் சங்க , இதழ் உருவாக்கம் பற்றிய சரியான தகவல்களைத் தருகின்றன. அச்சங்கத்தில் ஏற்பட்ட பிணக்குகள் பற்றிய தகவல்களைத் தருகின்றன. அ.ந.க.வின் கடிதங்களை ஆவணப்படுத்துகின்றன. அ.ந.க பற்றி, மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர்கள் பற்றிச் சரியாக இனங்காண்கின்றன.

இக்கட்டுரைகள் மூலம் நாம் அறியும் விபரங்கள்:

1. மறுமலர்ச்சி இலக்கியச் சங்கம் ஒன்று உருவாக வேண்டியதன் அவசியம் பற்றி முதன் முதலாக எழுதியவர் எழுத்தாளர் அ.,செ.முருகானந்தன். அக்காலகட்டத்தில் ஈழகேசரி பத்திரிகையில் 'பாதையோரத்தில்' என்னும் பத்தியில் எழுத்தாளர் அ.செ.மு பாட்டைசாரி என்னும் பெயரில் எழுதிவந்தார் என்றும் , காலத்துக்காலம் பலர் பாட்டைசாரி என்னும் பெயரில் எழுதி வந்தார்கள் என்றும் மயிலங்கூடலூர் நடராசன் 5.9.1987 வெளியான கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருப்பார். அதற்கு ஆதாரமாக அவர் குறிப்பிட்டிருக்கும் அ.ந.க பஞ்சாட்சரசர்மாவுக்கு 10.6.1943 எழுதிய கடிதம் விளங்குகின்றது. அதில் அ.ந.க அசெமு ஈழகேசரியில் எழுதிய பாட்டைசாரிக்  குறிப்புகளில் அசெமு இலக்கியச் சங்கமொன்றின் அவசியத்தைக் குறிப்பிட்டு, அவ்விடயத்தில் அசெமு, தி.ச.வரதராசன் ஆகியோர் ஈடுபட்டுள்ளார்கள் என்றும், பஞ்சாட்சரசர்மாவும் அவர்களுடன் இணைந்து சங்கத்தை வெற்றியாக்க வேண்டுமென்று வேண்டியிருப்பார். மேற்படி கடிதத்தில் சங்கத்தின் முதலாவது கூட்டம் 13.6.1943 அன்று செம்மாதெருவில் ரேவது குப்புஸ்வாமி வீட்டில் நடைபெறுமென்றும் குறிப்பிட்டிருப்பார். ஆக மறுமலர்ச்சிச் சங்கம் தோன்றுவதற்கு முக்கிய மூலவர்கள் எழுத்தாளர்கள் அ.செ.முருகானந்தன், திசவரதராசன், அ.ந.கந்தசாமி. அவர்களுடன் இணைந்து கொண்டவர் எழுத்தாளர் பஞ்சாட்சரசர்மா.

வரலாறு இவ்விதமிருக்க மறுமலர்ச்சிக்கதைகள் தொகுப்புக்கான முன்னுரையில் செங்கை ஆழியான் 'இந்தச் சங்கத்தை உருவாக்கவேண்டுமென்ற எண்ணத்தை யாழ்ப்பாண இந்துக் கல்லூரி ஆசிரியராகவிருந்த அமரர்  வை. ஏரம்பமூர்த்தியும் (ஈழத்துறைவன்), அமரர் இரசிகமணி கனகசெந்திநாதனும் முன்னெடுத்தனர். இவர்களோடு  அசெமு (அ. செ. முருகானந்தன்), திசவ(தி.ச.வரதாராசன்), ககமா (க.கா.மதியாபரணம்), கநெச (க. செ.நடராசா)< சபச (ச.பஞ்சாட்சரசர்மா) அநக (அ.ந.கந்தசாமி) முதலானோரும் இணைந்து கொண்டனர்' என்று கூறுகின்றார். வரலாற்றை எவ்விதம் அவர் திரிக்கின்றார்.

மேற்படி கட்டுரைகள் மூலம் மறுமலர்ச்சி சஞ்சிகை 1944 தொடக்கம் 1946 வரை 23 இதழ்கள் வெளிவந்ததையும், முதல் 15 இதழ்களின் ஆசிரியர்களாக தி.ச.வரதராசனும், அ.செ.முருகானந்தனும், அடுத்த எட்டு இதழ்களின் ஆசிரியர்களாக தி.ச.வரதரனும், க.பஞ்சாட்சரசர்மா இருந்ததையும் அறிய முடிகின்றது. சங்கம் மறுமலர்ச்சி இதழை வெளியிட முனைந்தபோது இதழைத்  தாமே வெளியிட விரும்பி சங்க உறுப்பினர்கள் சங்கத்துக்கு உரிமை கோரி நீதிமன்றம் சென்றதாகவும், அப்போது கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த அ.ந.கந்தசாமி சங்கத்தில் நடந்த வாக்கெடுப்பில் தன் சார்பில் அ.செ.முருகானந்தனுக்கு வாக்களிக்கும் உரிமையினை வழங்கியதாகவும், நீதிமன்றம் சங்கத்தைக் கைப்பற்ற முயற்சிக்கு எதிராகத் தீர்ப்புக் கூறி அதனை முறியடித்ததையும் அறிய முடிகின்றது.

மேலும் மறுமலர்ச்சிச் சங்கம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து பணிக்காகக் கொழும்பு செல்லும் காலம் வரையில் அ.ந.க சங்கத்தின் துணைச் செயலாளராக இருந்த விபரத்தையும், கொழும்பு செல்கையில் தன்னை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கும்படி அ.ந.க விடுத்த கோரிக்கையைச் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதையும், பின்னர் க.செ.நடராசா செயலாளராகவிருந்த விடயத்தையும் இக்கட்டுரைத்தொடர் மூலம் அறிய முடிகின்றது.

இக்கட்டுரைத் தொடர்யில்  அ.ந.க பற்றி மயிலங்கூடலூர் பி.நடராசன் கூறும் மேலும் சில தகவல்களும் முக்கியமானவை; அவர் அ.ந.க கவீந்திரன், சிப்பி, கலையரசன், பண்டிதர், திருமலைராயர், புரூனே, ஏ.என்.கே முதலிய புனைபெயர்களில் எழுதினார் என்னும் விபரத்தைக் குறிப்பிட்டுள்ளதைத்தான் கூறுகின்றேன். ச.பஞ்சாட்சரசர்மா, க.இ.சரவணமுத்து (சாரதா) 'இரட்டையர்' என்னும் பெயரில் இணைந்து  ஈழகேசரியில் எழுதியிருக்கின்றனர். மறுமலர்ச்சி இதழின் பதிப்பாளராகவிருந்தவர் நாவற்குழியூர் க.செ.நடராசன். அ.ந.க.வின் அ.செ.மு. பஞ்சாட்சரசர்மா ஆகியோருக்கு எழுதிய கடிதங்களை எழுத்தாளர் க.பஞ்சாட்சரசர்மா சேகரித்து வைத்திருந்தார். அவரது தொகுப்பு நூலான 'பஞ்சாஷ்ர'த்தில் அவற்றில் சிலவற்றைப் பார்த்திருக்கின்றேன்.

இக்கட்டுரைத்தொடரில் மயிலங்கூடலூர் பி.நடராசன் அ.ந.க பற்றிக்குறிப்பிடுகையில் மறுமலர்ச்சியாளருள் அவர் ஒரு முற்போக்காளர்.முற்போக்காளருள் அவர் ஒரு மறுமலர்ச்சியாளர். இறுதிவரை அவ்விதமே அவர் இருந்தார் என்று கூறுவது அ.ந.க பற்றிய சரியான நிலைப்பாடாகவே நானும் கருதுகின்றேன். இதுவரை எந்தத் திறனாய்வாளரும் வந்தடைந்திராத சிறப்பான முடிவு.

கட்டுரைத்தொடரின் முடிவில் மயிலங்கூடலூர் நடராசன் மறுமலர்ச்சிச் சங்கத்து உறுப்பினர்களாகவிருந்த எழுத்தாளார்கள், மறுமலர்ச்சி இதழில் எழுதிய எழுத்தாளர்கள் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என அழைக்கப்படுகின்றனர் என்று கூறுவார். மிகச்சரியான கூற்று. ஒரு தடவை எழுத்தாளர் செங்கை ஆழியானை அ.ந.கந்தசாமியை மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று கூறுவர். அவர் மறுமலர்ச்சிச் சஞ்சிகையில் சிறுகதைகள் எவையும் எழுதவில்லை என்று கூறியது நினைவுக்கு வருகின்றது. அது மிகவும் தவறான கூற்று. மறுமலர்ச்சிச் சங்கம்  பற்றிய போதிய தெளிவற்றதனால் விளைந்த முடிவு அது.

உசாத்துணைப் பட்டியல்:

1. மறுமலர்ச்சிக் காலக் கடிதங்கள் கூறும் இலக்கியச் சிந்தனை விழுமியம் (1). (சஞ்சீவி, 18.7.1987)
2. மறுமலர்ச்சிக் காலக் கடிதங்கள் கூறும் இலக்கியச் சிந்தனை விழுமியம் (2). (சஞ்சீவி, 25.7.1987)
3.. மறுமலர்ச்சிக் கடிதங்கள் (3) (சஞ்சீவி, 18.8.1987)
4. மறுமலர்ச்சிக் கடிதங்கள் (4) (சஞ்சீவி, 22.8.1987)
5. மறுமலர்ச்சி இதழ் மலர்ந்த கதை (சஞ்சீவி 29.8.1987)
6. மறுமலர்ச்சியின் முதற் காரணர் எழுத்தாளர் பஞ்சாட்சர சர்மா ( சஞ்சீவி 5.9.1987)
7. செங்கை ஆழியான தொகுத்த 'மறுமலர்ச்சிக் கதைகள்'
8. க.பஞ்சாட்சரசர்மாவின் 'பஞ்சாஷரம்' (தொகுப்பு)

girinav@gmail.com



No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்